சூரியன் 4

“நான் ஒருத்தி இந்த வீட்டில் இருப்பதே யாருக்கும் தெரியாது. வெளியே நான் சென்றே பல வருசமாகிடுச்சு…” கண்ணீருடன் பிரியசகி கூறினாள்.

“நீயும் வந்துருடி” இந்துஜா அழைக்க, “முதல்ல நீ போ. நான் வருவேன். சாவதற்குள் மறுமுறை உன்னை பார்த்துடுவேன்”.

“ஏன்டி இப்படி பேசுற?”

எனக்கு முக்கியமான வேலை ஒன்று இருக்கு. அதற்காக தான் பொறுமையா இருக்கேன்.

“இங்க என்ன செய்யப் போற? போதும்…என்னால உன்னையும் தெரிந்தே இழக்க முடியாது பிரியா” அழுதாள் இந்துஜா.

ஜா, புரிஞ்சுக்கோ..

“நான் இப்பவே அண்ணாவை வர வைத்து இவனை என்ன செய்கிறேன் பாரு”கைபேசியை எடுத்தாள் இந்துஜா.

அதை பிடுங்கிய பிரியசகி, உன்னோட அண்ணா கஷ்டப்பட்டு அசிஸ்டன்ட் கமிஷ்னர் போஸ்டுக்கு வந்துருக்கார். இந்த சரண் நினைத்தால் எதுவும் இல்லாமல் ஆக்கிடுவான். இவன் ரா ஜன் மருத்துவமனையில் டீனுக்கு அடுத்தப்படியான முக்கிய நபர்.

“அண்ணா போஸ்டிங் உனக்கு தெரியுமா? அண்ணாவை முதலிலே அழைத்திருக்கலாமே!” வருத்தமுடன் தோழியை பார்த்தாள்.

உன்னோட அண்ணா எளிதாக இந்நிலைக்கு வரவில்லை. அவரை தொலைக்காட்சியில் பார்த்த போதே உதவி கேட்கும் எண்ணம் வந்தது. அவர் எண் தெரியாது

ஆனால் அவரை விட பெரிய இடத்தில் தான் இவன் இருக்கிறான். இவனது பெயர் மக்கள் மத்தியில் கெட்டால் தான் நான் வெளியே வர முடியும். நான் பார்த்துக்கிறேன்…உனக்கு ஏதும் ஆகக் கூடாது என்பது மட்டும் தான் என் எண்ணம்..

என்ன சொல்ற?

“எல்லாத்தையும் விடு. நிம்மதியா நீ ஓய்வெடு. ராக்கியை நான் பார்த்துக்கிறேன்” கதவை திறந்தாள்.

கமலாவும் மருத்துவரும் வந்தனர். அவர்கள் சென்ற பின் லேசான தலையசைப்புடன் ராக்கியுடன் கதவடைத்து வெளியேறினாள் பிரியசகி.

“சோ, பிரியா வெளியே வரும் எண்ணத்தில் தான் இருக்கிறாள்” என்று நிம்மதியுடன் கண்ணை மூடினாள் இந்துஜா.

காலை கல்லூரிக்கு தயாராகி பைக்கை எடுத்த இனியவன் இந்துஜா இருக்கும் அறையை பார்த்தவாறு வந்தான்.

விஷ்ணு தன் அன்னையிடம் கண்ணை காட்டி, “அண்ணா…” அழைத்தான்.

ம்ம்! அவனை பார்த்தான் இனியவன்.

“அங்க என்ன அண்ணா பாக்குற?” கேலியுடன் மீசைக்குள் சிரிப்பை மறைத்து விஷ்ணு கேட்க, இனியவன் அவனை பார்த்தான்.

நீ அதுக்குள்ள கிளம்பீட்ட?

“அம்மா தான்…” அன்னையை பார்த்தான்.

உனக்கு தெரியாமல் வகுப்பை கட் அடிக்கக் கூடாதுன்னு தான். யவா பைக்கிலே கிளம்பு விச்சு..

“இல்லம்மா..அவன் தனியே வரட்டும்” சொல்லி கண்ணாடி வழியே அவள் வருகிறாளா? பார்த்துக் கொண்டே சென்றான்.

விஷ்ணு தன் அம்மாவிடம் கட்டை விரலை உயர்த்தி கையசைத்து அவன் பைக்கில் தன் அண்ணனை பின் தொடர்ந்து சென்றான்.

பிரியசகியிடம் ராக்கி நன்றாக ஒட்டிக் கொண்டான். அன்றைய அவளின் வாழ்க்கை சொர்க்கமாக தெரிந்தது.

இரவு ஏழு மணிக்கே தன் கணவன் வந்ததை பார்த்து அதிர்ந்து நின்றாள் பிரியசகி.

“அறைக்கு வா” சொல்லி அவன் முன் செல்ல, ராக்கியை தேனுவிடம் விட்டு அறைக்கு சென்றாள்.

“உன்னோட தோழிகிட்ட சொன்னீயா?” புருவம் இடுங்க அவளை பார்த்தான் சரண்.

ம்ம்!

என்ன சொன்னா?

அமைதியாக இருந்தாள் பிரியசகி.

“என்ன சொன்னா?” அவளது தோள்ப்பட்டை பிடித்து அழுத்தினான்.

ஏற்கனவே உடல் வலியில் இருந்த அவளுக்கு மேலும் உடலும் மனமும் சோர்வானது. இவன் நம்மை கொன்றாலும் பரவாயில்லை. எப்படியாவது ஜாவை காப்பாற்ற வேண்டும். இவன் காய்ச்சல் என்றாலும் விட மாட்டான் என இவள் அறிந்ததே!

“இரவு வருவா…..” கண்கலங்க அறைக்கதவை திறந்தாள் பிரியசகி.

அவளை இழுத்து படுக்கையில் தள்ளி, “இப்படியே போனால் எப்படி?” என்று அவள் ஆடையை களைய முற்பட்டான். ராக்கி அழுவான். ஜாவுக்கு உடல் சரியில்லை. காலையில் இருந்து என்னுடன் தான் இருக்கிறான். இன்று ஒரு நாள் மட்டும் விடுங்க என்று கண்ணில் நீர் வழிந்தோடியது.

ம்ம்! சரி…அதான் ப்ரெஷ்ஷா உன்னோட தோழி இருக்காளே!

“அவள் இன்னும் சாப்பிடலை. உணவை முடித்து அறைக்கு வருவாள்” என்று கீழே சென்று ராக்கிக்கு உணவை கொடுத்து, மற்றவர்களுடன் அவள் உண்டு இந்துஜாவிற்கு உணவை எடுத்து ராக்கியுடன் சரணை பார்த்துக் கொண்டே சென்றாள்.

“என்ன நடந்தாலும் நீ ஜா பக்கம் கூட வர முடியாது….” மனதில் எண்ணியவாறு இந்துஜா கையில் உணவை திணித்து வெளியே எட்டிப் பார்த்தாள். அனைவரும் அவரவர் அறைக்கு செல்வதை கண்டு நிம்மதியுடன், “ஜா சாப்பிட்டு இரு. வந்துடுறேன்” பிரியசகி நகர, “அத்த…” கையை தூக்கினான் ராக்கி.

“வாங்க செல்லம்” அவனையும் தூக்கி, “சாப்பிட்டு தயாராக இரு” என்று வெளியேறி மூவரின் அறைக்கதவை மெதுவாக மூடி வெளியிலிருந்து தாழிட்டாள்.

பிறகு வேகவேகமாக ராக்கியுடன் வந்து பையை எடுத்து, “சீக்கிரம் வா…” இருவரையும் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்து இனியவன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.

விஷ்ணு தான் கதவை திறந்தான்.

“யாருடா?” கேட்டுக் கொண்டே நெடுங்குழலி வர, அவர் பின் இனியவனும் வந்தான்.

இதுவரை பார்த்திராத பிரியசகியை பார்த்து, “யாரு நீங்க?” விஷ்ணு, ராக்கி பையுடன் நிற்கும் இந்துஜாவை பார்த்து அதிர்ந்து எதிர்வீட்டை பார்த்தான்.

இனியவன் முன் வந்து, “என்னாச்சு?” கேட்டான்.

“நீ தான் அவ மருமகளா?” முகம் மாற கேட்டார்  குழலி.

“அம்மா அமைதியா இருங்க” என்ற இனியவன் மூவரையும் பார்த்தான்.

“ஐந்து நாள் மட்டும் இவங்கள பார்த்துக்கோங்க..ப்ளீஸ். அப்புறம் இவளோட அண்ணா வந்து அழைச்சிட்டு போயிருவார். அங்க என்னால பார்த்துக்க முடியல” கண்ணீருடன் பிரியசகி கூற,

இந்த நேரத்தில் இந்த பொண்ணு அழுறா. “என்ன பிரச்சனைம்மா?” குழலி கேட்க, “அம்மா இருங்க” என்ற இனியவன்… “உள்ள வா” அழைத்தான் இந்துஜாவை.

“சார், இன்னொரு உதவி. இவளுக்கு நேற்று இரவிலிருந்து ரொம்ப காய்ச்சலா இருக்கு. மார்னிங் டாக்டர் மருந்து கொடுத்துட்டு போனாரு. இன்னும் சரியாகலை. முடிந்தால் நாளை மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போங்க” இனியவன் கையில் பணத்தை திணித்தாள் பிரியசகி..

“பிரியா…” இந்துஜா அழைக்க, அவளை ஒரு பார்வை பார்த்து வழிந்த கண்ணீரை துடைத்து குழலி கரத்தை பற்றி,

“ஐந்து நாள் மட்டும் நல்லா பார்த்துக்கோங்கம்மா. செல்லமா வளர்ந்தவ. அவளும் எல்லாத்தையும் இழந்து நிக்கிறா. உதவியா மட்டும் செய்யுங்க. இந்த உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்…” என்று விஷ்ணுவை கண்டு வராத புன்னகையை வர வைத்து பின்னே நகர்ந்தாள்.

“அத்த…” கொஞ்சலுடன் ராக்கி பிரியசகியை அழைக்க,

“பாட்டிகிட்ட இருங்க. உங்களை நல்லா பார்த்துப்பாங்க. லவ் யூ செல்லம்” ராக்கி கன்னத்தில் இதழ் பதித்து பிரியசகி செல்ல, “பிரியா…” இந்துஜா கண்ணீருடன் அழைத்தாள்.

விஷ்ணு கரத்தில் ராக்கியை கொடுத்து பிரியசகியை அணைத்து, “சீக்கிரம் வந்துருடி. நான் உனக்காக காத்திருப்பேன்” பிரியசகி கன்னத்தில் இந்துஜா இதழ் பதித்தாள். மென்மையான இந்துஜாவின் இதழ் தீண்டலில் கண்ணீர் நிற்காமல் வந்தது பிரியசகிக்கு.

“முயற்சி செய்கிறேன்” இவளும் இந்துஜாவிற்கு முத்தம் கொடுத்து தாங்க முடியாமல் அவள் வீட்டிற்குள் செல்ல, மனதின் வலி தாங்க முடியாமல் கத்த எண்ணம் வலுத்தாலும் புதுநபர்கள் முன் தன் வலியை காட்டக் கூடாது என்று முயன்று கட்டுப்படுத்தி ராக்கியை விஷ்ணுவிடமிருந்து வாங்கி கண்ணீருடனான புன்னகையை அவனிடம் காட்டினாள் இந்துஜா.

“என்னாச்சும்மா? அந்த பையன் தப்பா நடந்துக்கிட்டானா?” சரியாக புரிந்து கேட்டார் நெடுங்குழலி.

“அம்மா, உள்ள போங்க….” சத்தமிட்ட இனியவன், “உள்ள வா” அழைத்தான்.

வீட்டினுள் செல்லவும் ராக்கியை இந்துஜாவிடமிருந்து வாங்கி அவளை அமர வைத்தார்.

“விச்சு…தண்ணீர் எடுத்து வா” இனியவன் கூற, எடுத்து வந்து விஷ்ணு இந்துஜாவிடம் கொடுத்து குடிக்க சொன்னான். அவள் நீரை பருகும் போதே எல்லாரும் படுக்க போங்க…என்றான் இனியவன்.

“ஆன்ட்டி, நாங்க உங்களது அறையில் தங்கிக்கவா? இன்று மட்டும்….” பாவமாக கேட்டாள்.

“அந்த அறை…” என்று தன் அன்னையை பேச விடாமல் இந்துஜாவையும் ராக்கியையும் உள்ளே அனுப்பி,

தன் அன்னை தம்பியிடம், இங்க பாருங்க. அந்த பொண்ணுக்கிட்ட தேவையில்லாத கேள்வி கேட்க வேண்டாம்.

யவா..என்ன நீ? அந்த பொண்ணும் அழுதுட்டு போகுது. இவளும் அழுதுட்டு இருக்கா. இந்த நேரத்துல்ல விருந்தாளி பொண்ணை அந்த வீட்டு பொண்ணை விட்டு போனா என்ன அர்த்தம்?

அதான் புரியுதுல்லமா. எதுவும் கேட்டு கஷ்டப்படுத்தாதீங்க…

“அண்ணா அப்ப அவங்க…” பிரியசகியை கேட்டான் விஷ்ணு.

பெருமூச்சுடன் அவங்க வீட்ல நடப்பது எனக்கு தெரியும். அந்த பொண்ணுக்கும் ஒரு வழி இருக்கு…

என்ன?

ஆமாம்மா என்று அவன் கண்ட விசயத்தை இருவரிடமும் இப்பொழுது தான் கூறினான் இனியவன்.

“என்னடா சொல்ற?” குழலி புடவையை தூக்கி கட்ட, அம்மா…அவன் நிலைக்கும் குறைவான நிலையில் தான் நாம் இருக்கோம். நம் பேச்சு எடுபடாது. அந்த பொண்ணு தான் மேலும் கஷ்டப்படுவா.

ஏதோ வழின்னு சொன்ன அண்ணா?

“ம்ம்! இதை பற்றி யாரிடமும் பேச வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். அப்புறம் இந்த பொண்ணுகிட்ட திருமணம்னு ஏதாவது பேசுனீங்க. நான் வீட்ல இருக்க மாட்டேன்” மிரட்டி விட்டு அவனறைக்கு சென்றான் இனியவன்.

“அம்மா, அண்ணா அவ்வீட்டை இன்று காலை பார்க்கவும் காதல் வந்துருச்சோன்னு நினைச்சேன். விசயம் பெருசுன்னு இப்ப தான தெரியுது” சிந்தனையுடன் விஷ்ணு தன் அன்னையை பார்த்தான்.

ம்ஹம்….பெருமூச்சுடன், நானும் தான் ஆசைப்பட்டேன். ஏன்டா விச்சு, இந்த பொண்ணு நம்ம வீட்ல இருந்தா எதிர்வீட்டு பையன் சண்டைக்கு வர மாட்டான்….???

“அத அண்ணா பார்த்துப்பான்” எழுந்து, “இந்து” என்று தன் அன்னை அறையின் வெளியேயிருந்து அழைத்தான்.

இந்துஜா எழுந்து அமர, “உள்ளே வரலாமா?” கேட்டான். குழலியும் உள்ளே வந்தார்.

“உன்னிடம் எதையும் நான் கேட்க வரவில்லை. நன்றாக ஓய்வெடு. எதுவும் வேணும்னா அம்மாகிட்ட தயங்காம கேளு” அக்கறையுடன் கூறினான்.

“யவாவுக்கு பிள்ளைய கல்யாணம் செய்து வைக்க எண்ணினால் இவன் அக்கறையாக பேசுகிறான்?” புரியாமல் தன் மகன் விஷ்ணுவை பார்த்தார் குழலி.

விச்சு, இன்று மட்டும் ஆன்ட்டி அருகே ராக்கி படுத்துக்கட்டுமா? பீவர் அதிகமா இருக்கு. அவனுக்கும் வந்துரும்..

“ஒன்று மட்டும் கேக்கவாம்மா?” குழலி கேட்க, விஷ்ணு அவரை முறைத்தான்.

“குட்டிப்பையன் உன் மகனா?” தயக்கமுடன் குழலி கேட்டார்.

“இல்ல ஆன்ட்டி, ராக்கி என்னோட அக்கா மகன். அக்கா இல்லை. மாமா உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” மேலும் அவளுக்கு அழுகை வந்தது.

“அம்மா….” விஷ்ணு சத்தமிட்டு, “அவ காய்ச்சலில் இருக்கா. முதல்ல அவள் ஓய்வெடுக்கட்டும். பார்த்துக்கோங்க” அவன் நகர்ந்தான்.

குழலி ஏதும் பேசாமல் அமர, ஆன்ட்டி ராக்கியை பார்த்துக்கோங்க. காலை அவனுக்கும் தடுப்பூசி போடணும்..

“சரிம்மா” அவர் ராக்கியை பார்த்தார்.

“ராக்கி பாட்டி கூட தூங்கு. நாம நாளைக்கு விளையாடலாம்” ராகேஷை குழலியிடம் கொடுத்து பாரமான மனதுடன் உடல் சோர்வுடன் கண்ணை மூடினாள்.

இனியவனுக்கு உறங்க முடியவில்லை. கண்டிப்பாக இன்றைய இரவு பிரியசகிக்கு கொடுமையாக இருக்கும் என்று எண்ணி இருந்தான். ஆனால் அவ்வாறில்லாமல் இன்று மட்டுமே நிம்மதியான உறக்கத்தை தழுவி இருந்தாள் பிரியசகி. அனைவரும் உண்ணும் உணவில் தூக்க மாத்திரையை கலந்து இருந்தாள். இவள் அறையினுள் சென்ற போது மாப்பிள்ளை போல தயாராகி இருந்த கணவன் ஆழ்ந்த உறக்கத்தில் குப்புற விழுந்து கிடந்தான்.

இவள் மனம் நிம்மதியடைய படுக்கையின் ஓரத்தில் படுத்து நிம்மதியான தூக்கத்தில் இருந்தாள் பிரியசகி.

மறுநாள் விடியலில் ராக்கி முதலில் எழுந்து, “சித்து..ச்சுச்சூ ச்சுச்சூ” என காய்ச்சலில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த இந்துஜா கன்னத்தை தட்டிக் கொண்டிருந்தான்.

குழந்தையின் மழலைக் குரலில் கண்விழித்த குழலி, “வா கண்ணா” பாட்டி அழைச்சிட்டு போறேன் என்றார்.

சித்து..சித்து…அழைத்தான். இந்துஜா புரண்டு படுத்தாள்.

“சித்திக்கு காய்ச்சலா இருக்குல்ல. பாட்டி உன்னை பத்திரமா பார்த்துக்கிறேன் வாங்க கண்ணா…” கொஞ்சியவாறு அவர் பேச, அவரிடம் தாவி விட்டான் ராக்கி.

“என் சமத்து கண்ணா” ராக்கியை தூக்கி அவன் வேலையை முடித்து வெளியே வந்து சமையலறைக்கு சென்று ராக்கியை இடுப்பில் வைத்து தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தார்.

மகன்கள் இருவரும் சிலமணி நேரத்திலே கீழே வந்தனர்.

விஷ்ணு நேராக சமையலறைக்கு செல்ல, இனியவன் தொலைக்காட்சியில் இன்றைய நிலவரம் அறிந்து கொள்ள செய்தி பார்த்துக் கொண்டிருந்தான்.

“அம்மா, உங்கள இப்படி பார்க்கும் போது எப்படி இருக்கு தெரியுமா? ஏதோ உன்னோட பேரனை சுமந்து வேலை பார்ப்பது போல இருக்கு” விஷ்ணு வேண்டுமென்றே உரக்க பேசினான்.

“சும்மா இருடா. யவா உன்னை கடிச்சி முழுங்கிட போறான்” வேலை பார்த்துக் கொண்டே சிரித்தார் குழலி.

பல்லை கடித்தவாறு இனியவன் அவ்விடம் வந்தான்.

பா..ட்டி..இழுத்து கூறிய ராக்கி, “உம்மா…” குழலி கன்னத்தில் முத்தமிட்டு அவன் கன்னத்தை காட்ட அவர் புன்னகை முகமுடன் அவனுக்கு முத்தமிட்டார்.

ராக்கி எனக்கு? விஷ்ணு கன்னத்தை காட்ட, அம்மா…அம்மா…அம்மா….அழுதான்.

“அச்சச்சோ பயனுக்கு அவங்க அம்மா நினைவுக்கு வந்துருச்சு…” குழலி அடுப்பை அணைத்து விட்டு இரு மகன்களையும் கண்டு கொள்ளாமல் நகர்ந்தார்.

“அம்மா…டீ?” இனியவன் கேட்க, “போட்டு குடிங்கடா” என்றார்.

“என்…ன…து….போ…ட்ட்..டு குடிக்கணுமா? அண்ணா நம்ம நிலைமைய இந்த குட்டிப்பய மொத்தமா மாத்திட்டான்” விஷ்ணு கூற, “எனக்கு இப்பவே டீ வேணும்” தன் அன்னை பின் சென்றான் இனியவன்.

“உனக்கு டீ தான? இப்ப எடுத்துட்டு வாரேன். ராக்கிய அழாம பார்த்துக்கிறது உன்னோட பொறுப்பு” என்று அழும் ராக்கியை இனியவன் கையில் கொடுத்து நகர்ந்தார்.

“அம்மா…அம்மா…” இனியவன் கத்த, வாய் விட்டு சிரித்தான் விஷ்ணு.

“எப்படிடா அழுகையை நிறுத்துறது?” இனியவன் தன் தம்பியை கடித்து விடுபவன் போல சிடுசிடுத்தான்.

“நீ அவனை வச்சிரு. அவனை சிரிக்க வைக்க நான் முயற்சிக்கிறேன்” என்று கற்று வைத்திருந்த மொத்த கோமாளித்தனத்தையும் விஷ்ணு இறக்கினான்.

நம்ம பையன் அசராமல் அழுதான்.

ராக்கி அழும் சத்தம் அதிகமாக இந்துஜா விழித்து விட்டாள்.

“ராக்கி…” பதறி வெளியே வந்தாள் சோர்வுடன் தான்.

அண்ணனும் தம்பியும் செய்யும் அட்டகாசத்தை பார்த்து, “விச்சு என்ன பண்ற?” சத்தமிட்டாள்.

“இந்து, அவன் அம்மா நினைவு வந்துருச்சு. அழுகையை நிறுத்த மாட்டேங்கிறான்” விஷ்ணு சொல்ல, இனியவன் பாவமாக அவளை பார்த்தான். அவனது முகம் பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்தது. அதனை கட்டுப்படுத்தி ராக்கியை அவனிடமிருந்து வாங்கினாள்.

ராக்கி, சித்து பாரு..சித்து பாரு…என்று சொல்லிக் கொண்டே உணவுமேசையில் அவனை அமர வைத்து, இங்க பாரு என்று ராஜா கதையை அழகாக நடித்துக் கொண்டிருந்தவள் கத்தியை பார்க்கவும் அதனை எடுத்து சண்டையிடுவது போல விளையாட்டு காட்ட, ராக்கி கை தட்டி சிரித்தான்.

“அட மவனே! இவ்வளவு நேரம் என் உழைப்பு வீண் போகி விட்டதே!” வருந்துவது போல போலியாக விஷ்ணு கூற, சமாதானமான ராக்கியை தூக்கி வந்தாள்.

“இவ்வளவு வளர்ந்திருக்கீங்க. ஒரு கதை கூட சொல்ல மாட்டீங்களா சார்? இதுல இவர் பிரபசராம்” அவள் நகர,

“பிரபசர்ன்னா கதை சொல்லணும்ன்னு அவசியமில்லை” என்றான் முறைப்புடன் இனியவன்.

“அண்ணா பிரபசர்னு உனக்கு எப்படி தெரியும்?” விஷ்ணு கேட்க, திகைத்த இந்துஜாவிற்கு அப்பொழுது தான் பிரியசகி எண்ணம் வந்தது.

பதட்டமுடன் அவள் ராக்கியுடன் வெளியே வர, மற்றவர்களும் வந்தனர்.

கமலா இவளை பார்க்கவும், “ஏன்டி அடுத்தவன் வீட்டுக்கு ராத்திரியோட ராத்திரியா போன?” சத்தமிட, அனைவரும் கூடினர். குழலி வெளியே வந்தார்.

அவர் பேசுவதை கண்டு கொள்ளாமல் மேலே தான் பார்த்தாள் இந்துஜா.

வெளியே வந்த சரண் உரிமையுடன் ராக்கியை தூக்கி வைத்திருக்கும் இந்துஜாவை கைபிடித்து இழுத்து,

“நான் பத்தாதுன்னு இவனுக ரெண்டு பேரும் வேண்டுமோ? என்னிடம் தவறாக நடந்து கொண்டனு உன்னை வெளிய அனுப்புனா இவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்க? வெட்கமே இல்லாமல் இவனுகளும்…இரவு முழுவதும் எஞ்சாய்மென்ட் போல…” அவன் கேட்க,

விஷ்ணு அவனை அடிக்க துள்ளிக் கொண்டு வந்தான். முகம் இறுக பல்லை கடித்து பொறுமை காத்தான் இனியவன்.

தான் பெற்ற மகவுகளை குறை கூறவும் பொறுக்க முடியாத தாய் குழலி சரணை ஓங்கி அறைந்தார். அவன் நிலை தடுமாற.,..அவன் முகத்தில் காரி உமிழ்ந்தவர்…

“இந்த பொண்ணை உம் பொண்டாட்டி தான் நேற்று இரவு பார்த்துக்க சொல்லி விட்டு போனா. அதுவும் அழுதுகிட்டே போனா. இந்த பொண்ணை மட்டுமல்ல உன்னோட பொண்டாட்டியையும் நீ ஏதோ செஞ்சிட்டு இருக்கிற மாதிரி தான் இருக்கு” சினமுடன் சத்தமிட்டார்.

“அம்மா….” கத்திய இனியவன், “கண்டவன் கிட்ட என்ன பேச்சு உள்ள போங்க” கூறியவன் இந்துஜாவை பார்க்க, அவள் கண்கள் தன் தோழியின் அறையை விட்டு அகலவில்லை.

“இந்து உள்ள போ….” இனியவன் சத்தமிட, “அம்மாடி….” அவள் தோளில் கை வைத்தார் குழலி. கண்கலங்க அவருடன் உள்ளே சென்றாள்.

“இந்து இங்க தான் இருப்பா. அவளோட குடும்பத்தினர் வந்து அவளை அழைச்சிட்டு போயிடுவாங்க. இதுக்கு மேல யார் என்ன பேசினாலும் எங்களுக்கு கவலையில்லை. வா விஷ்ணு” தன் தம்பியின் கரத்தை பற்றி அழைத்து சென்றான்.

“டேய்…இனியவா…உனக்கு என் கையில தான் சாவு” சரண் சினத்தில் அவன் உண்மை முகத்தை காட்டி விட்டான்.

அத்தெருவில் வசிக்கும் பெரியம்மா ஒருவர்….

“ஏடி கமலா, இதுக்கு தான் உன்னோட மருமகள காட்டாம வச்சிருந்தீயா? என்னடி பண்ணி வச்சிருக்க? ஏம்மா பொண்ணு எங்க இருக்க? வெளிய வா” அவர் அழைக்க,

“அவளுக்கு உடம்பு சரியில்லை. சரியாகவும் அவளே வருவா” என்று திமிறாக கூறி கமலா சென்றார்.