சூரியன் 26

“அம்மாவா? பிரியாவும் நீயும் போனால் அவளை அம்மானு யாராவது நம்புவாங்களாடா?” பிரசாத் சத்தமிட்டான்.

சகி கருவுற்று என்னோட அம்மாவை பார்க்க வரும் போது நான் சின்னப்பையன் தான். அந்த குழந்தை அன்று கலையாமல் இருந்தால் என்னை விட கொஞ்சம் சின்னவனா இருந்திருப்பான்..ஏன் சகி? நான் உன்னை அம்மான்னு யாரிடமும் கூறினால் உனக்கு பிடிக்காதா? அவளை பார்த்தான் ஹரிஹரன்.

கண்ணீருடன் ஏதும் பேசாமல் ஹரியை அணைத்துக் கொண்டாள் பிரியசகி.

“பிரியா இது சரியில்லை” பிரசாத் சத்தமிட்டான்.

நான் அம்மாவா இருக்கக் கூடாதுன்னு சொல்றீயா? யாருக்கும் பிடிக்கலைன்னா பரவாயில்லை…சஞ்சய் ஒத்துக் கொண்டால் நாங்க இன்றே கூட ஹரியை தத்து மகனாக எடுத்துப்போம் என்றாள்.

சகி, அவர் கூடவெல்லாம் வேண்டாம். அவர் கூட இருந்தால் அவர் அம்மாவுக்கு பிடிக்காது. உன்னை கஷ்டப்படுத்துவாங்க..

இதுக்கு முன்னாடி வாழ்ந்த திருமண வாழ்க்கை போல இல்லையே! சஞ்சய் மாதிரி நல்ல மனுசன் கிடைச்சது என்னோட பாக்கியம்..என்ற பிரியசகி,

“என்னால தான் அவருக்கு இந்த நிலைன்னா நான் அவரை விட்டு வந்துடுறேன். ஆனால் அவர் கட்டிய தாலியை மட்டும் என்னால தூக்கி எறிய முடியாது” சஞ்சயின் பெற்றோரை கண்டு கையெடுத்து கும்பிட்டாள்.

“நான் உங்க மகன் வாழ்க்கையிலிருந்து முழுசா போயிடுறேன்” பிரியசகி சொல்லும் போது நிற்காமல் கண்ணீர் வந்தது. இதழ்கள் திறக்க மாட்டேன் என மறுக்க, தொண்டை அடைத்தது.

எச்சிலை விழுங்கி, உங்க மகனுக்கு வேற பொண்ணை… அதற்கு மேல் பேச முடியாமல் அழுது கொண்டே வெளியே ஓடினாள்.

“பிரியாம்மா…” நாகேந்திரன் அவள் பின்னே செல்ல, இந்துஜா தன் பெரியம்மாவை பார்த்த பார்வையில் சுவர்ணலதாவிற்கு உடல் நடுங்கியது.

சஞ்சய் எழுந்து அவளை கேட்டால் என்ன செய்வது? சிந்தனையுடன் நடுக்கத்துடன் அமர்ந்தார்.

“தாத்தா, இனி நாங்க பார்த்துக்கிறோம். நீங்க உங்க மகனை பார்த்துக்கோங்க” ஹரி நாகேந்திரனை தடுத்து பிரியசகி பின் ஓடினான். அவரை கண்டவாரே மற்றவர்களும் சென்றனர்.

“இப்படி எம் பிள்ள வாழ்க்கையை ஒண்ணுமே இல்லாமல் செய்து விட்டாளே!” சினமுடன் நாகேந்திரன் சுவர்ணலதாவை நெருங்கி அவரை அடித்து விட்டார்.

ஏன்டி, அந்த பொண்ணை உம் பிள்ள எத்தனை வருசமா காதலிக்கிறான். விருப்பமில்லைன்னாலும் உம் புள்ள கட்டுன தாலியை பிரியா ஏத்துக்கிட்டா. இப்ப தான் புள்ளைங்க கொஞ்ச நல்லா பேசிகிட்ட மாதிரி இருந்தது. அதுக்குள்ள எம் புள்ள வாழ்க்கையை மொத்தமா அழிச்சிட்டீயே! சுவற்றில் சாய்ந்து அமர்ந்தார்.

“மாமா…” சுவர்ணலதா கண்ணீருடன் அழைக்க,

“ச்சீ எதுவும் பேசாத. குழந்தை பெத்துக்க முடியாதுனு ஒரே காரணத்துக்காக நம்ம மருமகள அடுத்தவ பேசுற வரை கொண்டு வந்து விட்டு எல்லார் முன்னாடியும்  அவமானப்படுத்தீட்ட. இதுக்கு கண்டிப்பா அனுபவிப்படி” அழுதவர் முகத்தை அழுந்த துடைத்து தன் மகனை காண சென்றார்.

சொல்லி விட்டாளே ஒழிய, சஞ்சயை இந்நிலையில் பிரியசகியால் விட்டு செல்ல முடியவில்லை. அவன் காதலை அவளும் அறிந்தவளாயிற்றே! மருத்துமனையிலே அமர்ந்து விட்டாள்.

ஹரியும் இந்துஜாவும் அவளருகே அமர்ந்து அவள் கரத்தை பற்றினார்கள்.

“ஜா…என்னால அவரை விட்டு போக முடியலடி” இந்துஜாவை கட்டிக் கொண்டு அழுதாள்.

என்ன ஆறுதல் கூறவென்று தெரியாமல் இந்துஜா அவளை கட்டிக் கொண்டாள். அந்நிலையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் நால்வரும் விழிபிதுங்கி ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

உடல்நலமில்லாமல் இருந்ததால் ரதிக்கு நடந்த எதுவும் தெரியாது. அதிகாலை எழுந்த அவளிடம் அவள் தந்தை கூறவும், உடனே சஞ்சயை காண வந்து விட்டாள். அப்பொழுது தான் இவர்கள் ஓரிடத்தில் அமர்ந்திருந்தனர்.

சஞ்சயை காண சென்ற ரதி செல்லும் போது இனியவனை கண்டு அவனிடம் கேட்க, அவனோ அனைவர் மீதும் சினத்தில் இருந்தவன் அவளிடமும் சத்தமிட்டு விட்டான். கண்கலங்க சென்ற ரதி சுவர்ணலதாவை முறைத்து சஞ்சய் அறைக்கு சென்றாள்.

சஞ்சயை கட்டுடன் பார்க்க அவள் உள்ளமும் வெதும்பியது.

“அங்கிள்…” நாகேந்திரனை அழைக்க, சஞ்சய் விழித்தான்.

“சஞ்சய்…” நாகேந்திரன் அவனை நெருங்க, அவன் ரதியையும் அவரையும் பார்த்து வாயிலை பார்த்தான்.

“அண்ணா…”

ரதியை கண்டு வாயில் பக்கம் கரம் நீட்டினான்.

ரதி நாகேந்திரனை பார்க்க, மகன் முன் தலைகவிழ்ந்து நின்றார்.

விழிகள் வாயில் பக்கம் சென்று ரதியை கண்டது.

அவளிடம் தான் இனியவன் கத்தி இருப்பானே! ஏதோ பிரச்சனை என்று மட்டும் அவள் அறிந்திருக்க, ஆன்ட்டி வெளிய தான் இருக்காங்க அண்ணா…

“அம்மா இருக்காங்க” எனவும் விழிகளை இறுக மூடி திறந்து மீண்டும் வாயிலை பார்த்தான்.

ச…ச..சகி…??? கேள்வியுடன் தந்தையை பார்த்தான்.

பட்டென மகன் முன் மண்டியிட்ட அவன் தந்தை, “என்னை மன்னிச்சிருப்பா” கதறி அழுதார்.

புருவம் சுருங்க படுக்கையிலிருந்து எழ முயன்றான்.

“அண்ணா, வேண்டாம்…” ரதி சஞ்சயை தடுக்க, அவளது கரத்தை தட்டி விட்டு படுக்கையில் அமர முயன்றவனுக்கு வலி உயிர் போனது. இருந்தும் அவன் கையிலிருந்த ட்ரிப்பை கழற்றி எறிந்தான். அருகே இருந்த மருந்துகள் அடங்கிய ட்ரே கீழ் விழுந்து சிதறியது.

“அண்ணா…” ரதி சஞ்சயை தடுக்க, நாகேந்திரன் பதறி விட்டார்.

“சஞ்சய், ஒன்றுமில்லைடா. நான் எப்படியாவது எம் மருமகள அழைச்சிட்டு வந்துடுறேன்” அவர் கண்ணீருடன் அவனை படுக்க வைக்க,

வழிந்த கண்ணீருடன்…ப்பா, ச..கி போ…யிட்டாளா? அழும் நிலைக்கு வந்து விட்டான் அந்த கம்பீரமான போலீஸ்காரன்.

“அப்பா போக விட மாட்டேன்டா..” அவர் சொல்லிக் கொண்டிருக்க, பொருட்கள் விழும் சத்தத்தில் கதவை திறந்த சுவர்ணலதா தன் மகன் அழுவதை கண்டு அவனிடம் ஓடி வந்தார்.

“போடி…வெளிய…” சத்தமிட்டார் நாகேந்திரன்.

ம்மா, சகி எங்க? மகன் கேள்விக்கு பதிலுரைக்க முடியாமல் தயங்கினார் சுவர்ணலதா.

அழுதவனின் அழுகை நின்று, “அவள என்ன சொன்னீங்க? என்னை விட்டு போக மாட்டேன்னு எங்கிட்ட சொன்னா?” வாய்க்குள் முணங்கியவாறு சஞ்சய் கேட்க, “இல்லை” தலையை அசைத்து கண்ணீர் வடித்தார்.

சகி..சகி…சத்தம் மெது மெதுவாக உயர்ந்தது.

அண்ணா, அமைதியா இருங்க. நான் இப்பவே அவங்கள அழைச்சிட்டு வாறேன்.

ப்பா, ஹரி, இந்து எல்லாருமேவா? விழிநீர் வர, “ஆம்” தலையை அசைத்தார்.

“ம்மா, ஏதோ பண்ணீட்டீங்க? சொல்லுங்க…” சத்தம் கொடுக்க முடியாமல் தாயிடம் மண்றாடும் குரலில் வேதனையுடன் கேட்டான்.

நான் இல்லைடா…உன்னோட திருச்சி சித்தி தான்..

அவங்களா?

இனியவன் உள்ளே வந்தான்..

மாமா, ஒன்றுமில்லை. நீங்க ரெஸ்ட் எடுங்க. எல்லாமே நான் பார்த்துக்கிறேன்.

“எனக்கு சகி வரணும் இப்பவே!” மெதுவாக பேச முடியாமல் கூறினான்.

“அது தெரியல மாமா. நான் முயற்சி செய்கிறேன்” என்று ரதியிடம் மன்னிப்பு கேட்டு அவன் நகர, அவளும் அவன் பின்னாலே ஓடி வந்தாள். ரக்சன் கேமிராவில் அவர்களை பார்த்தான்.

“சார், என்னதான் நடந்தது?” அமர்ந்திருந்த இனியவனிடம் கேட்டாள் ரதி.

சுவர்ணலதா பேசிய அனைத்தையும் முற்றும் முழுதாய் கூறினான்.

“ஆன்ட்டி, இப்ப எதுவும் பேசலையே!” ரதி கேட்க,

அதான் ஏன்னு கேட்கிறேன்? அவங்க மருமக தான? அந்தம்மா மலடின்னு பேசுனாங்க. அன்று திருமண மண்டபத்திலும் எப்படி பேசுனாங்க. உன் அளவிற்கு எனக்கு பொறுமையெல்லாம் இல்லை.

ரதி அவனிடம் நன்றி நவிழ்ந்து செல்ல, “எங்க போற?” இனியவன் கேட்டான்.

பிரியசகியை சஞ்சய் அண்ணாவோட சேர்த்து வைக்கப் போறேன். அண்ணா என் மானம் உயிரை காப்பாற்றி இருக்காங்க. அவங்க வாழ்க்கை சிறக்க நான் உதவப் போகிறேன்.

ஆனால் பிரியசகி பாதிக்கப்படுவாள்..

“சஞ்சய் அண்ணா காதல் பிரியசகியை காப்பாற்றும்” என்று வெளியே சென்று வண்டியை எடுக்க, ஹரியின் சினமான சத்தத்தில் அதை தவிர்த்து சத்தம் வந்த திசைக்கு சென்றாள். இனியவனும் அவன் பின் ரக்சனும் வந்தனர்.

பிரியசகியின் கரத்தை வலுக்கட்டாயமாக ஹரி இழுத்துக் கொண்டிருக்க, அவள் அழுது கொண்டிருந்தாள்.

“ஹேய், என்ன செய்ற?” ரதி ஓடிச் சென்று ஹரிஹரனை அடித்து, “பிரியா கையை விடுடா…” என்றாள்.

“உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அவங்க சஞ்சய் சார் கூட இருந்தா கஷ்டப்படணும்” அவன் சினமுடன் கூற,

“சஞ்சய் அண்ணாவை விட்டு பிரியாவால ஒரு நிமிசம் கூட நிம்மதியாக இருக்க முடியாது” உறுதியுடன் சத்தமிட்டாள் ரதி.

ஹரிஹரன் பிரியசகி கரம் விடுத்து இருவரையும் பார்த்தான்.

நீங்க உங்களோட பிரியசகியை அழைச்சிட்டு போனாலும் அவள் எண்ணம் முழுவதும் சஞ்சய் அண்ணா தான் இருப்பாங்க. நீ சின்னப்பையன். உனக்கு இதெல்லாம் புரியாது. நாள் கழித்து நீ இதை உணரும் போது உன்னால அவங்க பிரிஞ்சுட்டாங்கன்னு நீ கண்டிப்பா ஃபீல் பண்ணுவ…

நான் ஒன்றும் சஞ்சய் சாரையும் சகியையும் பிரிக்க நினைக்கல. அவரு அவர் வேலையையும் அவர் தாயையும் தான் பெரியதாக மதிக்கிறார். அவர் காதல் வேண்டுமென்றால் சகியாக இருக்கலாம். ஆனால் அவர் வாழ்க்கையில் சகி இல்லை. அவளுடன் முழுவதுமாக ஒரு நாளாவது செலவழித்து இருப்பாரா? சீறினான் ஹரிஹரன்.

ஆமா…காதலிக்கிறேன்னு சொன்னா போதுமா? அதை நிரூபிக்க வேண்டாமா? தோழிக்காக இந்துஜாவும் பேசினாள்:.

“இந்து அவன் சின்னப்பையன். காதல்ல எதை நிரூபிக்கணும்னு சொல்ற? காதலிக்கிறவங்க நம்முடன் இருந்தால் போதாதா?” ரதி சினமுடன்,

சஞ்சய் அண்ணா உனக்கு அண்ணன். அவருக்காக நிற்காமல் அவர் கஷ்டப்படும் இந்த நேரம் தனியே விட்டு வந்துருக்க? உனக்காக வந்து நின்றார். சண்டை போட்ருக்கார். ஏன் இப்பொழுது கூட உனக்கென தனி அக்கவுண்டில் பணம் போட ஆரம்பித்து இருக்கார். யாருமில்லாமல் இருக்கும் போது உனக்காக நின்றவர். உன்னால எப்படி அவரை ஈஸியா தூக்கி எறிய முடிந்தது?

பிரசாத், நவீனை பார்த்து, அவங்க தான் பக்குவம் இல்லாமல் நடந்துக்கிறாங்க. ஏன் சார் நீங்களும்? அவர் சூழ்நிலை உங்களுக்கு புரியலையா?

பிரச்சனை சஞ்சய் அண்ணா அம்மா தான். எனக்கு நன்றாக தெரியுது. அதுக்காக இவங்க பிரிஞ்சு இருந்தா சரியாகிடுமா? தோழன்னு சொன்னால் போதாது. அதற்கான நடவடிக்கை எடுத்திருக்கணும்..

பிரியசகியிடம் வந்து, உன்னை யாரோ….. ஏன் சஞ்சய் அண்ணாவே எதுவும் சொன்னால் உனக்காக நீ தான் நிற்கணும். அதை விட்டு அழுதுட்டு ஓடி வந்துட்ட..?

“உன்னோட முதல் திருமணத்தின் போது சஞ்சய் அண்ணா எவ்வளவு வேதனை அனுபவித்து இருப்பார் தெரியுமா? காதலிக்கிற பொண்ணு கழுத்துல வேறொருவன் தாலி கட்டும் போது அவருக்கு எப்படி வலிச்சிருக்கும். உனக்கு இன்னுமா சஞ்சய் அண்ணா காதல் புரியல…” ரதியும் அதே வலியை அனுபவித்தவள் கண்ணீர் வந்து விட்டது.

“ரதி..” இந்துஜா அவளை நெருங்க,

வராத…விழிகளை துடைத்து,

சஞ்சய் அண்ணா விழிச்சுட்டார். உனக்கு சஞ்சய் அண்ணாவும் அவர் காதலும் முக்கியமில்லை என்றால் அவர் கட்டுன தாலியை தூக்கி அவரிடம் எறிஞ்சுட்டு போயிரு. ஆனால் அதற்கு பின் அவர் எப்படி வாழ்வார்னு அவர் காதலை புரிந்தவர்களுக்கு தெரியும்.

இன்னொரு விசயம், இந்த காலம் மட்டுமல்ல எந்த காலத்திலும் நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் பேச்சுக்கு செவிசாய்க்காமல் நம் வேலையை மட்டும் பார்த்தால் தான் வாழவே முடியும் ரதி செல்ல, “ரதி” அழைத்தான் ரக்சன்.

“சாரி சார், எனக்கு கெல்த் சரியில்லை. அதான் விடுப்பு எடுத்திருந்தேன். சஞ்சய்  அண்ணாவை பார்த்துட்டு தயாராகி வாரேன்” என்று அவள் பணிநிமித்தம் பேசி விட்டு சென்றாள்.

சுவர்ணலதா அழுது கொண்டிருந்தார். அவர் முன் வந்த ரதி, “நாம பேசலாமா?” அவரை கேண்டியன் அழைத்து சென்றார்.

குழப்பத்தில் இருந்த பிரியசகியின் மனக்கதவு முழுதாக திறக்கப்பட, வேகவேகமாக சஞ்சய் அறையை நோக்கி ஓடினாள். எல்லாரும் அவள் பின் சென்றனர்.

நாகேந்திரன் தன் மகனின் கரம் பற்றி கண்ணீருடன் சஞ்சயை சாந்தமாக்கிக் கொண்டிருந்தார். அவன் விழிகளை மூடி படுத்திருந்தான்.

“தன் சகியை அதிகம் காயப்படுத்தி விட்டார்களோ? அப்படியானாலும் அவள் ஏன் தன்னை விட்டு சென்றாள்? அவளுக்கு என்னை பிடிக்கவில்லையோ! நான் தான் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறேனோ?” எண்ணம் பலவாறாக ஓடியது சஞ்சய்கு.

கதவு படாரென திறக்கவும் விழிகளை திறந்தான் சஞ்சய். நாகேந்திரன் தன் மருமகளை காணவும் மகனின் கரத்தை விட்டு பிரியசகியிடம் சென்று, “போயிறாதம்மா…” என்றார்.

உதட்டை மடித்து அழுகையை கட்டுப்படுத்தி பிரியசகி சஞ்சயை காண, “யார் என்ன செய்தாலும் விட்டு போக மாட்டேன்னு சொன்ன சகி…போயிட்ட?” மெல்லிய கலங்கிய குரலுடன் அவன் கேட்கவும், ஓடிச் சென்று அவன் கட்டை பார்த்து அழுதவாறு சஞ்சய் கரம் பற்றினாள்.

சாரி சஞ்சய். என்னால போக முடியல. உங்களை விட்டு என்னால போக முடியல…நான் போகணும்னு நினைக்கல. என்னால தான் உங்களுக்கு இந்த நிலைமையோன்னு பயந்துட்டேன்…சாரி சஞ்சய்.. சாரி…சாரி…கதறி அழுதாள்.

மனம் நிம்மதியடைய நாகேந்திரன் வெளியே சென்று அமர்ந்தார். ஹரிஹரனும் மற்றவர்களும் அவரை கண்டவாறே நின்றனர்.

“எதுக்குடா வந்த?” ஹரியை நாகேந்திரன் கேட்க, அமைதியாக நின்றான்.

பேசுடா…

சாரி அங்கிள் என்ற பிரசாத், பிரியா கஷ்டப்படுவாளே! என்று மட்டும் தான் இருந்தது. ஆனால் அவளுக்கும் சஞ்சய் மாமாவை பிடித்து இருக்கு. நாங்கள் இவ்வளவு நேரமும் மருத்துவமனை வெளியே தான் இருந்தோம். அவ சஞ்சய் மாமாவை விட்டு வரவே மாட்டேன்னு இருந்தா. எங்க எல்லார் பயமும் ஆன்டியால தான். அவர் ஏதாவது சொல்லி இவள் ஏதாவது செய்து கொண்டால்…தொண்டை கமறியது பிரசாத்திற்கு..

“மன்னிச்சிருங்க பெரியப்பா. அண்ணாவை விட்டு போகணும்னு நான் நினைக்கல. ஆனால் பிரியா பற்றி சித்தி பேசும் போது அமைதியா இருக்காங்க. நான் பேசுவேன். ஆனால் எல்லாரிடமும் நான் பேச முடியாது. அவங்க தான் பேசி இருக்கணும். அவங்களால ஏன் பிரியாவை ஏத்துக்க முடியல…அதான்…” அவர் முன் மண்டியிட்டாள் இந்துஜா.

“உன்னோட பெரியம்மா சரியாவா இல்லைன்னா அவள என்ன பண்ணனும்னு நான் பார்த்துக்கிறேன்” நாகேந்திரன் நவீனை பார்க்க, “அங்கிள்…” அவன் தயங்கினான்.

யாரும் என்னை சமாதானப்படுத்த வேண்டாம். சஞ்சய் தான் எல்லாரும் போயிட்டீங்கன்னு கஷ்டப்பட்டான். எம் புள்ள இதுக்கு மேல கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது என்ற நாகேந்திரன் ஹரிஹரனிடம், “நீ சொன்னது போல நீயும் நம்ம வீட்ல சஞ்சயோட எப்போதும் இருக்கணும்” என்றார்.

“சாரி தாத்தா, எனக்கு கோபம் தான். யார் மீதும் நான் வெறுப்பெல்லாம் காட்டமாட்டேன்” அவரை கட்டிக் கொண்டு அழுதான்.

முதல்ல சஞ்சய்ட பேசுங்க…

எல்லாரும் அறைக்கதவை பார்த்தனர்.

உள்ளே மன்னிப்பு வேண்டி வார்த்தைகளாலும் கண்களாலும் கெஞ்சிக் கொண்டிருந்தாள் பிரியசகி.

“நான் எப்படி சகி உன்னை முழுதாக நம்ப முடியும்? அன்று நீ சொல்லும் போது உன் மீது எனக்கிருந்த நம்பிக்கை எனக்கு இப்ப வர மாட்டேங்குது…” வேதனையில் கண்ணீர் வடித்தான்.

“மன்னிச்சிருங்க சஞ்சய். நான் என்ன செய்தால் நம்புவீங்க? மனம் கொள்ளா வலியில் கணவன் நம்பிக்கையை உடைத்து விட்டோமே!” கலங்கிய விழிகளுடன் கேட்டாள்.

தெரியல சகி. உன்னோட விசயத்துல என்ன செய்றதுனு எனக்கு தெரியல. உன் முடிவு தான்..

“அப்படின்னா என்னை போக சொல்றீங்களா?” அழுகை வந்து விட்டது அவளுக்கு.

“நான் உன்னை போகவா சொன்னேன்?” கடுமையை முகத்தில் காட்டினான்.

பக்கத்தில இருந்தா திட்ட மாட்டீங்கள?

திட்டுனா போயிடுவியா?

இரு பக்கமும் தலையசைத்து, தூரத்தில இருந்து பார்ப்பேன். அவனுக்கோ சினம் துளிர்த்தது. அதனை காட்டும் நிலையிலா அவன் இருக்கிறான்? அவளது பேச்சும் அவனை வெகுவாக தாக்கியது.

“போ…தூரமா இருந்தே பார்த்துக்கோ” சொன்னவன் விழிகளிலிருந்து கண்ணீர் தலையணையை நனைக்க, அவளிடம் பதிலில்லை.

போய் விட்டாளோ? என்றவன் லேசாக நிமிர்ந்து தலையை வலப்பக்கம் திருப்பினான். அவனருகே ஸ்ரீரங்கநாதர் போலே படுத்து அவனை பார்த்தாள்.

“போறேன்னு சொன்ன…” அவன் முறைக்க,

“வந்தவுடனே ஒன்று சொன்னேன். உங்களுக்கு தான் கேட்கவில்லை போலும்” என்றாள் அவனை பார்த்து..

“என்ன சொன்ன?” அவன் தெரியாதது போல கேட்டான்.

“உங்களுக்கு மறந்து போனால் நான் மறுபடியும் சொல்லணுமா? சொல்ல மாட்டேன்” என்று படுத்தவாறே விழிகளை மட்டும் மூடினாள்.

சஞ்சய் அமைதியாகி விட, விழிகளை திறந்தாள். வச்ச கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மெதுவாக அவள் கரத்தை அவன் கரத்தினுள் கோர்த்து சஞ்சய் நெற்றியில் இதழ் பதித்தாள்.

நான் நிச்சயமாக உன்னுடன் இருப்பேன் என்று சொல்லாமல் அவளது கதை பேசும் விழிகள் சஞ்சய்கு உணர்த்தியது. மற்றவர் போல வலிக்கிறதா? என்றெல்லாம் விசாரிக்கவில்லை. அவனது கட்டை கவனித்தே அவன் வலியை உணர்ந்தாள்.

கதவு தட்டப்பட சஞ்சய் விழிகளை மட்டும் கதவருகே பதித்தான். எழுந்து சென்று கதவை திறந்தாள் பிரியசகி.

“அண்ணா” என்று இந்துஜாவும் மற்றவர்களும் உள்ளே வந்தனர். அனைவரும் சஞ்சயை சூழ்ந்து அவனிடம் மன்னிப்பு வேண்டினார்கள். அவன் முதலில் கோபத்தை காட்டினாலும் பின் அவர்களை மன்னித்து விட்டான்.

பிரியசகி இவர்களை பார்த்துக் கொண்டே வெளியே வந்து, “மாமா..” என்று நாகேந்திரனிடம் ஏதோ கூறி ரக்சனை பார்க்க சென்றாள்.

சஞ்சய் பிரியசகியை சேர்க்க தன்னால இயன்றளவு சுவர்ணலதாவிற்கு புரிய வைத்தாள் ரதி. அவருக்கு அவள் கூறியது காதில் ஏறி இருந்ததோ இல்லையோ இருவரும் பிரியசகிக்கு எதிரே வந்து கொண்டிருந்தனர்.

“பிரியா” ரதி அழைக்க, புன்னகையை மட்டும் அவளுக்கு காட்டி ரக்சன் அறை நோக்கி பிரியசகி செல்ல, “ஆன்ட்டி நீங்க போயிட்டு இருங்க. நானும் பார்த்துட்டு வாரேன்” ரதியும் பிரியசகியும் சேர்ந்தே அவனை காண சென்றனர்.

இருவரையும் ஒன்றாக பார்த்த ரக்சன் பெருமூச்சுடன் அமர சொல்லி, சஞ்சயின் மருத்துவநிலை பற்றி கூறினான்.

சஞ்சயை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள பிரியசகி கேட்க, ரக்சன் கண்டிப்புடன் “முடியவே முடியாது” என்று விட்டான். பேசி விட்டு மூவரும் சஞ்சயை காண வந்தனர். மூவரும் உள்ளே சென்றனர்.