சூரியன் 20

ஜூவல்லரி ஷாப்பிற்குள் செல்லவும், “அம்மா நகை பார்த்துட்டு இருங்க. வருகிறேன்” கூறி சஞ்சய் நகர, இந்து சஞ்சய் அருகே செல்லும் முன் உள்ளே சென்று விட்டான்.

“என்னை பார்க்க சொல்லீட்டு இவன் எங்க போறான்?” சுவர்ணலதா புலம்பியவாறு கடுகடுப்புடன் சொன்னவர் ஆரம், நெக்லஸை பார்க்கவும் அவர் முகத்தில் பளபளப்பு..

“இப்படி விட்டு போக தான் அழைச்சிட்டு வந்தானா?” நாகேந்திரன் பிரியசகியை பார்த்தார். அவள் முகத்தில் வருத்தம் இல்லை. ஆர்வம் தான்…சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பிரியா, உனக்கும் வாங்கலாமா?” நவீன் கேட்க, அவளது கழுத்தில் இருந்த கவரிங்கை தொட்டுப் பார்த்தாள்.

எனக்கு இதெல்லாம் விருப்பமில்லை நவீன். எனக்கு எதுவும் வேண்டாம். ஜா கிட்ட கேளு. அவளுக்கு பிடிக்கும்.

எனக்கு வேண்டாம்..

“உனக்கு ஜூவல்ஸ் பிடிக்கும்ல?” பிரியசகி கேட்க,

இப்ப பிடிக்கல..

“சும்மாவாது டிசைன்ஸ் பாருங்க. உங்க டேஸ்ட் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்” நவீன் கூற, இந்துஜா வேடிக்கை பார்க்க, பிரியசகி விழிகள் ஓரிடத்தில் நின்றது. அவளுக்கு நெக்லஸ் ஒன்று மிகவும் பிடித்து இருந்தது.

“மேம், அதை எடுக்கவா? பாக்குறீங்களா?” விற்பனை பெண்ணொருத்தி கேட்டாள்.

“வேண்டாம்” தலையசைத்து நகர்ந்தாள் பிரியசகி.

“பிரியா வா பார்க்கலாம்” நவீன் அவனை அழைக்க, “ஷ் அமைதியா இரு நவீன்” என்று நகர்ந்தாள்.

சஞ்சய் அவர்களிடம் வந்தான்.

“இந்து, சகி இங்க வாங்க” இருவரையும் அழைத்து, “உங்களுக்கும் பாருங்க” என்றான்.

“எனக்கு வேண்டாம்” இருவரும் ஒருவாறு சொல்லி பார்த்துக் கொண்டனர்.

“வேணுமான்னு யாரு உங்ககிட்ட கேட்டது?” என்ற சஞ்சய், அவனாகவே இருவருக்கும் செலக்ட் செய்தான்.

மூன்றடுக்கு கோல்டு செயின் பிரியசகிக்கும், ஒரே அடுக்கில் கற்கள் பதிக்கப்பட்ட செயின் இந்துஜாவிற்கு வாங்கினான்.

தயக்கமுடன் பிரியசகி அவன் கரம் பற்ற, “என்ன?” புருவம் உயர்த்தினான்.

எனக்கு வேண்டாம்..

என்ன வேண்டாம்? நாளைக்கு தாலியும் சில ஆபரணங்களும் வாங்கணும். உன்னிடம் எதுவும் இல்லாமல் இருக்கக் கூடாது.

எதுக்கு? நான் அதிகம் போட மாட்டேன்…

நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள நேரிட்டால் தேவைப்படும். அவளை தனக்கு நேராக நிற்க வைத்து, “உனக்கு வாங்கி தருபவன் யாரோ இல்லை. உன்னோட கணவன் தான். நம்முடைய பணத்தில் வாங்குவது எந்த தவறும் இல்லை. உன்னை யாரும் எதுவும் சொல்ல முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியும்…” தன் அன்னையை பார்த்தான்.

ஆமாம்மா, நம்ம சொந்தபந்தங்கள் வருவாங்க. உம் மருமகளுக்கு இது கூட வாங்கித் தரலையான்னு என்னை கேட்பாங்க இல்லை உம் புருசனை தான் கேட்பாங்க. நல்லாவா இருக்கும்? நாகேந்திரன் கேட்டார்.

ம்ம்! வாங்கிக்கிறேன் அங்கிள் என்றாள்.

இந்து, போட்டுக்கோ என்று அவளிடம் நகைப்பெட்டியை கொடுத்த சஞ்சய், தன் மனைவிக்கு எல்லார் முன்னும் கண்ணாடி முன் நிறுத்தி அவனே போட்டு விட்டான். கண்ணீர் வழிந்து விட்டது பிரியசகிக்கு…

“எனக்கு பிடிச்சதையே வாங்கி கொடுத்துட்ட” மகிழ்வுடன் இந்து போட்டுக் கொண்டாள்.

அம்மா, நீங்க தேர்வு செய்துட்டீங்களா?

இப்ப தான் உனக்கு அம்மா நினைவே வருது…

அம்மா, உங்களை தான் பார்க்க சொல்லீட்டு போனேன். மூவருக்கும் எடுத்து இருப்பீங்கன்னு நினைச்சேன். உங்களுக்கு மட்டும் தான் எடுத்துருக்கீங்க. இதை பேக் செய்திருங்க என்று கையசைத்து, மற்றவர்களை காரில் ஏற்றினான்.

“அப்பா, முன்னாடி போய்ட்டு இருங்க. நாங்க வாரோம்” பிரியசகியை நிறுத்தினான்.

என்ன…டா…?

“அம்மா, வண்டிச்சாவியை உள்ளே வச்சிட்டு வந்துட்டேன்” என்று பொய் உரைக்க, அவர்கள் முன்னே கிளம்பினார்கள்.

“சகி, இங்கேயே இரு. வருகிறேன்” என்று பிரியசகி ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த நெக்லஸை அங்கே நிற்கும் பெண்ணிடம் காட்டி,… “மேம் ஏற்கனவே ஆர்டர் கொடுத்ததோட இதையும் எடுத்து வச்சிருங்க. தனியே இரு பரிசாக கிஃப்ட் ராக் பண்ணிடுங்க. நாளை வாங்கிக்கிறேன்…” வெளியே வந்து பிரியசகியை அவனுடன் பைக்கில் ஏற்றி இருவரும் ஜோடியாக கோவிலுக்கு சென்றனர்.

கோவிலுக்குள் சென்ற இந்துவை பிடித்துக் கொண்டாள் ரதி. பிரியசகியை அவள் விசாரித்துக் கொண்டிருக்க சஞ்சயும் பிரியசகியும் வந்தனர்.

சஞ்சய் புன்னகையுடன் பிரியசகி கரம் பிடித்து வருவதை கண்டு மகிழ்வுடன், “கங்கிராட்ஸ் அண்ணா” கை குலுக்கினாள்.

பிரியசகியை அணைத்து, கங்கிராட்ஸ் மேம்..

பெயர் சொ ல்லியே கூப்பிடு..

“ம்ம்! உங்க ஹெல்த்தை பார்த்துக்கோங்க பிரியா..” முகம் பளபளக்க ரதி பேச, சஞ்சய் அவளை குறுகுறுவென பார்த்தான்.

“சஞ்சய், எதுக்கு அந்த பொண்ண இப்படி பாக்குற?” சுவர்ணலதா கேட்டார்.

“ரதி இவ்வளவு ஹாப்பியா இருக்க?” சஞ்சய் கேட்க, பதில் அவள் தோழி ரேணுவிடமிருந்து வந்தது.

இப்ப பரவாயில்லை சார், நீங்க இவங்க கழுத்துல தாலி கட்டிட்டீங்கன்னு தெரியவும் குதியா குதிச்சா..

அப்படியெல்லாம் இல்ல அண்ணா..

“சத்தியமா சொல்றேன் சார்” என்ற ரேணு, “இவள மாதிரி இல்லாமல் எப்படியோ காதலில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்ற மகிழ்ச்சி தான் ரதிக்கு…” அவளை பார்த்தாள்.

ரதியின் முகம் வாட, “ஓ.கே அண்ணா மீட் பண்ணலாம். ரக்சி மேரேஜ் விசயமா இந்த பக்கம் வந்தோம். அப்படியே கோவிலுக்கு போகலாம்னு வந்தோம்” ரதி சென்றாள்.

“இவங்க லவ் பண்றாங்களா அண்ணா?” இந்துஜா வினவ,

“ம்ம்! பட் அவளுக்கு செட் ஆகல. வாங்க நாம உள்ளே செல்லலாம்” தன் குடும்பத்துடன் கடவுளை தரிசிக்க சென்றான் சஞ்சய்.

இரவு ரக்சனா சஞ்சயை அழைத்து வாழ்த்தை கூற, அவன் ரதி பற்றி பேசினான்.

சிலமணிநேரம் இருவரும் பேசி அழைப்பை துண்டித்தனர்.

தன் தந்தையை காண சென்ற சஞ்சய், அப்பா ரிசப்சன் எல்லார் முன்னும் நடந்த பின் சகி என்னோட அறைக்கு வரட்டும் என்றான்.

சரிப்பா, பிரியாவும் இதை தான் கேட்டாள்..

“முறைப்படி திருமணம் செய்திருந்தால் எல்லாம் சரியாக நடந்திருக்கும்” சுவர்ணலதா பேச,

அம்மா…இரு நாட்களில் முறைப்படி தான் ரிசப்சன் நடக்கவுள்ளது. உங்களுக்கு தான் உங்களது மகன் திருமணம் பிடிக்கவில்லை…

“நீ திருமணம் பண்ணிக்கணும்னு வருசமா பொண்ணு பார்த்துட்டு இருக்கோம். எம் புள்ளைக்கு திருமணம் என்றால் எனக்கு பிடிக்காமல் இருக்குமா? எனக்கு நீ பிரியாவை திருமணம் செய்தது பிடிக்கலை..” வேண்டுமென்றே சத்தமாக கத்தினார்.

அம்மா, நான் அமைதியா தான பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு அவளை பிடிக்கலைன்னா என்னால ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு அவளை மட்டும் தான் பிடிச்சிருக்கு. அவளோடு சாகும் வரை வாழப் போவது நான். நீங்கள் இல்லை…சும்மா அவள் பார்க்கும் போதெல்லாம் முறைச்சிட்டு இருக்கீங்க? ஒரு வேளை அவள் இடத்தில் நீங்க இருந்தால்…குழந்தை பிறக்காது என்ற நிலையில் என்ன செஞ்சிருப்பீங்க? பல்லை கடித்து நறுக்கென கேட்டு,

“அப்பா, அவளோட நிலை எனக்கு தெரியும். எப்ப எங்க வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு எனக்கு நன்றாக தெரியும்”.

“என்னடா இப்படி பேசுற?” நாகேந்திரன் அதிர்ந்து கேட்டார்.

“அப்பா, அவளுக்கு என்னை பற்றி எதுவும் தெரியாது. இப்பொழுது தான் பேசவே செய்றா. அவ விருப்பத்தோட நான் திருமணம் செஞ்சுக்கல. அவள் மனதளவிலும் உடலவிலும் வீக்கா இருக்கா. அவ முதல சரியாகணும். எப்ப என்ன செய்யணுமோ நான் பார்த்துக்கிறேன். அம்மாவோட வாயை மட்டும் முடிந்தால் அடக்கி வையுங்க. எனக்கு அம்மாவும் முக்கியம். சகியும் முக்கியம்” சொல்லி விறுவிறுவென மாடி ஏற, நின்று அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.

நின்ற சஞ்சய் பிரியசகியை கண்டு, “நான் இருக்கேன்” என கண்ணசைத்து சென்றான். நவீன், இந்துஜாவிற்கு நிம்மதியாக இருந்தது.

சஞ்சய் கைபேசி அலறியது.

எழுந்து அதனை சிந்தனையுடன் எடுத்தான்.

“காலையிலிருந்து கால் பண்றேன். நீ எடுக்கவேயில்லை” சத்தமிட்டான் ரக்சன்.

அப்புறம்..

“வாழ்த்துக்கள்டா…உன்னுடைய காதல் கை கூடி விட்டது” சஞ்சய்காக மகிழ்ந்தான் ரக்சன்.

எங்களை பற்றி அப்புறம் பேசலாம். நீ என்ன பண்ணப் போற? உன்னை நினைத்து ரக்சியும், சாரும் ரொம்ப வருத்தப்படுறாங்க..

அதுக்கு என்னடா பண்றது?

மறுமணம் பண்ணிக்கோ..

வாய்ப்பில்லைடா

“சொல்லணும்னு தோணுச்சு சொல்லீட்டேன் பார்த்துக்கோ” சஞ்சய் கைபேசியை வைத்து விட்டான்.

ரக்சனுக்கு அவன் மனைவி ஐஸ்வர்யா எண்ணம் வர, தலையை பிடித்து கத்த வேண்டும் போலிருந்தது. தன் மனைவி இறந்த போது மது அருந்தியவன் தற்பொழுது அதனை கையிலெடுத்தான். மடமடவென அருந்தி போதையில் மட்டையானான்.

அற்புதமான காலைப்பொழுதில் புத்துணர்ச்சியுடன் எழுந்த சஞ்சய்க்கு அவன் காதலித்த பெண்ணை மனைவியாக பார்க்க இனிய அதிர்வுடனான உணர்வு. பிரியசகி கொடுத்த தேனீரை பருகிக் கொண்டிருந்தாலும் அவன் விழிகள் அவளிடம் தான் இருந்தது.

பிரசாத் வந்தான்.

“பிரசாத் இரு நாட்கள் விடுமுறை சொல்லி இருக்கிறாயா?”  சஞ்சய் கேட்க,

சொல்லி இருக்கேன் மாமா..ஆனால் அடுத்த ஒரு மாதம் எங்கும் போக முடியாது. விடுப்பும் கிடைக்காது…

“நானும் தான்” என்றான் சஞ்சய்.

“நீங்களுமா? என்ன சொல்றீங்க? ஒரு வாரமாவது பிரியாவுடன் நேரம் செலவழிக்கலாமே!” பிரசாத் கேட்டான்.

தன் அன்னையை பார்த்தவாறு, சகியுடன் நேரம் செலவழிக்க எனக்கும் ஆசை தான். ஆனால் அதற்கான நேரம் இது இல்லை. கண்டிப்பாக அவளுடன் நேரம் செலவழிக்கணும். அதற்கு அவளுக்கு என்னை பிடித்திருக்கணும். எங்களோட இந்த கேப் தான் அவளுக்கு என்னை புரிந்து கொள்ளும் வாய்ப்பை கொடுக்கும்.

தேனீரை முடித்து சமையலறைக்குள் சஞ்சய் செல்ல,எல்லாரும் அவன் பின்னே பூனை போல நகர்ந்து வாயிலில் நின்று எட்டிப் பார்த்தனர்.

சத்தமில்லாமல் அடுக்கலைக்குள் நுழைந்த சஞ்சய் சத்தமில்லா சிரிப்புடன் தன்னவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

அவசரத்தில் கூந்தலை சரியாக கிளிப் போடாமல் முன்னே விழுந்த கற்றைக்கூந்தலை ஊதி நகர்த்திக் கொண்டிருந்தாள் பிரியசகி. வியர்வை ஒரு பக்கம் கூந்தல் கற்றை ஒரு பக்கம் அவளுக்கு எரிச்சலாக இருக்க புடவை வேற ஒழுங்கில்லாமல் அவளை மேலும் வெறுப்பேற்றியது..

நவீன் சிரிப்பை அடக்கி பிரியசகியை பார்க்க, வெளியே நிற்பவர்களை கண்ட பிரியசகி சஞ்சய் இருப்பதை மட்டும் கவனிக்கவில்லை. அவன் அவளை ரசித்தவாறு சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

“என்ன இங்க வேடிக்கை பாக்குறீங்க? போங்கடா…” எரிச்சலுடன் பேச, நவீன் அவளை மேலும் வெறுப்பேற்றும் விதமாக வாயில் கை வைத்து சிரித்தான்.

“ராஸ்கல்…” என்று அவள் தண்ணீர் குவளையை கையில் எடுக்க, மூவரும் அவளிடம் கை காட்டினர். அந்நேரம் அவளை நெருங்கிய அவளது கணவன் அவளது கூந்தலை அடக்க முயன்று கொண்டிருந்த கிளிப்பை எடுத்தான். அவளும் திரும்பி சஞ்சயை கண்டு திகைத்து விழித்தாள்.

படபடப்புடன் அவனை ஏறிட்டாள். அவள் முகத்தில் இருக்கும் பதட்டம் கண்டு, “ஈஸி சகி ஈஸி…” என்று அவளை திருப்பி முன்னே விழுந்திருந்த கூந்தலை எடுத்து அக்கிளிப்பை சொருகினான்.

சமையலறை வரவும் முதலில் சன்னலை திறந்து வைக்கணும். அப்புறம் தான் சமையலை தொடங்கணும் என்றான்.

“அ…அது…லேட் ஆகிடுச்சா..அதான் மறந்துட்டேன்” மூவரையும் பார்த்தாள்.

அவர்கள் புன்னகைத்தனர்.

தண்ணீர் பானையிலிருந்து தண்ணீரை எடுத்து அருந்தி விட்டு வெளியேறினான். நாகேந்திரன் ஆட்களுடன் கைபேசியில் பேசியவாறு பிஸியாக இருந்தார்.

சஞ்சய், நாளை ரிசப்சனுக்கான மண்டபம், கேட்ரிங் இதர அனைத்துக்கு புக் செய்தாச்சு. மருமகளுக்கு தாலி மட்டும் உன் பணத்தில் எடுத்துக்கோ. நான் என் மருமகளுக்கு நகை எடுத்து தருகிறேன் அவர் கூற, பிரசாத், நவீன், இந்துஜாவும் வந்தனர்.

பிரசாத்தும் நவீனும், பிரியாவிற்கான ஆடை எல்லாம் நாங்கள் பார்த்துக்கிறோம் என்றனர்.

பிரியசகி சஞ்சயை பார்க்க, சகிக்கு பரிசாக நீங்க வாங்கி தாங்க போதும்…மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துப்பேன்..

நவீன், இந்து விழாவில் சகியை விட்டு அகலாமல் அவளருகே நீங்க இருந்தால் போதும். நான் மேடையில் இருப்பதால் அம்மா, அப்பாவுக்கு உதவியாக மட்டும் பிரசாத் இருக்கணும் என்றான் சஞ்சய்.

மாமா, நீங்க பிரியாவிற்கு வாங்கிக் கொடுங்க. நாங்க வேண்டாம்னு சொல்லலை. நாங்களும் வாங்கித் தருவோம். நாங்க பொண்ணு சைடுல. சகோதரனாக நிற்போம் என்றான் நவீன்.

விழிகள் கலங்க அவனை பார்த்தாள் பிரியசகி..

நானும் எம் மருமகளுக்கு எடுத்து தருவேன். நீயும் உன்னோட பொண்டாட்டிக்கு வேணும்கிறதை வாங்கிக் கொடு என்றார்.

“யார் என்னமும் செய்யுங்க” உள்ளே வந்த சுவர்ணலதா, “புடவை தான் உடுத்தணும்” என்றார் வெறுமையை தேக்கி வைத்து..

“புடவையே அணிந்து கொள்கிறேன் அத்தை….” முதல் முறையாக அத்தை என்றாள் பிரியசகி.

ம்ம்! மாமியார் கெத்துடன் நகர்ந்தார் சுவர்ணலதா. இந்துஜா அவரை முறைத்தாள்.

சஞ்சய் தன் தந்தை தோளில் இருந்த துவாலையை எடுத்து மனைவியிடம் வந்தான்.

சஞ்சய், நீங்க போங்க. நான் இப்ப தயார் செய்துருவேன்..

“பண்ணலாம் பண்ணலாம்” என்று அவளை இழுத்து அவளது வியர்வையை துடைக்க, அவள் விழிகள் சஞ்சயின் விழிகளை தொட்டு மீண்டது.

பிரியசகி மனதில், “வாட் எ பவர்புல் ஐஸ்..?  உஃப்” ஊதினாள்.

“என்னாச்சு?” அவன் கேட்க,

“ஒன்றுமில்லையே!” கன்னங்கள் சிவந்தது. விழிகளை தாழ்த்தினாள்.

சஞ்சய் புன்னகையுடன் நகர்ந்தான்.

அன்று முழுவதும் குடும்பமே அருகே இருந்தாலும் சஞ்சயை பார்த்துக் கொண்டே இருந்தாள் பிரியசகி. அவள் மனதில் இவர் பக்கம் இருக்கும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் எண்ணிக் கொண்டாள். சொல்ல முடியாத ஓர் நிறைவு அவள் மனதில்…

நிலவு பெண்ணவள் தன் காதலனை அணைக்க ஓடோடி வந்த நேரம் தங்களது விழாவிற்காக தயாராகிக் கொண்டிருந்தனர் சஞ்சயும் பிரியசகியும்.

சஞ்சயின் நண்பர்களும், உடன் பணிபுரியும் ஆட்கள், குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர்.

சுவர்ணலதாவிற்கு நடக்கும் எதுவும் பிடிக்கவில்லை என்றாலும் அடுத்தவர் முன் காட்ட விருப்பமில்லாது மலர்ந்த முகத்துடனே அனைவரையும் வரவேற்றார்.  நாகேந்திரனை கையில் பிடிக்க முடியவில்லை அவ்வளவு மகிழ்ச்சி மகனின் விழாவில்….

வெண்ணிற பட்டு வேஷ்டி சட்டையில் நெற்றியில் திருநீறு இட்டு மாப்பிள்ளை கலையுடன் இருந்தான் சஞ்சய்.

“வாழ்த்துகள்டா சஞ்சய்” அவனுடைய நண்பர்கள் அவனை வாழ்த்த, “வாங்கடா” வரவேற்று அமர வைத்தான்.

“ஏன்டா ரிசப்சனுக்கு வேஷ்டி சட்டை போட்ருக்க?” நண்பன் ஒருவன் விவன,

சகி புடவை தான் உடுத்தணும்னு அம்மா சொல்லீட்டாங்க. அதான் நானும் வேஷ்டி சட்டை அணிந்திருக்கேன். திருமணத்திற்கு பதில் தானே இந்த விழா…எந்த ஆடையாக இருந்தால் என்ன? நல்லா இல்லையாடா? சஞ்சய் கேட்க,

அச்சோ..நீ வேற லெவல்ல இருக்க…சிலாகித்தான் ஒருவன். மற்றவர்கள் கேலி செய்து கொண்டிருந்தனர். அவன் சுற்றும் முற்றும் தேடினான்.

“மாமா…” பிரசாத் அவனிடம் வந்தான்.

எல்லாமே ஓ.கே தான?

“மாமா பிரியா பற்றிய பேச்சு தான் அதிகமா போகுது. பார்த்து பேசுங்க. யாரிடமும் கோபப்பட்றாதீங்க..” அறிவுறுத்தினான்.

சந்திரசேகர் தன் குடும்பத்துடன் வருவதை கண்ட நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் பாதி பேர் எழுந்து மரியாதை நிமித்தம் புன்னகைத்தனர்.சஞ்சயும் அவரை முறையாக வரவேற்று அமர வைத்தான்.

ரக்சி அவனருகே வந்து, “ரதி இன்னும் வரவில்லையா? அப்பொழுதே கிளம்பீட்டேன்னு சொன்னா” என்றாள்.

“அங்க பாரு” சஞ்சய் கூற, மூவரும் அவன் காட்டியை இடத்தை நோக்கினார்கள்.

ரதி ராக்கியை கரத்தில் பிடித்து மறுகரத்தில் இரு தாம்பூலத் தட்டுகளை அடுக்காய் வைத்து புடவையில் பிரியசகி அறையை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

ரக்சனா அவளிடம் செல்ல, “ரக்சா அமரு” தந்தையின் குரலில் அமர்ந்தான் ரக்சன். அவர்களது டிப்பார்ட்மென்ட் ஆட்கள் சந்திரசேகரனை சூழ்ந்து கொள்ள, ரக்சன் பிரியசகியை காண சென்றான்.

“ரதி..” அழைப்பில் ரக்சனாவை பார்த்து,

“ரக்சி இதை பிடியேன்” ரதி தாம்பூலத்தை ரக்சனா கரத்தில் கொடுத்து, ஓரமாக நகர்ந்து தன் ஆடையை சரி செய்து அவள் கரத்திலிருந்து வாங்கினாள்.

“பிரியா இப்ப ஓ.கே வா இருக்காளா?” ரக்சனா கேட்க, “நீயே பாரு” ரதி கூறி அவளையும் அழைத்து சென்றாள்.

கலகலவென பிரியசகி சிரிக்கும் ஓசை கேட்டவாறு ரக்சனா அவர்களிடம் வந்தாள். பார்லர் பொண்ணு அவளுக்கு ஒப்பனை செய்து கொண்டிருக்க, இந்து பிரியசகியின் பள்ளித் தோழிகள் வந்திருந்தனர். இதன் ஏற்பாடு சஞ்சயே!

வெகுவருடத்தின் பின் மனம் விட்டு சிரித்தாள் பிரியசகி. அவர்களுடன் ரக்சனா இணைந்து கொள்ள, அங்கு கலகலப்பு கூடியது.

இந்து, “மணமேடைக்கு பிரியாவை அழைக்கும் போது இந்த மாலையை பிரியாவிற்கு போட்டு விடு” கூறி ராக்கியை ரதி தூக்கினாள்.

ரக்சன் உள் நுழைந்தான். பிரியசகி அருகே வந்து அவளது உடல்நிலையை விசாரித்து வாழ்த்து கூறி நகர்ந்தான்.

“ஏன்டி, உம் பிள்ளைக்கு வேற பொண்ணா கிடைக்கல. ஊரு உலகத்துல இல்லாத பொண்ணா இவ. குழந்தை பெத்துக்க முடியலைன்னு தெரிஞ்சே தாலி கட்டி இருக்கான். கூறு கீறு இருக்காடி உம் பிள்ளைக்கு?”  நடுத்தர வயது பெண்மணி சுவர்ணலதாவிடம் பேச,

“உனக்கு என்னடி பிரச்சனை? மாப்பிள்ளைக்கு பிடிச்சிருக்கு. கட்டிக்கிறாரு. அவரு என்ன உம் பிள்ளையா? எல்லா பொண்ணு பின்னாடியும் லோ லோன்னு சுத்த?” பட்டென பதில் சுவர்ணலதாவின் பின்னிருந்து கொடுத்தார் நெடுங்குழலி.

“அட,…நீயா? நீ எப்படி இவுக பங்சனுக்கு வந்த?” இழுத்தவாறு அப்பெண்மணி கேட்க, “அத்த..பார்த்து பேசுங்க” இனியவன் சீறினான்.

யவா, அம்மா தான் பேசிட்டு இருக்கேன்ல. நீ மாப்பிள்ளய போய் பாரு. விச்சு யவாவை அழைச்சிட்டு போ..

“அண்ணா, அமைதியா வா. இதெல்லாம் எல்லா நிகழ்ச்சியிலும் நடப்பது தான!” இனியவனை இழுத்து சென்றான் விஷ்ணு.

நெடுங்குழலியை பார்த்து சிறுபுன்னகையை உதிர்த்த சுவர்ணலதா, “வாங்க அண்ணீ. இவ்வளவு நேரம் கழிச்சு வந்துருகீங்க. இவங்க கிட்ட நான் பேசிக்கிறேன். நீங்க உள்ள போங்க” அவரை நகர்த்தி விட்டு, சொந்தக்கார பெண்ணிடம்… “வந்த வேலையை பார்த்துட்டு போ” என்றார்.

“ஆமாடியம்மா, ஒன்றுமே பேச விட்றாதீங்க. உம் புள்ள நல்லதுக்கு பேசுனா என்னையே வாய மூடச் சொல்லிருவ…” புலம்பியவாறு அப்பெண்மணி நகர்ந்து சென்றார். காலையிலிருந்து இதையே கேட்ட சுவர்ணலதாவிற்கு புளித்து விட்டது.

“ச்சே…எம் பிள்ளையால என்னவெல்லாம் கேட்க வேண்டியிருக்கு” அலுப்புடன் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.