“கையில என்ன பண்ற அத்த?” என்று அவளது உதடுகள், நெற்றியை பார்த்து…கீழ விழுந்துட்டியா? என அவன் படுக்கையில் ஏற முயன்றான். இந்துஜா கண்ணீருடன் ராக்கியை படுக்கையில் அமர வைத்தாள்.
அடிப்பட்டா இப்படி ஊதுனா சரியாகிடும் என்று காயப்பட்ட இடத்தில் தன் செப்பு இதழ்களால் ஊதினான் ராக்கி. அவன் கொடுத்த உணர்வை தாங்க முடியாதவளாக கண்ணீருடன் விழிகளை இறுக மூடினாள்.
அழுகையை கட்டுப்படுத்தினாலும் தன் குழந்தையை இழந்த வலிகளை அவளால் தாங்க முடியவில்லை. அவளது கரங்கள் அவளை மீறியும் வயிற்றில் படிய, இதற்கு மேல முடியாது என்பது போல இந்துஜா சஞ்சயை கண்டவாரே வெளியே சென்றாள்.
“அத்த, வயிறு வலிக்குதா?” அவளது வயிற்றில் அப்பிஞ்சு இதழ் பதிக்க, கண்ணீர் நிற்காமல் வந்தது பிரியசகிக்கு.
இதை வேதனையில் கண்டு கொண்டிருந்த நவீன் தற்செயலாக வாயில் பக்கம் திரும்பினான். வாயிலின் கதவில் கரத்தை பதித்தவாறு கண்ணீரும் தடுமாற்றமுமாய் நின்ற சஞ்சயையும், வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் பிரியசகியையும் மாறி மாறி பார்த்தான்.
ராக்கி அவனது கரம் விலக்க, விழித்த பிரியசகியின் விழிகள் சஞ்சயின் கண்ணீரை கண்டது. அவளால் அந்நிலையில் எதையும் யோசிக்க முடியவில்லை. மீண்டும் விழிகளை மூடினாள்.
இந்த பையனை தூக்கிட்டு கொஞ்ச நேரம் வெளிய இருக்கீங்களா? மேம் ஓய்வெடுக்கட்டும்.
அவளால் ராக்கியை விட மனதும் வரவில்லை. குழந்தை முன் அழ முடியாமல் தவித்தும் இருந்ததால் ஏதும் கூறாமல் விழிகளை மூடியவளுக்குள் சம்பந்தமேயில்லாமல் சஞ்சயின் கண்ணீர் வந்து நின்றது. விழிகளை திறந்து அவன் அவளருகே அமர்ந்திருப்பதை கண்டு பதறினாள்.
தன்னை கண்டு பதறும் அவளை காண சகிக்காமல் எழுந்து வெளியே சென்று விட்டான் சஞ்சய்.
மேம், சஞ்சய் அண்ணா பார்த்து நீங்க பயப்படத் தேவையில்லை. எத்தனை பொண்ணுங்க உயிரை காப்பாற்றி இருக்காங்க தெரியுமா? அவரோட முதல் தோல்வி உங்க புருசன் விசயம் தான்…
அமைதியாக வாயிலை பார்த்து யாருமில்லை எனவும் விழிகளை மூடிக் கொண்டாள்.
ரக்சனாவும் ரக்சனும் சஞ்சய் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களாகவே உள்ளே வர, சஞ்சய் சோபாவில் இரு கைகளையும் விரித்து அமர்ந்து பின் பக்கம் தலை சாய்த்து இமைகளை மூடி இருந்தான். அவன் மடியில் இந்துஜா படுத்திருந்தாள் கண்ணீர் தடத்துடன். நவீன் அவனுக்கு எதிரே அமர்ந்து அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
தொலைக்காட்சியில் மழலை பாடல் ஒலிக்க, ராக்கி தொலைக்காட்சி முன் நின்று பாடிக் கொண்டிருந்தான்.
“சஞ்சய்…” ரக்சன் அழைக்க, அறையிலிருந்து அவன் பெற்றோர்கள் வெளியே வந்தனர்.
தன் நண்பனின் வேதனை புரிந்தாலும் உருக்குலைந்த சஞ்சயின் தோற்றம் ரக்சன் மனதை கனக்க வைத்தது.
இந்துஜா முதலில் விழித்து ரக்சனையும் ரக்சனாவை கண்டு அமர்ந்தாள். சஞ்சய் எழுந்து அவர்களிடம் வந்தான். ரக்சனாவை இனியவனுடன் பார்த்த நினைவு இந்துஜாவிற்கு வந்தது. அவள் ரக்சனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சஞ்சய் முகம் துடைத்தாற் போல இருக்க, ரக்சன் அவனை தனியே அழைத்து சென்றான்.
நாகேந்திரன் ரக்சனாவிடம் வந்தார்.
உட்காரும்மா…என்றவர், “காபி எடுத்துட்டு வாம்மா” தன் மனைவியை அழைத்தார் நாகேந்திரன்.
எனக்கு எதுவும் வேண்டாம் அங்கிள். பிரியசகியை பார்க்கலாமா அங்கிள்?
பிரியா ரொம்ப வலிக்குதுன்னு அழுறாம்மா. சர்ஜரி செய்தாவது அவளது பிரச்சனையை சரி செய்ய முடியுமாம்மா? நாகேந்திரன் கேட்க, சுவர்ணலதா ரக்சனா அருகே அமர்ந்து அவளது கரத்தை பிடித்து, “எப்படியாவது பிள்ளைக்கு வலி இல்லாம பாரும்மா…”என்று பிரியசகி கூறியதை சொல்லி அழுதார்.
சுவற்றில் சாய்ந்து பேசுவதை மட்டும் உள்வாங்கிக் கொண்டிருந்தான் பிரசாத்.
ஆன்ட்டி, பிரியசகிட்ட நான் பேசுறேன். அவளுக்கு ஏதும் ஆகாது. இவளை விட கிரிட்டிகல் நிலையில் உள்ளவர்கள் கூட உயிருடன் நன்றாக இருக்கிறார்கள். அவளோட வெஜைனல் டேமேஜ் ஆகி இருக்கு தான். அதனை சரி செய்யலாம்….பட் கர்ப்பப்பை எப்படி இருக்குன்னு தெரியல என்று பெரியவர்களை பார்த்து….
மூன்று முறை கருகலைஞ்சிருக்கு. அதை பிராபரா எந்த சிகிச்சையும் செய்யாமல் விட்ருக்காங்க. அதான் ரொம்ப பிரச்சனையாகும். அவங்க குழந்தை பெத்துக்கிறது ரொம்ப கஷ்டம் ஆன்ட்டி. மாதவிலக்கும் சரியான நேரத்தில் வராதாம். கர்ப்பபை எடுக்கும் நிலை……அவள் சொல்லிக் கொண்டிருக்க, “ரக்சி….” சத்தமிட்டான் ரக்சன்.
அழுகை பொங்கிக் கொண்டு வந்தது சுவர்ணலதாவிற்கு.
ரக்சனா பேசுவதை கேட்டுக் கொண்டே வந்த சஞ்சய், “குழந்தை பெத்துக்கிறது ரொம்ப கஷ்டம்” என்ற கூற்றில் பிரியசகியின் கரங்கள் அவள் வயிற்றில் பதிந்தது தோன்ற, தாள முடியாமல் தன் நண்பன் கரத்தை இறுக பற்றினான். அவன் சிரமத்தை புரிந்த ரக்சன் ரக்சனாவின் பேச்சை நிறுத்த சத்தமிட்டான்.
இருவரையும் அனைவரும் பார்த்தனர்.
எவ்வளவு கட்டுப்படுத்தியும் தன் சகியின் நிலை கண்டு கையறு நிலையாய் நின்றான் சஞ்சய். அவள் தன்னவள் இல்லை தான் என்றாலும் தன் மனம் கவர்ந்த, தான் காதலித்த ஒரே பெண்ணாயிற்றே! இன்றும் அவன் மனதில் அவள் மட்டுமே! ஆனால் அவன் எண்ணம் ஒரு போதும் அவளுடன் சேர வேண்டும் என்பதில்லை. அதற்காக வேறு பெண்ணை மணக்கும் ஆண் மகனும் அவனில்லை. கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்று அவளுக்கு தெரிந்தால் எங்கே மீண்டும் செத்து விடுவேன்னு சொல்லி விடுவாளோ? என்ற பயம் தான் அவன் மனதை ஆட்கொண்டது.
தன் நண்பனை கீழே அழைத்து வந்த ரக்சன், “ரக்சி வெஜைனலை சரி பார்த்து சர்ஜரி பண்ண பாரு. எப்படியானாலும் அவங்களுக்கு வலி இருக்க தான் செய்யும்” தன் நண்பனை பார்த்தான்.
“உடனே நம்ம மருத்துவமனையில் சேருங்க. நாங்க பார்த்துக்கிறோம்” என்று உறுதியுடன் பேசினான்.
பாட்டி….எதுக்கு அழுற? ராக்கி சுவர்ணலதாவிடம் வந்தான்.
“ரொம்ப பெயின் இருக்கு டாக்டர். தாங்க முடியல…” அடுத்து அவள் பேசும் முன் இடை புகுந்தாள் ரதி.
இவங்களுக்கு பிரஸ்ஸர் டூ ஹார்ஸ் முன்னாடி ஹெவியா இருந்தது…
பிரியசகி உடலை பரிசோதித்து ரக்சனா தன் அண்ணீயை பற்றி தான் பேசி னாள்.
ரக்சன் மனைவி ஐஸ்வர்யாவும் சரண் கற்பழித்து கொலை செய்த பெண்களில் ஒருவர் என்றும் தன் அண்ணனும் அண்ணீயும் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்று கூறி ரதியை பார்த்தாள்..
ரக்சனாவும் ரதியும் ஒரே வயதுடையவர்கள் தான். தோழியாக ரக்சனா அனைத்தையும் ரதியிடம் கூறுவாள். ஆனால் ரதி எதையும் அவளிடம் கூற மாட்டாள். இருவரும் சந்தித்தது மெடிக்கல் கல்லூரி விழாவின் போது. இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் இருக்கும். சந்திரசேகரும் ரக்சனும் வேலை வேலை என்றிருக்க எப்போதும் ரதி தான் ரக்சனாவிற்கு. நட்பையும் தாண்டி ஏதோ பிரிக்க முடியாத பந்தம் இருவருக்கும்…
பிரியசகி உங்களது காயத்திற்கு மருந்து போட்டு விட்டு நாம மருத்துவமனை செல்வோம் ரக்சனா கூற, ரதி பிரியசகியை பார்க்க, அவள் கெஞ்சலுடன் இருவரையும் பார்த்தாள்.
“பிரியசகி உங்களுக்காக சஞ்சயும் அவரது குடும்பமும் எவ்ளோ வருத்தப்படுகிறார்கள் தெரியுமா? ஆன்ட்டி உங்கள அவங்க புள்ள மாதிரி பேசுனாங்க. நீங்க நல்லா இருந்தால் தான் அவங்களும் தைரியமா இருப்பாங்க. இத்தனை வருடம் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு விடியல் பிறந்துருக்கு. உங்களோட புதுவாழ்க்கையை மிஸ் பண்ணிடாதீங்க” பேசி அவளது மனதை மாற்றினாள் ரக்சனா..
கண்ணிமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரதி, ரக்சனாவின் அழைப்பில் சுயம் வந்தாள்.
ரதி…அவள் அழைக்க,
ஹம்ம்…
க்ளவுஸ் எடு என்றாள் புருவம் சுருக்கி…
ம்ம்ம்ம்! எடுத்து கொடுத்து ரக்சனாவிற்கு உதவினாள்.
மருத்துவமனை வர பிரியசகி ஒத்துக் கொண்டாள் எனவும் இந்துஜா பிரியசகியை காண சென்றாள்.
ரக்சன் மருத்துவமனையில் பிரியசகியை சேர்த்தனர்.
“அம்மாடி, புள்ளைக்கு ஒன்றும் ஆகாதுல்ல?” நாகேந்திரன் கேட்டார்.
“எந்த சிகிச்சை செய்யும் முன்னும் உங்களிடம் கேட்காமல் செய்ய மாட்டோம்” என அவர் கரம் பிடித்து ஆறுதலாக பேசினான் ரக்சன். அவனுக்கு பிரியசகியை பார்க்கும் போதெல்லாம் அவன் மனைவி தான் எண்ணத்திற்கு வந்து சென்றாள்.
சஞ்சய்கு அழைப்பு வர, அதை எடுத்த இந்துஜா சோர்வாக “ஹலோ…” என்றாள்.
“இந்து, மாமா இல்லையா? உடனே மாமாவிடம் கொடு” என்றான் இனியவன்.
பதிலே பேசாமல் மருத்துவமனையின் வெளியே அவனது ஆட்களிடம் பேசிக் கொண்டிருந்த சஞ்சயிடம் கொடுத்து அமர்ந்தாள் இந்துஜா.
அண்ணா அழைச்சிட்டு போனாங்க பெரியப்பா. மாமா பேசுறார். இன்னும் இரு நாட்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்களாம். ராக்கி மாமாவுடன் தான் இருக்கிறான்.
சரிம்மா…
பிரசாத் அருகே அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து விழிகளை மூடிக் கொண்டாள் இந்துஜா.
கேசவன் இறந்த பின் படித்துக் கொண்டு வேலை செய்து பணம் சம்பாதித்து கேசவன் இடத்தை நிரப்பினான் பிரசாத். இளமதி சுவர்ணலதாவிடம் பிள்ளைகளை விட்டு அவரும் ஒரு கம்பெனியில் வேலை செய்து தான் குடும்பத்தை நடத்தி வந்தார்.
பிரசாத் மீது எப்போதும் கோபமாக இருப்பவர் பாசமாக நடந்து கொண்டார். ஆனால் யமுனாவிற்கு தான் அவனும் நவீனும் அவர்களுடன் இருப்பது பிடிக்கவில்லை. உயிர்பிரியும் தருவாயில் அவள் தேடியது பிரசாத்தை தான்…
மாமா, கமலா எங்குமே இல்லை. ஆனால் சென்னையின் எல்லையில் யாரோ இறந்து கிடக்காங்க. சீக்கிரம் வாங்க…எனக்கு என்னமோ கமலா காரணமாக இருக்கலாம்னு தோணுது. சரண் மருத்துவமனையில் எவ்வித ஆர்கன் கடத்தும் செயல் நடக்கவில்லைன்னு நிரூபிச்சு இருக்காங்க. இதுக்கு சாத்தியமேயில்லை…இனியவன் சொல்ல,
ம்ம்! வாரேன் என்று வெறுமனே கூறி அவ்விடத்திற்கு புறப்பட்டான் சஞ்சய்.
செல்லும் முன் தன் நண்பனிடம் பேசி, பெற்றோரிடம் கூறி கிளம்பினான்.
இறந்தவர் வயதானவர் என்றும் அவரை கமலா அடிக்கடி சந்திப்பார் என்ற தகவலும் இருந்தது. பார்க்க ஏழ்மை பட்டவர் போல காணப்பட்டார் அப்பெரியவர். இவர் மூலம் எதுவும் செய்திருப்பார்களோ? இனியவன் கேட்க,
அவரையே பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய், இருக்காது இனியவா, இவருக்கு சொந்தபந்தம்னு யாராவது இருக்காங்களா? தன் ஆட்களை பார்த்தான்.
ஆமா சார், அதோ அந்த பொண்ணு மட்டும் தான்…
பொண்ணா? என்று இருவரும் பார்க்க அழகி தான் அப்பெண்.
சோ இந்துவிற்கு அடுத்த குறியாக சரண் இப்பெண்ணை தான் தேர்வு செய்திருக்கணும் என்று அப்பெண்ணை நோக்கி சென்றனர்.
அப்பெண் தன் தந்தையை எண்ணி கலங்காமல் எகத்தாளமாக நின்றிருந்தாள். அவளிடம் இருவரும் விசாரித்தனர்.
சரண் சார் தான் என்னை அழைத்து பணம் தாரேன் என்று படுக்கைக்கு அழைத்தார். என் தந்தையால் என்னை பார்த்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கு நான் செல்வது பிடிக்கவில்லை எனவும் அவரை நான் தான் இந்த கல்லை அவர் தலையில் போட்டு கொன்றேன் என்றாள் அசால்ட்டாக.
அப்பெண்ணை கைது செய்தனர்.
என்ன மாமா? இப்படி ஆகிடுச்சு?
இனியவா, அவரின் அலைபேசியை எடுங்க. அது ஆனில் தன் இருக்கு..
கைக்குட்டையால் அதை எடுத்து இனியவன் ப்ளே செய்ய, இதுவும் செட் அப் என புரிந்தது. கமலா தான் பணம் கொடுத்து மகளை வைத்தே தந்தையை கொல்ல வைத்து இருக்கிறாள் என அனைத்தும் பதிந்திருந்தது. கமலாவை போலீஸ் தேடும் தீவிர பணியை தொடங்கினார்கள்.
ரக்சனா வருத்தமுடன் வெளியே வந்தாள்.
“என்னாச்சும்மா?” சுவர்ணலதா பதறினார்.
ஆன்ட்டி, அங்கிள்…வெரி சாரி. கருப்பை ரொம்ப வீக்கா இருக்கு. நிச்சயமாக பிரியசகியால் குழந்தை பெத்துக்க முடியாது. கருப்பையை ரிமூவ் பண்றத விட வேற வழியில்லை என்றாள்.
இனியாவது பிரியசகியை தன் மகனோட சேர்த்து வைக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தவர்கள் மனதில் பெரிய பாறாங்கல்லே விழுந்து விட்டது. மற்றவர்கள் கவலையுடன் பிரியசகி இருக்கும் அறையை பார்த்தனர்.
மகன் காதலை பார்த்தால் வம்சம் விருத்தி அடையாது. வேற பொண்ணை திருமணம் செய்து வைக்கலாம் என எண்ணினால் சஞ்சய் இசைந்து கொடுக்க மாட்டேங்கிறான் கண்ணீருடன் அமர்ந்தார் சுவர்ணலதா.
சிவந்த விழிகளில் வழியும் நீரை கட்டுப்படுத்தி, “புள்ள நல்லா இருப்பாலம்மா?” நாகேந்திரன் கேட்க,
“பிரியசகிக்கு எதுவும் ஆகாது அங்கிள். அவளுக்கு சர்ஜரி கூட தேவையில்லை. மருந்தின் மூலம் சரி செய்திடலாம். ஆனால்…தயங்கி கண்டிப்பாக கர்ப்பப்பையை ரிமூவ் செய்து தான் ஆகணும்” பெரியவர்களை பார்த்தாள் ரக்சனா.
ம்ம்! என்றவர், சஞ்சய் வெளிய போயிருக்கான்மா. அவன் கிட்ட கேட்கணும் என்றார்.
பெரியப்பா, அண்ணா வர்றப்ப வரட்டும். டாக்டர் நீங்க பண்ணுங்க. அவள் பத்திரமாக வலியில்லாமல் வந்தால் போதும் என்றாள் முகம் சிவந்து வீங்கி போன இந்துஜா.
பிரசாத் சஞ்சயிடம் விசயத்தை கூறி பணம் செலுத்த, ரக்சன் தலைமையில் ரக்சனா, ரதி மற்றும் ஒரு செவிலியரும் சேர்ந்து கர்ப்பப்பையை அகற்றும் சிகிச்சையை தொடங்கினார்கள்.
இரவு நேரம் என்பதால் மருத்துவமனையில் ஆட்கள் இல்லை. அங்கங்கு அனைவரும் அமர்ந்திருந்தனர். இதுவரை சுவர்ணலதாவிற்கு இருந்த மனநிலை மாறியது. தன் மகனை பிரியசகியிடமிருந்து விலக்கி வைக்க எண்ணினார்.
சஞ்சய் மருத்துவமனை வர, இனியவன் கமலாவை பிடிக்க முடியாத அதிருப்தியில் வீட்டிற்கு சென்றான்.
சோர்வுடன் மாடியில் ஏறும் தன் மூத்தவனை கண்ட நெடுங்குழலி, யவா…அழைத்தார்.
எனக்கு பசிக்கல…
“அண்ணா, உனக்காக தான் உணவுண்ணாமல் காத்திருக்கோம் வா” விஷ்ணு அழைக்க, இனியவன் தன் அன்னையை பார்த்தான்.
அவர் கையில் வைத்திருந்த ஆல்பத்தை இனியவனிடம் நீட்டினார்.
“என்னம்மா இது?” விஷ்ணு அதை வாங்க, அவன் கரத்தை தட்டி விட்டு இனியவனை பார்த்தார்.
யவா, உனக்கு இந்துவை நினைவில் இல்லைன்னு நினைக்கிறேன். அவளுக்கு சடங்கு வைத்த போது அவளது தாய் வீட்டு மாமன்கள் எவனும் வரவில்லை. தாய்மாமன் முறையிலிருந்து செய்ய வேண்டிய அனைத்தையும் நாம தான்….நீ தான் செய்த…
“என்ன?” விஷ்ணு அதிர்ந்து இருவரையும் பார்த்தான்.
வேகமாக கீழிறங்கிய இனியவன் தன் தாய் கையிலிருக்கும் ஆல்பத்தை பிடுங்கி அதனை திறந்தான்.
நடுப்பகுதியில் இந்துஜாவின் செழுமையான கன்னத்தில் இனியவன் சந்தனத்தை பூசி, மாலையும் அணிவித்து புகைப்படம் எடுத்தது போல இருந்தது. இதை கண்ட இனியவனுக்கு அன்று அவளின் செய்கை நினைவுக்கு வர, இதழ்களில் தானாக புன்னகைப்பூ பூத்தது..
உணவுத்தட்டில் உணவை போட்டு ஆல்பத்துடன் மாடியில் ஏறினான் இனியவன்.
அண்ணா…
“விடுடா. அவன் தனியே இருக்கட்டும். அதான் உணவை எடுத்து போறான்ல. நீ உணவுண்ண வா” குழலி மாடியறையை பார்த்தவாறு விஷ்ணுவை அழைத்தார்.
“என்னமும் செய்யுங்கப்பா…” அவன் உணவுண்ண அமர்ந்தான்.
அறைக்கு சென்ற இனியவன் உணவுத்தட்டை ஓரமாக வைத்து விட்டு, அன்றைய நிகழ்வுகளில் ஆழ்ந்தான்.
“மாமா…ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவது எடுத்து வாங்களேன்” முகம் சுருக்கி சிணுங்கியவாறு இந்துஜா மாலையிடும் இனியவனிடம் கேட்டாள்.
“அமைதியா இரு…” அன்று அவளை அதட்டி இருப்பான்.
பாவமாக எச்சிலை விழுங்கி அவனை பார்த்தாள்.
தட்டில் இருந்த லட்டு ஒன்றை எடுத்து அவள் வாயில் திணித்து ஏதும் பேசாமல் நகர்ந்திருப்பான் இனியவன். இன்று அந்நினைவுகள் வலம் வர மனம் குதூகலித்தது. அவள் தனக்கானவள் என்ற எண்ணம் அவனுள் வலு பெற்றது.