சூரியன் 10

“அந்த சரண் கோர்ட்டுக்கு போயிருப்பான்ல இனியவா?” சஞ்சய் கேட்க,

“பார்த்துட்டா போச்சு” இனியவன் கைபேசியை எடுத்தான்.

“கைபேசியில் அவனை அடச்சு வச்சுருக்கீங்களோ?” ஏளனமாக கேட்டான் பிரசாத்.

அவனை பார்த்தவாறே இனியவன் பின்னே திரும்பி பார்த்தான். மூவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.

“இனியவா?” சஞ்சய் அழைக்க, ஆமா மாமா நம்மை பின் தொடர்கிறான். காரின் வேகத்தை குறையுங்கள்..

“எதற்கு?” பிரசாத் முறைக்க, “சும்மா முறைக்காத” என்றான் இனியவன்.

இனியவா சொன்னதை வைத்து பார்த்தால் சரண் நம்மிடம் இருக்கும் ஆதாரத்தை எடுக்க தான் வந்துருப்பான் என்றான் சஞ்சய்.

இவர்கள் காரின் வேகம் குறையவும் சரண் இவர்களை மறித்து கீழிறங்க, அவனுக்கு பின் அடியாட்கள் வந்தனர்.

“நினச்சேன்” இனியவன் இந்துஜாவிடம், “கீழே இறங்காத” என்று சஞ்சயை பார்த்தான். அவனும் கீழிறங்கினான்.

“இறங்காத பிரசாத். டிரைவர் சீட்டில் அமரு” கதவை அடைத்தான் சஞ்சய்.

  “தேடுங்கடா” சரண் சத்தமிட, அவன் ஆட்கள் காரிடம் வந்தனர். காரை திறக்க முடியாதவாறு நின்றான் இனியவன்.

ஒருவன் அவனை அடிக்க, இந்துஜா அச்சத்தில் முகத்தை மூடினாள். ஆனால் இனியவன் அடித்த அடியில் அவன் தள்ளிச் சென்று தடுமாறி கீழே விழுந்தான். விழிவிரித்து அவள் அவனை பார்த்தாள்.

மாமா, இவன் தேவையில்லாமல் கார் பக்கம் செல்லக் கூடாதுன்னு சொல்லுங்க. நானே அவனிடம் அனைத்து ஆதாரத்தையும் தருகிறேன் என்றான் இனியவன்.

“ஆதாரத்தை தரப் போகிறானா?” பிரசாத் கதவை திறந்து வெளியே வந்தான்.

“உள்ள போ பிரசாத்” சத்தமிட்டான் சஞ்சய்.

மாமா..

போ…..இந்துஜாவை காட்டினான். அப்பொழுது தான் சரண் இந்துஜா இருப்பதையே பார்த்தான்.

கார் அருகே சரண் நெருங்க, “அவன் கரம் பற்றி உனக்கு வேண்டியது என்னிடம் தான் இருக்கு” என்றான் இனியவன்.

ஹாம்.. உன்னிடம் தான் இருக்கு. அன்று மிஸ் பண்ணீட்டேன். இன்று அவன் சஞ்சயை பார்க்க, அவன் வாயிலே ஓங்கி குத்தினான் சஞ்சய்.

இந்துஜாவிற்கு பதட்டமானது. சரணின் உண்மை சுயரூபம் அவளுக்கு தெரியும் தானே!

வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்தவாறு, “மாமனும் மச்சானும் சண்ட போட்டுக்கிட்டீங்க கேள்விப்பட்டேனே! ஆனால் இருவரும் இப்படி ஒத்துமையா இருக்கீங்க?” சரண் கேட்க, இனியவன் பிரசாத்திடம் கையை நீட்டினான். அவன் புரியாமல் விழித்தான்.

“நான் காலை கொடுத்த பைல்லை கொடு” கண்ணாலே மருத்துவர் ரிப்போட்டை மறைக்க சொன்னான்.

“இதை கொடுத்துட்டு என்ன பண்றதாம்?” புரிந்தும் புரியாமலும் பிரசாத் இனியவனை பார்த்தான். அவன் கண்ணை மூடி திறந்தான்.

இனியவன் கொடுத்த பைல்லை அவனிடமே கொடுத்தான். ரக்சனா கொடுத்த ரிப்போர்ட்டை யாருமறியாத நேரத்தில் தனது ஆடைக்குள் மறைத்தான் பிரசாத்.

பைல்லை சரிபார்த்த சரண், சஞ்சயின் கைபேசியை கேட்க, அவன் உடனே கொடுத்தான். அதையும் சரி பார்த்து இனியவனிடம் கேட்டான் சரண்.

சரணை முறைத்தவாறு இரு கைபேசியையும் நீட்டினான்.

அனைவரும் அச்சமுடன் கவனிக்க,

“மருத்துவர் கொடுத்த ரிப்போர்ட் எங்கே?” இனியவனிடம் கேட்க, “மாமாகிட்ட தான் இருக்கும். நானா மருத்துவரிடம் பேசினேன்” என்றான் கடுப்புடன்.

“அவனை பாருங்கடா….” தன் ஆட்களிடம் சரண் கூறினாலும் அவன் கவனம் இந்துஜாவிடம் சென்றது.

சட்டென கார் அருகே வந்த இனியவன் கார்க்கண்ணாடியை ஏற்றி விட இந்துஜாவிடம் சமிக்சை செய்தான். அவள் அவன் மீது கோபமாக இருந்தாலும் சரணின் பார்வையில் தானாக ஏற்றி விட்டாள்.

“நீ போ…” யாருமறியாது இனியவன் பிரசாத்திடம் கையசைக்க, அவன் காரை கிளப்ப, சரண் ஆட்கள் இடையில் வந்தனர்.

“அவங்க எதுக்கு? உங்களுக்கு தான் எல்லாம் கிடைச்சிருச்சுல?” இனியவன் சரணை முறைத்து கேட்க, “ஏன் இந்து உனக்கு அவ்வளவு முக்கியமா?” சரண் கேட்க, மற்றவர்கள் அவனை பார்த்தனர்.

“ஆமா, என்ன இருந்தாலும் மாமா பொண்ணாயிற்றே!” தோளை குலுக்கினான்.

“மருத்துவ ரிப்போர்ட் கார்ல தான் இருக்கும். நான் பார்க்கணும்” சரண் பின் கதவை திறக்க, அவன் கரத்தை அழுந்த பிடித்து முறைத்தான் சஞ்சய்.

இவ்வளவு கோபமா உனக்கு? ஓ அண்ணணாச்சே! கோபம் வரத் தானே செய்யும்..

பிரசாத் சினமுடன் வெளியே வந்தான். இனியவன் அவனை தடுக்க தடுக்க கேளாமல் சரணை இழுத்து அடிக்க, அவன் ஆட்களிடம் சத்தமிட்டான்.

மூவரையும் ஆட்கள் சூழ, சரண் பின்பக்க கதவை திறக்க, அதற்குள் கார்க்கதவை லாக் செய்து விட்டாள் இந்துஜா.

சரண் சிரிப்புடன் முன் பக்க கார்க்கதவை திறந்து உள்ளே சென்றான்.

பதட்டமுடன் அவள் பக்க கார்க்கதவை திறந்து வெளியேற முற்பட்டாள். அவளை பிடித்து இழுத்து அவன் அவளை நெருங்க, இந்துஜா சத்தமிட்டாள்.

மூவரும் ஆட்களை சமாளித்தவாறு அவளை பார்க்க, அவர்களால் நகர முடியவில்லை. இனியவனும் சஞ்சயும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

சஞ்சயை தாக்க வருபவனை இனியவனே சமாளிக்க, சஞ்சய் காரிடம் விரைந்து சரணை இழுத்து அடித்து சினமுடன் தள்ளினான்.

“உன்னை உயிரோட நான் விடக் காரணமே சகி தான். போயிரு…” அவனை அடிக்க, ஆட்கள் அனைவரும் கீழே விழுந்ததை பார்த்து காரில் ஏறி, “உங்கள கோர்ட்டுல பார்த்துக்கிறேன்டா” கத்தி சென்றான் சரண்.

சரண் செல்லவும் இந்துஜா தன் அண்ணனை பாய்ந்து அணைத்து அழுதாள்.

“மாமா நேரமாகுது” இனியவன் காரில் ஏறினான். அவர்கள் நீதிமன்றத்திற்கு கிளம்பினார்கள்.

இனியவன் விஷ்ணுவை அழைத்தான். அவன் வகுப்பில் இருக்க அழைப்பை எடுக்கவில்லை.

ம்ச்ச்ச்..என்றவன் அவனது வகுப்பாசிரியையை அழைத்தான்.

ஹாய் இனியவன் சார், இன்று கல்லூரி வரவில்லையா? அவர் அவனை விசாரிக்க, மேம் விச்சுவிற்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நேரம் கொடுங்கள். நான் அவனிடம் பேசணும் இப்பொழுதே! என்றான்.

“ஓ.கே சார்” அவர் கூற, உடனே அழைப்பை துண்டித்தான்.

பக்கத்தில் இருந்த இந்துஜா அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளை போல அவனும் விரலை நீட்டினான். சஞ்சய் புன்னகையுடன் இருவரையும் பார்க்க, பிரசாத் கொதித்தான்.

விஷ்ணு இனியவனை அழைக்க, “விச்சு நான் அனுப்பிய அனைத்து வீடியோ, புகைப்படத்தை இன்னும் ஐந்து நிமிடத்தில் அனுப்பணும்” என்றான்.

ஓ.கே அண்ணா என்று அவன் அனைத்து ஆதாரத்தையும் அனுப்பினான்.

“எப்படி?” பிரசாத் வாய் விட்டு இனியவனிடம் கேட்க, அவனோ கைபேசியில் அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டிருந்தான்.

“விச்சு, லோகேஷை அந்த பைல்ஸை எடுத்து சீக்கிரம் கோர்ட்டுக்கு வரச் சொல்லு” ஆடியோவில் பேசி வைத்தான்.

“என்ன பைல்?” பிரசாத் கேட்க,  விவாகரத்து சம்பந்த பைல்.

அதான் அந்த சரண் எடுத்துட்டு போயிட்டானே!

அது உண்மையில்லை. போலி.  சீல் கூட நாங்கள் தயார் செய்தது. அதை சரண் கவனிக்கவில்லை சாதாரணமாக கூறினான் இனியவன்.

அதுக்காக தான் மாமாவிடம் கொடுக்கும் போதே நானும் கோர்ட்டுக்கு வாரேன்னு கூறினேன்.

நீதிமன்றம் வரவும் காரிலிருந்து கீழே இறங்கினர்.

“அண்ணா வக்கீல் அவன் பக்கமாச்சே!” இந்துஜா கேட்டாள்.

ராமதாஸ் பேசட்டும். நாம் நம் கருத்தை வைப்போம் என்று சஞ்சய் கூறியவாறு கண்களால் அவ்விடத்தை ஆராய்ந்தான். விஷ்ணுவின் நண்பன் லோகேஷ் காரில் வந்திருந்தான். சஞ்சய் இனியவனை காண அவன் புன்னகைத்தான்.

லோகேஷ் கொண்டு வந்த அனைத்தையும் இனியவனிடம் கொடுத்தான்.

லோகி வெயிட் பண்ணுடா..இனியவன் கூற, காரில் சென்று அமர்ந்து கொண்டான் லோகேஷ்.

நிம்மதி பெருமூச்சுடன் எல்லாம் சரியாக நடக்கும் என்று நால்வரும் உள்ளே சென்றனர்.

பெண்நீதிபதி அவரது இருக்கைக்கு வந்தார்.

மரியாதை நிமித்தம் அனைவரும் எழுந்து அவருக்கான மரியாதை செலுத்தி விட்டு அமர்ந்தனர்.

நீதிபதியின் முன் சரணும் அவனது வக்கீலும், பிரியசகிக்கு பதிலாக சஞ்சய் இனியவனும் வக்கீல் ராமதாஸூடன் நின்றனர். இந்துஜாவையும் பிரசாத்தையும் தள்ளி நிறுத்தி வைத்திருந்தான் சஞ்சய்.

கனம் நீதிபதி அவர்களே!

“என் சார்பு மதிப்பு மிக்க, புகழ் பெற்ற மருத்துவர் சரணின் மனைவி வராமல் எவ்வாறு வழக்கை தொடங்குவது?” ஏளனமாக சரணின் வக்கீல் கேட்டார்.

சரணின் மனைவி பிரியசகி உடல்நலமில்லாமல் இருக்கிறார். அவருக்காக தான் சரணின் எதிர்வீட்டில் இருக்கும் பிரபசர் இனியவனும், நம் அசிஸ்டன்ட் கமிஷ்னர் சஞ்சய் சாரும் வந்திருக்கிறார்கள்…ராமதாஸ் கூற,

அதெப்படி மை லாடு, உரியவர் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரனும் எவ்வித சம்பந்தமும் இல்லாத அசிஸ்டன்ட் கமிஷ்னர் சாரும் வர முடியும். மிஸஸ் பிரியசகி சரண் தான் விவாகரத்து பத்திரத்தை மிஸ்டர் சரணிடம் கொடுத்திருக்கார். வராமல் நீதிமன்றத்தை அவமதித்ததும் இல்லாமல் அனைவர் நேரத்தையும் வீணாக்கி உடல்நலமில்லை என்ற சப்பை கட்டும் போட்டிருக்கிறார்..

உடல்நலமில்லாமல் இருக்கும் போது எதற்கு உடனடியாக கேஸை நடத்தி விவாகரத்து பெறணும். கேஸை தள்ளுபடி …நீதிபதி சொல்லும் போதே குறுக்கிட்டான் இனியவன்.

மேம், நான் பேசலாமா? கேட்டான்.

சஞ்சய் இனியவனை பார்க்க, அவன் நீதிபதியை நிமிர்வுடன் பார்த்தான். அவன் நிமிர்வில்…சொல்லுங்க மிஸ்டர்..

மேம், என்னுடைய பெயர் இனியவன். பிரியசகிக்கு எதிர் வீட்டில் வசிப்பவன். பிரியசகி வராத காரணம் வெறும் உடல்நலக்குறைவு மட்டுமல்ல. அவர் நிலையில் எந்த பெண் இருந்தாலும் இறந்து இருப்பார்கள். அவ்வளவு பெரிய கொடுமை நடந்துள்ளது. உடலாலும் மனதாலும் வேதனையில் அவர் துடித்ததை எதிர்வீட்டில் இருந்த நான் பார்த்திருக்கிறேன். பிரியசகி வரவில்லை என்பதை வைத்து நீங்கள் தள்ளிப் போட்டால் அடுத்த முறை பிரியசகி உயிரோடு வருவாரா என்றும் தெரியாது. ஏனென்றால் அவர் கணவர் மதிப்பு மிக்க, புகழ் பெற்ற மருத்துவன் சரண் மனிதனில்லை. மிருகம்… தன் மனைவியை அடித்து துன்புறுத்தி அப்பெண்ணின் விருப்பமில்லாமல் உடலுறவு கொண்டு வேட்டையாடிய மிருகம் சீற்றமுடன் அவனை பார்த்தான்.

அப்ஜக்சன் மை லாட்…மிருகம் என்பதெல்லாம் அபத்தமானது. முதலில் மிஸஸ் பிரியசகியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கு கள்ளக்காதலன் இருக்கிறார். அவருடன் சேர்ந்து நடத்திய லீலைகளை நாடகமாக திரித்து வேடம் கட்டுக்கிறார். இதோ உங்கள் பார்வைக்கு என்று சரணின் வக்கீல் பென்டிரைவ் ஒன்றை நீதிபதியிடம் கொடுத்தார்.

பொறுக்க முடியாமல் சஞ்சய் பல்லை கடித்து இறுகி நின்றிருந்தான்.

நீதிபதி இனியவனிடம், “இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” கேட்டார்.

என்னிடம் பதில் இருக்கிறது என்ற இனியவன் அங்கிருந்த திரையில் சற்று நேரத்தின் முன் ராமதாசுடன் பேசிய உரையாடலை போட்டு காட்டினான்.

இதையும் பாருங்கள்…என்று அடுத்ததாக காரில் நால்வரும் நீதிமன்றத்துக்கு வரும் வழியில் நடந்த சண்டை, சரண் இந்துஜாவிடம் எல்லை மீறியதை காட்டினான்.

இதை எப்பொழுது எடுத்தான்? இந்துஜா அதிர,

“இது நானில்லை. என் மீது பழி சுமத்த தான் இவ்வாறு செய்திருக்கிறார்கள்” சரண் பாவம் போல பேசினான்.

அப்படியென்றால் கள்ளக்காதலையும் தொழில் நுட்ப வளர்ச்சியை வைத்து தயார் செய்திருக்கலாமே மேம்! போட்டான் ஒரே அடியாக இனியவன்.

ராமதாஸை பார்த்த நீதிபதி, “இதை கொஞ்சம் விளக்க முடியுமா? உங்களது கிளைண்ட்டிற்கே நீங்கள் உண்மையாக இல்லை” கேட்டார்.

அவர் அமைதியாக நின்றார்.

“கெட் அவுட் மிஸ்டர் ராமதாஸ். இந்நிமிடத்திலிருந்து உங்களுக்காக பதவி பறிக்கப்படுகிறது. உயர்ந்த வக்கீல் பதவியை பணத்திற்காக விலை கொடுத்திருக்கிறீர்கள்” சத்தமிட்டார் நீதிபதி.

“இனி இவ்வாறு நடக்காது” அவர் கதற, அவரை போலீஸார் வெளியே இழுத்து சென்றனர்.

“நான் தான் கூறுகிறேனே! நான் எதுவும் செய்யவில்லை. ராமதாஸ் எனக்கு தெரிந்தவர். நாங்கள் தற்செயலாக சந்தித்து தான் பேசினோம்” சரண் பேச, அவன் வக்கீல் தலையில் கை வைத்தார்.

சஞ்சய் கையிலிருந்த மருத்துவ ரிப்போர்ட்டை பிடுங்கி நீதிபதி கரத்தில் சேர்த்த ரக்சனாவை சஞ்சயே எதிர்பார்க்கவில்லை. அவள் எண்ணம் புரிந்து இனியவன் நகர்ந்தான்.

மேம், நான் ரக்சன் மருத்துவமனை மருத்துவர் ரக்சனா. நான் தான் மிஸஸ் பிரியசகி சரணுக்கு மருத்துவம் பார்த்தேன்.

அசிஸ்டன்ட் கமிஷ்னர் சஞ்சய் சார் எனக்கு கால் செய்து, அவர் ஊர்க்கார பொண்ணு பிரியசகி என்ற பெண்ணை அவன் கணவன் அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு செய்து அப்பெண் நிற்க முடியாமல் வயிற்றை பிடித்துக் கொண்டு அழுகிறாள். சீக்கிரம் வீட்டிற்கு வாருங்கள்னு அழைத்திருந்தார்.

பிரியசகி கிராமத்து பெண். பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் மூன்றாவதாக வந்த பெண். அவளுக்கு பெற்றோர் இல்லை. பாட்டி மட்டுமே.

இந்த சரண் பிரியசகி ஊருக்கு மருத்துவ முகாமிற்காக சென்றவர். அவளை கண்டு அவளது ஏழ்மையை பயன்படுத்தி மருத்துவம் படிக்க வைக்கிறேன். எனக்கு உங்களது பேத்தியை திருமணம் செய்து வையுங்கள் என்று அன்பால் அவரை கரைத்து திருமணம் செய்தவர்.

அன்று அவர்கள் இருந்த நிலையில் இவள் படித்தால் போதும் என்று இவள் பாட்டியும் சஞ்சய் சார் பெற்றோரும் அவர்களிடம் நன்றாக நடந்து கொண்ட சரணை நம்பி திருமணம் செய்து வைத்தார்கள். சரண் மீதுள்ள நம்பிக்கையில் பிரியசகியை காண வரவேயில்லை.

ஒரு வாரத்தின் முன் சஞ்சய் சார் சித்தி இறக்கவும் அவர் தங்கை இந்துஜாவை கை காட்டி,  பிரியசகி வீட்டில் விட்டு சென்றுள்ளார். இருவரும் நல்ல தோழிகள் என்பதால் சஞ்சய் சார் விட்டு செல்ல….என்று அடுத்து அங்கே நடந்த அனைத்தையும் கூறினார் ரக்சனா.

அந்த அப்பாவி பெண் திருமணத்தின் பின் சரண் மற்றும் அவர் தாயாரால் அடி பட்டு மிதி பட்டு சித்திரவதை அனுபவித்து இருக்கிறாள். அவள் தற்பொழுது உயிரோடு இருப்பதே என்னை பொறுத்த வரையில் பெரிய விசயம் தான்…இப்பொழுது அவள் வயது இருபத்து ஆறு.

இதுவரை மூன்று முறை கருகலைந்து இருக்கிறது இந்த பாவியால்…சரணை காட்டி உணர்ச்சி மிக்க அவள் பேச பேச நீதிபதி சரணை புழுவை போல பார்த்தார்.

“எல்லாரும் அவளுக்காக நடிக்கிறாங்க” அவன் சத்தமிட்டான்.

“பிரபசர் இனியவன் சார்…” ரக்சனா சத்தமிட,

“மேம் இதுல கணவன் துன்புறுத்துவதை பிரியசகி அவங்கள அவங்களே வீடியோ எடுத்துருக்காங்க. பாருங்க மேம்” அவன் அலைபேசியில் அதனை ஓட விட்டான் இனியவன்.

பெல்ட்டை உருவி சரண் பிரியசகியை அடிப்பதும் ஆக்ரோசமாக நடந்து கொள்வதையும் விக்கித்து பார்த்தார் நீதிபதி. அனைத்திலும் அவளது கதறல் ஒலி அனைவர் செவியையும் அடைத்தது. அப்படியொரு அமைதி அவ்விடத்தில்…

மேம்…இன்று காலையில் பிரியசகியின் நிலை என்று இனியவன் காலை விஷ்ணுவை வைத்து வீடியோ எடுத்ததையும் காட்டினான்.

சஞ்சய் பேச அனுமதி கேட்கும் பார்வையை நீதிபதியிடம் உதிர்த்தான்.

பர்மிசன் கிரான்டடு மிஸ்டர் சஞ்சய்…

நான் இப்பொழுது பிரியசகியின் ஊர்க்காரனாகவும், தோழனாகவும் தான் வந்திருக்கிறேன்.

கிருஷ்ணமூர்த்தி சார், எனக்கு ஒரு சிறு சந்தேகம். ராமதாஸ் சார் எங்களுடைய வக்கீல். அவர் உங்களது புகழ்பெற்ற சரணிடம் அப்படி என்ன நெருக்க காட்டுகிறார்? அந்த வீடியோ கூட பார்த்தோமே!

அவரிடம் பதிலில்லை. அவர் சரணை பார்க்க, அவன் சஞ்சயை முறைத்துக் கொண்டிருந்தான்.

“அந்த சூட்கேஸில் பிஸ்கெட்டா கொடுத்தார்? அவ்வளவு பிஸ்கெட் வாங்கி ராமதாஸ் தொழில் தொடங்கவா போகிறார்?” இரு பதலியாக கேட்டுக் கொண்டே அவரை நெருங்கினான் சஞ்சய்.

சஞ்சய் கைதட்ட,  சரண் தரப்பு வக்கீலின்  மனைவி கையில் அதே சூட்கேசுடன் வந்தார்.

“இதில் என்ன உள்ளது என்று பார்க்கலாமா?” என்ற சஞ்சய்,

மேம் ராமதாஸ் சாருக்கு கொடுத்தது போல நல்ல தங்கமான மனிதர் மிஸ்டர் சரண்……பல்லை கடித்து அவனை முறைத்தவாறு இவருக்கும் கொடுத்திருக்கார். அதனை நீதிபதியிடம் வைக்க, அதில் தங்க பிஸ்கட்டுகள் இருந்தது.

எல்லாரும் நினைப்பது போல பிரியசகி தன் கணவன் மாறுவான் என்று எண்ணிய காலம் தொலையவும் தான் வீடியோ அவங்களே எடுத்திருக்காங்க. இதுல என்ன விசயம்னா மிஸ்டர் சரணுக்கு எப்பொழுதெல்லாம் மனஅழுத்தம் அதிகரிக்கிறதோ அதை போக்க பிரியசகியை அடித்து துன்புறுத்தி காயப்படுத்தி இருந்திருக்கார். கட்டுபடுத்தினாலும் அவன் கண்கள் கலங்கியது.

அமைதியாக அடிவாங்கும் பிரியசகியை தான் இவன் பார்த்திருக்கான். புத்திசாலி பிரியசகியை அறியாமல் இருந்துட்டான்  ஏளனமுடன் சஞ்சய் சரணை பார்க்க, அவன் புரியாமல் விழித்தான்.

எந்த பெண்ணும் இவ்வளவு சித்தரவதையின் பின்னும் இருக்க மாட்டாள். அவளை படிக்க வைத்திருக்கான். அது மட்டும் தான் இவன் செய்திருக்கான்.

“மேம், பிரியசகியை வீடியோவில் பார்க்கலாமா?” கேட்டான் சஞ்சய்.

சலசலப்பு ஏற்பட, “பர்மிசன் கிரான்டடு” என்றார் நீதிபதி

தன் தந்தைக்கு அழைத்தான் சஞ்சய்.

சுவர்ணலதாவும் நாகேந்திரனும் பிரியசகியை குளுக்கோஸ் ஏறியவாறு செவிலியர் உதவியுடன் அசையாமல் படுக்கையில் சாய்த்து அமர வைத்தனர். அவளுக்கு வலி உயிர் போனது இருந்தும் சரணின் நிலையை காண ஆவலுடன் இருந்தாள்.

இந்துஜாவும் ஏற்கனவே நடப்பதை அவர்களுக்கு தான் நேரடியாக்கிக் கொண்டிருந்திருப்பாள். இப்பொழுது அவளும் சரணுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள் என கவனித்துக் கொண்டிருந்தாள்..

பிரியசகி நிலை கண்டு நீதிபதியே எழுந்து விட்டார்.

மனதை திடப்படுத்தி சஞ்சய் சில வீடியோக்களை ஓட விட்டான்.

இதில் இருக்கும் பெண்களை இதே சரண் தன் வீட்டிற்கு ஏமாற்றி அழைத்து வந்து அவர்களறியாமல் மயக்க மருந்து கொடுத்து அவர்களின் கற்பை சூறையாடி கொலை செய்து சில மருத்துவ உபகரணங்களை வைத்து உடல் உள்ளுறுப்புகளை பாதுகாத்து அப்பெண்களை சாக்கு மூட்டையில் கட்டி அவன் ஆட்கள் மூலம் குப்பை கிடங்குகளில் வைத்து எறித்து விடுவான்.

சஞ்சய் சொல்ல சொல்ல அப்படியே அவ்வீடியோவில் நடந்து இருந்தது. இதுவரை பத்தொன்பது பெண்கள் இதே போல இறந்திருக்கிறார்கள்.

இதனை வீடியோவாக எடுத்தது என்று பிரியசகியை காட்டி, இவனால் பாதிக்கப்பட்ட அமைதியாக சித்திரவதை அனுபவித்த இதே பிரியசகி தான்.

கடைசியாக இந்த சரண் தேர்ந்தெடுத்த பெண் என் தங்கை இந்துஜா. தன் தோழிக்கு எதுவும் ஆகக் கூடாது என இந்துஜாவை தப்பிக்க வைத்து எதிர்வீட்டில் இருக்கும் இனியவன் பாதுகாப்பில் வைத்திருந்தாள் பிரியசகி.

அவன் கொடுத்த சித்திரவதை அனைத்தையும் இந்துஜா தப்பித்த போன மூன்று நாட்களில் மொத்தமாக அனுபவித்தாள் சஞ்சய் கண்ணீர் பிரியசகி கண்ணில் தப்பாமல் விழுந்தது. அவள் அமைதியாக அவனை பார்த்தாள்.

கண்ணீரை மறைத்து நீதிபதியை பார்த்தான்.

நான் எதுவும் செய்யவில்லை. எங்களது மருத்துவமனையில் கேட்டுப் பாருங்கள். நான் யாரென தெரியும்..கத்தினான் சரண்.

இதை எதிர்பாராத இந்துஜா கண்ணீருடன் மடிந்து அமர்ந்தாள்.  பிரியசகி சரணை மட்டுமே வெறித்தவாறு இருந்தாள்.