Epi -5

பாப்பா!! என நடேசன் அழைக்க, வேகமாக உள்ளிருந்து ஓடி வந்தவள்.

“சொல்லுங்கப்பா?” என மூச்சு வாங்கி கொண்டே பார்த்தாள்.

“அது ஒண்ணுமில்லமா, ஒரு வார்த்தை உங்க அத்தகிட்ட போன் பண்ணி பேசலாம்ல.. அன்னிக்கே நீ பேசலன்னு அவங்க வருத்தப்பட்டாங்க,” என நடேசன் சொல்லி கொண்டிருக்க, தியாழினி தயக்கத்துடன், “ப்பா, நீங்க மைதிலி அத்தய பத்தி.. அவங்கள பத்தி சொல்றீங்களா?” என இதயம் படபடக்க கேட்டாள். அவர் தான் மழை மேகனின் அன்னை ஆயிற்றே!

நடேசன் சிரித்தபடி, “ம்ம், ஆமாமா!! இன்னும் ரெண்டு நாளில் ஜவுளி எடுக்க போறோம். நிச்சய வேலை நடக்குதுல்ல, ரெண்டு வார்த்தை பேசுமா, அப்போ தான் தயக்கமில்லாம இயல்பா இருக்க முடியும்,” என கூறி விட்டு நகர்ந்தார்.

“இதோ உடனே பேசறேன் பா,” என்று அடுத்த நொடி போன் செய்தாள்.

“ஹலோ, யாரு?” என மைதிலி கேட்க..

தியாழினுக்கு ஒரு வித பயம். அவள் திக்கி திணறியபடி, “அத்தை, நான் தியாழினி பேசுறேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என புன்னகையுடன் கேட்டாள். அடுத்த நொடி உற்சாகமான மைதிலி, “நான் நல்லாருக்கேன் கண்ணு. உனக்கு கூப்பிட்டு பேச நினைச்சேன், நீயே பண்ணிட்ட,” என நீளமாக பேசியவர், ஓயாமல் நிறைய பேசினார். தியா அவர் பேசுவதை பொறுமையாக கேட்டு கொண்டிருந்தாள். அடுத்து முல்லை சிறிது நேரம் பேசினாள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் இயல்பாக பேச தொடங்கினாள். இப்படியே ஒரு மணி நேரம் கடந்து சென்றது. “சரி மா, நாங்க உன்னை வந்து நேரில் பார்க்கிறோம். இப்போ காலேஜில் இருந்து மேகன் வந்திடுவான், அவனுக்கு கொஞ்சம் சமைக்கணும் கண்ணு,” என்று அவர் சொல்லி கொண்டிருக்க..

“காலேஜா? என்ன காலேஜ் அத்தை?” என தியாழினி புரியாமல் கேட்டாள்.

வாய் விட்டு சிரித்த மைதிலி, “அவன் நீ படிக்கிற காலேஜுல தான் வேலை செய்யிறான் மா, கெமிஸ்ட்ரி சாரு,” என விசயத்தை போட்டு உடைத்தார். அதை கேட்டதும் தியாளினி உறைந்து போனாள்.
மனதில் புயல் அடித்துக் கொண்டிருந்தது.
‘தான் படிக்கும் கல்லூரியில் வேலை செய்கிறாரா! இதை, இதை ஏன் என்னிடம் சொல்லவே இல்லை?’ என தோன்றியது. இத்தனை நாள் இல்லாத தயக்கம் இந்த நொடி தோன்றியது.

மழை மேகன்… பெயரைக் கேட்டதும் நெஞ்சுக்குள் சில்லென்று பெய்த அதே மழை, இப்போது அவனது அடையாளத்தை அறிந்ததும் பதட்டத் தீயாக உருமாறியிருந்தது.

தியாழினியின் மனதில், ‘ஸ்கூலில் எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்களா? என்னை எல்லாரும் எப்படி பார்ப்பாங்க? முதலில் அவர் ஏன் என்னை கட்டிக்கணும்? அவரோட படிப்புக்கு ஏத்த போல அவரோட துறையில் கல்யாணம் செஞ்சுக்கலாமே, இது ஒத்து வருமா?’ என என்ன என்னவோ தோன்றியது.

இதையெல்லாம் நினைக்கும் போதே அவளது தாமரை இதழ்கள் நடுங்கின. மெல்லிய கொலுசு அணிந்த பாத விரல்களால் தரையைக் கோலம் போட்டபடி, தன்னுடைய தாவணியின் முந்தியை விரலில் சுற்றி சுற்றி முறுக்கிக் கொண்டிருந்தாள்.

மழை மேகன் வீட்டுக்கு வந்த அடுத்த நொடி தியாவின் புகழ் பாட ஆரம்பித்து விட்டார் மைதிலி. “எனக்கு போன் பண்ணி பேசினா தெரியுமா டா?” என அத்தனை உற்சாகத்தில் கூறினார்.

“அப்படியா? நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தான்,” என கூறியபடி டீயை பருகிறவன், போனை நோண்டியபடி தியாழினிக்கு மெசேஜ் செய்தான். அது சிங்கிள் டிக்கில் இருந்தது. ஏதாவது வேலையில் இருப்பாள் என நினைத்து கொண்டு விட்டுவிட்டான்.

இரவு ஒன்பது மணிக்கு பார்த்தான். இன்னும் அவள் மெசேஜ் பார்க்கவில்லை. ஆனால் இந்த முறை டபுள் டிக் காட்டியது.

ஆன்லைனில் இருக்கிறாள் என்பது தெரிய இன்னொரு மெசேஜ் செய்தான். அதையும் அவள் பார்க்கவில்லை. ‘வீட்டில் எதுவும் பிரச்னையாக இருக்குமா? ஏன் ஒரு பதில் மெசேஜ் கூட அனுப்ப மாட்டேன் என்கிறாள்?’ என தோன்ற உடனே போன் செய்தான் அவளுக்கு.

தியாவின் அலைபேசி முணுமுணுத்தது. திரையில் ‘மழை மேகன்’ என்ற பெயர் மின்னியது.

கைகள் நடுங்க, தொண்டையைச் செருமிக்கொண்டு போனை எடுத்தாள். “ஹ… ஹலோ…”

“தியாழினி… என்ன பண்றீங்க?” அவனது காந்தக் குரல் அலைபேசி வழியே பாய்ந்தது.

“இ… இல்ல… சும்மா தான் இருக்கேன்,” என்றாள் மெல்லிய குரலில்.

“சும்மா இருக்கீங்களா? அப்புறம் ஏன் என்னோட மெசேஜ் பார்க்கவே இல்ல, ஆன்லைனில் இருந்தீங்களே?” என விசாரித்தான் மேகன்.

அவளிடம் பதில் இல்லை..

“என்னாச்சு, எதுவும் பிரச்னையா?”

“ஐயோ, அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க… நல்லாத்தான் இருக்கேன்,” என்றாள். அவளின் பேச்சில் வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது.

“அப்போ என்கிட்ட ஏதோ மறைக்கிறீங்க… என்ன விஷயம்னு சொன்னா தான தெரியும்.”
“அது… ஒன்னும் இல்லைங்க, அப்புறம் பேசுறேன்,” என்று பதட்டமாகச் சொல்லிவிட்டு போனைத் துண்டித்துவிட்டாள் தியா.
மறுமுனையில் மேகன் யோசனையோடு போனைப் பார்த்தான். ‘என்னவா இருக்கும்? திடீர்னு இந்த தயக்கம்?’ என்று யோசித்தாலும், போனில் அதை மேலும் கிளறாமல் அமைதியானான்.

அடுத்த நாள் மாலை, நிச்சயதார்த்தப் புடவை எடுப்பதற்காகக் குடும்பங்கள் ஒன்றுகூடின. பிரபல ஜவுளிக் கடையில் கூட்ட நெரிசலுக்கு நடுவே, மைதிலி, கலைச்செல்வி, முல்லை மற்றும் குட்டித் தமிழினி என மேகனின் பட்டாளமே வந்திருந்தது. தியா அந்த குழப்பத்தில் இருந்து முழுவதுமாக வெளி வரவும் இல்லை.

மேகன் வழக்கமான தன் கம்பீரத்தோடு நின்றிருந்தான். அடர் நீல நிறச் சட்டையில், திருத்திய தாடியும், நிமிர்ந்த நடையும், அகன்ற மார்புமாய் அவன் நடக்கும் அழகே தனி. தனது நேர்கொண்ட பார்வையால் அனைவரையும் வசீகரிக்கும் அந்த அழகன், அடக்கமான புன்னகையோடு அன்னைக்கும் அத்தைக்கும் புடவைகளைத் தேர்வு செய்ய உதவிக் கொண்டிருந்தான். ஆனால், அவனது காந்தக் கண்கள் மட்டும் தியாழினியைப் பின் தொடர்வதை நிறுத்தவில்லை.

தியாழினி மெரூன் நிறச் சுடிதாரில், இடை வரை நீண்ட கூந்தலைப் பின்னிப் போட்டு, கைகளில் கலகலக்கும் வளையல்களோடு நின்றிருந்தாள். ஜாதிமல்லி பூவின் நறுமணம் அவளைச் சுற்றி வீசியது. ஆனால், அவள் முகம் எப்போதும் போலப் பிரகாசமாக இல்லை. மேகனின் உருவத்தைக் காணும்போதெல்லாம் அஞ்சனம் தீட்டிய அவளது அழகான விழிகள் படபடவென இமைக்கும்; பார்வை நிலத்தை நோக்கிச் சாயும்; சலனமில்லாத அவளது கைவிரல்கள் சுடிதார் துப்பட்டாவை இறுக்கிப் பிடித்துக் கொள்ளும்.

அனைவரும் புடவைகளைத் தேர்வு செய்வதில் தீவிரமாக இருக்க, மேகன் மெல்ல நகர்ந்து தியாவின் அருகே வந்தான். அவனது உயரத்திற்கும் தோற்றத்திற்கும் முன்னால் தியா இன்னும் சின்னப் பெண்ணாகத் தெரிந்தாள்.

“தியாழினி…” என அவனது கம்பீரமான, அதே சமயம் கனிவான குரலில் அழைத்தான்.
அவள் சட்டென அதிர்ந்து, “சா… சார்… இல்ல… மழை மேகன்…” என உளறினாள்.
“சார்-ஆ? என்ன சார்?” என புருவம் தூக்கினான்.

“அது வந்து, ஒன்… ஒண்ணுமில்ல…”
“நேத்து போன்ல பேசும்போதும் ஒரு மாதிரி இருந்தீங்க, இப்போ நேர்ல வந்தும் பயந்து நடுங்குறீங்க… என்ன பிரச்சனை?” என அவளது அஞ்சன விழிகளை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டான்.

தியாழினி சுற்றிலும் யாராவது பார்க்கிறார்களா எனத் தவிப்புடன் ஒரு நொடி தேடிவிட்டு, மெல்லிய குரலில், “அது… வந்து… ஒரு விஷயம் கேட்கணும்…” என்றாள்.
“என்ன கேட்கணும்?”

“நீங்க… நீங்க அறிவொளி காலேஜ்ல Chemistry Professor-ஆ ஒர்க் பண்றீங்களா?” எனக் கேட்டு முடித்த போது அவளது மூச்சு வாங்கியது.

மேகனுக்கு இப்போதுதான் புதிரின் விடை கிடைத்தது! அவளது பதட்டத்திற்கான காரணம் என்னவென்று புரிந்த மறுநொடி, அவனது மனதிற்குள் சிரிப்பு தோன்ற, “அதுல என்ன பிரச்னை? நீங்களும் அங்கே தானே படிக்கிறீங்க?”

“உங்களுக்கு தெரியுமா?”

“ம்ம், தெரியுமே! உங்க அண்ணா சொன்னார்.”
அவளிடம் அமைதி..

“என்ன பிரச்னை? சொன்னா தானே தெரியும்?”

“ஒன்… ஒண்ணுமில்ல…”

“இப்போ சொல்றியா? இல்ல உங்க அப்பாவை கூப்பிடவா?”

“இல்ல, அது வந்து… நீங்க professor, நான் student.. அதுதான் எனக்கு பயமா இருக்கு.”
அவளது இந்தச் வெள்ளந்தியான பேச்சைக் கேட்ட மேகனின் உதடுகளில் சிரிப்பு விரிந்தது.

“நான் ஒன்னும் சிங்கம், புலி இல்லைங்க.”
“இல்ல, அது வந்து… நீங்க எப்படி தமிழ் படிக்கிற என்னை.. என்னை நீங்க…” என அவள் சொல்லி முடிப்பதற்குள், யாரும் கவனிக்காத ஒரு தருணத்தைப் பயன்படுத்திய மேகன், சட்டென அவளது மெல்லிய, வியர்த்த கைகளைப் பற்றித் தன் பெரிய கரங்களுக்குள் அடக்கிக் கொண்டான். மேகனின் சூடான ஸ்பரிசம் பட்டதும் தியாழினியின் உடல் சிலிர்த்தது.
மேகன் அவளது கண்களை ஆழமாகப் பார்த்தபடி, “தியா… இங்க பாருங்க,” என மென்மையான குரலில் பேசத் தொடங்கினான்.

“நம்ம படிப்பு வேற, நம்ம வாழ்க்கை வேற! காலேஜுக்குள்ள நீ என்னோட Student… அவ்வளவுதான். அதுவும் நாம ரெண்டு பேரும் ஒரே டிபார்ட்மெண்ட் கூட இல்ல; நீ தமிழ், நான் ಕೆமிஸ்ட்ரி. வேற என்ன பயம்? இந்த விடயம் அவ்ளோ பெருசு இல்லையே? வாழ்க்கைக்கும் படிப்புக்கும் என்ன சம்மந்தம்?”

தியாழினி இமைகளை உயர்த்தி அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். “நிஜமாவா சொல்றீங்க?”

“பின்ன பொய்யா சொல்வேனா? அங்கே நான் லெக்சரர் மேகன், இங்க நான் உன்னோட மழை மேகன்! இனிமே இந்தக் காலேஜ் விஷயத்தை நினைச்சு தேவையில்லாம டென்ஷன் ஆகக் கூடாது, சரியா?” எனக் கூறி, அவளது கையை லேசாக அழுத்தி விட்டு, ஒன்றும் நடவாதது போலத் தன் குடும்பத்தாரிடம் சென்று சேர்ந்தான் மேகன்.

கடையின் பெரிய கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்த தியாழினியின் கன்னங்கள் சிவந்து போயிருந்தன. அவளது கைவிரல்கள் இன்னும் மேகன் தொட்ட அந்தச் சூட்டை நினைவில் வைத்திருந்தன.

அவனது அன்பையும், தெளிவான பேச்சையும் எண்ணி வியந்தவள், தன் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு மெல்லச் சிரித்தாள். “மழை மேகன்…” என முணுமுணுத்துக் கொண்டாள்.

இதோ நிச்சயத்தின் நாளும் வந்துவிட்டது. இதோ தியாழினியின் விரல்களுக்கு மோதிரம் அணிவித்து விட்டான் மழை மேகன்.

தொடரும்…