பின் அவள் கையில் மெஹந்தி களையாத படி வைத்தவள் கண் மூடி உறங்க முயல, ஏனோ தூக்கம் வர மாட்டேன் என்று அடம் பிடித்தது.

சற்று நேரம் முன் இருந்த சந்தோஷமும் வியப்பும் எங்கே போனது என்று தெரியாமல் மனதில் சோகம் வந்து அப்பி கோள்ள,

“சாதாரண பொண்ணுங்க மாதிரி நம்மளால இருக்கவே முடியாதா?” என்று மனம் எங்கேயோ பயணிக்க, தலையை உலுக்கி அதிலிருந்து வெளியே வந்தவள்.

அவள் கைபேசியை எடுத்து அதில் கவனம் செலுத்தி குழப்பமான மனதைச் சமன் படுத்த முயன்றாள். அப்போது சரியாகத் த்ரூவிடமிருந்து வந்த மெசேஜைப் பார்த்து அதைத் தொட்டுத் திறக்க,

“ஸ்டெல்லா?” என்று அழைப்பைப் பார்த்து புருவம் உயர்த்தியவள், அதற்கு இவள் பதில் அளிக்கும் முன்,

“முழிச்சிருந்தா கதவைத் திற ஸ்டெல்லா” என்று அடுத்த மெசேஜ் அவனிடம் இருந்து வந்து விளவும்,

“என்னது, வெளிய இருக்காங்களா?” என்று யோசித்தபடி, ரூத் எழாதபடி கட்டில விட்டு இறங்கி வெளியே கதவைத் திறக்க, அங்கு கையில் பையுடன் நின்று கொண்டிருந்தான் த்ரூவ்.

“சாரி டா, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

என்று வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தவனைப் பார்த்து,

“இல்ல, முழிச்சி தான் இருந்தேன்… சொல்லுங்க என்ன ஆச்சி ,”

“ஒன்னும் இல்லடா…. பதறாத” என்று அவள் கை பற்றியவன்.

சுற்றி பார்த்து விட்டு “கொஞ்சம் வெளிய என் கூட வா,” என்று அவளைக் கைப்பற்றி இவன் வெளியே அழைத்துச் செல்ல, அவன் பின் புரியாமல் சென்றாள் ஸ்டெல்லா.

“எங்க போறோம்… த்ரூவ்?” என்றவளின் பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளாதவன், அங்கிருந்த ஒரு சேரில் இவளை அமர வைத்தவன்.

அவள் அருகே இவனும் அமர்ந்து கொண்டு, கையில் இருந்த பையில் இருந்து ஏதோ பேப்பர் போல எதையோ எடுத்தவன், அதைத் திருப்பிச் சுற்றிப் பார்த்து, அதைச் சரியாக ஸ்டெல்லாவின் கைகளில் ஒட்டத் தொடங்கினான்.

த்ரூவ் ஒட்டுவதைப் புரியாமல் பார்த்த ஸ்டெல்லா, பின் அவன் ஒரு கையில் முழுதாக ஒட்டி முடிக்க, கைகளை அவள் முகம் முன் வைத்து அதை என்ன என்று பார்த்தவள்,

“த்ரூவ்…” என்று அதிர்ந்து… முகம் மலர, “இது… இது… நான் செலக்ட் பண்ண மெஹந்தி டிசைன் தான?” என்றதற்குச் சிரித்தபடி தலையசைத்தவன்,

“நீ தான சொன்ன ரொம்ப நேரம் கைய நீட்டி காமிக்க முடியாதுன்னு…”

“அதுக்கா ஸ்டிக்கர்…. த்ரூவ், அதுவும் இந்த நைட் போய் ஸ்டிக்கர் வாங்கினீங்களா…” என்று மகிழ்ச்சியில் அதை சுற்றி சுற்றி பார்த்தவள்

“அனா….இதை காலைல ககுளிச்சிட்டு தான த்ரூவ் ஒட்டணும், இப்போ ஏன் ஒட்டுனீங்க?”

என்றவளின் கன்னம் கிள்ளியவன், “என் அறிவி பொண்டாட்டி… இது ஸ்டிக்கர் இல்ல, மெஹந்தி போடுற ஸ்டென்சில்ஸ். இத ஒட்டிட்டு இது மேல மெஹந்தி பூசுனா போதும். இந்த டிசைன்ல காலைல சிவந்துரும்மா,”

என்று பேசியவனை கண்கள் விரித்துப் பார்த்தவள், அந்த ஸ்டிக்கரை நன்றாக உற்றுப் பார்த்து,

“இது எப்படி? அதுவும் நான் செலக்ட் பண்ண அதே டிசைன்ல கிடைச்சது.”

என்றவளை முறைத்துப் பார்த்தவன், “இப்போ நாள் கிழமை லாம் சொன்னா தான் இத ஒட்ட விடுவியா… ஸ்டெல்லா?”

என்றவனை உதடு சுளித்துப் பார்த்தவள், கைகளை நீட்டியபடி தலையைத் திருப்பி கோள்ளவும், அவளின் செயலில் சிரித்தபடி அடுத்த கையிலும் அந்த ஸ்டிக்கரை ஒட்டினான்.

நன்றாக ஒட்டவில்லை என்றாலும் ஏதோ பரவாயில்லாமல் ஒட்டியவன், மெஹந்தி கோன்களை வைத்து அதன் மீது முழுக்க மருதாணியால் நிரப்பினான்.

வெறும் பத்து நிமிடத்திலயே இரு கைகளிலும் மருதாணியால் நிரப்பி முடிக்க, அதற்கே ஸ்டெல்லாவின் கைகள் நடுங்க ஆரம்பித்தன.

ஸ்டெல்லா தன் நடுங்கும் கரத்தை வேதனையுடன் பார்க்க, அதை பார்த்த த்ரூவ் அவள் கவலையைத் திருப்பும் விதமாக

“சரி காலைக் காட்டு ஸ்டெல்லா, அங்கேயும் போட்டுடலாம்” என்றவன் அவள் காலைத் தொடப் போக, அதில் பதறி காலை உள்ளே இழுத்துக் கொண்ட ஸ்டெல்லா

“அச்சோ த்ரூவ், என்ன சொல்றீங்க? கால்ல வேனா… கை மட்டும் போதும்.”

“நோ…டா…நாளைக்கு காலிற்கு மெட்டி போடும் போது கால் சிவந்து இருந்தா இன்னும் அழகா இருக்கும் டா” என்றவனுக்கு மறுப்பாகத் தலை அசைத்தவள்.

“கால்ல வச்சிட்டு பெட்ல படுத்தா பெட் ஃபுல்லா கரை ஒட்டிக்கும் த்ரூவ்.”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் ஸ்டெல்லா” என்றவன் அவள் கால் அருகே அமர்ந்துவிடவும்,

“த்ரூவ், என்ன கீழே உட்காந்து..டீங்க? எழுந்திருங்க.”

“இல்ல பரவாயில்லை ஸ்டெல்லா, கீழே உட்கார்ந்தா தான் உன் காலில்ல வைக்க சரியாக இருக்கும்”

என்றவன், மெல்ல அவள் காலைத் தொட்டு அதைத் தன் தொடையில் வைத்து, விரல்களுக்கு மட்டும் இவனுக்குத் தெரிந்த அளவு மருதாணி பூசத் தொடங்கினான் த்ரூவ்.

அழகாகப் பார்த்துப் பார்த்து மருதாணி வைக்கும் த்ரூவை ரசனையாகப் பார்த்த ஸ்டெல்லா, காற்றில் அசைந்தாடும் அவன் முடியை கைகளால் வருடச் சென்றவள் பின் அவள் கையில் இருக்கும் மருதானியைப் பார்த்து கையை இழுத்துக்கொண்டு

நாக்கை கடித்துக் “என்ன ஸ்டெல்லா இது…” என்று முனங்கியவள், மௌனமாக அவனை ரசிக்கத் தொடங்கினாள்.

காலிலும் மருதாணியை வைத்துவிட்டு எழுந்தவன்,

“எல்லாம் ஓகே… ஸ்டெல்லா…” என்று அவளைப் பார்க்கவும், நினைவு வந்தவளாக ஸ்டெல்லா

“அச்சோ… த்ரூவ், உங்க பேரு அதை நீங்க எழுதவே இல்ல” என்று ஸ்டெல்லா தவிப்பாகத் த்ரூவ் பெயர் எழுத இடத்தைத் தேட,

“பேரு தான ஸ்டெல்லா, விடு” என்றவனுக்கு மறுப்பாகத் தலை அசைத்தவள்,

“எனக்கு உங்க பேரு வேணும்…” என்று சுற்றிச் சுற்றி இடத்தைப்பார்த்தவள், பின் மணிக்கட்டின் கீழே இருந்த சிறு இடத்தைக்காட்டி,

“இதோ இங்க எழுதுங்க த்ரூவ்” என்று அவனைப் பார்க்க, திருதிருவென தான் முழித்தான் த்ரூவ்.

“பேர் எழுதுற அளவு எனக்கு மருதாணி போடத் தெரியாதே”

என்றவனை, கண்களைச் சுருக்கிப் பாவமாக ஸ்டெல்லா பார்க்க, த்ரூவ்,

“சரி ட்ரை பண்றேன், அப்புறம் அழகா வரலேன்னா என்ன கேட்க கூடாது…சரியா” என்று எப்படியோ போராடி அவன் பெயரையும் கோனலாக எழுதி முடித்தவன்.

“இப்போ எல்லாம் ஓகே வா டா” என்றவனுக்குச் சந்தோஷமாகத் தலையசைத்தவளின் கன்னத்தைக் கிள்ளிய த்ரூவ்,

“அழகா இருக்கடா…” என்று கொஞ்சியவன், அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவளைக் கையில் தூக்கிக்கொண்டான்.

அதில் பயந்து அவள் அவன் சட்டையைப் பிடிக்கப் போக, “ஸ்டெல்லா, மெஹந்தி பார்த்து!” என்று த்ரூவ் எச்சரிக்கவும்,

“கீழ இறக்கி விடுங்க த்ரூவ், பயமா இருக்கு!” என்று அவன் தொளில் முகத்தை புதைத்து கொள்ள

“பயப்படாத டா, இந்த காலை வச்சிட்டு நீ நடந்தா இடம் முழுக்க மருதாணி ஆகிடும் டா”

என்று பேசியபடி அவள் அறைக்குள் நுழைந்தவன், அவளை மெல்லக் கட்டிலில் கால் தொங்கவிட அமர வைத்தவன்.

அங்கிருந்த ஒரு துண்டை ஸ்டெல்லாவின் பாதம் வைக்கும் இடத்தில் விரித்துவிட்டு, அவள் காலை மேலே மெல்ல வைத்து, அவளையும் படுக்க வைத்துவிட்டு,

“இப்போ பாரு கரை படாது… நீ தைரியமா தூங்கலாம் டா” என்றவன் புன்னகையுடன் அவள் அருகே வந்து நெற்றியில் முத்தம் வைத்தவன்.

“குட் நைட் டா, மார்னிங் ரெடியா இரு” என்று சொல்லி நகரச் சென்றவனை, அவன் மணிக்கட்டைப் பிடித்து மீண்டும் அருகில் இழுத்தவள்,

அவன் கண்ணத்தில் அழுத்தமாக அவளின் அதரங்களை பதித்துவிட்டு

“தாங்கஸ்…” என்று சிரிக்க, அவள் சிரிக்கும் இதழ்களைப் பார்த்துவிட்டு மீண்டும் அவள் கண்களைப் பார்த்தவன், எச்சிலை கூட்டி விழுங்கிய படி,

“ம்ம்ம்…” மட்டுமே அவன் வாயிலிருந்து வார்த்தை வர, அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றான்.

அவன் சென்ற பிறகும் தூங்க முயன்றவளுக்குத் சந்தோஷத்தில் தூக்கம் வராமல் போக, எப்போது அந்த மருதாணி காயும் என்று கண்களை மூடி மூடித் திறந்தாள்,

நள்ளிரவு தாண்டிச் சென்ற பிறகு மருதாணி அனைத்தும் காய்ந்து அது உலர்ந்த பிறகு, அதை வேகமாக கழுவி, அவளின் சிவந்த விரல்களையும் அதில் இருக்கும் அவன் பெயரையும் வருடிய பின்புதான் உறங்கச் சென்றாள் ஸ்டெல்லா.

இரவு நேரம் கடந்து தூங்கியதன் விளைவுதான் காலை மிகத் தாமதமாக விழித்தது.

இப்போது அந்த சிவந்திருந்த கைகளைப் பார்த்து முகம் சிவந்து, அனைத்தையும் மீண்டும் இவள் நினைத்துக் கொண்டு இருக்க,

இங்கே த்ரூவும் ஸ்டெல்லாவை போலவே, அவன் மணிக்கட்டில் பதிந்து சிவந்திருந்த ஸ்டெல்லாவின் கை அச்சை ரசித்தபடி, அதைப்பார்த்து வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான்.

“என்னடா தானா சிரிச்சிட்டு இருக்க? கல்யாணத்துக்கு முன்னாடியே முத்திட்ட டா”

என்று மதி அவன் அருகே தோளில் கைபோட்டபடி அமர்ந்தவன், த்ரூவின் கையைப்பிடித்துத் திருப்பிப் பார்த்து.

“ஸ்டெல்லாக்கு மருதாணிய வைக்க சொன்னா நீ வச்சிட்டு வந்திருக்க போல…”

என்றவன் கையை தட்டிவிட்டு “சும்மா இருடா” என்று சிவந்த முகத்துடன் அவனின் கோல்ட் டைடன் வாட்ச்சை எடுத்து மாட்டினான்.

“ம்ம்ம்….ம்ம்ம்…. நைட் ஓரே ரொமான்ஸ் தான் போல, நைட்டு என்ன டார்ச்சர் பண்ணி அந்த ஸ்டிக்கர் வாங்க போக வச்சது ரொம்ப யூஸ் ஆச்சி போலடா”

என்று மதி சொன்னதற்கேற்ப தான் த்ரூவும் இரவு ஒன்பது மணிக்கு மதியை அழைத்து,

“மெஹந்தி ஸ்டிக்கர் வேணும், அதுவும் இந்த டிசைன் தான் வேணும்னு “ என்று ஒத்த காலில் நின்று இவனின் நண்பனின் பிரிண்டிங் பிரஸர்க்கு சென்று தோறயாமாக ஸ்டெல்லாவின் கை அளவில் ஸ்டிக்கரை டிசைன் செய்து வாங்கிட்டு வந்திருந்தான்.

மதி பேச்சை காதில் வாங்கிக் கொண்டபடி தலையை வாரியவன்,

“இன்னைக்கு என் லவ்க்கு ஹெல்ப் பண்ணினா, நாளைக்கே உன் லவ்க்கு ஒன்னுன்னா நான் ஹெல்ப் பண்ண மாட்டேனாடா?”

“கண்டிப்பா உன் ஹெல்ப் சீக்கிரமே தேவைப்படும்னு நினைக்கிறேன் பிரானாவ்” என்றவனை முழுதாகத் திரும்பிப் பார்த்தவன்,

“அன்விய என்ன பண்ண என் ஹெல்ப் தேவைப்படுற அளவு என்னடா பிரச்சனை உங்களுக்குள்ள?

நான் மேரேஜ்க்கு இன்வைட் பண்ண போனா ஸ்டாஃப்பா வரேன்னு சொல்றா என்ன ஆச்சு டா”

என்றவனை திருட்டு முழி முழித்து மதி பார்க்க, த்ரூவ் அவனைத் தான் உறுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி என்ன சம்பவம் டா பண்ணி வச்சிருக்க என்று மனதோரம் சிறு பயம் இருக்க தான் செய்தது த்ரூவுக்கு.