அனல் – 17

படத்தைப் பார்த்து முடித்துவிட்டு மகிழ்ந்த முகத்துடன் வந்த ரூத்தை மன திருப்தியுடன் பார்த்தவன்.

“படம் எப்படி ரூத்?”

“ம்ம்ம்… சூப்பர் ஆதி… செம ஃபன்னா இருந்துச்சி.”

“அப்போ இனிமே தீயேட்டர்க்கு வர பயப்பட மாட்ட தான?” என்று கேட்டவனுக்கு, “பயப்பட மாட்டேன்” என்று தலையை வேகமாக ஆட்டவும், அவள் தலையை சிரித்தபடி கை வைத்து ஆட்டியவன்.

“சரி…. உன் கிட்ட ஒன்னு கேக்கணுமே ரூத்,” என்று அவள் முகம் நோக்கி குனிந்து,

“என் கூட ஒரு டூயட் ஆட வரியா?” என்று தலையசைத்து கேட்ட விதத்தில் அவனை ஒரு நிமிடம் சொக்கிப் போய் பார்த்தவள், பின் வேகமாகத் தலையை மறுப்பாக அசைத்து,

“அய்யோ…. நோ…. ஆதி…. ஸ்டெல்லா நான் கிட்சன்ல சும்மா ஆடுனாலே என்ன திட்டுவா, நீங்க டூயட் ஆட கூப்பிடுறீங்க!”

“ப்ச்…. அடியே…. என்னடி எப்போ பாரு ஸ்டெல்லா ஸ்டெல்லான்னு பயந்துட்டு இருக்க? அவ உனக்கு அக்காவா இல்ல பூச்சாண்டியா?” என்று கேட்டவனை இவள் முறைத்து பார்க்க,

“அதன்ன அவள ஒன்னும் சொல்லிடக் கூடாதே…” என்று முனங்கியவன்,

“சரி சரி முறைக்காதடி….. உனக்கு டான்ஸ் பிடிக்கும் தான, அப்பறம் என்ன உனக்கு பிடிச்சத நீயே பண்ண வேண்டியது தான.”

“ஆனா அது…. “

“திரும்பியும் ஸ்டெல்லாவ இழுக்காதே, நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல, எல்லாத்துக்கும் பெர்மிஷன் கேட்டு நிக்கிறதுக்கு. உனக்கு ஒன்னும் வேணும்னா நீ தான் எடுத்துக்கணும்.”

“ஆனா ஸ்டெல்லாவுக்கு தெரிஞ்சா விட மாட்டாளே!”

“இல்ல, இன்னைக்கு இவ்ளோ நேரம் என் கூட இருக்கியே, இதை எப்படி அவ கிட்ட சொல்லுவ?”

“அது… நான் பாட்டு கிளாஸ் போறேன்னு தான் சொல்லிட்டு வந்திருக்கேன் பாட்டி கிட்ட. ஸ்டெல்லா நைட் வந்தா நான் வீட்டுல தான் இருந்தேன்னு மாத்தி சொல்லி சமாளிச்சிருவேன்.”

“ம்ம்ம்… இதே மாதிரி டேன்க்கும் சமாளி. ஒன்ஸ் டான்ஸ் கத்துக்கிட்டு உன் அக்கா முன்னாடி அழகா ஆடி காட்டினினா அவ ஒத்துப்பா!” என்று ஆதிஷ் பேசியதை கேட்டு இவளுக்கு ஒரு புறம் ஆசையாக இருந்தளும், மறு புறம் ஸ்டெல்லாவுக்குத் தெரியாம வேண்டாமே என்று தோன்றியது.

ரூத்தின் யோசனையான முகத்தை பார்த்தவன்,

“சரி நீ போயிட்டு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திட்டு உன் விருப்பத்தை என் கிட்ட சொல்லு, இப்போ வா வீட்டுக்கு கிளம்பலாம்,” என்று விட்டு இருவருமாக தனித்தனியே வீடு திரும்பினர்.

வீட்டுக்கு வந்த ரூத்தின் தலை முழுக்க ஆதிஷ் சொன்னது தான் ஓடிக்கொண்டிருந்தது.

ஆசைப்பட்டது நடக்க வழியே இல்லை என்று இருக்கும் வரை தான் அந்த ஆசையை கட்டுப்படுத்த முடியும். எப்போது அதற்கு ஒரு வழி இருக்கிறது என்று தெரிய வருகிறதோ,

அப்போது லிருந்து அதை நாம் என்ன செய்தும் கட்டுப்படுத்த முடியாது

இப்போது ரூத்தின் நிலையும் அப்படி தான் ஆனது. எப்படியாவது நடனம் ஒரு முறை ஆவது ஆடி விடு என்று அவள் உள் மனம் கூச்சலிட்டுக் கொண்டே இருக்க, அதில் நிம்மதி இன்றி தலைவலியுடன் சுற்றி வந்தாள்.

கடைசியில் ஒரு முறை, ஒரே ஒரு முறை நடனம் ஆடினால் தான் என்ன என்று முடிவிற்கே வந்துவிட்டாள் ரூத்.

இங்கு ஆபிஸில் இன்று ஸ்டெல்லாவைப் பார்க்க த்ரூவ் ஆர்வமாக எதிர்பார்த்தானோ இல்லையோ, தருண் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தான்.

நிமிடத்திற்கு ஒரு முறை நேரத்தைப் பார்ப்பது, பின் த்ரூவை பார்த்து வெட்கப்பட்டு சிரிப்பது என்று சுற்றித் திரிந்தான்.

தருணை வந்ததிலிருந்து கவனித்தபடி இருந்த த்ரூவ் அவன் நடவடிக்கையில்,

“என்ன ஆச்சு இவனுக்கு? நம்மள பார்த்து பார்த்து சிரிக்கிறான். சரியில்லையே,” என்றபடி அவனும் இவனையே கவனிக்க, அது கூட அறியாது ஆபிஸ் முடியும் நேரத்திற்கு காத்திருந்தான்.

சரியாக மணி ஒன்பது தொட்டிருக்க, த்ரூவ் “தருண்….” என்று அழைக்கத்தான் செய்தான், அதற்கே அவன்,

“டைம் ஆச்சா சார்? போலாமா சார்?” என்று பறந்து கொண்டு வந்தவனை யோசனையாகப் பார்த்தவன்.

“என்ன டைம் ஆச்சு தருண்? ஏதாவது எமர்ஜென்சியா? நீங்க சீக்கரம் வீட்டுக்கு போகணுமா?” என்ற கேள்விக்கு மறுத்து தலையசைத்தவன்.

“இல்ல சார், அது ஒரு வேகத்துல கேட்டுடேன் சார்,”

என்றவனை புரியாமல் பார்த்தவன், “சரி அத விடு, அன்னைக்கு நைட் ஒரு பொண்ணு நேம், அட்ரஸ் கொடுத்து ட்ரஸ்ட் மூலமா ஹெல்ப் பண்ண சொன்னேனே, அது என்ன ஆச்சு?”

என்ற த்ரூவின் கேள்வியில் ஒன்றும் புரியாமல் ஒரு நிமிடம் முழித்து நின்றவன்

“அச்சோ, யாரா கேக்குறாங்கன்னு தெரியலயே…” இத்தனை நேரம் இவன் போட்டிருந்த ப்ளானை பற்றியே  யோசித்து கோண்டு இருந்தவனுக்கு த்ரூவ் கேட்ட  திடீர் கேள்வியில் சட் என்று மூளை வேலை செய்ய மாட்டேன் என்று சொல்லி விட

ஒன்றும் புரியாமல் கைகள் நடுங்க தான்  நின்றான் , அவனை பே….என்று நிற்பதை பார்த்த த்ரூவ் நெற்றியைத் தேய்த்து கொண்டு

“இவன…. ப்ச்….” என்று கண்களை மூடித் திறந்து கோபத்தைக் கட்டுப்படுத்தியவன்.

“அந்த பொண்ணு நேம்…… சீதா…..எஸ்…சீதா தான்.  இப்போவாது ஞாபகம் வருதா?” என்று த்ரூவ் முறைக்க, தன்னைப்போலவே பதில் வந்தது அவனிடமிருந்து

“ஹா… சார், ஞாபகம் வந்திருச்சு. அவங்க பேர் சீதா லட்சுமி டிவோஸ்சி… பெண்ணு, பையனோட தனியா தான் இருக்காங்க சார். ஹெல்ப் பண்ண ட்ரஸ்ட்ல இருந்து போன மெம்பெர்ஸ்கிட்ட கொஞ்சம் செலரி அதிகமா ஜாப் கிடைக்குமான்னு கேட்டுருக்காங்க சார்,”

“டிவோர்ஸியா? ஏன், எதுக்கு? ரீசன் எதவது எப்படின்னு சொன்னாங்களா?”

“அவங்க சொல்லல, ஆனா பேக்ரவுண்ட் செக் பண்ணதில அவங்க கிடைச்சது.

அவுங்க ஹஸ்பென்ட் குடிச்சிட்டு வந்து இவங்கள அடிச்சு கொடுமை படுத்திருக்கான். அப்படியும் டைவர்ஸ் வர யோசிக்கல போல இவுங்க பொருந்து தான் பொய்யிருக்காங்க, அப்புறம் ஒரு நாள் கோபத்துல இவங்க மேலையே நெருப்பு வச்சி கொள்ளப் போயிருக்கான். அதுல தான் டைவர்ஸ் வாங்கிருக்காங்க,”

என்று தருண் சொன்னதை கேட்டு, வாயில் வந்த வர்ணனை வார்த்தைகளைக் கொண்டு அவள் புருஷனைத் திட்டியவன்.

“இவன மாதிரி ஆளுங்களலாம் வெளியவே விடாம உள்ள தள்ளி கொஞ்ச கொஞ்சமா கொடுமை படுத்தனும்,” என்று கோபமாக கைகளை முறுக்கியவன்.

“இப்போ அவன் என்ன பண்ணிட்டு இருக்கான்?”

என்று த்ரூவ் கேட்க, துவனியிலயே தருணுக்கு பயம் பிடித்துக்கொள்ள, “அது சார், அவன் வேற… ஒரு கல்யாணம் பண்ணிகிட்டான்…. சார்,”

என்று இவன் முடிக்கும் முன் டேபிளை அவேசமாக  தட்டிவிட்டு எழுந்தவன், அவனை நிதானப்படுத்த அங்கும் இங்கும் நடந்தான்.

“எல்லா ஷீட்ஸும் ஓரே மாதிரி தான் இருக்குதுங்க,” என்றவன் தண்ணீரை அருந்தி நிதானமாக.

“அவங்க பசங்க என்ன பண்றாங்க? சொந்தம்னு யாரும் இல்லையா?”

“பெரிய பொண்ணு பத்தாவது படிக்கிற பையன் ஏழாவது சார். பக்கத்துல இருக்க கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் படிக்கிறாங்க சார்.

அவங்க அம்மா இவங்க பிறக்கும்போதே இறந்துட்டாங்க. உடனே அவங்க அப்பா அடுத்த வருஷம் மறு கல்யாணம் பண்ணி பையன் பிறந்துட்டான். அவருக்கு அவர் வாழ்க்கையைப் பார்க்கவே சரியா இருந்திருக்கும் போல சார். அதான் எல்லாரும் இருந்தும் தனியா இருக்காங்க இவங்க.”

“அந்த பொண்ணு… ப்ச்… அதுதான் சீதா. அவங்க க்வாலிஃபிகேஷன் பார்த்து நம்ம கம்பெனிலயே ஒரு நல்ல வேலையில போட முடியுமா ன்னு பாரு,”

“ஆனா சார்…, இங்க எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம எப்படி?” என்றவனை நன்றாக முறைக்க, அதில் பயந்த தருண்.

“நான் பாத்துக்குறன் சார், ஏற்கனவே அந்தப் பொண்ணு  க்வாலிஃபிகேஷன் செக் பண்ணிடன் சார், கம்ப்யூட்டர் நாலேட்ஜும் இருக்கு சார். இங்கயே சிஸ்டம் வொர்க் கொடுக்கச் சொல்றேன்” என்றவனுக்குத் திடீரென்று நினைவு வரவும் த்ரூவ்

“ஏன் உன் அசிஸ்டண்ட்டா வச்சுக்கக் கூடாது? நீ ஏற்கனவே ரெண்டு கம்பெனி மேனேஜ் பண்ண முடியாம தான இருக்க, உனக்குக் கீழே வச்சுக்கோ” என்றவனைப் புருவம் உயர்த்தி ஒரு நிமிடம் பார்த்தவன். த்ரூவின் கேள்வியான பார்வையில்

“சரி… சார்” என்று விட்டுச் செல்லப் போக த்ரூவ்

“எங்க போற தருண்… மத்த வொர்க் அப்புறம் பாரு, இப்போ ஸ்டெல்லா ஆபிஸ் போலாம்” என்று இவன் எழுந்து கொள்ளவும் இருவருமாக அலுவலகம் கிளம்பினர்.

காரில் செல்லும் வழியில் தருணின் யோசனைகள் எல்லாம் த்ரூவ் இடம் தான், “என்ன நமக்குக் கீழே எந்த டெஸ்ட் இன்டர்வியூன்னு எதுவும் இல்லாம அப்பாயிண்ட் பண்ணச் சொல்றாரு?” என்று புருவம் சுருக்கி யோசித்தவன் பின் அவனே

“நம்ம சார் தான் வள்ளல் பரம்பரை ஆச்சே, பொண்ணுக்கு ஒன்னுன்னா முதல்ல ஓடுவார். இப்படிச் அவரு சொல்லலனா தான் அதிசயம் ” என்று நினைத்தவன் கார் ஓட்டுவதால் கவனமானான்.

த்ரூவிற்கு அந்தப் பெண் சீதா கதை கேட்கும் போது இவன் தாயின் நினைவு தான் வந்தது. இவன் அம்மா அமுதா அவருக்கும் யாரும் இல்லை, சொந்தங்கள் வீட்டில் வேலைக்காரியாக இருந்தவரை அவர் தாத்தா தான் பதினைஞ்சு வயதுப் பெண் என்றும் பாராமல் இவன் அப்பாவிற்கு மூன்றாம் தாரமாகத் திருமணம் செய்து வைத்தார்.

அதற்கு அடுத்த ஆண்டே த்ரூவ் பிறந்துவிட அவனைக் கையில் வைத்துக்கொண்டு இவர் அனுபவித்த துன்பம் எத்தனை.

த்ரூவ் ஒருவனுக்காக அனைத்தையும் பொருத்து கொண்டு நரகத்தில் வாழந்தவர் ஆயிற்றே. அந்த நரகத்திலும் இவனை கைவிடாது இங்கு வரை அழைத்து வந்த தெய்வம்.

அவரின் கஷ்டம் பார்த்தே அவரைப் போலவே இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற முடிவு எடுத்தவன். அந்த உதவியையும் அவர் பெயரிலேயே இன்று வரை செய்து கொண்டும் இருக்கிறான்.

இன்றும் அந்தப் பெண் சீதா கதை கேட்கவும் இவன் அம்மாவின் நினைவு வரவும் தான் இவன் அலுவலகத்திலயே வேலை போட்டுத் தரச் சொல்லிவிட்டான் த்ரூவ். இவன் அம்மா அனுபவித்த வலி இனி எந்தப் பெண்ணும் அனுபவிக்கக் கூடாது என்ற முடிவில்.

கார் ஸ்டெல்லா ஆபிஸ் முன் நிறுத்தவும் அதிலிருந்து வேகமாக இறங்கிய தருண், த்ரூவின் பக்கக் கதவைத் திறந்து விட்டுப் பற்களைக் காட்டி நிற்க

அவனை மேலும் கீழும் பார்த்தபடி இறங்கிய த்ரூவ் நேராக ஸ்டெல்லா ஆபிஸிற்குச் செல்ல அவன் பின்னாலேயே தருணும் வந்தான்.

எப்போது த்ரூவ் இங்கு வந்தாலும் ஆபிஸ் உள்ளே வராது, வெளியில் கார் பக்கமே நின்று கொண்டிருப்பவன், இன்று இவன் கூடவே உள்ளே வருவதைப் பார்த்த த்ரூவ்

“ஏதோ… தப்பா இருக்கே” என்று யோசித்தபடியே சென்றான்.

ஸ்டெல்லா அறைக்குள் சென்று த்ரூவ் சிரித்த முகத்துடன் “ஹாய் ஸ்டெல்லா…” என்று கூறி. அவன் அவள் எதிரே அமர, தருண் ஸ்டெல்லா பேசும் முன் முந்தி கொண்டு

“சார், மேம், நான் போய் காப்பி எடுத்துட்டு வரேன். சார் கார்ல வந்ததுல டயர்டா இருப்பார், நீங்களும் வொர்க் பண்ணி டயர்டா இருப்பீங்க. நான் போய் சாப்பிட சூடா  எடுத்துட்டு வர்றேன்” என்று கூறி வெளியில் ஓடியவனை, ஸ்டெல்லா,

“என்ன இது சார்? அதிசயமா இருக்கு! உங்க பிஏ என் ஆபீஸுக்கே வந்திருக்காங்க!”

என்றவளுக்குத் தோள்களை உலுக்கி, “நோ ஐடியா ஸ்டெல்லா, பட் ஏதோ பெருசா பிளான் பண்ற மாதிரி தெரியுது” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே,

ஒரு தட்டு நிறைய, காப்பியுடன் பப்ஸ், கட்லெட், பிஸ்கட் என்று எடுத்து வந்து வைத்தான்.

“நீங்க பொறுமையா பேசிட்டு வாங்க சார், நான் கீழ வெயிட் பண்றேன். முடிஞ்ச அளவு பொறுமையா…. குடிச்சிட்டு வாங்க சார், அவசரம் இல்ல, மேம் கூட பேசிட்டே குடிங்க” என்று கூறிவிட்டு இவன் கீழே ஓடிவிட,

அவன் சொல்ல வருவதைப் புரிந்து கொண்ட த்ரூவ், ஒற்றைக் கண்ணை மூடி அழகாகச் சிரித்தபடி திரும்ப, ஸ்டெல்லா கோபமாக இவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் முறைப்பில் த்ரூவ் “வாட்…” என்று கைகளை விரித்தவனை

“என்ன சார் இது? என்ன சொல்லி கூட்டிட்டு வந்திருக்கீங்க உங்க பிஏ-வ?”

“அச்சோ ஸ்டெல்லா, ப்ராமிஸா நான் எதுவும் சொல்லல, அவனா தான் ஏதோ பண்ணிட்டு இருக்கான்”

என்றவனை நம்பாமல் இவள் பார்க்க, த்ரூவ் “ப்ச்… முந்திரி கொட்டை தருண்… உன்னால பாருடா, இவ இப்போ முறைக்கிறா” என்று முனங்கிய படி அவளுக்கு பல்லைக் காட்டி

“காப்பி ஆறிடப் போது குடி ஸ்டெல்லா” என்றபடி இவனும் காப்பியை எடுத்து குடிக்கத் தொடங்கினான்.

தருண் எடுத்து வந்த அனைத்தும் நேராக அடுப்பிலிருந்து இறக்கியது போல அத்தனை சூடாக இருந்தன. அதை ஊதி ஊதி குடித்து முடிப்பதற்குள் அலுவலகமே காலி ஆகி இருந்தது.

ஸ்டெல்லாவும் வேலையை முடித்துவிட்டு அனைத்தையும் எடுத்து வைத்திருந்தாள். அதில் தருணத்தைப் மனதில் பாராட்டி தீர்த்தவன்.

“வாங்க ஸ்டெல்லா, நானும் கீழ தான் போறேன், வாங்க ஒன்னாவே போகலாம்” என்று சொன்னவனை முறைத்தபடியே தான் அவனுடன் நடந்தாள் ஸ்டெல்லா.

இருவரும் நடந்து லிஃப்ட் ல் ஏறி கிரவுண்ட் ஃபுளோர் பட்டனை அமுக்கி விட்டு காத்திருக்க, லிஃப்ட் பாதியில் நின்று போனது.