அறியாமல் தொலைந்தேனே -7

அத்தியாயம் -7

வேலை பிடிக்கவில்லை என சஞ்சய் சொல்லியிருந்த காரணத்தால் அவனிடம் பேசும் போது சில அறிவுரைகளை வழங்கியிருந்தாள் மீரா. 

மாலினி சென்னிடம் நற்பெயர் வாங்கும் படி ஏதாவது சவாலான வேலையை கேட்டு வாங்கி சிறப்பாக செய்து காண்பிக்க சொல்லியிருந்தாள். 

சஞ்சய்க்கு நற்பெயர் வாங்கவெல்லாம் ஆசையில்லை. அழகான மாலினி சென் அவனைப் பார்த்து சிரித்து பேசினால் போதுமானது. அதற்காகவே மீராவின் அறிவுரையை செயல் படுத்தி பார்க்கலாம் என முடிவு செய்தான். 

அதனால் நேரத்துக்கு அலுவலகத்துக்கு வந்து மாலினியை தேடிப் போய் காலை வணக்கம் வைத்தான். கொஞ்சம் தீவிரத்தோடு வேலை பார்ப்பது போல காட்டிக் கொண்டான். 

மாலினி கடந்து வந்த பாதை சற்றே கடினமானது. ஆகவே இயல்பாகவே அப்படி கடினத்தன்மை கொண்டவளாக மாறி விட்டாளே ஒழிய நல்லவள்தான். அதை விட ஆட்களை கணிப்பதில் கெட்டிக்காரி. 

தன்னை இம்ப்ரெஸ் செய்ய முயல்கிறான் பையன் என நினைக்கும் போதே அவளுக்கு சிரிப்புதான் வந்தது. சஞ்சயை அப்படியொன்றும் வேலை செய்யத் தெரியாதவன் என சொல்லி விட முடியாது, அவன் ஈடுபாடு காட்டாமல் இருக்கிறான், எதிலும் அவசரத் தன்மையும் விளையாட்டான மனப் பாங்கும் இருக்கிறது, முயற்சி செய்தால் அவனுள் இருக்கும் திறமை வெளிப்படும். இதெல்லாம் கடந்த நாட்களில் அவனை கவனித்து மாலினி தெரிந்து கொண்டவை. 

ஒரு சிலர் மீது காரணமே இல்லாமல் அக்கறை தோன்றும் அப்படித்தான் அவளுக்கும் சஞ்சய் மீது ஏதோ அக்கறை. 

இல்லையென்றால், “எனக்கு சேலஞ்சிங்கா ஏதாவது வேலை கொடுங்க, எப்படி செய்யணும்னு கைட் பண்ணினா  நான் கரெக்ட்டா செய்திடுவேன்” என அவன் கேட்டதும் சரி என நல்ல விதமாக சொல்லியிருக்க மாட்டாள். 

இன்னும் வேலைகளை கற்றுக்கொள்ளும் நிலையில்தான் அவன் இருக்கிறான். ஆனாலும் துணிந்து முக்கிய வேலை ஒன்றை கொடுத்தாள். 

எப்படியும் அவனால் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் செய்து முடிக்க முடியாது, அதிசயமாக அவன் முடித்தாலும் அவள் மேற்பார்வை செய்து விட்டுத்தான் அடுத்த நிலைக்கு அந்த வேலை செல்லும் என்பதால், எடுத்த முடிவு குறித்து அவளுக்கு இரண்டாவது எண்ணமே எழவில்லை. 

வேலை பற்றி அரை மணி நேரம் விளக்கியவள் முடித்த பிறகு தன்னிடம் காண்பிக்க சொன்னாள். 

அவள் சொல்லிக் கொடுத்த படியே அந்த நிறுவன ஊழியர்களின் அந்த மாத சம்பள பட்டியல் அவன்தான் எக்செல் ஷீட்டில் தயாரித்தான். 

எப்படியாவது மாலினியின் இரு புருவங்களையும் மேலே உயர்த்திக் காட்ட வேண்டும் என தனக்குள் உறுதியாக சொல்லிக் கொண்டவன் கவனமாக அந்த வேலையை செய்தான். 

வேலையை முடித்து விட்டு மாலினியிடம் காண்பிக்க, வெளியில் அவளது புருவங்கள் உயரா விட்டாலும் உள்ளுக்குள் வியந்தது என்னவோ உண்மைதான். இதை வேறு யாரும் சொல்லிக் கொடுத்திருந்தால் சிரத்தையாக கவனித்திருப்பானா தெரியாது, அதைப் போல வேறு யாருக்காகவும் செய்ய வேண்டும் என்றாலும் இத்தனை கவனத்தோடு, திருத்தமாக, விரைவாக செய்து முடித்திருப்பானா தெரியாது. 

லேப்டாப் திரையை பார்த்துக் கொண்டே நன்றாக செய்திருப்பதாக தலையை  ஆட்டினாள் மாலினி. 

‘ஏதாவது வாய தொறக்கிறாளா பாரேன்’ என மனதில் சலித்துக் கொண்டான் சஞ்சய். 

“ம்ம்… குட்” போனால் போகிறது என சொன்னாள். 

‘அடிப்பாவி நைட் என் தூக்கத்தை தியாகம் பண்ணி முடிச்ச வேலை, இவ்ளோதான் உன் ரியாக்ஷனா?’ சஞ்சயால் உள்ளுக்குள் கதறாமல் இருக்க முடியவில்லை. 

அக்கவுண்ட்ஸ் பிரிவில் உள்ள அதிகாரிக்கு மெயில் அனுப்ப சொன்னவள் ‘அவ்வளவுதான், நீ போகலாம்’ என்பது போல அவனை பார்த்தாள். 

துணிந்த சஞ்சய், “நான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ஒரு வேலையை சூப்பரா பண்ணியிருக்கேன். அதை கொண்டாட சின்னதா ஒரு ட்ரீட்… பயம் வேணாம் ட்ரீட் நீங்க தர வேணாம், நான் தர்றேன்” என ஆங்கிலத்தில் அவளிடம் சொன்னான். 

இப்போதுதான் மாலினியின் புருவங்கள் உயர்ந்தன. இந்த அலுவலகத்தில் இப்படி யாரும் அவளை அணுகியது இல்லை. 

பக்கத்தில் உள்ள உணவகம் ஒன்றின் பெயரை சொன்னவன், “ஈவ்னிங் சிக்ஸ், ஆஃபிஸ் டைம் முடிஞ்சதும் போலாம்” என்றான். 

அவள் முறைத்தாலும் அந்த முறைப்பில் அத்தனை காரமில்லை. 

மனதில் ‘ஹிப் ஹிப் ஹீரே!’ போட்டுக் கொண்ட சஞ்சய், “ஒரு சஜ்ஜஷன் சொல்லட்டுமா மாலினி?” எனக் கேட்டான். 

வழிகிறானா என பார்த்தாள் அவள். அவன் இயல்பாகத்தான் இருந்தான். அவனது இயல்பே அப்படித்தானே?

மாலினி ஏதும் சொல்வதற்கு முன், “முறைச்சுகிட்டு வேலை சொல்லும் போதே கரெக்ட்டா நடக்குதே, சிரிச்சிட்டே சொன்னா இன்னும் ஸ்பீட்ல வேலை நடக்காது? அதனால அப்பப்போ சிரிக்கலாம்” என்றான். 

‘ஓ அப்படியா!’ என கோவமாக பார்த்தாள். 

“ஹையையோ இப்படி இல்லை சிரிக்கிறது இப்படி…” என அவளுக்கு சிரிக்க சொல்லிக் கொடுத்தான். 

தனது மூக்கை தடவிக் கொடுப்பது போல, சிரிப்பு எழுந்து விடாமல் தன்னை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டாள் மாலினி. 

உற்சாக மனநிலையுடன் தனது இருக்கைக்கு திரும்பி மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தான் சஞ்சய். மனமோ எப்போது மாலை ஆறு மணியாகும் என ஏங்கிக் கொண்டிருந்தது. 

ஒரு மணி நேரத்தில் அவன் முன் ருத்ர ரூபிணியாக வந்து நின்றாள் மாலினி. ஒன்றுமில்லை சஞ்சய் சம்பள பட்டியலை அனுப்ப வேண்டியவருக்கு பதிலாக வேறொருவருக்கு மெயில் செய்திருக்கிறான். 

நூற்றுக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனம்.  அனைவருக்கும் என்ன சம்பளம், போனஸ், இன்செண்டிவ், என்னென்ன பிடித்தங்கள் செய்யப் படுகின்றன என அனைத்து விவரங்களும் மனித வள துறையினால் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும். 

ஊழியர்கள் அவர்களின் நண்பர்கள், உடன் பணி புரிபவர்களிடம் அவர்களாக அந்த விவரங்களை பகிர்ந்து கொள்வது வேறு. ஆனால் ஒட்டு மொத்த ஊழியர்களின் அனைத்து விவரங்களும் அலுவகத்தின் வாயிலாக வெளியிட படுவது என்பது வேறு இல்லையா?

மாலினி மெயில் செய்ய சொல்லியிருந்த நபரின் இணைய முகவரியும் சஞ்சய் மெயில் செய்திருந்த நபரின் இணைய முகவரியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. இரவில் சரியாக அவன் உறங்கியிருக்கவில்லை, மேற்கொண்டு வேலையை சரியாக செய்து விட்டோம் என ஒரு மெத்தனப் போக்கும் அவனிடம் இருந்திருக்க பிசகு செய்து விட்டான். 

அவன் அனுப்பி வைத்த நபருக்கும் மாலினிக்கும் முன்னரே ஏதோ மனஸ்தாபம் இருக்க, அதை மேலிடம் வரை கொண்டு சென்று விட்டார். 

தவறு செய்தவன் சஞ்சய் என்றாலும் பொறுப்பு மாலினிதான். வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்காத ஒருவனிடம் எப்படி இந்த வேலையை கொடுத்தாய் என மாலினிக்கு ஒரே டோஸ் மழை. 

இன்னும் கூட பிரச்சனை முடிந்திருக்கவில்லை. நேரில் போய் பார்த்துதான் தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் மாலினி. அந்த கோவத்தை அப்படியே சஞ்சயிடம் காண்பித்து விட்டாள். 

சற்று முன் அவன் அவளுக்கு ட்ரீட் தருகிறேன் என சொன்னதை குறிப்பிட்டு, பெண்கள் பின்னால் அலைய வேண்டும் என்றால் எதற்காக வேலைக்கு வந்தாய்? அதற்கென இடங்கள் இருக்கிறது அங்கு போ என நாகரீகமான ஆங்கில சொற்கள் கொண்டு சொல்லி அவனை மிகவும் கீழாக உணர வைத்து விட்டாள். 

வாழ்க்கையில் முதல் முறையாக சஞ்சய்  மிக மோசமாக கலங்கிப் போன தருணம். 

அவன் செய்தது தவறுதான், அதற்காக இந்த வார்த்தைகள் மிகவும் அதிகம் இல்லையா? மாலினி சென்று விட்டாள், அருகிலிருந்த மற்ற ஊழியர்கள் அவனை இமை மூடாமல் பார்த்து அமர்ந்திருந்தனர். 

யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை அவனால். மதிய உணவு இடைவேளைக்கான நேரம் நெருங்கியிருந்தது. வேகமாக அலுவலகத்திலிருந்து வெளியேறியவன் எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்றே அவனுக்கு தெரியவில்லை. 

அரை நாள் விடுப்புக்கான அனுமதி கூட பெற்றிருக்கவில்லை. 

‘இதெல்லாம் உனக்கு தேவையாடா?’ என தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டான். சாப்பிடாமல் ஆடை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே படுக்கையில் குப்புற படுத்து விட்டான். 

நல்ல மன அலட்டல். மனம் அம்மாவின் மடியையும் அக்காக்களின் தலை கோதலையும் அண்ணனின் அரவணைப்பையும் தேடியது. 

அப்பா அழைக்கா விட்டால் என்ன? கண்டவர்கள் கண்ட படி பேசும் போது பெற்று வளர்த்தவருக்கு என்னை பேச உரிமை இல்லையா? என அறிவு எடுத்துக் கூற, தன் வீட்டுக்கு திரும்புவது என முடிவு செய்து விட்டான் சஞ்சய். 

அப்படி முடிவு செய்த பிறகுதான் அவன் சற்றே நிலைக்கு வந்தான். சஞ்சய் வேலையில் சேர்ந்த போதே தன்னுடைய இரண்டு சான்றிதழ்களை அலுவலகத்தில் ஒப்படைத்திருந்தான். இரண்டு மாத நோட்டீஸ் பீரியட் இருக்கிறது. இவன் இன்னும் தகுதிகாண் காலத்தில்(probation period) இருக்கிறான்.

இப்போது வேலையை விட்டுச் செல்ல என்ன நடைமுறை என அவனுக்கு தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இனி அந்த மாலினியின் முகத்தில் விழிப்பதில்லை என்பதில் மட்டும் மிகவும் உறுதியாக இருந்தான். 

இப்போதைக்கு இன்று மதியத்துக்கும் நாளைக்குமாக சேர்த்து விடுப்பு எடுப்பதாக மெயில் செய்து விட்டு சாப்பிட வெளியில் சென்றான். 

இரவில் அம்மாவுடன் பேசினாலும் நடந்த எதையும் அவரிடம் அவன் சொல்லியிருக்கவில்லை. மனதை கொஞ்சம் தயார் படுத்திக் கொண்டு அப்பாவிடமே பேசி அவருடன் சமாதானமாகி விட்டே ஊருக்கு திரும்பலாம் என இருந்தான். 

ஆனால் மனதில் அந்த நிகழ்வு பாரமாக இருக்க, மீராவுக்கு அழைத்து எல்லாம் சொன்னான். அவளுக்கு வருத்தமாகி விட்டது. 

“நீங்க பண்ணினது தப்புதான் அதுக்காக அப்படியா சொல்வாங்க? ஆனா நீங்க அப்படி இல்லைங்கும் போது அவங்க சொன்னதை பெருசா எடுத்துக்காதீங்க” என ஆறுதல் சொன்னாள். 

“நீ ஈஸியா சொல்லிட்ட மீரா. ப்ச் இப்படிலாம் யாரும் என்னை சொன்னது இல்லை. நீ சொல்லு நான் அப்படி இல்லைதானே?”

“கண்டிப்பா இல்லை” 

“நிஜமா?”

“அவங்கள விட எனக்குத்தான் உங்களை நல்லா தெரியும் சஞ்சய். இதையெல்லாம் உங்கள நீங்க பாதிக்க விடக்கூடாது”

“ம்ம்… ஆனா இனி அவ மூஞ்ச பார்த்துகிட்டு வேலை செய்ய முடியும்னு தோணல” என அவன் சொல்ல, மீராவுக்கு அதிர்ச்சிதான். 

தான் முடிவு செய்து வைத்திருப்பதையும் சொன்னான். இதே ஊரில் சஞ்சய் இருக்கிறான் என்பதே மீராவுக்கு அத்தனை தைரியத்தை கொடுத்தது. அவன் போக போகிறான் என்றதும் சட்டென பயமும் வருத்தமும் ஏற்பட்டு விட, அமைதியாகி விட்டாள் அவள். 

ஆனால் தனக்காக அவனை இங்கேயே இருக்க சொல்வதும் சரி கிடையாதே. வசதியான வீட்டுப் பிள்ளை இங்கே மிகவும் சிரம படுகிறான், அவனுடைய வீட்டுக்கே அவன் திரும்புவதுதான் சரியாக இருக்கும் என யோசித்தவள், வேலையை தொடர சொல்லி வலியுறுத்தவே இல்லை. 

“ப்ச் இந்த ஊரே பிடிக்கல மீரா. எனக்கு எங்கம்மாகிட்ட போகணும் போல இருக்கு” என சிறு குழந்தை போல சொன்னான் சஞ்சய். அவளுக்கு இரக்கமாகி விட்டது. அப்படியே தன் அம்மாவின் நினைவும் வந்து அவளையும் லேசாக கலங்கச் செய்தது. 

மூச்சை நன்றாக இழுத்து விட்டு கொண்டவள், “மிஞ்சி போனா ஒன் வீக், இங்க எல்லா ப்ரொசீஜரும் செய்திட்டு நல்ல விதமா ரிலீவ் ஆகி உங்கம்மாகிட்டேயே போங்க சஞ்சய்” என்றாள். 

“ம்ம்…” என்றவனுக்கு மனம் இப்போது ஓரளவு நன்றாக இருந்தது. 

“தேங்க்ஸ் மீரா, உன்கிட்ட பேசினதும் பெட்டரா ஃபீல் பண்றேன்” என சாந்தமாக சொன்னவன், “அந்த மாலினி இருக்காளே…” என பற்களை கடித்தான். 

“உங்களை தொந்தரவு பண்ற விஷயத்தை பத்தியே நினைக்காம வேற ஏதாவது செய்யுங்க. நீங்கதான் நிறைய மொபைல் கேம்ஸ் விளையாடுவீங்களே, விளையாடுங்க” என்றாள். 

“ப்ச் மூட் இல்லை மீரா. நான் ஒரு ரைட் போக போறேன்” 

“இந்த நேரத்துலயா?”

“ம்ம்…”

“போயே ஆகணுமா?” 

“ஜஸ்ட் ஒன் ஹவர்ல திரும்பிடுவேன்”

“திரும்ப வீட்டுக்கு வந்ததும் ஒரு மெசேஜ் மட்டும் போடுறீங்களா?”

“அவ்ளோலாம் பயப்படாத, பத்திரமா வந்திடுவேன் நான், வந்ததும் கண்டிப்பா உனக்கு மெசேஜ் பண்றேன்” என்றவன் அடுத்த பத்து நிமிடங்களில் பைக்கில் பறந்திருந்தான்.