அடுத்த நாள் மீராவுடைய ஆதார், பான் புதிதாக பெற என்ன நடைமுறை என பார்த்து இணைய நிறுவனம் ஒன்றுக்கு சென்று அதை செய்தனர். புதிய அடையாள அட்டை எல்லாம் அவளது வீட்டு முகவரிக்குத்தான் செல்லும். கார்த்திகேயனிடம் யோசனை கேட்க, அஞ்சல் அலுவலகத்தில் அவருக்கு தெரிந்தவர் இருப்பதால் அவரிடம் வீட்டில் கொடுக்க வேண்டாம், தபால் வரும் போது அவருக்கு தெரிய படுத்த சொல்லி விடுவதாக கூறி விட்டார்.

மீராவுக்கு புதிய கைப்பேசியும் தன்னுடைய அடையாள அட்டையை பயன்படுத்தி புதிய சிம் கார்டும் வாங்கிக் கொடுத்தான் சஞ்சய்.

இதுவரை சஞ்சய் தனக்கு செய்த செலவுகளை மனதில் கணக்கிட்டு பார்த்தவளுக்கு சங்கடமாக இருந்தது. தன்னுடைய கவனமின்மையால்தான் இப்படியெல்லாம் ஆகி விட்டது என தன்னை தானே நொந்து கொண்டாள்.

அவளது முகம் கலங்கியிருப்பதை அவனும் கவனித்தான். வந்த வேலைகள் முடியவும் அறைக்கு திரும்பத்தான் திட்டமிட்டிருந்தனர். இப்போது அவளின் மனநிலையை மாற்ற எண்ணி உணவகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றான்.

“ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டு ரூம் போலாம்” என அவள் மறுக்க முடியாத படி சொன்னான்.

அவனே ஆர்டர் செய்யட்டும் என அமர்ந்திருந்தாள் மீரா. சாட் வகைகளும் ஐஸ்கிரீமும் ஆர்டர் செய்தான்.

“எனக்கு வேலை கிடைச்சதும் நீங்க செலவு பண்றதையெல்லாம் மறுக்காம வாங்கிக்கணும்” என்றாள் மீரா.

“அதுக்கென்ன வட்டி போட்டு வாங்கிக்கிறேன்” என அவன் சொல்லவும் புன்னகை செய்தாள்.

“இப்போதான் பழைய ஸ்மைல் வந்திருக்கு உன்கிட்ட” என அவன் சொல்லவும் முகம் சுருக்கினாள்.

“ஹப்பா! தப்பா இல்லை. ட்ரெயின்லேயே உன்னை கவனிச்சேன், ரொம்ப சோகமா இருந்த. ஃபர்ஸ்ட் டைம் ஹாஸ்பிடல்ல உன்னை பார்த்தப்போ ரொம்ப க்யூட்டா இருந்தது உன் சிரிப்பு, அது இப்போதான் மீண்டிருக்குன்னு சொன்னேன்”

“ம்ம்…” என்றாள்.

“என்ன டோன் சரியில்லை! என்னாச்சு?”

மீராவுக்கும் மனதில் வைத்திருக்க முடியவில்லை. மருத்துவமனையில் இவள் அவனையே பார்ப்பதாகவும் நேரம் கிடைத்திருந்தால் இவளிடம் பேசி சினிமா பீச் என சுற்றிக் கொண்டிருப்பேன் எனவும் ஹரிஷின் காதலியிடம் சொன்னதை தான் கேட்டு விட்டதாக சொன்னாள்.

நொடி நேரம் திகைத்து பார்த்தவன் சத்தமாக சிரித்தான். அவள் கண்டனமாக பார்க்க சிரிப்பை நிறுத்தியவன், “ஹ்ம்ம்… அப்போ விட்டத இப்போ பிடிச்சிட்டேன் பார். சினிமா பீச் இல்லைன்னாலும் அதை தாண்டி போயிட்டேன்தானே நான்?” என குறும்பாக கேட்டான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டாள்.

“ஹேய் கூல்! என் வயசு பசங்க அப்படித்தானே பேசுவாங்க. அஃப்கோர்ஸ் ஹாஸ்பிடல்ல உன்னை சைட் அடிச்சேன், அழகான பொண்ணுங்களை என் வயசு பசங்க பார்க்கலைனா தெய்வ குத்தம் ஆகிடும் மீரா”

“போதும் வேற ஏதாச்சும் பேசுங்க” என கண்டிப்போடு சொன்னாள்.

“அது நீ யார் என்னன்னு தெரியாதப்போ மீரா. இப்போ நீ என்னை நம்பி என் கூட இருக்க. நான் ஸ்ரேயாகிட்ட சொன்னதை எல்லாம் மறந்து போயிடு”

“யார் ஸ்ரேயா?”

“ஹரிஷோட வைஃப்”

“ஓ அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்களா?”

“கார்ல அழைச்சிட்டு போனேனா? ஸ்ரேயாவோட அப்பா சென்னைல பிக் ஷாட், சீக்கிரம் ஸ்டேட் பார்டரை தாண்டி போயிடணும்னு ஸ்பீடா டிரைவ் பண்ணித்தான் போனேன். கொஞ்சம் விட்ருந்தா ஆந்திரா பார்டர்க்குள்ள நுழைஞ்சிருப்பேன். அப்ப வந்து குறுக்கால வந்து நின்னு மடக்கி பிடிச்சிட்டாங்க” என்றான்.

“ஐயோ!” என மீரா அதிர, ஆர்டர் செய்திருந்தவை வந்து விட்டன.

“நீ பயப்படற அளவுக்கு ஒன்னுமில்ல, இந்தளவு வந்திட்டாங்களேன்னு ரெண்டு பேர் வீட்லேயும் ஒத்துகிட்டு அவங்களே மேரேஜ் பண்ணி வச்சிட்டாங்க”

“அதை முன்னாடியே செய்திருக்கலாம்”

“ம்ம்… இவ்ளோ சீரியஸா இருப்பாங்கன்னு நினைக்கலையாம். அந்த ரெண்டு பேரையும் கூட தப்பு சொல்லணும். சதா சர்வ காலமும் ஏதாச்சும் சண்டை போட்டுக்கிட்டே இருந்தாங்க. ரிலேஷன்ஷிப் நல்லா போகும்னு அவங்களுக்கே நம்பிக்கை இல்லை.. பிரேக் அப் னு பிரிஞ்சு, அந்த பொண்ணுக்கு எங்கேஜ்மென்ட் டேட் ஃபிக்ஸ் ஆகி அது தெரிஞ்சு இவன் சாக துணிஞ்சு… கூட இருந்த எங்களையும் படுத்தி வச்சிட்டாங்க” என கதை சொன்னான்.

“லவ் பண்ணும் போதே ஹஸ்பண்ட் வைஃபா ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க போல. அதான் அப்பவே சண்டையெல்லாம் வந்திருக்கு” என்றாள் மீரா.

“அதென்ன ஹஸ்பண்ட் வைஃப்னா சண்டை வந்துட்டே இருக்கணுமா என்ன? என் அம்மாப்பா சண்டை போட்டு நான் பார்த்ததே இல்லை. நானும் என் வைஃப் கூட சண்டை போட மாட்டேன். நீ எப்படி?”

“அதெல்லாம் நான் யோசிச்சது இல்லை. நீங்க விட்ட கதையை சொல்லி முடிங்க”

“ம்ம்… அந்த ரெண்டுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு நான் நிறைய ஸ்டண்ட் பண்ணிட்டேன். அதுல என் கார் நிறைய அடி வாங்கிருச்சு. அது என் அப்பா வாங்கி கொடுத்தது வேறயா. ரொம்ப திட்டிட்டார், இன்சூரன்ஸ்தான் இருக்கே கிளைம் பண்ணிக்கிட்டா போச்சுன்னு சொன்னேன். அவ்ளோதான்… அப்பா மேல ஏதோ கெட்ட ஆவி பூந்திடுச்சு, என்னை வச்சு செஞ்சிட்டார். உன்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு பப்…ப்…பி ஷேமா திட்டிட்டார்” என அவன் ‘பப்பி’ என்ற வார்த்தையை அழுத்தி சொன்ன விதத்தில், அழகாக சிரித்தாள் அவள்.

“நான் பொறக்கும் போது எங்கப்பாக்கு நாப்பத்தி நாலு வயசு, என் அம்மாக்கு முப்பத்தி ஏழு. நான் ஸ்கூல் போனப்போ என் அண்ணன் காலேஜ் போயிட்டார்னா பார்த்துக்க. எனக்கு வீட்ல செல்லம் ஜாஸ்தி, நீயே சொல்லு மீரா, நானா அவங்கள எனக்கு செல்லம் கொடுத்து வளக்க சொன்னேன்?” என அவன் கேட்க, இல்லை என தலையாட்டினாள் அவள்.

“ம்ம்… அவங்க இஷ்டத்துக்கு என்னை வளத்து விட்டுட்டு இப்போ வந்து பொறுப்பு இல்லை பருப்பு மிஸ்ஸிங் அப்படினு எங்கப்பா டயலாக் பேசினா நான் என்ன பண்றது? அந்த பொறுப்பு எங்க இருந்தாலும் அதை தேடி கண்டுபிடிச்சி என்ன விலை கொடுத்தும் டன் கணக்குல வாங்கி வச்சுக்கிட்டுதான் அவர் முன்னாடி போய் நிப்பேன்னு சபதம் பண்ணிட்டு வந்திருக்கேன்” என அவன் சொல்லவும் வாய் விட்டே சிரித்தாள் அவள்.

“என்ன, என்னால முடியாதுன்னு நினைக்கிறியா?” அவளை சந்தேகமாக பார்த்துக் கொண்டு கேட்டான்.

“சேச்ச… நீங்க நல்லவர், சீக்கிரம் உங்கப்பாவோட போட்ருக்க சண்டை சரியாகிடும்” என்றாள்.

கொஞ்சம் அவளையும் பேச வைத்தான். அவளாக எதையும் சொல்லவில்லை, இவன் கேள்விகளாக கேட்டு கேட்டே எங்கு படித்தாள், வேலையில் எவ்வளவு மாத அனுபவம் எல்லாம் அறிந்து கொண்டான்.

மீரா அறைக்கு திரும்பிய போது சற்றே இலகுவான மன நிலையில் இருந்தாள். உபயம் சஞ்சய்தான்.

இரண்டு நாட்களில் பெரிய மருத்துவமனை ஒன்றில் மீராவுக்கு செவிலியர் பணிக்கு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டான் ரித்தேஷ். நேர்காணலில் தேர்வாக வேண்டும்தான், ஆனால் அது வெறும் கண் துடைப்பு, சிபாரிசு செய்தாகி விட்டது எனவும் சொல்லியிருந்தான்.

ஆனாலும் நேர்காணலுக்கு என தன்னை முழுதும் தயார் செய்து கொண்டாள்.  சஞ்சயும் அவளுடன் கிளம்பினான்.

“உங்களுக்கு ஏன் சிரமம், நான் பார்த்துக்கிறேன்” என்றாள் மீரா.

“எனக்கு பிடிக்காத ஒன்னுன்னா தனியா இருக்கிறதுதான். எனக்கும் கொல்கத்தாலேயே வேலை கிடைச்சிட்டா நானும் இங்கதான் இருப்பேன். நீ ஒர்க் பண்ற இடத்தை நேர்ல பார்த்து வச்சுக்கிட்டா பின்னாடி யூஸ் ஆகும்” என இரண்டு கண்களையும் சிமிட்டி  சொன்னான்.