சஞ்சயும் மீராவும் எடுத்த முடிவில் கார்த்திகேயனுக்கும் ஐஸக்கிற்கும் அத்தனை மகிழ்ச்சி. முதலில் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்கி, ‘அப்பாடா!’ என்பது போல பார்த்தனர்.
வீரராகவன் இப்படி தான் நினைத்தது எல்லாம் தலைகீழாக மாறிப் போகும் என எதிர்பார்க்கவில்லை. இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தவர் கைகளை கோர்த்தும் பிரித்தும் ஏதோ யோசனையில் இருந்தார். அடுத்து என்ன செய்வது என்பது போல அப்பாவை பார்த்தான் பிரவீண்.
“கை புடிச்சு தூக்கி நிறுத்த கடைசி சான்ஸ் கொடுத்தேன் உன் தம்பிக்கு, நம்மள மதிக்கலைல… பட்டு திருந்தட்டும்” என்றார் வீரராகவன்.
பிரவீணுக்கு மனம் கேட்கவில்லை. தம்பிக்கு ஆதரவாக பேசப் போனவனை அப்பாவின் கடுமையான பார்வை வாயை மூடிக் கொள்ளச் செய்து விட்டது.
இனி இங்கிருப்பதில் அர்த்தமில்லை என மூத்த மகனுடன் வெளியேறி விட்டார் வீரராகவன். சஞ்சயிடம் மட்டுமின்றி யாரிடமும் ஏதும் சொல்லிக் கொள்ளாமலே அவர்கள் கிளம்பிப் போனதில் மீராவுக்கு மிகுந்த வருத்தம். கார்த்திகேயன் ஸார் என்ன உங்களுக்கு வேலையாளா, அவரை கூட மதிக்காமல் செல்கிறார்களே என என சஞ்சய்க்கு கோவம்.
அப்படி அவரை அவமதிக்கும் எண்ணம் அவர்களிடம் இல்லை. இருந்த மனக் குழப்பத்திலும் கோவத்திலும் அப்படியாகி விட்டது.
சுபாவால் மகளின் முடிவை வேண்டாம் எனவும் சொல்ல முடியவில்லை, அதே சமயம் முழு மனதாகவும் ஏற்க முடியவில்லை. கார்த்திகேயன்தான் சஞ்சய் பற்றி நல்ல விதமாக சொல்லி, “நீங்களும் சப்போர்ட் பண்ணலைனா இவங்க இன்னும் வருந்த மாட்டாங்களா?” எனக் கேட்டார்.
“உங்களுக்குத்தான் தெரியுமே ஸார், எம்பொண்ணுக்காகத்தான் நான் வாழுறதே. அவ நல்லாருப்பான்னா எனக்கு கவலை இல்லை. அவங்க வீட்ல வேற பிரச்சனை ஏதும் செய்ய மாட்டாங்களே” என பயத்துடன் கேட்டார் சுபா.
“சேச்ச அப்படிலாம் ஏதும் நடக்காது” என உறுதியாக சொன்னார் கார்த்திகேயன்.
“என் வீட்லேருந்து இவ்ளோ தூரம் கூப்பிட்டும் நான் மீராவை விடலைதானே? நல்லா பார்த்துப்பேன் ஆன்ட்டி” என சஞ்சயும் அவரை தைரியப் படுத்தினான்.
சுபாவை தங்களுடனே இருக்க சொல்லியும் கேட்டான் சஞ்சய். மகன் சிறையில் இருக்க, மருமகளும் பேரனும் தனியாக இருப்பதை சுட்டிக் காண்பித்து, தான் அங்கு இருக்க வேண்டிய அவசியத்தை சொல்லவும் சஞ்சய் மேலும் வற்புறுத்தவில்லை.
மதிய சாப்பாடு வீட்டிலேயே செய்யப் போனாள் மீரா. வேண்டாம் என சொல்லி விட்டார் கார்த்திகேயன். கடையிலிருந்து உணவு வாங்கி கொடுத்து விட்டு சென்றார் ஐஸக்.
சாப்பிட்டு முடிக்கவும் சஞ்சயுடன் வெளியில் பேசிக் கொண்டிருந்தார் கார்த்திகேயன்.
“உங்கப்பா கோவத்துல பேசிட்டு போயிருக்கார் டா. நீ நல்லா வாழ்ந்து காட்டினா அவரை விட சந்தோஷ படறவங்க யார் இருக்க முடியும்? உன் விளையாட்டு தனத்தை விட்டுட்டு பொறுப்பா இருக்கணும். எந்த ஹெல்ப்னாலும் என்கிட்ட தயங்காம கேளு, என்னால முடிஞ்சத செய்வேன். நல்லா வரணும் நீ” என்றார்.
அவரை அணைத்துக் கொண்டான் சஞ்சய். தட்டிக் கொடுத்தவர், “ப்ரவுட் ஆஃப் யூ டா சஞ்சு. எந்த பணமும் செல்லமும் உனக்குள்ள அரகன்ஸ் வர வச்சிடல. ஸ்கூல் படிக்கிறப்ப உன்கிட்ட நான் பார்த்த அந்த இன்னொசன்ஸும் மனசாட்சிக்கு பயப்படற குணமும் இன்னும் அப்படியே இருக்கு. அது எப்பவும் உன் கூடவே இருக்கட்டும்” என்றார்.
“ஸாரி ஸார்” என்றவனை எதற்கு என்பது போல பார்த்தார்.
“மீராவை அழைச்சிட்டு போக போறீங்கன்னு உங்களை மனசுக்குள்ள நிறைய திட்டிட்டேன், அதுக்கு” என்றான் சஞ்சய்.
“இவ்ளோ வெளிப்படையா இருக்க வேணாம்டா” என்றார் அவர்.
சிநேகமாக சிரித்தவன், “தேங்க்ஸ் ஸார்” என்றான்.
“இது எதுக்கு?” வில்லங்கமாக ஏதோ சொல்வான் எனத் தெரிந்தே கடுப்புடன் கேட்டார்.
“மீராவை கொல்கத்தா அனுப்பி வச்சதுக்கு. இல்லைனா எனக்கு கல்யாணம் ஆகியிருக்குமா?” என்றான்.
இடுப்பில் கை வைத்து முறைத்தவர், “ம்ம்… அந்த ராஜசேகரன், மீராவோட அண்ணன் எல்லாருக்கும் கூட தேங்க்ஸ் சொல்லிடு” என்றார்.
“ஸார்… அந்த ராஜசேகரனை சும்மா விடக்கூடாது”
“ஏற்கனவே எம் எல் ஏ’கிட்ட உன் அண்ணன் சொல்லி வச்சிட்டார். அந்த பிரச்சனைக்குள்ள எல்லாம் நீ போக வேணாம்”
“மீராவோட அண்ணன் விஷயம்?”
“நேத்து உன் அண்ணன் வெளில எடுக்கறேன்னு சொன்னார்தான். இப்போ என்ன பண்ணுவாருன்னு தெரியல. நீ விடுறா, உள்ள கொஞ்ச நாள் இருந்திட்டு வரட்டும், பொறுமையா ஏதாவது செய்யலாம்” என அவர் சொல்ல, சஞ்சயும் சரிதான் என விட்டு விட்டான்.
நீரஜாவுக்கு அழைத்து எல்லாம் சொன்னார் கார்த்திகேயன். அவளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. மீராவுக்கும் சஞ்சய்க்கும் கைப்பேசி வாயிலாகவே வாழ்த்து சொல்லி அறிவுரையும் வழங்கினாள்.
மீராவின் சம்பளத்தை சுபாவுக்கு அனுப்பி வைத்து விடுவதாக அப்போதே கார்த்திகேயனிடம் சொல்லி விட்டான் சஞ்சய்.
“ஆமாம் அவங்களுக்கு தேவைப்படும்தான். அதுக்காக இங்க நீ ஏதும் சிரமம்னா அவஸ்தை படாத, எனக்கு சொல்லு” என்ற கார்த்திகேயனை இன்னொரு முறை கட்டியணைத்து விட்டான் சஞ்சய்.
“டேய் டேய் போதும். நல்ல வேளைக்கு உன்னை மாதிரி ஒரே ஒரு ஸ்டூடண்ட்தான் எனக்கு. உன் புண்ணியத்துல கொல்கத்தாவை பார்த்திட்டேன். நிறைய பேர் இருந்திருந்தா நாட்டோட இண்டு இடுக்கெல்லாம் சுத்தி வர வேண்டியதா இருந்திருக்கும்”
“கவலை படாதீங்க ஸார். இன்னும் நான் உங்க ஸ்டூடண்ட்தான். உங்க மனக் குறையை தீர்த்து வைக்கிறேன்” என்றவனின் தோளில் சற்று வலிக்கும் படியே இரண்டு அடிகள் வைத்தார் கார்த்திகேயன்.
வரும் போது வீரராகவன் தயவில் விமானத்தில் வந்து விட்டனர். இப்போது தன் சொந்த செலவில்தான் கார்த்திகேயன் பயணிக்க வேண்டும். இரயில் பயணம் என்றால் ஊர் செல்ல இரண்டு நாட்களாகி விடும் என்பதால் இப்போதும் விமானத்திற்கே டிக்கெட் போட்டார்.
தன் அக்கவுண்டில் இருந்த மொத்தத்தையும் வழித்து அவருக்கு அனுப்பி வைத்து விட்டான் சஞ்சய். தான் பார்த்துக் கொள்வதாக அவர் சொல்லியும் அவன் கேட்கவில்லை. அவரே செலவு செய்ய அவரது சொந்த வேலையாக ஒன்றும் வரவில்லையே? மாத சம்பளக்காரருக்கு திடீர் விமான பயணம் எல்லாம் சிரமம் என நினைத்தான், அத்தோடு மீராவின் அம்மாவுக்கும் அவரை செலவு செய்ய சொல்வது சரியாக இருக்காது என்பதால் அப்படி செய்தான்.
சஞ்சயின் கையிருப்பு பற்றியெல்லாம் கார்த்திகேயனுக்கு தெரியாது, ஆகவே சரிதான் என விட்டு விட்டார்.
ஆனால் கார்த்திகேயனுக்கு அழைத்து டிக்கெட் எப்போது போடட்டும் என மறக்காமல் கேட்டான் பிரவீண். ஏற்கனவே போட்டாகிவிட்டது, சஞ்சய் பணம் கொடுத்தான் என இவரும் அவனுக்கு விவரம் சொன்னார்.
உயர்தர விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த வீரராகவன் என்னவென மகனை பார்த்தார்.
அவன் சொல்ல, “இடியட், வள்ளல்னு நினைப்பு அவனுக்கு. ஏன் அழைச்சிட்டு வந்த நமக்கு கொண்டு போய் விடத் தெரியாதா?” என கோவப் பட்டார்.
“ப்பா… நாம அவனை விட்டுட்டுத்தான் போறோமா? கொஞ்சம் யோசிங்களேன், அந்த பொண்ணு நல்ல பொண்ணாதான் இருக்கு. இல்லை வேணாம்னு நீங்களும் அம்மாவும் நினைச்சாலும் சஞ்சயை மட்டும் வேற வகைல கூட்டிட்டு போலாமே ப்பா” என்றான் பிரவீண்.
“டான் மாதிரி பேசாதடா. அவனை கடத்திட்டு போய் ரூம்ல பூட்டி வைப்பியா? அந்த பொண்ணுக்காகவும் யோசிச்சுதானே எல்லாம் பிளான் பண்ணினேன்? அதி புத்திசாலியாட்டம் அவன் கூடவே இருக்கேன்னு சொல்லிடுச்சு. மேலோட்டமா பார்த்தா உன் தம்பி நல்லவன்தான், அந்த நல்லவன் கூட குடும்பம் பண்ணி பார்த்தாதான் கஷ்ட நஷ்டம் என்னன்னு அந்தப் பொண்ணுக்கும் புரிய வரும். அவனோட சமாளிச்சு பார்க்கட்டும், அப்போ நமக்கு தெரியும் மீரா நல்ல பொண்ணா அவனுக்கு ஏத்த பொண்ணான்னு”