நீ ஒருத்தன்தான் புள்ளையா எனக்கு? போய்த் தொலைன்னு தலை முழுக எவ்ளோ நேரம் ஆகும்னு நினைக்கிற? பெத்து தொலைச்சிட்டோமேன்னு நீ இழுத்து வைக்கிற ஒவ்வொரு பிரச்சனையையும் சரி பண்ணிட்டு இருக்கேன், ஸ்கூல், காலேஜ், ஃப்ரெண்ட்ஸோட வெளில போற வர்ற இடம், வேலை பார்க்கிற இடம்னு எங்க நீ பிராப்லம்ஸ் கிரியேட் பண்ணாம இருந்திருக்க? எல்லாத்திலேருந்தும் காப்பாத்தி விட மட்டும் இந்த அப்பன் வேணும்.

அறுபத்தெட்டு வயசுல உனக்காக அடிச்சி புடிச்சு இவ்ளோ தூரம் ரெண்டாவது தடவையா ஓடி வந்திருக்கேன். இந்த அப்பா பெருசில்ல உனக்கு. கண்ணுக்குள்ள பொத்தி வச்சு வளத்த அம்மா பெருசில்ல. உன் நல்லதுக்கு ஒன்னு சொன்னா என்னையவே எதிர்த்துகிட்டு எகிரி எகிரி பேசுற. ஏன் பொறுமையா போறேன் தெரியுமா? என் பொண்டாட்டிக்காக. ரொம்ப ஈஸியா உன் அம்மாவையே விட்டு கொடுத்து பேசுவியா நீ?” என ஆடித் தீர்த்து விட்டார் வீரராகவன்.

சஞ்சய் அவமானத்தால் கூனி குறுக, மற்றவர்கள் திகைத்துப் போய் நின்றனர்.

அப்பாவின் கையை பிடித்து, “காம் டவுன் ப்பா” என்றான் பிரவீண்.

சின்ன மகனை பார்க்க விரும்பாத வீரராகவன், அறைக்கு சென்று அமர்ந்து விட்டார்.

மிகவும் பயந்து போயிருந்த சுபா, “இந்த வம்பெல்லாம் நமக்கு வேணாம் மீரா. நாம கார்த்தி ஸார் கூட கிளம்பலாம்டி” என மகளிடம் சொன்னார்.

சஞ்சயை பார்த்தாள் மீரா.

“போ… போயிடு மீரா. நான் எதுக்கும் லாயக்கு இல்லை. உன்னை பார்த்துக்க தெரியாது, ஏன் என்னையவே பார்த்துக்க தெரியாது. இவங்கல்லாம் சேர்ந்து உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுப்பாங்க, போ” என இரைந்தான் சஞ்சய்.

மீரா அசையாமல் அவனையே பார்க்க, தளர்ந்து போனவனாக அமர்ந்து விட்டான்.

“டேய் இவ்ளோ எமோஷனல் ஆகாத” என ஆறுதலாக சொன்னார் கார்த்திகேயன்.

“இப்பன்னு இல்லை ஸார், முன்னாடி கூட இவரு எவ்ளோ கேவலமா பேசினார் தெரியுமா ஸார்? உங்களுக்கு தெரியாது. என்னை இன்னார் பையன்னு சொன்னாதான் எந்த பொண்ணும் கட்டும்னு சொன்னார். என்னை எனக்காக கல்யாணம் பண்ணிகிட்டவ மீரா. பைரவ் தாதா வீட்டுல வச்சு எம்மேல நம்பிக்கை இருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன் அவகிட்ட. என் பேக் கிரவுண்ட் எதுவும் தெரியாது அவளுக்கு. அப்படி நம்பி வந்தவள எப்படி விடுவேன் ஸார் நான்? என்னால நிம்மதியா தூங்க முடியாது ஸார்.

வெறும் சடங்குன்னு ஈஸியா சொல்றீங்க, மனசால அவளை யாரோவா பார்க்கல நான். மீராதான் என் வைஃப்னு ஆழ பதிஞ்சு போச்சு ஸார், எப்படி மறக்க முடியும், எப்படி மாத்திக்க முடியும்? கடைசில நானே என்னை கேவலமா அசிங்கமா நினைக்கிற அளவுக்கு கொண்டு வந்திட்டாங்க ஸார். அழைச்சிட்டு போங்க ஸார் அவளை” என்றான் சஞ்சய்.

 அப்படி அவனை பார்க்க சகிக்காமல் பெரு மூச்சுடன் முகத்தை திருப்பிக் கொண்டார் ஐஸக்.

கார்த்திகேயனுக்கும் உள்ளுக்குள் உடைய சஞ்சயின் தோளில் தட்டிக் கொடுத்தவர், தன் மன இறுக்கத்தை குறைக்க எழுந்து போய் ஜன்னலோரம் நின்று கொண்டார்.

“என்னவோ ஸார்… ரெண்டு பெரும் வாழறத ரெண்டு நாளாதான் பார்க்கிறேன். அதுக்கு முன்னாடி கூட ஒருத்தருக்கு ஒன்னுன்னா இன்னொருத்தர் துடிச்சி போவாங்க. கண்ணுக்கும் மனசுக்கும் நிறைவா இருந்த ஜோடி, நானெல்லாம் அடுத்த வேளை கஞ்சிக்கு காசில்லாம கல்யாணம் பண்ணிகிட்டவன், புள்ள குட்டி பெத்து வாழாம போயிட்டேனா என்ன? ஏன் இவங்க புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க?” என ஆதங்கமாக கார்த்திகேயனிடம் கேட்டார் ஐஸக்.

“ப்ச் யாரை குத்தம் சொல்லன்னே தெரியலைங்க. எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கிற பையன். இப்படி உடைஞ்சு பேசி இன்னிக்குத்தான் பார்க்கிறேன்” என கார்த்திகேயனும் வருத்தப்பட்டார்.

“சின்ன பையன்தானே ஸார். அம்மாகிட்ட போயிட்டா நல்லாகிடுவாப்ல” என்றார் ஐஸக்.

“ஆமாம்ங்க. மீராவுக்கும் இனி பிரச்சனை இல்லை. கொஞ்ச நாள் போனா ரெண்டு பேரும் நார்மல் ஆகிடுவாங்க” என்றார் கார்த்திகேயன்.

தம்பியை அப்படியே விட்டு அவனுடைய முக்கியமான பொருட்களை  மட்டும் பேக் செய்யலாம் என அறைக்குள் சென்றான் பிரவீண்.

“என்னவாம்டா?” ஹாலில் இருந்த சஞ்சயை பார்த்துக் கொண்டே பெரிய மகனிடம் கேட்டார் வீரராகவன்.

“ஃபீல் பண்றான்ப்பா. இவ்ளோ ஹார்ஷா பேசியிருக்க வேணாம் நீங்க. முதல்ல ஊர் போய் சேருவோம். அவனை எல்லாரும் சேர்ந்து கவனிச்சுக்கலாம், சரியாகிடுவான்” என்றான் பிரவீண்.

“ம்ம்… அந்த பொண்ணோட அம்மாக்கு பணம் ஏதாவது கொடுத்து விட்ரு…” என்றார்.

“இப்பவே வேணாம் ப்பா. இவன் திரும்ப குதிப்பான். ரகசியமா செய்துக்கலாம்” என்றான் பிரவீண்.

“இல்லையில்லை, உன் அம்மா அந்த பொண்ணுக்கு தேவையானது செய்ய சொல்லியிருக்கா. ஏழ்மையான குடும்பம் வேற. இருக்கட்டும் இவன் கண்ணு முன்னாடியே செட்டில் பண்ணு, என்ன பண்றான்னு பார்க்கிறேன் நான்” என்றார் வீரராகவன்.

அப்பா சொன்னால் ஏதாவது அர்த்தம் இருக்கும் என அப்படியே நம்புகிறன் பிரவீண்.

மீரா அறைக்கு வெளியிலேயே சுவரில் சாய்ந்த வண்ணம் சஞ்சயை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். மகளின் மனதை அம்மாவும் புரிந்து கொண்டார் போல. அவளை பாவமாக பார்த்தவர் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு நின்றார்.

சுபாவிடம் செக் ஒன்றை கொடுக்க முனைந்தான் பிரவீண். அவர் வாங்க மறுக்க, கார்த்திகேயனை சிபாரிசுக்கு அழைத்தான்.

“வேணாமே, அதான் மீரா அப்ராட் போக உதவுறீங்களே?” என்றார் கார்த்திகேயன்.

“இல்லை அப்பா கொடுக்க சொன்னாங்க. இப்போ இங்க வேலையையும் விட்டுட்டு, ஊருக்கு போய் என்ன செய்வாங்க, தேவை படும்தானே?” என்றான் பிரவீண்.

“இல்லை வேணாங்க” என இப்போதுதான் வாய் திறந்தாள் மீரா.

“ஏம்மா தப்பா ஏதும் எடுத்துகிட்டியாமா? எங்களுக்கு அவன் மேலதான் வருத்தம். உன்னை தப்பா நினைக்கல ம்மா. இந்த வயசுல எவ்ளோ கஷ்டம்னு உம்மேல எங்களுக்கெல்லாம் பரிதாபம்தான். கார்த்தி ஸார் எங்களுக்கு தெரிஞ்சவர், அவருக்கு தெரிஞ்ச பொண்ணுக்கு கஷ்டம்னா உதவ எங்களுக்கு உரிமையும் கடமையும் இருக்கு” என்றான் பிரவீண்.

“ப்ளீஸ் வேணாம்” என சின்ன குரலில் என்றாலும் பிரவீண் மறுக்க முடியாத படி சொன்னாள்.

தரையைப் பார்க்க அமர்ந்திருந்தான் சஞ்சய். மெல்ல நடந்து அவனிடம் சென்றாள். தன் முன் அவளின் நிழல் தெரிந்தாலும் நிமிரவில்லை அவன்.

அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள் மீரா. விழிகளை மட்டும் உயர்த்தி அவளை இயலாமையுடன் பார்த்தான் சஞ்சய்.

அவனது கைகளை தன்னிரு கைகளால் பற்றிக் கொண்டவள், “நீங்க போன்னு சொன்னா மட்டும்தான் உங்களை விட்டு போவேன்” என்றாள்.

அவனது விழிகள் கலங்கி சிவந்தன. “நான் சொன்னா போயிடுவியா?” எனக் கண்டனத்துடன் கேட்டான்.

அவளுக்கு அழுகை வருவது போலிருந்தது. “நீங்க சொன்னா எதுவா இருந்தாலும் கேட்பேன்” என்றாள்.

“எங்கப்பா சொன்னதை கேட்கல நீ? நான்… என்னால உன்னை…” மேலே பேச முடியாமல் தடுமாறினான் சஞ்சய்.

“நம்மளால நம்மள பார்த்துக்க முடியும் சஞ்சய். அதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை” என்றாள்.

“வாழ முடியாம பாதியிலேயே உன்னை விட்டுட்டு ஓடிப் போனாலும் போயிடுவேன்” என்றான்.

“அப்படியா?” என பொய்யான வியப்போடு கேட்டாள்.

அவன் அவளை கூர்மையாக பார்க்க, “உங்களை எனக்கு தெரியும்” என தீர்க்கமாக சொன்னாள்.

தன்னை மிகவும் கீழாக உணர்ந்து கொண்டிருந்த சஞ்சய் நிமிர்ந்தமர்ந்து , “உள்ள போ மீரா” என்றான்.

அவள் சரி என தலையாட்டிக் கொள்ள,  அவள் பற்றியிருந்த தன் கைகளை விலக்கி,  அவள் கைகளை அவன் பற்றினான். தன் முகத்தருகில் அவளின் கைகளை எடுத்து வந்தவன் அந்த கைகளில் தன் கண்களை ஒற்றி, தன் முகத்தை பதித்துக் கொண்டான்.

 மீராவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

ஹாலில் உள்ள அனைவரும் மட்டுமில்லாமல் அறைக்குள் இருந்த வீரராகவனும் சேர்ந்தே அதிர்ந்து போனார்.