டியூஷன் முடித்து விட்டு வந்த கார்த்திகேயன் இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் சுபாவை அவர் எதிர்பார்க்கவில்லை. கலவரத்தோடு வந்து நின்றவரை உள்ளே அழைத்து வந்து அமர வைத்தார்.
“ஏதாவது சாக்கு சொல்லிட்டு வரணுங்களே… மேடம்தான் ஊர்ல இல்லையே, நைட் சாப்பாடு செஞ்சு தர சொன்னாங்கனு பொய் சொல்லிட்டு வந்தேன்” என்ற சுபா கேரியரை அவரிடம் கொடுத்தார்.
“ஹையோ சாப்பாடா முக்கியம், ஏதோ பிரசச்னை போல தெரியுதே, என்னன்னு சொல்லுங்க” என்றார் கார்த்திகேயன்.
“எல்லாம் என் கைய மீறி போவுது ஸார், மீராவுக்கு நீங்கதான் உதவணும்” மிகவும் வேண்டி கேட்டார் சுபா.
திருவண்ணாமலை அருகிலிருக்கும் அந்த பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு கார்த்திகேயன் மாற்றலாகி வந்து ஒரு வருடம்தான் ஆகிறது. பள்ளிக்கு அருகில்தான் சுபாவின் வீடு. உணவகம் போல அல்லாமல் ஆர்டர் கொடுத்தால் வீட்டில் சமைத்து கொடுப்பார். மதிய உணவு மட்டும்.
மனைவி ஊரில் இல்லாத நேரங்களில் கார்த்திகேயனும் இப்படித்தான் மதிய உணவை முடிப்பார். அப்படி இவர்களுக்குள் பழக்கம்.
சுபாவின் மகள்தான் மீரா. கார்த்திகேயன் இங்கு வந்த புதிதில் படிப்பை முடித்து விட்டு வீட்டில்தான் இருந்தாள். பொறுப்பில்லாத அண்ணன், சுயநலமான அண்ணி, பெரிதாக வெளியுலக விவரம் இல்லாத தாய் என இருந்த குடும்பத்தில் உள்ள மீராவை பற்றி தன் மனைவி நீரஜா சொல்லத்தான் கார்த்திகேயனுக்கு தெரியும்.
நல்ல புத்திசாலி பெண்ணான மீரா மீது கணவன் மனைவி இருவருக்கும் நல்ல அபிமானம்.
கார்த்திகேயன்தான் தன் நண்பர் மூலமாக மீராவுக்கு சென்னையில் வேலை கிடைக்க உதவியவர். இவரது யோசனை படிதான் கனடா போக முயற்சி செய்து வருகிறாள். அவளுக்கு இப்போது என்ன பிரச்னை என நெற்றி சுருக்கி பார்த்தார் கார்த்திகேயன்.
“மீராவுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றான் பாஸ்கர். நல்ல இடமா பார்த்திருந்தா கூட சரின்னு விட்ருப்பேன். ராஜசேகரன் வீட்டு பையனுக்கு கட்டி வைக்க போறானாம்” என சுபா சொல்லவும், திகைத்து போய் விட்டார் கார்த்திகேயன்.
“சென்னைல இருக்க மீராகிட்ட எனக்கு உடம்புக்கு முடியலைன்னு பொய் சொல்லி ஊருக்கு வர சொல்லிருக்கான் பாஸ்கர். என் போனையும் பிடிங்கி வச்சிட்டான். எம்மருமகளுக்கு என்ன நல்ல புத்தி வந்துச்சோ அவளே போனை கொடுத்து மீராகிட்ட பேச வச்சா. இப்போதைக்கு அவளை இங்க வரவிடாம செஞ்சிட்டேன். ரெண்டு நாள்ல வர்றேன்னு மீராவும் பாஸ்கரை சமாளிச்சு வச்சிருக்கா. ரெண்டு நாள்ல அவ வரலைன்னா இவனே போய் கூட்டிட்டு வந்திடுவான். அப்புறம் எங்களால் எதுவும் செய்ய முடியாதுங்க ஸார்” என பயமும் கவலையுமாக சொன்னார் சுபா.
கார்த்திகேயனுக்கு பூர்வீகம் திருவண்ணாமலைதான், ஆனால் வேலை கிடைத்தது என்னவோ செங்கல்பட்டு அருகில், அவரது திருமணம், குழந்தைகள் பிறந்தது என எல்லாமே அங்குதான். இப்போது இருக்கும் இந்த ஊர் பற்றி அவருக்கு அதிகம் தெரியாது. ஆனால் அந்த ராஜசேகரன் பற்றி நல்லதாக கேள்விப்பட்டதில்லை.
அரசியல் புள்ளி ஒருவரின் பினாமிதான் ராஜசேகரன். அந்தப் பக்கத்தில் உள்ள அரசு கான்ட்ராக்ட் எல்லாம் அவருக்கோ அல்லது அவர் கை காட்டும் நபருக்கோதான் செல்லும். குறுகிய காலத்தில் மிகப்பெரிய வசதி படைத்தவராக மாறிவிட்டதாக பிறர் சொல்ல கேட்டிருக்கிறார்.
“அப்பன் இல்லாத பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தர மாட்டான்னுதான் ஏதோ என்னால முடிஞ்ச வேலை பார்த்து அவளை படிக்க வச்சிட்டேன். இவன் எதுவுமே செய்ய வேணாம், இப்படி அவ வாழ்க்கைய நாசம் பண்ண பார்க்கிறானே! ராஜசேகரன் வீட்டு பசங்கள்ட்ட இல்லாத கெட்ட பழக்கம்னு எதுவும் இல்லை. பணம் காசு இருந்தா போதுமா? உங்கள நம்பித்தான் வந்திருக்கேன் ஸார்” என்ற சுபா அவரை பாவமாக பார்த்தார்.
“பாஸ்கரோ ராஜசேகரோ வர முடியாத இடமா நல்ல தூரமா பார்த்து எங்கேயாவது அவளை அனுப்பி வச்சிடுங்க ஸார், கொஞ்ச நாள்ல வெளிநாடு போயிடுவா. சென்னைலலாம் இருக்க கூடாது, பாஸ்கர் எப்படியும் கண்டுபுடிச்சி இழுத்திட்டு வந்திடுவான்” என்ற சுபாவிடம் கார்த்திகேயன் ஏதாவது உதவுவார் என்ற நம்பிக்கை மலையளவு இருந்தது.
இப்படி திடீரென வந்து கேட்டால் அவரும் என்ன செய்வார்?
“நீரஜாவோட தாத்தாக்கு உடம்பு முடியலைமா, அவ ஊருக்கு வர இன்னும் ரெண்டு மூனு நாளாகும். நாளைக்கு எப்பவும் போல மதிய சாப்பாடு வாங்கிக்கிறேன், நைட் சாப்பாடு எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வாங்க. யோசனை பண்ணி ஏதும் செய்ய முடியுதா பார்க்கிறேன்” என்றார் கார்த்திகேயன்.
“பார்க்கிறேன்னுலாம் சொல்லாதீங்க ஸார், என்னைய விட்டா கேட்க செய்ய நாதி இல்லாத பொம்பள புள்ள ஸார் அவ. அவளுக்காகத்தான் உசுரை வச்சிருக்கேன். எங்களுக்கு உதவ உங்கள விட்டா வேற ஆளு இல்ல ஸார்” சொல்லும் போதே அழுது விட்டார் சுபா.
“அடடா அழுவாதீங்கமா. என்ன பண்றதுன்னு யோசிக்கனும் இல்லியா? சென்னைல இருக்கிறதே வேஸ்ட்ன்னு சொல்லிட்டீங்க. அப்போ தமிழ்நாட்டுல எங்க அனுப்பினாலும் ரிஸ்க்தானே? ஒரு நாள் டைம் கொடுங்க, என்னால முடிஞ்சத கண்டிப்பா செய்யுறேன்” என கார்த்திகேயன் உறுதி கொடுக்கவும்தான் புறப்பட்டார் சுபா.
பழைய மாடி வீட்டின் வாசலில் கைப்பேசியில் பேசிக் கொண்டு நின்றிருந்தான் பாஸ்கர். மகனை கண்டுகொள்ளாமல் ஒதுக்கம் காட்டி உள்ளே சென்றார் சுபா.
அரசியல் பிரமுகரின் சொத்துக்களுக்கு பினாமியாக இருக்கும் ராஜசேகரன், தான் எண்ணி கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு தன் சொல் பேச்சு கேட்டு நடக்கும் நபர்களை தன்னுடன் வைத்துக்கொள்வார். அப்படித்தான் இந்த பாஸ்கரை சமீப காலமாக தன்னுடன் வைத்திருக்கிறார்.
நிலம் ஒன்றை பாஸ்கரின் பெயருக்கு பத்திரம் செய்தாகி விட்டது. கோடிக் கணக்கில் பெறுமானம் உள்ள இடம். எதற்காக தன் பெயருக்கு மாற்றம் செய்தார், எதற்காக தனது கடன்களை எல்லாம் அடைத்தார், தான் கேட்கும் போதெல்லாம் கை நிறைய பணத்தை ஏன் அள்ளி அள்ளி தந்தார் என்ற சூட்சமங்களை பாஸ்கர் அறிந்திருக்கவில்லை. ராஜசேகரன் அவனது கண்களுக்கு தெய்வமாக தெரிந்தார்.
ஒரு நாள் ‘என் மகனுக்கு உன் தங்கையை திருமணம் செய்து வைக்கலாம் என இருக்கிறேன்’ என ராஜசேகரன் சொல்லவும் அகமகிழ்ந்து போய் விட்டான்.
ராஜசேகரனின் மகன் கேசவ் நல்ல குடிகாரன், வேறு சில கெட்ட பழக்கங்களுங்களும் கொண்டவன் என்பது பாஸ்கருக்கு நன்றாகவே தெரியும். பாஸ்கரே மதுப்பிரியன் எனும் போது கேசவ்வின் பழக்கங்கள் எப்படி அவனுக்கு தவறாக தெரியும்?
பெரிய வீட்டு ஆண்கள் என்றால் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கத்தான் செய்வார்கள், அத்தனை வசதியான குடும்பத்தில் தங்கை மருமகளாக போய் விட்டால் அவளும் செல்வாக்குடன் இருப்பாள், அவளை வைத்து தானும் வசதி படைத்தவனாக மாறி விடலாம் என கணக்கு போட்டிருந்தான் பாஸ்கர்.
கேசவ்வின் உடல் உறுப்புகள் சீர் கெட்டிருக்கும் நிலையோ, மருத்துவம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் அவனை குணாமாக்க முடியாதபடி தீவிரமான கட்டத்தில் அவனிருப்பதோ, உயர்தர சிகிச்சை கொடுக்க பட்டாலும் மாதக் கணக்கில்தான் அவன் உயிர் வாழக் கூடும் என மருத்துவர் நாள் குறித்திருப்பது பற்றியோ பாஸ்கருக்கு தெரிய வாய்ப்பில்லை. பணம் கொழிக்கும் தன்னுடைய மகனது வாரிசை சுமந்து பெற்றெடுக்க ராஜசேகரனுக்கு அவசரமாக ஒரு பெண் தேவை. அதிலும் அவரது இனமாக பார்த்து. யார் சம்மதிப்பார்கள்? அதற்காகவே பாஸ்கரை தனது வலைக்குள் பிடித்து வைத்திருக்கிறார்.
மருமகளின் கைப்பேசியை வாங்கிக் கொண்டு வந்த சுபா சத்தமில்லாமல் கதவை தாழிட்டார். மீராவுக்கு அழைத்தார். “நான் ஸார்கிட்ட பேசிட்டேன். அவர் ஏதாவது ஏற்பாடு பண்ணுவார், எங்கேயாவது போயி நல்லாரு” என்றார்.
“என்னம்மா பேசிட்டு இருக்க நீ? உன்னை விட்டுட்டு எங்க போறது நான்? நாம இப்படி பயப்பட பயப்படதான் அண்ணன் என்னவும் செய்யலாம்னு இருக்கு. நாம போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணலாம். நீயும் என்னோட சென்னைக்கு வந்திடு, இனி அந்த ஊர் பக்கமே நாம போக வேணாம்” என்றாள் மீரா.
மகள் சொல்வதில் சுபாவுக்கு உடன்பாடு இல்லை. பெண்களாக காவல் நிலையம் செல்லவெல்லாம் அவருக்கு பயமாக இருந்தது. ஊரின் செல்வாக்கான மனிதர்களை எதிர்த்து தங்களால் ஏதும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை துளியும் அவரிடம் இல்லை. அதைவிட மகளுக்கு காவலாக இருக்க வேண்டிய அவளது உடன்பிறப்பே கயவனாக இருக்கும் போது சாதுர்யமாக இங்கிருந்து தப்பி செல்வதுதான் தீர்வு என நினைத்தார்.
பதில் சொல்லாத அம்மாவை சத்தமாக அழைத்தாள்.
“ஹஹான் சொல்லுடி” என்றார் சுபா.
“என்னம்மா யோசிக்கிற, நீ சரின்னு சொல்லு, நாளைக்கு காலைக்கே நான் ஸ்டேஷன் போறேன். வேணும்னா இங்க டாக்டர் யார்கிட்டயாவது ஹெல்ப் கேட்குறேன், நல்ல மாதிரியான டாக்டர்ஸ் இருக்காங்க, ப்ராப்லத்தை சொன்னா கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாங்க” என்றாள்.
“அதெல்லாம் சரியா வராது மீரா. என்னை பத்தி கவலைப்படாத, நீ நல்லாருக்கேன்னு தெரிஞ்சா போதும், நான் இருந்துப்பேன். கொஞ்ச நாள் போனதும் கண்டிப்பா உன்னோட நான் வந்திடுறேன். இப்போ நான் சொல்றத கேளுடா தங்கம்” கெஞ்சினார் சுபா.
மீராவும் தன்னால் முடிந்த அளவு பேசி பார்த்து விட்டாள். அம்மாவின் பேச்சுக்களில் அவளுக்குமே ‘வசமாக மாட்டிக் கொள்வோமோ?’ என்ற பயம் தொற்றிக் கொண்டது.
சரி என தலையாட்டுவதை தவிர மீராவிடம் வேறு வழியிருக்கவில்லை.
அம்மா இங்கிருக்க எப்படியும் தங்கை இங்கு வந்துதான் ஆக வேண்டும் என நினைத்து விட்டான் பாஸ்கர். ஏன் ராஜசேகருக்கு கூட அதே எண்ணம்தான். சுமூகமாக நடக்க போகும் நிகழ்வை ஏன் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நினைவில்தான் மீரா உடனே இங்கு வந்தாக வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல் விட்டுப் பிடித்தார்.
அந்த கால அவகாசத்தை தன் மகளை காப்பாற்ற பயன்படுத்திக் கொண்டு விட்டார் சுபா.
அம்மா மருத்துவமனையில் உள்ளார், பேசினால் சோர்ந்து போகிறார், உன்னைத்தான் பார்க்க கேட்டு கொண்டிருக்கிறார் என மீராவிடம் பொய்களாக சொல்லிக் கொண்டிருந்தான் பாஸ்கர்.
அம்மா சொல்லிக் கொடுத்த படியே, அண்ணன் சொன்னதையெல்லாம் நம்புவது போலவே மீராவும் வருத்தம், கவலை, அழுகை என அண்ணனிடம் நடிக்க வேண்டியிருந்தது. தங்கையின் வருகையை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.
கார்த்திகேயனின் நண்பன் மூலமாக வேறு கைப்பேசி, சிம் எல்லாம் மீராவுக்கு கிடைத்தது. மருத்துவமனையின் முக்கிய நிர்வாகி கார்த்திகேயனுக்கு தெரிந்தவர், அவரிடம் சொல்லித்தான் மீராவுக்கு அங்கு வேலை வாங்கி தந்திருந்தார். ஆகவே அங்கு பணியிலிருந்து விடுபடுவதில் அவளுக்கு எந்த சிரமங்களும் இல்லை.
சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் ரயிலில் ஏறி விட்டாள் மீரா. எதிர்காலம் குறித்தும் அம்மாவை நினைத்தும் அவ்வளவு கவலை. சென்னையே அவளுக்கு புதிது, இதில் மொழி தெரியாத வேறு மாநிலத்தில் எப்படி சமாளிப்போம் என்ற மிரட்சி. கார்த்திகேயன் அவரது நண்பரின் நண்பரை சந்திக்க சொல்லியிருந்தார்.
முதலில் அங்கு போய் விடு, பிறகு வேலைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் எனவும் சொல்லியிருந்தார்.
மீரா தனது செலவு போக மிச்ச பணத்தை அம்மாவுக்குத்தான் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தாள். அதில் மிச்சம் பிடிப்பது சிரமம்தான் என்றாலும் பெண் பிள்ளை ஆகிற்றே என்ற நினைவில் ஏதோ சேர்த்து வைத்திருந்தார் சுபா. அந்தப் பணம் கார்த்திகேயன் மூலமாக இவளது கைக்கு வந்திருந்தது.
அடுத்து என்ன என்பதை நினைக்கவே மீராவுக்கு அச்சமாக இருக்க, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.