மீராவை கண்ட ஒருவன் பதிலுக்கு இவளை அப்படி நான் இடித்து விட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என சொல்லி அவளை நெருங்கினான்.
சட்டென மீராவை தன்னிடம் இழுத்துக் கொண்ட சஞ்சய், “தெரியாம செஞ்சிருந்தாலும் தப்பு எம்மேலங்கிறதால பணிவா பேசிட்டு இருக்கேன். கிட்ட வந்து பாரு, நான் யாருன்னு காட்டுறேன்” என்றான்.
அந்த மேல்தட்டு வர்க்க பசங்கள் திமிர் பிடித்தவர்கள் என்பது அவர்களின் பார்வை, பேச்சு, உடல்மொழி என அனைத்திலும் வெளிப்பட்டது.
“இங்கேருந்து போயிடலாம் சஞ்சய்” கணவனின் கையை பிடித்துக்கொண்டே மெல்லிய குரலில் சொன்னாள் மீரா. அவளை ‘அமைதியாக இரு’ என்பது போல பார்த்தான் சஞ்சய்.
“பிரச்சனை வேணாம்” என ரகசிய குரலில் சொன்னாள் மீரா.
“நானா பிரச்சனை பண்றேன், அவனுங்கல்ல செய்றாங்க. நீ பேசாம இரு” என சஞ்சயும் சின்னக் குரலில் சொன்னான்.
அவர்களும் பெங்காலியில் ஏதோ பேசிக் கொண்டனர். விட்டுச் செல்லும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என புரிந்து கொண்டான் சஞ்சய்.
தான் இடித்த பெண்ணின் கண்களை சந்தித்த சஞ்சய், “தெரியாம நடந்திருந்தாலும் அது உங்களை பாதிக்கத்தானே செய்யும்? இனி கவனமா இருக்கேன், ஸாரி. அதுக்காக உங்க ஃபிரெண்ட் என் வைஃப்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ண நினைச்சா… நான் சும்மா இருக்க மாட்டேங்கிறது வேற விஷயம். அதை வேடிக்கை பார்த்திட்டு உங்களால நிம்மதியா இருக்க முடியுமான்னு யோசிங்க” என சொல்லி மீராவுடன் நகர்ந்து சென்றான்.
அந்தப் பெண்ணுக்கு என்னவோ போலாகி விட்டது. அப்போதும் சஞ்சயை நோக்கி சென்ற தன் ஆண் நண்பர்களை அடக்கினாள் அந்தப் பெண். பெங்காலியில் கோவமாக பேசிக் கொண்டனர். அந்தப் பெண் கோவம் கொண்டு செல்ல, அவளின் பின்னால் ஒருவன் சமாதானமாக ஏதோ சொல்லிக் கொண்டு ஓடினான்.
மீராவை இடிக்க வந்தவன் மட்டும் அழுத்தமாக அங்கே நிற்க, அவனது மற்ற நண்பர்கள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தனர்.
“ஹேய் திரும்பி திரும்பி பார்க்காத” என மீராவை கண்டித்தான் சஞ்சய்.
புதிய ஊர், அதிலும் இந்த இடம் இன்னும் புதிது, இருக்கும் எதிரிகள் போதாது என இப்போது தேவையில்லாத புதிய எதிரிகளை சம்பாதித்துக் கொண்டோமே என மீராவுக்கு சற்று அச்சமானது.
“இவங்கள பார்க்கவே மனசுக்கு சரியா படல சஞ்சய், வீட்டுக்கு போயிடுவோமே” என கெஞ்சவது போல சொன்னாள்.
“பிளான் பண்ணினது பண்ணினதுதான். சல்லி பசங்க இவனுங்களுக்கு பயந்து ஓடுறதா?” என்ற சஞ்சய் இங்குதான் இருக்கிறோம் என பிடிவாதமாக சொல்லி விட்டான்.
திகில் நிறைந்த ஆங்கிலப் படம். ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படம் அவர்களை இழுத்துக் கொண்டது. ஒரு சமயத்தில் வந்த காட்சியில் இருவருமே மிரண்டு போய் ஒருவர் கையை ஒருவர் இறுக்கமாக பிடித்துக்கொண்டனர். ஒன்றைரை மணி நேரம் எப்படி கடந்தது என்பதே தெரியாமல் சென்றது.
படம் முடியவும் மீராவின் கையெல்லாம் சில்லிட்டு போயிருந்தது. அந்த திரையரங்கத்தில் ஏஸியின் குளிர் அதீதமாகத்தான் இருந்தது. அரங்கத்தை விட்டு வெளியே வந்ததும் ஓரமாக இருந்த சோஃபாவில் அவளை அமரச் செய்து, அவனும் அமர்ந்து கொண்டான்.
இலகுவாக பேசிக் கொண்டே தனது அடுத்த கையையும் எடுத்து தேய்த்து விட ஆரம்பித்தவனை இமைக்காமல் பார்த்திருந்தாள் மீரா.
“என்ன மீரா ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?” எனக் கேட்டு நிமிர்ந்தவன் அவளின் பார்வையை கண்டு விட்டு சிரித்தான். வெட்கமும் சங்கடமுமாக கண்களை மூடிக் கொண்டாள் மீரா.
தன் தோளோடு அவளை அணைத்துக் கொண்டவன், “இன்னொரு தடவ அந்த மூவிக்கு போலாமா?” என குறும்பாக கேட்டான்.
பொது இடம் என்பது நினைவிலாட நாசூக்காக அவனிடமிருந்து விலகி அமர்ந்தவள், “அடுத்து என்னன்னு தெரியாம ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும் போதுதான் த்ரில்லிங்கா இருக்கும். அப்புறம் அந்த ஃபீல் வராது” என்றாள்.
“ஆமாமாம்… எதுவுமே ஃபர்ஸ்ட் டைம்னா அது வேற ஃபீல்தான். ஃபர்ஸ்ட் கிஃப்ட் ஃபர்ஸ்ட் லவ் ஃபர்ஸ்ட் கிஸ் எல்லாமே ஸ்பெஷல்தான்” என்றான்.
“என்ன என்ன…” செல்லமாக முறைத்துக் கொண்டே கேட்டாள்.
“என்ன என்ன?” என அவனும் எதிர் கேள்வி கேட்டான்.
“உங்க ஃபர்ஸ்ட் லவ் யாரு, டியூசன்ல பார்த்த பொண்ணா?” என விசாரணை செய்தாள்.
“ம்ம்… சிந்தியா. நல்ல ஹைட், ரவுண்ட் ஃபேஸ், நெத்தில ஒரு குட்டி தழும்பு இருக்கும்” என வேண்டுமென்றே அவளை வர்ணித்தான்.
உள்ளுக்குள் புகைவதை காண்பிக்க முடியாமல் எரிச்சல் கொண்டாள் மீரா.
“கோவம் வருதா மீரா?” என சீண்டினான்.
“இல்லியே எனக்கு ஏன் கோவம் வருது?”
“ம்ம்… ஃபர்ஸ்ட் கிஸ் பத்தி சொல்லவா, ஷை ஆக மாட்டியே?” எனக் கேட்டு அவளின் இரத்தத்தை கொதிக்க விட்டான்.
“எனக்கு அந்த அடல்ட் ஸ்டோரி எல்லாம் கேட்க வேணாம்” என எரிச்சலாக சொன்னாள்.
“நீ அடல்ட்தானே? நானும் அடல்ட், நாம பேசிக்கலாம் மீரா. உன்னை விட்டா இதெல்லாம் சொல்ல எனக்கு யார் இருக்கா சொல்லு?” என்றான்.
“வேணாம்னா வேணாம் சஞ்சய்” வெளிப்படையாக கோவப் பட்டாள்.
“ப்ச் சொல்ல ஸ்டார்ட் பண்ணிட்டேன். முழுசா சொல்லிடுறேனே… ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்…” என அவன் கெஞ்ச, அவள் எழுந்து சென்று விட்டாள்.
அவளுடன் நடத்தும் இந்த விளையாட்டை வெகுவாக ரசித்தான் சஞ்சய். ஓரிரு நிமிடங்கள் கடந்து புன்னகையை சுமந்து கொண்டே அவளை தேடிச் சென்றான்.
ஐஸ்க்ரீம் பார்லர், ஸ்னாக்ஸ் கார்னர் என ஒவ்வொரு இடமாக பார்த்துக் கொண்டே சென்றான். அங்கெல்லாம் அவளை காணோம்.
சைனீஸ் ஃபூட் கோர்ட் அந்த தளத்திலேயே அதிக பட்சமான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு இருந்தது. அதன் வாயிலில் கண்ணாடி கதவை திறந்து கொண்டு விஷம புன்னகையுடன் வெளியே சென்றான் ஒருவன். சஞ்சயுடன் சண்டையிட்டு மீராவை இடிக்கிறேன் என சொன்னவன்தான் அவன்.
சஞ்சயின் இதயம் எகிறிக் குதிக்க வேகமாக அங்கே ஓடிச் சென்றான். உள்ளே சென்று மீரா இருக்கிறாளா என எங்கும் பார்த்தான். உள்ளே தனித் தனியாக நிறைய கவுன்டர்கள் இருந்தன. வாயில் பக்கத்தில் இருந்த ஒரு கவுன்டர் மட்டுமே செயல் பட்டுக் கொண்டிருக்க, மற்றவை மூடிக் கிடந்தன.