அறியாமல் தொலைந்தேனே -17

அத்தியாயம் -17

மதியம் இரண்டு மணிக்கு மருத்துவமனையிலிருந்து மீராவை அழைத்துக் கொண்டு பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தான் சஞ்சய்.

“மெதுவா போங்களேன் சஞ்சய்” பயத்துடன் அவனை கடிந்து கொண்டாள் மீரா.

“த்ரீக்கு நமக்கு டைம் சொல்லிருக்காங்க. நீ ஹாஸ்பிடல்லேருந்து வெளில வர லேட் பண்ணிட்டு இப்போ மெதுவா போன்னு சொல்லாத. இன்னிக்கு முடியாதுன்னு சொல்லிட்டா இன்னொரு நாள் அலையனும்” என்றான் அவன்.

“ரிலீவ் பண்ண வந்த ஸ்டாஃப் லேட், நான் என்ன பண்ண?”

“நீ மட்டும் எப்பவும் கரெக்ட் டைம் போற, நீயும் இனிமே லேட்டா போ”

“நாம நம்ம வேலைல கரெக்ட்டா இருக்கணும். ஸ்பீட் குறைங்க, இன்னிக்கு இல்லைனா இன்னொரு நாள் அலைஞ்சுக்கலாம், மொதல்ல கை காலோட நல்லா இருக்கணும்” என அவள் சொல்ல, வேண்டுமென்றே இன்னும் பைக்கின் வேகத்தைக் கூட்டினான்.

கண்களை இறுக மூடிக் கொண்டாள் மீரா. பதிவாளர் அலுவலகத்தில் அவன் பைக்கை நிறுத்திய போது மீராவின் முகமெல்லாம் அவன் மீதான கோவத்தில் சிவந்து போயிருந்தது.

அவனோ கண்களை சிமிட்டி சிரித்தான். அவள் உக்கிரமாக பார்க்க, கை கால்களை பார்வையாலே சுட்டிக் காண்பித்து, “எல்லாம் இருக்கு, அப்புறமென்ன?” என்றான்.

“அன்னிக்கு ஓவர் ஸ்பீட்னு போலீஸ் ஃபைன் போட்டதை மறந்துட்டீங்கல்ல?”

“ஆமாம்!” என கிண்டலாக சொன்னான்.

பைரவ்வின் ஆட்கள் இவர்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இவர்களின் பக்கத்தில் வந்து விடவும் அவனது அதி வேகத்தைப் பற்றி மீராவால் மேலும் பேச முடியவில்லை.

சரியான நேரத்துக்கு வந்து விட்டாலும் அங்குள்ள சர்வரில் பிரச்சனை, இன்று பதிவு செய்ய இயலாது என சொல்லி விட்டனர். சற்று நேர காத்திருப்புக்கு பின் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என சொல்லி புறப்பட்டு விட்டனர்  பைரவ்வின் ஆட்கள்.

“ச்சே நேரத்துக்கு வந்தும் காரியம் ஆகலையே!” என வருத்தமாக சொன்னான் சஞ்சய்.

 “ம்ம்… எப்ப நடக்கணும்னு இருக்கோ அப்பதான் நடக்கும். இனி இப்படி ஸ்பீடா பைக் ஓட்டினா உங்களோட பேசவே மாட்டேன் சஞ்சய்” என மிரட்டி தன் கோவத்தைக் காண்பித்தாள் மீரா.

“பைக் என் கண்ட்ரோல்லதான்  இருந்துச்சு மீரா. அதை விடேன், பசிக்கல உனக்கு?” எனக் கேட்டான்.

இன்று காலையில் மீரா தாமதமாக விழித்த காரணத்தால் மதிய உணவு செய்திருக்கவில்லை. பதிவாளர் அலுவலகம் செல்லும் முன் மதிய உணவை ஓட்டலில் முடித்துக் கொள்ளலாம் என்றுதான் முன்பு பேசி வைத்திருந்தனர். மருத்துவமனையிலேயே நேரமாகியிருக்க  சாப்பிட முடியாமல் போயிருந்தது.

இந்த பகுதியில்  அவர்களுக்கு உகந்தது போல எங்கு உணவு கிடைக்கும் என தெரியவில்லை. கூகுளில் பார்த்தவன், “பக்கத்துல மால் ஒன்னு இருக்கு, போலாமா?” எனக் கேட்டான்.

“அங்க போய் என்ன செய்றது?” என்றாள் மீரா.

“எப்படியும் ஃபூட் கோர்ட் இருக்கும். சாப்பிட நல்லதா கிடைச்சா வயித்துல கூவுற குடலை சைலன்ட் பண்ணலாம்” என சொல்லி அவளை அழைத்துச் சென்றான்.

அருகிலிருப்பதாக அவன் சொல்லியிருந்தாலும் வந்து சேர அரை மணி நேரம் ஆகி விட்டது.

அந்த மால் நகரத்தின் வெளிப் புறத்தில் இருந்ததாலும் வார நாள் என்பதாலும் அவ்வளவாக கூட்டமில்லை. பிரபலமான தென்னிந்திய உணவகத்தின் கிளை அங்கிருக்கவும் உற்சாகமாகி விட்டாள் மீரா.

வெகு நாட்களுக்கு பின் முழுமையான தமிழக மீல்ஸ் சாப்பிட்டனர் இருவரும்.

“கிடைக்காம இருக்கும் போதுதான் அதோட அருமை தெரியுதுல்ல?” என்றாள் மீரா.

“நாம வீட்லதானே இருக்கோம்? வீக் ஆஃப்ல நீயே இப்படி சமைக்கலாமே” என்றான்.

“எனக்கு சமைக்கிறதே புதுசு. அதுல இப்படி ஃபுல் கோர்ஸ் மீல்ஸ்லாம் தனியான்னா… அம்மாடி… என்னால முடியாது”

“சமையல் அவ்ளோ கஷ்டமா மீரா?”

“இப்படி கேட்டா என்ன சொல்ல? பழகினவங்களுக்கு ஈஸி, பழகாதவங்களுக்கு கஷ்டம்தான்”

“ம்ம்… இந்த பாயசம் நல்லாருக்கு. ஆனா எங்கம்மாவோட பாயசத்தை அடிச்சுக்க முடியாது”

“எங்கம்மாவும் நல்லா பாயசம் வைப்பாங்க” என்றவளின் முகம் மாறிப் போனது.

“ப்ச்… சீக்கிரம் ஆன்ட்டிகிட்ட பேசலாம் நீ. அடுத்து என்ன செய்யலாம்?” என பேச்சை மாற்றினான்.

“இங்கேயே படுத்து தூங்க முடியாது, அதனால வீட்டுக்கு போலாம்” என்றாள்.

“அங்க போய் என்ன செய்றது? இந்த மால் நம்ம வீட்லேருந்து தூரம் வேற, அடிக்கடி வரவா போறோம்? இங்கேயே டைம் பாஸ் பண்ணலாம்” என அவன் சொல்லவும் அவளும் மறுக்கவில்லை.

சாப்பிட்டு முடிக்கவும் பிராண்டட் ஷோ ரூம் அழைத்துச் சென்றான். அங்குள்ள பொருட்களின் விலையை பார்த்தவளுக்கு கண்கள் பெரிதாகின. கையில் எடுத்துப் பார்த்த டீஷர்ட்டை அப்படியே வைத்து விட்டாள்.

“ஷாக் ஆகாத. பிடிச்சிருந்தா சொல்லு வாங்கலாம்”

“ஹையோ எனக்கு பிடிக்கலாம் இல்லை. எனக்கு சர்ப்ரைஸ் தர்றேன்னு நீங்க பாட்டுக்கு வாங்கி வச்சிடாதீங்க. எனக்கு செட் ஆகுறது போல எதுவுமே இல்லை இங்க”

“அப்போ சும்மா விண்டோ ஷாப்பிங் பண்ணிட்டு போயிடலாம்” என்றான்.

ஐந்து நிமிடங்கள் கூட அவளால் அந்தக் கடையில் இருக்க முடியவில்லை. வாங்கப் போவதில்லை எனும் போது என்ன எடுத்து பார்ப்பதாம் என சஞ்சயை வேடிக்கை பார்த்து நின்று கொண்டாள்.

கவனித்தவன் அவளுக்கு பிடிக்கவில்லை என புரிந்து அங்கிருந்து அழைத்து வந்து விட்டான்.

“எங்க போலாம்னு நீயே சொல்லு” என்றான்.

“எல்லா ஃப்ளோர்க்கும் போய் பார்க்கலாம்” என்றாள்.

எஸ்கலேட்டரில் அடுத்த தளத்துக்கு சென்று கொண்டிருந்தனர். எஸ்கலேட்டரின் கடைசி படியிலிருந்து கால் எடுத்து வைத்த சஞ்சய், அங்கே திரையரங்கம் இருப்பதையும் ஓடிக் கொண்டிருக்கும் படத்தை பற்றிய டிஜிட்டல் விளம்பரத்தையும் கவனித்தான்.

தனக்கும் பின்னால் வந்து கொண்டிருந்த மீராவை பார்க்க திரும்பி, “மூவி போலாமா? ஹாலிவுட் படம், சின்ன படம்தான் போல, டைம் கரெக்ட்டா இருக்கும்” எனக் கேட்டான்.

சரி என்ற மீரா, “ஷோ டைம் என்ன, டிக்கெட் கிடைக்குமா?” எனக் கேட்டாள்.

“கூட்டமே இல்லை, அதெல்லாம் கிடைக்கும்” என இவளிடம் பேசிக் கொண்டிருந்ததில் தெரியாமல்  எதிரில் வந்த பெண்ணை இடித்து விட்டான்.

தோளில் சின்ன இடிதான், உடனே சுதாரித்து விலகி மன்னிப்பும் கேட்டு விட்டான்.

 இவன் வேண்டுமென்றே செய்ததாக சண்டையிட்டாள் அவள். உடன் அவளது ஆண் நண்பனும். சஞ்சய் அவனிடமும் மன்னிப்பு கேட்டான், அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை.

ஒருவன்தான் என பார்த்தால் நான்கைந்து ஆண்கள் வந்து விட்டனர்.

‘நானும் நடந்ததை பார்த்தேன், தெரியாமல் நடந்து விட்டது’ என மீராவும் ஆங்கிலத்தில் சொல்லிப் பார்த்தாள்.