அரை மணி நேரம் சென்றுதான் மீராவிடம் வந்தான் சஞ்சய். ஏதோ குழப்பமாக இருக்கிறான் என அவளுக்கு தெரிந்தது. என்ன வர போகிறதோ என நினைக்கும் போதே மீராவின் நெஞ்சம் தட தடக்க ஆரம்பித்து விட்டது.

மீரா அவளது அம்மாவுடன் இப்போதைக்கு பேச வேண்டாம் என்பதைத்தான் வலியுறுத்தியிருந்தார் கார்த்திகேயன்.

இவளிடம் என்ன காரணம் சொல்வது எனதான் யோசித்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.

“ஸார் என்ன சொல்றாங்க சஞ்சய்?” என சின்னக் குரலில் கேட்டாள் மீரா.

“நம்ம மேரேஜ் விஷயம் தெரியவும் அவருக்கு ஷாக். பேசி முடிக்கும் போது நார்மலாதான் வச்சார். உன்கிட்ட அப்புறமா பேசுறதா சொன்னார்” என்றான்.

“ம்ம்…”

“அப்புறம் மீரா… ஆன்ட்டிகிட்ட மேரேஜ் விஷயத்தை இப்போ சொல்ல வேணாம்னு சஜ்ஜஸ்ட் பண்ணினார், எனக்கும் ஸார் சொல்றது கரெக்ட்ன்னுதான் படுது. நீ பேசினா சொல்லாம இருக்க முடியாது, அதனால கொஞ்ச நாள் போனதும் பேசேன்” என்றான்.

“ஏன் இப்படி சொல்றீங்க சஞ்சய்? என்னை நினைச்சி அம்மா ரொம்ப கவலைல இருப்பாங்க. மேரேஜ் ஆச்சு, நான் கல்யாணம் பண்ணியிருக்கிறவர் நல்ல பையன், ஸார்க்கு தெரிஞ்ச பையன்னா எவ்ளோ நிம்மதி ஆவாங்க தெரியுமா?”

“இப்பவே அவங்க நிம்மதியாதான் இருக்காங்களாம் மீரா. இது தெரிய போய் உன் அண்ணன் ஏதும் பிரச்சனை பண்ணினாலும் பண்ணுவார், நாம இங்க இருக்கோம், உன் அம்மா தனியா எப்படி சமாளிப்பாங்க? கொஞ்ச நாள் போகட்டுமே” என அவன் அழுத்தி சொல்லவுமே அவளின் முகம் சின்னதாகி விட்டது.

அண்ணனிடம் சொல்லாதே என அம்மாவிடம் சொன்னால் ஆயிற்று என தோன்றினாலும் அவனது பேச்சுக்கு மறுத்து பேசவில்லை அவள். வேறு எதற்காகவோ இந்த திருமணத்தை மறைக்க சொல்கிறான் என்றுதான் நினைத்தாள்.

“உங்க வீட்ல நம்ம கல்யாணத்தை ஏத்துப்பாங்கதானே சஞ்சய்?” என தயங்கி தயங்கி கேட்டாள்.

“தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டா கொஞ்சவா செய்வாங்க? தெரிய வரும் போது பார்த்துக்கலாம். அது என் பிரச்சனை” என்றான்.

அவனை பார்த்தவளின் முகத்தில் தெளிவில்லை.

“என்ன மீரா?”

“உங்க வீட்ல நம்ம விஷயத்தை ஈஸியா ஒத்துக்க மாட்டாங்கல்ல?”

“நாளைக்கு இந்நேரம் உலகம் அழிய போகுதுன்னு வையி… அதைப் பத்தி கூட யோசிக்க மாட்டேன் மீரா. அது வரைக்கும் என் லைஃபை நல்லா என்ஜாய் பண்ணி வாழ்ந்திடுவேன். நீயும் அப்படியே இரு, அப்பதான் எப்பவும் ஹாப்பியா இருக்கலாம். இப்போ டெரஸ் போலாம்” என்றான்.

“டயர்ட்னு சொன்னீங்க?”

“படுத்திருந்தேனே, டயர்ட்லாம் ஓடிப் போச்சு, வா வா” என அவளின் கையை பிடித்து இழுத்தான்.

“வரேன் சஞ்சய், இப்படி திடீர் திடீர்னு ஏதாவது செய்யாதீங்க. பயந்து வருது”

“எனக்கு வைஃப்னா இதுக்கெல்லாம் நீ பழகிக்கணும் மீரா”

“அது போக போகத்தான் பழகணும். பழகற வரைக்கும் கொஞ்சம் நிதானமா…”

“ஹ்ம்ம்… நிதானமா கைய புடிச்சு இழுக்கிறேன், கட்டி பிடிக்கிறேன், வா வா” என சொல்லிக் கொண்டே சமையலறை சென்றவனை அதிர்ந்து போய் பார்த்தாள். அவன் உணர்ந்தெல்லாம் பேசவில்லை. பேச்சின் ஓட்டத்தில் வாய்க்கு வந்ததைதான் பேசியிருந்தான்.

சில நிமிடங்களில் இருவரும் சாப்பிட ஏதுவாக மொட்டை மாடியில் இருந்தனர். நேற்றைய உணவின் நினைவில் ஆசையாக சப்பாத்தி ஒரு துண்டு பிய்த்தவன் அப்போதே கலவரமாக மீராவை பார்த்தான்.

“ஹார்டா இருக்கு போல சஞ்சய்” என அவளும் சங்கடத்துடன் சொன்னாள்.

இருவரும் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு அவஸ்தையாக பார்த்துக் கொண்டனர்.

“ஸாரி சஞ்சய்” என்றாள்.

“முன்ன பின்ன சப்பாத்தி போட்ருக்கியா மீரா?” எனக் கேட்டான்.

“அடுப்புல போட்டு எடுக்க தெரியும், ஆனா சப்பாத்தி மாவு பிசைஞ்சது இல்ல சஞ்சய்” என பாவமாக சொன்னாள்.

“ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்னு சொல்லு. ஸோ சேட்! பல்லுக்கு எக்ஸர்சைஸ்னு சாப்பிட்ரலாம்” என்றவன் இன்னொரு வாய் மல்லுகட்டி சாப்பிட்டான். ம்ஹூம் அவனால் முடியும் என தோன்றவில்லை.

பத்து மணிக்கு மேலாகியிருந்தது. வழக்கமாக சஞ்சய் உணவு வாங்கும் கடை இதற்கு மேல் இருக்காது.

“நான் உப்புமா செய்து தரவா?” எனக் கேட்டாள்.

“ம்ம்… வேணாம். ஒரு ஐடியா இருக்கு ஒர்க் அவுட் ஆகுதா பார்க்கலாம்” என்றவன் ஒரு சப்பாத்தியை பிய்த்துப் கிரேவியில் ஊற வைத்தான்.

“என்ன செய்றீங்க சஞ்சய்?”

“இந்த சப்பாத்தி இருக்கானே சப்பாத்தி… அவன் ஒரு ரக்கட் பையன். இந்த கிரேவி இருக்காளே கிரேவி இவதான் அவனோட சைட். நம்ம பையன் இப்ப அவன் சைட்கிட்ட உருகித்தானே ஆகணும்?” எனக் கேட்டான்.

அவன் பேச்சில் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ஏன் சப்பாத்தி பொண்ணாவும் கிரேவி பையனாவும் இருக்க கூடாதா?” எனக் கேட்டாள்.

“சான்ஸே இல்லை. பசங்கதான் பொண்ணுங்ககிட்ட மெல்ட் ஆவாங்க, பொண்ணுங்க அவ்ளோ சீக்கிரம்லாம் மாற மாட்டாங்க, அப்படியே ஆனாலும் வெளில காட்டிக்க மாட்டாங்க. சப்பாத்திதான் தன்னை விட்டு தருது. கிரேவி தான் இஷ்டத்துக்கு அதை மாத்துது. கிரேவிதான் பொண்ணு”

“ஹையோ பொண்ணுங்க பத்தி நிறைய தெரியும் போல”

“பின்ன எத்தனை பேருக்கு ரூட் விட்ருப்போம்?”

“ம்ஹூம்?”

“ஏதும் நிலைச்சு நிக்கல மீரா. ஹான்… ஒன்னே ஒன்னு ஸ்கூல் ஃபைனல்ஸ்ல கொஞ்சமா செட் ஆச்சு”

“ஸ்கூல்லயா?” வாயில் கை வைத்து அதிர்ந்தாள் மீரா.

“ஆமாம், எனக்கு அப்போதான் பொண்ணுங்கன்னா பிடிக்க ஆரம்பிச்சது. சொல்றத கேளு. அப்படி இப்படி பார்த்திட்டு இருந்தோம். கார்த்தி ஸார் இல்லை கார்த்தி ஸார்… வச்சு வெளுத்து விட்டுட்டார்”

“உங்களையா?”

“ம்ஹூம்… நாங்க ரெண்டு பேரும் இப்படி அப்படி பார்க்கிறோம்னு அவர்கிட்ட போட்டு கொடுத்தவனை”

“ஹையோ அப்புறம்?”

“இந்த வயசுல இப்படிலாம் பேசுவியா? நல்ல பையனா இருக்கிறவனையும் கெடுப்பியா அப்படினு. நமக்குதான் தாங்காதே. அவனை விட்ருங்க ஸார், அவன் சொல்றது உண்மைதான்னு நானே போய் சொல்லிட்டேன். அந்த பொண்ணு ஒரே அழுகை. பயந்திடுச்சு போல. இவன்தான் அப்படியா இருக்கும் நான் அப்படிலாம் இல்லைனு பிளேட்டை மாத்தி போட்டுட்டா”

“அச்சச்சோ! அப்புறம்?”

“ஆம்பள பையன் அழுதாலே தாங்காது. பொம்பள புள்ள, அதும் நான் ஆசை வச்ச பொண்ணு வேறயா? ஆமாம் ஸார் அவ என் பக்கம் திரும்பினது கூட இல்லை, நான்தான் அவளை பார்த்திட்டே இருந்தேன்னு சொல்லிட்டேன்”

“நிஜமாவா?”

“பொய்யா சொல்லிட்டு இருக்கேன்?”

“ஸார் என்ன பண்ணினாங்க?”

“எதுவும் பண்ணல. தனியா கூப்பிட்டு அட்வைஸ் பண்ணினார். இந்த வயசு இப்படித்தான், அதுல சிக்காம நீ படிப்புல கான்சென்ட்ரேட் பண்ணணும். உன் அம்மா அப்பாவை யோசி அப்படின்னு சாலிடா ஒரு மணி நேரம் காதை தீய வச்சிட்டார். போதும் ஸார் இப்படி நீங்க பேசுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா சத்தியமா பார்த்திருக்க மாட்டேன்னு கை எடுத்து கும்பிட்டுட்டேன்” என சொல்லி முடித்து இப்போதும் கை எடுத்து கும்பிட்டான் சஞ்சய்.

“என்னை ஏன் கும்பிடுறீங்க சஞ்சய்? அதெல்லாம் எப்பவோ நடந்ததுதானே, நான் தப்பா எடுக்கல” என்றாள்.

“ஹையோ அதுக்கில்லம்மா இந்த கும்பிடு. இனியொரு தடவ சப்பாத்தி செய்யாத. சப்பாத்திக்கு கிரேவியை செட் பண்ணி கொடுக்கிற வேலையெல்லாம் செஞ்சுதான் வயித்த நிறைக்கணுமா? நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் வேணாம்?” என அவன் கேட்க, அவளால் சிரிப்பை நிறுத்தவே முடியவில்லை.

“இப்படி சிரிச்சிட்டே இரு” என்றான்.

“அதெப்படி முடியும் சஞ்சய்? நல்லது கெட்டது எல்லாம் மாறி மாறித்தானே வரும்?” என்றவள் பெருமூச்சு விட்டாள்.

“என்ன?”

“இல்லை ஒன்னுமில்ல”

“ஒன்னுமில்லாம மூஞ்சு எப்படி டக்குனு மாறும்? என்ன நினைச்சேன்னு என்கிட்ட சொல்ல வேணாம். ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வச்சுக்க. இதுவரைக்கும் எப்படியோ, இனி உனக்கு எந்த கெட்டதும் நடக்காது, நடக்க விட மாட்டேன்”

“ம்ம்… ஆனா பிராக்டிகலா யோசிங்க சஞ்சய். உங்க கையில இல்லை எல்லாம்”

“ம்ம்… இருக்கலாம். ஆனாலும் அந்த நேரம் உன்னை வருத்த பட விடாம ஜாலியா வச்சுக்குவேன்” என சொல்லிக் கொண்டே சப்பாத்தியை சாப்பிட்டான்.

“ஹ்ம்ம்… இப்போ நல்லாருக்கு. நீயும் சாப்பிடு” என அவன் சொல்ல, அவளுக்கும் இப்போது சாப்பிட இலகுவாக இருந்தது.

எல்லா சப்பாத்திகளையும் ஒரே தட்டில் பிய்த்துப் போட்டு கிரேவியில் ஊற வைத்தான்.

“எனக்கு கொஞ்சமா இந்த தட்டுல வைங்க” என சொல்லி இன்னொரு தட்டை எடுத்து நீட்டினாள்.

“ஏன் இதுல எடுத்து சாப்பிட்டா என்னாகும்?” புருவங்களை உயர்த்திக் கேட்டான்.

“ஒன்னும் ஆகாது, உங்களுக்கு பிடிக்குமோ என்னவோன்னுதான்…” என இழுத்தாள்.

“என் ஃபிரெண்ட்ஸ் கேங் இருக்கும் போது நீ பார்த்திருக்கணும். பத்து பேரு ஒரு இலையில கைய வச்சு சாப்பிடுவோம். இதெல்லாம் விஷயமா?”

ம் போட்டுக் கொண்டே அவள் சாப்பிட, “ஆனா நீ என் ஃபிரெண்ட் இல்லை” என்றான்.

என்ன சொல்கிறான் என அவனை பார்த்தாள்.

கண்களை மேலே உயர்த்தி, “ஃபிரெண்ட்டுக்கும் மே…ல…” என நீட்டி முழக்கினான். பின் குரலை தழைத்து, “ஒரு தட்டில் இரண்டு கைகள்னு பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சாதான் அப்படியே ஒவ்வொன்னா முன்னேற முடியும் நாம” என்றான்.

“என்ன?”

“ஷேரிங்… ஷேரிங் பத்தி சொல்றேன் மீரா. மழை பேஞ்சா ஒரு குடையில போறது, வெயில் அடிச்சா ஒரு மரத்து நிழல்ல ஒதுங்குறது… அப்படி அப்படி சொன்னேன்” என்றவனுக்கு உளறி கொட்டுகிறோம் என்பது புரியத்தான் செய்தது.

இப்படியெல்லாம் ஏன் வார்த்தையை விட்டு விழிக்க வேண்டும் என தன்னையே மனதில் திட்டிக் கொண்டான் சஞ்சய்.

“ஏதாவது பேத்தாம சாப்பிடுங்க” என சொல்லி அவளே அவனை இலகுவாக்கினாள்.

சஞ்சய் மீராவின் மனதை லேசாக்கி விட்டிருந்தான். அதில் அவள் படுக்க சென்றதும் உறங்கி விட்டாள்.

சஞ்சய்க்கு பொதுவாகவே தாமதமாகத்தான் உறக்கம் வரும். இதில் கார்த்திகேயன் சொன்ன விஷயங்கள் அவனை குழப்பியிருந்ததில் யோசனையுடன் விழித்தே கிடந்தான்.