மருத்துவமனைக்கு காண்பிக்க வந்த வயதான இருவர் தனியாக பேசிக் கொண்டு நிற்கும் இவனை விசித்திரமாக பார்த்தனர். அவர்களை பார்த்து அசடு வழிய சிரித்துக்கொண்டே பைக்கை எடுத்தான்.

அவன் திரும்பி செல்லும் போதும் டிராபிக் போலீஸ் நின்றிருக்க, எதற்கு வம்பு என கூகுள் மேப் போட்டு ஊரை சுற்றிக் கொண்டு அவன் வீடு வந்து சேர ஒன்பது மணியாகி விட்டது.

பைரவ் தாதாவின் ஆள் அரிந்தன் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தான். அழைத்து வரச் சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டவன் தயாராகி வருவதாக கைப்பேசி உதவியுடன் அவனுக்கு விளக்கி உள்ளே சென்றான். அன்று போல் இன்று அவனை அவசர படுத்தவில்லை அரிந்தன்.

ஆகவே அலுவலகம் செல்லவே தயாராகி, சாப்பிட்டு,  மீரா போட்டு வைத்திருந்த தேநீரையும் வீணாக்காமல் பருகி, புதிதாக வீற்றிருந்த மதிய உணவு டப்பாவையும் எடுத்து வைத்துக் கொண்டான். அலுவலகத்துக்கு ஒரு மணி நேரம் பெர்மிஸன் சொல்லி விட்டே புறப்பட்டான்.

பைரவ்வின் வீட்டில் சஞ்சயின் திருமண நாளில் இங்கு அழைத்து வரப் பட்ட தமிழ் ஆளும் இருந்தான். இன்று தெளிவான நிலையிலேயே இருந்தான்.

மீராவுக்கு தேநீர் இடைவேளை, சஞ்சய் எந்த செய்தியும் அனுப்பியிராத காரணத்தால் அவனுக்கு அழைத்தாள். தாதாவின் வீட்டிலிருந்தவன் அழைப்பை ஏற்காமல் ‘வந்து விட்டேன்’ என ஒரு வார்த்தையில் செய்தியாக அனுப்பி வைத்தான்.

சஞ்சயை புன்னகை முகமாக வரவேற்றார் தாதா. திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதை தமிழ் பேசத் தெரிந்தவர் மூலமாக சஞ்சய்க்கு சொன்னார். அவரே ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார். அது சம்பந்தமாக சில நிமிடங்கள் பேச்சு சென்றது.

அப்போதுதான் ராஜசேகரனின் மகன் கேசவ் உயிர் போகக் கூடிய தீவிர கட்டத்தில் இருப்பதும் அவனுக்கு வாரிசு பெற்றுத் தரத்தான் மீராவை மணமுடிக்க முயற்சி செய்திருக்கிறார் ராஜசேகரன் என்பதும் சஞ்சய்க்கு தெரிய வந்தது. கேட்ட உடனே சஞ்சய்க்கு இரத்தம் கொதிப்பது போலத்தான் இருந்தது.

அவனது முக மாற்றத்தை கண்டு தோளில் தட்டிக் கொடுத்த பைரவ், இப்போதுதான் அப்படி ஏதும் நடக்கவில்லையே, இருவரும் நன்றாக வாழுங்கள் என்றார். அவருக்கு நன்றி சொன்னான் அவன்.

தான் சொல்லும் நாள் அன்று இருவரும் பதிவாளர் அலுவலகம் வர வேண்டும் என பைரவ் சொல்ல, சரி என சொல்லி கிளம்பினான் சஞ்சய்.

மனமோ மீராவுக்கு நடக்க இருந்த கொடுமையை நினைத்து கனத்து கிடந்தது. அப்படி ஏதும் ஆகியிருந்தால் என எண்ணியவன் திடீரென பைக்கை சாலையில் நிறுத்தியிருந்தான். சாதாரணமாகவே யாருக்கும் எந்த கெடுதல் நடந்தாலும் அவனால் தாங்க இயலாது. அவன் அன்பு கொண்டிருக்கும் ஒருத்திக்கு எனவும் உள்ளம் நடுங்கி விட்டது.

நல்ல வேலையாக போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியாக இருந்தது. தன்னை சுதாரித்துக் கொண்டு வண்டியை எடுத்தவன் மெதுவாகத்தான் பயணித்தான்.

அலுவலகம் சென்றாலும் அவனுக்கு வேலையே ஓடவில்லை. மீராவிடம் பேசினால் தேவலாம் போலிருக்க உடனே அவளுக்கு அழைத்து விட்டான்.

 சீருடையின் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த கைப்பேசி வைப்ரேட் ஆவது தெரிந்தாலும் எடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்தாள் மீரா.

அக்ஷய்க்கு சிகிச்சை முடிந்து வார்டு கொண்டு வரப் பட்டிருந்தான். அவனை கவனித்துக் கொண்டிருந்தாள். அரை மயக்கத்தில் மீராவின் நெற்றி செந்தூரம் அக்ஷயை சோகமாக்கியது. அவள் கவனித்தாலும் கண்டு கொள்ளாதது போலவே இருந்து கொண்டாள்.

மீராவின் பணி நேரம் முடிந்தது. அவளை விடுவிக்க வந்த பெண் பானுவின் முகமே சரியில்லை. கர்ப்பமாக இருக்கும் பானு, மீராவை விட இரண்டு வயதே பெரியவள். என்னவென விசாரித்தாள் மீரா.

பானுவுக்கு வீட்டில் செய்து வைத்த திருமணம்தான். கணவன் சரியான சந்தேக பேர்வழி. மனைவி இரவுப் பணிக்கு செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. பானுவை வேலையை விட்டு விட சொல்கிறானாம். திருமணத்துக்கு முன்பே ஆதரவற்ற தன் அம்மாவுக்கு சம்பளத்தில் பாதியை தருவேன் என சொல்லியிருக்கிறாள் பானு. இப்போது வேலையை விட்டால் அம்மாவை பார்க்க முடியாது என கணவன் பேச்சை மறுத்து விட்டாள்.

அதில் கணவன் மனைவி இருவருக்கும் மனஸ்தாபம் வருவதும் போவதுமாக இருக்கும். இவளுக்கு இரவுப் பணி என்றால் சண்டையும் வரும்.

இரண்டு தினங்களில் பானுவுக்கு இரவுப் பணி வருகிறது. இன்று சண்டை கொஞ்சம் அதிகமாகவே இருக்க, வாடி தெரிகிறாள் அவள்.

மீராவுக்கு என்ன சொல்லவென தெரியவில்லை. புலம்பி விட்டதில் மனம் இலகுவாக உணர தன் வேலையை பார்க்கத் துவங்கி விட்டாள் பானு.

ஆடை மாற்றிக் கொண்ட மீராவுக்கு வீடு போய் சேரும் வரையெல்லாம் சஞ்சயுடன் பேசாமல் இருக்க முடியும் என தோன்றவில்லை. மருத்துவமனையில் இருந்த படியே சஞ்சய்க்கு அழைத்துப் பேசினாள்.

“கால் அட்டென்ட் பண்ண முடியாத அளவுக்கு ரொம்ப பிஸி சஞ்சய், அப்புறம் பேசணும் பேசணும்னு நினைச்சிட்டேதான் இருந்தேன், சுத்தமா டைம் கிடைக்கல, ஸாரி சஞ்சய்” என்றாள்.

“இட்ஸ் ஓகே மீரா, நீ மார்னிங் கால் பண்ணினப்போ என்னால பேச முடியல. அதான் ஃப்ரீ ஆனதும் கூப்பிட்டேன்” என்றான் சஞ்சய்.

“அவ்ளோதானா? நான் கால் பண்ணின பிறகுதான் மெசேஜ் போட்டீங்க, காலைல வேற போலீஸ் ஃபைன் போட்டாங்களா. வீட்டுக்கு போகும் போது உங்களுக்கு என்னவோ ஏதோன்னு பயந்திட்டேன்” என்றாள்.

“சும்மா சும்மா பயப்படறத விடு. விவரம் இல்லாதவனா நான்? எது வந்தாலும் சமாளிக்க எனக்கு தெரியும். அப்படித்தான் எவனும் உன்னை நெருங்கணும்னாலும் என்னை தாண்டித்தான், யாருக்கும் பயப்பட கூடாது நீ, புரிஞ்சுதா?” என்றான் அவன்.

“என்ன திடீர்னு சினிமா வசனம் பேசுறீங்க?” என விளையாட்டாக கேட்டவள், “ஏன் சஞ்சய் ஊர்ல எதுவும் பிரச்சனையா?” என தீவிர தொனியில் கேட்டாள்.

மீராவுக்கு ராஜசேகரனின் முழு எண்ணமும் தெரிய வேண்டாம் என நினைத்தவன், “சேச்ச அதெல்லாம் இல்லை” என்றான்.

அவன் சொன்ன விதமே எதுவோ இருப்பதாக அவளுக்கு பட்டது.

“சொல்லுங்க சஞ்சய்” என கண்டிப்போடு கேட்டாள்.

சமாளிக்க நினைத்தவன், “ஹாஸ்பிடல்ல எவனோ உன்னை பார்க்கிறான்னு சொன்னதானே? அதை நினைச்சு ஒர்ரி பண்ணிப்பியோன்னு சொன்னேன்” என்றான்.

“நான் எங்க ஒர்ரி பண்றேன்? நீங்கதான் அதே நினைப்பா இருக்கீங்க போல”

“என் வைஃபை எவனோ பார்க்கிறான்னா எனக்கு கடுப்பு இருக்கும்தான்”

“இந்த விஷயத்துல கொஞ்சம் லைட்டா இருங்க சஞ்சய்”

“லைட்டான்னா… புரியல… கண்டுக்காம இருக்கவா?”

“உங்கள்ட்ட அவனை பத்தி சொல்லியிருக்கவே கூடாது. எம்மேலதான் தப்பு”

“லூசு மாதிரி பேசாத. என்ன நடந்தாலும் என்கிட்ட சொல்ற”

“ஒன்னு விடாம ஒப்பிக்கணுமா நான்?”

“ம்ம்… அதுல என்ன தப்பு?”

“நான் உங்களை அப்படி கேட்கிறேனா சஞ்சய்?”

“கேளேன், நானா கேட்க வேணாம்னு சொன்னேன்?”

“சஞ்சய்…”

“ஸீ மீரா, சில விஷயங்கள் இப்படித்தான். நீ ஹாஸ்பிடல்லேருந்து வீட்டுக்கு கிளம்பறப்பவும் வீடு போய் சேர்ந்தப்புறமும் எப்பவும் எனக்கு மெசேஜ் பண்ணிடு” என்றதும் மீண்டும் ஏதும் ஆபத்தோ என யோசித்து அமைதியானாள் அவள்.

அவள் பயந்து விடக்கூடாது என நினைத்தவன், “ஹஸ்பண்ட்க்கு இதையெல்லாம் சொல்றது வைஃப்க்கு வழக்கம்தான், கண்டதும் யோசிக்காத” என்றான்.

பானுவின் நினைவு வந்தது மீராவுக்கு. பானுவின் கணவனுடன் எல்லாம் சஞ்சயை அவள் ஒப்பீடு செய்யவில்லை என்றாலும் தங்களுக்குள் ஆரம்பத்திலேயே புரிதலை கொண்டு வந்து விட வேண்டும் என நினைத்தாள்.

“வந்து சஞ்சய்…” எனத் தயங்கியவள், “எனக்கு நைட் ஷிப்ட் எல்லாம் வரும், என் ஒர்க் நேச்சர் கொஞ்சம் புரிஞ்சுகோங்க சஞ்சய், பேஷண்ட்ஷும் அவங்க அட்டெண்டர்ஸும் என்னை எப்படி பார்க்கிறாங்கன்னு எல்லாம் நான் யோசிக்கிறதே இல்லை. நீங்களும் டீப்பா யோசிக்காதீங்க. அப்போதான் நமக்குள்ள ஸ்மூத்தா போகும்” என்றாள்.

“என்ன சொல்லிட்டு இருக்க நீ? நான் உன்னை சந்தேக படுறேன்னு சொல்றியா… இல்லை இனி சந்தேக படுவேன்னு நினைக்கிறியா?” சஞ்சயின் பேச்சில் காட்டம் வெளிப்பட்டது.

“ஹையோ அப்படியில்லை”

“வேற எப்படி?” என அவன் கேட்டதற்கு அவளால் விளக்கம் சொல்ல முடியவில்லை.

அவள் அமைதியாக இருக்க, அங்கே அவனது முகமும் இறுகிப் போனது.

சில நொடிகள் சென்று, “சஞ்சய்…” என கெஞ்சலான குரலில் அழைத்தாள்.

“ம்ம்… உனக்கு பஸ்க்கு டைம் ஆச்சு, நீ கிளம்பு வைக்கிறேன்” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான்.

வீட்டுக்கு வந்தவளுக்கு எந்த வேலையுமே ஓடவில்லை. எப்படியோ சாப்பிட்டு படுத்தாள். முந்தைய தினம் போல இன்று உறங்க முடியாமல் சஞ்சயின் குரலில் தெரிந்த பேதம் அவளை தவிக்க வைத்தது.

சஞ்சய் வருத்த படுவான் என்கிற எண்ணமே அதற்கு காரணமான அவளை அவளுக்கு குற்றவாளி போல காண்பித்தது. தன்னையே நிந்தித்துக் கொண்டாள்.

மீரா பேசியது சஞ்சயை வெகுவாக பாதித்திருந்தது. அவள் மீது கோவமாக இருந்தான். வேலை நேரம் முடியும் நேரத்தில் காபிக்கு செல்லலாமா என மாலினி கேட்கவும் ஒன்றும் சொல்லாமல் அவளை நெற்றி சுருக்கி பார்த்தான்.

“ஒரே ஆஃபிஸ்ல இருந்துகிட்டு இப்படி என்கிட்ட ஸ்ட்ரேஞ்சர் மாதிரி நீ நடந்துக்கிறது நல்லாவா இருக்கு சஞ்சய்? ப்ளீஸ் நாம பேசி சரி பண்ணிக்கலாம்” என அவள் சொல்லவும் சரிதான் என அவளுடன் சென்று விட்டான் சஞ்சய்.

‘எப்போது வந்து சேர்வான் சஞ்சய்?’ என அவனை எதிர்பார்த்துக் கொண்டே காத்திருந்தாள் மீரா.