“ஜெனரலா நைட்ல அதிகமா சாப்பிட மாட்டேன். நீ என் ரூல்ஸ் எல்லாம் பிரேக் பண்ற பிளான்ல இருக்கியா?” என குற்றம் சுமத்தினான்.

“நல்லாருக்கா சஞ்சய், இப்படி நல்லா வரும்னு நானே நினைக்கல” என்றாள்.

“செம செம!” என பாராட்டிக் கொண்டே சாப்பிட்டான்.

அளவாகத்தான் செய்திருந்தாள் மீரா. பாத்திரம் காலியாகி விட்டது. அங்கிருந்த தண்ணீர் குழாயிலேயே கை கழுவி, தட்டுகளையும் கழுவினார்கள். என்னவோ அவனுக்கு கீழே செல்லவே மனமில்லை. அவளுடன் இருக்கும் நேரம் அவனுக்கு மிகவும் பிடித்தது.

அவன் கட்டை சுவரில் அமர்ந்து கொள்ள, “போலாம் சஞ்சய்,” என்றாள்.

“என்ன அவசரம் மீரா?” எனக் கேட்டான்.

“சரியா போச்சு, இப்போ தூங்கினாதான் காலைல எந்திரிக்க முடியும்”

“ப்ச் இப்பவே கீழ போனா ஏதோ ஒன்னு அரைகுறையா விட்டுட்டு போன ஃபீல் வரும் எனக்கு”

“எதை அரைகுறையா விட்டுட்டு போறோம்?” என அவள் கேட்டதற்கு அவனிடம் சரியான பதில் இல்லை.

தெரியவில்லை என்பது போல தோள்களை குலுக்கியவன், “எல்லாத்துக்கும் ஆன்சர் தெரியனுமா என்ன? அந்த நேரம் என்ன தோணுதோ அதை செய்திட்டு அப்படியே போய்ட்டு இருக்கணும்” என்றான்.

“ம்ம்…  அடுத்து உங்களுக்கு என்ன தோணுமோ? ரெண்டு காலையும் தூக்கிட்டு நிக்க சொன்னாலும் சொல்வீங்க? அந்த வித்தை எல்லாம் எனக்கு தெரியாது” என்றாள்.

“ஹேய் அதெல்லாம் ரொம்ப சிம்பிள். உன்னால முடியும், என்னாலதான் இங்க முடியுமான்னு தெரியல”

“மேல எதையாவது பிடிச்சுகிட்டு தொங்குறத சொல்றீங்களா? இங்க மேல பிடிச்சுக்க எதுவுமே இல்லை, என்னால மட்டும் எப்படி முடியும்?” எனக் கேட்டுக் கொண்டே பாத்திரங்களை எடுப்பதற்காக குனிந்தாள் அவள்.

சட்டென அவளின் பின் பக்கம் வந்து அவளின் வயிற்றிலும் மார்பிலும் தன் கைகளை சுற்றிப் பிடித்து தூக்கியிருந்தான் சஞ்சய்.

பதறி விட்டாள் மீரா.

“நான் உன்னை தூக்கின மாதிரி உன்னால முடியுமா இல்லைதானே? பாரு உன் கால் ரெண்டுமே தரையில இல்ல” என சிரித்துக்கொண்டே சொன்னான்.

“ப்ளீஸ் சஞ்சய், விடுங்க என்னை” என கெஞ்சலாக சொன்னாள்.

“ஹேய் ஜஸ்ட் ஃபன் மீரா. அதுக்கு ஏன் உன் ஹார்ட் இப்படி வேகமா துடிக்குது?” தான் உணர்ந்ததை கேட்டான் சஞ்சய்.

“இறக்கி விடுங்க சஞ்சய்!” என கண்டிப்புடன் சத்தமிட்டாள்.

 அதிர்ந்து போய் அவளை விட்டவன், “ஏன் மீரா இவ்ளோ கோவம்?” எனக் கேட்டான்.

பட படத்துக் கொண்டிருக்கும் தன் மார்பில் கை வைத்து, ஆசுவாசமாக முயன்று கொண்டிருந்தாள்.

“மீரா?”

“இப்படித்தான் செய்வாங்களா சஞ்சய்? நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை” என்றவள், விழிகளை தாழ்த்திக் கொண்டு, சின்னக் குரலில் “கூச்சமா இருக்கு சஞ்சய்” என்றாள்.

நிலவொளியில் அரை இருளில் அவளை அப்படி பார்க்க பார்க்க அந்த தோற்றம் அவனை ஈர்த்தது. சஞ்சய் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கவும் தன் பேச்சால் காயப் பட்டு விட்டானோ என்ற கவலையுடன் பார்த்தவள், அவனது ரசனையான சிரிப்பில் இனிதாக திகைத்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“போலாமா சஞ்சய்?” அவனை பாராமலே கேட்டாள்.

“வேணாம்னுதான் தோணுது மீரா” என்றவனை அவள் கண்டனமாக பார்க்க, “சரி சரி போலாம்” என இரண்டு கைகளையும் உயர்த்தி சரணடைவது போல சொன்னான்.

கீழே வந்தவள் படுக்க செல்லாமல் சமையலறை சென்று அடுத்த நாளுக்காக இப்போதே கொஞ்சம் தயார் செய்ய ஆரம்பித்தாள். சமையல் மேடையில் அமர்ந்து கொண்டு வாயடித்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.

உதவ சொல்லி அவளும் கேட்கவில்லை, அவனுக்கும் தோன்றவில்லை. இந்த வேலையெல்லாம் முன்னே பின்னே அவனுக்கு தெரிந்தால்தானே செய்வதற்கு?

வேலைகளை முடித்தவளுக்கு அலுத்துதான் விட்டது.

“நாம செர்வன்ட் யாராச்சும் பார்க்கலாமா மீரா?” எனக் கேட்டான்.

“கட்டுப்படி ஆகாதுங்க”

“ப்ச்… நீ கஷ்ட படுற”

“பழக பழக சரியாகிடும். நாமளே மேனேஜ் பண்ணிக்கலாம்” என்றவள், “சீக்கிரம் தூங்குங்க” என சொல்லி அவளது அறைக்கு சென்றாள்.

அவளது அறை வாயில் வரை வந்தவன், “உனக்கு மட்டும் எப்படி டான்னு தூக்கம் வருது, என்னை பாரு எவ்ளோ ப்ரிஸ்க்கா இருக்கேன்னு?” என்றான்.

“நீங்க லேட்டா தூங்கியே பழகிட்டீங்க. எல்லாமே பழக்கம்தான், நீங்களும் இப்போ போய் படுத்து கண்ண மூடிக்கோங்க. முதல்ல கஷ்டமா இருக்கும், போக போக சீக்கிரம் தூங்கிடுவீங்க”

“ப்ச்…” என சலித்தவன் தன் அறைக்கு திரும்பி அவள் சொன்ன படியே செய்தான். சில நிமிடங்களில் எல்லாம் பொறுமை பறக்க, கைப்பேசியை துணைக்கு எடுத்துக் கொண்டான்.

அடுத்த நாளும் திட்டமிட்ட நேரத்துக்குள்ளாக மீராவால் சமையலை முடிக்க முடியவில்லை. முதல் நாள் காலை உணவு மட்டும்தான் செய்தாள், இன்று மதிய உணவும் சேர்த்து செய்ததால் காய்கள் அறிந்து வைத்த போதும் நேரம் இழுத்து விட்டது.

சஞ்சயின் துணையின்றி பேருந்தில் செல்லத்தான் நினைத்திருந்தாள். முடியாது என்பது புரிய, அவனை எழுப்பி விட்டுத்தான் குளிக்க சென்றாள்.

குளித்து ஆடை மாற்றிக் கொண்டவள் உணவை பேக் செய்ய வர, இன்னும் எழுந்து கொண்டிருக்கவில்லை சஞ்சய்.

அவனது அறை வாயிலில் நின்று, “சஞ்சய்… ப்ளீஸ் எந்திரிங்க, எனக்கு டைம் ஆகிடுச்சு” என்றாள்.

முயன்று கண் விழித்தவனுக்கு இன்னும் அசதி தீரவில்லை. பதற்றமாக நின்றிருந்தவளிடம், “டூ மினிட்ஸ்ல வந்திடுறேன்” என சொல்லி குளியலறை சென்றான்.

சஞ்சய் பைக் சாவியோடு வரும் போது வீட்டுக்கு வெளியில் நேரத்தை கணக்கிட்டு அவஸ்தையாக நின்றிருந்தாள் மீரா.

அவன் கதவை பூட்டப் போக, வேகமாக வந்து சாவியை வாங்கியவள், “நான் லாக் பண்றேன், பைக்கை எடுங்க நீங்க” என்றாள்.

அப்போதுதான் அவளை கவனித்து பார்த்தவன், “சிந்தூர் வச்சுக்கலையா நீ?” எனக் கேட்டான்.

நெற்றியை தொட்டுப் பார்த்தவள் உச்சு கொட்டி, “மறந்திட்டேன் சஞ்சய், நாளையிலேருந்து கண்டிப்பா வச்சுக்கிறேன்” என்றாள்.

கதவை பூட்டப் போனவளிடமிருந்து சாவியை வாங்கிக் கொண்டவன், “போ போய் வச்சிட்டு வா, கரெக்ட் டைம்க்கு உன்னை ட்ராப் பண்ண வேண்டியது என் பொறுப்பு” என்றான்.

அவனை அவள் முறைக்க, “டைம் ஆகுது பாரு போ போ” என்றான்.

வாதாடிக் கொண்டிருப்பதை காட்டிலும் அவன் சொல்வதை செய்து விடலாம் என எண்ணி உள்ளே சென்றவள் அதி வேகமாக திரும்பி வந்தாள்.

இப்போதும் நெற்றியில் சிந்தூர் இல்லாமல் இருக்க, அவன் முறைத்தான்.

“ஹேண்ட் பேக்ல இருக்கு சஞ்சய். படுத்தாம பைக் எடுங்க” என கடிந்தவள் சாவியை வாங்கி கதவை அடைத்தாள்.

முகத்தை உர் என வைத்துக் கொண்டு அவன் பைக்கை எடுக்க, அவனது சட்டைப் பையில் சாவியை வைத்தவள், “நல்ல மூடோட ஓட்டுங்க. ரெண்டு பேருக்கும் உயிர் முக்கியம்” என்றாள்.

“ம்ம்…” என அவன் உறும, வண்டியை எடுக்க சொல்லி “ம்ம்…” போட்டாள் அவள்.

அவசரத்தில் சஞ்சய் ஹெல்மெட் போட்டிருக்கவில்லை. அது மீராவின் கவனத்திலும் இல்லை.

வேகமாகத்தான் பைக்கை ஓட்டினான் சஞ்சய். மருத்துவமனை நெருங்கும் வழியில் டிராபிக் போலீஸ் பைக்கை நிறுத்தி விட்டனர்.

ஹெல்மெட் இல்லை, அதி வேகம் என அபராதம் போட்டு விட்டனர். சஞ்சய் மீராவை மருத்துவமனையில் இறக்கி விடும் போது அவளுக்கு பத்து நிமிடங்கள் தாமதமாகியிருந்தது.

“ப்ச் இதுக்குத்தான் சீக்கிரம் தூங்க சொல்றேன் சஞ்சய்” என்றாள்.

“என்ன இப்போ… ஃபைன்தானே? கட்டிக்கலாம். உனக்கு என்ன… இதை லீவ்னு சொல்வாங்களா? சொல்லு, திரும்ப வீட்டுக்கு போயிடலாம்” என அலட்சியமாக சொன்னான்.

“மூனு நாள் கா மணி நேரம் வரை லேட்டா வரலாம்”

“அப்புறம் என்ன? ரிலாக்ஸா போ”

“ரொம்ப ஃபாஸ்ட்டா பைக் ஓட்டினீங்க. இப்போ பார்த்து நிதானமா போங்க. வீடு போனதும்…” அவள் சொல்லிக் கொண்டிருக்க, “நானெல்லாம் பைக்ல ரேஸே போயிருக்கேன். பயப்படாத” என்றான்.

மேலும் பேசிக் கொண்டிருந்தால் இன்னும் தாமதமாகும் என்பதால், “வர்றேன்” என சொல்லி திரும்பினாள்.

“இன்னிக்கு லாஸ் ஆஃப் பே ஆனாலும் பரவாயில்லை, மறக்காம சிந்தூர் வச்சிட்டு வார்டுக்கு போற” என அவன் சொன்ன வேகத்தில், அந்த அவசரத்திலும் அவளுக்கு சிரிப்பு வந்தது.

“ம்ம்ம்… பார்க்கிறேன்” என சொல்லி அவனை டென்ஷன் செய்து விட்டு அவனது பார்வையிலிருந்து மறைந்து போனாள்.

“பார்க்கிறாளா? எதை பார்க்க போறா? நைட் பேசிக்கிறேன். அவன் பேர் என்ன சொன்னா… ஏதோ…” அக்ஷயின் பெயர் நினைவு வரவில்லை அவனுக்கு. “எவனா இருந்தாலும் சரி இன்னிக்கு மட்டும் இவளை பார்க்கட்டும… நேர்ல போயி கண்ணை நோண்டிட்டு வர்றேன்” என்றான்.