பாத்திரம் கழுவி, தேநீர் போட்டு அவனுடையதை ஃபிளாஸ்க்கில் வைத்து, காய்கறிகள் சேர்த்த சேமியா கிச்சடி செய்து முடிக்கவுமே, தயாராக நேரமாகி விட்டதை கண்டு பதற்றமடைந்தாள்.
வீட்டு வேலைகளில் கை தேர்ந்தவள் கிடையாது. ஆகவே அவ்வளவு விரைவாக அவளால் செய்ய முடியவில்லை. சட்னிக்கு எடுத்து வைத்ததை அப்படியே வைத்து விட்டு குளிக்க சென்று விட்டாள்.
தேநீர் சாப்பிட்டதால் அவளுக்கு பசியில்லை. இல்லை என்றாலும் இப்போது சாப்பிடவும் நேரமில்லை. டப்பாவில் கிச்சடியோடு கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து வைத்துக் கொண்டு கைப்பையில் போட்டுக் கொண்டாள்.
தான் சாப்பிட்டுக் கொள்வேன், சஞ்சயால் சட்னி இல்லாமல் சாப்பிட முடியுமா என யோசனையாகி விட்டது. நேரத்தையும் உறங்கிக் கொண்டிருக்கும் சஞ்சயையும் மாறி மாறி பார்த்தாள். மனம் கேட்கவில்லை, துப்பட்டாவை எடுத்து வைத்து விட்டு வேகமாக சமையலறை சென்றாள்.
சஞ்சய்க்கு இது எதுவும் தெரியவில்லை.
சமையலறையை ஒதுங்க வைக்கவெல்லாம் அவளிடம் நேரமில்லை. சட்னி கூட மிக்சி ஜாரிலேயே வைத்திருந்தாள்.
சஞ்சய் இருந்த அறையின் வாயிலில் நின்று எட்டிப் பார்த்தாள். அவனிடம் அசைவு தெரியவும் அருகில் சென்றவள், “சஞ்சய்…” என அழைத்தாள்.
ஒரு முறை விழிகள் திறந்ததுப் பார்த்தவன் மீண்டும் கண்கள் மூடி, “என்ன மீரா?” என உறக்கம் கலையாமல் கேட்டான்.
“பிரேக் ஃபாஸ்ட் மட்டும்தான் செய்திருக்கேன். சட்னி மிக்சி ஜார்லேயே இருக்கு. சாப்பிட்ருங்க, நான் கிளம்பறேன்” என்றவள் அவனது பதிலுக்கு காத்திராமல் வெளியேறி விட்டாள்.
வேகநடை போட்டு பேருந்து நிறுத்தம் வந்ததில் லேசாக மூச்சு வாங்கியது அவளுக்கு. ஒரே பேருந்துதான், மருத்துவமனை வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம். அவள் அங்கு வந்த இரண்டு நிமிடங்களில் எல்லாம் பேருந்தும் வந்து விட்டது.
அவள் ஏறத் தயாராக, “மீரா மீரா…” என்ற சஞ்சயின் அழைப்பு கேட்டது.
சஞ்சய்தான் பைக்கில் வந்திருந்தான். பேருந்து வந்து விட்டதால் இவளருகில் வர முடியாமல் தள்ளியே இருந்தான்.
தான் பேருந்தில் போய் விடுவதாக சைகையில் சொன்னாள்.
“பிச்சிடுவேன்!” என வாயசைத்தான் அவன்.
உடனே பேருந்தில் ஏறாமல் நகர்ந்து நின்று கொண்டாள். பேருந்து புறப்படவும் அவள் பக்கத்தில் வந்து பைக்கை நிறுத்தினான்.
“இப்படியா கண்ணு தொறந்து பார்க்கிறதுக்குள்ள பறந்து வருவ நீ? பிரஷ் கூட பண்ணல நான். மூஞ்ச கழுவிட்டு அவசரமா வந்தேன்” என்றான்.
“ஏன் அப்படி அடிச்சு பிடிச்சு ஓடி வர்றீங்க? பஸ்லேயே போயிருப்பேன்”
“ப்ச் நேத்தே டயர்டா தெரிஞ்ச. பஸ் டிராவல்னா கஷ்டம்தானே? செகண்ட் ஷிப்ட்னா கண்டிப்பா என்னால உன்னை ட்ராப் பண்ண முடியாது. நைட் ஷிப்ட்க்கு கூட என் ஆஃபிஸ் முடிஞ்சு ட்ராஃபிக்ல கரெக்ட் டைம் வீடு வந்து உன்னை அழைச்சிட்டு போக முடியுமாங்கிறது டவுட்தான். மத்த நேரமெல்லாம் பிராப்லம் இல்லை. இப்போ உன்னை விட்டுட்டு வந்து கூட ரிலாக்ஸா நான் ரெடி ஆகலாம். ஏறு” என்றான்.
அவனது அக்கறையில் கரைந்து கொண்டேதான் அவனுடன் பயணித்தாள்.
நாளை சரியாக திட்டமிட்டு மதிய உணவும் செய்து வைத்து விட வேண்டும் என்றெண்ணிக் கொண்டாள்.
மீராவை விட்டு வீடு வந்தவன் மீண்டும் படுக்கையில் சுருண்டுக் கொண்டான். சஞ்சய்க்கு இரவில் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் விழித்திருக்க முடியும். ஏன் விடிய விடிய கூட விழித்திருப்பான். காலையில் சீக்கிரம் எழுவது என்பது அவனுக்கு பிடிக்காத விஷயம் மட்டுமில்லை, அவனால் முடியாத விஷயம் கூட.
மீராவுக்காகத்தான் காலை நேர உறக்கத்தை தியாகம் செய்திருக்கிறான். எட்டே முக்கால் மணிக்கு எழுந்து மந்த வேகத்தில் தயாராகி, மீரா சமைத்து வைத்ததை திருப்தியாக சாப்பிட்டு, பைக்கில் வேகமாக பயணித்து, பத்து மணி ஆக சில நொடிகள் இருக்கும் தருவாயில் பஞ்ச் வைத்து அலுவலகம் வந்து சேர்ந்தான் சஞ்சய்.
உள்ளே நுழைந்த உடனே மாலினிதான் கண்களுக்கு தென்பட வேண்டுமா? சொந்த வெறுப்பை காண்பித்துக் கொள்ளாமல் அவளுக்கு வணக்கம் வைத்தான். மலர்ந்து சிரித்து பதில் வணக்கம் சொன்னவளை மற்ற ஊழியர்கள் வியப்பாக பார்த்தனர்.
இறுகிய முகத்துடனே தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான் சஞ்சய்.
“ஹேய் சஞ்சு! இரும்பு இதயம் கொண்ட மாலினி உன்கிட்ட மட்டும் மெல்ட் ஆகுறது போல இருக்கே, எப்படி?” என ஆங்கிலத்தில் விசாரித்தான் அவனுடைய சகா.
“நான் நெருப்பு, அதனாலயா இருக்கும்” என இவனும் வேடிக்கையாக சொல்லி தன் வேலையை பார்க்கத் துவங்கினான்.
மீரா பணி புரிவது எலும்பு முறிவு வார்டு. இன்று காலையே அக்ஷய் என்ற இளைஞன் ஆறு மாதங்களுக்கு முன் காலில் வைக்கப் பட்டிருந்த பிளேட்’டை நீக்குவதற்காக அட்மிட் ஆகியிருந்தான். நாளை அவனுக்கு அறுவை சிகிச்சை.
தமிழ்ப் பையன் எனவுமே மீராவை கவனிக்க சொல்லி விட்டாள் இன்சார்ஜ் மினி.
அவனுடன் வேலை செய்யும் இரண்டு நண்பர்கள் துணைக்கு இருந்தாலும் அவர்களுக்கு தமிழ் தெரியாது. அலுவகத்தின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை மேற்கொள்வதால் சொந்த ஊர் செல்லாமல் இங்கேயே செய்து கொள்கிறான்.
அக்ஷயின் அம்மாவும் கொல்கத்தா வருவதாக சொல்கிறாராம்.
பெரிய ஆபரேஷன் இல்லை, இவ்வளவு தூரம் வர வேண்டாம் என எடுத்து சொல்லும் படி மீராவிடம் உதவி கேட்டான் அக்ஷய். அவளும் அவனது அம்மாவுக்கு பக்குவமாக விஷயத்தை சொன்னாள்.
என்ன அவனுக்கு விளக்க வேண்டுமென்றாலும் மீராதான் பேச வேண்டியதாக இருந்தது.
இள வயது நண்பர்கள் இருவருடனும் சேர்ந்து கொண்டு குறும்பு, கேலி எனதான் இருந்தான் அக்ஷய். பின் அவர்களும் நாளை வருவதாக சொல்லி கிளம்பி விட்டனர்.
ஜெனரல் வார்டு என்பதால் படுக்கைகளுக்கு இடையில் ஸ்க்ரீன் மட்டுமே. அதிலும் எதிரில் உள்ள ஸ்க்ரீனை எல்லா நோயாளிகளும் போட்டுக் கொள்ள மாட்டார்கள்.
அக்ஷயும் ஸ்க்ரீன் போட்டுக் கொள்ளாமல் வார்டில் நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்திருந்தான். அதிகமாக மீராவைத்தான் அவனது பார்வை தொடர்ந்தது.
எப்போதாவது இப்படியெல்லாம் நிகழ்வதுதான். மீரா பெரிது படுத்திக் கொள்ளவில்லை.
மீராவுக்கு பணி முடிந்து கிளம்ப போனாள். அவளை தன்னிடம் வரச் சொல்லி, “தேங்க்ஸ் மீரா” என்றான் அக்ஷய்.
“சிஸ்டர்னு சொல்லணும்” என சிறு புன்னகையுடனே சொன்னாள்.
அவன் ஒன்றும் சொல்லாமல் சிரித்தான். அவனது பார்வையில் வித்தியாசத்தை கண்டவள், எரிச்சலுடனே புறப்பட்டாள்.
மீரா வீடு வந்து சேர்கையில் மூன்றாகி விட்டது.
சமையலறை மோசமாக கிடந்தது. குளித்து வந்தவளுக்கு இனி சமைத்துதான் சாப்பிட வேண்டுமா என ஆதங்கமாக இருந்தது. குக்கரில் சாதம் வைத்து தயிர் போட்டு சாப்பிட்டுக் கொண்டவள் படுத்து விட்டாள்.
மாலை ஐந்து மணி போல எழுந்து தேநீர் பருகி, சமையலறையை சுத்தம் செய்து, மளிகை சாமான்களை ஒழுங்காக அடுக்கி, வீட்டை பெருக்கி, அழுக்குத் துணிகளை மெஷினில் போட்டு விட்டு அப்பாடா என அமர்ந்தாள்.
சஞ்சய் வந்து விட்டான். அவனை காணவும் அவளையும் அறியாமல் ஒரு உற்சாகம் அவளை தொற்றிக் கொண்டதுதான்.
சஞ்சய்க்கு அவனது சின்ன வயதில் அவனது வீட்டில் வழக்கமாக நடப்பது நினைவிலிருக்கிறது. மாலை நேரங்களில் பெரும்பாலும் இவனின் உடன் பிறந்தவர்கள் வசம்தான் இருப்பான். அப்பா வரவுமே அம்மா அவரை எதிர்கொண்டு அவருக்கு என்ன வேண்டும் என கவனிப்பார். பகல் எல்லாம் அப்பாவை பாராமல் இவன் போய் அப்பாவின் மடியில் ஏறிக் கொள்வான். அவரும் இவனை கொஞ்சுவார். சில நிமிடங்களில் இறங்கி விளையாட ஓடி விடுவான்.