அறியாமல் தொலைந்தேனே -13

அத்தியாயம் -13

சஞ்சயும் மீராவும் வீடு வந்து சேர்ந்திருந்தனர். மீராவுக்கு நல்ல தலைவலி. இன்னும் நடந்த எதிலிருந்தும் மீண்டிருக்கவில்லை அவள்.

சஞ்சய்யும் அந்த நேரம் திருமணத்தை முடித்துக் கொண்டு விட்டான். வீட்டினரை நினைத்து கலக்கமாக இருந்தது. அம்மாவெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வார் என சிந்திக்கும் போதுதான் தான் செய்ததின் வீரியம் அவனுக்கு புரிந்தது.

ஓய்ந்து போய் நின்றிருந்த மீரா அவனை கொஞ்சம் மற்ற யோசனைகளில் இருந்து பிடித்து இழுத்து வந்தாள்.

“ரொம்ப டயர்டா இருக்க மீரா நீ, கொஞ்ச நேரம் தூங்கு” என்றான்.

அவளுக்கும் சுருண்டு கொண்டால் தேவலாம் என இருக்க, எந்த அறைக்கு செல்வது என பார்த்தாள். என்னவோ சஞ்சய்யால் ‘அதுதான் நம் அறை அங்கேயே போ’ என இலகுவாக சொல்ல வரவில்லை. இன்னொரு அறைக்கு சென்று படுத்து விட்டாள் அவள். அவனும் மறுப்பு சொல்லவில்லை.

புதிதாக ஒரு ஆள் வீட்டுக்கு வந்ததும் இனி தன்னுடன்தான் அவள் இருப்பாள் என்பதும் சஞ்சயை இயல்பாக இருக்க விடாமல் சற்றே பட படப்பாக்கியது. ‘டேய் அவ உன் வைஃப், உன் கூடத்தான் இருப்பா’ என தனக்கு சொல்லிக் கொண்டான். என்ன செய்வது எனத் தெரியாமலே வீட்டை அளந்து கொண்டிருந்தான்.

மீராவுக்கு தலைவலி மற்றும் மன அலட்டல் காரணமாக உறக்கம் வரவில்லை. சும்மா படுத்திருக்கலாம் என்றாலும் வலி படுத்தி வைத்தது. அறைக் கதவு திறந்தே இருக்க, எதேச்சையாக அவளை பார்த்தவன் உள்ளே சென்றான்.

அவனது அரவம் உணர்ந்து வேகமாக எழுந்து அமர்ந்து கொண்டாள் அவள். அவளின் வேகத்தைக் கண்டு ஒரு நொடி திகைத்தவன், இரு கைகளையும் மேலிருந்து கீழே மெதுவாக தளர்த்திக் காண்பித்து, “ஹேய் ஈஸி ஈஸி…” என்றான்.

அவளும் சாதாரணம் ஆனாள்.

“ஏன் ரெஸ்ட்லெசா இருக்க? இப்போ நீ ஸேஃபாதான் இருக்க” என்றான்.

“நல்ல ஹெட்டேக்” என்றாள்.

பைரவ் மஜும்தாரின் வீட்டிலேயே மதிய உணவு முடித்துக் கொண்டுதான் வந்திருந்தனர். ஆனால். மீரா சரியாக சாப்பிட்டிருக்கவில்லை என்பதை கவனித்துதான் இருந்தான் சஞ்சய்.

அவளை படுத்திருக்க சொல்லி விட்டு வெளியில் கிளம்பினான். அவன் திரும்ப வரும் வரையிலுமே அவள் உறங்கியிருக்கவில்லை.

தயிர்சாதமும் தலைவலி மாத்திரையும் வாங்கி வந்திருந்தான். சாப்பாடு வேண்டாம் என்றவளை கண்டனமாக பார்த்தான்.

“சரியா சாப்பிடாம இருக்கிறதால கூட ஹெட்டேக்கா இருக்கலாம். ஓவர் திங்க் பண்ணாம சாப்பிட்டு படு” என அவன் சொல்லவும் பாதி சாப்பிட்டு மாத்திரையை போட்டு படுத்து விட்டாள்.

 தலைவலி தைலத்தை அவளின் கையில் தந்தான். வாங்கியவள் தடவாமல் கைக்குள் வைத்துக் கொண்டே படுத்திருந்தாள்.

“ஹேய் மீரா தைலத்தை கைல வச்சுக்கிட்டா வலி போகுமா என்ன? நெத்தியில தடவனும்” என்றான்.

“கொஞ்ச நேரம் ஆகட்டும் சஞ்சய்” என மட்டும் சொன்னாள்.

தன் கையிலிருந்து அவன் தைலத்தை எடுப்பதை உணரவும் சிரமப்பட்டு விழிகளை திறந்துப் பார்த்தாள். விரலில் தைலத்தை எடுத்து அவளின் நெற்றியில் தடவி விடப் போனான் அவன்.

படுத்திருந்த படியே தலையை பின்னுக்கு நகர்த்தியவள், “வேணாம் சஞ்சய், நான் பார்த்துக்கிறேனே ப்ளீஸ்” என்றாள்.

இந்த திருமணம் நடந்திருக்கவில்லை என்றாலும் அவன் இதை செய்திருப்பான். குழந்தை கலைத்துப் போட்ட விளையாட்டு பொருட்கள் போல அவளின் மூளை குழம்பிக் கிடக்க, சஞ்சயின் இந்த உதவியை ஏற்க தயங்கினாள்.

தன் செய்கையை விரும்பவில்லை அவள் என நினைத்த அவனது முகம் சுருங்கி விட்டது. ‘ரொம்ப ஓவரா இருக்கா’ என மனம் குறை படிக்கவும் செய்தது.

“ஓகே, கைல எடுத்தத என்ன செய்ய, இது மட்டும்” என்றவன் விரலில் இருந்ததை அவளின் நெற்றியில் தடவினான். கண்களை மூடிக் கொண்டாள் மீரா.

 சிறு வயதிலிருந்து அம்மா எப்படியெல்லாம் கவனித்துக் கொண்டார், எனக்காக எத்தனை கஷ்டங்கள் பட்டார், அவருக்கு சொல்லாமல் எவ்வளவு பெரிய விஷயத்தை செய்து விட்டேன் என்ற நினைவில் அவளின் கண்களின் ஓரம் கசிந்தது.

“இல்லை புரியல, எதுக்கு இந்த அழுகை? என்னை கல்யாணம் பண்ணினதுக்கா?” என அதிருப்தியாக கேட்டான் அவன்.

“சஞ்சய் ப்ளீஸ், நீங்களா ஏதாவது நினைக்காதீங்க. எனக்கு பேச கூட கஷ்டமா இருக்கு. கொஞ்ச நேரம் தனியா படுத்திட்டு வர்றேனே” என கெஞ்சவது போல சொல்லவும், அவன் வெளியேறி விட்டான். கதவையும் வெறுமனே சாத்தினான்.

முழு மனதுடன் இந்த திருமணத்தை செய்து கொண்டாலும் இது சஞ்சய்க்கும் இது எதிர்பாராத அதிர்ச்சியான நிகழ்வுதான். வீட்டினரால் தாங்கி தாங்கியே வளர்க்க பட்டு விட்டவனுக்கு மீரா அவனை உதாசீனப் படுத்துவது போலத்தான் தோன்றியது.

ஆதலால் சஞ்சய்க்கு அவள் மேல் கோவம். பேசாமல் போய் அவனும் படுத்துக் கொண்டான்.  இன்று மகனுக்கு விடுமுறை என்பதால் தேவகி அழைத்தார், அதுவும் காணொளி அழைப்பு.

எடுக்கலாமா வேண்டாமா என யோசனைதான்.  எத்தனை நாட்களுக்கு அம்மாவை தவிர்க்க முடியும் என்பதை தாண்டி அம்மாவுக்காக அவனது மனம் ஏங்க, அழைப்பை ஏற்றுப் பேசினான்.

எடுத்த உடனே, “என்னடா ராஜா ஏன் சோர்ந்து தெரியற? சாப்பிட்டியா இல்லியா?” என்றார் தேவகி.

“அதெப்படிமா உன் கண்ணுக்கு எப்பவும் நான் டல்லாவும் கவலையாவும் மட்டுமே தெரியறேன். ஊர் சுத்திட்டு வந்தேன். உன் ஹப்பி தொல்லை இல்லாம நான் ஹாப்பியா இருக்கேன். ஈஈ…” என எல்லா பற்களையும் காண்பித்து வேடிக்கையாக சிரித்தான்.

“உன்னை கூப்பிட அவ்ளோ தூரம் வந்தார்தானே, இன்னும் அப்பாவை அப்படி சொல்லுவியா?” என கடிந்து கொண்டவர், மெதுவாக பைக் ஓட்டு ஹெல்மெட் போடு என அக்கறையாக சொன்னார்.

பின் இன்று என்ன சாப்பிட்டாய், எங்கு சென்றாய் என அவர் விசாரிக்க, இவனும் உண்மை கொஞ்சம் பொய் கொஞ்சமாக கலந்து கட்டி பேசினான்.

 தாய்மையுற்றிருக்கும் இவனது இரண்டாவது அக்கா சாதனாவை பார்க்க, முதல் அக்கா சவிதா அவளது குடும்பத்துடன் வந்திருப்பாள் போலும்.

ஒவ்வொருவராக அவனிடம் பேசினார்கள். அண்ணி அர்ச்சனாவும் பேசினாள். சொல்லி வைத்தது போல அனைவரும் அப்பாவின் கோவம்தான் குறைந்து விட்டதே, வீட்டுக்கு வா என்பதையே வலியுறுத்தினார்கள்.

“இங்க எனக்கு ஜாப் செட் ஆகிடுச்சு, கொல்கத்தாவும் பிடிச்சு போச்சு. ஒரு வருஷம் இங்கதான்” என சொல்லி விட்டான்.

அரை மணி நேரத்துக்கும் மேலே வீட்டினருடன் பேசினாலும் தனது திருமணம் குறித்து வாயை திறக்கவில்லை அந்த நல்ல செல்லப்பிள்ளை.

இத்தனைக்கும் காதலை எதிர்க்கும் குடும்பம் எல்லாம் கிடையாது. சஞ்சயின் அண்ணனும் சரி, அவனது இரண்டாவது அக்காவும் சரி வீட்டினர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

இங்கேதான் இருந்தாக வேண்டும் என்ற நிலையில், மீராவின் பிரச்சனைகளும் தீராத போது இப்போதைக்கு தன் திருமணத்தை தெரியப் படுத்தி மேலும் குழப்பங்களை உண்டாக்க அவன் விரும்பவில்லை. அதை விட இந்த விஷயத்தை இப்படி கைப்பேசி அழைப்பில் சொல்வதும் சரியாக இருக்காது என நினைத்தான். மற்றவர்கள் எப்படியோ அம்மா நிச்சயம் காயப் பட்டு போவார் என அவனுக்கு தெரியும்.

அக்காவின் சிக்கலான பிரசவ காலத்தில் தான் எந்த அதிர்ச்சியையும் யாருக்கும் தர வேண்டாம் என தீர்மானித்துக் கொண்டான்.

அக்காவிடம் பேசிக் கொண்டிருக்கையில் பின்னால் அவனது அப்பா தெரிந்தார். மகனை ஆர்வமுடன் அவர் பார்க்க, அவனோ, “நான் நாளைக்கு பேசுறேன் க்கா” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான்.