ஐந்து நிமிடங்களாக பெங்காலியில் பைரவ் பேசியதை புரியாமலே கேட்டுக் கொண்டிருந்தான் சஞ்சய். இறுதியாக அவர், “தோமாதேர் பியே தேபோ! புஜ்லே?” என்றார்.

சலனமே இல்லாமல் சஞ்சய் நிற்க, மீராவையும் சேர்த்து பார்த்துக் கொண்டே மீண்டும் சொன்னதை சொல்லி, “திக் ஆச்சே?” என்றார்.

இத்தனை நாட்களில் திக் ஆச்சே என்றால் ஓகேவா என பொருள் என்பது சஞ்சய் மீரா இருவருக்கும் தெரிந்திருக்க, எதற்கு ஓகேவா என கேட்கிறார் எனப் புரியாமல் இன்னும் விழித்தனர்.

பாவம் அவர்களுக்கு ‘உங்களுக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறேன்’ எனதான் பைரவ் சொல்கிறார் என்பது துளியும் தெரியவில்லை.

இருவரின் பாவனையிலும் சலித்தவராக நெற்றியில் தட்டிக் கொண்ட பைரவ், ஐஸக் எங்கே என கேட்டார். ஐஸக்கின் பெயர் வந்ததால் அவரைத்தான் கேட்கிறார் எனப் புரிந்து, அவர் இப்போது இங்கில்லை என்பதை ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலம் கொண்டு அவருக்கு புரிய வைத்தான் சஞ்சய்.

ஐஸக்கின் கைப்பேசிக்கு அழைக்க சொன்னார் பைரவ். அழைப்பு சென்றால்தானே? புதிய கைப்பேசி வாங்கிக் கொள்ள வீரராகவன் கொடுத்திருந்த பணத்தையும் மச்சானின் வைத்திய செலவுக்கு உபயோகித்து விட்ட ஐஸக்கிற்கு இங்கு நடப்பது எதுவுமே தெரியவில்லை.

தமிழ் தெரிந்த யாரையாவது அழைத்து வரும் படி தன் ஆள் ஒருவனுக்கு உத்தரவிட்டார் பைரவ்.

அழகிய சின்னப் பெட்டி ஒன்றோடு வந்த பைரவ்வின் மனைவி அதை திறந்து அவரிடம் காண்பித்தார். வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் வளையல்கள் இருந்தன. மீராவிடம் ஏதோ கேட்டுக் கொண்டே அவளின் கையை பிடித்து மணிக்கட்டை பரிசோதித்து பார்த்து உற்சாகமாக ஏதோ சொன்னார் அந்தப் பெண்மணி. அதற்கு பைரவ் சிரித்தார்.

மீராவை அளவிடுவது போல பார்த்த அந்தப் பெண்மணி ஏதோ சொல்லி விட்டு காரில் வெளியில் கிளம்பி விட்டார்.

“பெங்காலி தெரியாம போச்சேன்னு இப்போதான் வருத்த படுறேன்” என்ற சஞ்சயின் முகம் திடீரென வெளிச்சமானது. கைப்பேசியை கையில் எடுத்து,  “நீங்க பேசுறது புரியலை, என்ன சொல்லணுமோ இப்போ சொல்லுங்க, என் ஃபோன் டிரான்ஸ்லேட் பண்ணி எனக்கு புரிய வைக்கும்” என பேசி இதை பெங்காலியில் எப்படி சொல்வது எனக் கேட்டான்.

அவன் சொன்னதை பெங்காலியில் எப்படி சொல்ல வேண்டும் என்பதை காண்பித்தது கைப்பேசி திரை. அதை ஒலிக்க விடலாம் என அவன் நிமிர, தாதா உள்ளே சென்று விட்டார்.

தன்னை அழைத்து வந்தவனின் பெயர் அரிந்தன் என்பதை தெரிந்து கொண்டிருந்தான் சஞ்சய். அவனை அருகில் அழைத்து தன் கைப்பேசியை பெங்காலியில் பேச வைத்தான்.

‘நீ பெரியாள்தான்!’ என்பது போல கண்களை விரித்து தலையை சுழற்றிக் காண்பித்த அரிந்தன், அவர்களுக்கு திருமணத்துக்கு ஏற்பாடு ஆகிக் கொண்டிருப்பதை பெங்காலியில் சொன்னான்.

அரிந்தன் பேசியது திரையில் தமிழில் தெரியவும் தலையை பின் இழுத்து ‘என்ன!’ என்பது போல மீண்டும் வாசித்தான் சஞ்சய்.

ஏதோ தவறு என எண்ணி அரிந்தனை மீண்டும் சொல்ல சொன்னான். அவன் சொன்னதை சரியாகத்தான் மொழி பெயர்த்திருக்கிறேன் என்றது கைப்பேசி.

சஞ்சய்க்கு தன் மூளையை யாரோ கசக்கி விட்டது போலவே இருந்தது.

அங்குள்ளவர்களும் ஆன்ட்ராய்ட் கைப்பேசி உபயோகிப்பவர்கள் என்றாலும் அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதெல்லாம் தெரியாதவர்கள். சஞ்சயின் கைப்பேசியை வாங்கிய அரிந்தன் தன் சகாவிடம் காண்பித்து ஏதோ வியப்பாக சொன்னான்.

இருவருக்கும் இடையில் போய் நின்ற சஞ்சய், “எதுக்கு இந்த கல்யாணம்? ஏன் தாதா இப்படி செய்றார்?” எனக் கேட்டான். அவர்கள் புரியாமல் பார்க்கவும் தன் கைப்பேசி உதவியுடன் அவர்களுக்கு புரிய வைத்தான்.

தங்களை காதலர்கள் என தாதா நினைக்கிறார், அந்த போலீஸ்காரன் மீரா விஷயத்தை எளிதாக விட மாட்டான் என்பதால் மீராவின் பாதுகாப்பு கருதி இந்த திருமணத்தை நடத்த நினைக்கிறார் என்பதை தெரிந்து கொண்டான் சஞ்சய்.

தாதாவுக்கு நன்றி தெரிவிக்க வந்த நாளில் அவர் ஏதோ சொன்னதும் அதற்கு ஐஸக் பேய் அடித்தது போல நின்றதும் சஞ்சய்க்கு நினைவு வந்தது. தவறான புரிதல் என்பதை விளங்கிக் கொண்டவன், “நாங்க லவ்வர்ஸ் இல்லை, ஃபிரெண்ட்ஸ்… ஃபிரெண்ட்ஸ் மட்டும்தான்” என அரிந்தனிடம் சொன்னான்.

பைரவ்வின் வயதான அம்மா எதற்காகவோ அரிந்தன் பெயரை சொல்லி அழைக்கவும் சஞ்சயை புறக்கணித்து உள்ளே ஓடிச் சென்று விட்டான் அரிந்தன்.

சஞ்சயையே பார்த்துக் கொண்டிருந்த மீராவுக்கும் நடப்பது புரிந்தது. ஒற்றை நாளில் எத்தனை அதிர்ச்சிகளை தாங்குவாள் அவள்? மூளை செயல்பட மறுத்து அவளை ஒடுக்கி வைத்திருந்தது.

வேறு யாரிடம் சொல்லி புரிய வைக்கலாம் என சுற்றிலும் பார்த்தான் சஞ்சய். எதையும் விளங்கிக் கொள்வதற்கான சாயலுடன் ஒரு முகமும் அவனுக்கு தென்படவில்லை.

சோர்வாக மீராவை பார்த்தான். தலையை பிடித்துக்கொண்டு இருக்கையில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள் மீரா. தற்சமயம் அவளால் ஆகக் கூடியது ஏதுமில்லை என புரியவும் நேராக தாதாவிடமே சொல்லி விடுவது என்ற எண்ணத்துடன் வீட்டுக்குள் ஓடினான் சஞ்சய்.

பைரவ்க்கு சஞ்சய் மீரா பிரச்சனை மட்டும்தானா என்ன? அந்த ஏரியாவின் செல்வாக்கான மனிதர் அல்லவா? வேறொரு பஞ்சாயத்து சென்று கொண்டிருந்தது. அதில் தாதா பிசி. அவரை அவனால் அணுகவே முடியவில்லை.

பைரவ்வின் அம்மா தனக்கு தெரிந்த புரோகிதருக்கு அழைத்து விவரம் சொல்லி உடனே வீட்டுக்கு வரச் சொன்னார். அவசர கல்யாணத்துக்கு தேவையான சாமான்களின் லிஸ்ட் கொடுத்த புரோகிதர் கண்டிப்பாக வந்து விடுகிறேன் என சொல்லி விட்டார். சற்று நேரத்தில் பூமாலைகள் வந்து சேர்ந்து விட்டன. வெளியில் சென்றிருந்த பைரவ்வின் மனைவியும் பைகளுடன் திரும்பி வந்திருந்தார். திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் அதி வேகத்தில் நடந்து கொண்டிருந்தன.

ஐஸக் இருக்கும் இடத்தில் இன்னும் சில தமிழர்கள் இருந்தனர். தமிழ் பேசத் தெரிந்தவனை அழைத்து வரச் சென்ற பைரவ்வின் ஆள் கைக்கு அகப்பட்ட போதை ஆசாமி ஒருவனை அழைத்து வந்திருந்தான்.

ஏற்கனவே சஞ்சய்க்கு விளங்கி விட்டதை அந்த போதை ஆசாமியை கொண்டு இன்னொரு முறை சஞ்சய்க்கு சொல்ல வைத்தான் பைரவ்வின் ஆள்.

“தெய்வமே!” என அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட சஞ்சய், தான் சொல்ல நினைத்ததை அவனுக்கு சொல்லி, அதை பெங்காலியில் தாதாவிடம் சொல்லும் படி கேட்டுக் கொண்டான்.

நடந்த பஞ்சாயத்தில் மண்டை சூடாகிப் போய் வந்த பைரவ்விடம் சஞ்சய் சொல்ல சொன்னதை சொல்கிறேன் என ஏதோ உளறி வைத்தான் அந்த போதை ஆசாமி. அடிக்க கை ஓங்கி விட்டார் பைரவ். அந்த ஆசாமி நடு நடுங்கிப் போய் நிற்க, பைரவ்வின் ஆட்கள் அந்த நபரை தாதாவிடமிருந்து தள்ளி இழுத்துச் சென்றனர்.

சஞ்சய் எரிச்சலோடு தமிழ் தெரிந்தவரை பார்த்தான். பைரவ்வின் கோவத்தை எதிர்கொண்டதில் சற்றே நிதானத்துக்கு வந்திருந்தவர், “போரோ பாபு ஒரு முடிவோட இருக்கார், எதித்து பேசி வாங்கி கட்டிக்காத நீ” என சஞ்சய்க்கு அறிவுரை சொன்னார்.