அறியாமல் தொலைந்தேனே -11

அத்தியாயம் -11

அப்பாவின் பேச்சில் கோவம் கொண்டு வெளியில் வந்த சஞ்சயின் கையில் பைக் சாவி  இல்லை. அதை எடுக்க உள்ளே சென்றால் மீண்டும் அப்பாவை பார்க்க நேரிடும் என்பதால் நடந்தே போனான் சஞ்சய்.

“சஞ்சய் தம்பி எங்க கிளம்பிட்டீங்க? சாப்பாடு வாங்கவா? பைக் எடுக்கல?” என ஐஸக் கேட்க, அதற்கு பதிலே சொல்லாமல் சென்றான் சஞ்சய்.

வீட்டுப் பக்கம் பார்த்த ஐஸக்கிற்கு ஏதோ தவறாக பட்டது. சஞ்சய் இருபதடி தூரம் நடந்திருக்க, ஓட்டமும் நடையுமாக சென்று அவனை பிடித்தார்.

“என்ன தம்பி, அப்பாவோட சண்டையா?” என  கேட்டவருக்கு பதில் தராமல், அவரிடம் தன் முகத்தையும் காட்ட மறுத்து நின்றான்.

“அடடா! அப்பான்னா கொஞ்சம் கூட குறைச்சு பேசுறதுதான், அதுக்காக இப்படி கோச்சுக்கிட்டு கிளம்புவாங்களா? உன்னை பார்க்கத்தானே இங்க வந்திருக்கார்? எதுவா இருந்தாலும் பேசி புரிய வைக்கிறத விட்டுட்டு…” என சொல்லி அவனை வீட்டுப் பக்கம் இழுத்தார்.

“விடுங்க அங்கிள். எனக்கு அவர்கிட்ட பேச எதுவுமே இல்லை. அவரை போக சொல்லுங்க. அவர் போனதுக்கு அப்புறம் ஃபோன் பண்ணுங்க வர்றேன் நான்” என்றவன் அவரது கையை விலக்கி விட்டு நடந்து சென்றான்.

சாப்பிடவும் பிடிக்கவில்லை. எங்கே செல்வது எனத் தெரியாமல் சாலையோரம் சற்று நேரம் நின்றிருந்தவனுக்கு அப்பா பேசியதே இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

இதற்கு மேலும் சென்னைக்கு திரும்புவதற்கு அவனது தன்மானம் இடமளிக்கவில்லை. கொல்கத்தாவிலேயே இருப்பது என முடிவு செய்தவனாக பேருந்து நிறுத்தம் சென்றான். அவனது அலுவலகம் இருக்குமிடம் செல்வதற்கான பேருந்து வரவும் அதில் ஏறிக் கொண்டான்.

மனம் நொந்து போய் அலுவலகம் வந்த சஞ்சயை அடையாள அட்டை இல்லை என சொல்லி உள்ளே விட மறுத்தான் காவலாளி. உடன் பணி புரிபவனுக்கு சஞ்சய் அழைக்க, அவன் வந்து காவலாளியிடம் பேசி சஞ்சயை உள்ளே அழைத்துச் சென்றான்.

இனியும் சாப்பிடாமல் நாளை ஓட்ட முடியாது என்பது புரியவும் அங்குள்ள கேன்டீன் சென்று சாண்ட்விட்ச் வாங்கி சாப்பிட்டுக் கொண்டான். அப்பா சாப்பிட்டிருக்கவில்லை என்பது நினைவுக்கு வர, அவர் பேசியதும் சேர்ந்தே நினைவிற்கு வந்தது.

இவ்வளவு பேசுபவருக்கு தானாக சாப்பிட தெரியாதா என வீம்பாக நினைத்துக் கொண்டான்.

மகனை இப்படி பேசி விட்டதற்காக வீரராகவன் ஒன்றும் அகமகிழ்ந்து போய் விடவில்லை.

மகனின் எதிர்காலத்தை குறித்து அவருக்கு மிகவும் கவலை. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் நடந்த அசம்பாவித நிகழ்வு அவரின் நினைவிற்கு வந்தது.

அவர்கள் பரம்பரை பணக்காரர்கள். ஒரு காலத்தில் அவர்களை வியந்து பார்த்திருக்கிறார் வீரராகவன். அந்தக் குடும்பத்தின் வாரிசு நாற்பது வயதில் தன் மனைவி, பிள்ளைகள் யார் பற்றியும் யோசிக்காமல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க இயலாமல் உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார். அவரின் மனைவி துவண்டு விடாமல் தொழிலை மீட்டு எடுத்து பழைய நிலையை காட்டிலும் உயர்த்தி விட்டார்.

உங்கள் கணவர் நம்பிக்கை இழந்து விட்ட விஷயத்தில் உங்களால் எப்படி வெற்றி பெற முடிந்தது என இறந்து போனவரின் மனைவியிடம் கேட்டதற்கு, ‘சிறு வயதில் நான் எதிர்கொண்ட கடினமான சூழல் இதிலிருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையை எனக்கு தந்தது’ என சொன்னார்.

மனைவியால் செய்ய முடிந்ததை அவரால் ஏன் செய்ய முடியவில்லை? ஏனெனில் அவர் கடினமாக சூழலை எதிர்கொள்வது அதுதான் முதல்முறை. அது போன்ற அனுபவம் இல்லாத காரணத்தால்தான் வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல் தவறான முடிவை எடுத்து விட்டார்.

 சஞ்சய்க்கும் அப்படியெல்லாம் நடக்குமா என அவருக்கு தெரியாது, ஆனால் அப்படி ஒரு நிலை வந்தாலும் சமாளிக்கும் திறன் தன் மகனிடம் இருக்க வேண்டும் என நினைத்தார்.

சஞ்சயின் சிறு பிராயத்திலிருந்தே கண்டிப்பு காட்டுவார்தான். ஆனால் மற்றவர்களின் அதீத செல்லம் இவரின் கண்டிப்பை நீர்த்து போக செய்து விட்டது. இவரும் ஓடிக் கொண்டே இருந்து விட்டார். இன்று நின்று நிதானமாக பார்க்கையில் மகன் பயப்படுத்துகிறான். தந்தையாக தவறி விட்டோம் என அவருக்கும் வருத்தமாக இருக்கிறது.

மகனுக்கு சொத்து சேர்த்து கொடுப்பதை காட்டிலும் அவனை தனி ஒரு மனிதனாக அவன் காலிலே சுயமாக நிற்பவனாக மாற்றுவதே அவனுக்கு செய்யும் நல்லது. இந்தப் பேச்சுக்கள் அவனை சரி செய்யும் என்றால் பேசுகிறேன், அவனுக்கு கெட்டவனாக இருந்து விட்டு போகிறேன் எனதான் அவனது மனம் நோக பேசி விட்டார்.

இவ்வளவு பேச்சுக்களுக்கு பிறகு கண்டிப்பாக மகன் தன்னுடன் சென்னைக்கு திரும்ப மாட்டான் என்பது அவருக்கு  தெரியும். ஆனால் வேறு பயமும் இருந்தது. இந்தக் காலத்து பிள்ளைகள்தான் எப்போது என்ன முடிவெடுப்பார்கள் என்றே கணிக்க முடியவில்லையே. அவருக்கு தெரிந்தவராவது தொழிலில் நஷ்டம் என தவறான முடிவை எடுத்தார், இப்போது உள்ளவர்கள் உப்பு பெறாத விஷயத்துக்கு கூட பெரிய பெரிய முடிவுகளை எடுத்து விடுகின்றனரே.

ஆகவே மகனிடம் கொஞ்சம் சமாதானமாக பேச நினைத்து அவனுக்காக அங்கேயே தங்கி விட்டார்.

ஐஸக் தன் மகனை வீட்டுப் பக்கமாக இழுத்தது, அவனிடம் சமாதானமாக ஏதோ பேசியது, அவன் மறுப்பாக நின்றது என அனைத்தையும் ஜன்னல் வழி பார்த்துதான் இருந்தார் வீரராகவன். இப்போது ஐஸக்கை உள்ளே அழைத்து என்ன சொன்னான் சஞ்சய் என விசாரித்தார். தயங்கினாலும் சொல்லி விட்டார் ஐஸக்.

“ம்ம்… அவன் நல்லாருக்கணும்னு நினைச்சுதான் பேசினேன். இருக்கட்டும். கொஞ்ச நேரம் கழிச்சு நான் கிளம்பிட்டதா அவன்கிட்ட சொல்லுங்க, வீட்டுக்கு வரட்டும், நான் அவனை ஒருமுறை நேர்ல பார்த்திட்டு ஊருக்கு கிளம்புறேன்” என்றார்.

“ஸார்… அப்போ தம்பி?” திகைப்பாக கேட்டார் ஐஸக்.

“வாழ்க்கைனா என்னன்னு கத்துக்கட்டும் ஐஸக் அவன்” என்றவரிடம் என்ன சொல்லவென புரியாமல் பார்த்தார் ஐஸக்.

சஞ்சய் ஊருக்கு திரும்ப போவதில்லை என்பதில் ஐஸக்கிற்குதான் அதீதமான பதற்றமாக இருந்தது. கோவக்காரரான வீராகவனிடம் எதையும் சொல்லவே பயந்தார்.

“என்ன ஐஸக், அவனுக்கு கால் பண்ணி பேசுறீங்களா?” எனக் கேட்டார் வீரராகவன்.

“என் ஃபோன்ல பிரச்சனை போல ஸார், சரி பண்ண கடைல கொடுத்திருக்கேன். மதியத்துக்கு மேல வந்துதான் வாங்கிக்க சொல்லியிருக்கான் கடைக்காரன்” என்றார் ஐஸக்.

“சஞ்சய் வர்றானா பார்க்கலாம், இல்லைனா ஃபோன் கைக்கு வரவும் பேசுங்க. நான் நைட் புறப்படுறேன்” என சொல்லி விட்டார்.

தளர்ந்து போனவராக வெளியில் வந்த ஐஸக்கின் முகம் ஏகத்துக்கும் வெளிறிப் போயிருந்தது.