அத்தியாயம் 9   

நாட்கள் கடுகி விரைந்தன. அமுதன், குமுதா இருவருமே செய்து கொண்டிருந்த முடிவைச் செவ்வனே நிறைவேற்றினார்கள். அதற்கு அமுதனுக்குத் தொழிலும் குமுதாவுக்குப் படிப்பும் உறுதுணையாய் இருந்தன.

குமுதாவிடம் எப்போதுமே ஒரு நல்ல பழக்கம் உண்டு. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பாட புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க அமர்ந்து விட்டாளானால் மற்றது பின்னுக்குப் போய் விடும்.

இந்தக் குணம் இருந்ததனாலேயே அவளால் சிவா கொடுத்த தொல்லைகளை எல்லாம் மீறிப் பத்தாவதில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. இப்போதும் அப்படியே நடந்து போனவைகளைக் கடந்து வந்தவள் தன் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தாள். மெல்ல மெல்ல மற்றவைகளை மறக்கவும் செய்தாள்.

அமுதனும் குமுதா பள்ளிக்குச் சென்றிருக்கும் நேரங்களில் அன்னையை வந்து பார்த்து விட்டுச் செல்பவன் பெரும்பாலான நேரத்தைத் தொழிற்சாலையிலேயே கழிக்க ஆரம்பித்தான்.விளைவாகத் தொழிலும் நன்றாகச் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

கடற்சுவை ஊறுகாய்க்கு இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வந்து குவிய அவன் ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலையின் அருகிலேயே இன்னொரு பிரிவும் (யூனிட்) நிறுவ உத்தேசித்தான்.

இதற்கிடையில் குமுதா பதினொன்றாவது வகுப்புத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எழுதி இருக்க தலைமை ஆசிரியர் அமுதனை அலைபேசியில் அழைத்துப் பேசினார்.

“ரொம்ப நல்லா மார்க் வாங்கி இருக்கு சார் அந்தப் பொண்ணு.பேசாம இப்பவே நீட் கோச்சிங்ல சேர்த்து விட்டுட்டா ஒரு வருஷம் வீணாகாம ட்வெல்த் முடிச்சதும் என்ட்ரன்ஸ் எழுதிடலாம்”

அவனுக்கும் அது சரியான முடிவாகப் பட, பல மாதங்கள் கழித்து அவளைச் சந்திக்க அன்னையின் வீட்டுக்குப் போனான்.

அமுதன் முற்றும் முழுதாகக் குமுதாவைச் சந்திக்கவே இல்லை என்று கூறி விட முடியாது. கடைத் தெருவில், பள்ளி செல்லும் வழியில், எனப் பார்த்திருக்கிறான்.ஆனால் அவள் அவனைக் கண்டுகொள்ளாமல் கடந்து போக அவனும் நின்று பேசாமல் தூர இருந்தே அவளை ரசித்து விட்டுப் போய்க் கொண்டிருந்தான்.

குமுதாவுக்கும் அவன் இருப்பதோ பார்ப்பதோ தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல்தான் இருந்தாள்.

நடந்ததை அவனே அவளிடம் விளக்கவில்லை என்ற கோபமும், அவளைக் கடிந்து கொண்ட கோபமும், எல்லாவற்றுக்கும் மேலாகத் தாயையும் தாரத்தையும் அத்தனை கொடுமைப்படுத்தி விட்டு நல்லவன் போல் அவளிடம் பேசினானே என்ற கோபமுமாக அவன் முகத்தைப் பார்க்கக் கூடப் பிடிக்காது சென்று கொண்டிருந்தாள் அவள்.

இப்படி இருவரும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கையில் வழியில் வைத்தோ அல்லது பள்ளியில் வைத்தோ கூடப் பேசுவது சரி வராது என நினைத்தே மரகதத்தின் வீட்டுக்குப் போனான் அமுதன்.

ஆனால் அவன் சென்று அமர்ந்து அரை மணி நேரமான பிறகும் அறைக்குள் இருந்து கொண்டு வெளியே வராமல் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தவளை என்ணி சிறிய எரிச்சல் மூண்டது அவனுக்கு.

‘இவ நல்லா படிக்கட்டுமேன்னு நாம விஷயம் சொல்ல வந்தா ஏதோ இவளை சைட்டடிக்க வந்த மாரி ரொம்பத்தான் பண்ணுதா’ என மனதுக்குள் வசை பாடியவன்,

“சரி கெளவி! நான் கெளம்புதேன். ஒம் மருமகளை இந்த வருசமே நீட்டுக் கோச்சிங்குல சேர்த்து விடலாம்னு அவளுக்குப் படிக்க இஸ்டமான்னு கேக்க வந்தேன்.அவ தூங்கிட்டா போல.பொறவு ஒரு நா வாரேன்” எனச் சத்தமாகச் சொல்ல வேகமாக அறைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த தலையைக் கண்டவனுக்குச் சிரிப்பு வர, அடக்கிக் கொண்டான்.

மெதுவாக அடி மேல் அடியாக வைத்து அந்தத் தாழ்வாரம் கூடத்துடன் இணையும் இடத்தில் வந்து சுவரில் சாய்ந்து அவன் பார்க்கும் வண்ணம் நின்றவள் சுடிதார் துப்பட்டாவைத் திருகியபடி அமைதியாகவே இருந்தாள்.

“என்னத்தா? நாஞ்சொன்னது கேக்கலியோ? இந்த வருசமே நீட்டுக் கோச்சிங்குக்குப் போறியா? பன்னண்டாப்புப் பாடத்தையும் படிச்சுகிட்டே இதுக்கும் ஒன்னால படிக்க முடியுமா? நெதமும் திருநேலி (திருநெல்வேலி) போய்ப் படிக்கணும். போக வரன்னு அதுக்கே ஒன்னரை மணி நேரமாவும். ஒங்க எச்எம் சொன்னாவ. ஆனா ஒனக்கு முடியுமான்னு கேட்டுகிட்டுப் பொறவு முடிவெடுக்கலாம்னு நெனச்சேன்”

முதலில் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டே வந்தவள் திருநெல்வேலி போக வேண்டும் என்றதும் வேண்டாமென மனதுக்குள் முடிவு செய்து விட்டாள்.

அவளைப் பொருத்தவரை அந்த கிராமம் பாதுகாப்பானதாக இருந்தாலும் அதைத் தாண்டி திருநெல்வேலி வரை… அதுவும் தினமும் போய் வருவது என்பது ஆபத்தானது என நினைத்தாள். போகும் வரும் வழியில் யாராவது பார்த்து அவள் இருப்பிடத்தை சிவாவிடம் சொல்லி விட்டார்களானால் அதன் பின்னர் என்ன நடக்கும் என்று தெரியாது. பன்னிரண்டாவது முடித்து விட்டால் அதன் பிறகு சிவா ஒரு படையைத் திரட்டிக் கொண்டு வந்தாலும் கவலையில்லை அவளுக்கு.

இப்படியாக அவள் எண்ணவோட்டம் செல்ல அமுதன் பதிலுக்குக் காத்துக் கொண்டிருப்பது புரிய, தலையைக் குனிந்தபடியே,

“ஒரு வருசம் வீணாப் போனாலும் பரவாயில்ல.நான் பன்னண்டாப்பு முடிச்ச பொறவே படிக்கேன்”

“ஓ! ஏன்? ஒன்னால ரெண்டுக்கும் ஒரே சமயத்துல படிச்சுக்கிட முடியாதுன்னு நினைக்குதியா?”

“ம்ம்ம், ஆமா! போக வர மணியாவும்னு சொல்லுதிய. பொழுதாக வீட்ல ஒக்காந்து படிக்காம பஸ்ல போய்ட்டு வந்துட்டு இருந்தாச் சரி வராது”

“ம்ம்ம், நீ சொல்லுததும் சர்த்தான்.நான் ஒங்க எச்எம்கிட்டப் பேசிக்கிடுதேன்” என்றவன் அன்னையைப் பார்த்து,

“சரி கெளவி! நான் கெளம்புதேன்.அவளைப் படிக்கச் சொல்லு. சும்மா டீவியப் போடுததும் ஒம்பது மணிக்கு ஒறங்குததுமா இருந்தா மார்க்கும் இவகிட்ட வராம ஒறங்கிரும்” எனவும் கேட்டுக் கொண்டிருந்தவள் சீற்றத்தோடு நிமிர்ந்தாள்.

“அதெல்லாம் நான் நல்லாத்தான் படிக்கேன்.வேணும்னா ஸ்கூல் டீச்சருங்ககிட்ட என்னப் பத்திக் கேட்டுப் பாத்துக்கிடுங்க.எல்லாத்துலயும் நாந்தான் ஃபர்ஸ்ட்டு.இங்கிலீசுல கூட.”

“ஆஹான்!” இங்க்லிஷ் வராது என அவள் முன்னர் சொன்னதை ஞாபகம் வைத்து நம்பாமல் அவன் இழுக்க,

“நெசமாத்தான் மாமா! ஒரு புது டீச்சரு வந்துருக்காவ.நல்லா முக்கியமானதாச் சொல்லிக் கொடுக்காவ. பதினொன்னாப்புல கூட நாந்தான் ஃபர்ஸ்ட்டாக்கும்”

வெகு நாட்கள் கழித்து அவள் ‘மாமா’ வைக் கேட்டதில் அவனுக்கு உள்ளே குளிர்ந்து விட “சர்த்தான் நல்லாப் படி” என்று விட்டுக் கிளம்பினான்.

………………………………………………………………………………………………………….

அன்று குமுதாவுக்குப் பிறந்த நாள். மே மாதம் வரும் அவளது பிறந்த நாளில் பள்ளி கோடை விடுமுறையாயிருக்கும் என்பதால் எப்போதுமே வீட்டிலேயே கொண்டாடுவாள்.கொண்டாட்டம் என்ன… காலை குளித்து முழுகி, நல்ல உடையணிந்து அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வருவாள். மாமா அத்தை காலில் விழுந்து வணங்குவாள். அவ்வளவுதான். பிறந்த நாள் முடிந்து விடும்.

பழைய விஷயங்களை எல்லாம் நினைத்துக் கொண்டே படுத்திருந்தவள் காலை எழுந்ததும் வழக்கம் போல் படித்து முடித்துக் குளித்து வரும் வரை தன் பிறந்த நாள் என்பதையே மறந்திருந்தாள்.

வெளியே புல்லட்டின் ஒலி கேட்க, தன்னை மீறிய ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தாள்.

ஆம்.அவள் படிப்புக் குறித்து அமுதன் வந்து பேசி விட்டுச் சென்றதில் இருந்து அவள் கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது. அவன் மட்டும் இல்லையென்றால் இனி வயிற்றுப் பாட்டுக்கே உழைக்க வேண்டும் என்று நினைத்திருந்தவள் இன்று கவுரவமான இடத்தில் தங்கி கண்ணியமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா? அதுவும் படித்துக் கொண்டே… எனவே அவன் சொந்த விஷயம் பேசுவது அவனிஷ்டம்.தானும் தன் சொந்த விஷயங்களை இனி அவனிடம் பேசக் கூடாது என முடிவெடுத்துக் கொண்டவள் அவன் மீதிருக்கும் வெறுப்பையும் கொஞ்சம் ஒத்தி வைத்திருந்தாள்.

வருவது அமுதன் எனத் தெரியவும் சமையல் கட்டுக்கு ஓடியவள் “அத்த! மாமா வராக!” எனவும் மரகதம் புருவம் சுருக்கினார்.

“மாறனா? இத்தன வெள்ளெனவா?” என்றவர் தானும் வெளியே வர அதற்குள் கூடத்திற்குள் வந்திருந்தான் அமுதன்.

“வாய்யா! என்ன இம்புட்டு வெள்ளென…”

குமுதாவின் பிறந்த நாள் என்பதை அவள் சான்றிதழ் பார்த்த போதே மனதின் ஒரு மூலையில் குறித்து வைத்திருந்தவன் அவளை வாழ்த்தவெனக் கிளம்பி வந்திருந்தாலும் அதை எப்படி வெளிப்படையாகச் சொல்வதெனத் தயங்கி “நம்ம தெக்குத் தெரு கணேசலிங்கம் அண்ணாச்சியில்ல, அவக வீட்ல ஒரு பஞ்சாயத்து.வெள்ளென வரச் சொல்லி இருக்காவ.போற வழியில அப்பிடியே பார்த்துட்டுப் போலாமின்னு வந்தேன்”

“சர்த்தான். காப்பி குடிக்கியா?”

“ம்ம்ம்.குடுங்க”

அவர் உள்ளே செல்ல, தொடர்ந்து குமுதாவும் சென்று விட அவனுக்கு ஏமாற்றமாகிப் போனது.

சில நிமிடங்கள் பொறுத்துக் கையில் காஃபியுடன் வந்தவளைக் கண்டு முகம் மலர்ந்தவன் அவள் அருகில் வரவும்,

“என்ன பொறந்த நாள் பாப்பா…அம்மகிட்டச் சொல்லலியோ பொறந்த நாளுன்னு”

அவள் விழிகள் வியப்பில் வெண்ணிலவாய் விரிய அவனோ கேள்வியாய்ப் புருவங்களை உயர்த்தினான்.

“இல்ல…நானே…எனக்கே மறந்துட்டு.நேத்து நெனப்பிருந்துச்சு.இன்னிக்கு கால எழும்பினதுல இருந்து நெனப்பு வல்ல”

அதற்குள் மரகதம் வெளியே வந்திருக்க,

“யம்மோவ்!இன்னிக்கு ஒம் மருமகளுக்குப் பொறந்த நாளு. ஒங்கிட்டச் சொல்ல மறந்துட்டா”

மலர்ந்து புன்னகைத்தவர் “ஏளா! நெசமாத்தா? இங்கன வா” என அருகில் அழைத்துக் கொண்டவர் கன்னம் கிள்ளிக் கொஞ்சவும் சட்டென அவர் காலில் விழுந்து பணிந்தாள் குமுதா.

“யத்தா! நல்லா இரி! நல்லா இரி! பதினாறும் பெத்துப் பெருவாழ்வு வாழணும்” என்றவர் மகனைப் பார்த்து “எலேய்! சாமி மாடத்துல இருந்து துன்னூறு எடுத்தா”

அவனும் எடுத்து வந்து கொடுக்க, குமுதாவுக்குப் பூசி விட்டார்.

அவனோ அவளைக் குறும்பாகப் பார்த்துத் தன் கால்களையும் விபூதியையும் குறிப்பாகப் பார்க்க அவளோ தலையைச் சிலுப்பிக் கொண்டு ‘மாட்டேன்’ என்பதைப் போல் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு நின்றாள்.

“ஏத்தத்தைப் பாரு!” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தவன் இதழ்களுக்குள் புன்னகையை அடக்கிக் கொண்டு தன் சிறிய கைப்பையைத் திறந்து அதனுள்ளிருந்து ஒரு பெட்டியை எடுத்து அவள் முன் நீட்டினான்.

அவள் புரியாமல் பார்க்க “பொறந்த நாள் பாப்பாவுக்குப் பொறந்த நாள் பரிசு. பிரிச்சுப் பாரு” எனவும் குழப்பத்தோடு வாங்கியவள் மேலே இருந்த சரிகைத் தாளை அகற்றிப் பார்க்க அழகான அலைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) ஒன்று வீற்றிருந்தது பெட்டிக்குள்.

திருநீறுக் கிண்ணத்தை வைத்து விட்டு வந்த மரகதம் அவள் கையிலிருந்ததைப் பார்த்து விட்டு “எடே! அழகா இருக்குடே போனு!” எனவும் அத்தனை நேரம் அதிர்ந்து நின்றவள் சுய உணர்வடைய சட்டெனக் கண்கள் தளும்பியது அவளுக்கு.

அலைபேசியை மரகதத்தின் கையில் திணித்து விட்டு “இத வாரேன்” என்று விட்டுச் சட்டென உள்ளே சென்று விட்டாள்.

“ஒனக்கு எப்பிடில அவளுக்குப் பொறந்த நாளுன்னு தெரியும்?”

“அவ சர்டிஃபிகேட்டைக் காட்டினாள்லா… அதுல பார்த்தது நெனப்பிருந்துச்சு”

அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே சென்றவள் கொல்லைப்புறமிருந்த குளியலறைக்குள் சென்று புகுந்து கொள்ள கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு. இதைப் போல் இதங்கள் எல்லாம் அவள் அறியாதது.

அவள் மாமனும் அத்தையும் பிரியமாய் ஆசீர்வாதம் செய்தாலும் அவளுக்குப் பிடித்ததை அல்லது தேவையானதை வாங்கித் தரவோ அவள் விரும்பி உண்பதைச் சமைத்துக் கொடுக்கவோ அக்கறை காட்டி வெளியே அழைத்துப் போகவோ யாரும் முயன்றதில்லை.

சிவா கூட “ஒம் பொறந்த நாளைக்கு எனக்குப் பரிசெதும் தர மாட்டியோ?” என்றுதான் அவளைச் சுற்றுவானே தவிர அவளுக்கு ஒரு மிட்டாய் கூட வாங்கிக் கொடுத்தது இல்லை.

சிறிது நேரம் அழுதவள் கண்களைத் துடைத்துக் கொண்டு முகத்தையும் நன்றாக நீர் விட்டு அடித்துக் கழுவிக் கொண்டு வீட்டுக்குள் வந்தாள்.

அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன் எதுவும் சொல்லவில்லை.

அவள் அவனிடம் மெல்லிய குரலில் “எனக்கெதுக்கு போனெல்லாம்? வேணாம்! நீங்க வச்சுக்கிடுங்க. இல்ல அத்தைக்குக் குடுங்க”

“ஒனக்காரு குடுத்தா?”

அவள் அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்க்க

“ஒஞ்சொந்த ஒபயோகத்துக்கெல்லாங் கொடுக்கல.அதுல யூடியுபில ஏதோ நெறைய பாட சம்பந்தமா வருதாம். அதெல்லாம் வச்சுப் படிச்சா நல்லதுன்னு ஒங்க எச்எம் சொன்னாவ. அதான் வாங்கிட்டு வந்தேன். வீட்ல படிக்க மட்டும் வச்சுக்கோ.பள்ளிக்கோடத்துக்கெல்லாம் எடுத்துட்டுப் போகப்பிடாது. சரியா?”

சொந்த உபயோகத்திற்குக் கொடுக்கவில்லை எனச் சொன்னது முதலில் அதிர்வைக் கொடுத்தாலும் ஒரு வகையில் அவள் மனம் சமாதானமும் அடைந்தது. அவனிடமிருந்து தனியான எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பது அவள் முடிவு செய்த விஷயம்தானே!

அவன் வாங்கிக் கொடுத்த இரண்டு சுடிதார்களைக் கூடப் பயன்படுத்தாமல் தனியாக எடுத்து வைத்து விட்டவளாயிற்றே அவள். ஒன்றை அவள் சில முறைகள் அணிந்திருந்தாலும் இன்னொன்று புதிதாகவே இருந்தது. எனவே இப்போது கொஞ்சம் மலர்ந்த முகத்துடனே சம்மதமாகத் தலையை ஆட்டினாள்.

“எப்பிடி ஒபயோகப்படுத்தன்னு தெரியுமா?”

‘தெரியாது’ என அவள் தலையாட்ட ஜிமிக்கிகளைத் தொடர்ந்த கண்களைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தியவன் மேலும் அரை மணி நேரம் இருந்து இணையதளத்தைப் பயன்படுத்துவது பற்றி அவளுக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து விட்டே கிளம்பினான்.

இது அவளுக்கு அவன் மீதிருந்த கோபத்தை இன்னுமே குறைத்திருந்தது.

வீட்டுக்குத் திரும்பிய அமுதனின் மனம் குமுதாவையே சுற்றி வந்தது. முன்னைப் போலல்லாமல் அவள் அவனைப் பார்க்கும் பார்வை மாறியிருந்தது.

தொழிற்சாலைக்கு வந்தவளை அவன் திட்டி அனுப்பும் வரை அவனை மரியாதையும் வியப்பும் பயமுமாகப் பார்த்தவளின் பார்வையில் இப்போது மற்றவர்களின் பார்வையில் தென்படும் அதே ஏளனம் கொஞ்சமே கொஞ்சம் என்றாலும் தெரியத்தான் செய்தது.

இதற்கு முன் பல தடவை அவளைப் பார்த்திருந்தாலும், ஏன் நீட் கோச்சிங் செல்கிறாளா எனக் கேட்க வந்த போது கூடத் தலையைக் கவிழ்ந்து கொண்டே பேசியவள் அன்றுதான் அவன் முகம் பார்த்துப் பேசியிருக்க அவனாலும் அவள் பார்வை வேறுபாட்டையும் அதில் உள்ள மிதமான வெறுப்பையும் இனம் கண்டு கொள்ள முடிந்தது.

அவள் உள்ளே சென்று அழுது விட்டு வந்ததும் அவன் தந்த பரிசை வேண்டாமென்று மறுத்ததையும் கூட அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனாலேயே மாற்றிப் பேசி அவள் படிப்பதற்காக மட்டுமே அந்த அலைபேசி என்பதை அவளுக்குப் புரிய வைத்து விட்டு வந்திருந்தான். அது ஒரு வகையில் உண்மையும் கூட.

அலைபேசிப் பயன்பாட்டில் பல நல்ல உபயோகரமான விஷயங்கள் இருந்தாலும் இளைஞர்களைத் தவறான வழியில் நடத்திச் செல்லக் கூடிய தன்மையும் வாய்ந்தது அது. ஒன்றுமில்லையென்றாலும் அலைபேசியில் அரட்டை அடித்தே நேரத்தை வீணாக்கும் மாணவர்களும் உண்டு.

இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்பவனுக்கு அவள் கோபமும் வெறுப்பும் அயர்வைக் கொடுத்ததுதான்.

மனித மனம்தான் எத்தனை விசித்திரமானது! வெறுத்தால் நல்லது என ஒரு மனம் நினைக்கிறது.வெறுக்கிறாளே என ஒரு மனம் தவிக்கிறது. தவிக்கும் மனதுக்கு நடப்பதெல்லாம் நல்லதற்கே என சமாதானம் சொல்லிக் கொண்டவன் அவள் மீதான தன் அக்கறையை மட்டும் அணுவளவு கூட மாற்றிக் கொள்ளவில்லை.

அதன்பின் அவளைப் பார்க்க நேர்ந்த போதெல்லாம் அவள் படிப்பைக் குறித்தே பேசினான். அவளும் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடிக்குப் படித்து வந்தாள்.

ஒரு வருடமும் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்து தேர்வும் நல்லபடியாக முடிந்து முடிவுகளும் அன்று வெளியானது. அனைவரும் எதிர்பார்த்தது போல பெருநகர மாணவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி நான்கு பாடங்களிலும் நூற்றுக்கு நூறு, தமிழிலும் ஆங்கிலத்திலும் தொண்ணூற்றெட்டு மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று மாநிலத்தையே அந்தச் சிறிய கிராமத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருந்தாள் குமுதமலர்விழி.

கிட்டத்தட்ட எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் அவள் முகம் காட்டப்பட அப்படிக் காட்டப்பட்டதாலேயே இத்தனை நாட்களாக இருந்த அஞ்ஞாத வாசம் முடிந்து கையும் களவுமாக அவள் பிடிபடப்போவது தெரியாமல் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள் குமுதா.

என்னை மறந்த பொழுதும் நான் உன்னை மறக்கவில்லையே
கண்ணு ஒறங்கும் பொழுதும் எண்ணம் ஒறங்கவில்லையே
என் ராசாத்தி பக்கமிருந்தா இனி வேறேதும் தேவையில்லையே