மாலை நேரமானாலும் படு உற்சாகமாகத் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன். இன்னும் சற்று நேரத்தில் அவன் உற்சாகம் பறிபோகப் போவது தெரியாமல் மெலிதாகச் சீழ்க்கை கூட அடித்துக் கொண்டான். அந்த நேரம் இன்டெர்காம் கிணுகிணுக்க எடுத்துக் காதில் பொருத்தினான்.
“ம்ம்ம்.சொல்லுங்க!”
“ஐயா! உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு!”
“பொண்ணா? ஆரு?”
“குமுதான்னு சொல்றாங்க”
அவன் மனம் இறக்கை இல்லாமல் விண்ணில் பறக்க, மனதின் துள்ளல் வார்த்தைகளில் தெரிந்து விடாமல் இருக்க சில வினாடிகள் ரிசீவரைக் கையால் மறைத்துத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் பிறகு,
“ம்ம்ம். உள்ள வரச் சொல்லுங்க” என்று விட்டு வைத்தான்.
பிறகு அதுவரை தன் வாழ்நாளில் செய்திராத ஒரு காரியத்தைச் செய்தான்.
தன் மடிக்கணினியை மூடி அதன் பளபள பரப்பில் தன் முகம் பார்த்து, தலையைச் சற்று கோதி விட்டுக் கொண்டு மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டான். மெலிதாக வைத்திருந்த தாடியையும் நீவி விட்டுக் கொண்டு பின் மடிக்கணினியை நேராக்கித் தானும் நேராக அமரவும் கதவில் மெலிதான தட்டுதல் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
“ம்ம்ம். உள்ள வாங்க!”
கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் குமுதா.
பள்ளிச் சீருடையில் இருந்தாள். இளஞ்சிவப்பு நிற டாப், மெரூன் நிற பேன்ட், அதே நிறத்தில் துப்பட்டாவை இரு பக்கமும் மடித்துப் பின் குத்தி இருந்தாள். இரட்டை ஜடைகளை மெரூன் நிற ரிப்பன் வைத்துக் கட்டியிருந்தாள். காதுகளில் அதே ஜிமிக்கி, கழுத்தில் அவள் அந்த ஊருக்கு வந்த போதே அணிந்திருந்த ஒற்றைச் சங்கிலி.
அப்போதுதான் முகம் கழுவியிருந்தாளோ அல்லது வேர்வையினாலோ நெற்றியில் ஓரத்தில் முடிகள் ஒட்டிக் கொண்டு கிடந்தன.
ஒரு பார்வையில் அவளை அளந்து முடித்திருந்தவன்,
“வாத்தா! வந்து உக்காரு! சொகமா இருக்கியா?”
வழக்கம் போல் தலையை ஆட்டியவள் ஒரு பக்கம் போட்டிருந்த புத்தகப்பையை இறக்கி ஒரு நாற்காலியில் வைத்து விட்டு மற்றொரு நாற்காலியில் அமர்ந்தாள்.
அவள் முகத்தைக் கூர்ந்தவன் அது வாடியிருக்கக் கண்டு கரிசனையுடன் கேலியையும் கூட்டி,
“ம்ம்ம். என்ன டாக்டரம்மா பார்வை எங்க பக்கமெல்லாம் விழுகுது? என்ன விசயம்? எதும் ப்ரச்சனையா?” என வினவினான்.
அவளோ பதில் எதுவும் சொல்லாமல் மென்று விழுங்கினாள்.
சில நாட்களுக்கு முன்னர் பள்ளியில் அவள் கேள்விப்பட்ட விஷயம் மண்டையைக் குடைய அதன் விவரங்கள் தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு.யாரிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்கும் எனத் தெரியவில்லை.
மரகதத்திடம் கேட்கலாம் என முதலில் எண்ணினாள். பிறகு பழைய நினைவுகளைக் கிளறி விட்டு அந்த அன்பு காட்டும் பெண்மணியை வருத்த வேண்டுமா என்ற ஆதங்கம் ஒருபுறம். தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக அவரது வீட்டிலேயே இருந்து கொண்டு அவர் போடும் உணவை உண்டு கொண்டு அவர் மகனைப் பற்றியே அவரிடம் தவறாகப் பேசுவதா என்ற தயக்கம் ஒருபுறம் என அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.
மூன்று நாட்களாக மண்டையை உடைத்துப் பின் நேரடியாக அமுதனிடமே கேட்டு விடுவது என்ற முடிவுக்கு அவள் வந்ததன் விளைவே இந்தத் தொழிற்சாலை வருகை. வந்து விட்டாளே ஒழிய வாயைத் திறந்து சட்டென எதையும் கேட்டு விட முடியவில்லை அவளால்.
“சொல்லுத்தா! என்ன விசயம்?” என்றவன் குரலில் கொஞ்சம் கடுமை ஏற “எவனும் எதும் தொல்லை குடுத்தானுவளா?” எனவும்,
“ஐயையோ! அதெல்லாம் ஒரு ப்ரச்சனையும் இல்ல”
“பொறவு?” என்றவன் அவள் மேலும் தயங்க,
“இங்கன பாருத்தா! நம்ம ஃபேக்டரில ராலு ( இறால் ), நண்டு, மீனு கருவாடெல்லாம் வச்சு ஊறுகா தயார் பண்ணி இருக்கேன்.அந்த வியாபாரம் இப்பத்தான் செமையா சூடு பிடிக்கு.சவுதில இருந்து மொத்தமா ஆர்டர் வந்துருக்கு. எனக்கு சோலி தலைக்கு மேல கெடக்கு.நீ என்ன ஏதுன்னு வெவரமாச் சொன்னியானா நானும் என்னன்னு பார்ப்பேன். இல்லைன்னா இப்பக் கெளம்பிக்கிடு.ராவுக்கு நான் வீட்டுக்கு வாரேன்.அங்கன வச்சுப் பேசிக்கிடலாம்.”
“அச்சச்சோ! இல்ல, இல்ல! இங்கனயே சொல்லிப்புடுதேன்”
“ம்ம்ம், ஆட்டும்”
இரு கைகளையும் இணைத்து அதில் நாடியைத் தாங்கி அவள் சொல்வதைக் கேட்பதற்கு அவன் தயாராக இதற்கு மேல் தயங்கினால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவைச் சாற்றி விடுவானோ எனத் தோன்றிய பயத்தில்,
அவள் முடிக்கவில்லை…அவன் கையைப் படக்கென எடுத்து விட்டு அவளைக் கூர்ந்து நோக்கினான்.
அதற்கு மேல் சொல்ல அவளுக்கு வாய் வரவில்லை. வாயைத் திறக்க வெறும் காற்று மட்டுமே வர, அவனோ…
“உன்னப் பள்ளிகோடத்துல போய்ப் படின்னு சொன்னா என்னப் பத்தி வம்பு பேசி அதை எங்கிட்டயே கேட்டு வந்து நிக்குதே!”
“இல்ல…நான்…பேசல…”
அவள் தடுமாற, எழுந்து அவளருகே வந்தவன்,
“எழும்பு!”
அவள் உடல் அவன் அண்மையில் வெடவெடக்க எழுந்து நின்றாள்.
“இப்ப என்ன தெரியணும் ஒனக்கு? ஆமா நான் என் பொண்டாட்டியை அடிச்சுக் கொடுமப்படுத்துனேன்.அவ என்ன விட்டுட்டு இன்னொருத்தன் கூட ஓடிட்டா. போதுமா? காது குளிரக் கேட்டாச்சா? சொகமா இருக்கா இப்போ?” என்றவன் அவள் முதுகைத் தொட்டுத் திருப்பி அவளை முன்புறமாகக் கதவை நோக்கித் தள்ளினான்.
“கெளம்பு! இனமேலாவது ஒழுங்காப் படிக்குத வேலயைப் பாரு.அத விட்டுட்டு இந்த மாரி உப்புப் பெறாம எதையாவது ஒழட்டிகிட்டுக் கெடந்தேன்னா ஒன் ஊரைப் பார்த்துப் போன்னு வெரட்டி விட்டுருவேன்”
அவன் பேச்சிலும் அவளை வெளியே தள்ளுவது போல் நடந்து கொண்ட செயலிலும் மேலும் ஊருக்கு விரட்டி விட்டு விடுவேன் எனச் சொன்னதிலும் அவள் விழிகளில் அருவி பெருக்கெடுக்க அவன் அடுத்த தள்ளு தள்ளுகையில் அசையாமல் நின்றாள்.
அவனும் அதிகம் வலிமை காட்டாமல் லேசாகவே தள்ளிக் கொண்டிருக்க அவள் நகராமல் நிற்க ஏன் நிற்கிறாள் என அவன் யோசிக்க அவள் மெதுவாகத் திரும்பி அவனைப் பார்த்தாள்.
விழிநீர் உடைப்பெடுக்க, பெருகி வழிந்த நீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டவளைக் கண்டவனுக்கு ஒருமாதிரி ஆகி விட்டது. அவளோ மீண்டும் முன்புறம் திரும்பிக் கதவைத் திறக்கப் போக அவன் “இரி!” என்றான்.
அவன் வார்த்தைக்குச் செவி கொடுக்காமல் அவள் கதவைத் திறக்க, கதவைத் தள்ளிச் சாற்றியவன் அவள் புஜத்தை வலிமையாகப் பற்றி இழுத்துக் கொண்டு அந்த அறையிலிருந்த மற்றொரு கதவை நோக்கி நகர்ந்தான்.
அந்தக் கதவைத் திறந்து அவளை உள்ளே தள்ளியவன் “உள்ள பாத்ரூம்பு இருக்கு.போய் மொகத்த நல்லாக் கழுவிகிட்டு வா!”
இவன் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்று வீம்பு தோன்றினாலும் வெளியே இப்படி அழுத முகத்தோடு சென்றால் எத்தனை பேரை எதிர்கொள்ள நேரிடும், அவர்கள் என்னவெல்லாம் நினைப்பார்கள் என்ற எண்ணம் தோன்ற கண்களைக் கண்ணீர் மறைக்க உள்ளே வந்திருந்தவள் விழிகளைத் துடைத்துக் கொண்டு சுற்றிலும் பார்த்தாள்.
அது அவனது ஓய்வெடுக்கும் அறை எனப் பார்த்ததுமே புரிந்து போயிற்று அவளுக்கு. சிறிய ஒற்றைக் கட்டிலும் அதனருகில் சிறிய மேஜையும் ஒரே ஒரு சுவரோடு பதிந்த அலமாரியுமாக இருக்க அலமாரியின் அருகில் மற்றொரு கதவு தெரிய அதை நோக்கிப் போனாள்.
அங்கு முகம் கழுவி விட்டு வெளியேறி அவனறைக்குள் நுழைய தன் மேஜை இழுப்பறையில் இருந்து முகம் துடைக்க சிறிய துவாலையை எடுத்து அவள்புறம் நீட்டினான் அவன்.
முகம் துடைத்துக் கொண்டவள் துண்டை மேஜை மீது வைத்து விட்டு “நான் கெளம்புதேன்” என அவன் முகம் பார்க்காமல் சொல்ல,
“இங்கன எம் மொகத்தைப் பாரு!”
‘ஆமா இவரு பெரிய அழகரு, இவரு மொகத்தப் பார்க்கத்தான் காத்துக் கெடக்காக’ எனத் தனக்குள் அவனைத் திட்டிக் கொண்டவள் முகம் திருப்பாமல் நிற்க, பொறுமையற்ற ஒரு மூச்சுடன் அவளருகே வந்தவன் ஒற்றை விரல் நீட்டி அவள் நாடியில் வைத்துத் தன்னை நோக்கித் திருப்பினான்.
கண்கள் நான்கும் கலக்க ஒரு கணம் உலகை மறந்தாற்போல் நின்றவன் மறுகணமே சுதாரித்து “மொகம் கழுவுனதுல பொட்டு எடம் மாறி இருக்கு பாரு” எனவும் அவளும் கை கொண்டு முகத்தில் தடவித் தேட ஆரம்பித்தாள்.
பொட்டு இருக்கும் இடம் தவிர மற்ற எல்லா பக்கமும் அவள் தேட மீண்டும் பொறுமையிழந்தவனாக அவள் முகம் நோக்கிக் கையைக் கொண்டு சென்றவன் பின் தலையை லேசாக உலுக்கிக் கொண்டு அவள் வலது கையைப் பற்றி அதில் ஒரு விரலைப் பிடித்து பொட்டு இருக்கும் இடத்தைத் தொட்டுக் காட்டி விட்டுக் கையை இழுத்துக் கொண்டான்.
அவளும் பொட்டை உத்தேசமாக நேராக வைத்து முடிக்க, கோபிப் பொட்டு கொஞ்சம் சாய்ந்தாற் போலிருக்க “பொறுமையச் சோதிக்குதாளே பாதகத்தி” என வாய்க்குள் முணுமுணுத்தவன் சட்டென நினைவு வந்தவனாக மேஜை மேலிருந்த தன் குளிர்கண்ணாடியை எடுத்து அதில் அவள் பிம்பத்தைக் காட்டி,
“ம்ம்ம் நேரா வை!” எனவும் அவளும் பொட்டை சரி செய்து கொண்டாள்.
“சரி கெளம்பு!” என்றவன் இன்டெர்காமை எடுத்துக் கொண்டே “இனமே இப்பிடில்லாம் தனியா வரக் கூடாது. இந்த எடம் ஊருல இருந்து தள்ளி இருக்குறதால வழில வயக்காட்டுப் பக்கமெல்லாம் தனியா வாரது அம்புட்டு நல்லதில்ல.இப்பத் தொணைக்கு ஆள் அனுப்புதேன்.இனி இப்பிடி வராதே” எனவும் அவன் காட்டிய கரிசனத்தில் மீண்டும் அவளுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.
என்றாலும் கண்ணீரை அடக்கிக் கொண்டவள் கொஞ்சம் எடுப்பாகவே “இனமே நான் இங்கன வர மாட்டேன்” என்று விட்டு, பக்கத்து நாற்காலியில் வைத்த பையையும் எடுத்துக் கொண்டு விடுவிடுவென வெளியேறினாள்.
அவளைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கும்படி ஆளை ஏற்பாடு செய்தவன் அப்பாடா என நாற்காலியில் தொப்பென அமர்ந்தான்.
அவளைப் பற்றிய நினைவுகளிலாவது கடந்த காலத்தை மறந்து கொஞ்சம் நிம்மதியடைந்திருந்தவனை அவளே வந்து அந்த நினைவுகளைக் கிளப்பி நிம்மதியிழக்கச் செய்திருக்க அவன் மனம் மிகவும் சோர்ந்து போனது.
எப்போதும் போல் சோர்ந்து போன மனதை வேலையில் திசை திருப்ப நினைத்தவன் ஓய்வறைக்குள் சென்று முகம் கழுவித் துடைத்து வெளியே வந்தான். அவன் பார்வை அவள் துடைத்து விட்டு மேஜையின் மேல் வைத்து விட்டுச் சென்றிருந்த துவாலையில் படிந்தது.
மெதுவாக நடந்து அதனருகே சென்றவன் அந்தத் துவாலையை எடுத்து மென்மையாக வருடிப் பார்த்தான்.பின் மெல்ல அதைத் தன் முகத்தினருகே கொண்டு செல்ல அதே நேரம் கதவைத் தட்டும் ஒலியும் மாணிக்கத்தின் ‘உள்ள வரலாமா ஐயா’ வும் கேட்க விரைந்து அந்தத் துவாலையை இழுப்பறையினுள் போட்டு விட்டுத் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு “வாங்க!” என்றவன் அவரிடம் “அந்த ரெஸ்ட்ரூம்புல ஒரு மொகம் பார்க்குத கண்ணாடிய வாங்கி மாட்டுங்க.ஏற்கனவே இருந்தது ஒடஞ்சுட்டுன்னா அடுத்தது வாங்கி மாட்டணும்னு தெரியாதோ?” என்று கடுகடுத்தான்.
பிறகு வேறு நினைவுகள் குறுக்கிடாமல் வேலை செய்ய முயன்றவனால் என்ன முயன்றும் குமுதாவின் கண்ணீர் தளும்பிய விழிகளை மாத்திரம் நினைவில் இருந்து அகற்ற முடியவில்லை.
அவனது சொந்த விஷயத்தில் அவள் எப்படிக் குறுக்கிடலாம் என்ற எண்ணம் கிஞ்சித்தும் அவனுக்குத் தோன்றவில்லை. மாறாக அவன் மறக்க முயன்று கொண்டிருப்பதை அதற்குத் துணை செய்வாள் என நினைத்தவளே எப்படி நினைவூட்டலாம் என்ற ஆதங்கமே மேலோங்கி இருந்தது அவன் மனதில்.
‘ஆனாலும் கொஞ்சம் கடுமையாகத்தான் நடந்து கொண்டு விட்டோம். பதினைந்து வயதுப் பெண்.அவளுக்குப் பக்குவம் இருக்குமா? ஏதோ கேள்விப்பட்டது, என்ன ஏது என விசாரிக்க வந்து விட்டாள்’ என எண்ணமிட்டவனுக்கு அந்த மட்டும் பிறரிடம் சென்று புறணி பேசாமல் அவனிடமே வந்து நின்ற அவள் தைரியத்தை மெச்சிக் கொள்ளவே தோன்றியது.
அவள் நினைவுகளினூடாகத் தன் வேலைகளையும் பார்த்து முடித்தவன் அங்கிருந்து கிளம்புகையில் நேரம் ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.
வீட்டுக்குக் கிளம்பியவனுக்குக் குமுதாவின் கண்ணீர் முகமே கண்களில் தோன்றிக் கஷ்டப்படுத்த ஒரு முடிவெடுத்தவனாகத் தன் தாயின் வீட்டை நோக்கி வண்டியைத் திருப்பினான்.
………………………………………………………………………………………………………….
அன்று எட்டு மணிக்கு வழக்கம் போல் உணவருந்த, மரகதமும் குமுதாவும் தொலைக்காட்சியையும் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்கள்.
குமுதா அவளது அத்தையின் வீட்டில் தொலைக்காட்சி பார்த்தது இல்லை. அவள் அத்தைக்குப் பிடித்தவை அழுகாச்சித் தொடர்களே.எவன் குடியை எப்படிக் கெடுக்கலாம், ஏற்கனவே திருமணமானவனை எப்படித் தன் வலைக்குள் வீழ்த்தலாம், இப்படிப் பல குயுக்தியான கருக்கள் கொண்ட அந்தத் தொடர்களை அவள் பார்க்க விரும்பியதும் இல்லை, அவள் அத்தை பார்க்க விட்டதும் இல்லை.
‘படிக்குத புள்ளைக்கு டீவி என்ன வேண்டிக் கெடக்கு’ என அவளை விரட்டி விடுவார்.அப்படி எல்லாம் சொன்னவர் கடைசியில் மகனுடன் சேர்ந்து கொண்டு அவள் படிப்புக்கே உலை வைத்தது அவளுக்கே புரியாத புதிர்தான்.
தொடர்கள் ஒளிபரப்பாகாத ஞாயிற்றுக் கிழமைகளில் சிவா ஏதாவது அசிங்கமான பாடல்களைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பான் என்பதால் அவள் தொலைக்காட்சிப் பக்கமே போனது இல்லை.
மரகதத்தின் வீட்டுக்கு வந்தது முதல், இரவு உணவு உண்ணும் நேரத்தில் தொலைக்காட்சி, அதுவும் ஏதாவது நகைச்சுவைக் காட்சிகள், படங்கள் என மரகதம் வைக்க அதை ரசித்துப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள் குமுதா.
அன்று அமுதனின் தொழிற்சாலையிலிருந்து அவன் துணையாக அனுப்பிய மனோகரனுடன் நடந்து வந்தவளுக்கு வழியெல்லாம் கோபம்தான். அதனால் ஊருக்குள் நுழைந்ததும் இனி தான் போய்க் கொள்வதாகக் கூறி அவனைத் திருப்பி அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்து வழமையான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரே சிந்தனைதான்.
‘அவள் அவளது சொந்த விவகாரங்கள் எல்லாவற்றையும் அவனிடம் பகிர்ந்து கொள்ளத்தானே செய்தாள்! இப்போது அவனிடம் அவனது சொந்த விவகாரம் கேட்டால் அக்கறையில் கேட்கிறாள் என நினைத்துச் சொல்ல வேண்டியதுதானே!’ என நொடித்துக் கொண்டவளுக்குப் புரியவில்லை அவள் கேட்டது சாதாரண விஷயம் இல்லை என்பது.
தாலி கட்டிக் கொண்ட மனைவி தன்னை விட்டு இன்னொருவனுடன் ஓடி விட்டாள் என்பது எத்தனை பெரிய அவமானம், அதை அவனிடம் விசாரிக்க வேறு அவள் சென்றது எத்தனை பெரிய தவறு, என்பதெல்லாம் புரியாமல் வெறுமனே தோழியுடன் ‘நான் மட்டும் சொன்னேன்ல நீயும் சொல்லு’ என்பது போலக் கோபம் கொண்டிருந்தாள்.
இரவு அவள் பள்ளி வேலைகளை முடிக்கவும் மரகதம் வந்து உணவுக்கு அழைக்கவும் சரியாக இருந்தது.
காலையில் செய்யும் குழம்பு ஏதாவதுடன் இரவில் இட்டிலியோ தோசையோ ஊற்றிக் கொள்வது வழமை என்பதுடன் எளிமையும் என்பதால் அவள் மாலையில் படிப்பை விட்டு விட்டு அவருக்கு உதவி செய்ய முற்பட்ட போது தடுத்து விட்டார் மரகதம்.
“அதுதான் காலைலை செய்யுதேல்லா. பொழுதாக உக்காந்து படி” என்று விட்டார்.
அன்று உணவுண்ணும் போது பழைய கருப்பு வெள்ளை நகைச்சுவைப்படம் ஒன்றை மரகதம் வைத்திருக்க அவளும் நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பாலை உறை ஊற்ற சமையலறைக்குச் சென்ற மரகதம் அலைபேசியை அங்கேயே எங்கோ மறந்து வைத்திருக்க அதைத் தேடிக் கொண்டிருந்ததில் நேரமாவதைக் கவனிக்க மறந்து விட்டார்.
கடைசியில் ஒருவழியாக ஒரு மூடிக்கு அடியில் கிடந்த அலைபேசியைத் தேடி எடுத்து வெளியே வர, நேரம் ஒன்பதே கால் ஆகியிருக்க திடுக்கிட்டுப் போய் குமுதாவைப் பார்க்க அவள் அமர்ந்திருந்த நிலையிலிருந்து கொஞ்சம் சாய்ந்து அருகிலிருந்த சாக்கு மூட்டையின் மேலேயே தன் உறக்கப் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தாள்.
விரியத் திறந்து கிடந்த வீட்டினுள் காலெடுத்து வைத்தவன் கண்டது சாய்ந்திருந்த குமுதாவை நிமிர்த்தி அமர வைக்க முற்பட்டுக் கொண்டிருந்த அன்னையைத்தான்.அவரது முயற்சிகளைக் கண்டவன் வாய் விட்டே சிரித்து விட்டான்.