இறுதி ஆண்டுத் தேர்வை நல்லபடியாகச் செய்து முடித்திருந்த மறுநாளே மனைவியை அழைத்துக் கொண்டு ஊட்டிக்குப் புறப்பட்டு விட்டான் அமுதன். அந்த ஒரு வாரமும், கடந்து போன வருடங்களில் அவளது ஏக்கங்களுக்கெல்லாம் ஈடுகட்டுவது போல் அவளை இந்திரபோகத்தில் திளைக்க வைத்துத் தானும் அந்த மகிழ்ச்சியில் முக்குளித்தான். ஒரு வார முடிவில் இல்லம் திரும்பி இருந்தனர் தம்பதிகள்.
“ஒனக்கு முத்தம் வேணுமின்னா மாமா ஒரு முத்தம் குடு மாமான்னு கேட்டு வாங்கு. அதை விட்டுட்டுப் பரீசையில்லாத நேரத்துல கொமட்டுது பெரட்டுதுன்னு…” பேசியபடியே அருகில் வந்திருந்தவனை அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டபடி வாயைப் பொத்திக் கொண்டு ஓடியிருந்தாள் குமுதா.
வாஷ்பேசினுக்குச் சென்று ஓங்கரித்து அவள் வாந்தி எடுத்திட, பதறிப் போனவனாகச் சென்று அவளைத் தாங்கிப் பிடித்தான்.
அவள் முடித்ததும் தன் மேலேயே தாங்கிக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வைத்து முகத்தையும் கழுவி விட்டுக் கைகளில் ஏந்திக் கொண்டு வந்து கட்டிலில் அமர வைத்தான்.
“நாள் தள்ளிப் போயிருக்கு மாமா” எனவும் அவன் முகமும் மலர்ந்தது.
“என் ஹேண்ட்பேக்ல ஒரு ப்ரெக்னன்சி கிட் இருக்கும். எடுத்துட்டு வாங்க”
அவள் குளியலறைக்குச் சென்று பரிசோதித்து வர, பொறுமையாகக் காத்திருந்தவன் அவள் வந்து உறுதிப்படுத்தவும் “என் ராசாத்தி!” என அவளை முத்தமிட்டுக் கட்டிக் கொண்டான்.