அத்தியாயம் 11

சுற்றியிருந்த அனைவரும் ஆரவாரிக்க, குமுதாவின் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி.

உட்கார்ந்த இடத்திலிருந்தே நன்றாக உண்டு உடல் கொழுத்துப் போயிருந்தவன் ஓயாத உடற்பயிற்சிகளால் உரமேறிய உடலைக் கொண்டிருந்தவனின் அடிகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறி விழுந்திருக்க அவனருகில் சென்று முழங்காலால் அவன் முதுகில் மண்டியிட்டவன் அவன் அலற அலற ஒரு கையைப் பிடித்துப் பின்புறமாக முறுக்கினான்.

“இந்தக் கைதானல அந்தப் புள்ள கையையும் முடியையும் பிடிச்சுது?” என்று சொல்லிக் கொண்டே முறுக்க அவனோ உயிர் போகத் துடித்தான்.

கண்சிவக்க அவன் கையை முறுக்கியவன் தனக்குத் திருப்தியாகும் வரை அவன் கையை விடவில்லை. பின் எழுந்தவன் காலால் அவனை உருட்டி நிமிர்த்தினான்.

“மலரு இந்த ஊருக்கு வந்ததுமே என் ஆளு ஒருத்தன் உன் ஊருக்கு வந்து, அங்கன என்ன நடக்கு, நீ யாரு, என்னங்கிற வெவரமெல்லாம் கொண்டு வந்து குடுத்துட்டாம். பள்ளிக்கோடம் போற பதினைஞ்சு வயசுப் புள்ளைக்குப் பரிசம் போட நெனச்ச பரதேசிப் பய நீயி.அன்னிக்கே வந்து அங்கனயே ஒன்ன பொலி போட்டிருப்பேன்.ஒன் அம்மையும் அப்பனும் வருத்தப்படுவாகன்னு மலரு சொன்னனால விட்டேன்.”

“நீ இன்னிக்கு இந்த ஊர் எல்லைல கால வச்சதுமே எனக்குத் தாக்கல் வந்துட்டு. நான் வாரதுக்குள்ள அந்தப் புள்ள முடியப் பிடிச்சு இழுப்பியோ? இன்னும் ஒரு மாசத்துக்கானும் ஒன் வலது கையி வெளங்காதுல. கழுவுற கையிலயே திங்குற சோலியையும் பாரு”

“ஆமா, ஏதோ போலீசைக் கையில போட்டுகிட்டு ஆடுதேன்னு கேள்விப்பட்டேன்.ஒனக்கு மட்டும்தான் போலீசைத் தெரியுமால? ஒம் போலீசுக்கும் என் போலீசுக்கும் சோடி போட்டுக்குவமால சோடி?” எனக் கிண்டலடித்தவன் அடுத்த வினாடியே தீவிரத்தன்மையைத் தத்தெடுத்தவனாக,

“இன்னொன்னுஞ் சொல்லுதேன் கேட்டுக்கிடு. இனி இந்தப் புள்ள நெதமும் திருநேலிக்குப் போயிப் படிக்கும்.ஒன்னால ஏதாவது தொல்லை கில்லை வந்துச்சு, பொறவு உசுர மட்டும் விட்டுட்டு மத்த எல்லாத்தையும் எடுத்துருவேன் பார்த்துக்கிடு”

“எலேய்! இந்த நாய ஒரு மாட்டு வண்டியில போட்டு அவன் அப்பனாத்தாகிட்டக் கொண்டு போய்ச் சேர்த்துடுங்கலேய்” என்றவன் வண்டியின் அருகே நின்றிருந்தவளை “ஏறுத்தா!” என்று விட்டுத் தானும் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்பினான்.

வண்டியில் ஏறி அமர்ந்தவளுக்கோ சொல்ல முடியாத உணர்வுகள் நெஞ்சில் ஆழிப் பேரலையாய்ச் சுழன்று கொண்டிருந்தன.

அவளுக்காக என்னென்ன செய்திருக்கிறான்! அவன் முதுகில் முகத்தைச் சாய்த்துக் கொண்டு அவனைக் கட்டிக் கொண்டு கதறி அழத் தோன்ற, சுற்றிலும் எதிர்ப்பட்ட மனிதர்களைக் கண்டு மனத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

வீட்டின் வாயிலில் வண்டியை நிறுத்தியவன் அவள் இறங்கி நிற்கவும்,

“அவன் கெடக்கான் வெளங்காத பய. நீ ஒன்னும் வெசனப்பட்டுக்காத. தாக்கல் கெடச்ச நேரம் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருந்தேன்.அதை ஏறக் கட்டிக் கெளம்பி வருதக்குள்ள முடியப் பிடிச்சுட்டான் எடுபட்ட பய.”

அந்த நினைவில் அவளுக்கு மளுக்கெனக் கண்களில் கண்ணீர் பெருக அவனுக்கு அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது.

தெருவில் நின்றிருக்க, ஆங்காங்கு தலைகள் வெளிப்பட்டு இவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க எதுவும் செய்ய இயலாதவனாக,

“ராசாத்தி! அழுவாத! தப்பு எம்மேலதான். ஒடனே வந்திருக்கணும் நானு. ரொம்ப நோகுதோ?”

அவன் வருந்துகிறான் என்று புரியவும், இல்லை என்பது போல் அவசரமாகத் தலையாட்டியவள் வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு “இப்ப இல்ல மாமா” எனப் புன்னகை புரிய முயன்றாள்.

கைநீட்டி அவள் தலையைத் தடவிக் கொடுத்தவன், “இனி ஒன்னும் கவலையில்ல. அந்த நாய் இனி ஒம்பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காது. நீ வெசனப் படாம சோலியப் பாரு. நான் கெளம்பட்டா?”

அவள் முகம் காலை நேர ஆம்பலாய்க் கூம்பி விட்டது.

“உள்ள அத்தையைப் பார்க்க வல்லியா?”

“வேல கெடக்குத்தா. பாதியில விட்டுட்டு வந்துருக்கேன் மீட்டிங்கை. போவனும். பொழுதாக வாரேன். போய்ப் படுத்துக் கொஞ்சம் ஒறங்கி எழு. என்ன?” என்றவன் அவள் தலையாட்டவும் ஏக்கமாகப் பார்த்துக் கொண்டே மனமில்லாமல்தான் கிளம்பினான்.

………………………………………………………………………………………………………….

மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருக்க, குமுதாவும் தன் பேட்டிகளில் மருத்துவராக ஆசைப்படுவதாகச் சொல்லி இருக்க பல நீட் பயிற்சி மையங்களில் இருந்து அவளுக்கு அழைப்புக்கள் வந்தவண்ணம் இருந்தன. அதிலும் சிலது பணமே வேண்டாம்…இலவசமாகச் சொல்லித் தருகிறோம் என வந்திருக்க ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ எனக் குதித்தாடத் தோன்றியது அவளுக்கு.

பள்ளியில் அதிகம் செலவில்லாமல் படித்து விட்டவளுக்கு நீட் பயிற்சிக்குக் கண்டிப்பாகப் பணம் தேவைப்படும் என்று ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் தெரிந்திருந்தது. அதனாலேயே பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிந்த பின்னரும் கூட தேர்வு முடிவு வரும் வரை தாமதித்தாள்.

கண்டிப்பாக நல்ல மதிப்பெண்கள் பெறுவோம், அதற்கான அங்கீகாரம் தரும் மையத்தில் சேர்ந்து படிக்கலாம் என்பதே அவள் யோசனையாக இருந்தது. அப்படி மதிப்பெண்கள் குறைந்திருந்தால் அரசு பயிற்சியளிக்கும் மையங்களில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் யோசித்து வைத்திருந்தாள்.

அமுதன் ஆயிரங்களில் அல்ல, லட்சங்களில் செலவு செய்து கூட படிக்க வைப்பான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அவள் மனம் முரண்டியது. அதிலும் அன்று சிவஞானம் பிச்சை எடுத்துப் பிழைக்கிறாள் எனச் சொல்லிக் காட்டி இருந்தது வேறு அவள் மனத்தை வருத்திக் கொண்டிருந்தது.

பள்ளியில் ஆரம்பச் செலவுகள் போக அதிகம் செலவு இல்லை.ஆனால் மருத்துவராவது என்பது இன்றைய ஏழைகளுக்கு எட்டாக் கனவாகவல்லவா போய் விட்டது.

பன்னிரண்டாவதில் வாங்கும் மொத்த மதிப்பெண்களை வைத்துத் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி நீட் என்ற புதுமுறையைக் கொண்டு வந்து அதிலும் பன்னிரண்டாம் வகுப்பின் பாடமாக அல்லாமல் புதிய பாடதிட்டத்தைப் புகுத்தி எனப் பல குழப்பங்கள் நேர்ந்திருந்த நிலையில் நடைமுறையைப் புரிந்து கொண்டு மாணவர்கள் தங்கள் கடும் உழைப்பைக் கொடுக்க ஆரம்பித்திருந்தனர். குமுதாவும் அதைப் புரிந்தேயிருந்தாள்.

அமுதனுக்கு அவள் விவரங்கள் தெரிவித்திருக்க இருவருமாகச் சேர்ந்து ஒரு பயிற்சி மையத்தை முடிவு செய்திருந்தனர். அமுதன் தான் மட்டுமாக நேரில் திருநெல்வேலி சென்று அந்தப் பயிற்சி மையத்தைப் பார்த்துத் தன் திருப்தியைத் தெரிவிக்க அன்று அவளைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு விட்டு வருவதாக இருந்தது.

அன்று காலை கிளம்பிக் கொண்டிருந்தவள் முதல் முதலில் அமுதன் எடுத்துக் கொடுத்து அவள் அணியாமல் வைத்திருந்த அந்தச் சுடிதாரை அணிவதற்காக எடுத்தாள்.

ஆம். அமுதன் மேலிருந்த வெறுப்பு இந்த இரு வருடங்களில் இல்லாமல் போயிருந்தது.தன் நடத்தையால் அவள் வெறுப்பை விருப்பமாக மாற்றியிருந்தான் அமுதன்.

சுடிதாரைத் தன் மீது போட்டுக் கொண்டு கண்ணாடியில் பார்த்தவள் அவளது வெளுப்பான நிறத்துக்குத் தக்காளிச் சிவப்பு நிறத்தில் இருந்த அந்தச் சுடிதார் அழகாகப் பொருந்திப் போவதைக் கண்டு “நல்ல ரசனை மாமோய் உனக்கு” என்று சொல்லிக் கொண்டாள்.

முன்பு பூசினாற் போல உடலில் இருந்தவள் இப்போது கொஞ்சம் மெலிந்திருந்தாலும் அந்தச் சுடிதார் சரியாகவே இருந்தது. அவள் உயரமும் கூடியிருக்க வழக்கமாக உயரக் கட்டும் பேன்டை சில இஞ்ச்சுகள் இறக்கிக் கட்ட அதுவும் சரியாகி விட்டது.

தயாரானவள் பூஜை அறையில் திருநீறு பூசிக் கொள்கையில் திடுமென ஒரு எண்ணம் தோன்ற, கூடத்தில் அமர்ந்திருந்த மரகதத்திடம் விரைந்தாள்.

“அத்த! நீங்களும் திருனவேலிக்கு எங்க கூட வாங்களேன்”

“நானா? நான் எதுக்குளா? நீங்க ரெண்டு பேரும் போய் வாங்க”

அவர் பதில் சொல்வதைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்திருந்த அமுதனும் “ஆமா கெளவி! நீயும் வந்தாத்தான் என்ன? நீயும் திருநேலி போய்…” மூனு வருஷமாச்சு எனச் சொல்ல வந்தவன் நிறுத்தி “பல வருசமாச்சு” என்று முடித்தான்.

அவன் பேச்சில் நீறு பூத்திருந்த நினைவுகள்… அமுதனின் திருமணத்தின் போது அவர்கள் இருவரும் வேதவல்லிக்காக என வளைத்து வளைத்துப் பொருட்களை வாங்கிய தருணங்கள் நெஞ்சில் அலையலையாய் எழும்ப,

“நான்…நான் போய் என்னத்துக்கு? நான் ஒரு ராசியில்லாதவ. புருஷனைப் பறிகொடுத்தேன்.புள்ள வாழ்க்கையும்…” என்று கண் கலங்க அவன் முகம் இறுகியது.

“யத்தே! இந்த ராசியில்லாவுக ஊட்டுல தங்கித்தான், படிச்சுத்தான், தமிழ்நாட்டுலயே மொத வந்துருக்கேன். அதுனால இந்தப் பேச்செல்லாம் வேணாம். கெளம்புங்க!”

“அது நீ படிச்சத்தா.ஒன் ஒழைப்பு.”

“ஹான்…அந்த ஒழப்பு இனி மட்டும் எங்கன போகுதாம்? இனியும் எல்லாம் ஒழைச்சுக்கிடலாம்.நீங்க எழும்புங்க மொதல்ல” என்றவள் அவரைக் கை கொடுத்துத் தூக்கி நிறுத்தினாள்.

“போய் நல்லதா உடுத்திக் கெளம்புங்க.இன்னிக்கு நீங்க வராம நான் போக மாட்டேன்”

“யய்யா மாறா! இது என்னவோ சிறிசு வெவரம் புரியாம…”அவர் முடிக்கவில்லை

“என்ன சிறுசு, வெவரம் புரியாம, எல்லாம் சரியாத்தான் சொல்லுதா.நான் சொன்னாத்தான் ஆயிரம் வியாக்கியானம் பேசுவ. இப்ப மருமக உத்தரவு போட்டுட்டாள்ல கெளம்பு” என்றவன் தன் அலைபேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க இருவரும் கிளம்பி வந்தனர்.

பேருந்தில் செல்வதாகத் திட்டம்.

தினமும் குமுதா பேருந்தில் சென்று திரும்ப வேண்டும் என்பதால் எங்கு காத்து நிற்க வேண்டும், எந்த நிறுத்ததில் இறங்க வேண்டும், அங்கிருந்து எப்படிப் பயிற்சி மையத்துக்குச் செல்ல வேண்டும், மீண்டும் திரும்பி வருவது எப்படி என்று எல்லாம் அவளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டி இருந்ததால் பேருந்தில் செல்வதே நல்லது என்று அமுதன் முதலிலேயே சொல்லி இருந்தான்.

கோடனூர், திசையன்விளையிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் அமைந்திருக்கும் சிற்றூர். தனியாகப் பேருந்து நிலையமோ அங்கிருந்து புறப்படும் பேருந்துகளோ கிடையாது. மினிப் பேருந்துகள் இருந்தாலும் அதில் பொதியை அடைப்பது போல் மனிதர்களையும் சில நேரம் கால்நடைகளையும் கூட அடைத்து ஏற்றிச் செல்வதால் இப்படிப்பட்ட அரிதான சில சூழ்நிலைகளில் அரசுப் பேருந்துகளிலேயே அமுதன் பயணிப்பது வழக்கம்.

அன்றும் அது போல் அரசு பேருந்தில் ஏற அன்றென்னவோ அதிலும் கூட்டம் இருந்தது. நிற்க வேண்டிய தேவை இல்லாவிட்டாலும் மூவருக்கும் ஒரே இடத்தில் இருக்கைகள் கிடைக்கவில்லை.

அன்னையை முன்னால் ஒரு இருக்கையில் அமர வைத்து விட்டு இருவரும் பின்னே சென்று கிடைத்த வேறு வேறு இடங்களில் அமர்ந்தனர்.

வண்டி செல்லச் செல்லக் கூட்டம் ஏறத் தொடங்கியது. குமுதாவின் அருகில் அமர்ந்திருந்த பெண் இறங்கி விட அவள் ஜன்னலோரத்தில் அமர்ந்து கொண்டாள். வண்டியில் வேறு பெண்கள் யாரும் நின்று கொண்டில்லையாதலால் அவள் அருகில் இருந்த இருக்கை காலியாகவே இருந்தது.

அடுத்த நிறுத்தத்தில் மக்கள் ஏற இப்போதும் பெண்கள் ஏறவில்லை. ஒரு நடுத்தர வயது மனிதர் குமுதாவின் அருகில் சென்று நின்றவர் குமுதாவின் முகத்தையும் இருக்கையையும் மாறி மாறிப் பார்ப்பதை அமுதன் கவனித்து விட்டான்.

பார்த்தால் படித்த பெண்ணாக இருக்கிறாள், ஆண் பெண் வேறுபாடு பாராமல் தன்னை அமரச் சொல்வாள் என்று எதிர்பார்த்தவர் சில நிமிடங்கள் சென்றும் ஜன்னல் வழி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் எதுவும் சொல்லாமல் இருக்க, தொண்டையைச் செருமிக் கொண்டு அவளிடம் ‘இங்கே அமரலாமா’ எனக் கேட்கப் போனார்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அமுதன் சட்டென எழுந்து குமுதாவின் அருகில் சென்றான். அந்த மனிதரின் தோள் தொட்டு “அங்கன எடம் இருக்கு பாருங்க. போய் ஒக்காருங்க” என்று விட்டுக் குமுதாவின் அருகில் அமர்ந்து கொள்ள அவள் விழிகளோ வெண்ணிலாவாய் விரிந்தன.

திரும்பி அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் “எளவட்டப் பயலுவளக் கூட நம்பிடலாம். இந்த வயசு ஆளுகளைத்தான் நம்பிக்கிட முடியாது. எடம் குடுத்தா சில்லுண்டித்தனம் செய்ய ஆரம்பிச்சுடுவானுங்க. அம்மையை இங்க வரச் சொல்லலாம்னு பார்த்தா… ஓடுற வண்டியில எழுந்து வார வழியில விழுந்துட்டான்னா வம்பு.அதான் நான் வந்தேன். ஒனக்கு ஒன்னும் செரமமா இல்லையே?”

சிரமமா? அவள் மேகங்களில் அல்லவா மிதந்து கொண்டிருந்தாள். முதலில் அவன் அழைத்துச் செல்கிறேன் என்று சொன்ன போது இருசக்கர வாகனத்தில் என்றே நினைத்திருந்தாள். அப்படியே தொலைவு அதிகம் என யோசித்தாலும் அவனிடம் இருந்த ஜீப்பில் கூட்டிச் செல்வான், மாமனுடன் தனியாக ஒரு பயணம் என நினைத்திருக்க அவனோ பேருந்தில் என்றதில் அவளுக்கு சொத்தென்று போய் விட்டது. ஆனால் இப்படி அருகருகில் அமரும் வாய்ப்புக் கிடைக்கும் என அவளே எதிர்பார்க்கவில்லை.

அவன் கேட்டதற்கு இல்லை எனத் தலையசைத்தவள் மகிழ்ச்சியுடன் ஓரக்கண்ணால் அவனை ரசித்துக் கொண்டே பயணிக்கையில்தான் அவன் இலகுவாக அமர்ந்திருக்கவில்லை என்ற உண்மை அவளுக்கு உறைத்தது.

ஆம்.இருவர் அமரும் இருக்கையில் அவள் பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருக்க நல்ல உயரமும் ஆகிருதியும் கொண்ட அவனுக்கு மீதப் பாதி இடம் போதவில்லை. பாதித் தொடை இருக்கைக்கு வெளியில் இருக்க ஒரு கையால் முன்னிருந்த கம்பியையும் இன்னொரு கையால் பின்னிருந்த கம்பியையும் பிடித்துக் கொண்டு அவஸ்தையாய் அமர்ந்திருந்தவனைக் கண்டவளின் முகம் கனிந்தது. யாரோ ஒருவன் அவளருகில் அமர்ந்து அதனால் அவள் சங்கடப்பட்டு விடக் கூடாது என்பதனால் வந்த சிரமமல்லவா இது!

மெல்ல அவனருகே சாய்ந்தவள்,

“மாமா!”

“என்னத்தா?”

“ஒரு கையை என் பின்னால கொண்டு போய் ஜன்னல் கம்பியைப் பிடிச்சுக்கிடுங்க. கொஞ்சம் வசதியா உக்காரலாம்” என்றவள் அவள் சொன்னதை அவன் செய்ய ஏதுவாய்க் கொஞ்சம் முன்னுக்கு நகர்ந்து அமர்ந்தாள்.

அவனும் வண்டி செல்லும் குலுங்கலில் எப்போது விழுவோமோ என்று எண்ணியவாறே அமர்ந்திருக்க இயலாமல் சட்டென அவள் சொன்னது போல் செய்து நிமிர்ந்து அமர்ந்தான்.

முன்னே நகர்ந்தவள் அப்படியே அமர்ந்திருப்பாள் என அவன் நினைத்திருக்க அவளோ அவன் ஜன்னல் கம்பியைப் பிடித்ததும் மீண்டும் பின்னுக்கு சாய்ந்து அமர்ந்து கொள்ள அவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.

அவளோ இதுதான் இயல்பு என்பது போல் எதையும் கண்டுகொள்ளாமல் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க யாராவது தங்களைக் கவனிக்கிறார்களா என்பது போல அவன் சுற்றும் முற்றும் விழிகளைச் சுழற்ற அவரவர் அவரவர் வேலையில் இருக்க அவன் ஆசுவாசமாக மூச்சு விட்டான்.

குமுதா ஒற்றையாய்ப் போட்டிருந்த ஜடையை முன்னமே முன்னால் போட்டிருக்க அவன் கை அவள் சுடிதாருக்கும் கழுத்துக்கும் இடையில் தெரிந்த வெற்று முதுகில் உராய்ந்து கொண்டேயிருக்க அவனுக்கோ ஜன்னல் கம்பியை விடுத்து அருகில் அமர்ந்திருந்தவளை இடையோடு பிணைத்துத் தன் உடலோடு அழுத்திக் கொள்ளும் வேகம் பிறக்க அவன் தவித்துப் போனான்.

மனத்தைத் திசை திருப்ப அலைபேசியை எடுக்க, அந்த நேரம் ஓட்டுநர் ஒரு வளைவில் திரும்ப, விழுந்து விடாமலிருக்க இன்னொரு கையால் முன்னிருந்த கம்பியை இறுகப் பற்றிக் கொள்ள நேர, இதில் அலைபேசி பார்ப்பதெல்லாம் அசாத்தியம் என்பது புரிந்து விட அலைபேசியைப் பையில் போட்டு விட்டு அமைதியாக அமர்ந்து விட்டான்.

அவளண்மையில் தான் இத்தனை பாதிப்படைய அவளுக்கு ஒன்றுமில்லையா என யோசித்தவன் வெளியே பார்ப்பது போல் அவள் முகத்தைப் பார்க்க அந்தக் கன்னத்தில் தென்பட்ட சிறு சிவப்பு அவளுக்கும் பாதிப்பு இருக்கிறது எனக் காட்டிக் கொடுக்க அவன் முகம் யோசனைக்குப் போனது.

இன்னும் மூன்று நிறுத்தங்களில் இறங்க வேண்டி இருக்க, அந்த நேரம் காலில் அடிபட்டிருந்த ஒரு பெண் பேருந்தில் ஏற இதுதான் சாக்கென அமுதன் எழுந்து அவரை அமர வைத்தான்.

அவன் எழுந்து விட்டதனால் குமுதாவிடம் ஏதாவது எதிர்வினை இருக்கிறதா என அவனையும் அறியாமல் அவளை ஏறிட்டு விட, அவள் விழிகளோ விஷமமாகச் சிரித்தது.

பின் அவனுக்குச் சற்று முன் குழந்தையை வைத்துக் கொண்டு அப்போதுதான் ஏறியிருந்த பெண்ணை அவள் குறிப்பாகப் பார்க்க அவள் என்ன செய்யப் போகிறாள் என்பது அவனுக்குப் புரியும் நேரம் குமுதாவும் இருக்கையிலிருந்து எழுந்திருந்தாள்.

அந்தக் குழந்தையைக் கை நீட்டி வாங்கியபடி “இங்கன உக்காருங்க” என்று அந்தப் பெண்ணை அழைத்து அமர வைத்துக் குழந்தையைக் கொடுத்தவள் இப்போது அமுதனுக்கு மிக அண்மையில்… மற்றவர்கள் யாரும் அவள் மீது இடித்து விடாமலிருக்க வேறு வழியின்றி அவன்தான் அவளை நெருங்கி நிற்க வேண்டியதாயிற்று.

குறும்பாக அவனை ஏறிட்டவளின் விழிகளில் தொலைந்து போகும் விருப்பமிருந்தாலும் அவளை முறைத்தவன் “உன்னை யாரு இப்பக் கூட்டத்துக்குள்ள எழும்பி நிக்கச் சொன்னா?”

“அந்தக்கா கைப்புள்ளைய வச்சுகிட்டு செரமப்படுதப்போ பார்த்தும் பார்க்காம இருக்கச் சொல்லுதீகளா மாமா?” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேருந்து வளைவில் திரும்ப அவனிருக்கும் தைரியத்தில் எதையும் பிடிக்காமல் நின்று கொண்டிருந்தவள் மொத்தமாக அவன் மீது சாய்ந்தாள்.

ஒரு கையால் மேலே கம்பியைப் பிடித்தபடி அடுத்த கையால் அவள் புஜத்தை நெரிப்பது போல் பற்றியவன் “யாராவது பார்த்தா என்ன நெனப்பாக? நேரா நில்லு” என அவள் காதுகளுக்குள் கடித்துத் துப்ப அதில் அவனை முறைத்தவள் அவனுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்று அருகிருந்த இருக்கைக் கம்பியைப் பிடித்துக் கொண்டாள்.

சொல்லி விட்டானே தவிர கிடைத்த வாய்ப்பை விடாமல் அவளை நெருங்கியே நின்றிருந்தவன் கையையும் அவளுக்கு அணைவாகவே வைத்திருந்தான்.

அவளிடம் “அடுத்த ஸ்டாப் எறங்கணும்” என்றவன் சத்தமாக அன்னைக்கும் சொல்ல மூவரும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கினார்கள்.

பேருந்தில் கடிந்து கொண்டதற்கு ஈடாக அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் கனிவுடனே நடந்து கொண்டவன் மாலையில் வீட்டில் அவளை விட்டு விட்டுச் செல்கையில் சொன்ன விஷயத்தில் அவள் மனம் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது.

பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு
வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு

உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க

வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா