அன்றைய இரவு வழமைப் போல அப்பாவுக்குச் சாப்பாடு கொடுத்து, அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு வர,சுந்தரம் உறங்காமல் சோஃபாவில் அமர்ந்திருந்தார்.

“தூங்க போகலையாப்பா?”

“இல்ல டா, வா உக்காரு…”

“என்னப்பா? ஏதாவது பேசணுமா? கனி எதுவும் சொன்னாளா?” என்று வேகமாக வினவினாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல தேனு. உன்கிட்ட தான் பேசணும். உனக்கு…” என்று சற்று தயங்கியவர், பின், தலை குனிந்து, மீண்டும் நிமிர்ந்து, “உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன் தேனு” என்று சொன்ன நொடி,

“அப்பா….” என்றிருந்தாள் கண்டனமாக. அவர் சொன்னதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முகம் சுளித்தாள்.

“கொஞ்சம் அப்பா சொல்றதைப் பொறுமையா கேட்டுட்டு உன் பதில சொல்லு தேனு”

“ப்பா…. ” இந்த முறை கோபமாக ஒலித்தது அவளின் குரல். “எனக்கு கல்யாணம் வேணாம். அவ்ளோ தான்” என்று எழப் போனவளை,

“தேனு” என்ற சுந்தரத்தின் கடுமையான குரல் நிறுத்தியிருந்தது.

நீங்கள் பேசுவது எனக்கு சிறிதும் விருப்பம் இல்லாத ஒன்று என்ற ரீதியில் அவரைப் பார்த்து வைத்தாள்.

அவரும் அதைப் புரிந்தவராக கண் மூடித் திறந்து, “அப்பாக்காக தேனு. ஒருமுறை நான் சொல்றதை கேட்டுக்கோ. உடனே முடிவெடுக்க சொல்லல. நான் சொல்றத கேட்க மட்டும் செய்.” என்று கெஞ்சலாகக் கேட்டார்.

அவர் கேட்ட தொனி தேன்மொழியைப் பாதிக்க, அமைதியாக அமர்ந்துவிட்டாள் கேட்பதற்குத் தயார் என்பதைப் போல.

“அப்பா உங்க கல்யாணத்துக்கு முதலயே மறுப்புச் சொல்லாம சரி சொல்லியிருந்தா இப்படி ஆகி இருக்காதோனு ஒரு எண்ணம் டா.”

உங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் அவள் பார்த்தாள்.

“நீ நினைக்கிறது கரெக்ட் தான் தேனு.  ஆனா அப்பாவுக்கு … நான் சொல்லி மறுத்த காரணம். நான் சொன்னதுனாலயே அது நடந்திருச்சோனு…”

“ஏன்ப்பா இப்படி பேசுறீங்க?” என்றவள் குரல் கலங்கித் தான் வந்தது. கரிக்கும் கண்களைக் கட்டுப்படுத்தி, “இப்படி நடக்கணும்னு இருக்கிறதை என்ன செஞ்சாலும் மாத்த முடியாதுப்பா…” என்றாள் வேதனையாக.

“அப்படியே இருந்தாலும்… சொல்லுக்கு சக்தி உண்டு தேனு. அது என்னவனோ என் மனசை போட்டு படுத்துது. உன் மக ஆசைப்பட்ட வாழ்க்கையை நீயே முடிச்சு வச்சுட்ட டானு சொல்ற மாதிரி இருக்கு.  இனி உன் பொண்ணோட நிலைமையும் உன்ன மாதிரி தனிமரமா நிக்கிறது தானுன்னு என்னைய பயமுறுத்துது. நீ இப்படியே இருந்துட்டா அப்பாவுக்கு மன்னிப்பே கிடையாது டா.”

“அப்பா… பிளீஸ் உங்களை பிளேம் பண்ணாதீங்க… இது நான் ஆசைப்பட்ட வாழ்க்கை. ஆனா எனக்கு கொடுத்து வைக்கல. அதுக்காக இதை என்னால தள்ளி வைக்கவும் முடியலப்பா, ப்ளீஸ்… மறக்க சொல்லாதீங்க. என்னால முடியும்னு தோணல, நடந்த எதுக்கும் நீங்க காரணமில்லை. இதுல உங்க தப்புன்னு எதுவுமில்லை. நீங்க எனக்காக தான் பார்த்தீங்க. அப்படி பார்த்தா… நீங்க சரி தான் ப்பா… நீங்க சொன்னதுனால எதுவும் நடந்திடல”

“இப்போ, நீ,  இந்த நிலைமையில இருக்கறதுக்கும் காரணம் நான் தானே தேனு… உன் மனசு தெரிஞ்சும், இதைத் தள்ளிப்போட்டது நான் தானே. உன் மனசு தெரிஞ்சப்பவே நான் ஒத்துப்போயிருந்தா? ஒருவேளை நீயும் ருத்ரன் கூட இருந்திருந்தா? அவன் இந்த மிஷனுக்கே போயிருக்க மாட்டானோனு ஒரு எண்ணம். அப்படியே போயிருந்தாலும் பத்திரமா திரும்பி வந்திருப்பானோனு தோணுது. என்னால தான் உனக்கு இந்த நிலைமை. உன்ன இப்படி பார்க்க முடியலமா”

அவருக்கு எதிர் திசையில் அமர்ந்திருந்தவள் எழுந்து வந்து அவர் அருகில் அமர்ந்து அவரின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“அப்பா… நடந்து முடிஞ்சதை யாராலும் மாத்த முடியாது. நடக்கணும்னு இருக்கிறது தான் நடக்கும். இது பண்ணிருந்தா இப்படி ஆகிருக்குமோ?  அப்படின்னு நம்ம யோசனைக்கு ஏத்த மாதிரி நடந்திடாது. நீங்க இப்படியெல்லாம் யோசிக்கிறது தேவையில்லாதது ப்பா…”

“நீ இப்படி இருக்குறத பார்த்தா அப்பாக்கு இப்படி தான் யோசிக்க வருது”

“ப்பா… அத்தான் இறந்து ஒரு வருஷம் தான் ஆகுது.என்னால…என்னால… வேற யோசிக்க முடியல…பிளீஸ்ப்பா புரிஞ்சுக்கோங்க”

“புரியுது தேனு… நானும் உன்னை உடனே வேற பையனை கல்யாணம் செய்துக்கோனு சொல்லல”

இருவரிடத்திலும் இப்போது ஆழ்ந்த அமைதி. சுந்தரம் மகளின் கைப்பிடித்து, “உனக்கு சரி வருவானு அப்பா ஒரு பையனை பார்த்திருக்கேன். நீயும் யோசி. எப்ப நீ ரெடியோ அப்போ என்கிட்ட சொல்லு. எந்த காலவரையறையும் உனக்கு இல்ல. நிதானமா யோசி. உனக்கு தேவைப்படுற நேரத்தை எடுத்துக்கோ. இதுக்கு மேல நீயே இந்தப் பேச்சை ஆரம்பிச்சா தான் அப்பா அடுத்து சொல்லுவேன். அப்பாவா திரும்ப இந்தப் பேச்சை எடுக்க மாட்டேன்.” என்றவர், “சரி தேனு நான் படுக்கப் போறேன்.” என்று அவரின் எண்ணத்தை முழுவதுமாய் வெளிப்படுத்திவிட்ட திருப்தியுடன் படுக்கச் சென்றுவிட்டார்.

தேன்மொழி அங்கேயே சில நிமிடங்கள் சிலையென அமர்ந்திருந்தாள். அவளுள் ஏதேதோ நினைவுகள் மனதை அழுத்த, ஆழ்ந்த மூச்செடுப்புடன் தன் அறைக்குள் சென்றாள்.

அடுத்த நாள் கல்லூரி மாணவர்களுடன் சிறு சுற்றலா ஏற்பாடு செய்திருக்க, பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் தனது நாட்குறிப்பை எடுத்தாள்.

பக்கங்களை புரட்ட, மேற்கொண்டு வந்த வெற்று காகிதத்தில்,

“முப்பொழுதும் உன் கற்பனையில் மகிழ்ந்து வாழ்ந்து வந்தேன்,இனி எப்பொழுதும் உன்னை கற்பனையில் மட்டுமே தீண்ட முடியும் என்ற நிஜத்தில் தவித்து சாகிறேன் மெல்ல… ஏன் பிரிந்தாய்?”

என்ற கேள்விக்குறியோடு ஒரு கேவல் அவளிடம். பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துவிட்டது படுக்கையில் விழுந்தவள் முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டாள்.

மறுநாள் எப்போதும் போல தந்தையும், மகளும் பேசிக்கொண்டு அவரவர் வேலைக்குக் கிளம்பிச் சென்றிருந்தனர்.

தேன்மொழி கல்லூரி மாணவர்களுடன் அருகில் உள்ள ஒரு அருவிக்கு வந்திருந்தாள். நீச்சல் தெரிந்த மாணவர்கள் தண்ணீரில் குதித்து ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, தேன்மொழி மற்றொரு பெண் பேராசிரியருடன் பேசிக் கொண்டிருந்தாள். ஆண் பேராசிரியர்கள் அருவியில் குளிக்கும் மாணவர்களுடன் அவர்கள் அருகில் இருந்தனர். அன்று வேலைதினம் என்பதால்  கூட்டம் கம்மி தான். இவர்கள் தான் அங்கு பெரியக் கூட்டம். அதனால் எதுவும் பயப்படும் படி இல்லை என்ற நம்பிக்கையுடன் தான் இருந்தார்கள்.

இரண்டு மணி நேரம் நன்றாக ஆட்டம் போட்டவர்கள் அடுத்து தங்களின்  பேராசிரியர்களை கட்டாயப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். அவர்களும் அனைத்திற்கும் தயாராக தான் வந்திருந்தார்கள். எனினும் தேன்மொழி இல்லை வேணாம் என்று ஒதுங்கி நிற்க, இன்னொரு பெண் பேராசிரியர் ‘ எனக்கு தண்ணீர் என்றால் பயம் ‘ என்று தேன்மொழியோடு நின்றுக் கொண்டார்.  வந்திருந்த ஆண் பேராசிரியர்கள் மாணவர்களுடன் அருவியில் குளிக்கச் சென்றார்கள்.

பெண்கள் சிலர் அங்கு ஓடிக்கொண்டிருந்த நீரில் நீந்திக் கொண்டிருக்க, ஆண்கள் கூட்டம் மொத்தமும் அருவியில்.

நீந்தும் பெண்களைப் பார்த்தவாறு தேன்மொழியும், அவளுடன் வந்தவரும் அமர்ந்துக் கொண்டார்கள். பெண்கள் ஒருவரை ஒருவர் பிடித்து இழுத்து, நீருக்குள் அமுக்கி, பந்தைத் தூக்கி எறிந்து என்று குழுக்களாக விளையாடிக் கொண்டிருக்க, இரு பெண்கள் மட்டும் ஆழம் அதிகம் இருக்கும் இடத்திற்குச் சென்றிருந்தார்கள்.  மற்றவர்கள் அவர்கள் விளையாட்டில் கவனமாகி இருக்க இவர்களை யாரும் கவனிக்கவில்லை.

கொஞ்ச நேரத்தில், ” அய்யோ, ஏ ஹேமா… மேம்…. விதி…. மேம்…மேம்…” என்று கூச்சலிட்டவள்  காட்டிய திசையில் இரு பெண்கள் தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.

அவர்களை கண்டு நொடியும் தாமதிக்காமல் தேன்மொழி செருப்பைக் கழற்றிவிட்டு தண்ணீருக்குள் பாய்ந்துவிட்டாள். அந்தப் பெண்களை நோக்கி அவள் நீந்தவும் , “தேன்மொழி, சார்…. சார்…” என்று கூட இருந்த பேராசிரியர் பயத்தில் கத்த, தேன்மொழியுடன் செல்ல பார்த்த மற்ற பெண்களை, “ஏ பிள்ளைகளா… வேற யாரும் அங்க போகாதீங்க…. வெளிய வாங்க, நல்லா நீச்சல் தெரிஞ்ச பசங்களை கூப்பிடுங்க… எமர்ஜென்சிக்கு கால் பண்ணுங்க…” என்று வழி நடத்தினார்.

பெண்கள் வந்து சொன்னதும் இரு மாணவர்கள் வேகமாக வந்து அவர்கள் காட்டிய திசையில் நீந்த தொடங்கினர். அனைவரும் அங்கு தான் பதற்றத்துடன் நின்றிருந்தார்கள்.

“சார் இப்ப என்ன பண்றது?”

“மேம், பயர் சர்வீசுக்கு போன் பண்ணியாச்சு, ஆம்புலன்சுக்கும் சொல்லியாச்சு, தேன்மொழி மேம் எதுக்குப் போனாங்க? அவங்களுக்கு நீச்சல் தெரியுமா?”

“அவ போனதைப் பார்த்த நல்லா தெரியும் போல தான் இருந்துச்சு சார்”

“மூணு பேரு தலையையும் காணோம்”

என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை பேசியபடி பதற்றமாக இருக்க, கார்த்தி அங்கு வந்தான்.

” மேம்…” என்று அவன் குழப்பமான முகத்துடன் பார்க்க,

“கார்த்தி, தேன்மொழி தண்ணிக்குள்ள….” என்று சொல்லி முடிப்பதற்குள் அவனோடு வந்த உருவமொன்று தண்ணீருக்குள் பொத்தென விழுந்தது.

“சார் எத்தனை பேரு?” என்று ஒரு பயர் சர்வீஸ் அதிகாரி கேட்க, அவரிடம் விவரத்தை அளித்தார்கள்.

அவர்கள் தண்ணீருக்குள் குதிப்பதற்குள், ஒரு மாணவன் ,  ஒரு பெண்ணை இழுத்தபடி நீந்த அவனிடம் சென்ற வீரர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

“தயான்… நீ ஓகே வா?”

“ஹான்!! ஓகே தான் மேம். தேன்மொழி மேம் தான் இவளை என்கிட்ட கொடுத்துட்டு போனாங்க, உள்ள ரொம்ப டீப்… நிறைய செடி வேற, இவளே உள்ள தான் இருந்தா….” என்று சொல்ல, அவர்களைக் காப்பாற்றிய வீரர்கள் மீண்டும் நீருக்குள் விழுந்தனர்.

சில நிமிடங்களில் இன்னொரு மாணவன் நீரிலிருந்து வெளி வந்துவிட்டான்.

“டேய்!!! ஓகே வா” என்று அவனை மாணவர்கள் சுற்றிவிட,  “ரொம்ப டீப் என்னால முடியல, மேம் இன்னும் தேடிட்டு இருக்காங்க… என்னை மேல போக சொல்லிட்டாங்க…” என்றான் மூச்சு வாங்கலுடன்.

சற்று நேரத்தில் இன்னொரு மாணவியுடன் வீரர்கள் வெளி வர, தேன் மொழியை தூக்கிக்கொண்டு நீரிலிருந்து மேலேறினான் அந்த நெடியவன்.

தலையில் கை வைத்து பார்த்திருந்த கார்த்தி, “சித்தி….” என்று அவளை நெருங்க, அவளை படுக்க போட்டவன், அவளின் கன்னத்தைத் தட்டி, கை கால்களைத் தேய்த்துவிட்டு, இதயத் துடிப்பை கேட்க, நொடி தாமதிக்காமல் முதலுதவியாக மூச்சினைக் கடத்தினான். அடுத்தடுத்து செய்ய வேண்டியதை செய்து, அவள் லேசாக மூச்சு விடவும் தான் இயல்பானான்.

நடப்பதை அனைவரும் படம் போல பார்த்துக்கொண்டிருக்க யாருக்கும் சுயம் இல்லை.

“கார்த்தி, என்ன பாத்துட்டு நிக்கிற, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனும்.” என்று அவன் சொல்லவும் தான் கார்த்தி நிதானத்துக்கு வந்தவன்,

“ஆச்சி… ஆச்சிக்கு ஆக்சிடென்ட்” என்றான்.

“வாட்?” என்று அதிர்ந்து எழுந்தவன். முகத்தைத் துடைத்துவிட்டு, தேன்மொழியை ஒரு பார்வை பார்த்தான்.

“நீ இங்க பாரு… அப்டேட் சொல்லு. எந்த ஹாஸ்பிடல்?”

“வடமலையான்”

“நான் கிளம்புறேன்,  பொறுமையா மாமாவுக்குச் சொல்லு… பார்த்துக்கோ” என்று தாமதிக்காமல் சென்றுவிட்டான்.

அவன் செல்லவும், “கார்த்தி அது?”

“சித்தப்பா…” என்க, அந்த இரு மாணவிகளுடன், தேன்மொழியையும் ஆம்புலன்சில் ஏற்றி கிளம்பியிருந்தார்கள்.

மருத்துவமனையில் அனைவரையும் சோதித்து, தேவையான சிகிச்சையை அளித்திருக்க, கல்லூரி முதல்வரும் அங்கு வந்துவிட்டார்.

கார்த்தி சுந்தரத்திற்குச் சொல்லிவிட, அவரும் பதறி ஓடி வந்திருந்தார்.

மாணவிகள் கண் திறந்திருக்க அவர்களை நலம் விசாரித்தார்கள் மற்றவர்கள். தேன்மொழி கண் திறக்க சில மணி நேரங்கள் பிடித்திருந்தது.

அவளை படுக்கையில் கண்ட சுந்தரத்திற்குக் கண்கள் கலங்கிவிட்டது.

“தேனு….” என்று அவளின் கைப் பற்றியவர் அடுத்து பேச வார்த்தைகளின்றி மௌனித்துப் போனார்.