ருத்ரன் பணிக்குச் சென்று ஒரு மாத காலம் முடிந்திருந்தது. கனிமொழி, நிலன் தம்பதிகள் ருத்ரன் சென்ற ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியா பயணப்பட்டனர். அவர்கள் அங்கு சென்று சேர்ந்து, கனிமொழிக்கு அங்கு அனைத்தும் பரிச்சியம் ஆக நாட்கள் பிடித்தது. தினமும் தேனுவும் கனியும் பேசிக்கொள்வார்கள். கனியும் இப்போது பணிக்கு திரும்பிவிட, தேனிற்கும் கல்லூரி தொடங்கியிருந்தது. அனைவரும் அவரவர் வேலைக்குத் திரும்பியிருந்தனர்.
தேன்மொழி பிரியாவிடம் மட்டும் தனக்கு நிச்சியம் ஆகியதைத் தெரிவித்திருந்தாள். அவள் இவளிடம் கோபம் கொண்டு கடந்த இரு நாட்களாக பேசவில்லை. அவளின் வாதம் இதுவே, “கனி கல்யாணத்துக்குக் கூட வந்திருந்தேன். அப்ப கூட நீ சொல்லவே இல்ல… ஒரு கால் பண்ணி சொல்றதுக்கு என்ன? அவ்ளோ தான நம்ம ஃப்ரெண்ட்ஷிப்?” என்று ஏகத்திற்கும் பேசி சண்டையிட்டிருந்தாள். கல்லூரி சென்ற இந்த இரண்டு நாட்களாக அவளை சமாதானப்படுத்துவதிலே சென்றது தேன்மொழிக்கு.
மகனின் அழைப்பை ஏற்று, இன்று கண்மணி மற்றும் வேணுகோபால் பிரான்சு செல்கிறார்கள். அவர்களுக்கான உதவிகள் செய்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
“மணியம்மா அந்த முறுக்கு, அதிரசம் எல்லாம் எடுத்து வச்சிட்டியா?” அலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்தான் கார்த்திக்.
“வச்சாச்சு டா… நீ பிக் அப் பண்ணிப்பியா அக்காவையும் மாமாவையும்?” தேன்மொழி கேட்க,
“இல்ல சித்தி… நான் வரணும்னா நைட்டு டிராவல் பண்ணனும். சித்தப்ஸ் பாத்துப்பார்” என்றதும், தேன் கேள்வியாக கண்மணியைப் பார்க்க,
“அட என்ன சித்தி! உங்க ஜிகிரி தோஸ்த் மறந்துட்டீங்களா?”
“சரணா?”
“ஹ்ம்ம்… அவரே தான்! ஐரோப்பிய வானில் பறந்துக் கொண்டிருக்கிறார் சில காலமாக”
“ஓஹ்!!”
“தெரியாதா உங்களுக்கு?”
அவள் இல்லையென்று பெட்டியில் கண்மணி கொடுத்ததை அடுக்கிக் கொண்டிருக்க, அவனே தொடர்ந்தான்.
“தெரிஞ்சிருக்க வாய்பில்லை தான். நானே எப்பவாவது தான் பேசுவேன்… டைட் ஸ்கேடுல்னு சொல்லுவாங்க. இப்ப கனி சித்தி கல்யாணத்துக்கு அப்புறம் பேசினாங்க. அப்போ தான் அம்மா அப்பா வரதைச் சொன்னேன். நேத்து பேசினாங்க.” என்று அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.
“தேனு… காலேஜ் முடிச்சிட்டு வந்து சித்தப்பா கூட கொஞ்ச நேரம் கடையில இரு.டியூஷன் வீக்எண்ட் மட்டும் எடு என்ன? சித்தப்பா ஒத்தாளா சமாளிக்கணும் கூட இருந்து பாத்துக்கோ தேனு”
“ஓகே கா… நான் பார்த்துக்கிறேன்.உங்க பிசினஸ்க்கு ஒன்னும் ஆகாது” என்று வாக்குக் கொடுக்க,
“ஆமா சித்தி, கண்மணி பிசினஸை நல்லப்படியா பார்த்துக்கோங்க… நான் வந்து அதை பெரிய லெவலுக்கு எடுத்துட்டு போலாம்னு இருக்கேன்”
“டேய்! அப்படியா? யாரோ எவரோ வேற மாதிரி சொன்னது போல இருந்ததே?”
“ம்ம்…. அது நமக்கு கொடுத்து வைக்கல சித்தி… கண்மணி பாக்குற பொண்ணு தான் எனக்குனு இருக்கு” என்று அவன் விளையாட்டாக கூறினாலும் அவனின் குரலில் வருத்தம் இருந்தது. அதை உணர்ந்தவளும்,
“கார்த்திக் அங்க நிறைய ஃபேஷன் கிளாத்ஸ் இருக்கும்னு பார்த்தேன். எனக்கு ஒரு ஜாக்கெட் வேணும்.”
“அது ரொம்ப காஸ்ட்லி டா. நா உனக்கு ஒரு போடோ அனுப்புறேன். அது மாதிரி பாரு”
“தேனு… நான் ஊர்ல இல்லாதப்ப பைக் எடுத்துட்டு இங்க போறேன் அங்க போறேன்னு அடம்பிடிக்க கூடாது. சித்தப்பா கூட சண்டை போடக்கூடாது. நீ ஒரு டீச்சர் அதை நினைவுல வச்சுக்கோ” கண்மணி அறிவுரை வழங்க,
“அதானே! சித்தி… நவ் யூ ஆர் ஏ ப்ரோபெச்சர். பைக்லாம் ஓட்டக்கூடாது. நான் அங்க வந்ததும் தாத்தா பைக் எனக்குத் தான்.”
“பிச்சு… அது எனக்குத் தான். உனக்கு வேணும்னா அக்காவ வாங்கி தர சொல்லு”
“மம்மி… சித்தி பைக் தர மாட்டேன்னு சொல்றா”
“டேய் ஆரம்பிக்காதீங்க டா… அடி வாங்குவீங்க ரெண்டு பேரும்” என்று மிரட்டியவர் அங்கிருந்து நகரந்துவிட்டார்.
தேன்மொழி இடுப்பில் கைவைத்து கார்த்திக்கை திரையில் முறைக்க, “அய்யோ! கண்மணி ஓடிட்டா… ஹே ஹனி பனி! நீ மிலிட்டரியை கல்யாணம் பண்ணிட்டு காஷ்மீர் போயிடுவ, தாத்தா பைக் எனக்குத்தான்” என்று பலிப்பு காட்டி அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
“வச்சுட்டான்” என்று தேன்மொழி பல்லைக் கடிக்க,”தேனு” என்று அழைத்தார் கண்மணி.
“சொல்லுக்கா…”
“கனி பேசினாலா?”
“ஹ்ம்ம்… வீக்எண்ட் வெளிய போறாங்க போல, நாளைக்கு நைட்டு பேசுவா”
“தாத்தாவ அங்க தங்க சொல்லியிருக்கேன். படுக்க அங்க வரச் சொல்லு. நான் சொன்னா கேட்க மாட்டாரு. நீ கூப்பிடு. தனியா இங்க இருக்க வேணாம். உன் மாமா ஒரு மாசத்துல வந்திடுவாரு. நானும் அவரோட தான் வரணும்னு பார்க்குறேன், இந்த பையன் விடுவானா தெரியல?” என்று அவர் புலம்பினார்.
“மணி க்கா… புலம்பாம கிளம்பு. தாத்தாவை நான் பார்த்துப்பேன்… மாமா எங்க? எத்தன மணிக்கு ட்ரெயின்? வண்டி சொல்லியாச்சா?”
“பாண்டியன் எக்ஸ்பிரஸ் தான் தேனு… அங்க எங்க பெரியப்பா வீடு இருக்குல தங்கிட்டு நைட்டு கிளம்பிடுவோம்”
“தாத்தா! நைட்டு அங்க வீட்டுக்கு வந்துடனும்” என்று மிரட்டவே செய்தாள் தேன்மொழி.
“சரிடா தேனு… வந்துடுறேன். மாப்பிள்ளையும் சொல்லிட்டாரு” என்று சுந்தரம் அழைத்ததையும் சொல்லியிருந்தார்.
அன்றைய பொழுதும் முடிவுக்கு வர, கண்மணி மற்றும் வேணுகோபால் கிளம்பிச்சென்றிருக்க, தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் இரவு உணவைக் கொடுத்தவள், அவர்கள் படுக்க விரித்துவிட்டு அவளின் அறைக்குள் வந்தாள்.
அவளின் மேஜையில் அமர்ந்தவள் நாளைய பாடத்திற்கு தேவையான குறிப்புகளை எடுத்து முடித்துவிட்டு மணியை பார்க்க அது பத்து என்று காட்டியது. தன் கைபேசியை கையில் எடுத்தவள் அதனுடன் படுக்கையில் விழுந்தாள். அதில் வாட்ஸ்அப் செயலியை சொடுக்கி பார்க்க, கனி, இன்று அவர்கள் சென்று வந்த இடங்களின் புகைப்படங்களை அனுப்பியிருந்தாள். அதனை ஒன்றன் பின் ஒன்றாய்த் தள்ளி பார்த்தவள் அனைத்திற்கும் சேர்த்து ஒரு இதயத்தை பதிலாக அனுப்பிவிட்டு, காலை எழுவதற்கான அலாரத்தை வைத்துவிட்டு படுக்க ஆயத்தமாக குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசை. கனியாக இருக்கும் என்று பார்க்க,
“அவேக்?” என்று வந்திருந்தது ருத்ரனிடமிருந்து. கண்கள் விரிய அதைப் பார்த்தவள்,
“எஸ்” என்று எழுதி உடனே அதனை அழித்துவிட்டாள். அவன் அனுப்பியதும் உடனே பதில் அனுப்ப மனம் மருண்டியது. எழுதுவதும் பின் அழிப்பதுமாக இருமுறை செய்ய, இம்முறை அழைப்பே வந்துவிட்டது அவனிடமிருந்து. பதறி எழுந்தவள் கைப்பட்டு அழைப்பு ஏற்கபட்டிருந்தது.
“மொழி…” என்று அவனின் அழைப்பு, நல்லவேளை அது காணொளி அழைப்பில்லை என்ற ஆசுவாசம் அவளுக்கு.
“சொல்லுங்…ங்க”
அவனிடமிருந்து பதில் வராமல் இருக்க,”அத்தான்….” என்றாள் கேள்வியாக.
“மொழி” காற்றாக வந்தது,
“கேட்குதா அத்தான்… ஹலோ?”
“ம்ம்… நல்லாவே கேட்குது. தூங்கிட்டியா?”
“ஹ்ம்ம்… தூங்கிட்டேன். நீங்க கனவுல பேசுறீங்க!!”
சத்தமில்லாமல் சிரித்தான் ருத்ரன்.
“முழுச்சிருக்க?”
“ஹையோ!! பெரிய கண்டுபிடிப்பு. இந்த லெவல்ல போர்டெர்ல வேலை பார்த்தா. நாங்கெல்லாம் எப்படி நிம்மதியா இருக்குறது?”
“ஹே!!! வெயிட் வெயிட்…”
அதன் பின் கரகரவென சத்தம்.காற்றின் சத்தம் என்று புரிந்தது.
மீண்டும் அவன், “மொழி…” என்க,
“அத்தான் வண்டில போயிட்டு இருக்கீங்களா?”
“வந்துட்டேன்… டூ மினிட்ஸ்… லைன்ல இரு…”
இரண்டு நிமிடங்கள் ஐந்தானது, மேலும் நீட்டித்து பத்தானது. அந்தப்பக்கம் அமைதி தான்.
அவள் முகத்தைப் பார்த்ததும், “தூக்கம் வருதா?” என்றிருந்தான்.
அவள் தலை மேலும் கீழும் அசைய, கண்கள் சுருக்கியவன், “சர்வா ஃபோட்டோஸ் அனுப்புவான்… நான் செலக்ட் பண்ணது உனக்கு அனுப்புறேன். நீ ரெண்டையும் பார்த்து ஃபைனல் பண்ணி அவனுக்கு அனுப்பிடு. அவன் ஆல்பம் போட்டிடுவான். அதை சொல்ல தான் கூப்பிட்டேன். நீ ரிப்ளை அனுப்பல.அதான் கால் பண்ணிட்டேன். சரி தூங்கு. குட் நைட்”
“இல்ல இல்ல… பேசுங்க” என்று அவன் அழைப்பை துண்டித்துவிடுவானோ என்று முந்திக் கொண்டு இவள் பதில் மொழிந்தாள்.
அவளின் செய்கையில் மலர்ந்து சிரித்தவன், “செல்லமே! அச்சுவெல்லம் டி… எனக்கும் பேசணும்னு ஆசை தான். பட் இப்போ ஒரு மீட்டிங் இருக்கு. திரும்ப கூப்பிடுறேன். நீயும் தூங்கு. நாளைக்கு காலேஜ் இருக்குல. போட்டோஸ் பாரு அம்சமா இருக்க” என்று சொல்லி கண்ணடித்தான்.
அவளின் முகம் வாடிவிட, “ஹே!! மொழி… இப்படி உடனே முகம் மாறக்கூடாது. ப்ச்…” என்றவன் தொப்பியை கழட்டிவிட்டு தலை கோதினான்.
அவன் சலித்துக்கொள்ள உடனே இவள்,”நான் பார்த்திட்டு அனுப்புறேன். அப்புறம்…” என்று இழுக்க,
“ம்ம்…” என்றான் அவள் கண்களை பார்த்து,
“அடுத்து எப்போ பேசுவீங்க?”
அவனின் இதழில் முறுவல் பூத்தது, “பேசணுமா?” அவனின் குரல் ஆழ்ந்து வர,உதடு சுழித்தாள் அவனின் பேச்சில்.
“ஸ்ஸ்…. இப்படி பண்ணாத… டெம்ப்ட் ஆகுது…” என்றவன் திரையில் அவளுக்கு முத்தமொன்றை பதித்துவிட்டு,
“இந்த மிஷன் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம். நான் அம்மாகிட்ட பேசுறேன். கொஞ்சம் நாள் பிசி. டைம் கிடைச்சா கால் இல்லனா மெசேஜ் பண்ணுவேன்” என்றுவிட்டு மூச்சை இழுத்துப் பிடித்தான்.
“மொழி”
“ம்ம்….”
“சீக்கிரம்… ப்ச்… என்னை ரொம்ப வீக் ஆக்குற. எனக்கு உன் எக்ச்பெக்டேஷன் புரியுது. ஆனா இப்போ கொஞ்சம் இங்க நிலைமை சரியில்ல. புரிஞ்சுக்க டிரை பண்ணு” அவன் கெஞ்சலாக கேட்க,
மெல்ல புன்னகைத்தாள். அவளின் சுணக்கம் அவனை பாதிக்கிறது என்று அறிந்தவளுக்குள் உவகை பெருக்கு. அவனின் நிலையும் புரியத்தான் செய்கிறது. அவனை இலகுவாக்க நினைத்தவள்,
“இல்ல விக்கல் வருது” என்று அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீர் அருந்தினாள்.
அவளின் செயலில் பிரமித்து போனான் ருத்ரன்.
“அடியே சக்கரக்கட்டி!!! நல்லா பேசுற…. இவளோ நாளும் அமைதியோ அமைதினு இருந்திட்டு”
“ருத்ரா…” பின்னால் இருந்து அழைப்பு வரவும், கைபேசியை மறைத்துவிட்டு, “ஆராஹான்ஹும்….” பதில் சொன்னவன் மீண்டும் காணொளியில்,
“செல்லம் பை!! தூங்கு… போட்டோஸ் மறந்துடாத. திரும்ப பேசுறேன். பை பை… ஸ்வீட் ட்ரீம்ஸ். ஸ்லீப் டைட்” என்று கிசுகிசுவென பேசியவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
அவனின் திருட்டுத்தனமான பேச்சு, அவளை சிரிக்க வைத்தது. “பேச்சை பாரு… அச்சுவெல்லம், சக்கரக்கட்டி… செல்லமாமே!!!” என்று நொடித்துக்கொண்டாலும் இதழ்களில் புன்னகை தவழ்ந்திருந்தது.
ருத்ரனின் இந்த பரிமாணம் முற்றிலும் புதியது. அதிகம் பேசியிராதவன் இப்போது காட்டும் நெருக்கம் அவளை ஏதோ செய்தது. அவளுக்கு அவனின் மேல் எதிர்பார்ப்பு கூடியது. அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஆயிரம் கற்பனைகள் தோன்றியது. அந்த இனிய எண்ணங்களுடன் உறங்கிப்போனாள்.
கற்பனை பொழுதுகள் யாவும் நிஜமாகுமா? காலம் யாருக்கும் நிற்காது அதன்போக்கில் உருண்டோடியது.