தனது கைபேசியில் இருந்து தேன்மொழிக்கு அழைக்க, சாதாரண சுடிதாருக்கு மாறியவள் அவனின் அழைப்பை பார்த்துக் கொண்டிருந்தாளே ஒழிய அதனை எடுக்கவில்லை. அவளின் அலைபேசி திரையில் அவனின் பெயர், “ருத்ரன் காலிங்” என்று மிளிர, அழைப்பு நிற்கும் தருவாயில் அதனை ஏற்றிருந்தாள்.
“மொழி….”
“சொல்லுங்க அத்தான்”
அவளின் அத்தான் என்ற அழைப்பே அவனை காக்க வைத்ததை மறக்கடிக்க போதுமானதாக இருந்தது.
மென்னகையுடன், “பிசியா?” என்றான்.
“இல்ல, டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்தேன்”
“ஹ்ம்ம்…. சரி மாடிக்கு வா”
“இப்பவா?”
“ம்ம்… மாடிக்குப் போ. நான் வரேன். கொஞ்சம் பேசணும்”
பேசணும் என்று அவன் சொன்னதும், அவளுக்கும் தான் பேச வேண்டுமே, “ஓகே த்தான்” என்று உடனே ஒப்புக்கொள்ள.
“தங்கக்கட்டி டி… சூப்பர் சூப்பர் மேல போ. டூ மினிட்ஸ் வந்துடுறேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டான்.
பேசவே காசு கேட்பவனின் இவ்வகையான பேச்சுக்கள் எல்லாம் இவளுக்குப் புதிதாக இருக்க, அவளும் சிறு சிரிப்புடன் போனைப் பார்த்தவள், கண்ணாடியில் ஒருமுறை தன்னை சரிபார்த்து, துப்பட்டாவை போட்டுக்கொண்டு கைபேசியுடனே மாடிக்குச் சென்றாள்.
அவள் அறையிலிருந்து வெளியே வந்தபொழுது யாரும் கூடத்தில் இல்லாமல் போக, யார் கண்ணிலும் படாமல் படி ஏறினாள். மேலே யாரேனும் இருப்பார்களோ? அப்படியானால் எப்படி சமாளிப்பது என்ற யோசனையுடனே வர, நல்ல வேளை அங்கு யாருமில்லை.
அந்தி சாயும் பொழுது, சூரியனும் மெல்ல மறைய ஆரம்பித்திருந்தது. வானம் செம்மை நிறம் பூசி இருந்தது. பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
ஒரு நிம்மதி பெருமூச்சுடன் மாடியின் ஒரு ஓரத்துக்குச் சென்றவள், அங்கிருந்து எட்டிப் பார்க்க, கண்மணியின் வீட்டு வெளிக்கதவு தெரிந்தது. தன் இரு கால்களை எக்கிக் கொண்டு ருத்ரன் வருகிறானா என்று தேடிப்பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் இடையைப் பற்றி அவளின் மீது சாய்ந்து அவள் பார்க்கும் திசையில் பார்த்து, “அங்க யார் இருக்கா, எட்டிப் பார்த்துட்டு இருக்க?” என்று அவளின் காதருகில் கேட்டான்.
அவனின் திடீர் அணைப்பில் அதிர்ந்தவள், நெஞ்சில் கைவைத்து அவனை பார்க்க, “என்னாச்சு?” என்றான் குறும்பு பார்வையுடன்.
அவனின் கைகளில் நெளிந்தவள், “நீங்க… இங்க… எனக்கு போன் பண்ணும் போதே இங்க வந்துட்டீங்களா? இல்லையே! நான் வந்தப்ப இங்க யாருமில்லையே!” என்று சிந்தனையுடன் கேட்க,
“என்னை தான் தேடுனியா அங்க?” என்றவன் பிடி சற்று விலக, அவளும் அவனிடமிருந்து தன்னை விலக்கி திடமானாள்.
“எப்படி வந்தீங்க?” என்று அவள் அதிலே இருக்க, அவனின் கைபேசி இசைத்தது.
“ஒரு நிமிஷம்” என்றவன் அதனை ஏற்க, அந்த பக்கம் என்ன சொன்னதோ, “கொஞ்சம் நேரம். முக்கியமான கால் பேசிட்டு இருக்கேனு சொல்லு… வந்துடுவேன்” என்று பேசி வைத்தான்.
அவன் அலைபேசியில் பேசும் போது தான் அவனின் பேண்டில் இருந்த வெள்ளை நிற சுண்ணாம்பை கவனித்தாள். அவளின் பார்வை போகுமிடம் உணர்ந்து, “மொழி” என்றழைக்க,
“த்தான்…” என்றவள், அவனின் பின் பார்த்து, “மாடி தாவி வந்தீங்களா?” என்று கேட்டாள்.
சிரித்தவன், அவளுக்கு பதில் சொல்லாமல், பேண்டில் இருந்த தூசியைத் தட்டி விட்டான்.
“எதுக்கு இப்படி? ஒரு ஆர்மி மேன் செய்ற வேலையா இது?”
“ஹ்ம்ம்… உன்னை பார்க்க தான்” என்றான் அலட்டாமல்.
“என்னை பார்க்குறது என்ன குதிரக்கொம்பா?” வீட்ல தன் இருக்கேன்.
“திருட்டுத்தனமா பார்க்கணுமே, வாசல் வழியா வந்தா நிறைய டிஸ்டர்பன்சஸ்”
அவன் யாரை குறிப்பிடுகிறான் என்பதை புரிந்துக் கொண்டவள், “கீழ என்னை காணோம்னு கனி தேடி இங்க வந்திடுவா” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளின் கைபேசி இசைத்தது.
“அவ தான்” என்று அவள் அழைப்பை ஏற்பதற்குள், அவளின் கையிலிருந்து கைபேசியை அவன் வசம் கொண்டு வந்துவிட்டான்.
அவனின் இந்த செயலில், “அத்தான் என்ன பண்றீங்க?” என்று புருவம் சுருக்கி கீச் குரலில் கேட்க,
“என்ன பண்ணிட்டாங்க?” என்றான் அவனும் அவளை மார்க்கமாக பார்த்துக்கொண்டு.
“ப்ச் !!” என்று படியை எட்டிப்பார்க்க, அங்கே சர்வேஷ் அமர்ந்திருந்தான்.
அவளைப்போலவே ருத்ரனும் பார்த்தவன், அவளை தன்னைப்பார்க்க வைத்து, “இப்போ என் டைம். எனக்கான டைம். யாரும் வர மாட்டாங்க” என்று சொல்லிமுடிப்பதற்குள் கீழே, கனியின் குரல்,
“சர்வா அத்தான்? இங்க என்ன பண்றீங்க?”
“ஹ்ம்ம்” என்று தோள் குலுக்கினான் சர்வா.
” தேனு மேல இருக்காளா?”
அவன் இல்லை என்று தலை அசைக்க, அவள் மீண்டும் அவளின் கைபேசிக்கு அழைத்தாள். அந்தோ பரிதாபம் ருத்ரன் அதனை அணைத்துவிட்டான். இந்த முறை அழைப்பு போகவில்லை என்றதும்.
“போன் ஆஃப்னு வருது, எங்க போயிருப்பா?” என்று அவள் சத்தமாகவே புலம்பினாள்.
“அச்சோ அத்தான். அவ பயப்பட போறா, கனி….” என்று அவள் மேலிருந்து அழைக்க, அவளுக்கு முன் கீழே பார்த்து, “இங்க தான் இருக்கா. வந்திடுவா” என்றான் ருத்ரன்.
மேலே பார்த்த கனி, “ஓஹ்!” என்று அசுவசத்துடன், சர்வேஷை மேலும் கீழும் பார்த்துவைத்தாள்.
அவனோ, “என்ன லுக்?” என்று கேட்க,
“நல்ல வேலை தான்… பாருங்க” என்றவள் உள்ளே சென்றுவிட, சர்வேஷ் மேலே அண்ணாந்து பார்த்தான். அங்கே யாருமில்லை. அதான் ருத்ரன் கனியிடம் சொல்லியதும் மொழியை இழுத்துக் கொண்டு அந்தப்பக்கம் தண்ணீர் தொட்டி அருகே சென்றிருந்தான்.
“அடேய் பய்யா! என்ன எங்க வந்து நிறுத்திருக்க பாத்தியா? நான் யாரு… எப்படி பட்ட ஆளு” என்று சர்வேஷினால் மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது. மீண்டும் தலை குனிந்தவன் அவனது கைபேசியில் நுழைந்துக்கொண்டான்.
தண்ணீர் தொட்டி அருகே மொழியை அழைத்து வந்தவன், அங்கே தூசியை தட்டிவிட்டு அவளை அமர வைத்தான்.
“பேசணும்னு சொல்லியிருந்த… என்ன பேசணும்?” என்று அவள் உயரத்திற்கு குனிந்து, அவள் கண்களை ஊடுருவி கேட்டான்.
அவனின் நெருக்கத்திலும், பார்வையிலும் மொழியின் மூளை, வேலை நிறுத்தம் செய்திருந்தது.
“ஹான்! என்ன பேசணும்” என்று வாய் அசைத்தாள். குரல் வெளி வரவில்லை.
கன்னகதுப்பை கடித்துக் கொண்டு சிரித்தவன், அவளை ஒட்டி, உரசிக்கொண்டு அமர்ந்து அவளின் கை கோர்த்துக்கொண்டான். மொழிக்கு இதயம் வேகமாக துடிக்க, எச்சில் விழுங்கிக் கொண்டாள்.
“பிடிச்சிருக்கா?” குரல் பிசிறி வந்தது ருத்ரனுக்கு,
என்னவென்று மொழி அவனை பார்க்க, அவளின் கை செயினை சுட்டிக் காட்டினான். அவள் தலை ஆம் என்று அசைய, “என்னை?” என்றான் இப்போது அவனை சுட்டி காண்பித்து.
இதுவரை அடங்கி இருந்த நாணம் வெளிவர பார்த்தது. வானத்தின் சிவப்பிற்குப் போட்டியாக அவளின் கன்னங்களும் இப்போது சிவந்தது. தங்க கதிர்கள் அவள் முகம் தழுவ, பெண்ணவள் மின்னினாள். அவளின் வெட்க முகத்தை தனக்குள் புதைத்துக் கொள்ள பேராவல் பிறந்தது ருத்ரனுக்கு.
தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, “என்ன பதில காணோம்?” என்றான்.
அவளும் தான் என்ன சொல்வாள். அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் முகம் சொன்ன செய்தி, அவள் விரல்களின் இறுக்கம் என்று அவளைப் படித்தவன், அவனே பேச்சை எடுத்தான்.
“எனக்கு கிஃப்ட் எதுவும் இல்லையா?”
அவன் கேட்கவும் தயங்கியவள், பின் மெதுவாக, “அது! அது! நீங்க… வருவீங்களா இல்லையான்னு” என்று இழுக்க.
“ஓ! ஓகே… பரவால…” என்றான் யோசனையாக,
அவனின் யோசனையைக் கண்டவள், “என்ன வேணும் சொல்லுங்க… உங்களுக்கு என்ன பிடிக்கும்?” என்று கேட்டாள். உண்மையில் அவனை பற்றி இவளுக்கு அவ்வளவு தெரியாது.
நமட்டுச் சிரிப்புடன் “சொல்றேன்!!” என்றவன், “நான் ஆறு மணிக்கு கிளம்புறேன்” என்று அவன் கிளம்பும் செய்தியைக் கூறினான்.
ஆம் என்று அவன் கண் மூடி திறக்க, அவளின் முகம் வாடிவிட்டது.
அவளின் முகவாட்டம் அவனை ஏதோ செய்ய, “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றிருந்தான்.
இதுவா தீர்வு? என்று அவள் பார்க்க,”ஒரு ஆறு மாசம் கொஞ்சம் பிசி” என்றான் அனுமதி வேண்டும் குரலில்.
அவனின் வேலைப்பற்றி நன்கு அறிந்தவள் தானே. அது அவனுக்கு எத்தனை பிடித்தம் என்பதையும் உணர்ந்திருந்தாள் அல்லவா. புன்னகையை வரவைத்து, சரி என்பதாய் தலை அசைத்தாள் அவனுக்காக.
“கல்யாணம் முடிஞ்சதும் உன்னையும் என்னோட கூட்டிட்டு போயிடுவேன்” என்றதும், அவளின் இதழ்கள் அப்பா என்ற சொல்லை உதிர்க்கும் முன்னே, “மாமாவையும் கடத்திட்டுப் போயிடுவோம்… நீ ஒரி பண்ணிக்காத” என்றான் சமாதானமாய்.
“இன்னும் நிறைய பேசணும். பட். டைம் இஸ் ரன்னிங் பாஸ்ட்” என்றான் கைக்கடிகாரத்தைப் பார்த்து.
“மொழி…” என்றவனின் அழைப்பில் அத்தனை காதல்.
அவன் கண் பார்த்தவளின் கண்கள் கவலையை பிரதிபலிக்க, அவளின் இதழ்களோ சிரிப்பை நிலைநிறுத்தியது. இது இப்படி தான் என்பது இருவருக்கும் தெரிந்த ஒன்று தான். கடினமான விடைபெறுதல்கள் இவர்கள் வாழ்க்கையின் அங்கமாக இருக்க போகிறதே.
துக்கத்தை முழுங்கியவள், “இப்பவாவது பேசுவீங்களா?” என்று கேட்டாள். அவள் குரலில் இருந்தது கோபமா? தவிப்பா? வருத்தமா? காதலா? அனைத்தும் என்றது அவளின் பார்வை.
“பேச முடியுற டைம் கண்டிப்பா பேசுவேன்” என்று அவளின் கன்னம் தட்டி கூறினான்.
“நம்பலாமா?”
“நம்புறத்துக்கு என்ன பண்ணனும்?” என்று கேட்டவன் அவளை அள்ளி தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.
“த்தான் என்ன பண்றீங்க?” என்றாள் பயந்து.
“என்ன வேணும்னு கேட்டியே? ஒரு முத்தம்” என்றான் அவன் உல்லாசமாக.
அவள் இல்லை என்பதாக தலையை வேகமாக அசைக்க,
“உன்னை கட்டிப் பிடிக்க பிடிக்கும்… ரொம்ப” என்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
“அச்சோ! அத்தான்… இது மொட்ட மாடி” என்று அவளின் குரல் உள்ளே போக. அவளை விடுவித்து எழுந்துக் கொண்டான்.
“ஹ்ம்ம். தெரியும். இது மாடினு… மாமாகிட்ட சொல்லிட்டு போக வருவேன்” என்று அவன் சொல்ல, அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.
அவளை நெருங்கியவன், “என்ன?” என்றான் அவளின் நெற்றி முட்டி.
“அத்தான்” என்றவளின் அழைப்பில் அத்தனை ஏக்கம்.
கண்மூடி மூச்சை உள்ளிழுத்தவன், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “மொட்ட மாடி தான். யாரும் இல்லை. கட்டிப்பிடிச்சுக்கவா?” ஆழ்ந்து வெளிவந்தது அவனின் சொற்கள்.
அவளின் தலை சம்மதமாக அசையவும், கட்டிக்கொண்டான். அவளை அவனுள் புதைத்து விடும் அளவு இறுக்கினான். சற்று வலிக்கவே செய்தது மொழிக்கு. “மொழி… லவ் யூ” என்றவன் அவளின் உச்சந்தலையில் முத்தமொன்றை வைத்து விலகினான்.
“டைம் கிடைக்கும் போது பேசுறேன்.” என்று சொல்லி திரும்பி நடந்தவனை தான் விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மொழி.
அவர்கள் வீட்டின் மாடி சுவர் அருகே சென்றவனுக்கு என்ன தோன்றியதோ, மீண்டும் திரும்பியவனின் பார்வையில் மொழி விழ, வேகமாக அவள் அருகில் வந்தவன். அவளை மீண்டுமொருமுறை அணைத்து அவளது கன்னத்தில் அச்சாரம் பதித்து, “வந்துடுவேன்! சீக்கிரம் வந்திடுவேன்!” என்று சொல்லிவிட்டு வேகமாய் நகர்ந்தவன் அடுத்த வீட்டு மாடியில் குதித்திருந்தான். அடுத்து அடுத்து தாவி, குதித்து ஒரு நிமிடத்திற்குள் கண்மணியின் வீட்டு மாடியில் இருந்தான். அங்கிருந்து கை ஆட்டி மொழிக்கு விடைக்கொடுத்தவன் கீழே இறங்குவதைப் பார்த்தவள், அவளும் கீழே இறங்கினாள்.
ருத்ரன் சொன்னது போல அடுத்த பத்து நிமிடத்தில் பயணப்பையுடன் அவளது வீட்டில் இருந்தான். சுந்தரத்திடம் சொல்லிக்கொண்டு நாட்டிற்கான கடமையைச் செய்ய கிளம்பிவிட்டான்.
அனைத்தும் வேகவேகமாய் நடந்து முடிந்திருந்து. அவன் மின்னலென வந்து அவளையும் வேறு எதையும் சிந்திக்கவிடாமல் ஒரு தாக்கத்தை அவளிடம் உருவாக்கிவிட்டு சென்றிருந்தான்.