அத்தியாயம் – 60

அதில் கோபமடைந்து,“அத்தை..இவங்க” என்று மீண்டும் சினேகா ஆரம்பிக்க,“இன்னைக்கு வழக்கத்தை விட உனக்கு அதிகக் களைப்பா இருக்கும்..உன்னோட தூக்கத்தை வேற கலைச்சிட்டான் தம்பி..இதுக்கு மேலே நீ விழிச்சிருந்தா உனக்கு தான் கஷ்டமாகிடும்..நான் இங்கே பார்த்துகறேன்..நீ போய்த் தூங்கு சினேகா.” என்றாள் வசந்தி.

கணவன் மீது ஏகப்பட்ட கோபம், ஆதங்கம் இருந்தாலும் கண்ணெதிரே இருந்தவனை விட்டுச் செல்ல மனம் முரண்டு செய்ய, ‘இங்கேயே இருக்கேன்’ என்று அவளது மனத்தை வெளியிடுமுன்,”வசந்தி சொல்றது சரி..மெதுவா எழுந்திரு கண்ணு..உறங்கப் போகலாம்.” என்று விஜயாவும் சொல்ல சினேகாவோ மௌனமாக மேஜை மேல் இருந்த உணவுப் பண்டங்களை தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

உடனே,“பசிக்குதா கண்ணு? கொஞ்சம் போல தயிர் சாதம் கலந்து கொடுக்கட்டுமா?” என்று விஜயா கேட்க,

“வேணாம்..பசிக்கலை.” என்று மறுத்தாள் சினேகா.

“அப்போ நீ எழுந்திரு..ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு..இன்னைக்கு நிறைய நேரம் உட்கார்ந்திருக்க..முதுகு வலிக்கப் போகுது..கிளம்பு.” என்று அவளது கரங்களைப் பற்றி இந்தமுறை வலுக்கட்டாயமாக சினேகாவை அவளது படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார் விஜயா. 

இடுப்பில் கை வைத்தபடி மெல்ல நடந்து சென்ற சினேகாவைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தி,’நல்லவேளை தம்பியைப் பார்த்து சினேகாவுக்கு எதுவும் ஆகலை..சுதாரிச்சுக்கிட்டா..பிள்ளைத்தாச்சின்னு அறிவு வேணாம் அவருக்கு..’தம்பி வந்தாச்சுன்னு’ ஒரு வார்த்தை சொல்லியிருந்தா குறைஞ்சா போயிடும்..எத்தனை தடவை கேட்டிருப்போம்..வாயைத் திறந்தாரா இந்த மனுஷன்..இன்னைக்கு எனக்காவது ஒரு மெசேஜ் போட்டிருக்கலாமில்லே..இவ்வளவு அழுத்தம் கூடாது இந்த மனுஷனுக்கு.’ என்று மனதினுள் மதனைச் சாடிக் கொண்டிருந்தாள். 

மதனிடமிருந்து அவளது கவனத்தை சாப்பாடு மேஜைக்குத் திருப்பிய போது ஷண்முகத்தின் தட்டு காலியாக இருப்பதைப் பார்த்து,

“என்ன டா வேணும்?” என்று கேட்க,

“போதும் க்கா.” என்று கை கழுவ சென்றான் ஷண்முகம்.

அவனது பதிலைக் காதில் போட்டுக் கொள்ளாமல்,“கை கழுவிட்டு வந்து பாயசம் சாப்பிடு டா..பால் பாயசம்.” என்றாள்.

“வேணாம் க்கா..இந்த நேரத்திலே இவ்வளவு சாப்பிட்டதே அதிகம்” என்று மறுப்பு தெரிவிக்க, 

“கொஞ்சமாவது குடி டா..உன் பிள்ளைக்காக.” என்று ஒரு தம்பளரை எடுத்து அதில் பாயசத்தை ஊற்ற முனைந்தவளின் கரங்கள் நடுங்கின. அதுவரை இருந்த மனத்திடம் காணாமல் போக கண்களில் கண்ணீர் தளும்பியது. அதைக் கவனித்த ஷண்முகத்திற்கு அவளது மனநிலை புரிய, எழுந்து வந்து அவளருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். 

உடனே தம்பளை மேஜை மீது வைத்து விட்டு அவனது கரங்களைக் கெட்டியாக பற்றிக் கொண்டு,”நேத்து வரை ஒரு நம்பிக்கையோட இருந்தேன் டா..இன்னைக்குக் காலைலே நீ இல்லாம விசேஷம் நடந்ததுலேர்ந்து மனசு ஒரு மாதிரியாகிடுச்சு..நீ இல்லாமலேயே..” என்று வாக்கியத்தை முடிக்காமல் கண்ணீர் சிந்தியவள்,”இப்போ உன்னைப் பார்த்த பிறகு தான்..” என்று அந்த வாக்கியத்தையும் முடிக்காமல் அவன் தோள் சாய்ந்தாள் வசந்தி.

‘இனி இது போல நடக்காது..இனி இது மாதிரி செய்ய மாட்டேன்..ஒரு வார்த்தை தகவல் கொடுக்கறேன்’ என்று எந்த ஆறுதல் வார்த்தையும் சொல்லவில்லை ஷண்முகவேல். அக்காவின் கரங்களை அழுந்தப் பற்றி அவளுக்கு ஆறுதல் அளித்தான். சில நிமிடங்கள் கழித்து அவளது உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்த வசந்தி,”இதுவரை இருந்த பாரம் இறங்கி இப்போ தான் என் மனசு லேசாகி இருக்கு..நீ நல்லபடியா வீட்டுக்கு வந்திட்டே இனி பாப்பா நல்லபடியா பிறக்கணும்..அப்புறம் இன்னும் தெம்பா எல்லா வேலையும் செய்வேன்..இப்போ நான் நிறைய புதுசு புதுசா தைக்கறேன் டா. இன்னைக்கு நான் போட்டிட்டு இருந்த பிளவுஸ் நல்லா இருக்கு..அவங்களுக்கும் அதே போல தைச்சு கொடுக்க முடியுமான்னு அனிதா மேடம் கேட்டாங்க டா.” என்று சொல்லிப் புன்னகைத்த அக்கா அவளுடைய தம்பியின் மனத்தில் சில கேள்விகளை எழுப்பினாள். 

அவளது விவாகாரத்து பற்றி ஒரு வார்த்தை அவர்களின் உரையாடலில் வரவில்லை என்பதை கவனித்தான். அதை விட முக்கியமாக மதன் ஸரைப் பற்றி அவள் எதுவும் சொல்லவேயில்லை. அந்த நடு இரவு வேளையில் அவளது கைப்பேசிக்கு பலமுறை மதனிடமிருந்து வந்த அழைப்புக்கள் அவனுள்ளே பெரிய கேள்விகுறியை எழுப்பியிருந்தது. மதன் எதற்காக வசந்தி அக்காவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென்று அவனுக்குப் புரியவில்லை. குளித்து முடித்து பாத்ரூமில்ருந்து வெளியே வந்த போது அக்காவின் கைப்பேசி மிளிர்ந்து கொண்டிருந்தது கண்ணில் பட, ‘இந்த நேரத்திலே யார்? ஒருவேளை வெங்கடேஷா? என்று எண்ணியபடி அதன் அருகில் அவன் செல்ல, ‘மதன் ஸர்’ என்ற பெயரைப் பார்த்ததும் மனத்தில் கேள்வி வந்து அமர்ந்து கொண்டது. அந்த அழைப்பு எடுக்கப்படாமல் போனவுடனேயே மீண்டும் ஓர் அழைப்பு வர அக்காவை அழைக்க நினைத்தவன் அந்த எண்ணத்தை அப்படியே கை விட்டான். அந்த அழைப்பைப் பற்றி அவளிடம் சொல்லாமல் அமைதியாக வசந்தி சொன்னவைகளை கேட்டுக் கொண்டிருந்தான்.

 

அப்போது படுக்கையறையின் கதவைச் சாத்தி விட்டு அவர்கள் இருக்குமிடம் வந்த விஜயா,”சாமி, உங்க வேலை பற்றி எங்க எல்லோருக்கும் தெரியும்..தப்பு உங்க மேலே இல்லைன்னாலும் இப்போ சினேகா இருக்கற நிலைலே தவறு எல்லாம் உங்க பேர்லே தான்..அதனாலே அவ என்ன சொன்னாலும் வாயைத் திறக்கக் கூடாது..உங்க வாய்லேர்ந்து ஒரு வார்த்தை வரக் கூடாது..உங்க சத்தம் கேட்டிச்சு அவ்வளவு தான்.” என்ற மிரட்டலோடு முடித்தார்.

“சட்டு சட்டுன்னு உணர்ச்சி வசப் படறா டா..ரொம்ப பிடிவாதம் பிடிக்கறா..சின்ன குழந்தையைப் பார்த்துக்கற மாதிரி ஜாக்கிரதையா பார்த்திட்டு இருக்கோம்..நீயும் அதே போல தான் அவளை நடத்தணும்..சித்தி சொல்ற மாதிரி அவ சொல்றதைக் கேட்டுக்கோ உன் வாயைத் திறக்காத.” என்று அறிவுரை அளித்தாள் வசந்தி.

பால் பாயசத்தை பருகியபடி அவர்களின் அறிவுரைகளுக்கு சரி சரி என்று தலையசைத்து விட்டு அறையினுள்ளே வந்தவன், கதவைச் சாத்தி விட்டு அதில் சாய்ந்தபடி கட்டிலில் அமர்ந்திருந்த மனைவியை விழி அகற்றாமல் பார்த்தான். முன்பு போலவே இப்போதும் கட்டிலில் சாயந்தமர்ந்திருந்தவள், 

“என்ன? என்ன பார்க்கறீங்க?” என்று அவனிடம் குரலை உயர்த்த, ஷண்முகத்திடமிருந்து அதற்குப் பதில் வரவில்லை.

”கொஞ்சம் நேரம் முன்னாடி அதே இடத்திலே நின்னுகிட்டு அப்படிக் கத்தினீங்க..இப்போ ஊமை மாதிரி இருக்கீங்க..என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று போலீஸ்காரனை விசாரணை செய்தாள் மனைவி.

அவளுக்குப் பதில் சொல்லாமல், பார்வையை விலக்காமல் அவளருகே வந்தமர்ந்தான். அந்த இயல்பான செயலைச் சரியாக செய்வதற்குள் அவனது இதயம் விரைவு இரயில் போல் தடதடத்தது. அருகில் அமர்ந்தவனின் முகபாவம் புரியாத புதிராக இருந்ததால்,”இட்லிப்பாட் மாதிரி இருக்கறேன்னு தானே வைச்ச கண்ணை விலக்காம என்னைப் பார்த்திட்டு இருக்கீங்க.” என்று அவனிடம் கடுகடுத்தாள் சினேகா.

மென்மையான குரலில்,”யு ஆர் எக்ஸ்பெக்டிங்.” என்று அவன் ஒரு வரியில் விளக்கம் கொடுக்க,

“அது எனக்குத் தெரியாதா? வயிற் முழுக்க ஸ்ட்ரெச் மார்க்ஸ்..” என்று சொன்னவள் அப்படியே அவளது மேலாடையை உயர்த்தி அவனது கரங்களை அவளது வயிற்றிக்கு கொண்டு சென்றாள். அதை எதிர்பார்க்கவில்லை அவன். சுறுசுறுப்பாக உலா வந்து கொண்டிருந்த சிருஷ்டியின் அற்புதத்தை உணர்ந்த நொடியில் ஸ்தம்பித்து போய் விட்டான். அந்த உணர்வை விவரிக்க அவனுக்கு வார்த்தைகள் கிட்டவில்லை. 

இதன் அனுபவிக்க முடியாமல் கடந்து போன நாள்களை நினைத்து இனி வரப் போகும் நாள்களை வீண் செய்ய அவன் விரும்பவில்லை. சந்தோஷமாக இருக்க வேண்டிய தருணங்கள் சண்டையாக மாறிக் கொண்டிருந்ததும் அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே,

மனைவியின் மனநிலை பற்றி அவனுடைய அம்மாவும் அக்காவும் சொன்னது மனத்தில் வந்தாலும், அதை ஒதுக்கி விட்டு, குரலில் கடுமையை வரவழைத்து,”அது இயற்கையா நடக்கறது தானே..இப்போ அதுக்கு என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான். 

அவளது தோற்றத்தைப் பற்றி பேச்சு எடுத்தால் அம்மா, மாமியார், வசந்தி அண்ணி, ஷிக்கா என்று அனைவரிடமிருந்தும்,’அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை, கொஞ்சம் தான் குண்டாகியிருக்க, வயிற் மட்டும் தான் பெரிசாகியிருக்கு..பிள்ளை பிறந்த பிறகு குறைஞ்சிடும்.’ என்று ஆறுதலான, இனிமையான வார்த்தைகளைக் கேட்டுப் பழக்கப்பட்டிருந்தவளுக்கு கணவனின் கேள்வியில் இருந்த உண்மை சுருக்கென்று தைத்தது. 

அந்தக் கேள்விக்கு அவளிடம் பதில் கிடையாதென்பதால்,”நீங்க இப்படித் தான் பேசுவீங்க..ஒவ்வொரு முறையும் என்னைக் கண்ணாடிலே பார்த்துக்கும் போது நானா இதுன்னு என்னாலே நம்பமுடியலை..நான்..”என்று வாக்கியத்தை முடிக்காமல் விசும்ப,

“என்னாலேயும் தான் நம்பமுடியலை..உனக்காவது இதையெல்லாம் பழகிக்க அவகாசம் கிடைச்சது..நான் அப்படியே ஏத்துக்கலை?” என்று கேட்டவுடன்,

“அப்படியே ஒண்ணும் ஏத்துக்கலை..என்னைப் பார்த்திட்டு ‘அம்மான்னு’ அலறினீங்க.” என்றாள் சினேகா.

அவனது கண்களில், கனவுகளில் மனைவியின் தோற்றமானது அணிமாவாக இருக்க, நேரில் பார்த்த போது அவள் மகிமாவாக மாறியிருக்க, ‘அம்மா’ என்று அலறி விட்டான். அவனது தெளிவையும் நிதானத்தையும் இழக்கக் கூடிய ஒரு சூழ்நிலை சொந்த வாழ்க்கையில் வரக் கூடுமென்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை ஷண்முகவேல். அவனது அலறலைக் கேட்டு அவனுடைய தாயும் தமக்கையும் விரைந்து  வந்த போது அவனை அவன் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும் நடந்ததை மாற்ற முடியவில்லை. இத்தனை மாதங்களில் ஒரு நாள், ஒரு பொழுது கூட அப்பாவாக வாய்ப்பு இருக்கிறதென்று அவனுக்கு தோன்றவேயில்லை. தோன்றியிருக்க வேண்டுமென்று இப்போது தோன்றியது.