அத்தியாயம் – 60-1

அவனது எந்தப் பதிலும் ‘அம்மா’ என்ற அலறலை நியாயப்படுத்தாது என்றாலும், 

“அதுக்கு அப்புறம் ஏதாவது வாயைத் திறந்தேனா?” என்று அவனது கெத்தை விட்டுக் கொடுக்காமல் கேட்க,

“எதுக்கு திறக்கணும்? அதான் வாயைத் திறக்காம தொடர்ந்து பார்த்திட்டு இருக்கீங்களே..” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போது கூட அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம்,”இதோ..இப்போ..இப்போ கூட பார்க்கறீங்க தானே.” என்று அவள் குரலை உயர்த்த, வயிற்றில் இருந்த அவனது கரங்களை அகற்றி, தோள்களைப் பற்றி மெதுவாக அவன் புறம் அவளைத் திருப்பியவன், அவளை நேராகப் பார்த்து,”நான் இதை எதிர்பார்க்கலை..எதிர்பார்த்திருக்கணும்..அதிர்ச்சியா இருந்தாலும் ஆனந்தமாவும் இருக்கு..அப்புறம்..” என்று அவனது மன நிலையை விளக்கியவன் அந்த வாக்கியத்தை முடிக்காமல் விட,

“அப்புறம் என்ன, சொல்லுங்க?” என்று அவள் கேட்க,

“ஒண்ணுமில்லை.” என்று அவன் நழுவ பார்க்க,

“இல்லை..ஏதோ இருக்கு..சொல்லுங்க.” என்று அவள் அடம் பிடிக்க,

சில நொடிகள் யோசித்தவன்,“பாட் மாதிரி இருக்க.” என்றவுடன்,

“ஆமாம்..நான் இட்லி பாட் மாதிரி தான் இருக்கேன்..என்ன இப்போ அதுக்கு?” என்று அவள் எகிற,

மேலும் கீழுமாக அவள் மீது பார்வை ஓட்டியவன்,“இட்லிபாட்ன்னு சொல்ல மாட்டேன்..மோமோ பாட்..அதுதான் சரியா இருக்கும்” என்று அவனது அபிப்பிராயத்தை தெரிவிக்க,

“இரண்டும் குண்டான் தான்..ஒண்ணு தான்” என்றாள் சினேகா.

“பாத்திரம் ஒரே மாதிரி இருக்கலாம்..ஆனா அதிலே செய்யற பண்டம் வேற தானே..உனக்கு இட்லி பொருந்தாது பேபி..உனக்குள்ளே பேபி இருக்குறதுனாலே தான் நீ குண்டாகியிருக்க..ஸோ மோமோ பாட் தான் பொருத்தமா இருக்கும்.” என்றான்.

மோமோ பாட் என்று அவளை வர்ணனை செய்ததைக் கேட்டு அவன் மீது பாயப் போகிறாளென்று ஷண்முகம் நினைக்க, உதட்டில் மெல்லிய புன்னகை, கண்களில் கனவோடு கணவனை நோக்கியவள்,”சீஸ் மோமோ ஷெஸ்வான் சட்னி சாப்பிடணும் போல இருக்கு.” என்றாள்.

அவள் சொன்னதை நம்பமுடியாமல்,”என்ன?” என்று அவன் கேட்க,

பக்கவாட்டு மேஜையில் இருந்த அவளது கைப்பேசியைக் காட்டி,“இப்போவே சாப்பிடணும்..ரெஸ்டாரண்ட் இல்லை கிச்சன் ஏதாவது ஓபனா இருக்கும்.” என்றாள்.

“அம்மா கேட்ட போது பசிக்கலை வேணாம்னு சொன்ன..இப்போ மோமோ வேணும்னு சொல்ற.” என்றவனை இடைமறித்து அவளது வயிற்றை காட்டி,”பிஸியா இருக்கறதுனாலே எனக்குப் பசிக்குது..மோமோன்னு நீங்க சொன்னவுடனேயே அதைச் சாப்பிடணும்னு ஆசை வந்திடுச்சு.” என்றாள்.

அந்தப் பதிலில் உருகிப் போனான் தந்தையாகப் போகிறவன்.“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு..என்ன செய்யலாம்னு அம்மாவைக் கேட்டிட்டு வரேன்.” என்று அவள் மறுப்பு தெரிவிக்கும் முன் அறையிலிருந்து வெளியேறினான்.

அதே நேரம் வரவேற்பறை பால்கனியில் நின்றபடி, நெட்வர்க் பிராப்ளம் இருந்ததால் ஸ்பீக்கரில்,“அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சீங்களா? தம்பி வந்திட்டான்னு ஒரு மெஸேஜ் போட்டிருக்கலாமில்லே..அது கூட செய்யாம தம்பியோட ரியாக்‌ஷன் என்னென்னு தெரிஞ்சுக்க பத்து முறை கால் செய்திருக்கீங்க.” என்று மதனிடம் சீறிக் கொண்டிருந்தாள் வசந்தி.

அறையிலிருந்து வேகமாக வெளியே வந்தவனின் பார்வையில் வசந்தி விழுந்தாலும் கைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பது கவனத்தில் விழவில்லை. தம்பியைப் பார்த்ததும் அவளது கைப்பேசியை உள்ளங்கையில் அடக்கியபடி பதற்றத்துடன்,”என்ன டா? என்ன ஆச்சு டா?” என்று வினவினாள்.

“அக்கா, பசிக்குதுன்னு சொல்றா சினேகா.” என்றான்.

“என்ன வேணும்னு கேளு..ஃப்ரிஜ்லேர்ந்து எடுத்து சூடு செய்து தரேன்..இல்லை சூடா செய்து தரேன்.” என்றாள் வசந்தி.

அதற்கு,“மோமோ வேணுமாம்.” என்றான் ஷண்முகம்.

சட்டென்று வசந்திக்கு பிடிபடவில்லை. எனவே,“மோமோவா? அது என்னது டா?” என்று கேட்டாள் வசந்தி.

“மோமோ க்கா….மார்கெட்லே கடை வாசல்லே சின்னதா ஸ்டால் போட்டு வித்திட்டு இருப்பாங்களே.” என்றான்.

உடனே அவளுடைய கண்களில் அந்தக் காட்சிகள் வந்து போக,”டேய் இட்லிப்பானை மாதிரி ஒரு பாத்திரத்திலே நேப்பாளிக்காரங்க  செய்து விக்கறாங்களே அது தானே?” என்று கேட்க,

“அது இட்லிப்பானை இல்லை..…மோமோ பாட்..அதிலே இட்லி செய்ய முடியாது..ஆனா இட்லிப்பாட்லே மோமோ செய்யலாம்..மோமோங்கறது மைதா கொழுக்கட்டை..சீஸ்கார்ன், வெஜ்ஜீஸ், சிக்கன்னு நிறைய வெரைட்டி இருக்கு.” என்று பதில் கொடுத்தது ஷண்முகமில்லை.

நம்மை போலவே யார் பேசுகிறார்கள் என்று ஒரு கணம் குழம்பிய ஷண்முகம் அடுத்த கணம் அக்காவின் கையிலிருந்த கைப்பேசியைக் கேள்வியோடு நோக்க,”மதன் ஸர் டா.” என்று அவனிடம் சொன்னவள் அப்படியே,”தம்பி கேட்டிட்டு இருக்கான்..அவனோட பேசுங்க.” என்றாள் மதனிடம்.

“வேலு, நாளைக்குக் காலைலே என்னோட காஞ்சாவை (காஞ்சா – தம்பி, சின்ன பையன் (நேபாளி மொழி) அனுப்பி வைக்கறேன்..சுடச் சுட செய்து கொடுப்பான்.” என்றார். 

அதைக் கேட்டு ஆச்சரியம், தயக்கம் என்று கலவையான உணர்வுகள் ஷண்முகத்தின் முகத்தில் தோன்ற அவருக்குப் பதில் கொடுக்காமல் அவன் அமைதியாக இருக்க, சினேகாவின் போக்கு வசந்திக்கு அத்துப்படி என்பதால்,”இப்போ சாப்பிட எதையாவது கொடுத்து அவளைச் சமாளிக்கறேன்..ஆனா நாளைக்கு காலைலே ஆறு மணிக்கு டான்னு அவன் இங்கே இருக்கணும்..முடியும் தானே.” என்று மதனிடம் வசந்தி கியாரண்டி கேட்க,

“முடியும்..கண்டிப்பா வந்திடுவான்.” என்றார் மதன்.

“அப்போ நாளைக்குப் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு நீங்களும் இங்கே வந்திடுங்க.” என்று அழைப்பு விடுத்தாள் வசந்தி.

“நானா?” என்று மதன் கேட்டவுடன்,

“அவனை இங்கே அனுப்பி வைச்சிட்டு நீங்க எப்படிச் சாப்பிடுவீங்க? உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா?” என்று கேட்டாள்.

அவர்களின் உரையாடலைக் கேட்டபடி யோசனையாக நின்றிருந்த ஷண்முகத்தின் யோசனையைக் கலைத்தாள் படுக்கையறை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த சினேகா.

“நீ எதுக்கு இப்போ இங்கே வந்திருக்க? அக்காவும் நானும் ஏற்பாடு செய்திட்டு இருக்கோம்..உள்ளே போய் ரெஸ்ட் எடு.” என்று அவளை அவன் கடிந்து கொள்ள,

அவளுடைய கையிலிருந்த கைப்பேசியைக் காட்டி,”மோமோ ஆளுங்க எல்லோரும் க்ளோஸ்ட்..நாளைக்குக் காலைலே தான் என்னோட ஆசை நிறைவேறும் போல.” என்றாள்.

உடனே அவளுடையை கையில் இருந்த கைப்பேசியைக் காட்டி,”காலைலே மதன் ஸர் அவங்க வீட்லேர்ந்து ஓர் ஆள் அனுப்பறாங்க..அவன் நம்ம வீட்லேயே உனக்கு மோமோ செய்து கொடுப்பான்.” என்றாள் வசந்தி.

‘வேண்டாம், எதுக்கு?’ என்று மனைவி மறுப்பாள் என்று ஷண்முகம் நினைக்க,“மதன் ஸர் அவன் எத்தனை மணிக்கு வருவான்?” என்று சினேகா உரிமையாகக் கேட்க, அவன் இல்லாத போது மதனோடு அவனின் குடும்பத்தாரின் உறவு மாறி அவரும் அவனது குடும்பத்தில் ஒருவராகி விட்டது புரிந்தது.

”ஆறு மணிக்கு அங்கே இருப்பான் சினேகா..உனக்கு என்ன வேணும்னு சொல்லு தேவையான சாமானோட வந்திடுவான்.” என்றார்.

“கார்ன் சீஸ் அப்புறம் வெஜ் டார்ஜிலிங்..ஷெஸ்வான் சட்னி” என்று அவளது விருப்பத்தை சொல்ல,

“டன்” என்று மதன் உறுதி அளிக்க,

“ரொம்ப தாங்க்ஸ் மதன் ஸர்.” என்று அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு,

”அண்ணி, அந்தத் தயிர் சாதத்தை செய்து கொடுங்க..ரொம்பப் பசிக்குது.” என்றாள் சினேகா.

“இதோ..வா என்னோட” என்று சினேகாவையும் அழைத்துக் கொண்டு, அப்படியே கைப்பேசியை ஷண்முகத்திடம் கொடுத்து,”நீ பேசிட்டு இரு.” என்று சொல்லிச் சென்று விட்டாள் வசந்தி.

மோமோ பற்றி உரையாடல் தொடரும் என்று ஷண்முகம் நினைக்க மதனோ உரையாடலை வேறு பாதையில், அவன் எண்ணிப் பார்த்திராத பாதையில் எடுத்துச் சென்றார்.

“ஃபோன் கைலே கிடைச்சதிலிருந்து உன் அக்காக்கு ஃபோன் போட்டிட்டு இருக்கேன் அவ தான் எடுக்கவேயில்லை..நீ நல்லபடியா வந்திட்டேங்கற விஷயத்தை நீ வீட்டுக்கு வர்றத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கணும்னு சொல்றா..எப்படி டா முடியும்?சாயங்காலம் திடீர்னு மீட்டிங்னு மெஸேஜ் வந்திச்சு..அதிலே நீ இருப்பேன்னு எனக்கு எப்படித் தெரியும்..நீ எப்போ தில்லிக்கு வந்தேன்னு கூட எனக்குத் தெரியாதே..மீட்டிங்லே உன்னைப் பார்த்ததும் உடனே அதை உன் வீட்டுக்கு சொல்லணும்னு பரபரத்தேன்..ஆனா மீட்டிங்க்கு ஃபோன் எடுத்திட்டு வர முடியாதே..உன் பாகம் முடிஞ்சதும் நீ கிளம்பிப் போயிட்ட..மொத்தம் முடிஞ்ச பிறகு தானே நான் கிளம்பப் முடியும்..எல்லாம் முடிஞ்சு நான் வெளியே வந்த போது நீ வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருப்பேன்னு தெரியும்..அதான் வசந்திகிட்டே சினேகாவைப் பார்த்ததும் நீ எப்படி ரியாக்ட் செய்தேன்னு கேட்டேன்..அதுக்கு காச் மூச்சுன்னு கத்தறா..

இத்தனை மாசமா உன்னைப் பற்றி உன் வீட்டு ஆளுங்க கேட்கும் போதெல்லாம் ‘நான் வேற துறைலே இருக்கேன் எதுவும் தெரியாதுன்னு’ சொல்ல எனக்கு எத்தனை நேரமாகி இருக்கும்? அந்த மாதிரி செய்யாம, உன்னைப் பற்றி எதுவும் தெரியாம இருந்தாலும் எல்லாம் சரியா இருக்கற மாதிரி அவங்களோடு பேசிக்கிட்டு, பழகிக்கிட்டு எல்லாம் சரியாகிடணும்னு மனசுலே மருகிகிட்டு மனஅழுத்தத்திலே நான் இருந்தது எனக்கு மட்டும் தான் தெரியும்..உங்க அம்மா இடத்திலிருந்து சினேகா இடத்திலிருந்துன்னு எல்லோருக்கும் யோசிச்ச உன் அக்கா என் இடத்திலிருந்தும் கொஞ்சமாவது யோசிக்கணுமில்லே.” என்ற மதனின் கேள்வி வேறு விதமாக ஷண்முகத்தின் மனத்தில் போய் சேர, சமையலறையில் சினேகாவோடு சிரித்தபடி பேசிக் கொண்டிருந்த அக்காவின் மீது ஷண்முகத்தின் பார்வை விழ, அவனது மனத்தில் விதை ஒன்று விழுந்தது.