அத்தியாயம் – 59

உறக்கம் வராததால் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த சினேகா இப்போது நான்காவது புத்தகத்தில் இருக்க, உறக்கம் மட்டும் வருவேனா என்று வீம்பாக கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் அந்த முயற்சியை செய்வது வீண் என்று உணர்ந்தவள் மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து மெல்ல அடி மேல் அடி வைத்து அறையை அளக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே இன்றைக்கு இங்கும் அங்கும் என்று வீட்டினுள்ளேயே பலமுறை நடந்ததில் முனுமுனு என்று பாதங்களில் வலி இருக்க அதைப் பொருட்படுத்தாமல் அறையை வலம் வந்து கொண்டிருந்தாள். 

வீடு முழுவதிலும் மெல்லிய வெளிச்சம் பரவியிருக்க அவளது அறை பிரகாசமாக இருந்தது. விளக்கு எரிந்தால் தூக்கம் வராது என்ற அவளது புலம்பலை காதில் போட்டுக் கொள்ள்வில்லை விஜயா. ‘இருட்டிலே தனியா படுக்கக் கூடாது..லைட் போட்டுக்கணும் இல்லை நானோ வசந்தியோ உன்னோட படுக்கணும்.’ என்று கண்டிஷன் போட, அவளது தனிமைக்கு விளக்கைத் துணையாக்கிக் கொண்டாள் சினேகா.

மெல்ல நடை பயின்று கொண்டிருந்தவள் அலமாரியில் பதித்திருந்த கண்ணாடியில் அவளது உருவத்தைப் பார்த்ததும் அதனருகே சென்றாள். கடந்த இரண்டு மாதங்களில் அவளது எடை, இடை கூடிப் போயிருந்தது. கருப்பு நிறப் பருத்தி டீ ஷர்ட், சாம்பல் நிறப் பருத்தி பைஜாமாவில் அவளது தோற்றம் அவளுக்கே விசித்திரமாக இருக்க, இந்த நிலையில் அவளைப் பார்த்தால் அவளுடைய கணவனுக்கு எப்படி இருக்குமென்ற எண்ணம் அவளை நிதமும் கவலைக்குள்ளாக்கியது. அவர்களின் வாழ்க்கையில் வரப் போகும் புதிய நபரால் அவளது உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவளை ஒரு வழியாக்கிக் கொண்டிருக்க, பல மாதங்ககளாக கணவனிடமிருந்து எந்தத் தகவலும் வராதது அவளது மனத்தை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தது. 

இன்று காலையில் தான் கணவன் அவளருகில் இல்லாததைப் பெரிதாக உணர்ந்தாள். கணவன் செய்ய வேண்டிய அனைத்தையும் விஜயா அத்தை தான் செய்தார். ‘நேர்லே வரமுடியலைன்னா பரவாயில்லை..வீடியோலே வரச் சொல்லுங்கோ.’ என்று பண்டிட் ஜி சொல்ல, ‘அவன் செய்ய வேண்டியதை நான் செய்யறேன்.’ என்று முன் வந்தார் விஜயா. அவளது துணை அருகியில்லாததால் சந்தோஷம், துக்கம் இரண்டையும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இன்று காலையில் நடந்த விழாவின் கதாநாயகி அவளதானென்றாலும் ஒரு பார்வையாளராக தான் அதைக் கடந்திருந்தாள் தான் எந்த விதமான உணர்ச்சி உடைப்புகள் இல்லாமல் விழா நல்லபடியாக நடந்து முடிந்தது.

மெதுவாக இடதுக் கையால் வயிற்றை மறைத்த கருப்பு டீ ஷர்ட்டை உயர்த்தினாள் சினேகா.  அஷ்டத் திக்குகளிலும் சுலபமாக செல்லக் கூடிய இலாஸ்டிக் அல்லாத லைக்ரா துணி அவளது வயிற்றை இதமாக அரவணைத்திருந்தது. அதைக் கொஞ்சம் போல் கீழே இறக்கி அவளது வலதுக் கரத்தை வயிற்றில் வைத்தவுடன்,’எனக்கும் தூக்கம் வரலை’ என்று அம்மாவிற்கு குட்டி ஆதரவு காட்டியது. ’உனக்கு ஓய்வு நேரம் கிடையாதா? காலை, மதியம், இராத்திரின்னு நீ ரொம்ப பிஸி..எப்போ தான் நான் ரெஸ்ட் எடுக்கறது?’ என்று அவள் பொய் கோவம் கொள்ள, டக்கென்று அடிவயிற்றில் ஓர் உதை விழ,’சரி..சரி..உன்னை ஒண்ணும் சொல்லை..ஒண்ணும் சொல்லலை..மன்னிச்சிடு.’ என்று மன்னிப்பு கேட்டு உடனே லைக்ரா துணியால் இடுப்பை மறைத்து அதன் பின் டீ ஷர்ட்டை இறக்கி விட்டு நடையைத் தொடர்ந்தாள் சினேகா. 

சில நிமிடங்களில் கண்கள் லேசாக சொருக, நடந்தது போதும் என்று கட்டிலுக்குச் சென்றாள். இப்பொழுதெல்லாம் ஒருபுறமாக தான் அவளால் படுத்துறங்க முடிகிறது. இடதுப் புறமாக ஒருக்களித்துப் படுப்பது நல்லது என்று மருத்துவர் சொல்லியிருக்க அந்தப் புறம் தான் படுக்கிறாள். சில நிமிடங்கள் கழித்து அது அசௌகர்யத்தை ஏற்படுத்துவதால் மெதுவாக எழுந்து, சாயந்து அமர்ந்து உறக்கத்தை தொடர்வள். அதன் பின் மீண்டும் வலதுப் புறமாக படுத்துறங்குவாள். அமர்ந்திருந்தாலும் சரி படுத்திருந்தாலும் சரி உறக்கம் என்பது சில மணி நேரங்கள் மட்டும் தான். தொடர் உறக்கம் என்பது இல்லவே இல்லை. 

முதல் மூன்று மாதங்கள் எந்தத் தொல்லையும் இல்லாமல் சென்றிருக்க,’இப்படியே கடைசி வரை இருந்தா நல்லா இருக்கும்.’ என்று அவளுடைய அம்மா சொன்னதன் அர்த்தம் அதன் பின்பு தான் புரிந்தது. பிடித்ததையெல்லாம் தியாகம் செய்து அவளது உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு மசக்கையைச் சமாளித்தாள். ‘என்னது இது நம்ம உடம்பு இப்படி நாம சொல்றதைக் கேட்க மாட்டேங்குது?’ என்று பயந்திருந்த போது கூட கணவனைத் தேடிய மனத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்தது. அதாவது குழந்தை வர இன்னும் நாள்கள் இருக்கிறது அதற்குள் அவன் வந்திடுவான் என்று அவளைச் சமாதானம் செய்து கொள்ள முடிந்தது. அதன் பிறகு உடலில் ஏற்பட்ட மாற்றம், கணவனைத் தேடிய மனது இரண்டும் அவளது செய்கைகளைப் பாதிக்க ஆரம்பிக்க, ஏதோ ஒரு புள்ளியில் அவளது எதிர்பார்பு, ஏமாற்றம் இரண்டும் கோபம், எரிச்சலாக மாறி வெளியே பாய்ந்தது. 

திருமணம் முடிந்து தில்லி வந்த சில தினங்களில் வங்கிக் கணக்கில் ஆரம்பித்து அனைத்திலும் அவளை நாமினியாக்கி இருந்தான் ஷண்முகவேல். ‘இப்போ உடனே இதெல்லாம் செய்து ஆகணுமா?’ என்று அவள் கேட்ட போது,’கல்யாணம் முடிச்சவுடனேயே செய்திருக்கணும்..அம்மாக்கு பணம் விஷயமெல்லாம் தெரியாது..மாமா, பெரியப்பா இரண்டு பேரும் தான் பார்த்திட்டு இருந்தாங்க..அப்புறம் நானும் பார்க்க ஆரம்பிச்சேன்..இப்போ நீதான் என்னோடதையும் சேர்த்துப் பார்த்துக்கணும்..நான் எங்கே இருந்தாலும் எவ்வளவு நாள் கழிச்சு வந்தாலும் நீயும் அம்மாவும் எதுக்கும் கஷ்டப்படக் கூடாது.’ என்று அவர்களுக்குத் தேவையான வசதிகளை, மாற்றங்களைச் செய்து கொடுத்திருந்தான். 

கார் மட்டும் தான் அவன் விரும்பியது போல் வாங்க முடியவில்லை. அதற்கு அவகாசம் கிடைக்கவில்லை. சினேகாவிற்கு கார் ஓட்ட தெரியாததால் அவளது பயிற்சி வகுப்புக்கள் முடிந்து, லைசன்ஸ் கிடைத்ததும் கார் வாங்கத் திட்டமிட்டிருந்தான். கார் ஓட்டக் கற்றுக் கொண்டு அவளுக்கு லைசன்ஸும் கிடைத்து விட்டது. ஆனால் கார் தான் இன்னும் வரவில்லை. அதை வாங்குவதற்குள் வேலை விஷயமாக வெளியூர் சென்றவன் இப்போது வரை திரும்பி வரவில்லை. இந்த நேரத்தில் அவள் ஓட்ட வேண்டாமென்று அவள் சார்பாக அனைவரும் முடிவு செய்திருந்ததால் ஆட்டோ, கேப் என்று தான் அலுவலகத்திற்குப் பிரயாணம் செய்கிறாள்.  

’எங்கே போயிட்டாங்க உங்கப்பா? ஒரு ஃபோன்கால் கூட இல்லை..’நல்லா இருக்கேன்னு’ தகவல் அனுப்பலாமில்லே..நீ வரப் போறேங்கற விஷயம் அவருக்கு தெரியாது..அவர் எப்போ வரப் போறார்ன்னு எனக்குத் தெரியலை..ஒருவேளை நீ வந்த பிறகு தான் அவர் வரப் போறாரா? நீ யாருன்னு கேட்பாரோ?’ என்று சிசுவோடு பேசியபடி கட்டிலில் சாயந்தமர்ந்து கண்களை மூடிக் கொள்ள, உறக்கம் அவளைத் தழுவியது. ஏதோ ஓர் உந்துதலில் கண்களைத் திறக்க, கண்ணெதிரே கணவன் நின்றிருந்தான். முகத்தை மறைத்த தலைமுடி, தாடி, மெலிந்த தேகம் என்று சட்டென்று அடையாளம் தெரியாத அளவிற்கு அவனது தோற்றம் மாறியிருக்க, அவனைக் கண்டு கொண்ட மனைவியின் மனத்தில் லேசான அதிர்ச்சி அதன் பின் ஓர் ஆசுவாசம்.  ஆனந்தக் கண்ணீர்.

அவளுக்குக் காட்டிய கருணையை அவளுடைய கணவனுக்கு  காட்டவில்லை கடவுள். பல விதமான பயிற்சிகளைச் செய்து இக்கட்டான, நெருக்கடியான சூழ்நிலைகளில் அவனது மனம், உடல் இரண்டையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க கற்றுக் கொண்டிருந்தவனின் வித்தை எல்லாம் மனைவியின் தோற்றதைக் கண்டவுடன் மாயமாக மறைந்து போக, அதிர்ச்சியில் ‘அம்மா’ என்று உரக்கக் கத்தியிருந்தான் அப்பாவாகப் போகிறவன்.

அடுத்த சில நொடிகளில் விஜயாவும் வசந்தியும் சினேகாவின் அறைக்கு விரைந்திருந்தனர். அறையின் உள்ளே, கட்டிலில் சாய்ந்தமர்ந்திருந்த மனைவியை முறைத்தபடி நின்றிருந்த ஷண்முகவேல் அறையினுள்ளே நுழைந்த விஜயாவிடம்,”அம்மா, அம்மா, அம்மா” என்று அவனது அதிர்ச்சியை ஒரேயொரு வார்த்தையில் வெளியிட, நொடிப் பொழுதில் மகனைத் தலை முதல் பாதம் வரை அலசியவர், ‘சாமி, சாமி’ என்று உருகி உருகி அழைப்பவர், முதல்முறையாக ,”என்னடா காட்டுவாசி மாதிரி இருக்க..உன்னைப் பார்த்து பயந்து அவதான் அம்மான்னு கத்தியிருக்கணும்..நீ எதுக்கு டா அம்மா நு கத்தின? அம்மா, அம்மான்னு ஒரே வார்த்தையை விடாம ஜபிச்சிட்டு இருக்க..என்ன டா?” என்று பலமுறை ‘டா’ போட, பல மாதங்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்திருந்தவன் அவரது அந்த வரவேற்பில் மேலும் அதிர்ச்சியாக, அவனைக் கடந்து, கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்த சினேகா அருகே சென்று,”என்ன செய்யுது கண்ணு? எதுக்கு அழுதிட்டு இருக்க?” என்று கேட்டார் விஜயா.

கன்னத்தில் வழிந்த கண்ணீரை ஒரு கையால் அழுந்த துடைத்தபடி, இன்னொரு கையால் அவளது இடுப்பை பிடித்து விட்டபடி,”நான் சொன்னேனில்லே..நீங்க தான் அப்படியெல்லாம் நடக்காதுன்னு சொன்னீங்க..இப்போ தான் தூங்கப் போனேன்..திடீர்னு ஏதோ சத்தம்..கண் விழிச்சு பார்க்கறேன் ‘அம்மான்னு’ கத்தல்..அப்படிப் பயந்து போய் கத்த இங்கே என்னைத் தவிர வேற யார் இருக்காங்க..என்னைப் பார்த்து தானே கத்தியிருக்கார் உங்க மகன்..நான் பார்க்க பயப்படற மாதிரி இருக்கேன் போல.” என்று பேசியபடி அவரது தோள் மீது லேசாக சாய்ந்து கொண்டு கணவனை முறைத்தாள் சினேகா. கணவனும் கண் கொட்டாமல் கண்ணெதிரே இருந்த மனைவியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வை அவளது வயிற்றில் படிந்து, மீண்டு, மீண்டும் படிந்து என்று மனைவியிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை ஏற்க அவன் திண்டாட, அவனது தவிப்பை புரிந்து கொண்ட தமக்கை அவனின் உதவிக்கு வந்தாள்.