“நீ வருவ வருவேன்னு காத்திருந்து ஒன்பதாம் மாசமே ஆரம்பிச்சிடுச்சு டா..இதுக்கு மேலே காத்திருந்தா குழந்தையே பிறந்திடும்னு வளைகாப்புக்கு தேதி குறிச்சு இன்னைக்கு தான் நல்லபடியா நடந்து முடிஞ்சது..காலைலே வந்திருந்தா நீ எல்லோரையும் பார்த்திருக்கலாம்…சினேகாவோட சின்ன மாமா செந்தில் அவங்க மனைவியோட வந்திருந்தார்..நம்ம வீட்லேர்ந்து பழனி மாமா, மீனா மாமி, பிரகாஷ், நித்யா வந்திருந்தாங்க..சத்யன் வரலை..அனிதா மேடம் கூட வந்திருந்தாங்க..சினேகாவோடவேலை செய்யறவங்க தான் அவ போட்டிட்டு இருக்கற டிரெஸ்ஸைப் பரிசா கொடுத்தாங்க..சுலபமா உடுத்தற மாதிரி இடுப்பு பகுதிலே லைக்ரா துணி வைச்சு நானும் அவளுக்குப் பாவாடை சட்டை தைச்சுக் கொடுத்திருக்கேன்..அதை ஆபிஸுக்கு கூட போட்டிட்டு போவா..வயிற் அவ்வளவா தெரியாது.” என்று தாய்மை அடைந்திருந்த மனைவியின் நிலையை ஏற்கத் தடையாக இருந்த தம்பியின் அதிர்ச்சியைத் தணிக்கப் பார்த்தாள்.
அவனில்லாத போது நடந்திருந்த பெரிய மாற்றத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லி ஷண்முகத்தை சகஜமாக்க முயன்ற வசந்தியிடம்,”இவளைப் பார்த்ததுமே அவனுக்குப் புரியலையா? நீ விளக்கம் கொடுத்திட்டு இருக்க..அவன் விளங்காம நின்னுட்டு இருக்கான்..என்ன டா விளங்கலை உனக்கு? இவ இடுப்பைத் தடவி விட்டிட்டு இருக்கா..திடுக்குனு நிமிர்ந்து உட்கார்ந்ததிலே அங்கே பிடிச்சுக்கிச்சு போல…கேஸ்ல கொஞ்சம் போல சூடு தண்ணி போட்டு எடுத்திட்டு வா வசந்தி….ஒத்தடம் கொடுக்கலாம்.” என்றவர், அப்படியே தோள் மீது சாய்ந்திருந்த சினேகாவிடம்,”புதுசை எதுக்கு இராத்திரிக்கு போட்டுக்கிட்ட?” என்று கேட்க,
“ஆசையா இருந்திச்சு அத்தை.” என்றாள் சினேகா.
“வசந்தி, கீஸர் போட்டு விடு..கேஸ் வேணாம்.” என்று சொன்னவர், சினேகாவிடம்,”வேற மாத்திக்கோ கண்ணு.” என்றார். அவளது உடையை ஆசையாக தடவிப் பார்த்துக் கொண்டிருந்த சினேகாவிடமிருந்து அதற்குப் பதில் வரவில்லை.
”கண்ணு, வசந்தி தைச்சு கொடுத்த பாவாடை சட்டையைப் போட்டுக்க..அப்போ தான் இடுப்புக்கு ஒத்தடம் கொடுக்க சரியா இருக்கும்.” என்றார்.
“இதுவும் அதே டைப் தான் அத்தை..பாவாடைக்குப் பதிலா பைஜாமா.” என்றவள், அப்படியே டீ ஷர்ட்டை உயர்த்தி லைக்ரா துணியை இழுத்துக் காட்ட, அவளது வயிற்றைப் பார்த்து வேலிற்கு தலை கிறுகிறுத்தது.
“இது இராத்திரிக்கு வசதிப் படாது..பாத்ரூமுக்கு கஷ்டமாகிடும் கண்ணு.” என்று சினேகாவிடம் சொன்னவர்,”அவளுக்கு ஒரு பாவாடை சட்டை எடுத்துக் கொடு.” என்று வசந்திக்குக் கட்டளையிட்டார்.
உடனே அலமாரிக்கு சென்ற வசந்தி அதனுள்ளேயிருந்து பாவாடை, சட்டை செட் ஒன்றை வெளியே எடுத்து, “பச்சையா, மஞ்சளா சினேகா?” என்று அவளின் விருப்பத்தை வசந்தி கேட்க,”நீலம் அண்ணி” என்று அவள் சொல்ல,”அது இன்னும் துவைக்கலை சினேகா.” என்று வசந்தி பதிலளிக்க,”அப்போ மஞ்ச கலரே கொடுங்க அண்ணி..அந்த மஞ்சள் இல்லை..வெளிர் மஞ்சள்” என்றாள் சினேகா.
நள்ளிரவு நேரத்தில் அவளுக்குப் பிடித்தமான உடையை தேர்ந்தெடுத்து கொண்டிருந்த மனைவி வேலிற்குப் முற்றிலும் புதிராக, வேறாக தெரிந்தாள். கவலையைக் கொடுத்தாள். கண்ணாடி பொருள் போல் ஜாக்கிரதையாக மனைவியைக் கையாண்ட தாய், தமக்கை இருவரின் செய்கை மனைவியின் பூஞ்சை மன நிலையைக் கண்ணாடி போல் காட்டியது.
‘சரி’ என்று தலையசைத்தவள் விஜயாவின் உதவியோடு மெதுவாக எழுந்து நின்றாள். அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் நொடியில் மனைவி அருகே வந்து டக்கென்று அவளை கைகளில் தூக்க,”டேய், பார்த்து டா..பார்த்து..ஒன்பது ஆரம்பிச்சிடுச்சு டா..வயித்து பிள்ளை இடம் மாறினா அவளாலே மூச்சு கூட விட முடியாது.” என்று விஜயா பதற, பூ போல் அவளைப் பாத்ரூமில் இறக்கி விட்டான். அவனைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் புறம் பார்வையைத் திருப்பாமல் அவனுக்கு தேவையான சோப்பு, ரேஸரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
அலமாரியில் சினேகாவின் உடைகளை வைத்துக் கொண்டிருந்த வசந்தியிடம்,”அம்மா ரூம்லே குளிச்சிட்டு வரேன் க்கா.” என்று சொல்ல,
“துண்டு அங்கேயே இருக்குது..இங்கேயிருந்து உன்னோட டிரெஸை எடுத்திட்டுப் போ.” என்றவுடன், கீழ் தட்டில் கும்பலாக குவித்து வைத்த அவனது உடைகளைப் பார்த்து,”என்ன க்கா இது? என்னோடதை எல்லாம் இப்படி ஒரே அடுக்குலே அடைச்சு வைச்சிருக்கீங்க?” என்று கேட்டவன் அந்தக் குவியலை நொடியில் அலசி ஆராய்ந்து,”ஆபிஸுக்கு போட்டிட்டு போகற துணியெல்லாம் எங்கே?” என்று கேள்வி எழுப்ப,
“எங்க ரூம் அலமாரிலே கொஞ்சம் வைச்சிருக்கு..அப்புறம் உன்னோட உடுப்பையெல்லாம் பெரிய பெட்டிலே போட்டு பத்திரமா இங்கே வைச்சிருக்கேன்.” என்று கட்டிலுக்கு கீழே காட்டினாள்.
அந்த குவியலில் அவனது உடைகளைத் தேடிக் கொண்டிருந்தவனிடம்,“உங்க அலமாரிலே இடம் பத்தலை டா….சினேகாவோட டிரெஸ்ஸே நிறைய ஆகிப் போயிடுச்சு..புது அலமாரி வாங்கினா சரியா இருக்கும் டா..குழந்தையோடதுக்கும் இடம் தேவைப்படுமில்லே.” என்று வசந்தி ஆலோசனை அளிக்க, எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக அவனது உடைகளோடு அடுத்த அறைக்குச் சென்றான் ஷண்முகம்.
கால்மணி நேரம் கழித்து மழித்து, குளித்து சுத்தமாக வெளியே வந்தவனின் மனது அப்பா ஆகப் போகிறதை அழகாக ஏற்றுக் கொண்டு அடுத்ததைப் பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தது.பெண்கள் மூவரும் சாப்பாடு மேஜையில் காத்திருந்தனர். உணவு நேரம் போல் பதார்த்தங்களால் நின்றைந்திருந்தது சாப்பாடு மேஜை.
“என்ன க்கா இவ்வளவு இருக்கு?” என்றுவிசாரித்தபடி வந்தான் ஷண்முகம்.
“உனக்காக தான்..ஒண்ணு விடாம எல்லாத்தையும் சூடு செய்து வைச்சிருக்கேன்..சாப்பிட வா.” என்று அழைத்தாள் வசந்தி.
“இந்த நேரத்திலேயா? இவ்வளவு எதுக்கு செய்த..தினமும் இப்படித் தான் சமைக்கறேயா?” என்று மனைவியின் தோற்றத்தைக் பார்த்தபடி கேள்வி எழுப்ப, அதைக் கேட்டு மனைவியின் கண்கள் அனலைக் கக்க, விஜயாவோ மகனின் கேள்வியில்,’போலீஸ்ஸா இருந்து என்ன பிரயோஜனம்..பக்குவம் பத்தலையே இவனுக்கு.’ என்று மனத்திற்கு நோந்து போனவர்,
“இல்லை சாமி…விசேஷத்துக்கு சமைச்சது கொஞ்சம் கூடுதலாகிடுச்சு….நாளைக்கு சாப்பிட்டுக்கலாம்னு ஃப்ரிஜ்லே எடுத்து வைச்சோம்..கடவுள் எண்ணம் இப்போ தான் புரியுது..உன்னை இன்னைக்கு அனுப்பி வைச்சிட்டார்..நீயும் ஒரு வார்த்தை தகவல் கொடுத்திருக்கலாம்.” என்றார்.
அவனெதிரே அமர்ந்திருந்த மனைவியை ஆராய்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் ஷண்முகம். வயிற்றைப் போல் முகம், தேகம் இரண்டும் உடுண்டை வடிவத்தை தத்து எடுத்திருந்தாலும் தனிப் பொலிவுடன் மிளிர்ந்தாள் மனைவி. அவளது கரங்களில் இருந்த கலர் கண்ணாடி வளையல்களை விட்டு அவனது கண்கள் அகல மறுத்தன. அதைக் கவனித்த மனைவி அவளது கைகளை அசைத்து, சத்தம் எழுப்பி அவனது கவனத்தை கவர முயன்று அதில் வெற்றி அடைவந்தவளைப் பார்த்து அவன் பெரிதாக புன்னகை சிந்த, கண்களைப் பெரிதாக விரித்து அவனை முறைத்தாள். அதற்கு காரணம் இத்தனை மாதங்களாக தகவல் கொடுக்காமல் இருந்தது தானென்று எண்ணி,
“என் வேலை பற்றி தெரியும் தானே..புதுசா இருக்கு நீங்க பேசறது.” என்று தாயை அவன் கடிந்து கொள்ள,
“தெரியும் சாமி..ஆனா இந்த மாதிரி சூழ்நிலைலே உங்ககிட்டேயிருந்து ஒரு வார்த்தை வராம எப்படிச் சாமி எங்களாலே தைரியமா இருக்கு முடியும்?எப்படியோ சமாளிச்சிட்டு இருந்திட்டோம்..இப்போ வரை வேலைக்கு போயிட்டு இருக்கா உன் பொண்டாட்டி..தனியா தான் படுத்துக்கறா..பிரசவத்துக்கு அவங்க அம்மா வீட்டுக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டா..நாளைலேர்ந்து ஜோதி இங்கே எங்களோட தங்கப் போறா..அவசரத்துக்கு ஷிக்கா அண்ணன்கிட்டே வண்டி சொல்லி வைச்சிருக்கு..மனோவுக்குத் தெரிஞ்ச டாக்ஸிக்காரன் நம்பரும் வாங்கி வைச்சிருக்கோம்..அப்புறம்..” என்றவரின் பேச்சை இடைமறித்து,
”அத்தை..நீங்க பேசறதும் எதுவும் அவங்க காதுக்குப் போகலை…முதல்லே தட்டைப் பார்த்து சாப்பிடச் சொல்லுங்க.” என்றாள் சினேகா.
“சாமி, உங்களைப் பார்த்தா சாப்பாடே பார்க்காத மாதிரி இருக்குது..உங்க தட்டைப் பார்த்து நல்லாச் சாப்பிடுங்க.” என்று விஜயா அதட்டல் போட, உடனே வாயில் சாப்பாட்டை போட்டவன் அதே சமயம் முன்பை விட தீவிரமாக மனைவியைப் பார்த்தான் ஷண்முகம்.
வெளிர் மஞ்சள் நிறத்தில் நீல நிறப் பூக்கள் நிறைந்திருந்த பாவாடை சட்டையில் அவனது மனத்தை கொள்ளையடித்தாள் மனைவி. அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று மனம் ஆசைப்பட, அந்த ஆசையை நிறைவேற்ற ஆரம்பித்தான் கணவன்.