அத்தியாயம் – 48

மதி மாமியின் கேள்விக்கு விடையைத் தேடியபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் சினேகா. வீட்டு வாயிலிருந்து படபடவென ஆட்டோ சத்தம் கேட்க அவளது இதயமும் தடதடவென அதன் ஜதியை கூட்ட,  நிமிடங்கள் கடக்க, ‘ஒரு பாய் சொல்லிட்டு கதவைச் சாத்திட்டு வர இத்தனை நேரமா இவங்களுக்கு?’ என்று கணவனுக்குகாக காத்திருந்து அவன் மீது கோபம் கொண்ட புது மனைவிக்குத் தெரியவில்லை அவளது காத்திருப்பு லேசில் முடியப் போவதில்லையென்று.

அன்றைய உணர்வுகளை மீட்டு எடுக்க அவளாலான முயற்சியை எடுத்திருந்தாள். அவன் கொடுத்த பணத்தில் வாங்கிய புடவையை உடுத்தியிருந்தாள். தறியிலிருந்து புடவை நேரடியாக ஷிக்காவின் கடைக்குப் போனதால் புடவையைப் பற்றி ஜோதிக்கு ஐடியா இருக்கவில்லை. நகை வாங்கிக் கொள்ள எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் அவள் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. ஏனோ வாங்கிக் கொள்ள தோன்றவில்லை. ஜோதியின் தொணதொணப்பு தாங்க முடியாமல்,’அவங்களோட போய் வாங்கிக்கலாம்னு இருக்கேன்.’ என்று அந்த டாபிக்கை முடித்தாள். 

அன்று போல் இன்று நீல நிறப் புடவை. முந்தானையிலும் கரையிலும் அளவான சரிகை வேலைப்பாடு கொண்ட ராயல் ப்ளூ பாகல்புரி கீச்சா (bagalpuri gicha, bagalpuri silk is tussar silk) பட்டுப்புடவை. கைகளில் வெள்ளைக் கல் வைத்த கவரிங் வளையல்கள். கழுத்தில் அன்று காலையில் அவன் கட்டிய மஞ்சள் கயிற் அதற்குத் துணையாக ஐந்து பவுனில் தங்கச் சங்கிலி. சிரத்தை எடுத்து முகத்திற்கு எந்த அலங்காரமும் செய்து கொள்ளவில்லை சினேகா. நெற்றியில் மரூன் நிறத்தில் வட்டப் பொட்டு அதன் மேல் லேசாக திருநீற் கீற்று. வகிட்டில் குங்குமம். தலையை பின்னிக் கொள்ளாமல் பக்கவாட்டிலிருந்து கற்றை தலைமுடியை இழுத்து பின்பக்கத்தில் கிளிப் போட்டு அதிலேயே கொஞ்சம் போல் மல்லிப்பூ சூடியிருந்தாள். 

கதவைத் திறந்து வெளியே வந்த மகளின் தோற்றம் அம்மாவிற்கு திருப்தியாக இல்லை. வேகமாக அவளைச் சோதனை செய்தபடி,

“என்ன டீ இது? கல்யாணத்துக்கு முன்னே இது போல தான் இருப்ப இன்னைக்கும் அதே போல இருக்க? இந்தப் புடவையா வாங்கிகிட்ட? வேற இல்லையா உன்கிட்டே..நேரம் வேற ஆகிடிச்சே” என்று படபடப்பானார்.

அதே போல் இருப்பது போல் இருந்தாலும் ஷிக்காவின் கைங்கரியத்தில் சில மாற்றங்கள் அவளிடம் ஏற்பட்டிருந்தது. அவளது உடைகளில் செலுத்திய கவனத்தை உள்ளாடைகளிலும் செலுத்தியிருக்க வேண்டுமென்று இங்கே வந்த பின், சிறிது நேரத்திற்கு முன்னர் தான், இன்றைய இரவிற்கான உடையைக் கையில் எடுத்த போது தான் உணர்ந்திருந்தாள். நல்லவேளை கல்யாணப் புடவையையும் அது சார்ந்த கொசுறுகளையும் ஜோதி தேர்ந்தெடுத்திருந்ததால் காலையில் கோவிலில் கணக்கில்லாமல்  இருந்த சுவாமி சந்நிதானங்களில், பெரியவர்களின் பாதங்களில் விழுந்து எழ முடிந்தது. இப்போது அவளால் கீழே குனிந்து புடவையில் ப்ளீட்டைக் கூட சரி செய்ய முடியவில்லை. பின்பகுதியும் முன்பகுதியும் பாடுபடுத்தியது. ‘எதுக்கு இந்த வேலை செய்திருக்கா?’ என்று கோபம் வந்தது. ‘புருஷன் கால்லே விழணும்னு சொன்னா என்ன செய்வ? என்ற கேள்வி மனத்தில் வர,’அதைக் கூட சமாளிச்சுக்கலாம் ஆனா பெரியவங்க கால்லே விழச் சொன்னா எப்படி சமாளிப்பேன்.’ என்று ஜோதியின் கேள்விக்கு பதில் அளிக்காமல் மனத்திற்குள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்.

இரவிற்காக எடுத்திருந்த இந்தப் புடவையை ஷிக்காவிடம் கொடுத்து அதற்கு தோதான உருப்பிடிகளைத் தயார் சொன்னது எத்தனை பெரிய தவறு என்று காலம் கடந்து புரிந்திருந்தது. என்ன செய்யலாமென்று யோசித்தவள்,’யாரும் வர்றத்துக்கு முன்னாடி ரூம்லே போய் உட்கார்ந்திட வேண்டியது தான்.’ என்று முடிவு செய்தாள். 

ஜோதியின் கேள்விக்குப் பதில் சொன்னால் விசாரணை புலன்விசாரணையாக மாறும் என்பதால்,“இங்கே இந்த வீட்லே இதெல்லாம் வைச்சது எனக்குப் பிடிக்கவேயில்லை.” என்று அவருக்குப் பிடிக்காத உரையாடலை ஆரம்பித்து அவளது உடையிலிருந்து அவளுடைய அம்மாவின் கவனத்தை திருப்பினாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே,“மாப்பிள்ளையே எதுவும் சொல்லலை..நீ எதுக்கு குதிக்கற?” என்று ஜோதி குரலை உயர்த்த,

‘ஐயோ, நல்லா மூச்சு விட முடியாம, நிமிர்ந்து நிக்க கூட முடியாம நான் கஷ்டப்பட்டிட்டு இருக்கேன் அது புரியாம குதிக்கறேன்னு சொல்றாங்களே’ என்று மனத்தில் புலம்பியபடி,“நீங்க அபிப்பிராயம் கேட்டீங்களா அவங்ககிட்டே..என்னைப் போல அவரும் வாயை மூடிட்டு இருக்கார்.” என்றாள் சினேகா.

“உன்னை போல அவர் இல்லை..அவர் அறிவாளி..” என்றார் ஜோதி.

அம்மாவோடு வாக்குவாதம் செய்யக் கூடாதென்று அவள் எடுத்திருந்த உறுதியை உடைப்பில் போட்டு விட்டு,“என்னை முட்டாள்னு சொல்றீங்களா?” என்று சினேகா கொதித்துப் போக, 

“அறிவுக்கெட்டவளே..கத்தாதே டீ.. இன்னைக்கு வைக்கலைன்னா நல்ல நாள் பார்த்து தான் ஏற்பாடு செய்யணும்..கல்யாணத் தன்னைக்கு நாள், நேரமெல்லாம் பார்க்க வேணாம்..அதான் இங்கே வைச்சுக்கலாம்னு மீனாட்சி அண்ணி சொன்னதும் சரின்னு சொல்லிட்டேன்..அந்த விவரமெல்லாம் தெரியாமலேயே அவங்க அம்மா சொன்னதைக் கேட்டுக்கிட்டார் மாப்பிள்ளை சாமி..உன்னைப் போல குதிக்கலை.” என்றார் ஜோதி.

மாப்பிள்ளைக்கு பின்னால் சாமி சேர்ந்து கொண்டதைக் கேட்டு,”இன்னைலேர்ந்து உங்களோட கடவுள் மாறிடிச்சா ம்மா?” என்று சினேகா கிண்டல் செய்ய,

“கடவுள் தான் டீ என்னோட மாப்பிள்ளை எனக்கு கடவுள் தான்..எனக்கு மட்டுமில்லை உனக்கும் தான்..மறக்காம கால்லே விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க.”என்று ஜோதி கோபத்துடன் பதில் அளிக்க, ‘அவங்களை கணவனா தான் பார்க்க முடியும்..கடவுளா எல்லாம் பார்க்க முடியாது.’ என்ற சூடாகப் பதில் கொடுக்க நினைத்து அதை அப்படியே மனத்தில் புதைத்துக் கொண்டாள் சினேகா. ஏற்கனவே அன்றைய இரவிற்கான ஏற்பாட்டில் அவளால் சில சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. 

அவர்களுக்கான இரவு உணவை கொண்டு வர மாமாக்கள் இருவரும் அவர்களின் வீட்டிற்கு செல்லத் தயாரான போது, அவர்களோடு விநாயகம் தாத்தாவையும் அனுப்பி வைத்த ஷண்முகம், ஜோதியிடம்,

“சாப்பாடு முடிஞ்சதும் நீங்களும் அங்கே போயிடுங்க மாமி.” என்றிருந்தான்.

அவனை மறுத்துப் பேச முடியாமல் அதே சமயம் அவர்கள் இருவரையும் அந்த வீட்டில் தனியாக விட தயக்கமாக இருந்ததால், இதென்னடா சங்கடம் என்று தவித்தவர், உதவிக்காக மகளின் முகத்தைப் பார்க்க, மகளோ ‘என்னை எதுக்கு பார்க்கறீங்க?’ என்று அவரை முறைத்துப் பார்த்தாள். 

“ஒண்ணும் பிரச்சனையில்லை அண்ணி..சாப்பாடு முடிஞ்சதும் நாமளும் போயிடலாம்.” என்று பிரச்சனை பெரிதாகாமல் முடித்து வைத்தார மதியழகி.

இதுவரை அவள் குடியிருந்த வீடுகளில் இரண்டு படுக்கையறைகளுக்கு மேல் இருந்ததில்லை. இப்போது அவளும் அம்மாவும் இருக்கும் வீட்டில் ஒரேயொரு அறை தான். இத்தனை பெரிய வீட்டில் புதுமணத் தம்பதி மட்டும் இருக்கப் போவதால்,’வழக்கமா இதுக்கெல்லாம் ஓர் அறை தான்..இவங்க முழு வீட்டையும் அபகரிச்சுக்கிட்டாங்க..என்ன ஐடியாலே?’ என்று கணவனை அவள் நோக்க, மனைவியின் மனத்தில் எழுந்த கேள்வியை யுகித்திருந்ததால் அவள் புறம் பார்வையைக் கூட திருப்பவில்லை அவளின் துணைவேல்.

அதன் பின் இரவு உணவு வரும் வரை ஜோதி, மதி இருவரிடமும் வீட்டுக்கதை, ஊர்க்கதை கேட்டு பொழுதைப் போக்கிய ஷண்முகவேலைப் பார்த்து கொதித்துப் போனாள் சினேகா. ‘நம்மகிட்டே ஒரு வார்த்தை பேச இவங்களுக்கு தோணுதா பார்?’ என்று கணவன் மீது கோபக் கணைகளை மனைவி செலுத்திக் கொண்டிருக்க, அதைக் கண்டு கொண்டாலும் அவளிடம் வெளிக் காட்டவில்லை. அவளுக்காக தான் இரவு பொழுதை ஒதுக்கியிருந்தான். அளிடம் பேச முக்கியமான விஷயமொன்று இருந்தது. முழு இரவையும் அவளுக்காக அர்ப்பணிக்கப் போகிறான் என்பதை உணராமல் ஆசை, கோபம், காதல் என்று கட்டுபடுத்த முடியாத உணர்வுகளோடு கற்பனை உலகத்தில் உலாவிக் கொண்டிருந்தாள் ஸ்வப்னலதா.

இரவு சாப்பாடு முடிந்தவுடன் சினேகாவைத் தயார் செய்ய பெண்களுக்கு தனிமை கொடுத்து விட்டு ஆண்கள் மூவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். சினேகாவை தயார் செய்யும் பொறுப்பை அவளுடைய அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு அந்தப் பெரிய வீட்டைப் பொறுப்பாக பூட்டிப் பாதுகாப்பு செய்யும் பணியை மேற்கொள்ள சென்று விட்டார் மதி. 

“நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க..நானே தயாராகி வரேன்.” என்று அவளுடைய அம்மாவை அறையிலிருந்து அனுப்பி விட்டாள் சினேகா. அறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவளது தோற்றத்தைப் பற்றிய விமர்சனம் அவளைச் சினம் கொள்ள வைத்தது. ‘இங்கேயே நின்னுட்டு இருந்தா இண்டு இடுக்கு விடாம ஆராய்ச்சி செய்து ஏடாகூடமா எதையாவது கேட்கறத்துக்கு முன்னாடி கிளம்பிடுவோம்’ என்று முடிவு செய்து, அம்மா என்ன யோசிப்பார்கள் என்று யோசிக்காமல்,

“நான் அந்த ரூமுக்குப் போறேன்.” என்று மகள் சொல்ல,

“என்ன டீ அவசரம் உனக்கு? முதல்லே பூஜை அறைக்குப் போய் சாமியை வேண்டிட்டு திருநீற் பூசிட்டு வா.” என்று மகளுக்குக் கட்டளையிட்டார்.

வேறு வழியில்லாமல் பூஜை அறைக்குச் சென்று ஜோதி சொன்னதை செய்து விட்டு சினேகா திரும்பிய போது வேலைகளை முடித்துக் கொண்டு வந்திருந்தார் மதியழகி. சினேகா தயாராகி விட்டாளென்று தெரிய, 

“என் வேலை முடிஞ்சிடுச்சு…உங்க தம்பிக்கு ஃபோன் போட்டு வீட்டுக்கு வரச் சொல்லவா?” என்று ஜோதியிடம் கேட்டார்.

அதற்கு ஜோதி பதில் அளிக்கும் முன்,“இருங்க..இருங்க மாமி..நான் அந்த அறைக்குப் போயிடறேன்..அப்புறம் ஃபோன் போடுங்க மாமி.” என்றாள் சினேகா.

அதைக் கேட்டு திகைப்படைந்த மதி,”நீ முதல்லே போகறேயா?” என்று கேட்டார்.

‘இவளை’ என்று மனத்திற்குள் மகளைத் திட்டிய ஜோதி,“நீ போய் உள்ளே உட்கார்ந்தா வாசல் கதவை யார் பூட்டறது?” என்று கேட்டார்.

“நீங்க கிளம்பிடுங்கண்ணு உங்க மாப்பிள்ளை உங்ககிட்டே சொன்ன போது இதை யோசிக்காம சரின்னு தலையாட்டினீங்கயில்லே..நான் மாட்டேன்.” என்றாள்.

“எதுக்கு டீ இப்போ பிரச்சனை செய்யற..அறையைப் பூட்டிக்கிறது மாதிரி தான்..நாங்க கிளம்பிப் போன பிறகு வாசல் கதவைத் தாழ்ப்பாள் போட்டிட்டு ரூமுக்கு போ.” என்று கட்டளையிட்டார் ஜோதி.

“மாட்டவே மாட்டேன்..என்கிட்டே சொன்னதை அப்படியே உங்க மாப்பிள்ளைகிட்டே சொல்லிட்டுப் போங்க.” என்று பதில் கொடுத்து விட்டு ஜோதியின் எதிர்வினைக்குக் காத்திருக்காமல் புதுமணத் தம்பதியருக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று விட்டாள் சினேகா. அடுத்து என்ன செய்வது என்று வாசலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஜோதி அவருடைய மகளின் நடையின் பாணி மாறிப் போயிருந்ததைக் கவனிக்க தவறினார். சினேகாவைப் பார்த்துக் கொண்டிருந்த மதிக்கு அவளின்  நடை வித்தியாசமாக தெரிய, அதைப் பற்றி அவர் ஜோதியிடம் விசாரிக்குமுன் வாசலில் ஆரவாரம் கேட்டது. 

வீட்டிற்குள் நுழைந்த செல்வம், வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கையிடம்,“கிளம்பலாமா ஜோதி?” என்று அவரை அறியாமல் உதவிக்கரம் நீட்டினார். அதை இறுக்கமாக பற்றிக் கொண்ட ஜோதி, “சினேகா அங்கே இருக்கா…நாங்க கிளம்பறோம் தம்பி..” என்று ஷண்முகத்திடம் சொன்னார்.

அதற்கு,”ஓகே மாமி..நாளைக்கு காலைலே ஆறு மணி போல எங்களை அழைச்சிட்டுப் போக வண்டி வரும்.” என்றான்.

“வண்டி வந்ததும் நீங்க ஃபோன் போடுங்க..நான் வரேன்..நம்ம வீட்டுக்கு வந்து காப்பி, டிஃபன் முடிச்சிட்டுக் கிளம்புங்க.” என்றார் செல்வம்.

“இல்லை..அதுக்கெல்லாம் நேரம் இருக்காது..அடுத்த முறை வரேன்..நாளைக்கு நீங்க யாரும் வர வேணாம்..சாவியை வாங்கிட்டுப் போக ஆளை அனுப்பி வைங்க.” என்றான் ஷண்முகம். அடுத்த முறை கண்டிப்பாக வீட்டிற்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத்து, மறு நாள் காலையில் அவர்களை வழியனுப்பி வைக்க வருவதாக வாக்கு கொடுத்து விட்டு ஜோதி, மதியை உடனழைத்துக் கொண்டு கிளம்பிச் சென்றனர் ஜோதியின் சகோதரர்கள். அவர்களை அனுப்பி விட்டு, வாசல் கதவை சாத்தி விட்டு சினேகா இருந்த அறைக்கு வந்தான் ஷண்முகம். 

அவன் உள்ளே நுழைந்த போது அமைதியாக கட்டிலில் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்திருந்த மனைவியை யோசனையாகப் பார்த்தான். அதன் பின் அவளிடம் ஒரு வார்த்தை பேசாமல் வெளியே சென்று விட்டான். 

கணவனைப் பற்றி, மதி மாமியின் கேள்வியைப் பற்றி யோசித்தபடி அமர்ந்திருந்தவள்,’உள்ளே வந்தாங்க உடனே வெளியே போயிட்டாங்க.’ என்று அறையின் வாசலைப் பார்த்தாள்.

சில நொடிகளில் அவனுடைய சூட்கேஸோடு திரும்பி வந்தவன் அதை கட்டிலின் நடுவே வைத்து, திறந்து, உள்ளே இருந்த அவனது உடைகளை வெளியே எடுத்து வைத்தான். அதிலிருந்து சில உடைகளை மீண்டும் பெட்டியில் அடுக்கினான். அடுத்த சில நிமிடங்கள் அதில் கழிய, பேக்கிங் எதற்கு என்று புரிய, அதற்கு மேல் அமைதியாக அமர்ந்திருக்க முடியாமல், மாமியின் கேள்விக்கு விடை அறிய விரும்பி,”எந்த ஊர்?” என்று ஷண்முகத்திடம் கேட்டாள் சினேகா.

அறைக்குள் வந்ததிலிருந்து செண்ட்டிமீட்டர் அளவிற்கு கூட வாயைக் திறக்காமல் சிலை போல் அதே இடத்தில் அமர்ந்திருந்த மனைவி கேட்ட கேள்விக்கு விடை அளிக்காமல்,”உன்னோட பெட்டி எங்கே?” என்று அவளிடம் கேட்டான்.

‘நான் கேட்ட கேள்விக்குப் பதில் கொடுக்காம இவங்க கேள்வி கேட்கறாங்க.’ என்று கடுப்பான சினேகா,  நிமிர்ந்து அமர்ந்து, அதிகாரமாக,”எந்த ஊர்ன்னு கேட்டேன்.” என்றாள்.

அவளது அந்த தோரணை, தொனி அதுவரை அவள் காத்து வந்த செய்றகை அமைதி, அப்பிராணி தோற்றத்தை உடைக்க, அவளது புதிய தோற்றத்தை அளவெடுத்தபடி,”பெங்களூர்” என்றான்.