அத்தியாயம் – 47-2

இன்று, ஷண்முகத்தின் திருமண நாளன்று அந்தக் கேள்வி மறுபடியும் எழ, வெங்கடேஷின் திடமான மனத்தில் லேசான தடுமாற்றம் வந்திருந்தது. அதை மறைத்துக் கொண்டு,

“ராதிகாக்கு உடம்பு சரியில்லை வரமுடியாதுன்னு இன்னைக்குக் காலைலே தான் மெசேஜ் போட்டேன்.” என்று அவனுடைய அப்பாவின் கேள்விக்குப் பதில் அளித்தான்.

அதற்கு சீதா பதிலளிக்கும் முன் அவளது படுக்கையறையிலிருந்து வெளியே வந்த ராதிகா,”எதுக்கு உன்னோட பிரச்சனைலே என்னை உள்ளே இழுத்திருக்க?” என்று சண்டை பிடித்தாள்.

“உன்னை இழுக்காம உண்மையைச் சொல்ல சொல்றேயா?” என்று வெங்கடேஷும் களத்தில் இறங்கினான்.

அதை எதிர்பார்த்திராத ராதிகா,“நீ பொய் சொல்லாதேன்னு சொன்னேனா..என்னை வைச்சு பொய் சொல்லாதேன்னு சொல்றேன்.” என்று தணிவான குரலில் பதில் அளித்தாள்.

“வேற என்ன சொல்லியிருந்தாலும் அவங்க சமாதானம் ஆக மாட்டாங்க..உன்னைப் பார்த்துக்க எத்தனை முறை மாசக் கணக்கிலே இங்கே தங்கியிருக்கா வசந்தின்னு அவங்களுக்கும் தெரியும்..அதான் அவங்க நம்பற மாதிரி பொய் சொன்னேன்.” என்றான்.

அந்தப் பொய் செய்தியை கைப்பேசி மூலம் அனுப்பி வைத்த பின் அந்தச் செய்தியை வசந்தி வீட்டினர் நம்பியிருப்பார்களா? என்ற சந்தேகம் தான் வெங்கடேஷின் மனத்தை துளைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவனுடைய அம்மாவிற்கு அது போல் சந்தேகம் எழவில்லை. எனவே,

“எப்போதும் நடக்கறதாலே அவங்க நம்பியிருப்பாங்க..உன் மாமனார்கிட்டே பேசி சீக்கிரமா மீதியை வாங்கப் பார்..அப்படியே அவங்க எப்போ ஊருக்குத் திரும்பறாங்கண்ணு விசாரி..பணத்தை நேர்லே வாங்கிட்டு இவளை அப்படியே அவங்கிட்டே ஒப்படைச்சிட்டு எல்லாத்தையும் ஒரே தடவையா முடிச்சிட்டா நல்லா இருக்கும்.” என்றார் சீதா.

“அப்படி எப்படி சட்டுன்னு விஷயத்தை முடிக்க முடியும்? அவளோட நகை நட்டு, சாமான் செட்டு எல்லாம் நம்ம வீட்லே இருக்குது..அதை சரியாப் பிரிச்சு நம்மளோடதை எடுத்து வைச்சிட்டு அவளோடதை கொடுத்து விட்டு, வீட்டை பூட்டி, நல்ல விலைக்கு வித்துன்னு சென்னைலே எவ்வளவு வேலை காத்திட்டு கிடக்கு..நீ நினைக்கற மாதிரி எல்லாத்தையும் டக்டக்குனு முடிக்க முடியாது..மூணு வாரமாவது அங்கே இருந்தா தான் சரிப்பட்டு வரும்.” என்று சொன்ன சீதாவின் கணவருக்குத் தெரியவில்லை எல்லாம் மூன்றே நாள்களில் முடிந்து விடப் போகிறதென்று

அதற்கு,”அப்பா நீங்க சொல்றது சரி தான்..ஆனால் அங்கே எல்லாம் நல்லபடியா நடக்க முதல்லே இங்கே ஃபிளாட்டை வாங்கிப் போடணும்..அப்போ தான் அதைக்  காலி செய்து அந்தச் சாமானை இங்கே கொண்டு வந்து போட முடியும்..வேலை மாற்றலுக்கு எழுதி கொடுக்கணும்..காருக்கு நோ அப்ஜக்‌ஷன் வாங்கணும் இல்லை இங்கே திரும்ப ரெஜிஸ்டர் செய்யணும்.” என்று அடுக்கினான் வெங்கடேஷ்.

“இவ்வளவு வேலை வரிசை கட்டி நிக்கும் போது எதுக்கு காலைலே வெட்டியா உட்கார்ந்து வெறிச்சுப் பார்த்திட்டு இருக்க?” என்று கேட்டார் சீதா.

இதுவரை இல்லாத உணர்வு இன்று தலை தூக்கியிருந்தது. ஷண்முகத்தின் திருமண நாள் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். அவனது வெட்டி நிலைக்கு வசந்தி தான் காரணம் என்று பதில் சொல்ல நினைத்தாலும் வெங்கடேஷ் வாயைத் திறக்கவில்லை. அவள் இருக்கும் அறையை நோக்கி அவனது பார்வையைத் திருப்ப, அதைக் கண்டு கொண்ட சீதா,”அவதான் அவளோட இந்த நிலைக்குக் காரணம்..வாயைத் திறந்து எனக்கும் செய்யுங்க..நானும் உங்க மக தான்னு அவங்க வீட்லே சொல்லியிருந்தா இன்னும் இரண்டு முறை சிகிச்சை எடுத்திருக்கலாம்..என்ன தான் நம்ம வீட்டு வாரிசானாலும் எல்லாத்துக்கும் நீயே செலவு செய்திட்டு இருப்பேயா? என் புருஷனோட பணம் அவரும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கறாருன்னு இவளுக்கு உன் மேலே கரிசனமே வரலை டா..அப்படி வந்திருந்தா ஜெயந்தி புள்ளைக்கு செலவழிச்ச போது சண்டை போட்டிருக்கணும் இல்லை சிந்துவோட கல்யாணத்தை தடபுடலா நடத்தின போது என் கல்யாணத்தை இப்படிச் செய்யலை….கல்யாணத்துக்கு பிறகு என் புருஷன் வீடு தான் எல்லாத்தையும் பார்த்துக்கறாங்க..இப்போவாவது எனக்கு ஏதாவது கொடுங்கண்ணு சண்டை பிடிச்சிருக்கணும்..இவளுக்கு அந்த மாதிரி சாமர்த்தியம் இருந்திருந்தா இதுக்குள்ளே உன் வாழ்க்கை எப்படிச் செழிப்பாகியிருக்கும்..அதையெல்லாம் யோசிச்சு தான் இவளைக் கட்ட வேணாம்னு அப்போவே சொன்னேன்..என் பேச்சை நீ கேட்கலை..இப்போவாவது உனக்கு புத்தி வந்திச்சேன்னு தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு இருக்கேன் நீ அவளைப் பற்றி யோசிச்சிட்டு உட்கார்ந்திருக்க..சீக்கிரமா இவளுக்கு ஒரு முடிவு எடுத்தா தான் உனக்கு நல்ல காலம் பிறக்கும்.” என்று அவரது மனக்குமுறலைக் கொட்டி கண்ணீர் வடித்தார் சீதா.

உடனே,“அம்மா அப்படியெல்லாம் இல்லை ம்மா..நான் போட்ட திட்டமே வேற..இங்கே வந்து இப்படி உட்கார்ந்திட்டு இருப்பேன்னு நான் நினைக்கவேயில்லை.” என்று அவனது ஏமாற்றத்தை வெளியிட்டான் வெங்கடேஷ்.

“என்ன திட்டம் போட்டிருந்தாலும் அவளோட அப்பா, அம்மா வந்த பிறகு தான் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.”

“விஜயா அத்தை தில்லிக்குப் போகாம இங்கேயே இருந்திருந்தா பணம் என் கைக்கு வந்தவுடனேயே இதுக்கு ஒரு முடிவு கிடைச்சிருக்கும்.” என்றான் வெங்கடேஷ்.

“எப்படி டா.” என்றார் சீதா.

“அவங்களே விவாகரத்து ஆனவங்க..எந்த முகத்தை வைச்சுக்கிட்டு என்கிட்டே நியாயம் பேசுவாங்க…அவங்களை உதாரணமா வைச்சு இவளை விவாகரத்து செய்திருப்பேன்..அப்படியே இவளோட அப்பா தகராறு செய்தா எல்லாக் கணக்கையும்” என்று வேகமாக வெங்கடேஷ் பேசிக் கொண்டிருந்த போது அவனது கைப்பேசி ஒலி எழுப்பியது.

அவனது கைப்பேசியின் ஒலியை கேட்டு பேக்கெட்டிலிருந்து அதை வெளியே எடுத்தவன்,”அம்மா தான் கூப்பிறாங்க மாமி..பேசிட்டு வர்றேன்.” என்று வீட்டிற்கு வெளியே சென்றான் ஷண்முகவேல்.

வரவேற்பறையில் ஜோதி, மதி, சினேகா மூவரும் அமர்ந்திருந்தனர். ஷண்முகவேலின் தலை மறைந்தவுடன்,”சினேகா கொடுத்து வைச்சவ அண்ணி..மாப்பிள்ளை ரொம்ப நல்ல டைப்..அவரோட அம்மா விவாகரத்து செய்தவங்க..அப்பாக்கும் மகனுக்கும் தொடர்பு கிடையாதுன்னு மாப்பிள்ளை வீட்டைப் பற்றி நீங்க சொன்ன போது எங்களுக்கு நல்ல மாதிரியா தோணலை..இப்போ நேர்லே பார்த்த பிறகு இவ்வளவு நல்ல மனுஷங்களான்னு ஆச்சரியமா இருக்கு.” என்றார் மதியழகி.

அதற்கு,“நானும் எத்தனை முயற்சி செய்தேன்..ஒண்ணும் நடக்கலை..மனோவைவும் நிறைய கோவிச்சுக்கிட்டேன்..ஒண்ணும் பிரயோஜனமில்லை..என் மாப்பிள்ளை தான் என்னோட மனச்சுமையை இறக்கணும்னு எழுதியிருந்திச்சு போல.” என்றார் ஜோதி.

அப்போது சினேகாவின் கைப்பேசி ஒலி எழுப்ப,”அம்மா, மனோ தான் கூப்பிடறான்..காசியப்பன் விஷயம் தெரிஞ்சிடுச்சு போல..நீங்களே பேசுங்க.” என்று அவளுடைய கைப்பேசியை ஜோதியிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு வீட்டின் சமையலறை பக்கம் சென்றார் ஜோதி.

அதே நேரம் வீட்டிற்கு வெளியே,”என்ன ம்மா? உங்க குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு?” என்று விசாரித்தான் ஷண்முகம்.

“சாமி..சாமி..” என்ற ஒரு வார்த்தைக்கு மேல் விஜயாவிற்கு பேச்சு வரவில்லை.

“எங்கே இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா? பிரகாஷ் எங்கே?” என்று அடுத்தடுத்து கேட்டவுடன், ஒரு மாதிரி தன்னை சமாதானம் செய்து கொண்ட விஜயா,”சாமி, ஜெயந்தி ரொம்ப மோசம்.” என்றார்.

திடீரென்று ஜெயந்தி அக்காவைப் பற்றி அவனுடைய அம்மா சொன்னதை எப்படி எடுத்துக் கொள்வதென்று  ஷண்முகத்திற்குப் புரியவில்லை. இன்று காலையில், அவனது திருமணத்தில் நாத்தனாராக அவளது கடமைகளை நல்ல முறையில் செய்த அக்கா இப்போது என்ன தவறு செய்து விட்டாளென்ற கேள்வி வர, அதை அவன் வெளியிடுமுன்,”வசந்திக்கு ஃபோன் போட்டு ஏன் வரலைன்னு விசாரின்னு சொன்னேன் சாமி..அதுக்கு என்னென்னமோ பேசிட்டா.” என்றார். 

வசந்தி அக்கா வராதது அவனுக்குமே வருத்தம் தான். அவருடைய குடும்பச் சூழ்நிலை சரியில்லாத போது வந்து தான் ஆக வேண்டுமென்று கட்டாயப்படுத்த அவன் இஷ்டப்படவில்லை. அதே சமயம் அவளை நேரில் சந்திக்க அவன் திட்டமிட்டிருந்ததால் அவள் வராததை நினைத்துக் கவலை கொள்ளவில்லை. எனவே,

“யார் அழைச்சாலும் அக்கா தான் ஃபோன் எடுக்கறதில்லையே ம்மா..பெரியம்மா அழைப்பை கூட எடுக்கலையே..அப்புறம் எப்படி..” என்று பதில் சொன்ன ஷண்முகத்தை இடையிட்டு,

“இந்த மாதிரி ஆனதில்லை சாமி..அவளோட நான் பேசி நிறைய நாளாகிடுச்சு..நவ ராத்திரிக்குப் பிறகு பேசவேயில்லை..உனக்கு கல்யாணம் கூடி வந்ததை கூட மெஸேஜா தான் போட்டு விட்டேன்..பத்திரிக்கையையும் அப்படி தானே என்னோட ஃபோன்லேர்ந்து நீ அனுப்பி விட்ட..எப்படியும் இன்னைக்கு வந்திடுவா என்ன ஏதுன்னு விசாரிக்கலாம்னு நினைச்சேன் சாமி..’என்னைப் போல இரயில்லே வந்து கஷ்டபட அவளுக்கு என்ன தலையெழுத்து..கடைசி நிமிஷத்திலே கார்லே வந்து பந்தா காட்டணுமில்லே.’ நு ஜெயந்தி கூட பொறாமையா சொன்ன போது அப்படியாவது உன் கல்யாணத்துக்கு வந்தா நல்லா இருக்கும்னு முகூர்த்த நேரம் முடியறவரை காத்திருந்தேன் சாமி..பிள்ளை வரவேயில்லை..

அவளோட நாத்தனாருக்கு உடம்பு சரியில்லைன்னா ஒரு நாள் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாதா? ஓர் ஆள் போட்டிட்டு வந்திருக்கலாமே..இப்படி வராம இருப்பான்னு நான் நினைக்கலை சாமி..வேற என்ன காரணம் இருக்கும்னு காலைலேர்ந்து யோசிச்சு யோசிச்சு பிள்ளைக்கு தான் சுகமில்லையா அதனால் தான் வரலையான்னு கவலையா இருக்குது சாமி..அவ சென்னைலே இருந்திருந்தா இன்னைக்கு இராத்திரியே நேர்லே போய் பார்த்திருப்பேன்..அவளைப் பார்க்க அண்ணனைக் கூட்டிட்டு போக முடியாது..அண்ணிக்குப் பிடிக்காது..ஏன் அழைச்சிட்டுப் போனேன்னு அக்காவே சண்டை பிடிக்கும்..பிரகாஷைக் கேட்டேன்..லீவ் கிடைக்காதுன்னு சொல்றான்..இவ்வளவு தூரம் வந்திட்டு அவளைப் பார்க்காம போக மனசு வரலை சாமி.” என்றார் விஜயா.

சில நொடிகளுக்கு மேல் அமைதியாக இருந்தவன், இறுதியில்,”நான் பார்த்தா உங்க மனசு ஏத்துக்கும் தானே?” என்று கேட்டான் ஷண்முகம்.

“எப்போ சாமி?” என்று கேட்டார் விஜயா.

அதே சமயம், வீட்டினுள்ளே, சினேகாவிடம்,”நாளைக்கு எப்போ கிளம்பறீங்க?’ என்று விசாரித்தார் மதியழகி.

“தெரியலை மாமி.” என்றாள் சினேகா.

“எப்படிப் போகப் போறீங்க?” என்று கேட்க,

அதற்கும்,”தெரியாது.” என்றாள்.

கடைசியாக, கேட்க வேண்டாமென்று நினைத்தாலும் அவரைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல்,“தேன்நிலவுக்கு எங்கே போறீங்க?” என்று கேட்டார் மதியழகி.

 

*********

2024 ல நிறைய நிறைய மாற்றங்கள். கடவுள் தான் கையைப் பிடிச்சு கடக்க வைச்சிருக்கார். அப்படியே கதையையும் எழுத வைச்சிருக்கலாம். அது பேராசைன்நு  நடக்கறபடி நடக்கட்டும்னு அவர்கிட்டேயே விட்டிட்டேன். இந்த ஒரு வருஷம் இந்தக் கதை தான் போயிட்டு இருக்கு. கிண்டிலே ஒரு கதையும் போடாமல் அது இதை விட மோசமா போயிட்டு இருக்கு. அடுத்த வருஷம் பற்றி எந்த எதிர்பார்ப்பும் வைச்சுக்கலை. எது நடக்கணுமோ நடக்கட்டுங்கற எண்ணம் தான் இப்போதைக்கு என்னை செயல்பட வைச்சிட்டு இருக்கு. பத்து பதிவுகள்லே கதையை முடிக்கணும்னு நினைக்கறேன். எப்போன்னு மட்டும்  கேட்டுடாதீங்க..என்கிட்டே பதில் இல்லை.

Thanks for the support readers. புத்தாண்டு வாழ்த்துக்கள். Stay blessed.