அத்தியாயம் – 47-1

கணவருக்கு காலை உணவு பரிமாறியபடி,“என்ன டா இன்னைக்கு ஆபிஸ் போகலையா? வீட்லேர்ந்து வேலை செய்யப் போறேயா?” என்று கேட்டார் சீதா.

வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்த வெங்கடேஷிடமிருந்து பதில் வரவில்லை. ஏதோ யோசனையில் பால்கனியைப் பார்த்துக் கொண்டிருந்தான். ராதிகாவின் அறையிலிருந்து குழந்தைகளின் சத்தம், அவளின் அதட்டல் என்று காலை நேரப் பரபரப்பில் வீடு இருக்க அவருடைய மகன் அமைதியாக அமர்ந்திருந்தது சீதாவை என்னவோ செய்ய, மெதுவாக வந்து மகனருகே அமர்ந்து,”என்ன டா விஷயம்? காலைலே ஏன் இப்படி டல்லா இருக்க?” என்று விசாரித்தார்.

அதுவரை காத்து வந்த அமைதியை பால்கனி வழியாக வெளியே எறிந்து விட்டு,“காரணம் தெரியாத மாதிரி புதுசா விசாரிக்கறீங்க?” என்று சீதாவிடம் எரிந்து விழுந்தான் வெங்கடேஷ்.

அதில் வருத்தமடையாமல்,“எல்லாம் தெரிஞ்சு தான் டா கேட்கறேன்..இப்போ புதுசா என்ன ஆகிடுச்சு?” என்று கேட்டார்.

ஒருவாறாக அவனது மனத்தை அமைதிப்படுத்திக் கொண்டு,“இன்னைக்கு ஷண்முகவேலுக்கு கல்யாணம் ம்மா.” என்றான் வெங்கடேஷ்.

அந்தச் செய்தி சீதாவின் மனத்தில் கலக்கத்தை ஏற்படுத்த,”என்ன டா சொல்ற? எப்படி டா உனக்குத் தெரியும்?” என்று கேட்க,

“அவளோட ஃபோன்லே பத்திரிக்கை அனுப்பி விட்டிருந்தாங்க விஜயா அத்தை.” என்றான் வெங்கடேஷ்.

“நிஜமாவா டா சொல்ற? அந்தப் போலீஸ்காரனுக்கு பொண்ணு கிடைச்சிடுச்சா?” என்று சீதா திகைப்படைய,

“ம்ம்.” என்றான் வெங்கடேஷ்.

“நல்லவேளை சென்னைக்குப் போகறதைத் தள்ளிப் போட்ட..இல்லைன்னா இந்த நேரத்திலே நாம சென்னைலே இருந்திருந்தா எல்லாம் நம்ம கையை மீறிப் போயிருக்கும்.” என்றார் சீதா.

அதற்கு வெங்கடேஷிடம் எதிர்வினை இல்லை. அப்போது இவர்களின் உரையாடலைக் கேட்டபடி காலை டிஃபனை உண்டு கொண்டிருந்த வெங்கடேஷின் தந்தை,

“டேய்…என்னடா இது நாம நினைச்சது ஒண்ணு இப்போ நடந்திட்டு இருக்கறது ஒண்ணு..கல்யாணத்துக்கு ஏன் வசந்தி வரலைன்னு கேட்டிருப்பாங்களே..என்ன டா பதில் போட்ட?” என்று கேட்டார்.

அதற்கு என்ன பதில் போடுவதென்றே தெரியவில்லை வெங்கடேஷிற்கு.  அதைவிட அவனது திட்டமிடலில் ஷண்முகவேலைக் கணக்கில் சேர்த்திருக்கவில்லை. சட்டப்படி விவாகரத்து நடக்கப் போவதால் போலீஸ்க்காரனைப் பற்றி யோசிக்கவேயில்லை. வசந்தியின் மருத்துவச் செலவு ரசீதுகள் அனைத்தையும் ஒரு கோப்பில் போட்டு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். பணம் பற்றிய கேள்வி வந்தால் அந்தக் கணக்குகளைக் காட்டி அவள் வீட்டினரின் வாயை அடைத்து விடலாமென்று முடிவு செய்திருந்தான். ஆனால் இப்போது மீதி பணம் கிடைத்த பின் இந்த நிலையில் இருக்கும் வசந்தியை எப்படிக் கையாள்வதென்று அவனுக்குப் புரியவில்லை. 

அவனது திருமண வாழ்க்கையைப் பற்றி பலமுறை பலவிதமாக பலதையும் யோசித்து பிளான் A, பிளான் B, பிளான் C என்று அனைத்து சூழ்நிலைகளுக்கும் தகுந்த மாதிரி திட்டங்களை வகுத்து வைத்திருந்தவன் இப்படி பெங்களூரில் தலைமறைவாக இருக்கப் போகிறானென்று ஒருபோதும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது திடீரென்று ஷண்முகவேல் அவனது வாழ்க்கையில் தலை காட்டியிருக்கிறான். 

ஜெயந்தியின் வாழ்க்கை போல் அவர்கள் வாழ்க்கையில் அவனுடைய பங்களிப்பு என்று முக்கியமாக எதுவும் இருக்கவில்லை. குடும்ப விசேஷங்களில் சந்தித்த போது ஒன்றிரண்டு வார்த்தைகள், நலன் விசாரிப்புகளோடு அவர்கள் உரையாடல் முடிந்து விடும். விஜயா அத்தை தில்லி சென்ற பின் அவரோடும் ஷண்முகத்தோடும் வசந்தி தொடர்ந்து தொடர்பில் இருந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அதை வெளிக் காட்டி அவனது திட்டத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.

அவனும் வசந்தியும் திருமணப் பந்தத்தில் இணைந்ததிலிருந்து அவனது கட்டைவிரலின் கீழ் தான் அவளை வைத்திருந்தான். வெகு சில சமயங்களில் அவனது பிடி தளரும் போது அவர்கள் வீட்டு விஷயம் அவள் வீட்டிற்கு சென்றாலும் அவன் மீது தவறு இருந்திருந்தாலும் அவனது அந்தஸ்து அவர்களைக் கேள்வி கேட்க விட்டதில்லை. அவளது பிறந்த வீட்டினரின் உதவியை எதற்கும் அவன் எதிர்பார்த்ததில்லை. அதற்கு நேர்மாறாக ஜெயந்தியின் கணவன் ரங்கநாதன் அனைத்திற்கும் மாமனாரிடம் தான் கை நீட்டிக் கொண்டிருந்தான். எனவே, மாப்பிள்ளைகளில் அவன் தான் உசத்தி என்ற கர்வத்தில் இருந்தவனை சிந்துவின் திருமணமும் அவனின் அம்மாவின் புலம்பல்களும் முழுக் கிறுக்கனாக்கி இருந்தது. 

‘அவங்க மேலே குத்தமில்லை..நம்ம மேலே தான் தப்பு இருக்குது..கல்யாணமாகி இரண்டு வருஷத்திலேயே குழந்தையில்லைன்னு காரணம் சொல்லி அவளை விரட்டி விடறேன்னு மிரட்டி இருக்கணும்..அவங்க பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு வேணும்னு நினைச்சு அவங்களே பொறுப்பேத்துக்கிட்டு எல்லாச் செலவையும் பார்த்திருப்பாங்க….நீயே செலவு செய்து வைத்தியம் பார்த்தது நம்ம வீட்டு வாரிசுக்குன்னு நினைச்சு ஒதுங்கி இருந்திட்டாங்க..இப்போவும் ஒண்ணும் சரி செய்ய முடியாத அளவுக்கு மாறிப் போயிடலை..உனக்கு முப்பத்தாறு வயசு தான் ஆகுது..உன்னோட படிப்பு, வேலை, அந்தஸ்த்துக்கு கண்டிப்பா பொண்ணு கிடைக்கும்..ஒரு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து ஜாதக்தோட இணைச்சிடுவோம்…இனியும் இவளோட உன் வாழ்க்கையை வீணடிச்சுக்காதே.’ என்று மகனிற்கு போதனை செய்தார் சீதா.

“நீ சொல்றது உண்மை ம்மா..பேரனைக் காட்டி ஜெயந்தி புருஷன் எவ்வளவு கறந்திட்டு இருக்கான்..இப்போ வந்தவன் பிள்ளை பிறக்கறத்துக்கு முன்னாடியே இவங்ககிட்டே கறக்க ஆரம்பிச்சிட்டான்..நான் தான் இத்தனை வருஷமா என் பணத்தை போட்டு வளுக்கு வைத்தியம் பார்த்து முட்டாளா இருந்திருக்கேன்..இனியும் இருக்கப் போகறதில்லை..இவளுக்கு செலவு செய்ததைக் கறந்திட்டு தான் விவாகரத்து கொடுக்கப் போறேன்.” என்றான் வெங்கடேஷ்.

“நீ எப்படிக் கேட்டாலும் பணம் இல்லைன்னு தான் அழுவான் அவளோட அப்பன்.” என்றார் சீதா.

“அப்போ பணம் கொடுக்கறவரை அவளை உங்க வீட்லேயே வைச்சுக்கோங்கண்ணு அனுப்பி விட்டிடுவேன்..கட்டிக் கொடுத்த பொண்ணு வீட்டோட வந்திட்டா அவருக்கு தானே அவமானம்.. அதனாலே எப்படியாவது பணத்தைப் புரட்டிக் கொடுக்கறேன்னு தான் சொல்லுவார்.” என்றான் வெங்கடேஷ்.

உடனே,”பணத்தைக் கொடுத்திட்டா அவளை நீ வைச்சுக்குவேயா?” என்று கேட்க,

“என்னை இளிச்சவாயன் ஆக்கின அவ அப்பனை நான் இளிச்சவாயன் ஆக்க வேணாமா..பணத்தை வாங்கிட்டு அவளை அனுப்பி வைச்சிடுவேன்.” என்று பதிலளித்தான் வெங்கடேஷ். அதிலிருந்து இத்தனை காலமாக அவனது வீட்டில் மனைவியாக வசித்து வந்த வசந்தி என்ற பெண் அவனது மனத்தில் வாசம் செய்யவில்லை என்று தெளிவானது சீதாவிற்கு.

வெங்கடேஷ் வாயைத் திறந்து கேட்காததினால் அவனுக்குப் பண உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணமே சபாபதிக்கு தோன்றவில்லை. ஜெயந்தியின் மகன் சித்துவிற்காக சில லட்சங்கள் செலவு செய்த போது வசந்தியின் கையில் சில ஆயிரமாவது சபாபதி கொடுத்திருந்தால் வெங்கடேஷ் இத்தனை விகாரமாக யோசித்திருக்க மாட்டான். சிந்துவிற்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்த போது எப்படித் திருமணத்தை நடத்த நிதி திரட்டப் போகிறாரென்று வெங்கடேஷிடமாவது பகிர்ந்து கொண்டு இருக்கலாம். விஜயாவின் பணம் தான் என்றாலும் எத்தனை, எப்படி, எப்போது அதை எப்படித் திருப்பிக் கொடுக்கிறார் என்று அவரது வரவு, செலவு, கடன் பற்றி கோடிட்டுக் காட்டியிருக்கலாம். அவரிடமிருந்து பண உதவி எடுத்துக் கொள்ளும் ஜெயந்தியின் கணவனையும் ஒரு பைசா கூட வாங்காமல் கண்ணியமாக நடந்து கொள்ளும் வெங்கடேஷையும் ஒரே தராசில் வைத்து அவனை உசுப்பி விட்ட சபாபதிக்கு தெரியவில்லை மகளின் மணவிலக்கிற்கு அடித்தளம் போட்டு விட்டாரென்று.

வசந்தியுடனான திருமணத்தை முறித்துக் கொள்ள மகன் சுலபமாக சம்மதிக்க விரைவாக மகனிற்கு புது வாழ்க்கை அமைத்துக் கொடுத்து அவனது வாரிசை கையில் ஏந்த பேரவா ஏற்பட்டது சீதாவிற்கு. அதன் முதல்படியாக மகனின் திருமண வாழ்க்கை ஆரம்பமான அந்த ஃபிளாட்டை விற்க முடிவு எடுத்தார். அடுத்த கட்டமாக பெங்களூரில் இருக்கும் மகள் ராதிகா மூலம் மகனிற்கு ஏற்ற வரன்களைத் தேட ஆரம்பித்தார். 

இனிமேல் எந்த சிகிச்சைக்கும் ஆளாக முடியாதென்று வசந்தி மறுத்த போது அவளது முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக ஏற்றுக் கொண்டான் வெங்கடேஷ். அந்த முடிவைக் கேட்டவுடன்  ‘செலவு மிச்சம்’ என்ற எண்ணம் தான் அவனுக்கு வந்தது. ஆனால் ராதிகாவின் குழந்தைகளுக்கு பணத்தை வாரி இறைத்த போது, சிந்து குழந்தை உண்டான போது வாரிசின் அவசியத்தை உணர்ந்தான் வெங்கடேஷ். அதை உணர்ந்த சீதா அந்தக் காரணத்தை தான் திரும்ப திரும்ப மந்திரம் போல் வாசித்து மகனின் மனத்தை மாற்றினார்.  வசந்தி மூலம் நிறைவேற வாய்ப்பில்லை என்று முடிவான பிறகு வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொள்வது வெங்கடேஷிற்குத் தவறாகப்படவில்லை. அவனைப் போல் ஒரு முடிவை வசந்தி எடுத்திருந்தால்? என்ற கேள்வியே அவனுக்கு வரவில்லை. வெங்கடேஷிற்கு மட்டுமில்லை பெரும்பாலான ஆண்களுக்கு அந்தக் கேள்வி வருவதில்லை. 

அவனுடைய வாழ்க்கை, வாரிசு, எதிர்காலம் என்று அவனது சிந்தனைகள் அனைத்தும் அவனைச் சுற்றி மட்டும் இருக்க அந்த வட்டத்தில் ஒரே கட்டிலைப் பகிர்ந்து கொண்ட வசந்தியே வராத போது எங்கேயிருந்து ஷண்முகவேல் வர முடியும்? அவனுடைய திருமணப் பத்திரிக்கை மூலம் தான் உள்ளே நுழைந்தான் ஷண்முகம். போலீஸ்க்காரனால் அவனுடைய மணவிலக்கு விஷயத்தில் ஏதாவது பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி வந்தது வெங்கடேஷிற்கு. அதை வீட்டினரிடம் பகிர்ந்து கொண்டு அவர்களை அச்சப்படுத்த விரும்பவில்லை.’எல்லாம் சட்டப்படி நடக்கப் போகுது..போலீஸ்காரனே நினைச்சாலும் எதுவும் செய்ய முடியாது.’ என்று அந்தக் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டான்.