பெரிய திடல் ஒன்றில் அமைத்திருந்த பந்தலில் ஜோதியோடு அமர்ந்திருந்தார் விஜயா. இரவு எட்டு மணிக்கு ஜேஜே என்று மக்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது அந்த இடம். பந்தலைச் சுற்றியும் அதன் உள்ளேயும் செய்திருந்த மின்விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரந்தன. நாற்காலி, மேஜை கூட அழகான, சரி பார்டர் உடை அணிந்திருந்ததைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் விஜயா.
அப்போது அவர்களருகே வந்த ஷிக்கா, அவள் இடுப்பில் இருந்த மாண்ட்டியை மாமியாரின் மடியில் அமர வைத்து விட்டு,”இன்னும் இரண்டு பாட்டு தான்..அம்மா வந்திடுவேன்.” என்று மாண்ட்டியிடம் சொல்லி விட்டுச் சென்றாள்.
பாட்டியின் மடியிலிருந்து எழுந்து நின்று அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டு அவனுடைய அம்மா சென்ற திசையைப் பார்த்து கை காட்டி அழுதான் மாண்ட்டி.
“ஏன் டா அழற? உங்கம்மா உன்கிட்டே சொல்லிட்டு தானே போயிருக்கா.” என்று பேரனை ஓர் அதட்டல் போட்டார் ஜோதி. வார்த்தைகள் புரியா விட்டாலும் அந்தத் தொனியில் சட்டென்று அமைதியாகிப் போனான் மாண்ட்டி.
இரண்டு வயது ஆகியிருந்தாலும் இன்னும் சரியாக பேச்சு வரவில்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள் தான் அவனுக்குத் தெரியும். புரியும். அப்பா, அம்மா இருவரும் மாறி மாறி வெவ்வேறு மொழிகளில் உரையாடி அவனது மூளையைக் குழப்பி இருந்தனர். பெற்றோர் தவிர அவனைச் சுற்றியிருக்கும் சுற்றமும் அவனிடம் பல மொழிகளில் பேசி அவனை ஊமையாக்கி இருந்தனர். இப்போது ஜோதி அவனை அதட்டியது தமிழில். அவனுக்குப் பரிச்சியமில்லாத மொழி. மனோவுடன் அவர் தமிழில் பேசினாலும் பேரனோடு ஹிந்தியில் தான் உரையாடுவார். ஏதாவது ஒரு மொழியில் அவனிடம் பேசினால் தான் அவனுக்குப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்குமென்று சமீபத்தில் தான் குடும்பத்தினர் அனைவரும் அவனோடு ஹிந்தியில் உரையாட ஆரம்பித்திருந்தனர். இப்போது ஜோதி செய்ததை போல் ஷிக்காவின் வீட்டில் அவனிடம் பஞ்சாபியில் பேசி விடுகின்றனர். எனவே அழுகை, சிரிப்பிற்கு மட்டும் வாயை உபயோகித்தான் மாண்ட்டி.
”நீங்க திட்டினதுலே பிள்ளை பயந்து போய் அமைதியாகிட்டான்.” என்றார் விஜயா.
மாண்ட்டியை இறுக அணைத்து,”பாட்டி திட்டினதுலே பயந்திட்டேயா டா?” என்று அவனிடம் கேட்க, அந்தக் கேள்வி புரிந்தது போல்,’இல்லை’ என்று தலையசைத்து பதிலுக்கு அவரை அணைத்துக் கொண்டான் மாண்ட்டி.
அப்படியே மடியை முன்னும் பின்னுமாக லேசாக ஆட்ட ஆரம்பித்தவுடன் ஜோதியைப் பார்த்து சிரித்த மாண்ட்டி வேகமாக ஆட்டும்படி அவரிடம் சைகை செய்தான். அவன் விரும்பியது போல் செய்தவர்,
“இன்னைக்கு இவனை என்கிட்டே விட்டிட்டு இங்கே வர்ற பிளான் செய்திருந்தா ஷிக்கா..நாங்க உங்களோட வர்றதா பிளான் போட்டிருக்கோம், மாத்திக்க முடியாதுன்னு சினேகா சொல்லிட்டா..அப்புறம் தான் அவங்க அண்ணன்கிட்டே சொல்லி வண்டி வரவழைச்சா..இன்னும் இரண்டு பாட்டுன்னு என்கிட்டே சொன்னா வேணாம்னு சொல்லுவேன்னு தெரியும் அதான் இந்தப் பெரிய மனுஷன்கிட்டே சொல்லிட்டுப் போறா…தினமும் ஒவ்வொரு இடமாப் போய் டான்ஸ் ஆடிட்டு தானே இருக்கா..இன்னைக்கு ஒரு நாள் ஆடலைன்னா என்ன ஆகிடும்..பிள்ளை ஒரு மாதிரி இருக்கான்னு தான் அவனை பார்த்துக்க ஒதுக்கிட்டேன்.. இவன் அம்மா இவனையும் இழுதிட்டு வந்திட்டா..இன்னைக்கு வீட்லே இருன்னு சொன்னதை காதிலே போட்டுக்கவே இல்லை..இந்த டான்ஸ்லே அப்படி என்ன தான் இருக்குதோ.” என்று அவரது ஆதங்கத்தைக் கொட்டினார் ஜோதி.
சில வாரங்களிலேயே ஜோதிக்கும் விஜயாவிற்கும் இடையே நல்ல நட்பு உருவாகியிருந்தது. கைப்பேசி அழைப்புகள் மூலம் தனிமை என்னும் சிறையிலிருந்து விஜயாவை மீட்டெடுத்திருந்தார் ஜோதி. தினமும் ஒருமுறையாவது விஜயாவோடு கைப்பேசியில் உரையாடுவதை வழக்கமாகி இருந்தார். அளவு இரவிக்கைக்கு ஆள் அனுப்பாமல் விஜ்யாவின் வீட்டிற்கு ஜோதியே நேரில் சென்றவுடன் நெகிழ்ந்து போய் விட்டார் விஜயா.
ஜெயந்தி, வசந்தி இருவரின் விருப்பத்தை தெரிவித்தவுடன் விஜயாவை தன்னுடன் கடைக்கு அழைத்துச் சென்று ஷிக்காவிடம் சொல்லி அவர்களுக்கு தெரிந்த கடையிலிருந்து ரெடிமெட் பிளவுஸ் கேட்லாக் வரவழைத்து கொடுத்தார். அங்கேயிருந்தே ஜெயந்தி, வசந்திக்கு அழைப்பு விடுத்தார் விஜயா. எப்போதும் போல் அவரது அழைப்பை வசந்தி ஏற்கவில்லை. அவளின் நிலையை ஜோதியிடம் விஜயா பகிர்ந்து கொள்ள,’கொண்டவன் சரியா இருந்தா வானம் ஏறி வைகுண்டமே போயிடலாம்..அவன் சரியில்லைன்ன அவன் வைகுண்டம் போன பிறகும் அவனாலே அல்லாடிட்டு தான் இருக்கணும்..என்னைப் போல” என்று அவரது வாழ்க்கைச் சரித்திரத்தை விஜயாவோடு பகிர்ந்து கொண்டார் ஜோதி. அப்படியே விஜயாவும் அவரின் கதையைப் பகிர்ந்து கொள்ள இறுதியில் அவர்களது உரையாடல் அவர்களின் பிள்ளைகளிடம் வந்து நின்றது.
“புதுசா ஓர் இடத்திலே சினேகாவோட ஜாதகத்தை பதிச்சு வைச்சிட்டு வந்திருக்கேன்..இரண்டு மூணு வரன் ஒத்து வர்ற மாதிரி இருக்கு..பெண் பார்க்க வரும் போது நீங்களும் இருந்தா எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும் விஜயாம்மா.” என்று திடீரென்று ஒரு கோரிக்கை வைத்தார் ஜோதி.
“நானா?” என்று விஜயா தயங்க,
“உங்களுக்கு தான் என்னோட கதை தெரியுமே..மச்சினர் உறவு விட்டுப் போய் வருஷமாகிடுச்சு..அண்ணன், தம்பி உறவு அந்தரத்திலே ஊசலாடிட்டு இருக்கு..கல்யாணம்னு அழைப்பிதழ் வைச்சா எல்லோரும் தலையைக் காட்டுவாங்க..வேறு எதையும் அவங்ககிட்டே எதிர்பார்க்க முடியாது..உங்க அக்காவோட மகள்கள் கல்யாணம், அண்ணனோட மகன் கல்யாணம்னு உங்க வீட்லே நீங்க நிறைய கல்யாணத்தைப் பார்த்திருக்கீங்க..அதான்.” என்று இழுத்தார் ஜோதி.
இன்னும் எத்தனை நாள்கள் இங்கே இருக்கப் போகிறாரென்று நிச்சயமாக தெரியாத போது ஜோதிக்கு உத்தரவாதம் கொடுக்க விஜயாவிற்கு தயக்கமாக இருந்தது. அப்போது ஜோதியிடம் ஷிக்கா ஏதோ கேட்க, பதில் கொடுக்காமல் தப்பித்துக் கொண்டார் விஜயா.
இப்போது, சிறிது தூரத்தில், பெண்கள் கூட்டத்தில், ஷிக்காவுடன் சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்த சினேகாவைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயாவின் மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது.
“இந்தப் பக்கத்திலே இந்த மாதிரி கொண்டாட்டத்திலே பெண் பார்க்கறது கூட நடக்கும்..இந்த ஒன்பது நாளும் எங்கே போனாலும் சின்ன பொண்ணுங்க கூட்டம் தான் அதிகமா இருக்கும்..இந்த ஏரியாலேயே கிட்டதட்ட அஞ்சு இடத்திலே நவராத்திரி விழா நடக்குது..எல்லா இடத்துக்கும் தினமும் போறவங்க இருக்காங்க..நாங்க இந்த ஓர் இடத்துக்கு தான் வருவோம்..அதான் உங்களையும் அழைச்சிட்டு வந்தேன்..சினேகாக்கு இதெல்லாம் பிடிக்கும் ஆனா ஷிக்கா மாதிரி பைத்தியம் கிடையாது..ஏதாவது ஒரு நாள் தான் கலந்துக்குவா..கொஞ்சம் நேரம் டான்ஸ் ஆடுவா..தெரிஞ்சவங்களுக்கு வாழ்த்து சொல்லிட்டு, ஆர்த்தி பார்த்திட்டு பிரசாதம் சாப்டிட்டு வீட்டுக்குப் போயிடுவோம்..சில சமயம் சினேகிதங்களோட ராம் லீலா மைதானத்துக்கு போவா..வேலைக்குப் போக ஆரம்பிச்சதிலிருந்து நேரம் கிடைக்கறதில்லை..இப்போ இரண்டு வேலை செய்யறதுனாலே டைமே இல்லாம டைட்டா போயிட்டு இருக்கு அவளுக்கு..இன்னைக்கு கூட ‘வர முடியாது ம்மான்னு’ தான் சொன்னா..அப்புறம் எப்படியோ அனுமதி வாங்கிட்டு வந்திட்டா..வந்தது வந்தா ஒரு புடவையைக் கட்டிட்டு வந்திருக்கலாம்..லெஹங்காவை போட்டிட்டு வந்திருக்கா.” என்று விஜயாவின் எதிர்வினையை எதிர்பார்க்காமல் அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தார் ஜோதி.
பிஸ்தா பச்சை நிற லெஹங்கா, பிங்க நிற சோளி, பச்சை நிறப் பட்டு நூல் அணிகலன்கள் என்று அனைத்துமே சினேகாவுக்கு வெகு பொருத்தமாக இருந்தது. ஜோதிக்காக சின்னதாக நெற்றியில் ஒரு பொட்டு வைத்திருந்தாள். மற்றபடி முகத்திற்கு எந்த அரிதாரமும் பூசிக் கொள்ளவில்லை. தலைக்கு குளித்திருந்ததால் கூந்தலை விரித்து விட்டிருந்தாள். பெரிய புன்னகையை முகத்தில் அணிந்து நளினத்துடன் நடனமாடி கொண்டிருந்தவள் அவளை அறியாமல் விஜயாவின் கவனத்தை ஈர்த்திருந்தாள். இந்த ப்ரோகராமை செயல்படுத்த அவள் பட்டபாடு அவளுக்கு மட்டும் தான் தெரியுமென்பதால் முழுமூச்சாக ஆடல், பாடலை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
இந்த இடத்திற்கு ஆட்டோவில் வரத் தான்திட்டமிட்டிருந்தார் ஜோதி. அதாவது விஜயாவின் வீட்டிற்கு சென்று அவரையும் அழைத்துக் கொண்டு இங்கே வருவதாக இருந்தது. திடீரென்று மாண்ட்டியின் பொறுப்பை மாமியாரிடம் ஷிக்கா ஒப்படைக்க, விஜயாம்மாவை அழைத்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு போக இருப்பதால் முடியாதென்று ஜோதி மறுக்க, அடுத்த நாள் மனோவிற்கு விடுமுறை என்பதா அவனே அவர்களை அழைத்து செல்வான் என்று அவள் வாக்குறுதி கொடுக்க, வேறு வழியில்லாமல் அவரது திட்டத்தை கை விட்டு மாண்ட்டியோடு வீட்டில் இருக்க முடிவு செய்தார் ஜோதி. அதை மகளுக்கு தெரிவிக்க அவளது கைப்பேசிக்கு அழைப்பு விடுக்க, இணைப்பு கிடைக்கவில்லை. காலையில் மகள் செய்த எச்சரிக்கை செவியில் ஒலித்துக் கொண்டிருந்ததால் நெஞ்சம் படபடத்தது கொண்டிருந்தது.
‘விஜயாம்மா அவங்க மகன்கிட்டே அனுமதி வாங்கியிருக்காங்க..நம்மை தான் நம்பி வர்றாங்க..ஜாக்கிரதையா அழைச்சிட்டுப் போயிட்டு கூட்டிட்டு வரேன்னு உன்னை நம்பி தான் அந்தப் பையனுக்கு வாக்கு கொடுத்தேன்..சப்தமி அன்னைக்கு வருஷா வருஷம் போகறதுதானே.. உன்னாலே வர முடியாதுன்னு இப்போ சொல்ற.’ என்று விழாவிற்கு வரமுடியாது என்று சொன்ன மகளிடம் மகளிடம் கோபத்தை காட்ட, ‘போன வருஷம் மாதிரியா இந்த வருஷம் என் வேலை போயிட்டு இருக்கு..என்னைக் கேட்காம உங்களை யார் இந்த மாதிரி வாக்குறுதி கொடுக்க சொன்னாங்க?’ என்று பதிலுக்கு எகிறுவாள் என்று அவர் எதிர்பார்க்க,’அவங்ககிட்டேயா பேசுனீங்க?’ என்று சினேகா ஆச்சர்யப்பட,’ஆமாம்..நேத்து விஜயாம்மா அனுமதி கேட்ட போது நான் அங்கே தானே இருந்தேன்..ஸ்பீக்கர்லே போடுங்க நானே பேசுறேன்னு நான் தான் சொன்னேன்..போட்டாங்க..பேசினேன்..சரி ஆன் ட்டின்னு அந்தப் பையன் ஒப்புதல் கொடுத்திச்சு..எத்தனை முறை அவங்க வீட்டுக்குப் போயிட்டேன்..ஒருமுறை ஷர்மாவைக் கூட அங்கே பார்த்தேன் ஆனா அந்தப் பையனை பார்க்கவே முடியலை..எதுனாலும் அவங்களுக்கு உதவியா இருக்கறது ஷர்மா தா..பையன் எப்போ வீட்டுக்கு வர்றான் போறான்னு விஜயாம்மாக்கு கூட தெரிய மாட்டேங்குது..முக்கியமான பதவிலே இருக்காராம்.’ என்று ஷண்முகத்தைப் பற்றி பயத்தோடு பேசினார்.
அதற்கு,’அதான் வருஷா வருஷம் போறோமே இந்த வருஷம் போக முடியலைன்னா என்ன அடுத்த வருஷம் பார்த்துக்கலாம் நினைச்சேன்..நேத்து நைட்டே இந்த மாதிரி ஆன் ட்டியோடு சேர்ந்து போறோம்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா பாஸ் காதிலே போட்டு வைச்சிருப்பேன்..சரி..எப்படியாவது பர்மிஷன் வாங்கறேன்..நீங்க தயாரா இருங்க..நான்வந்து ரெடியானதும் ஆட்டோவிலே ஆன்ட்டி வீட்டுக்குப் போயிட்டு அவங்களையும் அழைச்சிட்டு நேரா விழா திடலுக்குப் போயிடலாம்…இதிலே எந்தக் குழப்பமும் வரக் கூடாது.’ என்று எச்சரிக்கை செய்து விட்டு கிளம்பிச் சென்றிருந்தாள்.
ஜோதியிடம் சொன்னது போலவே கெஞ்சி கூத்தாடி அனுமதி பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்த சினேகாவிற்கு ஷிக்கா செய்த சொதப்பல் கோவத்தை ஏற்படுத்த, ‘மாண்ட்டியை அம்மானாலே பார்த்துக்க முடியாது…நாங்க இரண்டு பேரும் விஜயா ஆன்ட்டி வீட்டுக்குப் போயிட்டு அவங்களையும் எங்களோட் அழைச்சிட்டுப் போகறதா ப்ரோகரம் போட்டிட்டோம்.” என்று தகவல் சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
அதன் பிறகு அவளோடு பேச சினேகா தயாராகயில்லை. விழாவிற்கு தயாராக சென்று விட்டாள். மாமியாரிடம் பேசி அவரது மனத்தை மாற்றி வேறொரு திட்டத்திற்கு அவரை சம்மதிக்க வைத்தாள் மருமகள். விஜயா ஆன்ட்டி முக்கியமான வாடிக்கையாளர் என்பதால் அவரையும் அவளுடைய மாற்றுத் திட்டத்தில் சேர்ந்துக் கொண்டாள். அவள் ஏற்பாடு செய்திருந்த வண்டியில் தான் அவர்கள் அனைவரும் விஜயாவின் வீட்டிற்கு சென்று சில மணித்துளிகள் அங்கே செலவழித்து விட்டு விழா அரங்கிற்கு வந்திருந்தனர்.
அவர் வீட்டில் சினேகா காலடி வைத்ததிலிருந்து விஜயாவின் கண்ணும் மனதும் அவளைத் தான் வட்டமடித்துக் கொண்டிருந்தது. இப்போதும் விழி அகற்றாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவரின் மனத்தில் லேசாக மிக லேசாக ஓர் ஆசை துளிர்க்க, திடுக்கிட்டுப் போனவர் உடனடியாக அவரது பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டார்.