அத்தியாயம் – 20 – 1

அதில் தலையை உயர்த்திய பிரகாஷ், குற்றம் சாட்டும் அவளது பார்வையைச் சந்திக்க முடியாமல் உடனேயே பார்வையைத் தாழ்த்திக் கொள்ள,”அவன் போலீஸ்காரனில்லை கண்ணு.” என்று சொல்லி பிரகாஷிற்கு ஷாக் கொடுக்க, டக்கென்று தலையை உயர்த்தி அதை வெளிப்படுத்தினான் பிரகாஷ்.

அதற்கு சினேகா எதிர்வினை ஆற்றும் முன்,”அத்தை என்ன உளர்ற?” என்று ஏகவசனத்தில் அவரைக் கடிந்து கொண்டு அவரது சந்தேகத்தை உறுதி செய்தது. ‘என்ன நடந்திருக்கும்?’ என்று யோசித்தப் போது சினேகாவின் கைப்பேசி ஒலித்தது.

பேக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து அதை உயிர்ப்பித்தவள், அழைப்பை ஏற்று,”யெஸ்..யெஸ்..” என்று பலமுறை சொல்லி விட்டு, கடைசியில்,”ஓகே..அங்கே இருப்பேன்.” என்று அழைப்பைத் துண்டித்து, நடந்தவைகளை மனத்திலிருந்து துடைத்துப் போட்டு,”ஆன்ட்டி கார்டா? கேஷா? ஆறு செட்டுக்கு மூவாயிரத்தி அறுநூறு..அப்புறம் லெஹங்கா செட் நாலாயிரம்.” என்று வியாபார மோடிற்குச் சென்று விட்டாள்.

சினேகா பணத்தைப் பற்றி பேசவும், நல்லவேளை, மகனைப் பற்றிய உரையாடல் நீடிக்கவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்ட விஜயா, அவரது கைப்பையிலிருந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார். 

அதுவரை வேறு சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்த பிரகாஷ்,’அத்தை, லெஹங்காக்கு நான் கொடுக்கறேன்.” என்று அவனது பர்ஸ்ஸைத் திறந்து கார்ட்டை வெளியே எடுத்து நீட்ட, அதை வாங்கி அவரது கைப்பைக்குள் போட்டுக் கொண்டு விட்டார் விஜயா.

“அத்தை” என்று அவனது எதிர்ப்பை பிரகாஷ் தெரிவிக்க, விஜயா கண்டு கொள்ளவில்லை.

அவர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல், தீவிரமாக அவளது கைப்பேசியில் டைப் செய்தபடி, லெஹங்கா செட்டை ஒரு கவரினுள் போட்டு, மீதிப் பணத்தை அதன் மீது வைத்து, இரண்டையும் விஜயாவின் புறம் நகர்த்தி,“தாங்க்யு” என்றாள்.

அவரைத் தள்ளி நிறுத்திய அந்தச் செய்கையில் சங்கடமாக உணர்ந்த விஜயா, மகனின் உத்யோகத்தைப் பற்றி சொல்லாமல் எப்படி மகனைப் பற்றிய சினேகாவின் எண்ணத்தை மாற்றுவது அவனின் மரியாதையை மீட்பது என்று தெரியாமல், குழப்பமான மனநிலையில், அவளிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் அவருமே அமைதியாக கடையிலிருந்து வெளியேற, ‘போலீஸ்க்காரனை போலீஸ் இல்லை’ என்று விஜயா சொன்னது அவனைச் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் அவரை விட குழப்பமான மனநிலையில் இருந்த பிரகாஷும் அமைதியாக விஜயாவைப் பின் தொடர்ந்தான்.

கடையிலிருந்து காரை நோக்கி இருவரும் நடந்து கொண்டிருந்த போது,”பிரகாஷ், இதை நீ காருக்கு எடுத்திட்டுப் போ..இதோ வந்திடறேன்.” என்று கவர்களை அவன் கையில் திணித்து விட்டு, வேகமாக கடைக்குத் திரும்பிச் சென்றார் விஜயா.  ‘இப்போ எதுக்கு திரும்ப கடைக்குப் போறாங்க? அந்தப் பொண்ணு ஏதாவது ஏடாகூடமா அத்தைக்கிட்டே சொல்லி வைச்சிடிச்சுன்னா?’ என்ற அச்சத்தில் காருக்குப் போகாமல் அங்கேயே நின்று கொண்டான் பிரகாஷ்.

கடையின் கதவை விஜயா திறக்க, யாரென்று சினேகா தலையை நிமிர்த்திப் பார்க்க, உள்ளே வராமல், வெளியே இருந்தபடி,”கண்ணு, என் பையன் போலீஸ் தான் ஆனா நாம நினைக்கற போலீஸ் இல்லை..அவனைப் பற்றி ஷர்மாகிட்டே கேளு..நான் சொன்னதை தான் அவரும் சொல்வார்.” என்று சொல்லி விட்டு, சினேகாவின் பதிலை எதிர்பார்க்காமல் கதவை மூடிக் கொண்டு சென்று விட்டார்.

விஜயாவிற்காக காத்திருந்த பிரகாஷ் ஒரு முடிவிற்கு வந்திருந்தான். அவனருகே அவர் வந்ததும்,”அத்தை, அந்தப் பொண்ணு வேலுவை தப்பா புரிஞ்சிட்டு என்னென்னவோ பேசிடுச்சு..அவனோட வீடியோ கால்லே நான்  பேசிட்டு இருந்த போது அந்தப் பொண்ணு எதிர்லே நடந்து வந்திட்டு இருந்திச்சு..நம்ம ஊர் பொண்ணு இந்த ஊர்ப் பொண்ணுங்க மாதிரி பந்தவா டிரெஸ் போட்டிட்டு இருந்ததை ஆச்சரியமாப் பார்த்திட்டு இருந்தேன்..’எங்கேடா பார்த்திட்டு இருக்கேன்னு வேலு கேட்டான் அப்போ நான் தான்  கைப்பேசியோட பின்பக்கக் கேமரா மூலம் இந்தப் பொண்ணைக் காட்டினேன்..’கடை அவங்களோடது தான்..அதைத் திறக்க தான் வரான்னு’ சொல்லிட்டு அழைப்பை கட் பண்ணிட்டான்..நான் அந்தப் பொண்ணை அப்படிப் பார்த்திருக்கக் கூடாது..அதுதான் பிரச்சனைக்குக் காரணம்..நான் செய்தது தப்பு தான் அத்தை.” என்று பழியை ஏற்றுக் கொண்டான் பிரகாஷ்.

முதல்முறை சினேகாவைச் சந்தித்தப் போது அவர் கூட அப்படித் தானே அவளைப் பார்த்திருந்தார் என்பதால், அது தவறான செயல் என்று உணர்ந்திருந்ததால்,”நீ செய்தது தப்பு தான் பிரகாஷ்..ஏதோ இந்தப் பொண்ணு பேச்சோட விட்டிடுச்சு..அவ அண்ணனைக் கூப்பிட்டு பஞ்சாயத்து வைச்சிருந்தா நம்ம மானம் போயிருக்கும்..இனி எந்தப் பொண்ணையும் இப்படிப் பார்க்காத..ஏதாவது ரசாபாசம் ஆகி நித்யாவுக்கு தெரிய வந்தா உன் வாழ்க்கை என்ன ஆகும்னு யோசிச்சு பார்..மனைவி இருக்கும் போது..” என்ற விஜயா வாக்கியத்தை முடிக்கும் முன்,

“அத்தை நான் அந்த மாதிரி ஆளா?” என்று கோபத்துடன் கேட்டான் பிரகாஷ்.

“இல்லை தான்..நீ நான் வளர்த்த பிள்ளை..இன்னொருத்தன் நான் பெத்த பிள்ளை..நீங்க இரண்டு பேருமே அந்த மாதிரி கிடையாது..அது அந்த பொண்ணுக்குத் தெரியாது..அப்படியே தெரிஞ்சிருந்தாலும்  எதிர்வினை இப்படித் தான் இருக்கணும்..என் மகன் சரியில்லைன்னு மறைமுகமா சொன்னாலும் அதை தைரியமா என்கிட்டேயே சொல்லிட்டா..அப்படித் தான் சொல்லணும்..எல்லாப் பெண்களுக்கும் அவங்க வீட்டு ஆண்கள் மற்றப் பெண்கள்கிட்டே எப்படி நடந்துக்கறாங்கண்ணு கண்டிப்பாத் தெரியணும்..அப்போ தான் அப்பா, மகன், அண்ணன், தம்பி, கணவன்னு பாசத்திலே கட்டுப்பட்டு இருக்கறவங்களுக்கு ஓர் ஆண்மகனா அவன் எப்படின்னு புரியும்.” என்றார் விஜயா.

அத்தையின் கடந்த காலம் தான் ஆண்களை அவர் பார்க்கும் விதம், நடத்தும் விதத்தை தீர்மானிக்கிறது என்று பிரகாஷிற்கு புரிய,’அத்தை, சத்தியமா அந்தப் பொண்ணை நான் ஆர்வமா எல்லாம் பார்க்கலை..ஆச்சரியமா தான் பார்த்தேன்.” என்றான்.

“இப்போவே போய் இதை நீ சொன்னாலும் அந்தப் பொண்ணு அதை நம்புமான்னு தெரியலை டா..விடு..வீட்டுக்குப் போகலாம்..ரொம்ப நேரமாகிடுச்சு..போய் சமைக்கணும்” என்று அந்த விவாதத்தை முடித்தார் விஜயா.

இருவரும் வீடு வந்து சேரும் வரை அமைதி காத்தனர். கார் பயணத்தின் போது தொடர்ந்து வேலுவிற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தான் பிரகாஷ். அவனது கைப்பேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தததால் இணைப்பு கிடைக்கவில்லை. 

ஜெய்ப்பூருக்குப் புறப்பட்டு செல்லும் முன்,”நீ போலீஸா? இல்லையா?” என்று வேலுவிடம் கேட்க நினைத்த கேள்வியை,”அத்தை, வேலு போலீஸ் இல்லைன்னு கடைலே சொன்னீங்களே அது உண்மையா?” என்று  விஜயாவிடம் கேட்டான் பிரகாஷ்.

ஒரு நொடிக்கு மேல் யோசித்த விஜயா, அவர் கொடுக்கும் பதில் அவனை மேலும் குழப்பி விடுமென்பதால்,”இன்னைக்குக் காலைலே கடை வாசல்லே வீடியோ கால்லே அவனோட பேசிட்டு இருந்த போது அவன் என்ன உடை போட்டிட்டு இருந்தான்?’ என்று அவனிடம் கேட்டார்.

‘என்ன போட்டிட்டு இருந்தான்?’ என்று சில நொடிகளுக்கு யோசித்தவன்,”சாதாரணமா கோடு போட்ட சட்டை போட்டிட்டு இருந்தான்.” என்றான்.

“நேத்து நீலக் கலர்லே கோடு போட்ட சட்டை போட்டுக்கிட்டான்..அதுக்கு முதல் நாள் அடர் நீலத்திலே ப்ளெயின் சட்டை போட்டுக்கிட்டான்..தினமும் இப்படித் தான் போடறான்..உடுப்பு போடறதில்லை..ஏன்னு அவன்கிட்டேயே கேளு..நீ இப்போ கேட்ட கேள்விக்குப் பதில் கிடைக்கும்.” என்று சொல்லி, அவனை மேலும் குழப்பி விடைகொடுத்து அனுப்பினார் விஜயா.

அவனைத் தெளிவுப்படுத்திக் கொள்ள ஷண்முகவேலிற்கு பலமுறை அழைப்பு விடுத்தான் பிரகாஷ். அவனது அழைப்பை வேலு ஏற்கவேயில்லை. அன்றிரவு பதினொரு மணி போல் ஜெய்ப்பூரைச் சென்றடைந்த பின் ஷண்முகத்திடமிருந்து பிரகாஷிற்கு அழைப்பு வந்தது. அப்போதும் அலுவலகத்தில் தான் இருந்தான் ஷண்முகவேல். 

அன்று காலையில் துணிக் கடையில் நடந்ததை, அவனைப் பற்றி சினேகாவின் தவறான அபிப்பிராயம் முதற் கொண்டு அவனுக்கான அத்தையின் அட்வைஸ் வரை அனைத்தையும் ஒப்பித்தான்.

முதல்முறை சினேகாவை சந்தித்தப் போது பிராகஷைப் போலில்லாமல் ஆர்வமாக தானே அவளைப் பார்த்தான் என்பதால்,’அன்னைக்கு தப்பிச்சிட்டேன்..அந்தக் கணக்கு இன்னைக்கு சரியாகிடுச்சு.’ என்று எண்ணிக் கொண்டவன்,’அதை நினைச்சு நீ ஃபீல் செய்யாதே டா..விடு.” என்று சினேகா பேசிய அவதூறை அவதூனனம் (shaking off, துரத்தல்) செய்தான். 

அதன் பிறகு நித்யாவிற்கு லெஹங்கா வாங்கியது, இரயில் பயணம் என்று  மற்ற விஷயங்களைப் பற்றி பேசினார்கள். கடைசியில்,”வேலு, நீ போலீஸா? இல்லையா?” என்று கேட்டான் பிரகாஷ்.

சில நொடிகளுக்கு அமைதி காத்த ஷண்முகம்,”உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்று கேட்டான்.

“சொல்லு..யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்..நம்ம வீட்டு ஆளுங்களுக்கு கூட சொல்ல மாட்டேன்.” என்று உறுதி கொடுத்தான் பிரகாஷ்.

“நான் போலீஸ் இல்லை..ரகசிய போலீஸ்.” என்றான் ஷண்முகவேல்.