Advertisement

ப்ரனவிகா அவர்களது சேஸ் அகாடமிக்கு கிளம்பித் தயாராகிக் காத்திருக்க, ஹரிதா வரவே இல்லை. பூர்ணிமா தான் புலம்பிக் கொண்டே இருந்தார். ஒரு பெண் சுதந்திரமாக இருக்க வேண்டும், அவளது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று அவர் எண்ணுவதும் தவறு இல்லை. அவரது கணவர் இறந்த போது அவரில்லை என்று வருந்தியவர் தான். ஆனால் பொருளாதார ரீதியில் அவரது துணை என்றுமே பூர்ணிமாவிற்குத் தேவைப்பட்டது இல்லை. அவர் அவர்களது உணவகத்தைத் திறமையாகக் கையாண்டவர். அதே போல் தன் மகளும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் ஹரிதாவிற்கு அந்த விருப்பம் சுத்தமாக இல்லை.

ஹரிதாவை பொறுத்தவரை அவர்கள் வேலைக்குச் செல்லவோ பொருளாதார ரீதியிலோ கஷ்டப்படத் தேவையில்லை. வீட்டில் நிம்மதியாகத் தன் பாட்டி மற்றும் தாத்தாவுடன் நேரம் செலவழிக்க வேண்டும். கிடைக்கும் நேரத்தில் அஸ்வத்துடன் வெளியே செல்ல வேண்டும். ப்ரனவிகாவுடன் தனியாக ஊர் சுற்ற வேண்டும். இவ்ளோ தான் அவளைப் பொறுத்தவரை.

அம்மாவும் பெண்ணும் எதிர் எதிராக யோசிக்க, மற்றவர்களுக்குத் தான் விழி பிதுங்கியது. யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் குழம்பி யாரின் பக்கமும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

“அத்தை அண்ணிக்கு இஷ்டமில்லை விடுங்க. இன்னொரு நாள் பார்த்துக்கலாம் எனக்கு நேரமாச்சு. நீங்க அண்ணிய திட்டாதீங்க. அண்ணியோட இஷ்டப்படி கொஞ்சம் நாள் இருக்கட்டும் அத்தை ப்ளீஸ் எனக்காக.” என்று ப்ரனவிகா ஹரிதாவுக்காகப் பேசிவிட்டு அவளது அகாடமிக்கு கிளம்பிவிட்டாள்.

வெளியே வந்து அவளது வோல்வோவை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் சென்றதும் ஓரமாக நிறுத்தி விட்டு அவளது கைப்பேசியை எடுத்து ஹரிதாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

ஹரிதா அவளது அறையில் கட்டிலில் படுத்திருந்தவள் கைப்பேசியில் ஒலி எழுப்பியதைக் கேட்டு அதை எடுத்துப் பார்த்தாள். ப்ரனவிகா அவள் கிளம்பிவிட்டாள் என்றும் இப்பொழுது ஹரிதா கீழே சாப்பிடச் செல்லலாம் என்றும் அனுப்பி இருந்தாள். அதைப் பார்த்ததும் வேகமாக எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

கீழே வந்தவள் பூர்ணிமாவைப் பார்க்காமல் அவளாக எடுத்து வைத்துச் சாப்பிட ஆரம்பிக்க, பூர்ணிமா அவளிடம் ஏதோ கூற வர, மரகதம் பூர்ணிமாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வெளியே தோட்டத்திற்கு வந்தார்.

“இங்கப் பார் பூர்ணிமா உன்னோட பயம் எனக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அது அனாவசியமா தான் எனக்குத் தோனுது. அஸ்வத் அவளை நல்லா பார்த்துப்பான். அதோட நீ நினைக்கிற அளவுக்கு ஹரிதா ஒன்னும் எதுவும் தெரியாத பொண்ணு கிடையாது. வீட்டுலயே இருக்கிறதால அவளுக்குப் பக்குவம் இல்லைன்னு நீ நினைக்கிற. ஆனால் அவளுக்கு நிறையவே பக்குவம் இருக்கு. அதனால் கொஞ்சம் அமைதியா இரு பூர்ணி. அவளை அவள் நல்லாவே பார்த்துப்பா.” என்று மரகதம் கூற, பூர்ணிமாவிற்குத் தான் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இருந்தாலும் தன் அம்மா கூறியதற்காக அமைதியாக இருந்தார்.

சேஸ் அகாடமி, ஈரோடு மாவட்டத்தின் மையப் பகுதியில் உள்ளது. வாயில் கதவு எல்லாம் வைத்துப் பார்ப்பதற்குக் குட்டிப் பள்ளிக் கூடம் போல் காட்சி அளித்தது.

ப்ரனவிகாவின் வண்டியைப் பார்த்தவுடன் வாயில் காவலர் வேகமாகக் கதவைத் திறந்து விட்டு அவளுக்கு வணக்கம் கூறினார். பதிலுக்கு ப்ரனவிகாவும் வணக்கம் கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

வண்டி நிறுத்துமிடத்தில் ப்ரனவிகா அவளது வண்டியை நிறுத்தி விட்டு இறங்கினாள். வாயில் கதவிலிருந்து நூறு அடி தூரத்தில் ஒரு கட்டிடம் இருந்தது. அந்தக் கட்டிடம் மூன்று தளங்கள் கொண்டது.

தரை தளத்தில் வரவேற்பு அறை மற்றும் ஒரு பெரிய அறை மேஜை மற்றும் நாற்காலிகளுடன் இருந்தது. அந்தப் பெரிய அறை பெற்றவர்கள் பிள்ளைகளை அங்குச் சேர்க்க வரும் போது அவர்கள் கலந்துரையாட அந்த அறை பயன்படுத்தப்பட்டது.

முதல் தளத்தில் அங்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு(ஸ்டாஃப் ரூம்) அவர்களது பொருளை வைக்க மற்றும் வேலை இல்லாத நேரத்தில் ஓய்வு எடுக்க என்று மேஜை மற்றும் நாற்காலி ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியாக இருந்தது. அதே தளத்தில் தான் ப்ரனவிகாவின் அறையும் இருந்தது. அந்தத் தளத்தில் ஒரு பெரிய அறையும் ஒன்று இருந்தது. அந்த அறையில் தான் ஏதாவது மீட்டிங் என்றால் கூடுவார்கள்.

இரண்டாவது தளத்தில் நான்கு அறைகள் இருந்தன். அந்த அறைகளில் தான் ஆன்லைன் வகுப்பிற்குப் பாடம் எடுப்பது. அதற்குத் தேவையான அனைத்து உபகரணங்கள் அங்கு தான் உள்ளன.

மூன்றாவது தளம் மொட்டை மாடி. அந்த மாடியில் பாதி பக்கம் செடிகளை வளர்க்கின்றனர். அதே போல் அங்கு ஒரு அறையும் இருந்தது. அந்த அறையில் ஆசிரியர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மதியம் சாப்பாடும் அங்கே சாப்பிட்டுக் கொள்ளும் வசதியுடன் இருந்தது.

அந்தக் கட்டிடத்தின் இடதுப் பகுதியில் ஒரு கட்டிடமும் வலதுப் பகுதியில் இன்னொரு கட்டிடம் இருந்தது. மொத்தத்தில் ப வை திருப்பிப் போட்டால் இருக்கும் வடிவத்தில் அங்குக் கட்டிடங்கள் இருந்தன.

இடதுப் பகுதியில் உள்ள கட்டிடத்தின் தரை தளத்தில் மாணவர்கள் சாப்பிட ஏதுவாக பெரிய அறை ஒன்று மேஜை மற்றும் நாற்காலியுடன் இருந்தது. அதன் உள்ளேயே கேன்டின் இருந்தது. அந்த அறைக்குப் பக்கத்தில் அவர்களுக்குத் தேவையான புத்தங்கள் படிப்பதற்கு லைப்ரரி ஒன்று இருந்தது. முதல் தளத்தில் ஐந்து வகுப்பறைகள், இரண்டாவது தளத்தில் ஐந்து வகுப்பறைகள் இருந்தன.

அதே போல் வலதுப் பக்கத்தில் உள்ள கட்டிடத்திலும் தரை தளத்தில் மாணவர்கள் தேர்வு எழுதிப் பார்க்க கணினி அறை ஒன்று பெரிதாக இருந்தது. முதல் தளத்திலும் இரண்டாவது தளத்திலும் மாணவர்களுக்கான வகுப்பறைகள் இருந்தன.

ஒவ்வொரு தளத்திலும் மூலையில் கழிப்பறை இருந்தது. முதல் தளத்தில் பெண்களுக்கானது. இரண்டாவது தளத்தில் ஆண்களுக்கு என்று தனித் தனியாக இருக்கிறது.

ப்ரனவிகா முதல் தளத்தில் உள்ள அவளது அறைக்குச் சென்று அவளது பையை வைத்து விட்டு மீட்டிங் ரூம்மிற்கு சென்றாள். அங்கு ஏற்கனவே அந்த அகாடமியை நிர்வாகிக்கும் அதாவது ப்ரனவிகாவிற்கு அடுத்த பதவியில் இருக்கும் ரேஷ்மி, ஒவ்வொரு துறைக்கும் ஒருவரைத் தலைவர் என்று நியமித்திருக்கிறாள் ப்ரனவிகா. அதாவது வங்கி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஐந்தில் இருந்து ஆறு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் நேரடியாக ப்ரனவிகாவை சந்திக்க வேண்டும். அது சில சமயம் சாத்தியப் படாது. அதனால் அவர்களுக்கு ஒருவரை தலைவராக நியமித்து அவர்கள் தங்களுக்குள் பேசி என்ன வேண்டும் என்று தலைவரிடம் கூறினால் அவர் ப்ரனவிகாவிடம் அதைத் தெரிவிப்பார். இப்படி அங்குப் பயிற்சி தரும் அனைத்து துறைக்கும் தனித்தனியாக ஒரு தலைவர் இருக்கிறார்.

ப்ரனவிகா உள்ளே நுழைந்தவுடன் அனைவரும் எழுந்து அவளுக்கு வணக்கம் கூறிவிட்டு அமர்ந்தனர். ப்ரனவிகாவும் பதிலுக்கு வணக்கம் கூறிவிட்டு உட்கார்ந்தாள்.

ஒவ்வொரு வாரமும் இந்த மாதிரி ஒரு கலந்துரையாடல் நடக்கும். அதில் அந்த அகாடமிக்கு தேவையான வசதிகள், மற்றும் அந்த அகாடமியை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும், மாணவர்களுக்குத் தேவையானவை என அனைத்தும் விவாதிக்கப்படும்.

இன்றும் அது போல் ஒன்றுக்குத் தான் இந்தக் கூட்டம் கூடியது. ரேஷ்மி தான் முதலில் ஆரம்பித்தார்.

“மேம், நாம தான் காம்படிடிவ்(competitive) எக்ஸாம்ஸ்கு சொல்லிக் கொடுக்கிறதுல நம்பர் ஒன்னா இருக்கோம். ஆனால் அது ஆப்லைன்ல மட்டும் தான். அதாவது நேரடியாக வந்துப் படிக்கிறதுல மட்டும் தான். இந்த லாக்டவுன் வந்தததுக்கு அப்புறம் நிறைய ஆன்லைன்ல சொல்லி கொடுக்கிறவங்க ஃபேமஸ் ஆகிட்டாங்க மேம்.”

“நாமலும் அந்த டைம்ல ஆன்லைன்ல அதாவது ஜூம்ல சொல்லிக் கொடுத்தோமே?”

“எஸ் மேம். பட் மத்த அகாடமிலலாம் வீடியோ கோர்ஸ்னு ஒன்னு ஆரம்பிச்சுட்டாங்க மேம். அதனால நேர்ல வந்துப் படிக்கிறவங்க கவுன்ட் குறைஞ்சுருச்சு மேம். நாமலும் ஆப் அப்புறம் நம்ம வெப்சைட்ல அப்படி ஒன்னு கொண்டு வந்தா நமக்கும் கொஞ்சம் பெனிஃபிட்டா இருக்கும் மேம்.” என்று ரேஷ்மி கூற, மற்றவர்களும் அவரது கருத்தை ஆதரிக்க,

“சரி இதைப் பத்தி தெளிவா ஒரு ப்ரோபோசல் ரெடி பண்ணிட்டு என்கிட்ட காமிங்க. அண்ட் காஸ்ட் அதாவது ஃபீஸ் நான் சொல்றது தான். என்னைப் பொறுத்தவரைக் கல்வியை வியாபாரமா பண்ண எனக்கு விருப்பமில்லை. அதே சமயம் இலவசமா கொடுத்தா மாணவர்கள் அதை ஒழுங்கா உபயோகப் படுத்த மாட்டாங்க. அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் இந்த அகாடமில ஃபீஸ்னு ஒன்னு நாம வாங்குறோம். அதுவும் மத்த அகாடமியை காட்டிலும் ரொம்ப கம்மியா தான் வாங்குறோம். சோ அதுல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.”

“தெரியும் மேம். இதுக்கான ப்ரோபோசல் ரெடி பண்ணிட்டேன் மேம். நேரம் கடத்தாமல் இருக்கத் தான்.” என்று தயங்கிய படியே ரேஷ்மி கூற,

“ரொம்ப நல்லது. குடுங்க பார்க்கலாம்.” என்று ப்ரனவிகா கேட்க, ரேஷ்மி தயாரித்து வைத்தது ப்ரனவிகாவிடம் காட்டினாள்.

“ம் காஸ்ட் வைஸ் ஓகே தான். ஆனால் நம்ம வெப் சைட் அண்ட் புதுசா டெவலப் பண்ணப் போற ஆப்க்கு தனியா ஒரு ஆள் ரெக்ரூட் பண்ணனும். ஏனா நம்ம சைட் சில நேரம் டவுன் ஆகும் போது அடுத்த நிமிஷம் அதைச் சரிப் பண்ணனும். சோ ஒரு ஆள் இங்கேயே இருந்தா தான் நல்லது. அதுக்கான ரெக்ரூட்மென்ட்டை சீக்கிரம் ரெடி பண்ணுங்க.” என்று ப்ரனவிகா கூற, ரேஷ்மி சரியென்று தலையசைத்தாள். பின் மற்றவர்களிடமும் பேசிவிட்டு ப்ரனவிகா அவளது அறைக்கு வந்தாள்.

~~~~~~~~~~

சென்னை, இளமுகிலன் தன் நண்பன் பரத்திடம் பேசி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. பரத்தும் இளமுகில் கூறியபடி அவனது அலுவலகத்தில் விடுமுறை கேட்டான். பரத் இதுவரை விடுமுறையே எடுக்காமல் வேலை செய்ததால் அதை எல்லாம் சேர்த்து வைத்து ஒரு வாரம் அவனுக்கு விடுமுறை அளிக்க, சந்தோஷத்துடன் வீட்டிற்கு வந்தான்.

“இளா லீவ் சான்க்ஷ்ன் பண்ணிட்டாங்க. ஒன் வீக் நான் ஊருக்குப் போயிட்டு வரேன். இன்னும் வீட்டுல கூட சொல்லைல. நேர்ல போய் நின்னு சர்ப்ரைஸ் கொடுக்கப் போறேன்.”

“ரொம்ப சந்தோஷம் பரத். இப்போ தான் எனக்கும் மனசுக்கு நிம்மதியா இருக்கு. நீ போயிட்டு சந்தோஷமா இருந்துட்டு வா.”

“ம் நான் போறது இருக்கட்டும் டா. நீ நான் சொன்னதை மறந்துடாத. இப்படியே வாழ்க்கை முழுக்கா உன்னால மறைஞ்சு வாழ முடியாது. அதை விடு கல்யாணம் குழந்தை இப்படி நிறைய நல்ல விஷயங்கள் உன்னோட வாழ்க்கையில நடக்கனும் இளா. அதுக்கு நீ உன்னோட பயத்தை கொஞ்சம் ஒதுக்கி வைச்சுட்டு யோசிச்சு நான் வரும் போது நல்ல முடிவா சொல்லு.” என்று பரத் கூற, இளமுகில் வாய் திறந்து எதுவும் கூறாமல் வெறுமனே தலையை மட்டும் அசைத்தான்.

அவன் தலையசைத்த தொனியிலே இளமுகில் சாதகமான பதிலைக் கூற மாட்டான் என்று புரிந்து கொண்ட பரத், ஊருக்குப் போய்விட்டு வருவதற்குள் ஏதாவது மாற்றம் நடந்து இளமுகில் வெளியே வரவேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு அவனது ஊருக்குக் கிளம்பினான்.

பரத் சென்றதும் வீடே வெறுமையாக இருந்தது இளமுகிலிற்கு. என்ன தான் காலையில் வேலைக்குச் சென்று விட்டு இரவு தான் பரத் வீடு திரும்பினாலும், வீட்டிற்கு அவன் வந்துவிடுவான். ஆனால் இன்னும் ஒரு வாரத்திற்குத் தான் மட்டும் தான் அந்த வீட்டில் இருக்க வேண்டும் என்பதை நினைக்க மனம் கனத்தது. அப்பொழுது தான் பரத் கூறியது மிகவும் உண்மை என்று தோன்றியது.

இப்பொழுது வேண்டுமானால் இளமுகில் பரத் உடன் தங்கிக் கொள்ளலாம். நாளை அவனுக்குக் கல்யாணமானால் அவனுடன் இளமுகிலால் தங்க முடியாது. அப்பொழுது கண்டிப்பாக வெளியே செல்லத் தான் வேண்டும். அதற்கு பரத் கூறியது போல் இப்பொழுதே வெளியே சென்றால் என்ன என்றும் அதே போல் அவர்களைச் சந்தித்தாலும் திடமாக அவர்களை எதிர் கொள்ளலாம் என்றும் தோன்றியது.

எண்ணம் மட்டும் தான் தோன்றியது. ஆனால் அடுத்த நொடியே அவர்களிடம் சிக்கினால் அவனது நிலையை எண்ணி மீண்டும் நத்தை தன் கூட்டிற்குள் ஒடுங்குவது போல் தனக்குள் ஒடுங்கிக் கொண்டான்.

இரண்டு நாட்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தது. அவனது அன்றாட வேலைகளை அவன் செய்தாலும் மூன்று வருடங்களுக்குப் பிறகுத் தனிமையை உணர்கிறான். பரத் இருந்தவரை ஒரு முறை கூட அவன் தனிமையை உணர்ந்தது இல்லை. ஆனால் இன்று அவனுக்குத் தன் வாழ்க்கையை நினைத்து வெறுமையாக இருந்தது.

சாப்பிடப் பிடிக்கவில்லை, தூங்கப் பிடிக்கவில்லை, வேலைச் செய்யப் பிடிக்கவில்லை. எதுவுமே பிடிக்கவில்லை. இரண்டு நாட்களுக்கே இப்படி இருக்கிறது, எதிர்காலத்தில் பரத் திருமணம் செய்து கொள்ளும் போது எப்படி இருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை அவனால்.

நாட்கள் யாருக்கும் நிற்காமல், சூரியனும் சந்திரனும் அதன் சுழற்ச்சிகளைச் சரியாகச் செய்து கொண்டு இருந்தது. பரத் ஊருக்குச் சென்று ஐந்து நாட்கள் ஆகி விட்டது. இளமுகில் அவர்கள் வீட்டின் ஜன்னல் பக்கம் நின்று கொண்டு கீழே பூங்காவில் மகிழ்ச்சியுடன் ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை ஆசையுடன் பார்த்தான். அவனுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். யாருக்குத் தான் குழந்தைகளைப் பிடிக்காது. பலர் நினைப்பது போல் இளமுகிலனும் தானும் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்று யோசித்தான்.

குழந்தைகளாக இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எப்பொழுது வளர்கிறோமோ அப்பொழுதே பல விதமான பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டும். அதுவும் இளமுகில் எதிர் கொண்ட பிரச்சனை அவனை முற்றிலும் முடக்கியது. அவனது அறிவை மழுங்கச் செய்தது. பயம் கொண்டு ஊரை விட்டே ஓட வைத்தது. அதை அவன் நினைக்கக் கூட முடியவில்லை. இந்நிலையில் பரத் அதை முகத்திற்கு நேராக எதிர்கொள்ளச் சொல்கிறான். ஆனால் அதற்கு அவனுக்குச் சுத்தமாகத் தைரியம் இல்லை. என்ன முயன்றும் இளமுகிலனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. பரத் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு அதைத் தள்ளி வைத்தான்.

~~~~~~~~~~

திருச்சியில் ராகேஷ் டெல்லியில் உள்ள தன் அண்ணன் நண்பனிடம் அனைத்தையும் கூறி புகைப்படத்தையும் அனுப்பி விசாரிக்கச் சொல்லி விட்டான். பணம் பற்றி யோசிக்காமல் சீக்கிரமாக முடிவு வர வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் அவனே வர வேண்டும் இல்லை அவனைப் பற்றிய ஏதாவது ஒரு செய்தியாவது வர வேண்டும் என்று தீர்மானமாகக் கூற, இது போல் பல விதமான கேஸ்களை பார்த்தவர் அசால்டாக அந்தப் புகைப்படத்தில் இருப்பவரைப் பற்றிக் கூடிய சீக்கிரமே நல்ல செய்தி வரும் என்று கூறிவிட்டார்.

“திவி நான் அவங்ககிட்ட சொல்லிட்டேன். அவங்களும் ரொம்ப நம்பிக்கையா சீக்கிரமே கண்டுபிடிச்சுடலாம்னு சொல்லிட்டார். நீ கவலையை விடு. கண்டிப்பா இந்த முறை நல்ல செய்தி தான் வரும்.” என்று நம்பிக்கையாக ராகேஷ் திவ்யாவிடம் கூற,

“சந்தோஷம் ராகேஷ். அப்படி அவனைப் பத்தி மட்டும் நீ சொல்லிட்டனா எனக்கு அது போதும். நீ எது கேட்டாலும் நான் செய்வேன்.” என்று திவ்யா கூற, சந்தோஷத்துடன் ராகேஷ் அழைப்பைத் துண்டித்தான்.

ராகேஷின் தந்தை கட்டுமான நிறுவனம் ஒன்று வைத்துள்ளார். திருச்சியில் ரோடு போடும் கான்ட்ராக்ட் அவர் தான் செய்து கொடுக்கிறார். இப்பொழுது ஒரு மேம்பாலம் கட்ட டென்டர் விட்டுள்ளனர். அதுவும் இவருக்குக் கிடைக்க வேண்டும் என்றால் சங்கரின் உதவி வேண்டும். அதற்கே ராகேஷ் வலியச் சென்று உதவிச் செய்கிறான். என்ன தான் சங்கரின் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும் திருச்சியில் அவருக்குச் செல்வாக்கு அதிகம். அதுவும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியானாலும் அதிலும் அவருக்கு ஆட்கள் உண்டு. அது ஒரு கதை.

அந்த துப்பறியும் நபரிடம் விவரத்தைக் கூறி நான்கு நாட்கள் ஆன நிலைமையில் அவர் ராகேஷை தொடர்பு கொண்டார். அவரிடம் பேசிய ராகேஷ் வேகமாக திவ்யா வீட்டிற்கு வந்தான்.

திவ்யா வீட்டில் அவளது அம்மா கவிதா முன்னறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். ராகேஷைப் பார்த்ததும் சிரித்த முகமாக அவனை வரவேற்க,

“திவ்யா இல்லையா ஆண்டி?”

“அவள் அவளோட ரூம்ல தான் இருக்கா பா. இரு நான் கூப்பிடுறேன்.” என்று கூறி, வேலை செய்யும் பெண்ணிடம் திவ்யாவை அழைத்து வரச் சொல்லிவிட்டு, ராகேஷிற்கு குடிக்க ஜூஸும் எடுத்துட்டு வரச் சொல்லி அனுப்பி வைத்தார்.

அவரும் உள்ளே சென்று திவ்யாவிடம் தன் நண்பன் வந்துருக்கான் என்று கூறிவிட்டுச் சமையல் அறைக்குச் செல்ல, திவ்யா தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு கீழே வந்தாள்.

“என்ன ராகேஷ் ஃபோன் கூட போடாமல் வந்துருக்க?”

“அவசரத்துல அப்படியே வந்துட்டேன் திவ்யா நீ வீட்டுல தான் இருப்பன்னு நம்பி.”

“அப்படியா, சரி வா வெளில தோட்டத்துக்குப் போவோம்.” என்று கூறி அவனுடன் வெளியே சென்றாள்.

அங்குப் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் இருவரும் அமர திவ்யா பேச்சை ஆரம்பித்தாள்,”சொல்லு ராகேஷ்.”

“ஒரு குட் நியூஸ் திவி. இளமுகில் இருக்கிற இடம் தெரிஞ்சுடுச்சு.”

“என்ன சொல்ற ராகேஷ்? எங்க இருக்கான் இளா?” சந்தோஷத்துடன் கேட்க,

“அது எக்சாட்டா தெரியலை. பட் மூணு வருஷத்துக்கு முன்னாடி இங்கயிருந்து போய் சென்னைல உள்ள ஒரு மேன்ஷன்ல தங்கியிருக்கான். அதுக்கு அப்புறம் யாரோ ஃப்ரண்ட் கூட்டிட்டு போயிட்டானாம். கண்டிப்பா அந்தச் சுட்டுவட்டாரத்துல தான் இளா இருக்கன்னும்னு அவர் நம்புறார். ஸோ கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சுருவாங்க.”

“ப்ச் என்ன ராகேஷ்!! இன்னுமா அவன் சென்னைல இருப்பான்? இந்நேரம் வேற எங்கயாவது போயிருக்க மாட்டானா?”

“இல்லை திவி, வேற எங்கயும் போகலைனு அவங்க தீர்மானமா சொல்றாங்க. நீ கவலையை விடு, இவ்ளோ நாள் அவன் எங்க இருக்கான்னு நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போ ஒரு க்ளூ கிடைச்சுருக்கு. அதனால நம்பிக்கையா இரு திவ்யா.”

“ம் எஸ் நீ சொல்றதும் சரி தான். இதை பாஸிட்டிவ்வா எடுத்துக்கிட்டு நாம இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம். ரொம்ப தாங்க்ஸ் ராகேஷ்.” என்று மனதார நன்றி கூற, ராகேஷ் புன்னகைத்தான்.

Advertisement