அத்தியாயம் – 2

நம்பிக்கை இருக்கலாம், ஆனால் கண் மூடித்தனமாக வைக்கும் குருட்டு நம்பிக்கை, முருங்கை கொம்பில் மூஞ்சல் கட்டி விளையாடிய கதையாகத்தான் வந்து முடியும். எப்போது முறிந்து விழும் என்றே தெரியாது.

செல்ல குமாரி வீட்டின் செல்லக் கடைக்குட்டி. அவளின் அப்பா முத்துக்குமாரின் தாயின் இறப்பிற்கு பிறகு, அவரின் ஜாடையில் அவரை போலவே இடது கண் அருகே மச்சத்துடன் பிறந்தவளுக்கு, அவர் நினைவாக அவர் பெயரையே வைத்து விட்டார்.

அம்மாவைப் போலவே இருந்தவளை தாயைப் போலத்தான் தாங்கி வந்தார். மற்ற பிள்ளைகளைப் போல் இல்லாமல் செல்லத்தைக் கைக்குள்ளேயே வைத்து வளர்த்தவர்.

அதன் விளைவு, வளரும்போதே அப்பா செல்லமாகத்தான் வளர்ந்தாள் அவள். முத்துக்குமார், இலக்கியா இருவருக்கும் மூன்று பிள்ளைகள். மூத்த மகள் ஓவியா மிக அமைதியானவள், தாய் தந்தை பேச்சை மறுத்துப் பேசாதவள்.

இரண்டாவது மகன் மாதவ், இவர்களின் குடும்ப வாரிசு. தந்தைக்குப் பிறகு அவரின் தொழிலான சூப்பர் மார்க்கெட்டை அவன்தான் பார்த்து நடத்த வேண்டும் என்பதைக் கேட்டே வளர்ந்தவன்.

அதையே படிப்பாக படித்து குடும்ப தொழிலை பெரிய அளவாக மாற்ற வேண்டும் என்பதை கனவாக வைத்திருப்பவன்.

இவர்கள் இருக்கும் வீடு, இவர்களின் கடை என்று அனைத்தும் மாதவ் க்கு மட்டுமே என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார் முத்துக்குமார்.

நகைகள் பெண் பிள்ளைக்கு என்றாள், சொத்துக்கள் ஆண் பிள்ளைக்கு மட்டுமே என்று அவர் காலத்தில் அவருக்குச் சொல்லப்பட்டவற்றை இக்காலத்திலும் தவறாது பின்பற்றி வருபவர்.

அதன் விளைவுதான், பெண் மக்களை வேலைக்கு அனுப்பி அவர்கள் காசை வாங்குவதை கேவலமாக நினைத்தே ஓவியா வேலைக்கு செல்ல கேட்ட போது மறுத்து விட்டார்.

அதனால்  அவரின் மகள் வருந்துவது பார்க்கக் உள்ளே கஷ்டமாக இருப்பினும், வெளியில் அவர் எடுத்த உறுதியில் உறுதியாகவே இருந்தார்.

இது அவருக்கு தவறாகவும் தோன்றவில்லை. ஏன் என் மகள் வெளியில் சென்று கஷ்டப்பட வேண்டும், நாடு இருக்கும் நிலையில் என்று யோசித்தவர், அவளைப் பாதுகாப்பதாக நினைத்து, முதல் முறை தனியாக உலகைப் பார்க்கச் சிறகை விரித்துப் பறக்கத் தயாரான தன் மகளின் சிறகுகளைக் கல்யாணம் என்ற பெயரில் வலிக்க வலிக்கப் பிடுங்கி எறிந்திருந்தார்.

ஓவியாவின் திருமணம் சொந்த மாமன் மகனுடன் சிறப்பாகவே நடந்து முடிந்தது. பெண்ணிற்கு போலீஸ் மாப்பிள்ளையைக் கட்டி வைத்ததில் முகம் முழுக்கப் பிரகாசிக்க, அத்தனை சந்தோஷமாகச் சுற்றி வந்தார் முத்துக்குமார்.

இவரின் மகிழ்ச்சியை தூரத்தில் இருந்து பார்த்த செல்லம், அருகில் நின்றுகொண்டிருந்த இலக்கியா புறம் திரும்பி, “அம்மா, அப்பா முகத்தப் பாரேன், எப்படி சிரிப்பா இருக்காருன்னு. அப்பாவ நான் இதுவரை இப்படிப் பார்த்ததே இல்லம்மா”

என்றவளை கசந்த முகத்துடன் பார்த்தவர், அவள் தலையை மேடை புறம் திருப்பி,

“உங்க அக்காவ கூட நான் இதுவரை இத்தன சோகமா பார்த்ததே இல்லடி” என்று வருந்தியவரை கோபமாக முறைத்த செல்லம்,

“அவதான் அப்பா பண்ற நல்லது புரியாம சோகமா இருக்கா னா, நீயும் அவளுக்கு சப்போர்ட் பண்றம்மா”

“ப்ச், போடி இவளே! உனக்கு உங்க அப்பா மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவாரு. அவர் ஒருத்தர் சிரிப்புக்காக உங்க அக்காவக் கஷ்டபட விட்டுட்டியே டி” என்று சோர்ந்த குரலில் பேசியவரைப் புரியாமல் பார்த்தவள்,

“நான் எங்க அக்காவப் பாக்கல, அக்கா காக…. அப்பா கிட்ட போய் பேசுனதான ம்மா…”

“நல்ல பேசுன போ…. “ என்று சலித்து கொண்டவர் அவரின் மூத்த மகளின் முகத்தில் இருந்த போலியான சிரிப்பை பார்த்து விட்டு

“உங்க அக்கா எத்தன ஆசையா இருந்தா தெரியுமா டி? வேலைக்குப் போய் மேல படிக்கணும், நல்ல பேர் வாங்கணும்னு அத்தன கனவோட இருந்தா டி”

“அவளுக்கு இப்போ என்னவாம்? அதான் அப்பா சொன்னாங்க தான, கல்யாணம் அப்புறம் அவளுக்கு விருப்பம் இருந்தா அவள படிக்க வைக்கக் கூட மாமா ரெடின்னு. மாமா கிட்ட கேட்டு அவ படிக்க வேண்டியதுதான,  மாமா எவ்ளோ நல்லவர் தெரியுமா?  இவ தான் சும்மா அப்பா மேல பழி போட்டு ஓவரா சீன் போடுறா”

என்று அப்பா பக்கம் பேசும் மகளை அமைதியாகப் பார்த்தவர், அதற்கு மேலே எதுவும் பேசாமல் ஓவியா அருகே சென்று நின்று கொண்டார்.

சென்ற அம்மாவையும் சோர்ந்து நின்று கொண்டிருந்த அக்காவையும் சிறிது நேரம் நின்று பார்த்தவள் பின் தோள்களை உலுக்கிக் கொண்டு அங்கு உறவினர்களை வரவேற்றுக் கொண்டிருந்த மாதவ் உடன் சென்று நின்று கொண்டாள்.

இவர்கள் வீட்டில் ஓவியா பக்கம் நின்று கடைசி வரை பேசியவர் இலக்கியா ஒருவர் மட்டும் தான். வீட்டுக்குள்ளேயே அடைந்து வளர்ந்த அவர் பெண் திருமணத்திற்கு முன்பு வெளி உலகைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தே ஓவியாவிற்காகப் பேசினார்.

ஆனால் அவருடன் நின்று முத்துக்குமரிடம் பேச வேறு யாரும் இல்லை. செல்லம் தந்தை பேச்சைக் கேட்டு அவர் பக்கம் நிற்க, மகனும் அப்பா சொல்வதே வேத வாக்கு என்று ஒரு படி மேலே சென்று

“அப்பா உன்ன காலேஜ் அனுப்பிப் படிக்க வச்சதே தப்பு” என்று பேசவும் அவன் வார்த்தையில்  உடைந்து போனவலாக ஓவியா திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள்.

ஓவியாவுக்கு நடந்தவை அனைத்தும் பசுமரத்தாணி போல செல்லம் மனதில் ஆழப் பதிந்துவிட, அவளின் அப்பாவின் ஆசைக்கு ஏற்ப அவள் பாதையை மாற்றிக்கொண்டாள்.

ஏற்கனவே அவள் திவ்யாவிடம் சொன்னது போல கடைசி குரூப் தேர்வு செய்தவள் கல்லூரிப் படிப்பாக சமையலையே தேர்ந்தெடுத்தாள்.

அதை அவள் படித்து முடித்ததும் அவளின் அப்பா ஆசை போல அவர் பார்த்த பேங்க் மேனேஜர் மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்கும் ஒத்தும் கொண்டாள்.

இங்கு இப்படி இவள் அப்பாவுக்காக அவர் செய்யும் அனைத்திற்கும்  தலையை ஆட்டிய படி  இருந்த நேரம் , அவளுக்கு தெரியாமலே அவளின் வாழ்க்கை பாதையை காரிருள் சுழலை நோக்கி செலுத்த தொடங்கியிருந்தாள்.

அதே நேரம் பெங்களூரில் நெடுஞ்சாலையில் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த கருப்பு நிற ஃபெராரி.

அதன் ஓட்டுநர் இருக்கையில் ஸ்டீயரிங்கில் தாளம் போட்டபடி ஒலித்துக் கொண்டிருந்த பாட்டுக்கு இணையாக சீட்டி அடித்துக் கொண்டிருந்தான் அவன் அகிலன்.

அவன் அருகே இருந்த இருக்கையில் பதட்டமான முகத்துடன் காதில் வைத்திருந்த கைபேசியைப் பவ்வியமாகப் பிடித்தபடி

“சரி ப்பா இதோ முடிஞ்சிரும் ப்பா… அவன் பாத்துக்குறேன்னு சொல்லிட்டான் ப்பா… ஹா… சரி ப்பா” என்று பேசிக்கொண்டிருந்தான்   ஆரோன்.

அவன் பேச்சைக் கேட்டு தலையைத் திருப்பிப் பார்த்த அகிலன் நாக்கை உள்ளே சுழற்றி நக்கலாக அவனைப் பார்த்துச் சிரிக்கவும், அவனைப் பார்த்து முகத்தைக் கடுமையாக மாற்றிய ஆரோன் வேகமாகப் போனை அணைத்துவிட்டு

“உங்க குடும்பத்துல வந்து மூத்த பிள்ளையா பிறந்திருக்கேன் பார்த்தியா? நீ சிரி டா, நல்லா சிரி”

என்று தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவனைப் பார்க்கப் பாவமாக இருந்திருக்கும் போல, போனால் போகட்டும் என்பது போல அந்தப் பாட்டுச் சத்தத்தை நிறுத்தியவனாக, இவன் புறம் திரும்பி

“இப்போ எதுக்கு இடி விழுந்த மாதிரி உக்காந்துட்டு இருக்க டா” என்றவன் குரலில் தலையைத் திருப்பிப் பார்த்தவன்

“அது எப்படி டா எதுவுமே தெரியாத மாதிரி கேக்குற? நான் ஏன் இப்படி உக்காந்து இருக்கேன்னு உனக்கு எதுவும் தெரியாதுல?”

என்றவனைப் புருவம் உயர்த்தித் தலையை அசைத்துத் தோள்களை உலுக்கியவனின் பார்வை மீண்டும் சாலையைப் பார்த்துத் திரும்பி விடவும்

“டேய் ஏதாவது பேசித் தொலை டா, இப்படி பண்ணா என்னன்னு நான் புரிஞ்சிக்க”

“என்னன்னு ன்னா என்ன புரிஞ்சிக்க ஆசைப்படுறியா பிரதர்?” என்று பேசியபடி காரைத் திருப்பி ஒரு கிளைச் சாலைக்குள் காரைச் செலுத்தவும், கார் செல்லும் பாதையையும் அகிலனையும் மாற்றி மாற்றிப் பார்த்தவன்.

“ஆறு வருஷமா பெங்களூர் வரும் போதெல்லாம் இந்த இடத்துக்கு நீ ஏன் வரேன்னே எனக்கு இன்னும்  தெரியல. இதுல உன்ன புரிஞ்சிக்க வேர செய்ய போரனா  போடா !

அப்படி நான் பண்ணா என் வாழ்க்கையே அந்த முயர்ச்சி ல முடிஞ்சிரும். அந்த ரிஸ்க் என்னைக்கும் நான் எடுக்க மாட்டேன்”

என்று ஆரோன் புலம்பிக்கொண்டே இருக்கும்போதே அகிலன் காரை அந்தத் தெருவில் இருந்த ஒரு காபி கடை முன் நிறுத்தியவன் அவன் பாட்டுக்கு இறங்கிச் சென்றுவிட்டான்.

இறங்கிச் சென்றவனையும் அந்த டீ கடையையும் திரும்பிப் பார்த்தவன் “எப்படிப்பட்ட கார் இது, இதை எங்க போய் பார்க் பண்ணிருக்கான் இவன்”

என்று நொந்தபடி கீழே இறங்கியவனுக்கு அந்த இடமே பிடிக்கவில்லை. முகத்தைச் சுளித்தபடி அங்குத் தெருவில் போடப்பட்டிருந்த சேரில் அவன் வைத்திருந்த துணியை அந்த சேரில் போட்டு அகிலன் எதிரே அமர்ந்தான்.

அது ஒரு சாதாரண டீ கடை. உள்ளே ஒரு சிறிய ரூம், வெளியே நான்கு டேபிள் போட்டு சுத்தமாகத்தான் இருந்தது அந்த இடம்.

இருப்பினும் நல்ல செழிப்பாக வளர்ந்து ஒரு காபிக்கே ஆயிரத்திற்கு மேலே செலவு செய்யும் அவனுக்கு அந்த இடம் முகம் சுளிக்கும் வகையில்தான் இருந்தது.

ஆரோன் நிலை இப்படி என்றால் அகிலனோ அவனைப் போல் இன்றி ஒரு டீயை ஆர்டர் செய்து அது வந்ததும் அதை ரசித்துப் பருக ஆரம்பித்திருந்தான்.

டீயை ரசித்து குடிப்பவனை வியந்து பார்த்தவன்

“உனக்கு இந்த கடை டீயை ரொம்ப பிடிக்குமா டா? அதான் எப்பவும் பெங்களூர் வந்தாலே இங்க வந்திருவியா?”

என்றவனை டீயை குடித்தபடியே கண்களை மட்டும் திருப்பி ஒருமுறை பார்த்தவன், பார்வை மீண்டும் அவன் இத்தனை நேரம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அந்த வீட்டின் புறமே திரும்பியது.

இவன் பார்வை போகும் இடம் பார்க்காத ஆரோன் மிகத் தீவிரமாக எழுந்து அந்த டீ மாஸ்டரிடம் சென்று எதோ தீவிரமாகப் பேசிவிட்டு வந்தவன்

“அகிலன், உனக்கு ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன்” என்று எதையோ சாதித்த உணர்வுடன் வந்து அமர்ந்தவனை கேள்வியாகப் பார்த்தான்

“இனிமே நீ இந்த டீ-க்காக இவ்ளோ தூரம் வரவேண்டிய அவசியம் இல்ல” என்று புன்னகை செய்தவனை புரியாமல் பார்த்தவன்

“நான் எப்போ உன்கிட்ட சொன்னேன், இந்த டீ-க்காக தான் இங்க வரேன்னு?”

“அப்புறம் எதுக்கு பெங்களூர் வரும்போதெல்லாம் இங்க வந்து டீ குடிச்சிட்டுப் போறடா?”

என்றவனை மேலும் கீழும் பார்த்தவன், “மூணு வருஷம் முன்னாடி இந்த இடத்துல துணிக் கடை தான் இருந்துச்சு”

“சரி, அதுக்கு இப்போ என்ன?” என்றவன் மூளை அப்போதுதான் வேலை செய்தது போல,

“ஹான்! அப்போ இந்த டீ-க்காக நீ இங்க வரலயாடா?” என்று அதிர்ந்தவனுக்கு தலையை மறுப்பாக அவன் அசைக்கவும்

“அட பாவி, நீ இங்க டீ-க்காகத்தான் வர போலன்னு அந்த டீ மாஸ்டருக்கு மாசம் அம்பது ஆயிரம் கொடுக்குறேன்னு வேலைக்கு சொல்லி வச்சிட்டேனேடா” என்றவன் பேச்சில் தலையை மறுப்பாக அசைத்து லேசாகச் சிரித்தவன்.

“அரசியல்ல அப்பா உன்ன வச்சிட்டு என்ன தான் பண்ண போறாரோ” என்றுவிட்டு எழுந்து சென்று காசை கொடுத்தவன் காரில் ஏறிக்கொண்டான். அவன் பின்னவே வேகமாகக் காரில் ஏறிய ஆரோன்

“டேய், சீக்கிரம் கார எடுடா” என்று அவனை அவசரப்படுத்தி, நூல் இடையில் அந்த டீ மாஸ்டரிடம் இருந்து தப்பினான்.

கார் அந்த தெருவைத் தாண்டும் வரை ஆரோன் திரும்பிப் பார்த்தபடிதான் வந்தான். கார் அந்த இடத்தை விட்டு வந்ததும் மூச்சை இழுத்துவிட்டவன்

“ப்பூ… நல்ல நேரம் தப்பிச்சிட்டோம்” என்று பதறி ஆசுவாசம் பெற, அதே நேரம் ஆரோனின் ஃபோன் ‘அப்பா’ என்ற பெயரைத் தூக்கி ஒலி எழுப்பவும்,

பயந்து உடனே ஃபோனை எடுத்து காதில் வைத்தவன் திட்டு வாங்கத் தயாராக கண்களை மூடிக்கொண்டான்.

மறுமுனையில் அவர் அப்பா என்ன சொன்னாரோ அதைக் கேட்டு கண்களை வேகமாகத் திறந்து வாயைப் பிளந்தபடி அகிலனை அதிர்ந்துபோய் பார்த்தவன்.

அப்படியே அவனைப் பார்த்தபடியே இருக்க, மறுமுனையில் இருந்த அவன் அப்பா கத்தும் சத்தம் அகிலனுக்கே கேட்டது

“ஆரோன்! ஆரோன்! டேய்!” என்று அவர் காட்டுக் கத்தல் கத்திய பிறகே சுயம் வந்தவன் போல

“சரி ப்பா… சரி ப்பா, நான் வீட்டுக்கு வந்து சொல்றேன்” என்று ஃபோனை வைத்தவன்

“எப்படிடா முடிச்ச? அந்த எம்எல்ஏ கையெழுத்து போடவே மாட்டேன்னு இருந்தானே, அவன் பையனத் தூக்கி மிரட்டியும் கல்லு போலவே இருந்தானே, எப்படிடா ஒத்துக்க வச்ச?”

என்றவன் மீண்டும் விரல்களால் தாளம் போட்டபடி, “அவனே தெரிஞ்சி ஒரு குடும்பம், தெரியாம ஓராயிரம் குடும்பம்னு மெயிண்டென் பண்ணிட்டு இருக்கான். அவன்கிட்ட பிள்ளை பாசத்தைத் தேடுனா மசிவானா என்ன?”

“அப்புறம் எப்படிடா அவன கடத்த முயற்சி பண்ணியும் முடியல? எதிர்க்கட்சி சுத்தி ஏழு அடுக்கு பாதுகாப்பு போட்டு வச்சிருந்தாங்க, அப்புறம் எப்படி அவன வழிக்கு கொண்டு வந்த?”

“ஒருத்தன தொக்கடிக்க அவன கடத்தித்தான் பண்ணனும்னு இல்லையே டா?”

“கடத்தாமானா எப்படிடா?” என்று அவன் தோளைப் போட்டு உலுக்கவும், “ம்ம்ம்…..சரி சொல்றேன், உலுக்காத டா” என்று விட்டு காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன்.

பின்னே இருந்த அவனின் லேப்டாப் பேகை எடுத்தபடி, “பலவீனம் இல்லாதவன் எவனும் இல்ல. எல்லாருக்கும் ஒரு பலவீனம் இருக்கும். அதைக் கண்டுபிடிச்சாலே போதும், அவனை ஆட்டி வைக்க” என்று பேசியபடி

அந்த லேப்டாப்பை அவனின் கைரேகை கொண்டு திறந்தவன், அதில் ஒரு வீடியோவை ஓடவிட்டான்.

அந்த வீடியோவைப் பார்த்து வாயில் கை வைத்தவன், “அட கண்றாவியே, என்ன கருமம்டா இவன் பண்றான்” என்று முகத்தைத் திருப்பவும், அதை அணைத்து மீண்டும் மூடி வைத்தவன்.

“இதைக் காட்டித்தான் சைன் போட வச்சேன்”

“வெளிய அந்த ஆளு சுத்துற தினுசு என்ன, உள்ள பாக்குற வேலை என்ன, ச்சீ” என்று முகத்தைச் சுளித்தவன், “ஆமா, இது எப்படிடா உன் கைக்குக் கிடைச்சது?”

என்றவனுக்கு சிரிப்பைப் பதிலாகக் கொடுத்தவன் அந்த பேகை எடுத்துப் பின்னே வைத்தான்.

“அது சரி, நான் கேட்டதும் நீ சொல்லிட்டுத்தான்” என்று முகத்தைத் திருப்பியவன், திரும்பிய வேகத்தில் மீண்டும் இவன் புறம் திரும்பி

“ஆமா, எல்லாருக்கும் பலவீனம் இருக்கும்னு சொன்னியேடா தம்பி, அப்போ உன் பலவீனம் என்னடா?” என்று ஆர்வமாகக் கேட்டவனை, ஒற்றைப் புருவம் தூக்கிப் பார்த்தவன், இல்லை என்பது போல தோள்களை உலுக்கவும்

“அட பாவி பிரதர் என்ன சொல்லுவன்னு நினைச்சன் டா நான் உன் பலவீனம் இல்லையாடா கல்நெஞ்ச காரா” என்றவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் காரை அவன் எடுக்கவும்

“அது சரி உன்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்” என்று பெருமூச்சு விட்டவன், சாய்ந்தபடி இவன் புறம் திரும்பி

“சரி இப்போ உனக்கு பலவீனம்னு எதுவும் இல்லாம இருக்கலாம், அனா எதிர்காலத்துல யாரையாவதோ இல்ல எதையாவதோன்னு வந்தா என்னடா பண்ணுவ?”

என்றவனின் பேச்சை கேட்டு புருவம் சுருக்கி சிறிது நேரம் யோசித்தவன் பின் இவன் புறம் திரும்பி,

“என்னோட பலவீனத்தை யாரும் தொடாத இடத்துல வச்சிருவேன்” என்றவனின் பேச்சிலும் சரி அவன் பார்வையிலும் சரி அத்தனை தீவிரம் இருந்தது.

அந்த பார்வையில் ஆரோனே சற்று நேரம் அமைதியாகி விட்டான். அதன் பின் கார் மீண்டும் அந்த கிளை சாலையை விட்டு வெளியே போகவும், மீண்டும் ஒரு முறை அந்த சாலையை திரும்பிப் பார்க்க, அங்கே அந்த சாலையின் மத்தியில் இருந்த அந்த வீட்டின் கோபுரம் போல் அமைந்திருந்த கூரை இவன் கண்ணில் தெரியவும், அதை அழுத்தமாகப் பார்வை பார்த்துத் திரும்பியவன் காரை ஓட்டுவதில் கவனம் வைத்தான்.

அது ஒரு அந்தக் காலத்தில் கட்டப்பட்ட மாளிகை போன்ற அமைப்பில் உள்ள பங்களா . அதன் உரிமையாளர் அவரின் மனைவிக்காகக் கட்டியது.

இப்போது அவர் அந்த வீட்டில் தான் அவரின் இரு பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். ஆறு வருடமாக அந்த வீட்டை அவரிடம் இருந்து வாங்க முயற்சி செய்து வருகிறான், ஆனால் அவர் அதை அவரின் மனைவியின் நினைவாகத் தர மறுக்கிறார்.

இவன் நினைத்தால் அதை அவனின் அப்பாவின் உதவியோடு என்றோ வாங்கியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் இந்த வீட்டை அவர் இவனுக்கு வாங்கிக் கொடுத்தது போல ஆகிவிடும்.

அதில் இவனுக்கு விருப்பம் இல்லை. அந்த வீடு இவனுக்கானது, இவனே இவன் பணத்தில் வாங்க வேண்டும் என்பதாலேயே இத்தனை வருடம் காத்திருக்கிறான்.

அந்த வயதானவரிடம் இருந்து பிடுங்க இவனுக்கு ஏனோ மனமும் இல்லை. அதனால் தான் போனால் போகுது என்று விட்டு வைத்திருக்கிறான், அதுவும் அவர் உயிரோடு இருக்கும் வரை தான் என்று எண்ணியபடி சென்னையை நோக்கிச் சென்றவன்.

அடுத்த இரு மாதங்களிலேயே அந்த வீட்டை இவன் நினைத்தது போல வாங்கி, அதில் செல்லத்துடன் வாழவும் தொடங்கி இருந்தான்.