காலை சிம்மா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் வழமையான சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. சென்னையில் எடுக்கவிருக்கும் ஒரு ஷாப்பிங் மால் டெண்டருக்கான பட்ஜெட் விவாதம் முடித்து, அப்போதுதான் தன் அறைக்குத் திரும்பியிருந்தான் ஜெயசிம்மன்.
காதில் ஒற்றிய கைப்பேசியுடன் உள்ளே நுழைந்தான் பிரபஞ்சன்.
“டேய்… தண்ணி குடிக்கவாவது டைம் குடுடா!”, என்ற சிம்மன் பாட்டிலை மொத்தமாக குடித்து முடிந்து நிமிர்ந்தான்.
“கார்த்திக் சார் லைன்ல…”, என்றான் பிரபஞ்சன். அதை முதலிலேயே சொல்வதற்கென்ன என்ற முறைப்போடு அவன் கைப்பேசியை பிடுங்கி , ”ஹலோ கார்த்திக்…சாரி”, என்றான்.
மறுமுனையில் சிரித்த கார்த்தி, “ஹே… நாந்தான் நீ சொன்னது காதுல விழவும் குடிச்சப்பறம் சொல்லச் சொன்னேன். நோ இஸ்யூஸ்.”
“ஓ…ஒரு மணி நேரமா மீட்டிங் போயிட்டிருந்தது. இப்பதான் ஃப்ரீ ஆனேன். சொல்லு கார்த்திக். எதுவும் தகவல் தெரிஞ்சுதா?”
“ம்ம்… ஒரு காலேஜ் பையன் மூலமா தெரிய வந்துச்சுன்னு அந்த யூடூபர் சொன்னான். அவனைப் பிடிச்சு யாரு என்னன்னு விசாரிச்சோம். இன்ஸ்டால ஃப்ரெண்டு சார். அவனேதான் பேசினான். யாரும் யூடூப் சானல் வெச்சிருக்கவங்க தெரியுமான்னு கேட்டான். அப்பறம்தான் இதை சொல்லி, காசு எதுவும் தருவாங்களான்னு கேட்டான். நீயே பேசுடான்னா, மாட்டேன், நீயே வாங்கிட்டு பாதி குடுன்னான். இப்படி சிக்கலாகும்னு நினைக்கவேயில்லை சார்னு ஒரே அழுகை. அவன் சொன்ன பையன், திருநெல்வேலி xxx காலேஜ்ல படிக்கறான். பாலாஜின்னு பேரு. உங்க ஊர்பக்கம்னவே உனக்குத் தெரியுமான்னு கேட்கலாமேன்னு கால் பண்ணேன்.”
ஊரில் யார் தற்சமயம் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்? யோசனையில் நெற்றியை சுருக்கினான் சிம்மன். முத்தையன் மகனும் படிப்பது ஞாபகம் வந்தது.
“போட்டோ, டீடெயில்ஸ் இருந்தா அனுப்பி விடு கார்த்திக். நானும் செக் பண்றேன். சோ இது நான் நினைச்ச மாதிரி, என் வீட்டிலிருந்துதான் போயிருக்கணும் இல்லையா?”
சிம்மன் சொன்னதைக் கேட்டு பிரபஞ்சனின் கண்கள் விரிந்தது. ‘முதலிலேயே இந்த சந்தேகம் இருந்தா, அவினாஷை எதுக்கு போட்டு வறுத்தெடுத்தார்?’
கார்த்திக் மறுமுனையில், “ம்ம்…அப்படித்தான் தெரியுது. நான் காலேஜ்ல பேசி விவரம் , போட்டோ வாங்கிட்டு அனுப்பி வைக்கறேன். அதுக்கு மேல ஆக்ஷன் எடுக்கணுமா என்னன்னு பார்த்துட்டு சொல்லு சிம்மா. பை”
அணைப்பு துண்டிக்கப்பட்டதுதான் தாமதம், “முன்னாடியே உங்களுக்கு எப்படி சார் தெரியும்?”, பிரபஞ்சன் கேட்டுவிட்டான்.
“நான் குமுதினிக்கு அனுப்பின போட்டோ கிளாரிட்டி யூடூப் சானல்ல போட்டதுல இல்லைடா. கூட, கொஞ்சம் பேப்பர் ஆங்கிள் மாறியிருந்துச்சு. அதனாலதான் சந்தேகம்.”
“அப்போ அன்னிக்கு அவினாஷைப் போட்டு அந்த காய்ச்சு காய்ச்சுனீங்களே சார்?”
ஒரு சன்னச் சிரிப்பை உதிர்த்தவன், “வாலன்ட்ரியா சிக்கினான், கும்மினேன்’, என்று தோளைக் குலுக்கியவன், “இந்த சர்ட்டிபிகேட் ஊர்ல என் ரூம் கப்போர்ட்ல ஒரு ஃபைல்ல வெச்சிருந்தேன். லாக் பண்ணிருந்தாலும், சாவி என் டேபிள் ட்ராயர்லதான் இருக்கும். வீட்டுக்குள்ளயே யார் இந்த எச்ச வேலையை செஞ்சதுன்னு தெரியலை. அதுவும் அல்பமா ஒரு ஆயிரம் ரூபாய்க்கு !”, பேசப் பேசவே சிம்மனுக்கு கோவம் எகிறியது.
“டெம்பரரியா யாராவது வேலைக்கு வெச்சவங்களா இல்லை , வேலைக்கு வரவங்க உறவுக்காரங்க யாரும் இருக்கலாமே சார்… “
“ம்ம்.. ஊருக்கு கிளம்பறேண்டா. இது நேரா போய்தான் விசாரிக்கணும்”, சிம்மன் சொல்லவும், “பாஸ்…. மதியம் பேங்க் ஆளுங்களோட மீட்டிங். நீங்க பேசினாத்தான் சரி வரும். நைட் கிளம்பற மாதிரி பார்த்துக்கலாம் சார். எப்படியும் கார்த்திக் சார் டீடெயில் அனுப்பனும்.”
“எது எப்படி போனாலும், உன் வேலை நடக்கணும்..அதான?”, முறைத்தாலும் சிம்மனுக்கு பிரபஞ்சன் வேலையில் இருக்கும் அக்கறை பிடித்தது.
“ஆமாம்… நாலு கோடி ஓடி லிமிட் என் அக்கவுண்டுக்கு ஏத்த போறானுங்க பாருங்க…”, பிரபஞ்சன் நொடித்தான்.
ஒற்றைப் புருவம் ஏற்றிய சிம்மன், “சாரை நான் சொன்ன மாதிரி மீட்டிங்குக்கு கூட்டிட்டு வந்துட்டேன் பாருன்னு ஃபைனான்ஸ்ல சேர்ந்திருக்க புதுப்பொண்ணுகிட்ட படம் காட்டறது முக்கியமில்ல?”
நக்கலாக வந்த சிம்மனின் கேள்வியில் வாயைப் பிளந்தவன், சுதாரித்து காட்டமாக , “ஹூ இஸ் தட் ப்ளாக் ஷீப்? என்னைப் பத்தியே எவன் இங்க போட்டுக்குடுக்கறது?”, கேட்டான்.
“ஓ.. மறுப்பெல்லாம் இல்லை. அப்ப சொன்னது உண்மை?”
தோளைக் குலுக்கிய பிரபஞ்சன், “வாழ்க்கையில நீங்க கல்யாணம் காட்சின்னு பார்த்துட்டீங்க பாஸ். நான் வெளிய போய் எங்க யாரை பார்த்து செட் பண்றது? அம்சமா அழகா இருக்காங்க. அதான் இங்கயே பார்த்துக்கலாம்னு…”, என்று பெரிதாக புன்னகைத்தான்.
“ஹலோ… இது தப்பு. அதுக்கென்னடா, நானே அவங்க வீட்டுல பேசி முடிச்சு வெக்கறேன்னு சொல்றதுதான் உங்க டையலாக். “
பிரபஞ்சன் சொல்லி முடித்து, சிம்மன் வீசிய பேனாவை லாவகமாக காட்ச் பிடித்தவன் வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.
அதிகாலை திருனெல்வேலி இரயில் நிலையத்திலிருந்து அவனை அழைத்துச் செல்ல அலுவலக கார் வந்திருந்தது. அவன் வழமையாக தங்கும் கெஸ்ட் ஹவுஸ் சென்று குளித்து உணவருந்திவிட்டு நேராக பாலாஜியைப் பார்க்க காலேஜ் சென்றுவிட்டான் சிம்மன்.
காலேஜ் முதல்வரைப் பார்த்து அருகே ஒரு அறையில் அமர்ந்திருந்தவன் முன்னே தயங்கித் தயங்கி வந்தான் ஒரு வாலிபன்.
“வாடா மருது..எப்படி இருக்க?”
“ஐயா…”
“உட்காருடா… படிப்பெல்லாம் எப்படி போகுது?”, விழிகள் மருதுவை அளவெடுத்துக்கொண்டே இருந்தது. வியர்த்து பயந்திருந்த அவன் விழிகளே செய்தியைக் கூறிவிட்டது.
பதில் பேசாமல் எச்சிலை முழுங்கியவனை யோசனையாகப் பார்த்தான் சிம்மன். “உன் பேரு பாலாஜின்னே மறந்துபோச்சுடா மருது. சரி நீயே சொல்லிட்டா நல்லது. உன் கைக்கு எப்படி போட்டோ வந்துச்சு?”
“அது… எந்த …என்ன போட்டோ?”, என்று தடுமாறியவனின் சட்டையை கொத்தாகப் பிடித்த சிம்மன், “பொறுமையை சோதிக்காம உண்மையை சொல்லிடு…”, என்று கர்ஜித்தான்.
அவன் விடுத்தவன், “ஏண்டா… காசு பணம் வேணும்னா கேட்க வேண்டியதுதானே… எதுக்கு தேவையில்லாம உங்க அப்பா மேல பழி போடற?”, கசப்பாகக் கேட்டான்.
“இல்லை சார். அப்பாதான் அந்த பொண்ணு பத்தி தப்பா ந்யூஸ் வர மாதிரி ஏற்பாடு பண்ண முடியுமாடான்னு கேட்டார். என் பேர் வராம செய்யணும்னு சொன்னார். “, அவன் பேசியதில் நிஜமாகவே அதிர்ந்து போனான் சிம்மன்.
“ஏன்?”
“தெரியாது சர். ஒரு வேளை உங்களுக்கு செஞ்ச துரோகத்துக்கு அந்த பொண்ணை பழிவாங்கவா இருக்கும்னு நினைச்சிக்கிட்டேன். கேட்டுக்கலை”
தலையைப் பிடித்துக்கொண்டான். ‘முத்தையனா எனக்கு நியாயம் செய்யறதா இப்படி செஞ்சுட்டானா?’, தங்கள் குடும்பத்தின் மேல் முத்தையனுக்கு இருக்கும் விசுவாசம் சிம்மன் அறிந்ததுதான்.
“ஐயா… அப்பாவுக்கு உங்க மேல, பெரியய்யா மேல எவ்வளவு விசுவாசம்னு உங்களுக்கே தெரியும். இது இவ்வளவு பெருசாகும்னு அவருமே நினைக்கலை. என்னடா இப்படி எல்லாரும் இதை பேசறாங்கன்னு எங்கிட்டவும் விசாரிச்சார்.”, மெல்ல பாலாஜி விளக்க,
“ம்ப்ச்… சரி நான் பேசிக்கறேன். நீ போய் படிக்கற வேலையை மட்டும் உருப்படியா செய்.”, என்று எச்சரித்து அனுப்பினான்.
இவர்கள் ஒன்றை நினைத்துச் செய்ய, அது அந்த அமைச்சருக்கு தொக்காக மாட்டியது. இல்லாவிட்டால், இவ்வளவு வைரலாக வாய்ப்புகள் குறைவே.
யோசனையில் இருந்தவனுக்கு குமுதினியிடமிருந்து போன் வந்தது.
“ம்ம்.. சொல்லு குமுதினி”
“என்ன திடீர்னு ஊருக்கு கிளம்பிட்டியாம்?”
“உனக்கெப்படி தெரியும்?”
“அப்பாயிண்ட்மென்ட் வேணும்னு பிரபஞ்சனுக்கு கூப்பிட்டேன். நீ எப்ப திரும்ப வருவன்னு தெரியாதுன்னான்.”
அவள் விளக்கத்தில், “எதுக்கு அப்பாயின்ட்மென்ட்?”
“பேசி, சீக்கிரம் டைவர்ஸ் அப்ளை பண்ணத்தான். எப்படி அந்த செர்டிஃபிகேட் லீக் ஆச்சுன்னு கார்த்திக் சர் எதுவும் சொன்னாரா?”
“ம்ப்ச்…”, சலித்தவன் சற்று முன் பாலாஜியோடு பேசியதைக் கூற, குமுதினி வாயிலிருந்து ஒரு கெட்ட வார்த்தை வந்து விழுந்தது.
“குமுதினி !”
“படுத்த படுக்கையா இருந்தாக்கூட உங்கப்பா என் வாழ்க்கையை அழிக்கறதைத்தான் பிரதானமா வெச்சிருக்கார். திட்டத்தான் செய்வேன்.”, கோபமாக வந்தது பதில்.
“ஏய்… இதுல எங்கப்பா எங்க வந்தார்? முத்தையன் உன் பேர்ல இருந்த வெறுப்புக்கு வடிகாலா கிறுக்குத்தனமா யோசிச்சு இப்படி செஞ்சிருக்கான். அப்பாக்கு விஷயம் தெரிஞ்சிருந்தா அப்பவே தடுத்திருப்பார்.”
மறுமுனையில் கடகடவென்று சிரிப்பொலி. ஆனால் மகிழ்ச்சியான சிரிப்பில்லை. இது இகழ்ச்சியான சிரிப்பு.
“என்ன?”
“இதை நம்பறியா? அது சரி உங்கப்பா விஷயத்தைப் பொறுத்த வரைக்கும் நீ லாடம் கட்டின குதிரை மாதிரிதானே? முத்தையன் உங்க அப்பா சொன்னதுனால செஞ்சிருப்பான், அவனா செய்யற அளவுக்கு அவனுக்கு திறமையும் கிடையாது மோட்டீவும் கிடையாது.”
“நீ போன இந்த எட்டு வருஷத்துல எத்தனையோ மாறியிருக்கு. மோட்டீவ், எங்க குடும்பத்துக்கு உன்னால ஏற்பட்ட அசிங்கம்தான். நீ எனக்கு செஞ்ச துரோகம்தான்.”
“அவன் பிள்ளை அந்த மருதுகூட அதைத்தான் சொன்னான். வேற என்னவா இருக்கும்?”
“நான் எது சொன்னாலும் நீ நம்ப மாட்ட ஜெய். இந்த விஷயத்துல கொஞ்சம் கூட மாத்தி யோசிக்கவே மாட்ட. இந்த செலக்டிவ் அமினீசியா மாதிரி, உங்க அப்பா விஷயத்துல உனக்கு செலக்டிவா மூளை மழுங்கிடும். பேசி புண்ணியமில்லை”, பதில் பேசவிடாமல் அணைப்பை துண்டித்துவிட்டாள் குமுதினி.
தாடையை தடவிய படியே யோசினையானான் சிம்மன். குமுதினி ஆத்திரமும் அங்கலாய்ப்புமாக பேசியதை மீண்டும் மனதில் ஓடவிட்டான். அவன் தந்தையை பற்றி இப்படி அவள் பேசுவது இது முதல் முறை அல்ல.
முன்பொரு முறை அவன் தந்தைக்கு பிற பெண்களோடு தொடர்பு இருந்தது என்று குற்றம் சாட்டியிருந்தாள். அதுவும் அவனைத் தவிர மற்றவர்களுக்கு அரசல் புரசலாய் தெரியும் என்று சொன்னதும் ஞாபகம் வந்தது.