முதலில் முத்தையனை கேள்வி கேட்போம். அதன் பின்னர் முடிவு செய்வோம். எப்படியும் இன்னேரம் மருது அவன் தந்தைக்கு அழைத்து நடந்த வரை கூறியிருப்பான். சுத்தமல்லி கிராமத்திற்கு கிளம்பிவிட்டான் சிம்மன்.

சிம்மன் சென்று மதிய உணவை முடித்த பின்பும் முத்தையன் கண் முன் வரவில்லை. தந்தைக்கு உணவு கொடுத்துக்கொண்டிருப்பதாக மட்டுமே தகவல் வந்தது. நேரே அவன் தந்தையின் அறைக்குச் சென்றான்.

உண்டு முடித்து, ஓய்வாக படுத்திருந்தார் நரசிம்மன். அவர் கட்டிலருகே, தரையில் அமர்ந்திருந்தான் முத்தையன். ஜெயசிம்மன் உள்ளே நுழைய, பவ்யமாக எழுந்து நின்றான் முத்தையன்.

“எப்படிப்பா இருக்கீங்க?”, தந்தையை விசாரித்தான்.

“ம்ம்”, என்று தலையசைத்தவர், “என்ன தம்பி திடீர்னு கிளம்பி வந்திருக்க?”

“என் ரூம்ல, பூட்டியிருந்த என் பீரோல இருந்த பேப்பர வெளிய எடுத்து போட்டோ எடுத்து அந்த யூட்டூப்காரனுக்கு அனுப்பியிருக்காங்கப்பா. யாரு அந்த வேலையை செஞ்சதுன்னு எனக்குத் தெரிய வேண்டாமா?”, என்றவன் முத்தையனைப் பார்க்க, அவன் முகம் தரையை நோக்கியே இருந்தது.

“டேய்… அப்படியெல்லாம் வெளியாளுங்க வந்துட முடியுமா? நம்ம மேல இருக்க பாசத்துல தப்பு பண்ணிட்டான். விஷயம் பெருசான உடனேயே எங்கிட்ட சொல்லிட்டான். நீ போய் அவ கூட உட்கார்ந்து பேட்டி குடுக்காம இருந்திருந்தா விஷயம் அப்படியே போயிருக்கும்!”

“ப்பா…இந்த எச்ச வேலையை செய்யாம இருந்திருந்தா என் பேர் இப்படி அசிங்கப்பட்டிருக்காம போயிருக்கும். நீயா இவ்வளவு பெரிய விஷயத்தை யோசிக்கற அளவுக்கு வளர்ந்திட்டியா முத்தையா?”

“…”, கண்ணில் கண்ணீர் மட்டுமே பொங்கியது முத்தையனுக்கு.

“அவளை கிட்ட சேர்க்காம இருந்திருந்தா, நான் ஏன் கோவப்பட்டிருக்கப் போறேன், அதைப் பார்த்து முத்தையன் ஏன் வருத்தப்பட்டு இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருக்கப்போறான்?” , சிரமப்பட்டு பொறுமையாக பேசிக்கொண்டிருந்தார் நரசிம்மன்.

“நீங்கதான் இதை செய்யச் சொன்னீங்களாப்பா?”, என்றவனை நேர் கொண்டு பார்த்தவர்,

“இது உனக்கு எவ்வளவு அசிங்கம்னு தெரிஞ்சும் அப்படி செய்வேன்னு தோணுதாடா?”, என்று கேட்க சிம்மனின் தலை தானாக இல்லை என்று ஆடியது.

“யோசிக்காம செஞ்சுட்டான் முத்து. விடு. அந்த பொண்ணை சீக்கிரம் அத்துவிடு. வேற வாழ்க்கையை இப்பவாவது யோசி.”

பதிலேதும் பேசாமல் அவன் அறைக்குச் திரும்பிவிட்டான் சிம்மன். முதலில் இங்கிருக்கும் முக்கியமான டாக்குமென்ட் அனைத்தும் எடுத்துச் சென்றிடவேண்டும் என்று விளங்கியது.

அமைதியாக கட்டிலில் படுத்திருந்தான். செய்த தவறுக்கு ஒரு மன்னிப்பைக்கூட கோரவில்லை முத்தையன். அவன் தந்தையும் அதை செய்யச் சொல்லவில்லை. என்னவோ, இவன் குமுதினியை திறப்பு விழாவிற்கு அழைத்து, தினசரிகளில் இருவரது புகைப்படமும் வந்ததற்கான தண்டனையை அவனுக்குத் தந்திருப்பது போலத் தோன்றியது.

சென்னையில் அவினாஷ் அவன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தான். ஜாஸ்மின் உள்ளே நுழையவும், “என்ன ஜாஸ்? மீட்டிங் எதுவும் இருக்கா?”

“இல்லை அவினாஷ். இருந்ததை மாத்த சொல்லிட்டீங்க. வேற எங்கேயும் போற மாதிரியும் தெரியலை. அதுதான் உடம்புக்கு எதுவும் முடியலையான்னு பார்க்க வந்தேன்.”

“அதெல்லாம் இல்லை ஜாஸ். நல்லாதான் இருக்கேன்.”, அவளது அக்கறையில் எப்போதும் போல கனிந்து நோக்கினான்.

“இல்லை, குமுதினி விஷயம் பெருசாந்துக்கப்பறம் இந்த இரண்டு நாளாவே டல்லடிக்கறீங்க அவினாஷ். என்ன ஆச்சு? உங்க அம்மா எதுவும் சொன்னாங்களா?”

தன்னை இத்தனை கவனித்துக் கேட்பவளிடம் என்ன சொல்வது? பிருந்தாவின் வருத்தத்தைக் கூறினான்.

“இது நார்மல்தானே அவினாஷ்? ஒரு அம்மாக்கே இருக்கற கன்சர்ன். இதுனாலல்லாம் இப்படி சோர்ந்து போக மாட்டீங்களே?”, மென்மையாக சிரித்தபடியே கேட்டாள் ஜாஸ்.

ஒரு பெருமூச்சை விட்டவன், “அன்னிக்கு ப்ரெஸ் மீட்ல நான் கொஞ்சம் டல்லடிச்சேன் இல்லையா ஜாஸ்? சிம்மனும், குமுதினியும் மாதிரி நானும் ஸ்ட்ராங்கா என் இருப்பைக் காட்டலை. சிம்மன் சட்டுனு கேள்வி கேட்டவனுங்களை நோட் பண்ணி நிறுத்த ட்ரை பண்ண மாதிரி எனக்கு பண்ண வரலைல்ல?”

ஜாஸ்மினிடம் மட்டும்தான் அவனின் இந்த எண்ணத்தை பகிருகிறான் அவினாஷ். அது என்னவோ தன் தாயிடமோ, குமுதினியிடமோக் கூட சொல்ல வாய் வரவில்லை. ஆனால் ஜாஸ் அவனை எப்போதும் குறைவாக மதிப்பிட்டதே இல்லை. ‘ஏன் உங்கம்மாவோ, குமுதினியோ மட்டும் அப்படி குறைச்சலா நினைப்பாங்களா?’, மனசாட்சி சாடியது. இல்லைதான், ஆனால் சற்று பரிதாபப்படுவார்கள். குமுதினி ஒரு படி மேலே போய் ஏன் இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு என்று ஆரம்பிப்பாள்.

“இப்படி இறங்கி உள்ளடி வேலை பார்க்கறது நம்ம செட்டப்ல கிடையாதே அவினாஷ். ரியல் எஸ்டேட் பிசினஸ்ல அவர் தினசரி பார்க்கற ஒரு விஷயம், அதனால உடனே ரியாக்ட் செய்தார். குமுதினிக்கு கேள்விகள் கேட்கறதோ, பதிலை அவங்க போக்குக்கு திருப்பறதோ கை வந்த கலை. அதனால ஈசியா இருந்திருக்கும். இதுல பழகாத சூழலை நீங்க நல்லாவே ஹாண்டில் பண்ணதாத்தான் நான் ஃபீல் பண்ணேன் அவினாஷ். உங்களோட அந்த பாலிஷ்ட், ஃப்ரெண்ட்லி அப்ரோச், இதையெல்லாமாடா பிரச்சனை ஆக்குவீங்கன்ற முக பாவம் எல்லாமே நல்லா இருந்தது. ஒரு கட்டத்துல சிம்மனும் குமுதினியும் மிரட்டற மாதிரி நடந்துகிட்டாங்க, அப்பவும் நீங்க மட்டும் கூலா ஹாண்டில் பண்ணீங்க அவினாஷ். உங்களோடது ஒரு காமிங் பிரசென்ஸ். அதுதான் உங்களை வித்தியாசமா காட்டுச்சு.”

ஜாஸ்மின் பேசப் பேச, மனம் சற்றே சமன்பட்ட அவினாஷ், “எனக்குத் தெரியாம எதாவது சைக்காலஜி கோர்ஸ் படிக்கிறியா ஜாஸ்?”, என்று அவளைக் கலாய்த்தான்.

ஒரு சன்னச் சிரிப்புடன், “எதுவானாலும் மனசுல போட்டு கஷ்டப்படுத்திக்காம, பேசுங்க அவினாஷ். வேற கோணம் கிடைக்கும்.”, என்றாள் ஜாஸ்.

ஆமோதிப்பாய் தலையசைத்தவனை மேலும் பேச விடாது கைப்பேசி அலறியது. குமுதினியின் பேரைப் பார்த்ததும் ஒரு பெரிய புன்னகையை சிந்தி அழைப்பை ஏற்க, ஜாஸ்மின் சத்தமின்றி வெளியில் சென்றாள்.

சிம்மனுடன் பேசி சண்டையிட்டதை குமுதினி கூற, “நினைச்சேன் குமுதினி. அந்தக் காட்டுமிராண்டி லீக்கை அவன் பக்கம் வெச்சிகிட்டு லாயர் கிட்ட இப்படித்தான் வாட்சப்ல அனுப்புவியான்னு என்ன எகிறு எகிறினான். இப்ப அவன் அப்பாவே இப்படி செஞ்சிருக்கார்! இந்த அவமானத்தை சும்மா விடக்கூடாது குமுதினி. இதுக்குப் பிராயச்சித்தமா உடனே அவங்கிட்ட டைவர்சஸ் பேப்பர்ல சைன் வாங்கிடணும். நான் லாயர்கிட்ட பேசி பேப்பர்ஸ் ரெடி பண்ணச் சொல்றேன்.“

சிம்மனைக் கட்டுப்படுத்த ஒரு பிடி கிடைக்கவும் விடாமல் பற்றிக்கொள்ள நினைத்தான் அவினாஷ்.