அத்தியாயம் – 4

கிண்டியின் ஐ.டி.சி சோழா ஹோட்டலில் கார் நுழைய, வாசலில் நின்றிருந்தவன் டக்கென்று போனை எடுத்து பிரபஞ்சனுக்கு வீடியோ கால் செய்தான். ஹோட்டல் பணியாள் காரின் கதவை திறக்கவும், குமுதினி காரை வேலே பார்க்கிங்கிற்குக் கொடுத்துவிட்டு, உள்ளே நுழைந்தாள்.

பிரபஞ்சனின் போனில் குமுதினியைப் பார்த்த சிம்மன், “என்னடா கலர் இது”, என்று முனகி, கத்தரிப்பூ கலர் சட்டையை தேடி எடுத்து, பிரபஞ்சனிடம் தந்துவிட்டு, தன் வெள்ளை சட்டையை கழட்டினான்.

கவரிலிருந்து அடர் கத்தரிப்பூ சட்டையை எடுத்த பிரபஞ்சனோ, “சார் இதுதான் இப்ப ட்ரெண்டு. அதுலேயே செல்ஃப் கலர்ல லேசா பூ போட்டிருக்கு பாருங்க. செம்மையா இருக்கும்.”, மீண்டும் ஒரு முறை எல்லா பின்னும் எடுத்தாகிவிட்டதா என்று பார்த்து தர, அதைப் பிடுங்கி அணிந்துகொண்டான் சிம்மன்.

“அந்த பால்டப்பாக்கு வேணா நல்லாயிருக்கும். என் கலருக்கு இது எடுக்காதுடா! ச்சை ஒரு இரண்டு மூணு கலர் இருக்க மாதிரி ட்ரெஸ் போடக்கூடாதா இவ? இப்படி ஒரே கலர்லயா போடுவா?”, என்று பட்டனை போட ஆரம்பித்தான்.

கண்களை மேல் நோக்கி, ‘ஏன் சாமி என்னை இப்படி சோதிக்கற?’, என்று வேண்டினான் பிரபஞ்சன். “பிடிக்கலைன்னா ஏன் பாஸ் போடறீங்க?”

“ஹ்ம்ம்… நீ என்ன பண்ணு, வெள்ளை பாக்ரவுண்ட்ல, கலர் ஸ்ட்ரைப்ஸ் வர மாதிரி சட்டைங்க, எல்லா கலர்லேயும் எடு. இந்த மாதிரி கோக்குமாக்கா போட்டுட்டு வந்தாள்னா, அது பெட்டரா இருக்கும்”, என்று புது ரூல் போட்டவன், காரின் வெளியே வந்து அவசரமாக ப்ளூ ஜீன்ஸிற்குள் சட்டையை இன் செய்து, “ம்ம்… இப்ப ஹோட்டல்குள்ள காரை விடு. அவ காத்துக்கிட்டு இருப்பா”, என்று மீண்டும் காருக்குள் அமர்ந்தான்.

பதிலே பேசாது பிரபஞ்சன் காரைக் கிளப்பினான். இந்த ஒரு வாரத்தில், அன்று கோவத்தில் கூறியதைத் தாண்டி ஒரு விஷயமும் சிம்மனிடமிருந்து வரவில்லை.

அடுத்த ஐந்தாவது நிமிடம் ஹோட்டலின் உள்ளே நுழைந்தவன், லாபியில் அமர்ந்திருப்பவளைப் பார்த்து அருகே சென்று, “ஹாய்.. வந்து நேரமாச்சா? சாரி. வா டேபிளுக்குப் போகலாம்”, என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்த குமுதினியின் கண்களில் முதலில் பட்டது அவன் கத்தரிப்பூ சட்டை. கிட்டத்தட்ட அவள் அணிந்திருந்த அனார்கலி சல்வாரின் கலர்.

அவனை பதில் பேசாது பார்த்தவளின் பார்வையை புறக்கணித்தவன், “ஹே… சேம் பின்ச். ஒரே கலர்ல ட்ரெஸ் போடிருக்கோம் பாரேன். என்ன ஒரு கோ-இன்சிடென்ஸ்!”, என்று போலியாக ஆச்சரியப்பட்டான்.

“அப்படியா? வைட், க்ரே, ப்ளூ தவிர வேற கலர்ஸ் பக்கம் போகாதவன், இன்னிக்கென்ன கத்தரிப்பூ ஜிங்குச்சான்னு வந்து நிக்கற?”, நம்பாத பார்வை பார்த்தாள்.

அவர்கள் ஹோஸ்டெஸ் வரவும் பேச்சு அத்துடன் நின்றது. டேபிளில் அமர்ந்து மெனு கார்ட்டை திறந்தாள்.

“இதென்ன? செட் மெனுதானா? இத்தனை டிஷ் எப்படி சாப்பிட முடியும்?”

“பிடிச்சதை ஆர்டர் செய். உனக்கு முடியலைன்னா  நான் சாப்பிடறேன். சீ ஃபுட் மெனு எடுத்துக்கறியா?”

“இல்லை, சிக்கன் மெனுவே ஓகே”, என்று மறுத்தாள்.  அதில் ஏழு வகை டிஷ் இருக்க இதுவே அதிகம். கடல் வாழ் மெனுவில் பதிமூன்று வகையை கொண்டு வந்து அடுக்கினால் வீண். அதிலும் மிச்சம் நான் உண்கிறேன் என்று சிம்மன் கூறியதும் நெருடியது.

அவளை ஒரு பார்வை பார்த்தவன், தனக்கு சீ ஃபுட் சொல்லிக்கொண்டான்.

“சரி… என்ன இந்த கலர்ல சட்டை? அதுவும் கரெக்ட்டா நான் போட்டிருக்க மாதிரியே? இப்ப நீ மாட்ச் பண்றியா?”, நேர் பார்வை பார்ப்பவளை பார்த்து, “ஏன் பால்டப்பா மட்டும்தான் போடலாமா?”, என்று அலட்சியமாகக் கேட்டான்.

“ம்ப்ச்…ஜெய் என்ன நினைச்சி இதெல்லாம் பண்ற? நல்ல வேளையா அந்த டைரக்டர் மனைவிய பிரியறதா சொன்னார், நம்ம விஷயம் அடங்கிடுச்சு. ஒரு வாரம் கூட ஆகலை. இப்ப இங்க இந்த ஹோட்டலுக்கு வர சொல்ற. ட்ரெஸ் மாட்ச் பண்ற. எவனாவது போட்டோ எடுத்து போட்டா, என்னவோ நான் உங்க இரண்டு பேரையும் ஒரே நேரத்துல டேட் பண்ற மாதிரி பேச்சு கிளம்பும். தேவையா?”, முயன்று முகத்தை இலகுவாக வைத்து கேட்டாள்.

“ஷ்ஷ்… நீ ஓவரா யோசிக்கற. உன்னை லவ் பண்ணப்போவோ இல்லை என் பொண்டாட்டியா இருந்த சில நாள்லேயோ உன்னை ஒரு நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனதில்லை. சரி டைவர்ஸ் முன்ன அதை ஏன் குறை வைப்பானேன்னு நினைச்சேன். அப்போன்னா எங்கப்பா பணத்துல கூட்டிட்டு போயிருக்கணும். இப்ப இங்க என் சம்பாத்தியத்துல. இந்த சட்டை வேணா சொல்லு ஒத்துக்கறேன். அவனை கடுப்படிக்கத்தான்.” தோளைக் குலுக்கியவன் அவள் முறைப்பைக் கண்டு பெரிய புன்னகையை உதிர்த்தான்.

“அப்ப பிரெஸ் பத்தி யோசிக்கலை. என் பேர் கெட வாய்ப்பிருக்கும்னு யோசிக்கலை?”

“இதென்ன பெரிய விஷயமா? கேட்டா அவினாஷ்க்காக மத்யஸ்தம் பண்ண வந்தன்னு சொல்லு. அவ்வளவுதானே? கலர் இப்படி நீ வித்தியாசமா போடாம இருந்திருந்தா ஒன்னும் தப்பா தெரிஞ்சிருக்காது. ஸோ அது என் ஃபால்ட் இல்லை.”, அனாயசமாக பதில் வந்தது.

முதல் கோர்ஸ் வந்திருக்க, உணவில் கவனம் செலுத்தினான். குமுதினியால் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது.

அமைதியாக பெப்பர் சிக்கன் ஒரு சிறிய துண்டை உண்டவளுக்கு அதன் ருசி அள்ளியது. “செம்மையா இருக்கு ஜெய்!.”

“ம்ம்… இந்தா, லாப்ஸ்டர் ட்ரை பண்ணு”, என்று ஒரு துண்டை விண்டு  அவள் தட்டில் போட்டான்.

ஏற்கனவே கடல் உணவு அவளுக்குப் பிடித்தம். சிக்கனின் சுவையில், லாப்ஸ்டர் எப்படி இருக்கும் என்று அறியும் ஆசையில் முரண்டு பிடிக்காமல் எடுத்து உண்டாள்.

“ஹ்ம்ம்… அல்ட்டிமேட். எவ்ளோ சாஃப்ட்”, என்று உண்டு நிமிர ஒரு அரைப் புன்னகையோடு அவளைத்தான் பார்த்திருந்தான்.

அதில் சுதாரித்தவள், “நீ சாப்பிடு. என்னோடதை முடிக்கவே சரியா இருக்கும் எனக்கு.”, என்று எல்லை வகுத்தாள்.

“ஏன் பால்டப்பாவோடத்தான் ஷேர் பண்ணுவியா?”, உதட்டை சுழித்தான்.

கண்களே மேலே உயர்த்தி, ‘கடவுளே பொறுமையைக் குடு’ என்று மனதிற்குள் வேண்டினாள், “பேச வந்ததைப் பேசுவோமா?”

“ஹ்ம்ம்… பேசலாம். ஆனா பாரு, நல்ல சாப்பாடு, ருசிச்சு, ரசிச்சு சாப்பிடணும்னா பழசைப் பேசி மூட் அவுட் ஆகக்கூடாது. ப்ளஸ் நீ எதாவது சொல்லி, நான் கோவத்துல கத்தி இங்க பப்ளிக்ல மறுபடி சீன் ஆகக்கூடாதுன்னு பார்க்கறேன்”, நல்லவன் போலக் கூறினான். ஆக இன்று வந்ததே தண்டம் என்று புரிய குமுதினியின் முகத்தில் கோபத்தின் ரேகைகள் அவளையும் மீறி தெரிந்தது.

‘இரு குமுதினி. அவன் வேணும்னுதான் இப்படி பண்றான். ட்ரிக்கர் ஆகாதே’, என்று சொல்லிக்கொண்டவள், அடுத்து உணவில் மட்டுமே கவனம் செலுத்தினாள்.

“பாட்டி தவறிட்டாங்களாமே. என்னாச்சு?”, என்று அவனே அடுத்து பேசினான்.

“வயசாச்சு. வேற என்ன? இரண்டு நாள் முடியாம இருந்தாங்க. போயிட்டாங்க.”, என்றாள் சுருக்கமாக.

மீண்டும் அமைதி. “எங்கப்பா எப்படி இருக்கார்னு விசாரிக்க மாட்டியா குமுதினி?”

தலையை லேசாக சாய்த்து அவளை பார்க்க, தோளைக் குலுக்கியவள், “எப்படி இருக்கார்?”, அசிரத்தையாகக் கேட்டாள்.

“ஸ்ட்ரோக் வந்து படுத்த படுக்கையா இருக்கார். ஏன் பால்டப்பா விசாரிச்சானாமே. உங்கிட்ட சொல்லலையா?”

அவினாஷ் சொல்லியிருந்தான். ஆனால் அவன் விசாரித்தது எப்படி ஜெய்க்குத் தெரியும் என்று யோசித்தவள், எதையும் முகத்தில் காட்டாது, “ஏன் நீ அவனை, அவன் குடும்பத்தைப் பத்தி விசாரிக்கலையா?“, வினவினாள்.

“அதெப்படி விசாரிக்காம இருப்பேன்? அதை விடு. எங்கப்பா இப்படி இருக்கறார்னு தெரிஞ்சும் ஒரு வார்த்தை கேட்கலை நீ” என்று குற்றம் சாட்டினான்.

“ நான் கேட்டா உனக்கெப்படி தெரியும்னு ஆரம்பிப்ப. அதான் கேட்கலை. டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க. எழுந்து நடப்பாரா?”

“இல்லை அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை. விடு வேற பேசலாம்”, என்று மாற்றிவிட்டான்.

இறுதியாக டெசர்ட் வரவும், “கண்டிப்பா முடியாது. டூ மச்”, என்று மறுத்துவிட, அவனுடையதை ஒரு வாய் உண்டவன், “என் கூட ஒரு நாள் டைம் ஸ்பெண்ட் பண்ணு குமுதினி. பழையா ஸ்பார்க் எதாவது இருக்கான்னு பார்க்கணும்.” என்றான் இலகுவாக.

ஒரு கணம் என்ன கூறினான் என்று கிரகித்தவள், “விளையாடாதே ஜெய்.”, கடிந்தாள்.

“சீரியசாதான் சொல்றேன். இன்னும் நீ ஏன் விட்டுப் போனன்னு தெரியலை. எப்படியும் பேசி முடிய ஒரு நாள் ஆகும். கண்டிப்பா சண்டை வரும். அதுக்கு முன்னாடி, ஒரு நாள் எந்த கவலையும் இல்லாம, ஜாலியா ரிலாக்ஸ் பண்ணலாம்.”, கண்கள் சிமிட்டினான்.

அவள் முறைப்பில், “அட, பேச்சு மட்டும்தான். நீ தப்பா நினைக்காதே. என்னதான்  நீ என் பொண்டாட்டின்னாலும் அட்வான்ட்டேஜ் எடுத்துக்க மாட்டேன். வேணா பால்டப்பா மேல சத்தியம் பண்றேன். இராமனாத்தான் வாழ்ந்துட்டு இருக்கேன். நானெல்லாம் கொள்கைவாதி!”, மார்தட்டினான் பெருமையாக.