அவள் அழுது சட்டையை பிடித்திருந்தால் கூட சற்று நிம்மதியாக இருந்திருக்கும் போலிருந்தது சிம்மனுக்கு. ஆனால் கடந்து வந்துவிட்டது போல அவள் பேசியதும் அவள் விரக்தியும் பார்த்து அடி வயிறு சில்லட்டது.
அவள் போனாள் அவளே வரவேண்டும் என்று எதோ ஒரு வரட்டு கௌரவம், அவன் தந்தையின் கண்ணீர் பார்த்து ஒட்டிக்கொண்டது. ஆனால் அந்தக் கண்ணீரே அவனை பூட்டி வைக்க அவரது நாடகம் என்றது மிகவும் நோகடித்தது. பெற்ற பிள்ளையிடமே உறவாடி கழுத்தறுக்க எத்தகைய ஒரு குரூர புத்தி இருக்க வேண்டும்?
“மொத்தமா என்னை மழுங்கடிச்கிட்டார் இல்லை? அவர் கௌரவத்தைக் காப்பாத்திக்க என் பாசத்தை இப்படி மனிதாபிமானமே இல்லாம …”, வார்த்தைகள் கைவிட, குரல் கம்ம சிம்மனின் ஒரு கை காற்றை அளைந்தது.
“ஹ்ம்ம்… எதிராளி என்ன சொல்வான் செய்வான்னு யோசிச்சு, அதுக்கு தக்க மாதிரி பேசி அவர் சொல்றதை செய்யறது தவிர வேற வழியில்லைன்னு ஒரு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தறதுல உங்கப்பா டாக்ட்ரேட் வாங்கியிருப்பார். அவர்கிட்ட மனிதாபிமானம் எல்லாம் எதிர்பார்க்கறது தப்பு. நாலு நாள் நம்மை விட்டு வெச்சதுக்கு சொன்னாரே ஒரு காரணம்…”, அருவெறுப்பில் குமுதினியின் உடல் லேசாய் உதறியது.
“ஹ்ம்ம்? அதைச் சொல்லி, என்னை போல மட்ட சாதிக்காரி உன் தேவைக்குமட்டும்தான் இருக்கணும்னு தெளிவுபடுத்தினார்”,உடைத்துக் கூறியவளின் வார்த்தைகள் கூர்வாளாகக் கூறுபோட்டது.
அவன் அதிர்வைப் பார்த்தவள், “அன்னிக்கு அவர் பேசினது வரைக்கும் தெரிஞ்சிருக்குன்னா, யாரு முத்தையனைக் கேட்டியா? அவன் வெட்டிப்போட்டாலும் சொல்ல மாட்டானே?”, அருவருப்பான பேச்சைவிட்டு வேறு பேசினாள்.
“கடத்தினியா? ஓ உங்கப்பா ஜீன்ஸ் வேலை செய்யுதா? முத்தையன் பிள்ளை பாசத்தை யூஸ் பண்ணிகிட்டியா?”, நீ மட்டும் யோக்கியமா என்ற பொருள்பட குமுதினி பேசியது அவன் எரிச்சலைத் தூண்டியது.
“ஏய்… அவனை சும்மா கேட்டா சொல்லிடுவானா? யாருமே அவரைப் பத்தி சொல்லலை. பிரபா அந்த காலத்துல வேலை பார்த்துகிட்டு இருந்த ஒரு ஸ்கூல் ஹெட்மாஸ்ட்டரை தேடிப் பிடிச்சான். அந்த மனுஷன் சொன்னதுதான் முதல் தகவல். ஒரு வாத்தியார் வைஃப் ரே…. இவர் கெடுத்து, நியாயம் கேட்டு வந்தவங்களை முத்தையன் மிரட்டி விரட்டியிருக்கான். அதுக்கப்பறம்தான் அவன் மட்டும்தான் ஒரே சோர்ஸ்னு முடிவு பண்ணேன். வேற வழியில்லாமத்தான் அவன் பிள்ளையை தூக்கினேன். உடனே என்னை அவர் கூட கம்பேர் பண்ணாத!”
“ஓ? ரேப் கூடவா? ஒரு கரகாட்ட லேடியும், பக்கத்து ஊருல ஒரு விடோவையும் வெச்சிருக்கறதாத்தான் அப்போ எனக்குத் தெரியும். ஹ்ம்ம்… தட்டிக் கேட்க ஆள் இல்லைன்னா செய்யத்தான் தோணும்.” மீண்டும் கோவம் எட்டிப்பார்த்தது.
மொத்தமாக வடிந்து போய் சோஃபாவில் சாய்ந்திருப்பவனைப் பார்த்து சற்றே இளகியவள், “உன் நிலைமை கஷ்டம்தான் ஜெய். பிள்ளை அப்பாவை நம்பாம யாரை நம்ப முடியும்? அவர் சொல்றதை கேட்டுகிட்டு இருந்த வரைக்கும் உனக்கு அவர் நல்லவராத்தான் இருந்தார். அவரோட இருட்டு பக்கத்தை உனக்குக் காட்டாம இருக்கவும் நீ சந்தேகப்படலை. அது தப்புன்னும் சொல்ல முடியாது. ஆனா நான் அப்படிப் போனதைக் கூட சந்தேகப்படாம, தேடாம இருந்தது, இருக்க வெச்சது, அவர் மேல நீ வெச்ச கண்மூடித்தனமான பாசம், அது உன் முட்டாள்தனம்தான்.”, இரக்கமே இல்லாது நிதர்சனத்தைக் கூறினாள்.
“ஹ்ம்ம்… ஒரு ஆறுதலுக்குக் கூட பரவாயில்லைன்னு சொல்ல மாட்ட?”
“பரவாயில்லையா? உங்கப்பா மான மரியாதையை காப்பாத்தறதா நினைச்சுதான என்னை நீ தேடலை? அதுக்கு நான் பாரிதாபப்பட்டு பரவாயில்லைன்னு மன்னிக்கணுமா?“
நிமிர்ந்து அவளைப் பார்த்தவனை, “என்ன பார்க்கற? நிஜம் அதுதான். நீ என்ன சின்ன பிள்ளையா, மூடி மறைக்க இல்லை வெத்து ஆறுதல் சொல்ல? நிதானமா யோசிச்சா உனக்கே இன்னேரம் புரிஞ்சிருக்கும்.”, பொரிந்தாள்.
ஆம் அவனுக்கே தெரிகிறது. எப்படியாவது அவளை தேடியிருக்க வேண்டும். நம்பி வந்தவளை கைவிட்டுவிட்டான் என்ற குற்ற உணர்வில்தான் அதிகம் மன உளைச்சலே.
“உன் பேட்டிதான் முதல்ல படிச்சேன் குமுதினி.அப்பறம்தான் உன் ஷோ பார்த்தேன். நீ உன் கனவை எட்டிப் பிடிச்சிட்டன்னு பெருமையா இருந்துச்சு. ஆனா இதை என்னோட இருந்தே நீ செஞ்சிருக்க முடியாதா? உன் கனவு நிஜமாக நானும் எங்கப்பாவும் கொடுத்த விலை? அதுதான் அடுத்த நிமிஷம் தோணுச்சு. அதுவே என் ஈகோவைக் கிளறுச்சு. கண்டிப்பா சாதிச்சப்பறம் என்னை தேடி வருவன்னு நினைச்சேன். ஆனா மொத்தமா என்னை தூக்கிப் போட்டு வேற ஒரு வாழ்க்கை தேடுவன்னு நான் நினைக்கலை.”, அவனது தவித்த பார்வை, குமுதினியை சற்றே அசைத்தது.
“என்னை விரட்டிட்டு உனக்கு உன் சாதியில வேற பொண்ணை கட்டி வெக்கறதா பேசினாரே உங்கப்பா? உன்னை வற்புறுத்தலையா?”
“ஹ்ம்ம்.. ஒரு இரண்டு வருஷம் கழிச்சு ட்ரை பண்ணார். அவர் எங்கம்மாவைப் பத்தி சொன்னதையே ஒரு தரம்தான் வாழ்க்கையில தாலி கட்டுவேன்னு நானும் சொன்னேன். மறுபடி ஒரு வருஷம் கழிச்சு வாரிசுன்னு ஆரம்பிச்சார். அது ஒரு விஷயம்தான் நான் முடியாதுன்னு உறுதியா நின்னது.”
“ம்ம்.. அவர் சொன்னதே அவருக்கு ஆப்பா வந்து விடிஞ்சுதா?, போகுது விவாகரத்துக்கு அப்பறம் வேற கல்யாணம் செய்துக்கோ ஜெய்.”, அவள் இலகுவாகக் கூறியது அடங்கியிருந்த அவன் கோவத்தைக் கிளப்பிவிட்டது.
“நீ வேற வாழ்க்கை தேடிகிட்டா நானும் அதே செய்யணுமா என்ன? போடி. நான் சொன்னது சொன்னதுதான்.”
விரைப்பாக சிம்மன் சொல்லவும், “அதுவும் நல்லதுக்குத்தான். இன்னொருத்தி வந்தா, அவளையும் அப்பா சொன்னாரு ஆட்டுகுட்டி சொல்லுச்சு, மான மருவாதி கெட்டுச்சுன்னு எதையாவது சொல்லி கோட்டைவிட்டுட்டு காத்திருப்ப. அந்தக் கொடுமை என்னோட போகட்டும்!”, அவன் முகம் பாராமல் எழுந்து கொண்டாள்.
என்னவோ சிம்மன் தனியாக இருந்துவிடுவேன் என்று சொன்னது கண்ணீரை கிளப்பிவிட்டது. லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்தவள் கண்ணீரை துடைத்துக்கொண்டே அவள் காரை எடுத்துக் கொண்டு சென்றாள்.
சிம்மன் அலுவலகத்திற்கு மூன்று நாட்களாகவே வரவில்லை என்று அலுவலக கட்டிட காவலாளியிடம் பேசித் தெரிந்துகொண்ட பாண்டியன், சிம்மனின் வீட்டிற்கு வந்திருந்தான். இங்கிருக்கும் காவலாளியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பிக்கும்போதுதான் குமுதினி கண்ணை துடைத்துக்கொண்டே லிஃப்ட்டிலிருந்து வெளியே வருவதைக் கண்டான்.
அடுத்த நிமிடம் தகவல் நரசிம்மனை அடைந்தது. அவர் உத்தரவை முத்தையன் சொல்ல, பாண்டியன் கவனமாகக் கேட்டுக்கொண்டான். பாண்டியனின் பிள்ளையை மேற்படிப்பு வரை படிக்க வைத்து, இன்று நல்ல ஒரு வேலையிலும் அமர்த்தி அவன் குடும்பத்திற்கு விளக்கேற்றி வைத்த நரசிம்மனைய்யாவிற்கு உயிரையும் அல்லவா கொடுப்பான்.
சிம்மன் அலுவலகம் கிளம்பி வந்து பிரபஞ்சனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தான்.
“சார்! வந்துட்டீங்களா? பிசினஸ் கால்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன். தயவு செஞ்சு உங்க அப்பாக்கும் குமுதினி மேடத்துக்கும் பேசுங்க. என்னை மூணு நாளா படுத்தி எடுக்கறாங்க”, கைகூப்பினான்.
“டேய்…அவகிட்ட நல்லா உளறி வெச்சிட்டு பேச வேற சொல்றியா? நான் அப்செட்டா இருக்கேன், அதுவும் எங்கப்பாவாலன்னு ஏன் சொன்ன ?” நாற்காலியில் சாய்ந்தபடியே ஒரு புருவம் தூக்கி விசாரிக்க ஆரம்பித்தான்.
‘ஐயோ…இந்த அம்மா போட்டு குடுத்துடுச்சா’, என்ற அலறல் முகத்தில் தெரியாதபடி, “சார், அவங்க எல்லாம் சிபிஐ விசாரணை குழுவுல இருக்கணும். நான் சாதாரணமா சொன்னதுலர்ந்து அநியாயத்துக்கு லீட் எடுக்கறாங்க. நீங்களாவே இருந்தாலும் உளறித்தான் இருப்பீங்க!”, விரைப்பாக பதிலளித்தான்.
அதில் சன்னப்புன்னகை ஒன்றை சிந்திய சிம்மன், “ஹ்ம்ம்.. நானும் அவகிட்ட சிக்கி வாங்கி கட்டிகிட்டுதான் வரேன். வார்த்தை ஒன்னொண்னும் இரத்தம் பார்க்காம விடாதுங்கற மாதிரிதான் பேசறா”, என்றவன் ஒரு பெருமூச்சோடு கண்களை தேய்த்துக்கொண்டான்.
“ஒஹ்… வீட்டுக்கே வந்துட்டாங்களா? ரொம்ப கோவமா?”
“ம்ம்…”, மேலோட்டமாக அவள் மிரட்டி அனுப்பட்டதும், தான் தேடாமல் இருக்க அவள் கலங்கி நின்றதையும் கூறினான்.
“நான் என்ன புதுசா சொல்லப் போறேன் சார். ஏற்கனவே நீங்க நொந்து போயிருக்கீங்க. மேடம் வேற திட்டியிருக்காங்க. போகுது. சாப்பிட எதாவது ஆர்டர் போடவா?” பிரபாவின் கேள்வியில் ஒரு விரிந்த புன்னகையுடன், “இல்ல…என் பொண்டாட்டி நாலு முட்டை தோசை , காரசட்னி செஞ்சு குடுத்தா. திருப்தியா சாப்பிட்டேன்.” என்று சொல்ல இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று முழித்தான் அந்த அப்பாவி.
“பிரபா, பொண்டாட்டிங்க எப்பவும் புருஷன் வயித்தை நிரப்பிட்டு அது செரிக்க செரிக்க திட்டுவாங்கடா. இதெல்லாம் உனக்கு தெரியாது.” என்று வெறுப்பேற்றியதில்,
“நாலு நாள் வாழ்க்கையில நீங்க இவ்வளவு கத்துக்கிட்டீங்களா பாஸ்? ஆமா, நீங்க பாட்டு மூச்சுக்கு மூனூறு தரம் என் பொண்டாட்டின்னு ஏலம் விடறீங்க? அவினாஷ் சாருக்கு தெரியுமா?”, என்று பதிலுக்கு வெறுப்பேற்றினான்.
“கொன்றுவேன்! இப்ப வரைக்கும் அவ என் பொண்டாட்டிதான். அவளுக்கு என் மேல் எக்கச்செக்க கோவம் இருக்கு. இப்ப புரியுது அத்தனையும் நியாயம்தான். நான் ஈகோவுல தள்ளி நின்னேன். அவளும் அதையேதான் செஞ்சா. ஆனாலும் அவ கோவத்துக்கும் ஈகோவுக்கும் அடியில கொஞ்சம் என் மேல வெச்சிருந்த காதலும் உறைஞ்சாலும் உயிரோடதான் இருக்குன்னு ஒரு சின்ன நம்பிக்கை இருக்கு”, விட்டத்தைப் பார்த்து சற்றே கனவும் காதலுமாய் சிலாகித்துப் பேசும் இந்த சிம்மன் பிரபாவின் கண்களுக்கு முற்றிலும் புதியவனாகத் தெரிந்தான்