“அதான் சொன்னேனே. அவன் டெல்லி, டீல்னு சொன்னது எனக்கு நம்பற மாதிரி இல்லை. அதுதான் வந்தேன். உன் அட்ரெஸ் எதுக்கும் இருக்கட்டுமேன்னு என் டீம் வெச்சு முன்னாடியே எடுத்து வெச்சிருந்தேன்.”
“என்னவா இருந்தா என்ன? நீ என்ன பிரச்சனைன்னு சொல்லு. கண்டிப்பா பிசினஸ் இல்லை. இந்த அளவுக்கு பாதிச்சிருக்குன்னா உங்க அப்பாவாதான் இருக்கும். என்ன ஹெல்ஹ் இஷ்யூ வா? பிரபாவுக்குக் கூட தெரியக் கூடாத அளவுக்கு அப்படி என்ன?”
பதிலே கூறாமல் ஒற்றை புருவம் மற்றுமே ஏற்றினான்.
“ம்ப்ச்..” என்று சலித்தவள், “உனக்கு ஸ்பேஸ் குடுக்கச் சொன்னான். சென்சிடிவ் பிரச்சனை, உனக்கு ஸ்பேஸ், இரண்டும் சேர்ந்தா, அது உங்க அப்பான்னுதான் தோணுச்சு. கேட்டதும் ஆமாம், ஆனா எனக்கும் முழுசா தெரியாதுன்னான். அது மட்டும் உண்மையா பட்டுது.”, அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பது போல தோளை குலுக்கினாள்.
“ஹ்ம்ம்… உளறிட்டானா? உன் பேட்டி எடுக்கற திறமைக்கெல்லாம் அவன் தாங்க மாட்டான். “
மூன்றாவது முறையாக மீண்டும் என்ன பிரச்சனை என்று கேட்கப்பிடிக்காமல் சிம்மனையே பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தாள் குமுதினி.
“இரண்டு நாளா எக்கச்செக்க கோவம், வெறுப்பு அப்பறம் சோகம், ஆதங்கம்னு நிறைய எமோஷன்ஸ். எப்ப என்ன ஃபீல் பண்றேன்னே புரியலை“, என்றான் மொட்டையாக.
“யார் மேல?”
“இப்ப குளிக்கும்போது டிசைட் பண்ணேன். இப்ப கோவம் அதுவும் உன் மேலதான். நீதான் காரணம்”, விரலை அவள் புறம் சுட்டினான்.
“குளிக்கும்போது வந்த ஞானோதயமா? சரி. எதுக்கு என் மேல கோவம்? அதை சொல்லு கேட்போம்.”, இலகுவாகவே கேட்டாள்.
“எங்கப்பாவைப் பத்தி இப்ப ஜாடையா பேசினவளுக்கு காலேஜ் படிக்கும்போதோ கல்யாணம் ஆகும்போதோ அவரைப் பத்தி தெரியாதா? ஏன் அப்பவே சொல்லலை?”
அவன் முகபாவனையிலிருந்து ஒன்றும் அறிய முடியவில்லை. ஆனால் கூறியதிலிருந்து, அவன் தந்தையின் மற்றொரு முகத்தைப் பற்றி தெரிந்துகொண்டான், அதுவும் அவள் கோடி காட்டியதின் பேரிலேயே கண்டுபிடித்திருக்கிறான் என்று புரிந்தது.
தோளை லேசாகக் குலுக்கியவள், “நான் காலேஜ் கடைசி வருஷம் படிக்கும்போது ஒரு வாட்டி வேற ஒரு பொம்பளையோட டச் இருக்கறதா ஊர்ல பேசறதா சொன்னேன். என் கழுத்தைப் பிடிக்க வந்தவன் என் மோவாயை பிடிச்சு அழுத்தின. வேற யாராவதுன்னா மென்னியை திருகியிருப்பேன். இனியொரு முறை எங்க அப்பா பத்தி பேச்சு வரக்கூடாது பார்த்துக்கோன்னு மிரட்டுன. இரண்டு நாள் என் கண்ணுல படாம கோவத்தைக் காட்டின. சரி அவர் எப்படி இருந்தா எனக்கென்னன்னு அதோட விட்டுட்டேன். உன்னை விரும்பறதா சொன்ன போதும் பாட்டி உங்க அப்பா மாதிரி நீயும் கொஞ்ச நாள்ல வேற பொண்ணுங்க பக்கம் போயிருவன்னு திட்டினாங்க.”
அவள் சொன்னதும்தான் கல்லூரியில் நடந்த அந்த நிகழ்வே சிம்மனுக்கு ஞாபகம் வந்தது. அவள் கூட அப்போது கூறவில்லையே என்ற கோவமும் ஆதங்கமும் சற்று தணிந்தது. ஆனால் அவன் முகம் இறுகியே இருந்தது.
“அப்பறம் எப்படி என்னை நம்பி கல்யாணம் பண்ணிகிட்ட?”
“உனக்கு அந்த குணம் இல்லைன்னு தெரிஞ்சுதான். நாம பழகின அந்த இரண்டு வருஷத்துலேயும் உன் கண்ணு வேற யார் பக்கமும் திரும்பலை. எங்கிட்டயும் மரியாதையாதான் நடந்துப்ப.”
“அத்தனை நம்பிக்கை வெச்சிருந்தவ, ஏன் நம்பாம விட்டுட்டு போனடி? அவங்க போக சொன்னா, எப்படியாவது நடந்த உண்மையை எனக்கு தகவல் சொல்லணும் தோணவே இல்லையா?”, குரலின் ஆதங்கம் அவன் மனதைக் காட்டிக் கொடுத்தது.
ஒரு விரக்திப் புன்னகையை சிந்திய குமுதினி, “நடந்த உண்மை… என்ன நடந்துச்சுன்னு என்ன ஜெய் தெரியும் உனக்கு?”
“சாதியை காரணம் காட்டி உன்னை மிரட்டி விரட்டி அனுப்பினாங்க.”, கூறும்போதே மனது கலங்கியது.
“ம்ம்.. அதுவும் கழுத்துல கத்தி வெச்சு மிரட்டி…” என்ற அவள் திருத்தத்தில் அவன் முகத்தில் அவமான உணர்வு வந்து சென்றது கண்டும் இளகவில்லை குமுதினி.
“இதை கண்டுபிடிக்கவே இத்தனை வருஷமாச்சு ஜெய் உனக்கு. நான் கிளம்பி வந்தப்பறம் நீ தேடி வந்தியா? இரண்டு வருஷமா என்னோட பழகினியே, என்னைப் பத்தி எதுவுமே தெரிஞ்சுக்கலையா?”, அவளையும் மீறி கோவம் எட்டிப்பார்த்தது.
“வாழ்க்கையில பெருசா சாதிக்கணும்னு உனக்கு பெரிய கனவு இருந்தது.”, அவன் தரப்பினைக் கூறினான்.
“ஏன் உனக்கு இல்லையா?”, இடையிட்டாள்.
ஆமோதித்தவன், அடுத்து பேசும் முன், “என் கனவுக்கு நீயும், உன் கனவுக்கு நானும் தோள் குடுப்போம்னு கூட பேசினோம். ஞாபகமில்லையா? அப்படிப் பேசினவ ஏன் விலகிப்போனான்னு யோசிக்கவே இல்லையா?”, நிகழ்ச்சியில் உண்மையை வாங்க வலை பின்னுவதைப் போல விசாரணையை ஆரம்பித்தாள்.
கண்களை மூடியவன், “உன் சிம், தாலி, லெட்டர் பார்த்து என்னால நம்ப முடியலை. உன் பாட்டியை பார்க்க ஓடினேன்”
“ஹ்ம்ம்…அவங்களும் என் பேத்தி இதையே சொல்லிட்டு தேடாதன்னு போயிட்டாப்பான்னு அழுதாங்க. நம்பிகிட்டு போய் தண்ணிய போட்டு உன் சோகத்தை ஆத்திகிட்ட. போனவ என்ன ஆனான்னு கூட யோசிக்கலை. எங்க போனான்னு கூட தேடலை. கல்யாணம் செஞ்சே ஆகணும்னு பண்ணிகிட்டவ, தப்புன்னு புரிஞ்சிடுச்சு, நான் போறேன்னு எழுதி வெச்சதை உன்னால நிஜமா நம்ப முடிஞ்சுதா ஜெய்? அவ்வளவுதான் என்னை, என் காதலை புரிஞ்சு வெச்சிருந்தியா?”
சோஃபாவில் அமர்ந்தவன் முகத்தை அழுந்தத் துடைத்து, தான் குமுதினியை தேடிச் செல்ல கிளம்பி நின்றதையும் அவன் தந்தை அழுது நடித்த நாடகத்தை நம்பியதையும் கூறினான்.
“உன் மேல வெச்ச காதலுக்கும், அவர் மேல வெச்ச பாசத்துக்கும் நடுவுல பைத்தியமாயிடப்போறேன்னு பயந்தே தண்ணில மிதந்தேன். ஒரு ஆறு மாசம் கழிச்சு தெளிஞ்சு தொழில்ல கவனம் செலுத்த போகும் முன்ன உன் பாட்டியை மறுபடி பார்த்தேன்.”
“ம்ம்.. கூடவே அவங்க தம்பி மகன், மருமகன்னு பார்த்திருப்பியே?”, சற்றே நக்கலாக வந்தது குமுதினியின் கேள்வி.
புருவத்தை லேசாக சுருக்கியவன், “அப்போ நான் தேடி வந்தது உனக்குத் தெரியுமா?”
“அப்ப தெரியாது. பாட்டி இங்க வந்தப்பறம் ஒரு நாள் சொன்னாங்க. என் பாட்டிக்கு தம்பி முறையில யாரும் உறவுன்னு கிடையாது. எங்க நான் உன்னை கான்ட்டாக்ட் பண்ணி உண்மையை சொல்லிடுவேனோன்னு என் பாட்டிக்கு உங்கப்பா போட்ட காவல் அந்த ஆளும் அவன் பொண்டாட்டியும்.” குரலின் வெறுப்பு முகத்திலும் தெரிந்தது.
சிம்மன் குமுதினியைப் பற்றி விசாரிக்க சென்ற போது, அவர்களும் கூடவே இருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒரு முறை போன் செய்து நான் நல்லா இருக்கேன். வேலை கிடைச்சதும் தகவல் சொல்றேன்னு சொன்னாப்பா’, என்று அவள் பாட்டி கூறியது அவர்கள் கண்காணிப்பில் என்று இப்போது புரிந்தது. அப்போது, அவன் மேல் உள்ள வெறுப்பில் அப்படி பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டான்.
“வாரம் ஒரு முறை பாட்டியை பேச விடுவாங்க. அவனோட நம்பருக்கு கூப்பிடணும். இங்க என்னையும் வேவு பார்த்துகிட்டு இருந்தாங்கன்னுதான் நினைக்கறேன். கண்டிப்பா உன்னை கண்காணிச்சிட்டு இருந்தார் உங்கப்பா. அவங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாத வரைக்கும்தான் பேச விடுவாங்க. ஒவ்வொரு வாரமும், ஒரு நிமிஷம் எங்களுக்கு சந்தேகம் வந்தாக்கூட உன் பாட்டி இழவு செய்தி ஒரு வாரம் கழிச்சுதான் உனக்குக் கிடைக்கும். ஒழுங்கா உன் வேலையை மட்டும் பார்க்கணும்னு மிரட்டித்தான் வைப்பாங்க.”
அப்படி ஒரு நிலையில் அவள் எப்படி தன்னை அணுகியிருக்க முடியும்? “சரி, உன் பாட்டியை இங்க கூட்டிட்டு வந்துட்டியே, அப்பறம் கூடவா எங்கிட்ட சொல்ல முடியலை?”
அவனை வெட்டவா குத்தவா என்று முறைத்தவள், “கட்டிகிட்டு வந்தவ என்ன ஆனாங்கற அக்கறை கொஞ்சம் கூட இல்லாம நீ சுத்திகிட்டு இருந்த. நான் வந்து சொல்லணுமா? ஏன் உங்கப்பா சொன்னா, இங்க சென்னை வந்தப்பறம் என்னை தேட முயற்சி பண்ணியா? அட டீ.வில என் ஷோ பிரபலமானதுக்கு அப்பறமாவது ஏண்டி என்னை விட்டுட்டுப் போனன்னு நீ வந்து கேட்டியா?”
கத்தியாய் கீறியது அவள் கேள்வி. அவன் மௌனத்தை அலட்சியமாகப் பார்த்திருந்தவள்,
“அப்படியே நான் வந்து நடந்த உண்மையை சொல்லியிருந்தா, நீ நம்பியிருப்பியா? உங்க அப்பாகிட்ட போய் கேட்டிருந்தா, உங்க வரவேற்பை எவ்வளவு ஆடம்பரமா நடத்த நினைச்சிருந்தேன் என்னைப் போய் இப்படி சொல்லுவாளா? அதையும் நீ நம்புறியாடான்னு கேட்டா நீ என்ன சொல்லியிருப்ப ஜெய்?”
“…”
“இப்ப என்னை விரட்டினாலும் ஜெய் என்னைத் தேடி வருவார்னு உங்க அப்பாகிட்ட நான் வீர வசனம் பேசினேன். அதுக்கு என் வம்சத்தையே அசிங்கமா பேசியவர்,
என் புள்ளையை சமாளிக்க எனக்குத் தெரியும்டி. நான் எதை எப்படிச் சொன்னா அவன் நம்புவான்னு எனக்கு தெரியும்னு எகத்தாளமா சொன்னார் உங்கப்பா. அக்மார்க் உண்மை. அப்ப நான் நம்பலை, ஆனா என் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சு, என் ஷோ கண்டிப்பா நீ பார்க்காம, அட ஆனந்த விகடன்ல என் பேட்டியைக் கூட நீ படிக்காம இருந்திருக்க வாய்ப்பில்லைன்னு புரிஞ்சதும் முழுசா முடிஞ்சு போச்சு. அன்னிக்கு முடிவு செய்தேன். என் வாழ்க்கையில உன் அத்தியாயம் வேணா முடிஞ்சதா இருக்கலாம். ஆனா என் வாழ்க்கை அதையும் தாண்டி இருக்கு. எனக்கு வேற ஒரு வாழ்க்கையை அமைச்சிகிட்டு சந்தோஷமா வாழுவேன்னு பாட்டிக்கு சத்தியம் செய்து குடுத்தேன்.”
அதுவரை தரையை தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தவன், அவளை நிமிர்ந்து பார்த்தான். கண்ணில் ஒரு துளி கண்ணீர் இல்லை. கோவத்தை விட விரக்தியே தெரிந்தது அவள் முகத்தில்.