அத்தியாயம் – 12

பிரபஞ்சன் தலையை பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு நொந்துகிடந்தான். சிம்மனின் அலுவலகத் தொடர்புகள் அனேகமாக இவனுக்குத்தான் வரும் என்பதால் அதெல்லாம் எளிதாகப் பார்த்துக்கொண்டான்.

ஆனால் சிம்மனின் உறவுகளிடமிருந்துதான் சதா குடைச்சல். சிம்மன் நிர்தாட்சண்யமாக போனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்தான். முதல் நாளே முத்தையன் அழைத்துப் பார்த்து, அடுத்து பிரபஞ்சனைக் கூப்பிட்டான்.

“சின்னய்யா எங்க? ஏன் போன் அணைக்கபட்டுள்ளதுன்னு சொல்றாங்க?”,என்றான் பதட்டமாக.

“சார் நல்லாதான் இருக்கார். அது அந்த முக்கியமான மீட்டிங் ஆளுங்களோட பேசப் போயிருக்கார், அதான் ஆஃப் செஞ்சிருப்பார். இராத்திரி கூப்பிடுங்க.”, என்று சமாளித்தான்.

அதே கதையை குமுதினி அழைத்த போதும் கூறினான்.  முதல் நாள் சமாளித்துவிட்டான்.

இன்று மூன்றாவது நாள். சிம்மன் வீட்டிற்கு சென்று,அவனிடம் வாங்கி கட்டிக்கொண்டு வந்திருந்தான்.

“போன் பண்ணா செத்துட்டேன்னு சொல்லு போ “, என்று கதவை முகத்தில் அறைந்து மூடியிருந்தான் சிம்மன்.

“ஏலே பிரபா…என்ன விளையாடறியா? முக்கியமான விஷயமா பேசணும்னு சொல்றேன். நீ தினம் ஒரு கதையா சொல்ற? டில்லிக்கு ஃபளைட் ஏறு முன்ன ஒரு நிமிஷம் பேசச் சொல்ல வேண்டியதுதானே? நீ எதாவது பித்தலாட்டம் பண்றதா தெரிஞ்சுது…”, என்று மிரட்டினான் முத்தையன்.

“என்ன விஷயம்னு சொல்லுங்க. ஹாஸ்பிட்டல் செக்கப் எல்லாம் முடிஞ்சுது. ரிப்போர்ட் எல்லாம் நல்லா இருக்குன்னு டாக்டர் சொன்னார்.” பிரபா பேச்சை திருப்ப முயன்றான்.

“ஆங்…அந்த வெங்காயமெல்லாம் நானும் ஐயாவுமே பேசி கேட்டுகிட்டோம். பெரியய்யாவுக்கு இப்ப புள்ளையோட பேசணும். நாங்க மெசேஜ் போட்டாலும் பார்க்கலை. இந்த மாதிரி இருந்ததே இல்லை. இன்னிக்குள்ள சின்னய்யா பேசலை, நாங்க அங்க சென்னைக்கு வந்து நேர்லேயே பார்த்துக்கறோம்.”, என்று கெடு வைத்து இணைப்பை துண்டித்தான்.

இந்தப் பேச்சினைக் கேட்டுக்கொண்டிருந்த நரசிம்மன், “சென்னையில நம்ம பாண்டியனை கூப்பிட்டு  ஆஃபீஸ்ல வீட்டுல சிம்மனை எப்ப பார்த்தாங்கன்னு விசாரிச்சு தகவல் சொல்லச் சொல்லு”, என்று கட்டளையிட்டார்.

முத்தையன் வைத்த அடுத்த பத்து நிமிடங்களில் குமுதினி அழைத்திருந்தாள். அவளிடமும் டெல்லி புராணம் படிக்க, “என்ன விளையாடறீங்களா இரண்டு பேரும்? முதல்ல ஒரு வாரம் அப்பறம் பார்க்கலாம்ன்னார். சரி ஒரு வாரம் பொறுத்து கூப்பிட்டா, இரண்டு நாளா என்னை டபாய்ச்சிட்டு இன்னிக்கு டெல்லி ஃபளைட்ல இருக்காருங்கற. என்ன நினைச்சிட்டு இருக்காரு உங்க பாஸ்? இவருக்கு மட்டும்தான் வேலை, மத்தவங்கல்லாம் விரல் சூப்பிட்டு இருக்கோம்னு நினைப்பா?”

“மேம் டென்ஷனாகாதீங்க மேம். ஒரு இரண்டு நாள் பொறுத்துக்கங்க. வந்துருவார்.”, பிரபஞ்சன் சமாளிக்க முயன்றான்.

“ம்ம்.. இல்லை அங்க எந்த ஹோட்டல்ல ஸ்டே பண்றார்? விவரம் சொல்லுங்க.”

ஒரு நொடி திருதிருத்தவன், “இல்லை அது அவர் கிளையன்ட்டோட கெஸ்ட் ஹவுஸ்ல தங்கியிருக்கார்..” என்று இழுத்தான்.

“அட்ரெஸ் குடுங்க. நான் நைட் ஃபளைட் எடுத்துட்டு போய் அவரை பார்க்கறேன்.”

“மேம் கிளையன்ட் இன்னும் முடிவு சொல்லலை, அதனால பேரு சொல்ல க்கூடாது. கான்ஃபிடென்ஷியல் மேம். புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்”, கெஞ்சலில் இறங்கினான்.

“சரி. நான் டெல்லி கிளம்பறேன். என்னை பிக்-கப் செய்ய சிம்மனை ஏர்போர்ட் வரச் சொல்லுங்க.”, குமுதினி பிடிவாதமாக இருக்க, தலையை பிய்த்துக்கொள்ள ரெடியாக இருந்தான்.

“மேம்.. ப்ளீஸ். டெல்லில்லாம் போயிடாதீங்க. அவர் வேணும்னு உங்களை அவாயிட் பண்ணலை மேம். நிஜமாவே வேற சென்சிடிவ் விஷயம் ஓடிட்டு இருக்கு. அவருக்கு கொஞ்சம் ஸ்பேஸ் குடுங்க மேம். அவர் பாவம்”, என்று சொல்லவும் மறுபுறம் சற்றே அமைதி.

“அப்போ இது பிசினஸ் பத்தின விஷயமில்லை. அப்படின்னா அவர் பெர்சனலா? ஏன் அவர் அப்பாக்கு எதுவும் சீரியசா?”, இதுவரை பொரிந்து கொண்டிருந்த குமுதினி சற்றே நிதானித்து கேட்டாள்.

பிரபஞ்சனுக்கு ஏ.சி அறையிலும் வேர்த்தது.

“மேம், இது பிசினஸ் பத்திதான் மேம். நீங்களா எப்படி பர்சனல்னு சொல்லலாம்?”

“நீங்க யூஸ் செஞ்ச வார்த்தைகளை வெச்சுத்தான் பிரபஞ்சன். ஸ்பேஸ் குடுக்கணும், பாவம்னு பிசினஸ் விஷயங்களல பொதுவா சொல்ல மாட்டோம். பர்சனல்னா சிம்மன் சென்சிடிவ்வா நினைக்கறது அவர் அப்பா மட்டும்தான். மத்த எல்லாரையும் ஒதுக்கி வெச்சிட்டு இப்படி மூணு நாளா இருக்கார்னா அது அவர் அப்பாக்காக மட்டும்தான் இருக்கும்.”

குமுதினி ஆணித்தரமாக பேசவும், பிரபஞ்சனுக்கு அவள் கேள்விக்கு, வரும் பதில்களில் இருக்கும் சொல்லாடல்கள் கொண்டு மட்டுமே எவ்வளவு கிரக்கிறாள் என்பது புரிந்தது. ‘ஐயோ… பிடிச்சு குடையறாங்களே!’, என்று நொந்தவன்.

“ஆமாம் மேம்..அவர் அப்பாதான் பிரச்சனை. அதுல அவர் கொஞ்சம் அப்செட்”, என்றான் முடிவாக.

“என்னவாம்?”

“எனக்கு டீடெயில் எதுவும் தெரியாது மேம்.“

ஒரு நொடி அமைதிக்குப்பின், “சரி… நான் வெக்கறேன்”, என்று இணைப்பை துண்டித்தாள்.

“சத்தியமா அடுத்து யார் கூப்பிட்டாலும் ரயில்வே ஸ்டேஷன்ல சொல்ற யாத்திரிகோ ஜாந்தேன்னு ஆரம்பிக்க வேண்டியதுதான்”, என்று புலம்பிக் கொண்டே காபியைத் தேடிச் சென்றான்.

வீட்டில் காலிங் பெல் அடிக்க, விட்டத்தை முறைத்துக் கொண்டு படுத்திருந்த சிம்மன், ‘சுவிகி ஆர்டர் எதுவும் போடலை, அப்போ மறுபடி பிரபாவா’, என்ற எரிச்சலில், கதைவைத் திறந்து ‘டேய்.. வெண்ண மவனே…’, என்று ஆரம்பித்து, நின்றிருப்பது குமுதினி என்று உணர்ந்து நிறுத்தினான்.

குமுதினி அவனைப் பார்த்து மூக்கை சுருக்கியவள், “என்ன வேஷம் இது? குடிச்சிருக்கியா? குளிச்சியா?”, என்று கேட்க,

“நான் இங்க இருக்கறது எப்படி தெரியும்? பிரபா அனுப்பினானா?”, என்று உறுமினான்.

“ம்ம்.. டெல்லியில சென்சிடிவ் டீல் பேசிகிட்டு இருக்கறதா இரண்டு  நாளா கதை சொல்லிட்டு இருக்கான் ராஸ்கல். இங்க வந்து பார்த்தாதானே நீ டீல் பேசற லட்சணம் தெரியுது!”, பதிலுக்கு முறைத்தாள்.

“ம்ப்ச்… இப்ப பேசற மூட்ல இல்லை. நீ போ”, என்று கதவை சாற்ற முயன்றான்.

சிம்மனை இடித்துக்கொண்டு உள்ளே வந்தாள் குமுதினி.

“என்ன பிரச்சனை? ஏன் ஆஃபீஸ் போகாம இப்படி பகல்லயே தண்ணியப் போட்டு வீட்ல இருக்க?“, இடுப்பில் கைவைத்தபடியே அங்கே பாதி உண்டு மிச்சம் இருந்த உணவு பெட்டிகள், பீர் பாட்டில்கள் என்று அனைத்தையும் நோட்டம் விட்டாள்.

“ஏன் பிரச்சனை சொன்னதும் அப்படியே தீர்த்து வெச்சிருவியா?”, விட்டேத்தியாக கேட்டபடியே அருகிலிருந்த சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தான்.

போட்டிருந்த கையில்லாத டீ-ஷர்ட், ஷார்ட்ஸ் இரண்டுமே சுருங்கி சற்றே உணவுக் கறைகளுடன் இருந்தது.

“இப்படி இருந்தா மட்டும் உன் பிரச்சனை தீர்ந்துச்சா? இல்லைதானே? போ..போய் குளிச்சிட்டு வா. அடுத்தது பார்க்கலாம்.”, என்றவள் ஹாலை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

அவன் வீட்டில், குமுதினி சகஜமாக உலவுவது ஏனோ அவன் அலைபுறும் மனதை ஆற்றுப்படுத்தியது. அமைதியாக அவன் அறைக்குச் சென்றான்.

சமையல் அறையில் இருந்த பெரிய ஃப்ரிட்ஜில் தோசை மாவும், முட்டையும் இருக்க எடுத்து வைத்தாள். தேங்காய் துண்டுகள் ஃப்ரீசரில் இருக்க, காய்ந்த மிளகாய் சேர்த்து கார சட்னியை அரைத்தாள்.

அடுத்து கல்லை சூடாக்கி முட்டை தோசை வார்க்க ஆரம்பித்தாள். சமையலறை வாசலில் வந்து நின்றான் சிம்மன். குளித்து சோப் வாசனை மாறாது, வேறு ஷார்ட்ஸ், டீ-ஷர்ட்டில் சற்றே தெளிவாக இருந்தான். முக வாட்டமும், லேசாக செவ்வரி ஓடிய கண்களும் அப்படியேதான் இருந்தது,

“ம்ம்.. டேபிள்ல போய் உட்கார், தோசை ரெடியானதும் எடுத்துட்டு வரேன்”, என்றதோடு அனுப்பினாள்.

தலையசைத்து வந்து அமர்ந்துகொண்டான். பிஸ்தா பச்சையில் லைட் பிங்க் நிற பூக்கள் இறைந்திருந்த ஒரு காட்டன் சல்வார் போட்டிருந்தாள். மேக்கப் இல்லாமல் ஒரு சின்ன பொட்டு மட்டும் நெற்றியில் ஒட்டியிருக்க, முடியை ஒரு கிளிப்பில் அடக்கியிருந்தாள். பிஸ்தா பச்சை, லைட் பிங்க் இரண்டு நிறத்திலும் அவனிடம் டீ-ஷர்ட் இல்லை. தேடிப் பார்த்துவிட்டு, அவனது ஆஸ்தான சாம்பல் நிறத்திலேயே அணிந்துகொண்டு வந்தான்.

‘மேட்சிங்கா இருக்கற ஃபார்மல் சட்டைய போட்டிருந்தா கொஞ்சம் வெறுப்பேத்தியிருக்கலாம்’, என்று நினைக்க, அதற்குள் அவனது விருப்ப உணவு முன்னால் வந்தது. நாலு தோசை உண்டபின் நிமிர்ந்து அமர்ந்தான்.

“போதும்”, என்று சொல்ல, அடுப்பை அணைத்துவிட்டு அவன் எதிரில் வந்து அமர்ந்தாள்.

“நீ சாப்பிடலையா?”

“இல்லை… பசியில்லை.”

“தாங்க்ஸ் குமுதினி. எட்டு வருஷம் கழிச்சு உன் கையால சாப்பிட்டேன். நல்லாயிருந்துச்சு. விட்ட இடத்துலேர்ந்து தொடர எனக்கு இஷ்டம்தான் நீதான் மாட்டேன்னு சொல்ற.”

தோளைக் குலுக்கும் அவனை புரியாது பார்த்தாள். “என்ன விட்ட இடத்துலேர்….”, அவன் தட்டையும் அவளையும் அர்த்த புஷ்டியாய் பார்த்தது ஏன் என்ற பொறி தட்டியதும் குமுதினியின் குரல் தேய்ந்து நின்றது.

திருமணம் முடிந்த நான்காவது நாள், அவன் கிளம்ப வேண்டியிருக்க, குமுதினி அவள் கைப்பட அவனுக்கு சமைத்துக் கொடுத்தது இதே முட்டை தோசையும், கார சட்டினியையும்தான்.

நெற்றியை நீவிவிட்டவள், “உடனே செய்ய ஈசியா இருக்குன்னுதான் செஞ்சேன். இதுதான் நாம பிரிஞ்ச அன்னிக்கு சமைச்சதுன்னு இப்ப நீ சொல்லித்தான் ஞாபகமே வருது, அதனால ஓவரா எதுவும் கற்பனை செய்யாத!”, எச்சரித்தாள்.

“ஹ்ம்ம்… ஈசியா செய்ய வேற ஒரு விஷயமுமே உன் கண்ணுல படலையா?”, ஒற்றைப் புருவம் உயர்த்தினான்.

மேல் கப்போர்ட்டில் ரவை இருந்தது,வரமிளகாய் எடுக்கும்போது பார்த்தாள். வெங்காயம் வெட்டி ஒரு டப்பாவில் போட்டிருந்ததும் கண்ணில் பட்டது. அட ஒரு சாதம் பருப்பு வைத்திருந்தாலும் சிம்மா உண்டிருப்பான். கண்ணில் பட்ட எதுவும் கருத்தில் படவில்லை.

அவள் முகம் போன போக்கிலேயே பதிலை கண்டுகொண்டவன், “ம்ம்… உன் மனசுல விழுந்திருக்க திரையை விலக்கினா தெரியும்.”

அவன் கூறியதை ஒரு உதட்டு சுழிப்போடு, “ஏதோ டிஃபால்ட் மோட்ல செஞ்சதை ஓவர் அனலைஸ் பண்ணாதேன்னு இப்பதான் சொன்னேன். சரி…என்ன பிரச்சனை? அதைச் சொல்லு.”

“பிரபா உங்கிட்ட என்ன சொன்னான்? ஏன் வீட்டுக்கு வந்த? என் வீட்டு அட்ரெஸ் எப்படி தெரியும்?”, அவன் பங்குக்கு கேட்டு வைத்தான்.