“அட. ஆமாம் சர். பங்களாவை ஷூட்டிங்குக்கு ஒரு வாரம் பத்து நாள் கேட்கலாம்னு பார்த்தோம். அப்பதான் ஹால்ல போட்டோ பார்த்தேன். நீங்க அவரை தூரத்துலேர்ந்தாவது பார்த்திருக்கீங்களா சார்? ஆள் செம்மையா இருந்தார்.”

“ஹம்ம்… புல்லட் ஓட்டிட்டு வருவார். பார்த்துருக்கேன். “

“ அட… மாஸா இருக்கும் போலவே. எங்க கதையிலயும் ஒரு ஊர் பெரிய மனுஷர் இருக்கார் சார். நீங்க கொஞ்சம் அவரைப் பத்தி சொல்லுங்களேன், அது வெச்சு அவர் காரெக்டர் கொஞ்சம் டெவெலப் பண்ணலாம். தண்ணி சிகரெட் எதாவது பழக்கமிருந்துச்சா?”, பிரபாவின் குரல் ஆர்வமாக வந்தது.

ஒரு இகழ்ச்சிப் புன்முறுவல் வந்து சென்றது முத்துசாமியின் முகத்தில்.”இப்ப மாதிரி, செல்லு , இன்டெர்னெட் இல்லாத காலம்ப்பா அது. எக்கச்செக்க பணம் , அதிகாரம்னு வளர்ந்த பிள்ளை. அதெல்லாம் பழகிக்காம இருக்குமா? சகலமும் இருந்துச்சு”

“அப்ப பொண்ணுங்க?”, அவரை யோசிக்கவிடாமல் அடுத்து கேட்டான்.

நேரடியாக பதில் சொல்லாது ஒரு பெருமூச்சை விட்டவர், “அந்தப் பாவத்துக்குத்தான் ஆண்டவன் படுக்கவெச்சிருக்கான். ஏழைங்க சாபம் பலிக்காமப் போகாது.”, என்றவர் சட்டென்று சுதாரித்து,

“ஏ…யெப்பா… நான் எதுவும் சொன்னேன்னு சொல்லி வெக்காதே. அந்த மனுஷனை விட்டுட்டு வேற விஷயம் பேசு.”

“அட…என்ன சார் இப்படி ஒரு விஷயம் சொல்லிட்டு ஜகா வாங்கறீங்க? நான் யாருக்கும் எதுவும் சொல்ல மாட்டேன். எப்பவோ நடந்ததுக்கு இப்ப ஏன் சர் பயப்படுறீங்க? அந்தக் கால பண்ணையார் படங்கள்ல வர மாதிரி..எதுவுமா?”, பிரபா எடுத்துக் கொடுக்க, முத்துசாமியின் ஏழைகளின் சாபம் என்றதிலேயே சற்று துவண்டிருந்தான் சிம்மன்.

“ஹம்ம்.. குத்துவிளக்காட்டம் பொண்டாட்டி இருந்து கூட அந்த மனுஷன் கழுகுப் பார்வையில அழகா யாரும் சிக்கிடக்கூடாது. அவன் ஊருக்குள்ள எதுவும் வெச்சிக்கமாட்டான். ஆனா சுத்துப்பட்ட கிராமத்துல…நான் இருந்த ஒரு வருஷத்துலேயே…”

“…”

“ஆட்டக்காரிங்க, இவனுக்கு வளைஞ்சு குடுத்து போற பொண்ணுங்க போக, பள்ளிக்கூடத்துக்கு ஒரு சைன்ஸ் வாத்தியார் புதுப் பொண்டாட்டியோட வந்திருந்தார்.  அந்தப் பொண்ணை … ம்ப்ச்…”, தலை தானாக பழைய நினைவில் ஆடியது முத்துசாமிக்கு.

“ஐயோ… அப்பறம்?”

“மம்.. அந்தப் பையன் எங்கிட்டதான் வந்து அழுதான். நியாயம் கேட்டுப் போனா, ஐயா அங்க வரவேயில்லை. வெளியூர்லர்ந்து அண்டி பிழைக்க வந்த இடத்துல பொண்ணை வெச்சு எங்களைமிரட்டுறீங்களான்னு எகிறுனான் அவன் கூடவே சுத்தற அல்லக்கை. போலீசுக்குப் போனா, அவங்களை வெச்சே அந்தப் பொண்ணை பத்தி தப்பா பேசி ஊர் சிரிக்க வெச்சிருவோம். பணம் எதாவது வேணும்னா வாங்கித் தரேன். ஊரைவிட்டு சொல்லாம கொள்ளாம ஓடிப் போகச் சொல்லுன்னு கத்திய வெச்சு மிரட்டினான்.”

“விட்டுட்டீங்களா?”

“வேற என்ன பண்ண முடியும்? அந்தாள் ஆட்டம் அதோட அடங்கலை. அப்படி இப்படி கொஞ்சம் விசாரிச்சதுல, சுத்த அயோக்கியன்னு தெரிஞ்சுது. நான் விசாரிக்கறது தெரிஞ்சுதோ என்னவோ, எனக்கு ட்ரான்ஸ்பர் வந்துடுச்சு.”

“ அந்த சைன்ஸ் வாத்தியார் என்ன ஆனார் சார்?”

“தெரியலைப்பா. எங்க இருந்தாலும் நல்லபடியா அவன் சம்சாரத்தோட வாழணும்னு வேண்டிப்பேன்.”, என்றவர், “இதையெல்லாம் உன் படத்துல வெச்சா பண்ணையாருன்னாலே வில்லன் தான். எப்படா ஃபார்முலா மாத்துவீங்கன்னு கேட்பானுங்க. ஆனா சொத்தும் செல்வாக்கும் இருக்கறவனுக்குள்ள இப்படி ஒரு வக்ரம் இருக்கறது இன்னமும் நடந்துட்டுதான் இருக்கு. பொண்ணுங்க பாதிக்கப்பட்டுகிட்டுதான் இருக்காங்க.”, வருத்தமாக முடித்தார்.

ஒரு சில நொடிகளுக்குப் பின், “அவரைப் பத்தி வேற யார்கிட்ட சார் விசாரிக்கலாம்?  சுத்தமல்லியில ஊர்மக்களுக்கு உதவற மாதிரி நிறைய செஞ்சிருக்கார்னு சொல்லியிருந்தாங்க.”, பிரபஞ்சன் கேள்வியில்,

“மம்… நல்லதும் கெட்டதும் சேர்ந்ததுதான மனுஷன்? அவரோட கிராமத்துக்கு அவர் ரொம்ப ரொம்ப நல்லவர். அவரோட கருப்பு பக்கங்களைப் பத்தி சொல்றவங்கன்னு எனக்கு யாரையும் தெரியாதேப்பா.”

மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு, கிளம்பிவிட்டான் பிரபஞ்சன்.

கிளம்புவதாகவும், பிறகு பேசுவதாகவும் சிம்மனிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.

அவினாஷின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள் குமுதினி. சிம்மனிடம் பேசியதும் ஒரு வாரம் பனிஷ்மென்ட் என்று அவன் சொன்னதையும் சொல்ல, “காட் டாமிட்!” என்று திட்டியவன், “அவன் கிட்ட பக்குவமா சொல்லாம என்ன குமுதினி  நேரா உன் தப்பு பிராயசித்தம் பண்ணுன்னு கேட்ட? ட்ரம்ப் கார்ட் முதல்லயேவா சொல்லுவாங்க? ஒரு இன்டர்வ்யூல இப்படித்தான் எடுத்துட்டு போவியா?”, அவினாஷ் பேசப் பேச குமுதினிக்கும் எரிச்சல் ஏறியது.

“இது ஷோ இல்லை அவினாஷ். என் எமோஷன் தள்ளி வெச்சிட்டு டீல பண்ண ஜெய் யாரோ மூணாவது மனுஷன் இல்லை. அவன் கடுப்படிக்கவும் சட்டுன்னு பேசிட்டேன்.“,தோள் குலுக்கினாள்.

“ஆனா, அவன் எவ்வளவு ஸ்மார்ட்டா பழியை உன் மேல திருப்பினான் பாரு.”, அவினாஷ் பொருமினான்.

“பொறுமையா பேசியிருந்தா மட்டும் அவன் இப்படி சொல்லியிருக்க மாட்டான்னு நினைக்கிறியா?”, குமுதினியின் கேள்வியில் உதட்டை சுழித்து அதிருப்தியைக் காட்டினான் அவினாஷ்

“நான் வேணா பேசட்டுமா?”,அவினாஷின் கேள்வியில் வேகமாக மறுத்தவள், “மறுபடியும் தள்ளிப்போட அவனுக்கு இன்னொரு சான்ஸ் தராதே. ஆனது ஆச்சு, இன்னும் அஞ்சு நாள்தானே, பொறுப்போம்.”

“ம்ப்ச்…திடீர்னு ஊர்ல போய் உட்கார்ந்துக்கறான். திரும்ப போக மாட்டான்னு என்ன நிச்சயம்?  இந்த பிரச்சனை ஆரம்பிச்சு இரண்டு மாசத்துக்கும் மேல ஆச்சு. அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடினோம். அதுனால ஊருக்கே தெரிய வந்து அசிங்கப்பட்டாச்சு. மினிஸ்டர் பெருசாக்கினாலும், லீக் அவன் பக்கமிருந்து வந்ததுனாலதான?  நீ சொன்னியா, அவன் அப்பா பார்த்த வேலைன்னு?”

“சொன்னேன். அவனாவது நம்பறதாவது. அவனுக்கு அவமானம் வரும்னு தெரிஞ்சு அவங்க அப்பா இப்படி ஒரு விஷயத்தை பண்ண விட்டிருக்கமாட்டாருன்னு அவ்வளவு கான்ஃபிடென்ட்டா சொல்றான்.”, குமுதினி வெறுப்பாகக் கூறினாள்.

“அதெப்படி ? அவன் அப்பான்னு வரும்போது மூளைய கழட்டி வெச்சிருவானா? நான் சீக்ரெட்டா விசாரிச்சு அந்தாள் பண்ண அட்ராசிட்டியெல்லாம் ப்ரூஃப் எடுக்கறேன் குமுதினி. அதைப் பார்த்தப்பறமாச்சம் அவனுக்குப் புரியும்.”

“நீ முன்ன ஆள் வெச்சு விசாரிச்சது கூட அவங்களுக்கு உடனே தெரிஞ்சிடுச்சு. இதுல இப்படி விசாரிக்க ஆரம்பிச்சா, அதையே ஒன்னுக்கு பத்தா ஜெய்கிட்ட ஏத்தி விடுவாங்க. அப்பறம் அவங்கிட்ட என்ன ப்ரூஃப் காட்டினாலும், ஜோடிச்சதுன்னுதான் சொல்லுவான். அவனா விசாரிக்கணும். ஒன்னு இரண்டு வாட்டி பேச்சோட பேச்சா சொல்லியிருக்கேன். அதுக்கே எங்கிட்ட எகிறினான். ஆனாலும் நான் சொன்னது தப்புன்னு காட்டவாவது செக் பண்ண வாய்ப்பிருக்கு. பார்க்கலாம்.”

அவினாஷ் பதில் பேசாவிடினும், ‘ஓ… அவ்வளவு தெரியுமா அவனைப் பத்தி..’ என்று யோசனை செல்ல, ‘ஹ்ம்.. கல்யாணம் பண்ணி நாலு நாள் தான், ஆனா அதுக்கு முன்னாடி இரண்டு வருஷ லவ் ஆச்சே. ‘ , என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.

அவன் அமைதியில் ஜெய் பற்றி இன்னமும் கோபமோ என்று நினைத்தவள், “கொஞ்சம் பொறுமையா இரு அவினாஷ். அவனோட உட்கார்ந்து பேசினா இது முடிஞ்சுடும். அதுக்கு வேளை வரணும்.”, என்று விளக்கம் கூறினாள்.

“எதுக்கும் வேளைன்னு ஒன்னு வரணுமில்லையா சார். நீங்க ஏன் பர்சனலா எடுத்துக்கறீங்க? இது  நடந்தப்போ நீங்க சின்ன பிள்ளை. நீங்க வளர்ந்து வர நேரம் அவர் ஆக்டிவிட்டீஸ் குறைச்கிக்கிட்டு இருப்பார். அதுதான் உங்களுக்கு தெரியாம பார்த்துக்கிட்டு இருப்பாங்க.”, பிரபஞ்சன் சிம்மனை மறு நாள் அலுவலகத்தில் தேற்றிக்கொண்டிருந்தான்.

“ம்ப்ச்… அவரோட இந்தப்பக்கத்தை ஜீரணிக்கவே முடியலைடா. எனக்கு ஹீரோவா இருந்தவர். குமுதினி என்னை விட்டு போனதுக்கு அப்பறமும், வேற கல்யாணம் செய்துக்கச் சொன்னார். நீங்க அம்மா நினைப்புலயே இருக்கீங்களேப்பா, உங்களைப் பார்த்து வளர்ந்தவன். எனக்கும் கல்யாணங்கறது ஒரு முறைதான். இந்த விஷயத்துல வற்புறுத்தாதீங்கன்னு கத்தினேன். அப்பக்கூட உண்மையை சொல்லலைடா.”

சிம்மனை வினோதமாக பார்த்த பிரபஞ்சன், “ஏன் பாஸ். உங்க அப்பா சொல்லியிருந்தா, நீங்க வேற கல்யாணம் செய்திருப்பீங்களா?”

“அதில்ல பிரச்சனை. அவர் சொல்ல வாய்ப்பிருந்தும், என் வாழ்க்கையை சரி செய்யணுங்கறத்துக்காகக் கூட, அவர் பிம்பத்தை இழக்க விரும்பலை. அட உங்க அம்மா போன சில வருஷத்துக்கப்பறமா ஏதோ ஒரு லேடின்னு கூட அவரால சொல்ல முடியலை.”, அந்த அதிர்விலிருந்தும் சிம்மனால் வெளி வர முடியவில்லை.

“நீ சொன்ன மாதிரி, எங்கப்பாவுக்கு என்னைத் தவிரவும் வேற வாரிசு இருக்கவும் வாய்ப்பு இருக்கும் போல பிரபா. முத்துசாமி சொன்னது பார்த்தா, அப்பாவும் முத்தையனும் கண்டிப்பா பாதிக்கப்பட்டவங்களுக்கு நியாயம் செஞ்சிருக்க மாட்டாங்க. டீடெயில் எடுக்கணும்டா.”

சிம்மன் பேசியதைக் கேட்ட பிரபா, “ஊர்ல இருக்கவங்க யாரையும் விசாரிக்காம விவரம் கலெக்ட் பண்றது ரொம்ப கஷ்டம் சார். ஒன்னு உங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசி உங்களை விசாரிக்க தூண்டினாங்களே, அவங்களைக் கேட்கலாம். இல்லாட்டா முத்தையனை லாடம் கட்டி விவரத்தை வாங்கலாம்.” யோசனை கூறினான்.

குமுதினியிடம் கேட்கலாமா என்று எண்ணம் செல்ல, ‘அவளே எட்டு வருஷமா ஊரோட கான்டாக்ட்ல இல்லை. அவ பாட்டி சொன்னதை வெச்சுத்தான் பேசியிருப்பா. அவ பாட்டி யாரை பத்தியாவது பேசினாங்களான்னு கேட்போமா?’

‘ஊருக்குள்ள நீதான் மாஸ்ன்னு சுத்தற. உங்கப்பா பத்தின விவரம் உன்னால எடுக்க முடியலையா? எங்கிட்ட வந்து கேட்கறன்னு கேட்டா எங்கடா கொண்டு போய் முகத்தை வெப்ப? இருக்கற அசிங்கம் போறாதுன்னு அவகிட்டேயும் படணுமா?  அவினாஷ்கிட்ட சொல்லி வெச்சா அதுக்கும் மேல அசிங்கம். பால்டப்பா இதுதான் சாக்குன்னு பெரிய மாட்டு ஊசியா குத்துவான்.”, நினைக்க நினைக்க, இது சரி வராது என்று தோன்றியது.

“என்ன சார் யோசிக்கறீங்க?”

“ம்ம்.. முத்தையனை தூக்கிப்போட்டு மிதிச்சாலும், செத்துப் போவானே ஒழிய ஒரு வார்த்தை வெளிய வராது. சரி நான் வேற வழி கிடைக்குமான்னு பார்க்கறேன். நீ வேற யார் டீடெயிலாவது கிடைக்குதான்னு தேடறதை விடவேணம்னு சொல்லி ஃபாலோ பண்ணிட்டே இரு.”, அப்போதைக்கு முடித்து வைத்தான்.

இரவு உறங்கச் செல்லும் தருவாயில் சிம்மனுக்கு அந்த எண்ணம் தோன்றியது . முத்தையனைப் பேச வைக்க ஒரே வழி, அவனை அடிக்காமல் அவன் மகன் மருதுவை கடத்தி வைத்து அடிப்பது.