சிம்மன் மொட்டை மாடியில் இரவை வெறித்திருந்தான். இரண்டு நாட்களாக அவனும் பல வகையில் சுற்று வட்டார கிராமத்தில் இருப்பவர்களிடம் தந்தையின் இளமைக் காலத்தைப் பற்றி லேசு பாசாக விசாரிக்க அவரை புகழ்ந்து மட்டுமே பேசினார்கள். விசாரிப்பது அவர் மகனாயிற்றே என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம். இதை யார் மூலம் அணுகுவது என்று புரியவில்லை. டிடெக்டிவ் ஏஜென்சி வெளியாட்கள், இங்கே வேலைக்கு ஆகாது. பத்திரிக்கை யூடூபில் காண்பித்த அந்த போட்டோவை வைத்து அந்த சானலுக்குகான, பேட்டி என்று கூட வரமுடியாது. இப்போதுதான் இத்தனை பிரச்சனையாகியிருக்க யாரும் பேசமாட்டார்கள்.
என்னவோ பெரிய ரியல் எஸ்டேட் புள்ளி என்று தன்னை நினைத்துக் கொண்டிருப்பவன் ஏதோ ஒரு வேலிக்குள் சிக்கியிருப்பது போல தோன்ற ஆரம்பித்தது. ஊர்க்காரன் எவனும் பேசப்போவதில்லை. வேறு யார் என்று மண்டையை உடைத்துக்கொண்டதில், அந்த நேரத்தில் ஊரிலிருந்த வெளியாட்கள் எவரேனும் கிடைத்தால், முயற்சிக்கலாம் என்று தோன்றியது.
தொண்ணூறுகளின் தொடக்கம், அவன் தந்தையின் பருவ வயது. அந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அருகில் உள்ள ஊர்களில் வேலைக்கு வந்த இன்ஸ்பெக்டர், அரசுப் பள்ளி வாத்தியார்கள், போஸ்ட்மேன் போன்றவர்களை விசாரித்தால் எதாவது நூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று எண்ணம். பிரபஞ்சனை அழைத்து, எதற்கு என்ற முழு விவரம் கூறாமல், ஆட்கள் யார் யார், இப்போது இங்கே இருக்கிறார்கள் என்பதை அரசாங்க டேட்டாக்களின் மூலமாக சேகரிக்கச் சொன்னான். பிரபஞ்சனுக்குக் கொடுத்த இரண்டு நாட்கள் முடிவுக்கு வந்திருந்தது.
பிரபஞ்சன் அழைத்துவிட்டான். “பாஸ்…”
“சொல்லுடா. உனக்குக் கொடுத்த டைம் முடியப்போகுதே, ஒரு தகவலும் காணமேன்னு நினைச்சேன்.”
“ஊர்லயே இருக்க பெருசுங்ககிட்ட, அட முத்தையனையே விசாரிச்சா சொல்லிடப்போறாங்க. அந்த பேர், விவரம் கூட என்னையே தேட சொல்லிட்டு, அதுவும் இரண்டு நாள்ல, என்ன தகவலை எதிர்பார்க்கறீங்க?”, என்று அலுத்துக்கொண்டவன், “இரண்டு பேர் விவரம் கிடைச்சிருக்கு. ஒன்னு போஸ்ட்மேன், ஆனா அவர் காலமாயிட்டார். குடும்பம் திண்டுக்கல் பக்கத்துல இருக்காம். அடுத்து ஒரு ஹெட்மாஸ்டர் ஆனா அவர் ஒரு வருஷம் கூட இருக்கலை. நரசிங்க நல்லூர் கவர்மென்ட் ஸ்கூல்ல இருந்திருக்கார். இப்போ ரிட்டையராகி சென்னையிலதான் இருக்கார்.”
“என்னடா, பத்து பதினைஞ்சு வருஷம் டைம், இரண்டு பேரு, அதுல ஒருத்தர் இல்லைங்கற? நான் இன்னும் எதிர்பார்த்தேனேடா?”
“பாஸ், முப்பத்தஞ்சு வருஷம் முன்ன வேலை பார்த்தவங்க ரிக்கார்ட்ஸ் கேட்கறீங்க, அதுவும் கிராமத்துல தேடாம கவர்மென்ட் சோர்ஸ்ல. ஞாபகம் இருக்கட்டும். இன்னும் தேடுவாங்க. உங்க அவசரத்துக்கு முத்துசாமி வாத்தியார்தான் பிடிக்க முடிஞ்சுது. நானே போய் பேசவா இல்லை நீங்க சென்னை வரீங்களா? நிறைய வேலை பெண்டிங்ல இருக்கு.”
“நானே வரேன்”, என்றவன் மறுனாளே சென்னை வந்தடைந்தான்.
அலுவலகம் சென்று அவசர வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவனை இடையில் அழைத்தாள் குமுதினி. எடுப்பதா என்று யோசித்தவன், அழைப்பை ஏற்றிருந்தான்.
“ஜெய்… இப்படி நீ தள்ளித் தள்ளி போடறது எனக்கும்தான் கடுப்பாகுது.”,
“தேவையில்லாம அந்த மினிஸ்டருக்கு குடைச்சல் குடுத்ததாலதான் இப்படி வைரலாச்சு. அதுக்கு பனிஷ்மென்ட்டா ஒரு வாரம் எங்கிட்ட வராதே. அப்பறம் பார்க்கலாம்.”, வைத்துவிட்டான்.
பிரபஞ்சனிடம் இதுவரை அவன் அலுவல் சம்மந்தமான விஷயங்கள், இப்போது குமுதினியால் அவன் வாழ்க்கையின் சில பக்கங்களும் சொல்லியிருக்கிறான். ஆனால் இது அவன் தந்தை பற்றிய விவகாரம். இவனாகப் போய் கேட்டால் ஊரில் சொன்னது போல அவரிடமும் நல்லவை மட்டுமே வரும். வெளியாட்களிடம் இந்த வேலையைத் தந்து, ஏதேனும் ஏடாகூடமான விஷயங்கள் தெரிய வந்தால் அதுவும் பிரச்சனையாகலாம். அவன் கல்யாணக்கூத்து போன்று மறுபடியும் எதுவும் வைரலாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
பிரபஞ்சனைக் கொண்டு விசாரிப்பதென்றால், அவன் சந்தேகத்தையும், என்ன தேடுகிறான் என்பதையும் விளக்கவேண்டும். என் தந்தையின் நடவடிக்கைப் பற்றி விசாரிக்கிறேன் என்று சொல்லும் சங்கடமொரு புறம். அதே நேரம் குமுதினி சொன்னது உண்மை என்று தெரியவந்தால் அதை பிரபஞ்சன் விசாரித்து சொல்வது எவ்வளவு அசிங்கம்?
இதுதான் சிம்மனை அரித்துக்கொண்டிருந்தது. தேவையில்லாமல் என் சந்தேகத்தை கிளப்பிவிட்டாள். இது மட்டும் பொய் என்பது தெரிய வரட்டும், பிறகு இருக்கிறது கச்சேரி என்று பலவிதமாக எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
பின் மதியம் ஒரு மீட்டிங்கை முடித்துக் கொண்டு, “பிரபா, அடுத்த அரை மணி நேரம் யாரும் தொந்தரவு பண்ணாம இருக்கச் சொல்லிட்டு ரூமுக்கு வா. பேசணும்.”, என்றான்.
பத்து நிமிடங்களில் வந்தவன், “சொல்லுங்க சார்”, என்றான்.
“உட்காருடா. அந்த வாத்தியார் டீடெயில் எடுத்தியே அது விஷயமா பேசணும். அந்த மனுஷனுக்கு போனைப் போட்டு சாயந்திரம் சந்திக்க முடியுமான்னு கேளு.”
“என்ன விஷயம்னு கேட்டா?”
“ம்ம்… அதுதான். அவரை நீதான் மீட் பண்ணப்போற. நம்ம கம்பனியோ, நானோ இதுல வரக்கூடாது. நீ அந்த சுத்துவட்டாரத்துல 90ஸ்ல எப்படி இருந்ததுன்னு ரிசர்ச் பண்றங்கற மாதிரி சொல்லு. எதாவது சினிமா படம், நீ அசிஸ்டென்ட் டைரக்டர்ங்கற மாதிரி எதாவது கதை சொல்லு.”
பிரபா சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டான். இப்படி கதை சொல்லி விவரம் சேகரிப்பது புதிதில்லை. முன்பும், நிலம் வாங்க வருபவன், அல்லது புரோக்கர் என்பது போல சில இடங்களுக்கு சென்று பேசியிருக்கிறான். இப்போது வளர்ந்துவிட்ட பின் அதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள். தன்னை அனுப்புகிறார் என்றால் இது வேறு எதுவோ என்பது வரை புரிந்தது.
” அது… அவர் லேடீஸ் மேட்டர்ல கொஞ்சம் வீக்குன்ற மாதிரி…”
“அட என்ன பாஸே… நான் என்னவோ பெரிய விஷயமோன்னு நினைச்சிட்டேன். ஊருக்கு பெரிய மனுஷன். இதெல்லாம் இல்லாம இருக்குமா? சரி, அப்படியே இருந்தாத்தான் என்னவாம்? சொத்துக்கு வாரிசு யாராவது வருவாங்கன்னு யோசிக்கறீங்களா?”, இலகுவாகக் கேட்டான்.
பல்லைக் கடித்தவன், “இத்தனை வருஷமும் அப்படி எதுவும் என் காதுக்கு வரலை. எங்கம்மாக்கு உண்மையா இருந்த மாதிரிதான் இருக்கு. அப்படி இருக்கும்போது, நான் இப்படி கேட்டது தெரிஞ்சாலே அப்பா வருத்தபடுவாருடா. ஆனா எனக்கு வந்த செய்தி உண்மையா தப்பான்னும் தெரியணும். அது மட்டும் தப்பா இருந்தா, இட்டு கட்டிப் பேசனவங்க வாயை தைக்கணும்”, எனும்போதே சிம்மனின் அடக்கி வைத்த ஆவேசம் தெரிந்தது.
“அவ்வளவுதானே மேட்டர்? முத்தையன் சொல்லாட்டா முத்துச்சாமி சொல்லிட்டு போறார். நீங்க சில் பண்ணுங்க. நான் போய் பேசிட்டு உங்களுக்கு லைவ் ரிகார்டிங் அனுப்பறேன்.”
பிரபா பேசிக்கொண்டிருப்பதை பக்கத்துத் தெருவில் காரிலிருந்து போன் மூலம் கேட்டுக்கொண்டிருந்தான். நிஜமான டைரக்டரின் உதவியாளன் என்பது போலவே கதையளந்துகொண்டிருந்தான்.
“லொகேஷன் பார்க்க போயிருந்தேன் சார். அங்க சுத்தமல்லி கிராமம் தெரியுங்களா? ஒரு சூப்பர் பங்களா சார். ஊர் பெரியவர் பேர் கூட நரசிம்மன்னு. உங்களுக்குத் தெரியுங்களா?”
அதுவரை இலகுவாகப் பேசிக்கொண்டிருந்த முத்துசாமி ஒரு சிறு தயக்கத்திற்குபின், “ஆங்…தெரியாது…ஆனா கேள்விபட்டிருக்கேங்க.”
“மம்.. நானும் பார்க்கலைங்க. அவருக்கு இப்ப பக்கவாதம் வந்து இரண்டு வருஷத்துக்கும் மேலா, படுத்த படுக்கையா இருக்காராம். ஊர்ல சொன்னாங்க. ”, சற்று நிறுத்தினான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவர், “ஓ…படுத்த படுக்கையா இருக்காரா? நிஜமாவா?”