விஷ்ணு ஆச்சரியமாக புருவம் தூக்கினாலும் அவளிடம் நக்கலடித்தான். ஈஷ்வரிடமும் கோவம் தான். நரசிம்மன் பாசத்தை சுயநலம் என்று பேசியது பிடிக்கவில்லை. போனும் செய்யாமல், நேரிலும் சென்று பார்க்காமல் இருக்க, ஈஷ்வரே போன் செய்தான்

விஷ்ணுவிற்கும் அதற்கு மேல் அவனிடம் முறுக்க  முடியவில்லை. நேரில் சென்று பேச, அவன் பல்லவியை விட்டு ஐபிஸ் படிக்க முடியாது என்றான். “நீ அப்பாகிட்ட பேசுடா..”   ஈஷ்வர் கேட்க, நரசிம்மனிடம் பேச போனான்

அவர் இப்போ அதை பத்தி பேச வேண்டாம்.. என்று முடித்துவிட, விஷ்ணுவிற்கு உள்ளுக்குள் சந்தேகம். இவர் என்ன இத்தனை வருஷம் ஐபிஸ் ஒன்னே தான் குறின்னு சுத்திட்டு இருந்தவர், இப்போ அப்பறம் பேசலாம் சொல்றார். மேலும் யோசிக்க முடியவில்லை

சின்னுவுடன் அமெரிக்கா கிளம்புவதற்கான ஆயத்தங்கள் இழுத்து கொண்டது. அந்த மாதம் முழுதும் சின்னு உடல் தேற்றி, விசா எடுத்து ஈஷ்வர், டாக்டர் பிரதாப் உடன் கிளம்பிவிட்டான்

துர்கா, சக்கரவர்த்தி இருவரும் இடையில் போய் பார்ப்பதாக முடிவானது. இவர்கள் சென்ற இரண்டாம் நாளே, சின்னுவிற்கு இடமாற்றம் சளி, ஜுரத்தை கொடுத்துவிட்டது. அந்த வாரம் முழுதும் அதிலே கழிய, அடுத்து தான் ட்ரீட்மெண்ட் ஆரம்பித்தனர்.

துர்கா வந்துவிட, சின்னு முகம் மலர்ந்தான். “என்ன இருந்தாலும் அம்மா, அம்மா தான் போல..” விஷ்ணு சொல்ல, ஈஷ்வர் சிரிப்புடன் அவன் தோள் தட்டி கொடுத்தான். 

அங்கும் எல்லா டெஸ்டுகள் எடுத்து, மறுநாள் ஆப்பரேஷன் என்று நாள் குறிக்கபட்டது.  இங்கு பல்லவி கிளம்பியிருந்தாள். ஈஷ்வர் அவள் அனுப்பியிருந்த மெசேஜ் பார்த்து புரியாமலே நின்றான். அந்த விஷயம் கிரகிக்கவே அவனுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது போல. 

தெரியாத தேசத்தில் சிலையாக அமர்ந்திருந்தான். கண்ணீர் அவன் அறியாமலே வழிந்தது. “எங்க போனா..? ஏன் இந்த மெசேஜ்..? என்ன நடந்துச்சு அவளுக்கு..?அப்பா ஏதும் செஞ்சுட்டாரா..? இல்லை வேறெதுவும் பிரச்சனையா..?” திரும்ப திரும்ப அவளுக்கு போன் செய்ய, சுவிட்ச் ஆப் தவிர வேறெந்த பதிலும் இல்லை. 

ஊருக்கு கிளம்பிடலாம்.. முடிவுக்கு வந்து உள்ளே செல்ல, விஷ்ணு உடைந்து போய் அமர்ந்திருந்தான். “விஷ்ணு என்ன ஆச்சு..?” ஈஷ்வர் பயத்துடன் கேட்க, 

“சின்னு.. சின்னு..” ரூம் காட்ட, ஈஷ்வர் வேகமாக சென்று பார்க்க, சின்னு மூச்சுக்கு தவித்து கொண்டிருந்தான். ஆக்சிஜன் வைத்து அவனை சமாளித்து கொண்டிருக்க, ஈஷ்வரும் பயந்து விட்டான். 

“விஷ்ணு ஒன்னும் இருக்காதுடா..” நண்பனை அணைத்து கொள்ள, விஷ்ணு கலங்கி தான் போனான். மறுநாள் ஆப்பரேஷன் தள்ளி போனது. இந்த நிலையில் ஈஷ்வரால் ஊருக்கு செல்ல முடியவில்லை.  

ஈஷ்வர் வெளியே வந்து அபார்ட்மெண்ட் செக்கியூரிட்டிக்கு அழைத்து பேச, அவர் நரசிம்மன் வந்து சென்றதை சொல்லிவிட்டார். உடனே  நரசிம்மனின் வலது கை கலையரசுக்கு போன் செய்து விசாரிக்க, அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்றார். 

மகா அந்த நேரம் போன் செய்ய, “பல்லவியை பார்க்க போனியா..?” கேட்டான் கோபத்துடன். 

“இல்.. இல்லைண்ணா..” மகா சொல்ல, 

“ஏன் போகல, நான் தான் உன்கிட்ட சொல்லிட்டு வந்தேன் இல்லை அவ தனியா இருக்க அப்பப்போ போய் பார்த்துக்கோன்னு ஏன் போகல, அப்போ உனக்கும்  அவ வேண்டாமா..? அதான் எல்லாம் சேர்ந்து அவளை துரத்துட்டீங்க, எங்கேயோ போயிட்டா, எல்லாம் உங்களால் தான், உன் அப்பா அவரோட  அரசியல் புத்தியை காமிச்சிட்டார், அவர் பொண்ணு நீயும் இப்படி தான்  இருப்ப..?”  அவனின் மொத்த கோவத்தை, இயலாமையை மகா மேல் இறக்கினான். மகாவிற்கு இது புதிய விஷயம் ஆச்சே.. 

“ண்ணா.. நான் அப்படி நினைக்கல.. நான் அப்பாகிட்ட பேசுறேன்..”  அவள் பேசி கொண்டிருக்க, ஈஷ்வர் போனை வைத்துவிட்டான். 

மகா உடனே நரசிம்மனிடம் சென்று கேட்க, அவர் அதிர்ந்து தான் போனார். “என்னம்மா சொல்ற..?” திரும்ப கேட்டு உறுதி செய்து கொண்டார். பல்லவி நாளை தானே அவரை வரச்சொன்னாள், இன்றே இப்படி கிளம்பிவிடுவாள் என்று அவருக்கும் தெரியாதே. 

உடனே ஆள் விட்டு விசாரித்தவர், அடுத்த இரண்டாம் நாளே பல்லவியை கண்டுபிடித்துவிட்டார். “பல்லவி என் கண் பார்வையில   பத்திரமா தான் இருக்கா, உன் அண்ணன்கிட்ட  சொல்லிடு..”   மகனின் மனநிம்மதிக்காக மகளிடம் சொல்ல, அவள் உடனே ஈஷ்வருக்கு அழைத்தாள். 

அவன் எடுக்கவே இல்லை. விஷ்ணுவிற்கு அழைத்து சொல்ல, அவனுக்கு முதலில் புரியவே இல்லை. “என்ன சொல்ற..? பல்லவி எங்க இருக்கா..?” திரும்ப கேட்க, 

“அண்ணா உங்ககிட்ட சொல்லலையா..?”  மகா ஆச்சரியமாக கேட்டாள். 

“அவன் சொல்லலண்ணா என்ன..? நீ சொல்லு என்ன ஆச்சு..?” வம்படியாக கேட்டு தெரிந்து கொண்டான். ஈஷ்வரிடம் மகா சொன்னதை சொல்ல, அவனிடம் கொஞ்சம் நிம்மதி. மகாகிட்ட சொல்லியிருக்கார்ன்னா பல்லவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

“இதுக்கு தான் இப்படி இருக்கியா..? என்கிட்ட சொல்ல மாட்டியாடா..?” விஷ்ணு வருத்தத்துடன்  கேட்க, 

“விடுடா முதல்ல இங்க சின்னுவை பார்ப்போம், நாளைக்கு அவன் ஆப்பரேஷன்..”  என்று அதில் கவனத்தை செலுத்தினர்.

துர்கா, சக்ரவர்த்தி கிளம்பி வந்திருக்க, சின்னு வெளியே நார்மலாக தெரிந்தாலும் உள்ளுக்குள் என்னவோ போல இருந்தது அவனுக்கு. வெளிக்காட்டி கொள்ளவில்லை

குடும்பமே அவனுக்கு ஓடி கொண்டிருக்க, எதுவும் பேசி அவர்களை கஷ்ட படுத்த விரும்பவில்லை. ஏற்கனவே தன்னால் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் பிரச்சனை.. 

அவன் பட்ட அடிகள் அவனை பக்குவப்படித்தி இருந்தாலும், மனதுக்குள் முழு விரக்தி தான். இப்படி இருக்கிற நான் வாழ்ந்து என்ன செய்ய போறேன்.. உள்ளுக்குள் இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது

“சின்னு.. என்ன யோசிக்கிற..?”  விஷ்ணு அவன் முகம் பார்த்திருந்தவன் அருகில் வர, 

“ஒன்னும் இல்லைண்ணா..” என்றான். 

“சின்னு.. உனக்காக நாங்க இருக்கோம்..” கைகளில் அழுத்தம் கொடுத்தான் அண்ணன். 

துர்கா, சக்ரவர்த்தி மிகவும் துயரத்தில் நின்றனர். இன்னும் எவ்வளவு தான் என் மகன் படுவான்.. பெற்றவர்களுக்கு அவ்வளவு வேதனை. சின்னு ஆப்ரேஷனை தியேட்டர் கொண்டு போக, வெளியே நின்ற அந்த நாள் முழுதும் ஊர்ந்தது. மிகவும் கொடுமையான நேரங்கள். 

காலையில் ஆரம்பித்த ஆப்ரேஷன் மாலை போல முடிவுக்கு வந்தது. ஆப்ரேஷன் வெற்றி தான் என்றாலும் நாளை காலை வரை பொறுக்க வேண்டும் என்றனர். இவர்களின் தவிப்பான நிமிடங்களும் முடிவுக்கு வர, சின்னு நல்ல முறையில் கண் விழித்தான்.

எல்லோருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. அவர்களின் முயற்சிக்கும், பாசத்திற்கும், வேண்டுதலுக்கும் பலன் கிடைத்ததது. மேலும் சில நாட்கள் அங்கேயே இருந்து சின்னு உடல்நிலையில் முன்னேற்றம் கண்டதும்  இந்தியா திரும்பினர். 

ஏர்போர்ட்டில் மகா, கங்கா, நரசிம்மன் இருக்க, ஈஷ்வர்க்கு கொதித்து கொண்டு வந்தது. “ஈஷ்வர் ப்ளீஸ்டா.. இங்க எதுவும் பேசாத, வீட்டுக்கு போய் பேசிக்கலாம்..” விஷ்ணு அவனை கட்டுப்படுத்தி கூட்டி கொண்டு வந்தான். 

 எல்லோரும் நேரே விஷ்ணு வீடு சென்றனர். முதலில் சின்னுவை குளிக்க வைத்து, உணவு, மாத்திரை கொடுத்து  தூங்க வைத்தனர். “ஈஷ்வர்.. சாப்பிட வா..” ருக்கு கூப்பிட, அவன் இருந்த இடம் விட்டு அசையவில்லை. 

நரசிம்மனோ மகனை கவனிக்கதாவர் போல சக்கரவர்த்தியிடம் பேசி கொண்டிருந்தார். “ஈஷ்வர் உன்னை தான்..” ருக்கு மீண்டும் கூப்பிட, ஈஷ்வரோ சின்னு ரூம் கதவு மூடவும், தந்தையை பார்த்தபடி பக்கத்தில் இருந்த டீ கப்பை கீழே விசிறி அடித்தான். 

“ஈஷ்வர்..  கொஞ்சம் பொறுமையா இருடா பேசலாம்..”  விஷ்ணு அவனிடம் வேகமாக வந்தான். ஈஷ்வர் கண்கள் தந்தையை விட்டு அகலவில்லை. 

சக்கரவர்த்தி, துர்கா ஒன்றும் புரியாமல் நின்றவர்கள், “என்ன ஆச்சு ஈஷ்வர் ஏன் இந்த கோவம்..?” கேட்டனர். 

“அதை இவர்கிட்ட கேளுங்க..” விஷ்ணு தான் சொன்னான். 

“என்ன ஆச்சு மச்சான்..?”  சக்கரவர்த்தி நேரே நரசிம்மனிடம் கேட்க, அவர் கொஞ்சம் திணறி தான் போனார். 

“சொல்லுங்க மாமா, கேட்கிறாங்க இல்லை வாய் திறந்து நீங்க செஞ்ச வேலையை சொல்லுங்க..” விஷ்ணு குத்தினான். 

“அது.. அது.. நான்..”

“என்ன மாமா இப்படி..? தைரியமா  சொல்லுங்க ஒரு சின்ன பொண்ணை மிரட்டி துரத்திட்டிங்கன்னு..”

“விஷ்ணு என்ன பேசுற நீ..?”   துர்கா அண்ணனை பேசவும் மகனை அதட்டினார். 

“நான் ஒன்னும் இல்லாததை பேசல.. உங்க அண்ணன் ஈஷ்வர் வைப் பல்லவியை மிரட்டியிருக்கிறார்..” 

“நான் மிரட்டல, பல்லவி என்ன மருமக..”  என்றார் நரசிம்மன். 

“எது மருமகளா..? நல்லதா போச்சு, எங்க உங்க மருமக..?”  விஷ்ணு கோவத்துடன் கேட்டான். 

“பத்திரமா இருக்காங்க.. அதுக்கு மேல சொல்ல மாட்டேன்..”   இதுவரை கொண்டு வந்து விட்ட பிறகு  மனதில்லை அவருக்கு. 

“மச்சான் என்ன இது..? உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல..” சக்கரவர்த்தி அதிருப்தியுடன் சொன்னார். 

“ஒரு அப்பாவா எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல, இவர் ஐபிஸ் முடிக்க சொல்லுங்க.. அது ஒன்னு தான் மருமக திரும்பி வரத்துக்கான வழி.. அதுவும் நான் நினைச்சா மட்டும் தான்..”   அவர் பேச பேச ஈஷ்வருக்கு கொந்தளித்தது. எவ்வளவு சாதாரணமா சொல்றார். 

“நீங்க என்ன பல்லவியை கொண்டு வரது, நாங்க தேடி பிடிச்சுகிறோம்..” விஷ்ணு முடிவாக சொல்ல, 

“அது முடியாது, பல்லவியே வரமாட்டாங்க, அவங்களுக்கும் ஆசையிருக்கும் இல்லை புருஷன் ஒரு நல்ல கௌரவமான வேலையில இருக்கனும்ன்னு..”

“அதை நாங்க பார்த்துகிறோம்.. ஈஷ்வர் இவர்கிட்ட என்ன பேச்சு, நாம தேடிக்கலாம் விடு..” விஷ்ணு அவன் கை பிடித்தான். 

“இது தான் உங்க விருப்பம்ன்னா.. அப்பறம்..”  நரசிம்மன் குரலில் மறைமுக எச்சரிக்கை தென்படாமல் இல்லை. 

“ஓஹ்.. எங்ககிட்டேயாவா.. நாங்களும் உங்க ரத்தம் தான் மாமோய், பார்த்துடுவோமா..”  விஷ்ணு அவர் பேச்சில் ஆக்ரோஷமாக பேசினான். 

“விஷ்ணு..  கொஞ்சம் பொறு..” மகனை அமைதிப்படுத்திய சக்ரவர்த்தி நரசிம்மனிடம் பேச, பயனே இல்லை. அவர் ஈஷ்வர் ஐபிஸ் படித்தே ஆக வேண்டும் என்று நின்றார். 

“இப்போவே என்ன கல்யாணம், பொண்டாட்டி, குடும்பம்,  முதல்ல படிச்சு வேலையில உட்காரட்டும்.. அதுவரை மருமக என் பாதுகாப்புல இருப்பாங்க..”  அவர் பேச்சிலே நிற்க, ஈஷ்வர்க்கு பல்லவி செய்த சத்தியமும் தலையில் ஓடி கொண்டிருந்தது. 

இவரும் சொல்ல மாட்டார், அவளும் சத்தியம் வச்சுட்டு போயிருக்கா.. நரசிம்மனை பார்க்க பார்க்க மனதில் விபரீத யோசனை. பல்லவியின் பாதுகாப்பில்  பயமில்லை. அவள் வருமுன் இவரை ஏதாவது செய்ய வேண்டும்.. அந்த நொடி முடிவெடுத்தான். முகத்தில் ஒரு தீவிர முறுவல். 

“நான் ஐபிஸ் படிக்கிறேன்..”  என்றான் சத்தமாக. யாராலும் இதை நம்பவும்  முடியவில்லை. பல்லவிக்காக இந்த முடிவு என்பதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. 

நரசிம்மன் மகனை சந்தேகமாக பார்க்க, அவனோ அவன் செயலில் காண்பித்தான் சொன்னது உண்மை என்று. படிக்க ஆரம்பித்தான். மிகவும் கடுமையாக படித்தான். அந்த வருட எக்ஸாமிற்கு அப்ளை செய்தான். 

விஷ்ணு பேச, பல்லவிக்காக என்று அவன் வாய் அடைத்தான். ஈஷ்வரின் உழைப்பில், திறமையில் அந்த வருடமே மூன்று எக்ஸாமும் கிளியர் செய்தான். 

“இது தான் என் மகன், இவனுக்கு அந்த திறமை இருக்கு..”  நரசிம்மன் பூரித்து போனார். அவன் இவரிடம் பேசாதது கூட அவருக்கு பெரிதாக தெரியவில்லை. 

சின்னு உடல் நிலை முழுதும் முன்னேறியிருக்க, ஈஷ்வரும் ஐபிஸ் ட்ரைனிங் கிளம்பினான். குடும்பத்தாருக்கு எல்லாம் நன்றாக செல்வது போல இருந்தது.