அடங்காத நாடோடி காற்றல்லவோ 4 1 15565 அடங்காத நாடோடி காற்றல்லவோ 4 “விஷ்ணு.. ஒன்னும் இல்லைடா, சரி பண்ணிடலாம், நீ நார்மலா இரு..” இடிந்து போய்விட்டவனை தோளோடு அணைத்தான் ஈஷ்வர். அண்ணனுக்கு மனதே ஆறவில்லை. இவனுக்கு போய் இதயத்தில் அடைப்பு.. அடைத்த அவன் இதயத்தை நீவி விட்டபடி நிமிர்ந்தவன் கண்களுக்கு நேரே பிள்ளயார் ஜெகஜோதியாக ஜொலித்தார். விஷ்ணு கண்கள் அவரையே வெறித்தது. “இன்னும் அவனுக்கு எவ்வளவு தான் கொடுப்ப..? ஏற்கனவே அவனை ஓரிடத்தில் உட்கார வச்சுட்ட, இப்போ இதுவும் கொடுக்கணுமா..? உன்னோட தாராள மனசுக்கு என் தம்பி தான் கிடைச்சானா..?” நேருக்கு நேர் மனதிலே சண்டையிட்டான் விஷ்ணு. பதில் தான் இல்லை. சிலவற்றுக்கு அவர்களின் விதி என்பது மட்டுமே பதிலாக கிடைக்கும். சின்னுவும் அப்படி தான் ஆகிப்போனான். “டாக்டர்.. சரி பண்ணிட முடியும் தானே..?” துர்கா வேண்டுதலுடன் கேட்டார். “வாய்ப்பிருக்கு டாக்டர், முயற்சி பண்ணலாம்..” இதய நிபுணர் பிரதாப் சொல்ல, விஷ்ணு நொடியில் அவர் முன் நின்றான். “என்ன பண்ணனும் என்கிட்ட சொல்லுங்க..” அவரை விடவே இல்லை அவன். கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டான். “விஷ்ணு.. ரிலாக்ஸ், அவரை விடு.. அங்க சின்னு கண் முழிச்சிட்டான் பாரு வா..” ஈஷ்வர் அவனை கூட்டிக்கொண்டு சின்னு ரூம் சென்றான். அவனை சுற்றி எல்லாம் சூழ்ந்திருக்க, விஷ்ணு கதவு பக்கத்திலே நின்றுவிட்டான். “ண்ணா..” சின்னுவே அவனை கூப்பிட, முகத்தை சாதாரணமாக வைத்து தம்பியிடம் சென்றவன், அவன் கை பிடித்து நின்றான். “சின்னு.. என்னடா ஸ்டேண்ட் அப் காமெடி அவ்வளவு நல்லாவா இருந்தது, இப்படி மயங்குற அளவு.. எனக்கு அது பயங்கர மொக்கை தான்..” ஈஷ்வர் கிண்டலாக கேட்டபடி அவன் தலை தடவினான். “மாமா..” மெல்லிய குரலில் கோவமாக சிணுங்கினான். பெரியவர்கள் தள்ளி சென்று அடுத்து என்ன என்று பேச, சின்னு கண்களில் மிரட்சியுடன் பார்த்தான். விஷ்ணு புரிந்து தம்பியின் கைகளை தட்டி கொடுத்தபடி, “சின்னு.. உனக்கு ஒன்னுமில்லைடா, பயப்படாத, ரிலாக்ஸா இரு..” என்றான். “ண்ணா.. நான் ஏன் பயப்படணும், என்னை சுத்தி தான் இத்தனை டாக்டர்ஸ் இருக்கீங்களே.. நீங்க எல்லாம் என்னை காப்பாத்திடுவீங்க..” சிரிப்புடன் சொல்ல, விஷ்ணுவிற்கு அப்போதே துடுதுடித்தது தம்பிய காப்பாற்ற. “எனக்கு இந்த ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் பிடிக்கலண்ணா, சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு போ..” என்றான் அண்ணனிடம் சலுகையாக. “ம்ம்.. கொஞ்சம் செக் அப் மட்டும் இருக்கு, முடிச்சிட்டு போயிடலாம்..” சொல்லி கொண்டிருக்க, “சின்னு..” என்று வந்தார் சக்ரவர்த்தி. அவரின் கண்களில் அவ்வளவு வேதனை. மகனிடம் சென்று பேச, விஷ்ணு மீண்டும் பிரதாப் ரூம் சென்றான். “விஷ்ணு காபி குடிக்க போலாமா..?” எல்லோருக்கும் உணவு வாங்கி கொடுத்த வந்த ஈஷ்வர் பிரதாப் ரூமில் இருந்தவனிடம் சென்றான். அவனை பார்த்த விஷ்ணுவிற்கு புரிந்தது ஈஷ்வரின் சோர்வு. இரவில் இருந்து இருவருக்கும் அலைச்சல், மனஉளைச்சல் அதிகம். “சின்னுக்கு..” விஷ்ணு தம்பிய சென்று பார்க்க, கங்கா அவனுக்கு சத்து மாவு கஞ்சி ஊட்டி கொண்டிருந்தார். இருவரும் கேன்டீன் சென்றனர். “காபி வேண்டாம், லன்ச் வாங்கிட்டு வா ஈஷ்வர்..” விஷ்ணு முகம் கழுவி வந்தான். இருவரும் சாப்பிட்டு முடிக்க, காபி குடித்தனர். “அடுத்து என்ன பண்ணலாம்..” ஈஷ்வர் கேட்க, விஷ்ணு முகம் கொஞ்சம் தெளிவாக இருந்தது. “விசாரிச்சுட்டேன்டா, டாக்டர் சொன்னது தான், அவ்வளவு கிரிட்டிகல் இல்லை, சரி பண்ணிடலாம், இப்போ முதல்ல செய்ய வேண்டியது பேலன்ஸ் இருக்கிற டெஸ்ட் மட்டும் எடுத்துக்கணும், ரிப்போர்ட் கைக்கு வந்ததும் டாக்டர் ரெபர் பண்ண அந்த டாக்டர்ஸை போய் பார்க்கணும்..” என்றான். நம்பிக்கை வந்திருந்தது. “சூப்பர் விஷ்ணு.. டெஸ்ட் எடுக்க ரெடி பண்ணிடலாம், லேட் பண்ண வேண்டாம்..” இருவரும் கலந்தோலசித்து துர்கா முன் போய் நின்றனர். அவர் “நான் விசாரிச்சிருக்கேன், அந்த டெஸ்ட்..” என்று ஆரம்பிக்க, “நான் எல்லாம் பார்த்துட்டேன், நீங்க நான் சொல்றதை மட்டும் செய்ங்க..” என்றுவிட்டான். “விஷ்ணு.. அம்மாகிட்ட இப்படி பேசாத.. அவளைவிட உனக்கு எல்லாம் தெரியுமா..?” சக்ரவர்த்தி மனைவி முகம் பார்த்து மகனை அதட்டினார். “ம்ப்ச்.. நான் டாக்டர் சொல்றதை கேட்டு தான் செய்றேன், உங்களுக்கு எதுவும் டவுட் இருந்தா அவரை கேட்டுக்கோங்க..” விஷ்ணு கோவத்துடன் சொல்ல, துர்கா கணவரின் கை பிடித்தவர், மகன் சொன்னதையே செய்ய ஆரம்பித்தார். அடுத்த மூன்று நாட்களில் சின்னுவின் முழு ரிப்போர்ட்டும் கைக்கு வந்தது. அடுத்து டாக்டர் பிரதாப் ரெபர் செய்த டாக்டரை பார்க்க விஷ்ணு டெல்லி கிளம்பினான். உடன் அவரும் வந்தார். ஈஷ்வருக்கு பைனல் இயர் ப்ராஜெக்ட், எக்ஸாம் வர இருப்பதால் அவனை மறுத்துவிட்டான். துர்கா வருகிறேன் என்றதற்கு, இங்க பாருங்க.. என்றுவிட்டவன், ஈஷ்வருடன் ஏர்போர்ட் வந்தான். அங்கு அவருக்கு முன் சக்கரவர்த்தி நின்றிருந்தார். விஷ்ணு அவரை பார்க்க, “என் மகனுக்கு நான் வருவேன்..” என்று தந்தையாக முன் செல்ல, உண்மையில் விஷ்ணுவிற்கு கொஞ்சம் தைரியம் தான். “பை விஷ்ணு.. எல்லாம் நல்லாதா தான் நடக்கும்..” ஈஷ்வர் அவனை அணைத்தான். “ம்ம்.. எனக்கு முழு நம்பிக்கை இருக்கு ஈஷ்வர், நீ இங்க பார்த்துக்கோ, மாமாகிட்ட இப்போவே ஐபிஸ் படிக்க மாட்டேன் சொல்லாத, நான் வந்துடறேன், என்ன செய்றதுன்னு பார்ப்போம்..” ஈஷ்வருக்கு சொல்லி கிளம்பினான். ஒரு வாரம் டெல்லியிலே இருந்தனர். சின்னுவின் உடல் நிலைக்கு மேலும் பாதகம் ஏற்படாத அளவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் சவாலாக இருந்தது. அவன் உடல் ஆரோக்கியம் ஆப்பரேஷன்க்கு ஒத்துழைக்க வேண்டுமே. இப்போதே அவன் உடல் சத்து குறைந்திருந்தது. எனவே அங்கிருந்த டாக்டர்கள் அட்வைஸ்படி அமெரிக்கா செல்லலாம் என்று முடிவாக, ஊருக்கு திரும்பினர். “நான் ஈஷ்வர் பார்த்துட்டு வரேன்..” விஷ்ணு மட்டும் நேரே ஈஷ்வர் அபார்ட்மெண்ட் வந்தான். பல்லவிக்கு உடல் நிலை சரியில்லை என்று ஈஷ்வர் சொல்லியிருக்க, பார்ப்பதற்காக வந்தான். கதவை திறந்த பல்லவியின் கலங்கிய முகம் யோசனையை கொடுக்க, ஈஷ்வரின் பிரகாசமான முகம் எதையோ உணர்த்தியது. இவன் பார்வையில் ஈஷ்வரும் மறைமுகமாக வாழ்த்து கேட்க, இருவரும் கணவன், மனைவியாக வாழ ஆரம்பித்துவிட்டார்கள் என்று புரிந்தது. “இந்த வயதில்..” பெரியவனாக ஈஷ்வர், பல்லவியை நினைத்து கவலை கொண்டவன், அவர்களை வருத்த வைக்காமல் வீட்டிற்கு கிளம்பிவிட்டான். சின்னு கவலையுடன் இதுவும் சேர்ந்து கொண்டது. நரசிம்மன், ஈஷ்வரின் ஐபிஸ், பல்லவியின் வாழ்க்கை எல்லாம் மிகவும் சிக்கலாக தெரிந்தது. வீட்டிற்கு வந்தவன், சின்னு ரூமிற்கு சென்றான். அங்கு அவன் மாத்திரையின் பலனால் தூங்கி கொண்டிருக்க, மகா அவன் பக்கத்தில் அமர்ந்து படித்து கொண்டிருந்தாள். “இன்னிக்கு காலேஜ் போகலையா..?” விஷ்ணு கேள்வியுடன் உள்ளே நுழைய, மகா அவனை நிமிர்ந்து பார்த்தாள். தம்பியின் அருகில் சென்று பார்த்தவன், “எப்போ எந்திருப்பான்..?” மகாவிடம் கேட்டான். “இன்னும் கொஞ்ச நேரமாகும்..” என, ரூம் சென்று குளித்து காலை உணவிற்கு கீழே வந்தான். ருக்கு டிபன்.. கிட்சன் பார்த்து குரல் கொடுத்து டேபிளில் அமர்ந்தான். மகா ஹாலுக்கு வர, “அப்பா எங்க..?” கேட்டான். “மாமா வெளியே போயிருக்கார், நான் காலேஜ் போய்ட்டு, வீட்டுக்கு போகவா..? நீங்க இருக்கீங்க இல்லை, அம்மா கூப்பிட்டுட்டு இருக்காங்க..” என்றாள் மகா. “ம்ம்.. கிளம்பு, எப்படி போற..?” விஷ்ணு கேட்க, “அத்தை கார் அனுப்பியிருக்காங்க..” என்றவள் உள்ளே சென்று சின்னுவை பார்த்துவிட்டு, ருக்கு, விஷ்ணுவிடம் சொல்லி கொண்டு கிளம்பிவிட்டாள். விஷ்ணு உணவு முடித்து, தம்பி பக்கத்தில் சென்று படுத்தவன் தூங்கியும் போனான். சக்கரவர்த்தி அவனை மதிய உணவிற்கு எழுப்ப, சின்னு ஹாலில் அவருடன் இருந்தான். ரிப்ரெஷ் செய்து வந்தவன், “எப்படிடா இருக்க..?” தம்பியை விசாரித்த படி சாப்பிட்டு முடித்தனர். “விஷ்ணு நீ காலேஜ் போ.. நிறைய லீவ் ஆயிடுச்சு..” சக்கரவர்த்தி சொல்ல, விஷ்ணுவும் இன்னும் லீவ் எடுக்க வேண்டி வரும் என்று புரிந்து மதிய நேர கிளாஸிற்கு சென்றான். துர்கா, சக்கரவர்த்தி, ருக்கு, கணேஷ் என்று மாற்றி மாற்றி சின்னுவுடன் வீட்டில் இருக்க, விஷ்ணு காலேஜ் சென்று வந்தான். இடையிடையே அமெரிக்கா செல்லவும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். துர்கா மகனுக்காக வேண்டுதல், பூஜை, சிகிச்சை என்று இருந்தாலும், அம்மாவாக தவித்து போனார். ஹாஸ்பிடலில் எமெர்ஜென்சி என்றால் மட்டும் தான் செல்கிறார். முன் செய்த தவறை இப்போதும் செய்ய துணியவில்லை அவர். இப்டியே சில நாட்கள் செல்ல, ஒரு நாள் இரவு மகா போன் செய்தாள். “இவ எதுக்கு நமக்கு கூப்பிடுறா..?” விஷ்ணு யோசனையுடன் போன் எடுத்தவனுக்கு ஈஷ்வர், பல்லவி விஷயம் தெரிஞ்சிருக்குமா என்று சந்தேகம். “வீட்ல பிரச்சனை..? அண்ணா அப்பாகிட்ட சண்டை போடுறான், நீங்க அவனுக்கு சொல்ல மாட்டிங்களா..?” கமறிய குரலுடன் கேட்டாள் மகா. “என்ன ஆச்சு..? ஈஷ்வர் அப்படி பண்ண மாட்டானே..” “ஐபிஸ் படிக்க மாட்டேன் சொல்லிட்டான்..” இப்போது புரிந்தது. என்ன ஆச்சு..? முழுதும் கேட்டு தெரிந்து கொண்டான். “நாளைக்கு வாங்க, அப்பா யாரையோ வர சொல்லியிருக்கார்..” மகா சொல்லி போனை வைக்க, விஷ்ணு இங்கு தலையில் தட்டி கொண்டான். “ம்ப்ச்.. இவன் என்கிட்ட பேசாம இருக்கும் போதே நினைச்சேன்.. சொல்லவே இல்லை பாரேன்..” ஈஷ்வர் மேல் கோவம் கொண்டவன், மறுநாள் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினான். வழியிலே மகா “இன்னும் என்ன பண்றீங்க, சீக்கிரம் வாங்க..” என்று மெசேஜ். “அட வரேன் இருடி..” பதில் மெசேஜ் அனுப்பிவிட்டவன், முன்பை விட வேகமாக ஈஷ்வர் வீட்டிற்கு சென்றான். அவன் சென்ற நேரம் பிரச்சனை முற்றி இருக்க, நரசிம்மன் இவனிடம் ஆதங்கத்துடன் வெடித்தார். ஏண்டா இவ்வளவு அவசரம் ஈஷ்வரை முறைக்க, அவன் இப்போ பேசலன்னா வேறெப்போ பேச என்றான். அப்பா, மகனுக்கு பேச்சு முற்றி நரசிம்மன் மகனை அறைந்துவிட, விஷ்ணு கொதித்துவிட்டான். “எப்படி நீங்க அவனை அடிக்கலாம்..?” என்று மாமாவிடம் பாய, “எப்படி நீங்க என் அப்பாகிட்ட சண்டை போடலாம்.. அவருக்கு நான் இருக்கேன்..” என்று மகா இவர்களிடம் பாய்ந்தாள்.